நாகேஸ்வரி அண்ணாமலை

masai masai2 masai3

 

கென்யா பயணம் 6

கென்யாவில் மசாய் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் இன்றும் இயற்கைச் சூழலிலேயே வாழ்ந்து வருவதாக அறிந்து அவர்களைச் சந்திப்பது எப்படி என்று இன்டர்நெட்டில் தேடினோம்.  அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய வழிகாட்டி கேட்ட தொகை மிகவும் அதிகமாக இருந்தது.  இருப்பினும் அதை விட்டால் வேறு வழியில்லை என்பதை அறிந்து அவரோடு தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம்.

முதல் முதலாக நைரோபியிலிருந்து வெகுதூரத்திற்குப் பயணம் செய்தோம்.  நைரோபியை விட்டு செல்லச் செல்ல கிராமப்புறக் காட்சிகள் தோன்றத்  தொடங்கின.  சிறிய ஊர்கள், சிறிய இடங்கள், சிறிய வாகனங்கள் என்று எல்லாம் நைரோபியில் பார்த்ததற்கு எதிர்மாறாக இருந்தன.  நம் நாட்டு ஆட்டோக்கள் போல் வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டிருந்தன.  இதில் ஒன்றைக்கூட நைரோபியில் நாங்கள் பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் ஓட்டுநர் வண்டியை ஒரு குக்கிராமத்தில் நிறுத்தினார்.  அங்கு சில பழங்குடி மக்களின் இருப்பிடங்கள் இருந்தன.  அங்கு ஜேக்ஸன் (இவருடைய இயற்பெயரை அவர்கள் மொழியில் சொன்னார்.  அது எங்களுக்கு வாயில் நுழையவில்லை.) என்பவரை எங்களோடு வேனில் ஏற்றிக்கொண்டு நாங்கள் அதுவரை வந்துகொண்டிருந்த, பக்கத்து நாடான டான்ஸானியா செல்லும் நெடுஞ்சாலையை விட்டுப் பிரிந்து காடு போல் இருந்த இடத்தின் கச்சா ரோடுகளில் பயணிக்க ஆரம்பித்தோம்.  ஆங்காங்கே பழங்குடி மக்களின் ஊர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள் ஆகியவற்றைக் கடந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு ஜேக்ஸனின் குடும்பம் இருக்கும் இடத்தை அடைந்தோம்.  வழியில் பழங்குடிமக்கள் சிலரையும் காட்டுப்பாதையில் பார்த்தோம்.

ஜேக்ஸன் மஸாய் இனத்தைச் சேர்ந்தவர்.  இந்த இனம் ஒரு இடத்தில் வசிக்காமல் இடம் பெயர்ந்துகொண்டே இருக்குமாம்.  இவர்களைப் பொறுத்த வரை மண்ணை உழுது நிலத்தில் பயிரிட்டால் அது நிலத்தைப் புண்படுத்துவதாகுமாம்.  ஆதலால் இவர்கள் ஒன்றும் விளைவிப்பதில்லை.  ஆடு, மாடுகள்தான் இவர்களுடைய சொத்து.  அவற்றை நம்பித்தான் இவர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.  ஒரு இடத்தில் ஆடு, மாடுகளுக்கான புல் தீர்ந்ததும் வேறு இடத்திற்கு இடம்பெயர்கிறார்கள்.

நாங்கள் ஜேக்ஸனின் குடும்பம் இருக்கும் இடத்தை அடைந்ததும் முதலில் எங்களை வரவேற்றது அவருடைய எட்டு வயது மகள்.  பயண வழிகாட்டி அந்தப் பெண்ணிடம் ஸ்வாஹிலியில் ‘உங்கள் பாட்டி எங்கே?’ என்று கேட்டார்.  அதற்குப் பதிலாக அந்தப் பெண் எங்களை காம்பவுண்டிற்குள் அழைத்துச் சென்றார்.  காம்பவுண்ட் என்பது 15’-க்கு 15’ அடியில் அமைக்கப்பட்ட இரண்டு சிறிய குடிசைகள், ஆடு, மாடுகளை இரவில் அடைக்கும் பெரிய கொட்டில் ஆகியவையே.  கொட்டிலில் ஒரு கன்றுக் குட்டியைத் தவிர வேறு எதுவும் இல்லை.  கன்றின் தாய் மற்றப் பிராணிகளோடு மேய்ச்சலுக்குப் போயிருப்பதாகக் கூறினார்கள்.  அந்த இடம் முழுவதும் மிருகங்களின் சாணம்.  அதனால் நிறைய ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.  பாவம், கன்றுக்குட்டி சதா காதுகளையும் வாலையும் சுழற்றி ஈக்களை விரட்ட முயன்றுகொண்டிருந்தது.  முதலில் எங்களைப் பார்த்ததும் கொஞ்சம் மிரண்டது.  ஆனால் பின்னால் சமாளித்துக்கொண்டு மறுபடியும் படுத்துக்கொண்டது.

அந்த குடிசைகளின் கூரை புல்லால் வேயப்பட்டது.  சுவர்கள் மண்ணாலும் மரக்குச்சிகளாலும் எழுப்பப்பட்டவை.  குடிசைகளுக்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  ஒரு பெண் – இவர் ஜேக்ஸனின் அக்காள் மகளாம்.  புருஷன் இறந்த பிறகு இவர்களுடனே வசித்து வருகிறாள் – ஒரு விறகுக் கட்டை சுமந்துகொண்டு வந்து போட்டுவிட்டு அருகில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்.  அவர் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.  ஆனால் இன்னும் மூன்று பெண்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.  அவர்களில் ஒருவர் ஜேக்ஸனின் மனைவி.  கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தார்.  காம்பவுண்டிற்குள் நுழைந்ததும் ஜேக்ஸன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை.  குழந்தையையும் பார்க்கவில்லை.  ஒரு குடிசையின் உள்ளே சென்று தன் தாயை வெளியே அழைத்து வந்தார்.  அவருக்கும் எனக்கும் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு எங்களை உட்காரவைத்தனர்.

அவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  அவர்தான் குடும்பத்தின் தலைவி (matriarch).   இவருக்குப் பத்துக் குழந்தைகள்.  ஜேக்ஸன் இவருக்குப் பத்தாவது குழந்தை.  இவருடைய அண்ணன் மகள் ஒருத்தி இவர்கள் குடும்பத்தோடு இருக்கிறாள்.  அவள் பக்கத்துப் பள்ளியில் ஆறாவது வகுப்புப் படிக்கிறாள்.  இவளோடு எங்களால் ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது. (கென்யர்கள் எல்லோரும் நல்ல ஆங்கிலத்தில் பேசுவது பற்றிப் பின்னால் கூறுகிறேன்.)

ஜேக்ஸன் காது வளர்த்துக்கொண்டிருந்தார்.  நம் நாட்டில் அந்தக் காலத்தில் பெண்கள் வளர்த்துக்கொண்டிருப்பார்களே அதை விடப் பெரியதாக இருந்தது. நாம் காதணிகள் அணிகிறோமே அந்த இடம் பூராவும் பெரிய ஓட்டையாக இருந்தது.  ஆனால் காதில் அணிகலன் எதுவும் அணியவில்லை.  பெண்கள் யாரும் இப்படிக் காதை ஓட்டையாக வளர்த்துக்கொள்ளவில்லை.  ஆனால் காதிலும் கழுத்திலும் கைகளிலும் நிறையப் பாசிகளினால் ஆன அணிகலன்களை அணிந்திருந்தார்கள்.  சிறு பிள்ளைகளைத் தவிர மற்றப் பெண்கள் எல்லோரும் அவர்களுடைய பாரம்பரிய உடையில் இருந்தனர்.

அந்தக் குடும்பத் தலைவி என்னிடம் அவருடைய மொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அவர் செய்த சைகைகளிலிருந்து ஏதோ கொஞ்சம் புரிந்தது.  தேவைப்பட்டால் பயண வழிகாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  நாங்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளை பயண வழிகாட்டி ஸ்வாஹிலியில் ஜேக்ஸனிடம் கேட்க, அவர் தன் உறவினர்களிடம் மசாய் மொழியில் கேட்டார்.  அவர்களுடைய பதிலும் மசாய்மொழியில் தொடங்கி ஸ்வாஹிலி வழியாக ஆங்கிலத்தில் எங்களுக்கு வந்து சேர்ந்தது.  ஜேக்ஸனின் தாய் இரண்டு குடிசைகளில் ஒன்றைக் காட்டி அது தன் வீடு என்று பெருமையாகக் கூறிக்கொண்டார்.  என்னை அங்கு அழைத்துச் சென்றார்.  உள்ளே நுழைந்தால் ஒரே இருட்டாக இருந்தது.  கண்கள் ப்ழகிய பிறகு ஒரு பக்கம் இருந்த கட்டில் தென்பட்டது.  இவர் ஒருவருக்கு மட்டும் இந்த குடிசை என்றால் மற்ற அத்தனை பேருக்கும் இன்னொரு குடிசையா?  கென்யாவைப் பற்றிய செய்திக் குறிப்புகளில் கணவனுக்கு ஒரு வீடு, முதல் மனைவிக்கு வலது பக்கத்தில் வீடு, இரண்டாவது மனைவிக்கு இடது பக்க வீடு என்றெல்லாம் போட்டிருந்தது.  ஜேக்ஸன் குடும்பத்தைப் பொறுத்த வரை அப்படி எதுவும் இல்லை.  மேலும்இவருக்கு ஒரே மனைவிதான்.

வீட்டில் மளிகைச் சாமான்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இவர்களுடைய எல்லா வேளைகளிலும் அவர்களுடைய உணவு மாட்டுப்பாலும் இறைச்சியும்.  தேவையானபோது ஆடுகளை வெட்டி இறைச்சி உணவைத் தயாரித்துக்கொள்வார்களாம்.  எல்லோருக்கும் அடுத்த வேளைக்கான இறைச்சியை எங்கு சேமித்துவைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை.  பக்கத்தில் கடை, கண்ணி என்று எதுவும் கிடையாது.  என்ன வேண்டுமென்றாலும் பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடந்து வர வேண்டும்.

ஜேக்ஸன் குடும்பம் இருக்கும் இடத்திற்கு ஜீப்பில் சென்றபோது வழியில் சில இளம் பழங்குடிப் பெண்களைப் பார்த்தோம்.  இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி நிறையப் படித்திருந்த எனக்கு அந்தப் பெண்களின் பாதுகாப்பு பற்றிய பயம் ஏற்பட்டது.  ஜேக்ஸனிடம் (பயண வழிகாட்டி மூலம்தான்) அது பற்றிக் கேட்டேன்.  அதற்கு ஜேக்ஸன் அளித்த பதில் சுவாரஸ்யமாக இருந்தது.  பையன்களும் பெண்களும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தனித் தனியாக வசிக்கிறார்கள்.  பையன்கள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களுக்கு அவர்களுடைய இனத்தின் மதிப்பீடுகளை (values) கற்றுத் தருவார்களாம்.  சமூகத்தில் எல்லா அங்கத்தினர்களும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.   பெண்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்பது இன்னொன்று.  இப்படி வாழ்க்கை விதிகளைக் கற்றுக்கொண்ட பிறகுதான் இளைஞர்களை மசாய் இனத்தின் அங்கத்தினர்களாகச் சேர்த்துக்-கொள்வார்களாம்.  இதை ஒரு வகையான வயதுக்கு வரும் சடங்கு (initiation ceremony)  என்று சொல்லலாம்.  இப்படி அங்கத்தினர்களாகச் சேர்ந்த பிறகு அவர்கள் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளிலிருந்து மாறுவதில்லையாம்.

இப்போது ஜேக்ஸன் கொஞ்சம் கொஞ்சமாக கென்யாவின் மைய நீரோட்டத்தில் சேர்வதுபோல் தெரிகிறது.  அவருடைய அண்ணன் மகள் பள்ளியில் படிக்கிறாள்.  ஜேக்ஸன் பக்கத்திலுள்ள இடத்தில் அவர்களுடைய பாரம்பரிய நம்பிக்கைக்கு மாறாகத் தக்காளி பயிரிடுகிறார்.  பக்கத்துச் சுனையிலிருந்து குழாய் மூலம் அந்தத் தக்காளித் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுகிறார்கள்.  ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்த நிலத்தை வாங்கினாராம்.  ஐரோப்பியர்கள் கென்யாவில் வாழ்ந்துவந்தபோது அங்கு சில நிலங்களை வாங்கியிருக்கிறார்கள்.  நாட்டை விட்டுப் போகும்போது மறுபடி கென்யர்களுக்கு விற்கிறார்கள்.  மற்ற நிலமெல்லாம் மசாய் இனத்திற்கு உரியது; தனிப்பட்டவர் சொத்தாக இருக்க முடியாது. ஐரோப்பியர்களிடமிருந்து வாங்கி நிலம் வைத்திருப்பவர்களின் நிலத்தைவிற்பனை செய்யும் நிலத்தரகராக ஜேக்ஸன் நைரோபியில் வேலைபார்க்கிறார்.  அவர் பாரம்பரிய உடையில் இல்லை.  பேண்ட் அணிந்திருந்தார்.  மேலே தோலினால் ஆன கோட்டு அணிந்திருந்தார். மசாய் மக்களும் மாறி வருகிறார்கள்.

பயண வழிகாட்டி எங்களிடம் வாங்கிய பணத்தில் நானூறில் ஒரு பங்கைத்தான் ஜேக்ஸனுக்குக் கொடுத்தார்.  நைரோபியிலிருந்து இரண்டு மாம்பழச் சாறு பாட்டில்களும் (நைரோபி மாலில் மாம்பழங்கள் கிடைத்தன) இரண்டு பாட்டில் குடிநீரும் வாங்கிவந்திருந்தார்.  அவற்றை ஜேக்ஸன் மகளிடம் கொடுத்தபோது அந்தப் பெண் அவற்றை ஆசையோடு வாங்கிக்கொண்டாள்.  கென்யாவில் இப்படிதான் விபரம் தெரிந்தவர்கள் மற்றவர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

உலக மக்கள் அனைவரும் பாரம்பரிய மசாய் மக்களைப் போல எளிய வாழ்க்கை வாழ்ந்தால், உலகம் மாசுபடாமல், இயற்கை வளத்தை இழக்காமல் பல்லாயிரம் ஆண்டுகள் அப்படியே இருக்கும்.

மசாய் மக்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/108173580006522327175/MasaiMara?authkey=Gv1sRgCJDwzOCbvsuWLw

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கென்யா பயணம் 6!…

  1. மசாய் மக்களைப் பற்றியும் அவர்களின் சமூக மதிப்பீடுகளைப் பற்றியும் அழகாக் விவரித்து உள்ளீர்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *