வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)
பவள சங்கரி
முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!
“அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”
அன்னை தெரசா
முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!
குறிப்பிட்ட அந்தச் சூழலின் முழுமையான ஆக்கிரமிப்பு, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது. இது ஆழ்ந்த நித்திரையிலிருந்து சட்டென விழிக்கும் நிலை அல்லது வெகு நாட்களாக இருண்டு கிடக்கும் ஒரு பகுதியில் பளிச்சென்று வெளிச்சம் தோன்றுவது போல்தான். நம்மைச் சுற்றி எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்ததெல்லாம் நம் மனதிற்குள்தான். அமைதியை நோக்கிய நம்முடைய உள்முகப் பயணம் மூலமாக சூழ்நிலைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வல்லமை பெறுகிறோம். நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்த்து தீர்வு சொல்ல விழைகிறோம். முழுமையான விழிப்புணர்வுடன் தெளிவான சிந்தையும் வசப்படுகிறது. அதனால் ஏற்கனவே மறைந்திருந்த சில உண்மைகள் அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மனத்தெளிவு ஏற்படுகிறது. சாதாரண விசயங்களில்கூட அதிக நாட்டம் ஏற்படுவதைக் காண முடியும். இயற்கை எத்தனை அதிசயமும் அழகும் நிறைந்தது ! நம் சக மனிதர்களையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அறியாமையையும், அழகையையும் சேர்த்தே அவர்களை ஒன்றுபோல நேசிக்க முடியும். தேவையில்லாத ஆய்வு செய்வதைவிட அவரவர்கள் இருக்கும் நிலையில் அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்யும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படையான அன்பைச் செலுத்த முற்படும்போது நல்ல உறவுகள் மேம்படும்.
மனக்கட்டுப்பாடு என்பதன் மூலம், மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பெரிய பிரச்சனையையும் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அதாவது வேதனைப்படுத்தக்கூடிய அந்த குறிப்பிட்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அதிகப்படியான முக்கியத்துவம் பெறாமல், நாம் அதற்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்தாமல், தெளிவான, பக்குவப்பட்ட பார்வையை ஏற்படுத்தும். உதாரணமாக நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்களும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் சுவாசிக்கிறோம் என்பதை உணராமலே தானாக அது நடக்கிறது. ஆனால் பரீட்சார்த்தமாக ஒரு சில நிமிடங்கள் மூச்சு உள்வாங்குவதிலும், வெளிவிடுவதிலும் ஆழந்த கவனம் செலுத்த ஆரம்பித்தால் அது நமக்கு மிகவும் ஒரு சிரமமான காரியமாகத் தெரியும். இப்படித்தான் தேவையில்லாமல் கவனம் செலுத்தும் நம்முடைய சில பிரச்சனைகளும். ஒதுக்க வேண்டியதை ஒதுக்கிவிட்டு, தேவையானதில் மட்டும் கவனம் செலுத்தும் கலையை பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் துன்பங்களை மனக்கட்டுப்பாடுடன் எதிர்கொள்ள ஆரம்பித்தால் அது நம் இருதயத்தை விசாலமாக்கி ஓய்விற்கான இடத்தையும் கொடுக்கும். நம் அச்சத்தையும், ஆவேசத்தையும் விட்டொழித்து, அமைதியான, யதார்த்தமான கோணத்தில் எதிர்கொள்ள ஆரம்பித்தால் வலியும், வேதனையும் குறைந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற உண்மையை உணரச் செய்யும்.
வாழ்க்கையில் நல்ல நட்புகளும், உறவுகளும் மட்டுமே நம்மை உற்சாகமாக இருக்கச் செய்யும் மந்திரக்கோல்கள். அன்பும், பரிவும், பாசமும் நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நட்பு மற்றும் உறவுகளுடன் வாழ்க்கைப் பயணம் இனிதாக அமையும். ஓக் மேண்டினோ கூறுவது போல,
“அடுத்தவர்களை, இன்று அர்த்த சாமத்திற்குள் அவர்கள் இறந்து விடப்போகிறார்கள் என்பதுபோல நடத்துங்கள். உங்களுடைய முழுமையான அரவணைப்பையும், கருணையையும் மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒன்று திரட்டி, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவருக்குச் செலுத்துங்கள். உங்களுடைய வாழ்க்கை திரும்பவும் அதே பழைய வாழ்க்கையைப் போன்று நிச்சயம் இருக்காது”
மற்றவர்களிடம் கோபத்தில் நிலைத்திருப்பதோ, வெறுப்பு அல்லது சீற்றம் கொள்வதற்குமான முக்கிய காரணம் நம்மால் பெருந்தன்மையுடன், மன்னிக்கும் மனப்பக்குவமும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான். நிலையில்லாத இந்த வாழ்க்கையில், அவர்களோ நாமோ எந்த நேரத்திலும், அன்று இரவேகூட இறந்து போகலாம் என்பதை நினைக்கத் தவறிவிடுகிறோம். அடுத்தவர் மீது செலுத்தும் கோபமும், வெறுப்பும் நமக்கே சுமையாகி நம்மை வேதனைப்படச் செய்யும் என்பதே சத்தியம். அதை வெளிப்படுத்த சரியான தருணம் பார்த்துக்கொண்டு அலைந்திருக்க வேண்டிய சூழலில் நம்முடைய கடமைகளும் பாதிக்கப்படலாம். நமக்கே இது பெரும்பாரமாகிப் போய்விடும். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும்முன் எவர் மீதும் கோபம், வெறுப்பு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என எதுவும் நம் மனதில் தேங்கி, அதை சாக்கடையாக்கி அசுத்தப்படுத்தாமல் இருக்கிறது என்ற உறுதிப்பாடு கொள்ள வேண்டியது அவசியம். அதுவே அடுத்த நாள் சுத்தமான மன நிலையுடன், உற்சாகமாக நம்மை விழித்தெழச் செய்யும் என்பதே சத்தியம்.
அதே சமயம், அடுத்தவருடைய உணர்வுப்பூர்வமான மிரட்டல்களுக்கும், கோபம் மற்றும் சுயநலப்போக்கின், அர்த்தமற்ற வெளிப்பாடுகளுக்கும் அடி பணிந்து விடாமல், அடுத்தவரை திருப்தி படுத்துவதற்காக நம் கடமையைத் தவறவிடுதலாலும் நிம்மதி இழக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இறுதியாக, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை என்றும் வழி நடத்தும் என்ற பூரண நம்பிக்கையோடு நம் பயணத்தைத் தொடருவோமாக! தன் குஞ்சை சிறகினுள் பொத்தி வைத்துக் கொண்டு பறந்து செல்லும் கழுகு உயரமாகப் பறக்கும் வேளையில், கூர்மையான தன் பார்வையின் மூலம் தரையில் கிடக்கும் இரையைப் பார்த்தவுடன் சிறகு விரித்து கீழ் நோக்கிப் பறக்க யத்தனிக்கும் போது அந்த கழுகுக் குஞ்சு சிறகிலிருந்து விடுபட்டு விழுந்துவிடும். அப்போது அந்தத் தாய் கழுகு அதைவிட வேகமாகப் பறந்து வந்து அப்படியே அந்தக் குஞ்சை தரையில் விழுந்து மோதிவிடாமல், அணைத்து காப்பாற்றிவிடும். இது போலத்தான் நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியும் நம்மை ஒரு எல்லையில், வீழ்ந்து விடாமல் காத்து நிற்கும் என்ற நம்பிக்கையுடன் நம் வாழ்க்கையை பூரணமாக வாழுவோம்! வெற்றி நிச்சயம்!
முற்றும்
படங்களுக்கு நன்றி:
ஒவ்வொரு வார்த்தையும் முத்துப் போல். பாராட்ட வார்த்தைகளில்லை. இவ்வளவு அருமையான கட்டுரைத் தொடர் முடிந்து விட்டதை நம்ப முடியவில்லை. இப்படியொரு தொடர் தந்தமைக்காக, தங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். பகிர்விற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இது போல் மேலும் பல அருமையான தொடர்களை எங்களுக்குப் படிக்கத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.
இத்தொடரில் நீங்கள் உண்மை நிகழ்சிகளை இணைத்து கருத்தினை விளக்கும் முறையை சில அத்தியாயங்களில் கையாண்டிருந்தீர்கள் பவளா.
அந்தப் பதிவுகள் மனதில் ஆழப்பதிந்தன.
நூலாக வெளியிடும்பொழுது அது போன்ற எடுத்துக் காட்டுக் கதைகளை ஒவ்வொரு அத்தியாதிற்கும் சேர்க்கவும்.
அன்பு டன்
….. தேமொழி
அன்பின் திருமிகு பார்வதி இராமச்சந்திரன்,
தங்களுடைய அன்பான வாழ்த்திற்கும், உற்சாகமான பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி தோழி.
அன்புடன்
பவள சங்கரி
அன்பின் தேமொழி,
தங்களுடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை கருத்தில்கொண்டு ஆவண செய்கிறேன் தோழி. அன்பான உங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
வல்லமை தளம் அடியேனுக்கு அறிமுகமாகி, வல்லமைக்கு நான் வரும் தருணம் இத்தொடரின் பல அத்தியாயங்கள் கடந்த நிலை. தேடித் பிடித்து பழையனவற்றை (archives) படித்துக் கொண்டு இருக்கிறேன். நமது பவளசங்கரி அவர்கள் எழுதுவதைப் படிக்கையில் சிவசங்கரி அவர்கள் நினைவு வராமல் இல்லை. நல்ல தொடர். முடிவுக்கு வருகிறது எனபது வருத்தம் இல்லை. நூலாக வெளியிடுங்கள். இறவாத புகழுடைய அறிவுச்செல்வம் நலிவுறுவதில்லை.
சோர்வான தருணங்களில் தங்கள் சில கட்டுரைகள் தேம்பித் தந்தன எனபது மறுக்க இயலாதது. அதற்கு அடியேனது நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
பணிவன்புடன்,
புவனேஷ்வர்
*தெம்பைத் தந்தன.
எழுத்துப் பிழை. மன்னிக்கவும்.
பணிவன்புடன்,
புவனேஷ்வர்.
சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் தனிமனித முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் எவ்வளவு இன்றியமையாதது என்பதை மிக எளிமையாக தங்களது தொடர் மூலம் விளக்கி இருக்கிறீர்கள். தன்னம்பிக்கை என்பது எளிமையான பயிற்சிகள் மூலமும், திட்டமிட்ட கட்டுப்பாடான வாழ்க்கை முறையினாலும் அடையக்கூடிய ஒன்றே என்பதை பல அறிஞர் பெருமக்களின் மேற்கோள்களுடன் விளக்கி இருக்கின்ற விதமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.