
கனைத்திடும் மாடு,கிளியானை என்று
அனைத்துயிர் மாட்டுக்(கு) அரியின் -அணைப்புண்டு:
எண்ணத்தில் பேதமில்லா யாதவ ரங்கனைக்
கண்ணனை நெஞ்சே கருது…கிரேசி மோகன்….!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பூமியை நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும்.
++++++++++++
கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
திரிந்து வருபவை
பூர்வீக வால்மீன்கள் !
பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு
வலையில் சிக்கிய
வால்மீன் மீது கவண் வீசிக்
காயப் படுத்தி
ஆய்வுகள் புரிந்தார் !
வால் நெடுவே வெளியேறும்,
வாயுத் தூள்களை
வடிகட்டியில் பிடித்து
வையகத்தில் சோதித்தார் !
தற்போது சுழலும் வால்மீன்
புவி நெருங்கின்
சுழற்சி தளரக் கண்டார் !
நிலச்சரிவு, பனிமலை வீழ்ச்சி
வால்மீன் நீடித்த இயக்கத்தின்
மூல காரணி !
வால்மீன் ஒளிக் கிளர்ச்சியை
ஈசாவின் ரோசெட்டா
முதன்முதல் பதிவு செய்து
தகவல் அனுப்பும் !
++++++++++++++++++
வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடிப்பு இயக்கத்தைக் காட்டுகிறது
ஈசா ஐரோப்பிய விண்தேடல் ஆணையகம் [ESA – European Space Agency] கடந்த சில ஆண்டுகளாக வால்மீனின் சுழற்சி, விழிப்பு, ஓய்வு, நீடிப்பு ஆகிய அதிசய, அபூர்வ நிகழ்ச்சிகளைத் தமது ரோஸெட்டா விண்ணுளவி, தளவுளவி மூலமாகத் தொடர்ந்து ஆய்வுகள் செய்துவந்தார். வால்மீன் 67 பி / சூரியுமோ – ஜெராசிமென்கோவை [67P/ Churyumov- Gerasimenko] ஆராய்ந்து 2016 செப்டம்பர் 30 ஆம் தேதி ரோஸெட்டாவின் குறிப்பணி முடிந்தது. அந்த ஆய்வுகளில் கிடைத்த ஏராளமான புதிய தகவல், வால்மீன் உறக்கத்தில் ஓய்வாகச் சூரியனுக்கு வெகு தொலைவில் இருந்து, மீண்டும் விழித்துச் சூரியனை நெருங்கும் போது, பனித்தலை நீர் ஆவியாகி, வாயுக்கள் வெளியேற்றம் ஆகும் போது தெரியும் விளக்கங்களைப் பதிவு செய்தன. அவற்றை எழுதி ஐகாரஸ் [ICARUS] என்னும் விஞ்ஞான இதழில் வெளியிட்டவர் : ஜார்டன் ஸ்டெக்லாஃப் & நளின் ஸமரசிங்கா [Jordan K. Steckloff & Nalin H. Samarasinha] [Planetary Science Institute].

வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி வால்மீன் நீடித்த இயக்கத்தைக் காட்டுகிறது
வெளிவந்த கட்டுரைகளில் ஒன்று 2017 மார்ச்சு “வானியல் இயற்கை” [Nature Astronomy] இதழில் முக்கியமான செய்தி வந்தது. 67P வால்மீனின் உட்கரு அஸ்வான் பகுதியில் உள்ள பாறைச் சிகரம் [Comet Nucleus] [Aswan Rocky Cliff] விந்தையாக சில நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் [Landslides & Avalanches] இருப்பதைக் காட்டியுள்ளது. அவை இரண்டும் வால்மீன் பெருநிறைக் கழிவை [Mass Waste in Comet] உண்டாக்குகிறது. அதாவது வால்மீன் வாயுக் கிளர்ச்சி, வால்மீன் இயக்க நீடிப்புக் காலத்தைக் [Comet’s Period of Activity] காட்டுகிறது. அதாவது நிலச்சரிவுகள், பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்பட்டு, கீழுள்ள பனித்தளம் வெளியே தெரிகிறது. இரண்டு விஞ்ஞானிகளும் தனித்தனி முறைகளில் இவற்றை ஆய்வு செய்து, முடிவில் ஒரே விளைவைக் கண்டுள்ளார். இந்த ஆராய்ச்சிகளில் வால்மீன் சுழற்சிக்கும், அதன் இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு முக்கிய மானது.
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
http://www.esa.int/
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
http://www.bbc.com/news/
+++++++++++++++++++++++

ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது. பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும். இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள் யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.
பார்பரா கொஸ்ஸோனி [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்]
240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.
எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்]
“எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது. ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது. ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”
ஜான் ஜேக்கஸ் டோர்டயின் [ESA Director General] [November 12, 2014]
“விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”
அல்வாரோ கிமென்னிஷ் [ESA Director of Scince & Robotic Exploration] [November 12, 2014]
“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்? காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்! அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது! நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”
ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]
Mothership Rosetta Drops Lander on the Comet
முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி
2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் ! அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது. 1969 ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது. 2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து, 6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும். ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh] வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது. சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது. மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர். “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும். அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார். தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph]. பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும். ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித் திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]
வால்மீனில் இறங்கிய தளவுளவி ஃபிலே
தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது. மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும். வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை. மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது. சூரியனை வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது. சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை. அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன. அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும். மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.
ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.
2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது. விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள். அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”
டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]
“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று! நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று! வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல! அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”
டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து
ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?
ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது! அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்! வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!
வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்! ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா? மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.
ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்
ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்] ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை. அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.
ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம். மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன. பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.
விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:
1. “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]
2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]
3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]
4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]
5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]
6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]
7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]
9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]
10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]
11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]
வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:
தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:
1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]
2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]
3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]
Philae Lander
<p style=”border:0px;font-family:
நாகேஸ்வரி அண்ணாமலை
இன்றைய தேதியிட்ட (செப்டம்பர் 18) ‘இந்து’வில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்திருக்கிறது. இந்தச் செய்தி வேறு எந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்; ஒரு பொறுப்பான பத்திரிக்கையான இந்துவிலிருந்து வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது.
பீகார் மாநில ஜார்கன்டில் உள்ள கோத்தா மாவட்டத்தில் நடந்த ஒரு செயலை நினைத்துப் பார்க்கவே குமட்டுகிறது. கோத்தா மாவட்ட, பி.ஜே.பி.யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துபே அங்கு ஒரு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது. நிகழ்ச்சி முடிந்து துபே தன் பேச்சை முடித்துக்கொண்டதும் ஒரு பி.ஜே.பி. கட்சித் தொண்டர் ஒருவர் ஒரு பித்தளைத் தட்டில் தண்ணீர் கொண்டுவந்து துபேயின் பாதங்களைக் கழுவி ஒரு துண்டால் துடைத்துவிட்டுப் பிறகு அந்தத் தண்ணீரை குடித்தாராம்! அதைக் கண்டு அங்கு கூடியிருந்த கூட்டம், ‘பவான் பாய் ஷா வாழ்க’ என்று கரகோஷம் செய்து அந்தத் தொண்டரை வாழ்த்தியதாம். “நான் தவறு எதுவும் செய்யவில்லையே. அவர் என்னுடைய அண்ணன் போன்றவர், அவரிடம் எனக்கிருக்கும் மரியாதையை இப்படிக் காட்டுகிறேன்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினாராம் ஷா. அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், “இதில் என்ன தவறு? அவர் அப்படிச் செய்து என்னிடம் அவருக்குள்ள மரியாதையைக் காட்ட விரும்பினால் எந்தத் தவறும் இல்லை” என்றாராம். குடியாட்சி இருந்த காலத்தில்கூட மன்னர்களிடம் மரியாதையை இப்படி யாரும் காட்டினார்களா என்று தெரியவில்லை. இந்தியாவில் குடியாட்சி மலர்ந்து 68 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் முடியாட்சியில் கூட இல்லாத இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறோம். நம் மக்களுக்குக் குடியாட்சி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது?
இந்தியாவின் இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு செய்தி. சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றதாலேயே குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல வேண்டியவர். சில அரசியல் காரணங்களுக்காக எழுதப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால் அவர் சிறைக்குச் செல்லாமல் தப்பித்துக்கொண்டவர். இவருக்கு இந்தியாவின் குடிமக்களுக்குக் கொடுக்கப்படும் உச்ச விருதான ‘பாரத ரத்னா” விருதை வழங்க வேண்டும் என்று இப்போது தமிழ்நாட்டை ஆண்டுவரும் அம்மையாரின் கட்சியைச் சேர்ந்த அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. இப்படிப் பரிந்துரைப்பதின் மூலம் தமிழ்நாடு அரசு என்ன சொல்ல முயற்சிக்கிறது? அம்மையார் செய்த ஊழல் அப்படியொன்றும் பெரிய ஊழல் அல்ல; அதை மன்னிப்பதோடு கௌரவிக்கவும் செய்ய வேண்டும் என்கிறதா? அப்படியானால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறியதை யாரும் கண்டுகொள்ள வேண்டியதில்லை என்கிறதா? இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அம்மையாருக்குப் ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அம்மையாரின் கண்மூடித் தொண்டர்களின் ஓட்டுக்கள்தான். அது எப்படிக் கிடைத்தால் என்ன.
அம்மையாருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஊழல் புரிந்துள்ள பீகாரைச் சேர்ந்த லாலு பிரசாத்திற்கு மன அழுத்தமாம்! மருத்துவமனையில் எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு இரவில் தெரு நாய்கள் குரைக்கும் தொல்லை தாங்க முடியாததால் தன்னுடைய தூக்கம் கெடுகிறது என்று குறை கூறிக்கொண்டும் வாழ்ந்துவரும் லாலுவுக்கு இப்போது மன அழுத்தமாம். அரசியலில் இருக்கும், ஒருவரொடொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் தன்னுடைய இரண்டு மகன்களைப் பற்றிக் கவலைப்படுகிறாராம். இந்தக் கவலைகளினால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு இவருக்கு மனநோய் மருத்துவர்கள் உதவப் போகிறார்களாம். பல லட்சங்கள் அரசுப் பணத்தைக் கையாடி அரசுக்கும் மக்களுக்கும் பெரும் நஷ்டம் விளைவித்த இவருக்கு ராஜ வைத்தியம் நடக்கிறது.
இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ஊழல் புரியலாம்; அரசுப் பணத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழலாம். யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை . இதுதான் இந்தியச் சுதந்திரம் கற்றுக்கொடுக்கும் பாடமா?
இன்னம்பூரான்
2018-09-18
மக்களை கட்டி மேய்ப்பது எளிது அன்று. உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் கட்டுப்பாடு இல்லையெனில் ஊரையே மேயும்.கரையை கரைக்கும். மரையை கழட்டும். கூறையை பிரிக்கும். சூறையாடும். கூறு போடும், பொது சொத்தை.
சிங்கம், புலி, புரவி, எருது, பசு மாடு எல்லாவற்றின் மீதும் ஆளுமை செலுத்தும் மனிதனை அவனுடைய தனயன் கூட மதிக்காததைக் கண்கூடாக பர்க்கிறோம். மனித இனம் கூடி வாழ்வதை விரும்புகிறது. அதற்காக, தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைக்கவும் கற்றுக்கொள்கிறது. அது சமுதாய நலன் பொருட்டு இன்றியமையாத தியாகம் என்று தோன்றினாலும், உண்மையில் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் தந்திரம் எனலாம். சமுதாய நலனும், சுயநலமும் ஒரே பாட்டையில் பயணிக்க இயலவில்லை என்றால், உதட்டளவில் சமுதாய நலம் நாடி, செயலில் சுயநலம் தேடி இயங்குபவர்களை சமூக விரோதிகள் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. நீதி அவர்களை இனம் கண்டு தண்டிக்கவேண்டும். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது கூட ஒரு உருவகம் தான். பாரத தேசமும், குறிப்பாக தமிழகமும் தொன்மையானவை, அவற்றின் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவை போற்றத்தக்கவை என்பது போல கிரேக்க/ ரோமானிய வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவையும் போற்றத்தக்கவை என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.
ஜஸ்டியா அகஸ்டா என்ற ரோமானிய நீதி தேவதை ஒரு அலங்கரிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது ஜனவரி மாதம் 8ம் தேதி 13 கி.மு. முதல் ஒரு ஆலயத்தைல் துவக்கப்பட்டதாக ரோமானிய தொன்மை கூறுகிறது. அகஸ்டஸ் என்ற ராஜாதி ராஜன் தான் நீதி தேவதையை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவள் திறந்தக் கண்ணிளாள். கி.பி. 16ம் நூற்றாண்டில் தான் அவளது கண்மலர்கள் மூடப்பட்டன, பாரபக்ஷமில்லால் இயங்குபவள் என்பதை முன்னிறுத்த. அவளுக்கு செல்வம், அதிகாரம், பதவி ஆகியவற்றுக்கு முக்கியத்வம் கொடுக்கத் தெரியாது. கண்கட்டுடன் காணப்படும் நீதி தேவதை முதலில் ஸ்விட்சர்லாந்தில் பெர்ன் நகரில் 1543ல் அவதரித்தாள். லண்டனில் இருக்கும் ஓல்ட் பெய்லி நீதி மன்றம் பழமையானது மட்டுமல்ல; பிரபல வழக்குகள் அங்கு மன்றாடப்பட்டன. அங்கு அருள் பாலிக்கும் நீதி தேவதைக்கு ‘கண்மூடி’ கிடையாது. அந்த கோர்ட்டாரின் தலபுராணம் நல்லதொரு விளக்கம் தருகிறது. புராதன ரோமானிய தேவதை விழிப்புடன் தான் இருந்தாள். அவள் ஒரு கன்னிகை தேவதை என்பதால் பாரபக்ஷமின்மைக்கு உத்தரவாதம் உளது என்கிறது. இப்போது தேவதா விசுவாசத்தை சற்றே நகற்றி வைத்து விட்டு, நீதி பரிபாலனத்தைப் பற்றி சில வரிகள்.
மக்களை கட்டி மேய்க்க சமுதாய விதிகள் தேவை. அவற்றில் சில வேலியை மேய்க்கும் என்பது வரலாறு
அடிக்கடி கூறும் கசப்பான உண்மை. கட்டை பஞ்சாயத்து முரட்டுத்தனமாக குருட்டு நீதி வழங்குவதை ஊடகங்கள் அவ்வப்பொழுது சன்னமான குரலில் எடுத்துரைக்கின்றன. பிறகு யாவரும் மறந்து விடுவார்கள். சில சமுதாயங்கள் சட்டம் அனுமதிக்கும்/ வரவேற்கும் கலப்பு மணங்களை தடை செய்யும், சட்ட விரோதமான வன்முறை எதிர்ப்புக்களை கண்டு கொள்ளாது. அரசாங்கம் என்றதொரு அதிகார மையம் இருந்தால், சமுதாய நலன் அக்கறையுடன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. விதிகள், அதற்கேற்ப இயற்றப்படும்; அவற்றை அரசு நிர்வகிக்கும்; நீதி மன்றங்கள் சட்டத்தை பாதுகாக்கும். மாண்டெஸ்கோ என்ற சிந்தனையாளர் Separation of Powers என்று எழுதிய அரசியல் கோட்பாடுகளை இதற்கு முந்திய ஒரு வரியில் அடக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தொடரவேண்டி இருக்கிறது. இது ஒரு முகாந்திரம் மட்டுமே.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/NewarkJustice1.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
காஞ்சிபுரம், ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மலேசியா, மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை,
மலேசியா, உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்,
விருபா . காம்
வல்லமை – ஆய்வு மின்னிதழ்
இந்து தமிழ் திசை நாளிதழ்
இணைந்து நடத்தும்
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும்
படைப்பரங்கமும்
பேரன்புடையீர் வணக்கம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டு வெள்ளிவிழா கண்ட ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர இணைப்புப் பெற்றுள்ளதுடன் 2014 முதல் தன்னாட்சிப் பெற்ற நிறுவனமாகவும் விளங்கிவருகிறது. மேலும், தேசிய தரமதிப்பீட்டுக் குழுவால் ‘A’ உயர்தரத் தகுதியும், AICTE குழுவினால் அங்கீகாரமும் பெற்றுள்ளதுடன் ISO 9001-2008 தரச்சான்று பெற்ற கல்லூரியாகவும் திகழ்கின்றது. இத்தகு பெருமைமிகு கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழாய்வுக்கு வளம்சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் பன்னாட்டுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், விருபா.காம், வல்லமை ஆய்வு மின்னிதழ், இந்து தமிழ் திசை நாளிதழ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்துகிறது.
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்
உலக நாகரிகங்கள் நதிக்கரைகளைத் தொடர்புப்படுத்தியே அறியப்படுகின்றன. இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பாரத தேசத்திலும் தொன்மங்கள், புராதனச் சடங்குகள், நம்பிக்கைகள், புனித பயணங்கள் யாவும் பெரும்பான்மையும் நதிகளோடு தொடர்புடையன. இன்றைக்கு மனித சமூகம் நதிகளிடமிருந்து அந்நியமாகி வந்தபோதும் அவர்களது வாழ்வோடும் ஆழ்மனத்தோடும் தொடர்ந்து நதிகள் ஆட்சிபெற்றுவருகின்றன. எனவே, நதிகள் அவர்களது படைப்புகளிலும் செயல்களிலும் காலந்தோறும் வெளிப்பட்டுவந்துள்ளன. இந்த சூழலில் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தாமிரபணி மஹாபுஷ்கரம் என்னும் புனித நீராடல் பெருவிழா நடைபெற இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு ‘நதிகளும் தமிழ்ச் சமுதாயமும்’ என்ற பொதுத்தலைப்பில் இந்த ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கையும் படைப்பரங்கையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தமிழ்ச்சமூகம் நதிகளோடு கொண்டிருந்த உறவையும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டையும் அதன்வழி பண்பாட்டு விழுமியங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். இது தமிழரின் நீர்மேலாண்மை அறிவையும் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் வெளிப்படுத்துவதோடு எதிர்கால சிந்தனைகளையும் விதைக்கும் என நம்புகிறோம்.
பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் பேராளர்கள் சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நெடும்பரப்பு முழுவதிலிருந்தும் நதிகள் சார்ந்த பதிவுகளைத் தொகுத்தும் பகுத்தும் தனித்தும் ஆராய்வதாகவும் அவற்றின் வழி தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களை ஆராய்வதாகவும் கட்டுரைகள் எழுதலாம். மேலும், தொல்லியல் ஆய்வுகள் வழி அறியலாகும் நதிகள் குறித்த செய்திகள் தொடங்கி, நதிகளோடு தமிழர்கள் கொண்டிருந்த சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் சார்ந்த பொருண்மைகளோடு நதிகளின் இன்றைய நிலை வரையிலான கருத்தாக்கங்களில், பல்துறை அணுகுமுறைகளில் கட்டுரைகள் அமையலாம். இதற்கு பதிவுக் கட்டணமாக ஆய்வாளர்கள் உரூ. 500ம், பேராசிரியர்கள், பிறர் உரூ. 700ம் செலுத்தவேண்டும். தேர்வுபெறும் அனைத்துக் கட்டுரைகளும் கருத்தரங்க நாள் அன்று சான்றிதழுடன் நூலாக்கம் செய்யப்பெற்று அளிக்கப்பெறும்.
வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி
PRINCIPAL
Sri Sankara Arts & Science College, AUTONOMOUS
Enathur, Kanchipuram.
நூலாகும் ஆய்வுக் கட்டுரைகளில் அமைப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மட்டும், கட்டணம் ஏதுமின்றி இந்திய தேசிய பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழான வல்லமை இணைய இதழிலும் வெளியிடப்பெறும்.
பன்னாட்டு படைப்பரங்கம்
நதிகளும் தமிழ்ச் சமுதாயமும் என்ற பொருண்மையில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவது போலவே, தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நதிகள், நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி அனுப்பலாம். இதற்குத் தனியே கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு செய்யப்பெறும் படைப்புகள் மட்டும் நூலாக்கி படைப்பரங்க நாளில் வழங்கப்பெறும்.
வந்து சேரும் இருவகை படைப்புகளிலும் அறிஞர் குழுவால் தேர்வு செய்யப்பெறும் முதல் மூன்று படைப்புகளுக்குப் பரிசுகளும் விழா மேடையிலேயே வழங்கப்படவுள்ளன.
அனுப்பும் முறை
ஆய்வுக் கட்டுரைகளும் படைப்புகளும் ‘யுனிகோடு’ எழுத்துருவில் (UNICODE FONT) 12 என்ற எழுத்தளவில் 1.5 வரி இடைவெளியுடன் தட்டச்சு செய்து A4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் கணினித் தட்டச்சு செய்து அதன் மென்படியை thamirabaranisankara@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
அதன் காகிதப் படியைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
ஜெ.இராதாகிருஷ்ணன்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறைத் தலைவர்
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
தன்னாட்சி,
ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631561.
தொலைபேசி : 044 – 27264066 (Ex 42)
thamirabaranisankara@gmail.com
கைப்பேசி : 9486150013, 9786985451
-முனைவர் கல்பனா சேக்கிழார்
உதவிப்பேராசிரியர், இவ்வாய்வேட்டின் திறனாய்வாளர்
தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திறனாய்வுக்கான ஆய்வேட்டின் தலைப்பு:
இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் சங்க இலக்கியத் தாக்கம்
ஆய்வாளர்: கோ. வாசுகி,
தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற ஆய்வேடு இது.
*****
சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் அகம் புறம் மரபுகளின் தாக்கம் இல்லாமல் பிற்கால இலக்கியங்கள் தோன்றவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கிய வடிவங்களில் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதல்கள் நிகழவில்லை என்றே கூறலாம். பாரதியுடன் தொடங்கும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்ட இலக்கியங்களிலும் அகம் புறம் மரபின் தாக்கம் தொடர்வதை அவதானிக்கலாம். அரசியல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் சமூகக் காரணங்களால் மனித வாழ்வு மாற்றம் அடைந்தாலும், அன்பு, அறம், மறம், ஈகை முதலிய பண்பாட்டுக் கூறுகளில் பழங்கால வாழ்வியல் தாக்கம் இடம் பெற்றுள்ளது என்பதைக் ஆய்வுக் கருதுகோளாகக் கொண்டு ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வேடு ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
முதல் இயலில் அகத்திணை ஒழுகலாறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. களவு, கற்பு குறித்தும் களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒழுக்கம் குறித்தும், இயற்கைப்புணர்ச்சி, வரைவுகடாதல், தோழியிற் புணர்வு, பாங்கொடு தழால் எனத் தொல்காப்பியர் பகுத்துள்ளவற்றைச் சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பட்டுள்ள திறம், களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் குறியிடங்கள், இற்செறிப்பு, அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, அறத்தொடு நிற்றல், உடன்போக்கு போன்ற நிகழ்வுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. கற்பிற்குப் பிறகான வாழ்க்கை முறை, வினையினை நோக்கமாகக் கொண்டு தலைவன் செயல்பட்டுள்ளதையும், பெண் இல்லத்தைப் பேணி பாதுகாப்பவளுமாக எவ்வாறு விளங்கினர் என்பது சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இயலில் சங்க இலக்கியங்களில் காணப்படும் கைக்கிளைக் காதல், அன்பின் ஐந்திணைக் காதல், பெருந்திணைக் காதல் ஆகியவை குறித்துப் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளனர் என்பதும், காதலின் வலிமையை, மேன்மையை, இவ்வுலக இயக்கமாக இருப்பதை இருவருமே எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதும் ஆராயப்பட்டுள்ளது. களவுக் குறித்த பாடல்கள் இருவர் படைப்புகளிலும் காணப்படுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதியார் பழைய மரபுப்படி காதலர்கள் ஊழின் வலியாகச் சந்திப்பதாகப் பாடுவதையும், திராவிட இயக்கக் கோட்பாட்டை உள்வாங்கிய பாரதிதாசன், ஈர்ப்பினால் இருவரும் இணையும் சூழல் உருவாவதும் ஆராயப்பட்டுள்ளது. தோழன், தோழியர் காதலருக்கு உதவுவது பற்றியும் அலர், இற்செறிப்பு ஆகியவற்றையும் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளது விளக்கப்பட்டுள்ளது. சங்க அக இலக்கியக் கூறுகள் பாரதி, பாரதிதாசனின் பாடல்களில் காணப்படும் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் வரையறுத்துள்ள புறத்திணை விதிகள் சங்க இலக்கியங்கள் கூறும் புற வாழ்வியல், போர் சார்ந்த வாழ்க்கை முறையியல், போரில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், அது சார்ந்த நம்பிக்கைகள், அரசன், அரசாட்சிமுறை, நாட்டிற்காக மக்களின் கடமை உணர்வு, பெண்களின் கடமைகள் போன்றவை குறித்து மூன்றாவது இயலில் ஆராயப்பட்டுள்ளது.
நான்காம் இயலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் வாழ்ந்த பாரதி பாரதிதாசன் பாடல்களில் புறம் சார்ந்த பாடல்களின் தாக்கம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பாடல்கள் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாட்டு மக்களின் உள்ளத்தில் வீர எழுச்சியை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன என்பதும் திணை அடிப்படையில் போர் நிகழவில்லை என்றாலும் மண்ணாசை, எல்லைப் பிரச்சனை, தாய்நாட்டு உரிமை, அரசியல், சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போர் ஏற்பட்டாலும் திணை அடிப்படையில் பொருந்தி வருவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
சங்க கால மன்னர்கள் வஞ்சின மொழியினைக் கூறியுள்ளது போலவே பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை பாரதத் தாயாக உருவகித்து வஞ்சினம் கூறியதும், பாண்டியன் பரிசில் கண்ணுக்கினியாள், அன்னம் வஞ்சினம் பேசியதும் கூறப்பட்டுள்ளது. போர் அறங்கள் குறித்தும் காந்தியடிகள் மேற்கொண்ட அறவழிப் போராட்டம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முடியாட்சி முறையை வெறுத்து மக்களாட்சி முறையை இருவரும் முன் வைக்கின்றனர். வீறு கொண்ட இளைய சமூகம் நாட்டிற்குத் தேவையென வற்புறுத்துகின்றனர். போருக்கு வழியனுப்புபவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல் பங்கேற்பவர்களாகவும் படைத்துக்காட்டுகின்றனர் அச்சம், மடம், நாண் தவிர்த்த புதுமைப் பெண்களே நாட்டிற்குத் தேவையெனப் பாடுகின்றனர் என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்தாம் இயலில் சங்க இலக்கியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் அடிப்படையாக வைத்து, பாடல்கள் புனைந்தது போலவே பாரதியாரும் பாரதிதாசனும் காதல் குறித்த பாடல்களைப் பாடும் பொழுதும் பாடியுள்ளனர் என்பது விளக்கப்பட்டுள்ளது. சாதி, சமயம், உயர்வு, தாழ்வு போன்றவை சங்க இலக்கயத்தில் காணப்படவில்லை அதுபோலவே பாரதி பாரதிதாசன் பாடல்களிலும் இவற்றின் தாக்கம் காணப்படவில்லை. சங்க காலக் காதல் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்காலத்தில் அவ்வாறு பார்ப்பதில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர். சங்க கால வீர வாழ்க்கை போன்று தற்காலத்திலும் இளைஞர்கள் வீர வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதைப் பாடுகின்றனர். சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட கொடை குறித்தும் இருவர் பாடல்களிலும் காணப்படுகின்றது என்பவை குறித்து விளக்கயுரைக்கப்பட்டுள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் சமூக, அரசியல், பொருளாதார நிலைகள் சங்க காலத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அகம், புறம் சார்ந்த பாடல்களைப் புனையும்பொழுது சமகால நிலையினை உட்செறித்தும், மரபினை உள்வாங்கியும் ஆக்கப்பட்டுள்ளதை இவ்வாய்வேட்டின் மூலம் அறியமுடிகின்றது. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த சூழலில் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டவேண்டிய நிலையிருந்தாலும் மரபு வழுவாமல் அவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாரதியார், பாரதிதாசன் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆனாலும் பெண் குறித்து, தொல் சமூகம் முன்வைக்கும் விதிகளில் இருந்து வேறுபட்டுப் புதுமைப் பெண்களே நவீன சூழலுக்குத் தேவை என்பதை முன்வைக்கின்றனர்.
பெண்ணுக்கான வெளி இல்லத்தோடு முடிவடைவதில் இருவரும் விருப்பம் கொண்டிலர். சமூக வெளியிலும் பெண் மதிப்புமிக்கவளாக விளங்கவேண்டிய தேவையுள்ளதை இருவரும் தங்களது படைப்பின் வழி வெளிப்படுத்தியுள்ளதை இவ்வாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. சங்க இலக்கியம் முன்வைக்கும் அகம், புறம் சார் மதிப்பீடுகளோடு, இருபதாம் நூற்றாண்டு பாரதியார், பாரதிதாசன் பாடல்களோடு ஒப்பிட்டு நிகழ்த்தப்பட்டுள்ள இவ்வாய்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றியுள்ள இலக்கியங்களில் தொல்சீர் மரபின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யத் துணைசெய்யும்.
-முனைவர் இரா. மதன் குமார்
முன்னுரை
திருஞானசம்பந்தப்பெருமான், மொழியே மலராக, பதிகமே பாமாலையாக, ஞானமே மணமாகச் சொல்மாலை சூட்டிச் சிறந்தவர்; அரனடியை அடைதற்குரிய நன்னெறிகளைத் திருக்கடைக்காப்பாக அருளிச்செய்தவர்; அவர், ‘அன்பு நிறைந்த சிந்தையராவர்’ என அடியவர்களை ஏற்றிப் போற்றியவர்; அடியார்களின் மண்ணுலக மயக்கம் நீக்கிப் பிறவிப்பிணி தீர்க்கின்ற ஞானத்துணைவராகவும் வந்தருளியவர். அவரை நேரில் கண்டறிந்திராத நிலையிலும், அவர் மீதான அடிமைத்திறத்தில் சிறந்திருந்தவர், திருமயிலைச் சிவநேசர். அவரது அன்பின்மேன்மை, பிள்ளையாரின் செயற்கரிய சாதனைக்குக் கருவியாகின்ற தனித்தகுதியாக விளக்கம்பெற்றிருந்தது. ஆளுடைய பிள்ளையார், அதனை உலகறியச் செய்வதற்குப் பூம்பாவையை உயிருடன் மீட்டருளிய அற்புதத்தைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது. அப்புராணத்தைப் பயில்கையில், பிள்ளையாரின் அருள்திறமும், சிவநேசரின் அடிமைத்திறமும் சைவப்பெருநெறியாக விளங்கவல்ல திறத்தினை உணரலாம். அவ்விரு பெருமக்களும் கொண்ட கொள்கையும், நின்ற நிலையும், புரிந்த சாதனையும், பெற்ற பேறும், ‘எம்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகின்ற திறத்தினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.
பேரன்பர் வழியே பெருஞ்சாதனை
சிவநேசர், தாம் சிவமெனவே போற்றுகின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை கண்ணால் கண்டதில்லையாயினும், அவரது திருப்புகழைக் கேட்டு நாளும் திருஞானசம்பந்தம் பெற்றுய்ந்த சீர்மிகு அடியவராக விளங்கியவர்.
அடியார்த் திருக்கூட்டத்தின் வாயிலாக அவர்களது திருப்புகழைக் கேட்டு, ஞானப்பாலுண்ட பிள்ளையின்பால் சிவநேசர் மீளா அடிமைத்திறம் பூண்டார். திருமுகத்தைக் காணாமலேயே அடிமைத்திறம் பூண்ட அவரது உருகும் அன்பின் மனநிலையினை, ‘தாயாய் முலையைத் தருவானே’ (ஆனந்தமாலை: 5) என்னும் திருவாசகத்தொடரின் வழியே விளக்கலாம்.
பிறந்த பிள்ளையானது தாயின் அன்பினைப் பெறுவதற்கு, அதன் உள்ளிருந்து எழுகின்ற பசியுணர்வே தகுதியாகிறது. முகம் அறியாத அக்குழந்தையானது திருமுலைகளையே பற்றுக்கோடாகக் கொண்டு பாலினைப்பெற்று, உயிர்வாழ்கிறது. அத்தகைய குழந்தையாகவே சிவநேசர் விளங்கினார். ‘தனது ஞானாசிரியரது திருமுகத்தைக் கண்ணுற்றதில்லை’ என்ற நிலையிலும், அவர் காட்டிய தொண்டுநெறியினைத் தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு, ‘அன்புநெறியே, சைவநெறி’ என்பதனை உலகுக்கு உணர்த்திக்காட்டினார். அம்மேன்மைநிலையே, திருமயிலையில் திருஞானசம்பந்தர், மாண்டவரையும் உயிருடன் எழுப்புகின்ற பெருஞ்சாதனைக்குச் சிவநேசர் கருவியாகின்ற பேற்றினைத் தந்தருளியது.
பெருகும் அன்பின் சிவநேசர்
திருமயிலை நகரின்கண் கடல் வணிகத்தில் சிறந்திருந்த சிவநேசர், இருநிதிச் செல்வமுடன், அருள்நிதிச் செல்வமும் தம்பால் குறைவற நிறைகின்ற பேறுபெற்றிருந்தார். அத்துடன், ‘தம்மை உள்ளவாறு அறிந்திருந்தார்; பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்கின்ற உள்ளத்தராயிருந்தார்; சங்கரற்கு அடியவராகவும் செம்மையே புரிகின்ற மனத்தினராகவும், பிள்ளையாரிடத்தில் நீங்காத அடிமைத்திறமும் பூண்டிருந்தார்’.
தம்மை உள்ளவாறு அறிந்து தெளிதலாவது, ‘பகுத்தறிவின் பயன்கொண்டு, தமக்குரிய உண்மைச்சார்பினை அறிந்து தெளிதல். பசுக்களாகிய ஆன்மவர்க்கம், பதியாகிய பெருமானைச் சார்வதும், அச்சார்பினால் வீடுபேறடைவதும், அப்பெருநோக்கத்திற்காக வகுக்கப்பட்டவையே புவனபோகங்களும்’ என்று தெளிதலாகும். பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்ளுதலாவது, ‘உலக மயக்காகிய பொய்ப்பொருள்களின் சார்பு நீங்கி, அடியார்ப்பணி முதலானவற்றின் வழியே, அரனடிக்கு அன்புபெருக்குதல்’. சங்கரற்கு அடிமை செய்தலாவது, ‘நிலைத்த பேரின்பப்பொருளாகிய பெருமானைப் பெற்றுய்வதற்குக் கருவியாகிய நிலைத்த பேரன்பிலிருந்து பிறழாமல் நிற்றல்’. இத்தகைய பெருங்குணச் செல்வராகிய சிவநேசரைத் தெய்வச் சேக்கிழார்பெருமான்,
‘தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
மெய்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பாற்
பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருளிது வெனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினர் சிவநேச ரென்பார்’ (திருஞான. புராணம்: பா.எண்: 1035) என்றுக் குறித்தருளியுள்ளார்.
உண்மை அன்பால் உருகிப் பெருகுவார்
சிவத்தின்பால் நிலைத்த பேரன்பின் அடையாளமாக, அடியாரிடத்தில் உருகுதலும், நெறியல்லாத நெறிகளில் மக்களை அலைக்கழிக்கின்ற பரசமயத்தாரின் அறியாமை கண்டு வெறுப்பு உடைமையும் சிவநேசரின் இயல்பாயின.
‘கற்றை வார்சடை முடியினா ரடியவர் கலப்பில்
உற்ற செய்கையி லொழிவின்றி யுருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமு முடையராய்த் திகழ்வார்’ (மேலது புராணம்: பா.எண்: 1036)
சிவநேசரது இல்லத்தில் பொருள்செல்வமும், இடையறாது பிள்ளையார்பால் உருகுகின்ற அடிமைத்திறமும் நிறைந்து பெருகின. அம்மையிடத்தில் ஞானப்பாலுண்டும், தென்பாண்டி நாட்டில், சமண் சாய்த்தும், சைவம் தழைக்கப் பாடுகின்ற பிள்ளையாரின் பெருஞ்சிறப்பினை நாளும் அடியார்த் திருக்கூட்டத்தின் வழியே கேட்டு, அவர்பால் காதலாகிக் கசிபவரானார். அவர்தம் திருமுகத் தரிசனப்பேறு பெற்று, திருவடியிலேயே தொண்டு பூண்டிருக்க வேண்டும்’ என்ற பக்குவநிலைக்கு உயர்ந்தார்.
‘செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலி னிடையறா உணர்வால்
அல்லு நண்பக லும்புரிந் தவரருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவுந் தொழிலின ரானார்’. (மேலது புராணம்: பா.எண்: 1038)
பூமகள் எனவொரு பெண்கொடி உதித்தார்
‘பெருகும் அன்பில் மனம் விளங்கிச் சிறந்திருந்த சிவநேசர், மனை விளங்கத் தமக்கு மகவு வாய்க்கவேண்டும்’ என்று பெருமானைப் பணிந்தார். அதற்கு, நடமாடும் கோயிலென விளங்குகின்ற அடியவர்பால் ஆராத அன்பு பெருக்கிப் பெருந்தவம் புரிந்தார். என்றும் குறையாத அன்பில் அரனடியரைப் பேணிக்காத்தார். அன்பும், தொண்டும் அவர்தம் தவமாகிச் சிறந்தன. அத்தவப்பயனே, அவருக்குப் பூமகளை ஒத்த பெண்மகவு வாய்க்கும்படி அருளியது. அதற்கேற்ப, அப்பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். அப்பெண்பிள்ளையும் சிவனன்பில் நாளும் தழைத்து வளர்ந்தது.
‘யாவ ரும்பெரு மகிழ்ச்சியா லின்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கி
பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க’ (மேலது புராணம்: பா.எண்: 1044) என்றமைந்த பாடல் அடிகளில், சிவநேசர், பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டார் என்ற குறிப்பினை தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘புவிமேல் விளங்க’ என்னும் தொடரால் நிறைவுசெய்துள்ளார்.
‘இனி வரும்நாளில், பிள்ளையார், சிவநேசரின் குலம் முழுமைக்கும் ஞானத்துணைவராக எழுந்தருளவுள்ளார்; அத்துடன், பூம்பாவையின் பொருட்டுச் செயற்கரும் சாதனையும் பிள்ளையாரல் நிகழவுள்ளது. அவ்வருள் சிறப்புகளினால், ‘பூம்பாவை’ என்னும் திருப்பெயரும் புவி உள்ள அளவும் நின்று நிலைக்கவுள்ளது’ என்பது அவர் உணர்த்தக் கருதிய திருக்குறிப்பாகும்.
பெருகும் அன்பே பெருங்காப்பு
பொருள்செல்வம் பெருகுகின்றவேளையில், உலக இன்பங்களைத் துய்த்துத் திளைப்பதே உயிரியற்கை. ஆனால், சிவநேசரிடத்தில் பெருகிய செல்வம், பிள்ளையார்பால் பேரன்பாகவும், அரனடியார்பால் அடிமைத்தொண்டாகவும் மிளிர்ந்தன. நாளும் சிவஞானச்செல்வரை முன்னிட்டு, சிவநேசரின் சிந்தையில் நிறைந்த அடிமைத்திறம், அவர் வெல்லுதற்கு இயலாத உலகமயக்கங்களையும் வென்றேறத் துணையானது; உண்பனவும், உடுப்பனவும், உற்றசெல்வங்களும், பெற்ற மகளாகிய பூம்பாவையும், தாமும் இனி, ‘பிள்ளையாருக்கே அடிமை’ எனப் பணிந்துய்கின்ற பெரும்பற்றினை அவரிடத்தில் நிலைப்பெறச்செய்தது. வீடும் வேண்டாத விருப்பினராகிய சிவநேசர், பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறமானது,
‘சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக்
“கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
முற்று மென்னையுங் கொடுத்தனன் யா” னென்று மொழிந்தார். (மேலது புராணம்: பா.எண்: 1053)
சிந்தையால் மகிழ்ந்த சிவநேசர்
மேற்குறித்த பாடலில், சிவநேசரின் அடிமைத்திறத்தினைப் பாடியருளிய தெய்வச் சேக்கிழார்பெருமான், அடுத்த பாடலிலும் அவர்தம் அன்பின்திறத்தை அறிவுறுத்தியுள்ளார். ‘தம்மையும், தமது பெருஞ்செல்வமாகிய பூம்பாவையையும், பிள்ளையாரே ஆட்கொள்ள வல்லவர் என்ற அடிமைத்திறத்தில் சிவநேசர் சிந்தை மகிழ்ந்திருந்தார்’ எனச் சுட்டியுள்ளார்.
‘எல்லை யில்பெருங் களிப்பினா லிப்பரி சியம்பி
முல்லை வென்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையு மறையவர் புகலிச்
செல்வ ரேயுடை யாரேனுஞ் சிந்தையான் மகிழ்ந்தார்’ (மேலது புராணம்: பா.எண்: 1054)
குமரகுருபரர், ‘செல்வம் என்பது, சிந்தையின் நிறைவே’ (சிதம்.மும்.கோவை:26) என்றார். அதற்குத் தமது வாழ்க்கையையே இலக்கணமாக்கித் தந்தவர், சிவநேசர். அவர், பிள்ளையாரிடத்தில் பெருகும் அன்பின் சீர்மையராகி, ‘இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உமதுகழலே மறவாது பணிந்தெழுவேன்’ என்ற நிலைநின்றார்; அன்பகலாத அடிமைத்திறமென்னும் அருள்செல்வம் கொண்டு, தனது உயிரைப் பிணித்த பிறப்பு என்னும் வறுமையினை நீக்கிச் சிறந்தார்.
சிவநேசர் பொருட்டு பெருஞ்சாதனை
நம்மைப்போன்று குறிக்கோளற்று உலகியலில் திளைப்போருக்கே இறப்பென்பது துன்பம் தருவதாகின்றது. மாறாக, சிவநேசரைப் போன்று, உலகியலை வென்ற அடியவர்களால் மரணத்தையும் வெல்லமுடிகிறது. ஆயினும், அவரைப் போன்ற கொள்கைச் சான்றோரின் இடர்களைக் களைவதையே பெருமான் தனது திருவருள் கொள்கையாகக் கொண்டவன்.
‘கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே’ (1:52:1) என்பது, ஞானப்பிள்ளையாரின் திருவாக்கு. அது பொய்க்காதவண்ணம், மாண்டு, எலும்பாகி மிஞ்சிய பூம்பாவையையும் பிழைக்கச் செய்கின்ற பேரருளாடலை பெருமான், பிள்ளையாரைக் கொண்டு திருமயிலையில் நிகழச்செய்தான்.
‘எங்கொங்கை நின்னப்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க (திருவெம்பாவை: 19) என்று பூம்பாவையைப் பிள்ளையாருக்கு உரியவராகக் கொடுத்துய்வதே தமது பெருங்கடமையாக வாழ்ந்தார்.
அப்பெண்பிள்ளையும் அந்நாளில், ஏழாண்டு பருவத்தினளாக இருந்தாள். ஒருநாள், தனது வளமனையிலிருந்த மாதவிப் பந்தலிலிருந்து மலர்க் கொய்ய முயன்றாள். அவ்வேளையில், முள் எயிற்று அரவொன்று அவளது தளிர்க்கரத்தில் பல்பதித்தது. விடவேகம் அவள் உடலில் பாய்ந்ததனால், அவளும் சோர்ந்து வீழ்ந்தாள். பெற்றோரும், உற்றோரும் சூழ்ந்திருந்து விடம் நீக்கப் பல்வகைச் செயலாற்றினர். ‘அருமருந்தால் ஆவி மீட்டு அவளைக் காப்போருக்கு அருஞ்செல்வம் பரிசாகும்’ எனப் பறையும் அறிவித்தனர்; மூன்று நாள்கள், அவளுடலினை மாடத்தில் வைத்துக்காத்தனர். ஆயினும், பிள்ளையாரின் திருவாக்கினால் அன்றி, அவள் மீண்டெழுதல் இல்லை என்ற நிலையினால், சிவநேசரின் பிற முயற்சிகள் பயனற்றுப் போயின.
பெற்றபிள்ளையினை இழந்தது சிவநேசருக்குப் பெருஞ்சோகமே. அத்துன்பத்திலும் அவர், ‘நாள்தவறாது, பிள்ளையாரின் அரும்புகழைப் பேசியும், கேட்டும், சிந்தித்தும் அன்பு பெருக்கத் தவறவில்லை; அவளுக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்திலிருந்து மீண்டுவரத் திருவருள் துணைநிற்காது போயிற்றே’ என்றும் கலங்கவில்லை.
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே’ (குழைத்தபத்து: 7) என்ற ஞானத்தெளிவுடன் விளங்கினார். பூம்பாவைக்கு, ஞானப்பிள்ளையாரை நாயகனாக்குகின்ற திருநோக்கத்திற்கு முட்டுப்பாடு நிகழ்ந்ததாகவே கருதிச் சிவநேசர் கவலையுற்றார்.
‘துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை’ (திருக்குறள்: வினைத்திட்பம்: 9)
என்பதற்கு இலக்கணமாக, ‘பூம்பாவையின் பொருட்டு இனித் தாம் கலங்குவதில்லை’ எனத் தெளிந்தார்; சொல்லிய வண்ணமே செய்கின்ற அடிமைத்திறத்தில் நிலைமாறாதிருந்தார்.
‘பிள்ளையாரே, பூம்பாவையின் எலும்பினையும் ஆள்வதற்கு உரிமை உடையவர்’ எனத் தெளிந்த சிந்தையில், எலும்பினைக் குடத்திலிட்டு, அதனைப் பூம்பாவை என்றே பேணத் துணிந்தார். ‘பூம்பாவை மாண்டபோதில், பிள்ளையாரின் திருவருள் நின்று காக்கவில்லையே’ என்றோ, ‘அவளது எலும்பையும், சாம்பலையும் பலநாளும் பாதுகாத்தற்கு வாய்ப்பில்லை; ஆதலால், தாமே பிள்ளையாரைத் தேடிச் சென்று அதனை அவர்பால் பணிப்பேன் என்றோ, சிவநேசர் தன்முனைப்புக் கொள்ளவில்லை. மாறாக, ‘பூம்பாவையின் இறப்பும் திருவருளாணை வழியே நிகழ்ந்தது’ என்பதையும், ‘அவளது சாம்பலினைப் பிள்ளையாரிடத்தில் ஒப்படைத்தற்குரிய காலமும், திருவருள் வழியே வாய்க்கும்’ என்பதும் அவர்தம் ஞானத்தெளிவாக விளங்கின. அதனால் சிவநேசரை, தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘சீரின் மன்னிய சிவநேசர்’ எனப் போற்றியுரைத்துள்ளார்.
‘சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச்
சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்’ (மேலது புராணம்: பா.எண்: 1065)
சிவநேசர் தந்தையாக இருந்து கொண்டிருந்த பிள்ளைப்பாசம் என்கின்ற மயக்கத்தை, ‘கண்டு உளம் மயங்கினார்’ என்பதனை, மேற்கண்ட பாடலின் முதல் அடி குறிக்கிறது; அவரே, பிள்ளையார்பால் பெருகும் அன்பின் சீரடியவராகி, சிந்தைதெளிந்த ஞானத்தெளிவைப் பாடலின் இறுதியடியும் குறிக்கிறது.
இன்னருள் விளைகின்ற காலம்
சிவநேசர், தனது உடற்பிள்ளையாகிய பூம்பாவையின் முகம்காண இயலாத சோகத்தை, உயிர்ப் பிள்ளையாகிய திருஞானசம்பந்தரின் திருமுகத் திருக்காட்சியால் போக்கியருளத் திருவருள் கூட்டியது. பிள்ளையார், திருப்பாண்டி நாட்டில் சமணத்தின் வேரறுத்து, திருநீற்றுச் செல்வத்தால் சைவத்தை நிலைக்கச் செய்து, தொண்டைநாட்டின் திருப்பதிகளில் திருவொற்றியூரை வணங்கிய பின்னர், திருமயிலைக்கு எழுந்தருளத் திருவருள் கூட்டுவித்தது. அடியவர்கள், அவர்தம் வருகையினைக் குறித்துக் கூறக்கேட்ட சிவநேசர், அளவிலா மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அவ்வருஞ் செய்தியினை வாயாரப் புகன்ற அடியவர்களுக்குப் பொன்னும், மணியும் பரிசளித்தார். திருவொற்றியூர் முதலாக, திருமயிலை வரையில் அலங்கரித்தார். இருநகரங்களுக்கிடையிலும், பத்து நாழிகையளவு பயணத் தொலைவு உண்டு. ஒருநாழிகை, இருபத்துநான்கு நிமிடங்கள் கொண்டது. அவ்வகையில், பிள்ளையார் பயணிக்கவுள்ள நான்கு மணிநேரப் பயணத்தொலைவுக்கும், பந்தலும், விதானமும் அமைத்து அவரை வரவேற்பதற்குச் சிவநேசர் ஆணையிட்டார். நீண்ட இத்தொலைவு, பிள்ளையாரை எண்ணுங்கால், சிவநேசரின் உள்ளத்தில் நீள்கின்ற அடிமைத்திறத்தின் அளவுக்குச் சான்று என்பார், உரையாசிரியர் சிவக்கவிமணி.
‘திருவொற்றியூரளவும்–திருமயிலாபுரியினின்றும் திருவொற்றியூர் வரையும்; இது பத்து நாழிகையளவு கொண்ட தூரம்; இவரது அன்பு நீண்டுசெல்லும் தன்மை குறித்தது’ (பக்.: 667) என்னும் உரைவிளக்கம், அடியார்செய்கைகள், ஆடம்பரத்தின் வெளிப்பாடாக அல்லாமல், அன்பின் வெளிப்பாடாகின்ற வகையில் மேம்பட்ட பக்திகொள்ளுதலை வலியுறுத்துகிறது.
ஆறு சூடினாரின் திருமகனால் அருஞ்சாதனை
ஆறுசூடியின் மகனாகிய பிள்ளையார், பரசமயத் தூரறுத்து, சைவப்பெருநெறி காட்ட வந்தவர். அவர், அடியார்த் திருக்கூட்டத்துடன் திருமயிலையை நோக்கி எழுந்தருளி வருவதனை அறிந்து இன்புற்ற சிவநேசர், அவர்தம் வருகை நிகழ்கின்ற திருத்திசையில் வீழ்ந்து அடிவணங்கினார். அவ்விடத்தை நோக்கிச் சிவிகையில் பயணம் மேற்கொண்டிருந்த பிள்ளையாரின் திருவுள்ளத்திலும் சிவநேசரின் அடிமைத்திறம், பெருகும் அன்பிலான பூரிப்பினை விளைவித்தது. சிவநேசருக்கு அருள்புரிகின்ற பெருநோக்கு, பரசமயத் தூரறுப்பினைத் தொண்டைநாட்டிலும் பிள்ளையார் நிகழ்த்திக்காட்டுவதாகிய, செயற்கரும் சாதனையாக மலர்ந்தது.
இன்னருள் வணிகர்மேல் விளைதல்
’கூற்றடர்த்தவர் கோயில்’ என்றும், ‘பெருமயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்’ என்றும், திருப்பெயர்க்கொண்ட கபாலீச்சரத்தில், பிள்ளையார் காலனையும் பழிக்கின்ற அருளாடல் நிகழ்வதற்குரிய காலம் வாய்த்தது. பிள்ளையார், திருமயிலையின் கபாலீச்சரத்தை வணங்கி, அதன் மதில்புறத்தே வந்தணைந்தார். அவ்வேளையில், பிள்ளையாரின் திருநோக்கம், சிவநேசர்பால் சென்றது. அவ்வருள் நோக்கத்துடன், சிவநேசரை நோக்கி, ‘அடியாரிடத்திலான அடிமைத்திறமே, தவம் பெருக்குகின்ற சிவவாழ்வு’ என நிலைத்திருக்கின்ற நல்லுணர்வீர்!, ‘மகளது சாம்பல் அடங்கிய குடத்தினை, உலகறிய இவ்விடத்தில் கொண்டுவந்து வைக்கவும்!’ என ஆணை வழங்கினார்.
மண்ணில் பிறந்தார் பெறும் பயன்
அடியவர்கள், சைவப்பெருநிதியாக விளங்க வல்லவர்கள். அவர்களின் நடுவே, என்றும் நீங்காத இடம்கொண்டு பெருமானும், அருள்நிதியாக விளங்கியருள்கின்றான். பற்று ஒழித்தல், பக்திநெறியின் அடிப்படையாயினும், சிந்தையை மடைமாற்றி அதில் நிலைத்திருக்க, அணுப்பொழுதும் இறைவனை மறவாமை என்பதே அடிப்படையாகும். அதற்கு, அடியாருடனான சூழலே களமாகும். அடியவர்களே, பெருமானின் பெரும்புகழைப் பேசிப்பேசி, ‘அன்பர்பணியே அரன்பணி’ என்று பண்படுவர்.
‘சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் தரிப்பார்’ (கோயில் மூத்த திருப்பதிகம்: 9)
என்று பண்பட்ட அடியாருடனான நன்நெறியினை வலியுறுத்தவேண்டி மணிவாசகப்பெருமான்,
’இறைசீர் கற்று ஆங்கு அவன், கழல் பேணினரொடும் கூடுமின் கலந்தே’ (உயிருண்னிப்பத்து: 5) என்றார். அத்துடன் அப்பேறு தமக்கும் வாய்த்தருள வேண்டி இறைவனிடத்தில்,
‘உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்’ (கோயில் மூத்த திருப்பதிகம்: 1) என்று வேண்டினார்.
மாகேச்சுர பூசையும், விழாப்பொலிவும்
மாகேச்சுரர்களாகிய அடியவர்களை நிந்தித்தல், ‘பெருநரகில் உழல்கின்ற பெருந்துன்பத்தினைத் தரும்’ (திருமந்திரம்: 520) என்பதனைத் திருமூலர் விளக்கியுள்ளார். அத்துடன், ‘உண்மையான சிவஞானிபால் நம்மை ஒப்புக்கொடுத்த நொடிப்பொழுதிலேயே சிவபோகம் வாய்க்கும்’ (மேலது, பாடல்: 521) என்பார். ‘அடியார்’ எனப் பொய்வேடம் பூண்டு வந்தாரிடத்திலும், உண்மை அன்புகொண்டு பணிந்த மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் திருவடிப்பேறு பெற்றுய்ந்த அருஞ்சிறப்பு, அடியாரைப் பணிவதன் அருள்சிறப்பினை விளக்கும். அவ்வண்ணம், அடியார்த் திருத்தொண்டால் அளவிலாத அருள்பெற்ற அன்பர்கள் எனப் பெரியபுராணமும், பத்தொன்பது அடியவரைப் போற்றியுரைக்கிறது.
அளவில்லாத பெருமையுடைய அடியவர்க்கு உணவிடுதலாகிய நன்னெறியும், அவர்களுடன் கூடியிருந்து, பெருமானைக் கண்ணாரக் கண்டுய்வதற்குமான விழாக்களை, ‘நல்விழா’ என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான். ‘சிவபெருமானது விழா ஒன்றே எஞ்ஞான்றும் பெருநலமாகிய வீடுபேற்றுக்கு உதவுவது என்பார் நல்விழா என்றார்’ என்பது உரையாசிரியர் சிவக்கவிமணி அவர்களின் குறிப்பு (பக்.,: 687).
திருவிழாவில் அடியாருடன் கூடி, பெருமானின் திருக்காட்சியைக் கண்ணாரக் காண்பதே, ‘மகிழ் செல்வம்’ (திருநாவு. புராணம்: 235) என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான். இக்கருத்துடைய பிள்ளையாரும், தாம் காணுதற்குத் திருவருள் கூட்டாத, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாச் சிறப்பினைத் தமக்குக் கூறியருள அப்பர்பெருமானை வேண்டினார். அப்பெருவிழாச் சிறப்புக்கு, ‘முத்துவிதான மணிப்பொற்கவரி’ (4:21) என்னும் தேவாரம் திருச்சான்றாகிறது. அவ்வாறு பெருமானின் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்க்கின்ற அடியவர்கள், வினையொழிந்து, சிந்தைமகிழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவருளாணை.
‘இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி
லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமன மினியவர்கள்’ (3:83:5)
‘அடியவர்கள், திருவிழாப் பொலிவு கண்டார்த்து, சித்தம் அழகிய பெருமக்கள்’ என மிளிர்வர் எனப் பிள்ளையார் போற்றியுள்ளார். அடியவர்களுக்கு உணவிடுதலாகிய மாகேச்சுரப் பூசைக்கு முட்டுப்பாடு நேர்ந்தநிலையில், திருவீழிமிழலைப் பெருமானிடத்தில் படிக்காசு பெற்று அதனைச் சிறப்புறச் செய்தருளிய சிறப்பும் பிள்ளையாருக்கு உண்டு.
மேற்சுட்டப்பெற்ற நன்னெறிகள், இந்நாளிலும் சைவம் தழைக்கப் பிள்ளையாரின் அருளாணையாக அருளப்பட்டவை. அப்பெருநெறியினை உலகவர்க்குச் சாற்றுகின்ற திருவருள் ஆணையாக, பூம்பாவைப் பாட்டு எழுந்த வரலாற்றினை தெய்வச் சேக்கிழார்பெருமான் புராணத்தில் குறித்தருளியுள்ளார்.
‘மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்
கன்ணி நாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாமெனி லுலகர்முன் வரு” கென வுரைப்பார்’ (திருஞான. புராணம்: பா.எண்: 1087)
காணாது, “போதியோ” பூம்பாவாய்
கபாலீச்சரத்துத் திருக்கோயிலின் மதில்புறத்துத் திருவாயிலின் முன்னே வைக்கப்பெற்றிருந்த சாம்பற் குடத்தின் மீது பிள்ளையார் தமது திருக்கண் நோக்கம் செலுத்தினார்; ‘மட்டிட்ட புன்னை’ எனப் பாடத் தொடங்கினார். கபாலீச்சரத்துத் திருக்கோயிலில் பொலிவுற நிகழ்வதாகிய திருவிழாக்களில், அடியார்க்குத் திருவமுது படைத்தலாகிய மாகேச்சுரபூசையானது ஏற்றம் பெற்று நிகழ்வதனைப் போற்றி முதல் திருப்பாட்டினைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, கபாலீச்சரத்துப் பெருமான், தம்மடியார் கண்டுய்வதன்பொருட்டுக் கொண்டருள்கின்ற பெருவிழாக்களை ஒவ்வொரு திருப்பாடலிலும் வரிசைப்படுத்தினார். ‘அப்பெருவிழாக்களைக் காணாது போதியோ பூம்பாவாய்?’ எனப் பூம்பாவையை வினவினார். ஐப்பசித் திருவோணத் திருவிழா, திருக்கார்த்திகைத் திருவிளக்கீடு, மார்கழித் திருவாதிரைத் திருவிழா, தைப்பூசப் பெருவிழா, மாசிமகக் கடலாடல், பங்குனிஉத்திரப் பெருவிழா, சித்திரை அட்டமித் திருவிழா, வைகாசி ஊஞ்சலாட்டுப் பெருவிழா மற்றும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் பெருஞ்சாந்திப் பெருவிழாக்கள் எனப் பெரும்பொலிவுடன் நிகழ்கின்ற திருவிழாக்களின் உயர்வும், அவற்றில் அடியார்களின் ஆரவாரச் சிறப்பும் விளங்கத் திருப்பதிகத்தை எடுத்துரைத்தார். ‘இத்திருவிழாக்களின் அருள்காட்சிகளைக் காணாமல் நீ மறைந்ததும் முறையோ?’ எனத் திருவருளை முன்னிட்டுப் பூம்பாவையிடத்தில் முறையிடுபவராகப் பாடல்கள்தொறும், ‘காணாது போதியோ பூம்பாவாய்!’ என்னும் விளியமைத்துப் பத்தாம் பாடலையும் பிள்ளையார் நிறைவு செய்தருளினார்; பிள்ளையார் பூம்பாவையை எழுப்புதலும் இயலாது’ என்று அதுகாறும் எண்ணியிருந்த சமண, பௌத்தரின் எண்ணம் பொய்த்தது. அவ்வேளையில், பத்துத் திங்கள், தாயின் கருவிலிருந்து வளர்ந்து வெளிவருகின்ற பிள்ளையைப்போல, பூம்பாவை மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்தாள். சாம்பல் குடம் உடைந்து, பன்னிரண்டாண்டு பருவத்தின் அருள்பேரழகுடையவளாக வெளிப்பட்டுவந்த அவளது எழிற்கோலப் பொலிவினைப் புராணத்தின் வழி உணரலாம்.
மெய்த்திரு வாக்கு என்னும் அமுதம்
சிவஞானச்செல்வராகிய பிள்ளையார், ‘அடியாரின் அடிமைத்திறம், மாண்டாரையும் மீட்டருளவல்லது’ என்னும் சைவப்பெருநெறியினைப் பரசமயத்தார் உள்ளிட்ட உலகத்தாருக்கும் எடுத்துரைக்கப் பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்தருளினார். செயற்கரிய அச்செயலுக்கு, பெரும்பொருளல்லாத எலும்பும், சாம்பலும் கருவியாயின. அதுபோன்றே, திருவருளை முன்னிட்டுப் பிள்ளையார் பாடியருளிய திருப்பாடல்களில் எழுந்த, ‘போதியோ’ என்னும் சொல்லானது மந்திரமாகச் செயல்பட்டுப் பூம்பாவையை உயிருடன் எழுப்பியது. அவ்வுயர்வு கருதியே, தெய்வச் சேக்கிழார்பெருமானும் ‘போதியோ’ என்னும் சொல்லை, ‘மெய்த்திரு வாக்கென்னும் அமுதம்’ எனப் போற்றியுள்ளார். அது, இரண்டு பக்கத்திலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைக் கொண்டெழுந்த ‘மூவெழுத்து மந்திரம்’ என்பார் உரையாசிரியர் சிவக்கவிமணி. ‘அதுவே வருக என்ற ஆணையாகிய சிவசிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமையால் என்க’ (பக்.,: 688) என்பது உரைக்குறிப்பு.
‘மன்னு வார்சடை யாரைமுன் றொழுது “மட் டிட்ட”
என்னு நற்பதி கத்தினிற் “போதியோ” வென்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந்
துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்’ (மேலது புராணம்: பா.எண்: 1088)
முடிவுரை
பெருகுகின்ற செல்வமும், பேரன்பின் திறமும் அடியவர்களுக்காக அமையுமாயின், அதுவே அன்பு மாறாத அடிமைத்திறமாகும். அதன்வழியே, உலகத்து இயற்கையாகிய மரணத்தையும் வென்றேறலாம். அதற்கு, சிவநேசர் பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறம் சான்றாகிறது. பூம்பாவையை மீட்டருளத் தாம் கருவியான நிலையிலும், தன்முனைப்பற்று, திருவருளாணை வழியே பெருமானைப் பணிந்துநின்றவர், பிள்ளையார். ‘தம்பிரான் கருணையின் பெருமையே கருதி’யும், (1085); ‘மன்னு வார்சடையாரை முன்தொழுது’ம் (1088) செயற்கரிய சாதனையை நிகழ்த்தினார். அவரின் செயல்பாடு, மெய்ஞ்ஞானத்தால் நிகழ்கின்ற அருள்வன்மைக்குச் சான்று. அவ்வாறு, சிவநேசருக்கு வாய்த்த அடிமைத்திறத்துடன், பிள்ளையார் முதலான ஞானாசாரியார்களது அருள்திறமும் ஒருங்கே பெருகுகின்ற சிவஞானப்பேற்றுக்கு, ‘பூம்பாவைப்பாட்டு’ துணையாகிறது. அத்திருப்பதிக நன்னெறி நமது வாழ்வியலானால், ‘வீடுபேறுற்று, சிவகணத்தவரோடும் கூடி நிலைத்து வாழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவாக்கு.
ஆய்வுத்துணை நூல்கள்
*****
கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.
அ. இராஜகோபாலன்
‘பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை’ (குறள் 252) என்கிற வள்ளுவரின், சொற்கோவைக்குப் பொருளெழுதுகிற பரிமேலழகர் பொருள் பயனிழத்தற்குக் காரணம் காவாமை என்கிறார்.
வள்ளுவர் கூற்றை ஆழ்ந்து சிந்திக்கிறவர்க்கு , ‘பொருளாட்சி’ என்பதும், ‘பொருள் போற்றல்’ என்பதும், மிக்க பொருளாழம் கொண்டவை என்பது புலப்படும். பொருளை ஆக்குகிற வழிகளும், அதனைப் போற்றிக்காக்கிற முறைகளும், பொருளைப் பயன் கொள்ளுதலும் ஆகிய எல்லாம் அவற்றுள் அடங்கும். போற்றுதல் என்பது, காத்தலை மட்டுமின்றி, அதை வளர்த்து அதிகரிக்கச் செய்தலையும் உள்ளடக்கியதே. பொருளைப் போற்றுதல் பற்றி வேறோரிடத்தில் பேசுகிற வள்ளுவர்,
‘ஆற்றின் அளவறிந்து ஈக, அது பொருள்
போற்றி வழங்கும் நெறி’
என்று ஈதலுக்குக் கூடக் கட்டுப்பாடு விதிக்கிறார்.
ஒரு ஆய்க்குலப் பெண். இன்னும் இருள் விலகாத விடியற்காலை நேரம். அப்போதே எழுந்து, நன்கு உறைந்த தயிரை வெண்ணெய் திரண்டு வருகிற வரை, மத்து கொண்டு கடைகிறாள். பின்பு, தலையில் சும்மாடு அணிந்து, தயிரும், மோரும், வெண்ணையும், நெய்யும், எடுத்துக்கொண்டு வீதிகளில் சென்று, விற்று வருகிறாள்.. அந்த வருமானத்தில் வாழ்கிற நல்லதொரு வாழ்க்கையை அமைத்துகொண்டிருக்கிறாள்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
என்கிறார் வள்ளுவர். அப்படியல்லா த, அவளின் ஆற்ற வருந்தும் வருத்தம் பலராலும் பாராட்டப்படக்கூடியது. அனுபவம் மிகுந்தவளாக அந்தத் தொழிலை அவள் மிகுந்த நேர்த்தியுடன் நடத்திவருவது பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வரிகளில் காட்சிப்படுத்தப்படுகிறது.
நள்ளிருள் விடியல் புள் எழப் போகி
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வால்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாள் மோர் மாறும் நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதின் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை யுணவின் கிளையுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடி…
ஏற்படுகிற செலவினங்களையும், வருமானத்தையும், எஞ்சுகிற லாபத்தையும் கணக்கில் கொண்டு, செய்து வரப்படுகிற தொழில் .
அழிவதூவு மாவதூவு மாகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முறையாகச் செய்துவருகிற தொழில். லாபம் கிடைக்கிறது. கிடைக்கிற லாபத்தைக் கொண்டு இல்லறம் நடக்கிறது. ஈதலும் துய்த்தலும் ஆக, ‘அளைவிலை யுணவின் கிளையுடன் அருத்தி’ சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகி, செல்வத்தின் பயன் நுகரப்படுகிறது. அதிலும் போகாறு அகலாதபடி நடத்தப்படுகிற இல்லற நிதி நிர்வாகம். அளவறிந்து வாழ்கிற வாழ்க்கை.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
என்ற குறளில் வள்ளுவர், ‘தன் கைத்து ஒன்று’ என்று தன் கைப்பொருளாகிய (Owned Funds) மூலதனத்தை பற்றிப் பேசுகிறார். ‘தன்கைத்து எல்லாம் உண்டாகச் செய்வான் வினை’ என்னாது ‘தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. என்றதால் மூலதனத்தில் தன் கைப்பொருள் ஒரு பகுதியாகவும், பிறர் கைப்பொருள் (Borrowed Funds) ஒருபகுதியாகவும் கொண்டு வினையாற்றுதல் வள்ளுவருக்கு உடன்பாடு என்றும். வள்ளுவர் இந்தக் குறளில் கடனுக்கும் மூலதனத்துக்குமான விகிதம் (Debt – Equity Ratio) பற்றிப் பேசியிருப்பதாக. பேராசிரியர் எஸ். வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார். நெய் விற்றுக் கிடைப்பதில் உற்பத்திச் செலவு போக எஞ்சுகிற வருவாயை எதிர்காலத்தில் பயன்கொள்ளுகிற வகையில் சேமித்து வைக்கிறாளாம். வியாபாரத்தின் விரிவாக்கத்திற்குத் தேவையான முழுத்தொகையையும் தற்காலத்து வங்கிகளில் கூடக் கடனாகப் பெறமுடியாது. கடன் பெறுவதற்குக், கைமுதலாக (Margin money ) ஒரு தொகை செலுத்தப்பட வேண்டியதிருக்கும். ‘தன் கைப்பொருளாகிய’ பணத்தைப் பெரும்பகுதியாகக் கொண்டே தொழில் விரிவாக்கம் நிகழுமானால் நன்மை பயக்கும். சேமித்து வைத்திருக்கிற தொகை அதற்குப் பயன்பட வேண்டும் என்பதே நோக்கம்.
பெண்கள் பொதுவாக நகைகள் வாங்கி அணிந்து கொள்வதில் மகிழ்ச்சி யடைவார்கள். ஆனால் இவள் வித்தியாசமானவள். சேர்த்துவைக்கிற பணத்தில் பொன் நகைகள் வாங்காமல், அந்தப்பணத்தைக் கறவை மாடுகள் வாங்குவதற்கு வைத்திருக்கிறாளாம். வியாபாரத்தின் விரிவாக்கத்திற்கு மேலும் பல கறவை மாடுகள் வாங்க வேண்டியிருக்குமே. சேமித்த பணம் பொன் நகைகளில் இடப்படுகிற போது அது தோற்றப்பொலிவைத் தருமே யல்லாது தொடர்ந்து வருமானத்தை ஈட்டிதருவதாக இராது. செல்வம் பொன் நகைகளில் முடங்கிப் போய், அதனால், கூடுதலாக வருவாய் ஈட்டுவது சாத்தியமில்லாது போகுமல்லவா?
நிதி மேலாண்மை பற்றிப் மிகப் பழங்காலத்திலேயே ,ஆழ்ந்த அறிவுடையவர்களாக, இருந்த தமிழ் மக்களின் வாழ்வைப் புலவன் மிக அழகாகப் பாடிச்சென்றிருக்கிறான்.
அ. இராஜகோபாலன்.
திருச்சி புலவர் இராமமூர்த்தி.
————————————————–
திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருந்தகையின் பேரறிவுத் திறனை வெளிப்படுத்தும் பேரிலக்கியமாகும். இந்நூலின் பல பாடல்கள் சேக்கிழாரின் கற்பனைத் திறனை நமக்கு அறிவிக்கின்றன. பெரிய புராண வரலாறு , கைலை மலையில் தொடங்கி கைலை மலையில் நிறைவுறும் காப்பியம் ஆகும். அக்கைலை மலையின் சிறப்பைத் தொடக்கத்தில் பலவாறு உரைக்கிறார் புலவர். கைலை மலையைச் சென்று சேர்ந்த கரியநிறக் காக்கையும் பொன்னிறம் பெற்றுப் பொலியும் என்று யாப்பருங்கலக் காரிகை கூறும்.
‘’ கனகமலை யருகே போயின காக்கையுமன்றே படைத்தது பொன்னிறமே!’’ என்பது பொன்வண்ணத்தந்தாதி. அவ்வகையில் கைலைமலையைச் சென்று சேர்ந்த எல்லாப்பொருள்களும் பனிநிறமாகிய வெண்ணிறமும் . கதிரவன் ஒளி பெற்ற பனிமலை அடையும், பொன்னிறமும் பெற்று விடுகின்றன!
இங்கே பேரிமயத்திற்குச் சென்ற திருமால் , சிவபிரானைக் கண்டு வணங்குவ தற்குரிய செவ்வி பார்த்துக் காத்திருக்கிறான். அங்கே ஒளி பொருந்திய வெண்பனிமலையின் அடிவாரத்தில் உள்ள குகைக்குள் , விநாயகப் பெருமானின் ஊர்தியாகிய பெருச்சாளி நிற்கிறது. அதன் பெரிய வடிவம் காண்போருக்கு, வெண்பனி மலையின் ஒளியில் அது வெண்ணிறப் பன்றி போல்தெரிகிறது. அந்தப் பகுதியில் திருமாலைத் தேடி அவர் வாகனமாகிய கருடன் பறந்து வருகிறது.
முன்னொரு காலத்தில் நெருப்புத் தூணாக வானளாவி நின்ற சிவபெருமானின் திருவடியைத் திருமாலும் , திருமுடியை பிரமனும் தேடித் தேடி இளைத்தார்கள். அப்போது திருமால் கருநிறப் பன்றி உருவெடுத்து பூமியைத் தோண்டிக் கீழே சென்றார். அப்போது அவர் வராக அவதாரம் எனப்பட்டார். வெள்ளிநிறத்தூண் போல நிற்கும் மலையடிவாரத்தில் நிற்கும் பெருச்சாளி , வெண்ணிறம் பெற்று வெண்பன்றி போல நிற்பதை, கருடன் கண்டு திகைக்கிறார்! ‘’ஓ! நம் தலைவர்தான் மீண்டும் சிவபிரானின் திருவடியைத் தேடிப் பன்றி உருவெடுத்து நிற்கிறாரோ?’’ என்று திகைக்கிறாராம். அதாவது வெண்ணிறப் பெருந்தூண் அருகே வெண்ணிறம் பெற்றுத் திருமாலே வெண்பன்றி வடிவில் நிற்கிறார் என்று கருடன் பிறழ வுணர்ந்ததாம். அங்கே தன் தலைவர் நினைப்பதாக எண்ணி அவரை நாடிப்போய் கருடன் நின்றது என்று சேக்கிழார் கற்பனை செய்கிறார்.
சிவபிரான் திருமால் பிரமன் ஆகியோரால் அளந்தறிந்து கொள்ள இயலாத பெரியவர் என்பதும், அவரை தரிசனம் செய்து அருள் பெற, கைலை மலையருகே சென்று திருமால் காத்திருப்பார் என்பதும், அங்கே வெண்பனி மலையடியில் நிற்கும் பன்றி, வெண்பனியால் மூடப் பெற்று வெண்ணிறம் பெற்று , ‘ஸ்வேத வராகமாய்’க் கட்சி தருகிறது என்பதும், கருடன் அதனைத் திருமால் என்று நினைப்பதும் மிக பொருத்தமான கற்பனை! கைலை மலையை அடைந்த பொருள்கள், புது நிறம் பெற்று விளங்குவது அம்மலையை அடைந்த அனைத்தும் பெறுகின்ற சிறப்பைப் புலப்படுத்துகின்றது. அங்கே பிள்ளையாரின் ஊர்தி , பெரும் வெண்பன்றி உருவெடுத்து, வராகமாய் நிற்பதாக கருடன் எண்ணுவது கருடன்,தலைவர் மேல் கொண்ட மரியா தையைப் புலப்படுத்துகிறது. இதோ அந்தப் பாடல்!
‘’காதில் வெண் குழையோன் கழல் தொழ நெடியோன்
காலம்பார்த் திருத்தலை அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில்
துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செஞ்சுடர் இன்று
வெண்சுடர் ஆனதென் றதன்கீழ்
ஆதிஏ னம்அதாய் இடக்கலுற் றானென்
றதனைவந் தணைதரு கலுழன்!’’
இவ்வகைக் கற்பனை சேக்கிழார் சுவாமிகளின் சிவபக்தித் திறத்தினைப்
புலப்படுத்தி, சிவபரம்பொருளின் பெருமையையும் உணர்த்துகின்றது.
‘அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி’
என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது.
வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவாகவும், ஆறாம் திருமுறை இறைவனை ஒளிவடிவில் உணரும் சமயாதீத ஞானத்தை உணர்த்த முற்படுவதாகவும் அறிஞர் கருதுகின்றனர். அதாவது முதல் ஐந்தும் தோத்திரம் மிகுந்தனவாகவும் ஆறாவது சாத்திரக் கருத்துக்கள் மிகுந்தனவாகவும் உள்ளன. மேலும் கூறுவதானால் சமய சன்மார்க்கத்தைப் போதிப்பனவாக முதல் ஐந்தும் காணப்பட, ஆறாவது திருமுறைப் பாடல்கள் சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் புகட்டுவனவாகக் காணப்படுகின்றன.
வள்ளலாரின் அருட்பாக்களுக்குப் பலர் உரையெழுதியிருந்தாலும் ஆறு திருமுறைகளுக்குமான முழுமையான உரையை பேராசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் செய்துள்ளார். அதனை பத்துப் பாகங்களாக வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர். வள்ளல் டாக்டர் பொள்ளாச்சி மகாலிங்கமவர்களின் வேண்டுகோளின் பேரில் அவரது இல்லத்திலிருந்து ஏழு வருடங்கள் உழைத்து பேராசிரியர் இவ்வுரையைச் செய்து முடித்ததாகத் தெரியவருகிறது.
வள்ளலாரைப் போலவே ஆறுமுகநாவலரும் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவராவார். அருட்பாவை திருமுறைகளாக வகுத்தமையை அக்காலத்தில் ஆறுமுகநாவலர் எதிர்த்து அதனை மருட்பாவென இழிந்துரைத்தது மட்டுமன்றி அப்பிரச்சனையைக் கோட்டுவரை கொண்டு சென்றார். அருட்பாவென்னும் பெயர் வாபஸ் பெறப்படவேண்டுமென்பதே நாவலரின் கோரிக்கையாகும்.
வழக்கு மஞ்சக்குப்பம் மாவட்ட நீதிமன்றிற்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது. வள்ளலார் கோட்டுக் கூண்டில் ஏற்றப்பட்டார். வள்ளலார் கூண்டிலேற வந்த சமயம் அவரது அருட்திரு முகத்தைக் கண்டு நீதிபதி (மாவட்ட முன்சீப்) முத்துசாமி ஐயர் எழுந்து நின்றாரென்றும், நாவலரும் வள்ளலாரை வணங்கியபடி எழுந்து நின்றாரென்றும் கூறப்படுகின்றது. இதுபற்றி நீதிபதியிடம் கேட்டபோது அவர் தன்னையறியாமலேயே அச்செய்கையைச் செய்ய நேரிட்டதென்றும், அதுபற்றித் தன்னால் மேலதிகமாக எதுவும் சொல்வதற்கில்லையென்றும் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் பின்னர் சென்னை ஹைக்கோட் நீதிபதியாகப் பதவிவகித்தார். அவருக்காக ஒரு சிலையும் சென்னை ஹைக்கோட் வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது.
வழக்காளியான நாவலரிடம் வள்ளலாருக்கு அவர் செய்த மரியாதையைப் பற்றிக் கேட்டபோது அறிவும் அருளும் நிரம்பப் பெற்று இறைவனருளால் அதீத சக்தியைக் கொண்டிருப்பவராக வள்ளலார் உள்ளார் என்று நாவலர் கூறியதாகவும் தெரிய வருகின்றது.
வழக்குத் தீர்ப்பு வள்ளலாருக்குச் சாதகமாக அமைந்ததோடு அவரது அருட்பாக்கள் புனிதமானவையாகவும் தமிழுலகில் இலக்கியச் செழுமை மிக்கதோர் பெட்டகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.
உசாத்துணை:
http://thiruvarutprakasavallalar.blogspot.com/2008/03/8-appearance-in-judicial-court.html
நாவலர் அறிவாளியாகவன்றி ஓர் அருளாளராக இருந்தாரில்லை. அதனால் சகலவுயிர்களையும் குறிப்பாக மனிதர்களை ஒரே ஆன்மாவின் வடிவமாகப் பார்க்கும் பரஞானமற்றவற்றராக இருந்தார். வைதீக நெறியை அவர் பின்பற்றினாலும் ஆன்ம ஞானம் சித்திக்காததனால்; சாதீயம் அவரைத் தடுத்தாட்கொண்டு விட்டது. அதனால் தான் அமைத்த பாடசாலைகளிலேயே தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் கல்வி கற்கச் சேர்க்க விடாமற் பண்ணிவிட்டது.
மாறாக வள்ளலாரோ அனுபூதிமானாக, எல்லாவுயிர்களிடத்தும் இறைவனைக் கண்டுதெளியும் ஆத்மாஞானத் தெளிவுடையவராய் இருந்தார். அதனால் அவரிடம் சனாதன வைதீகக் கொள்கைகளுக்கு மாறாகப் புரட்சிகரமான கொள்கைகள் உருவாயின. சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயமொன்றை அவர் உருவாக்கப் பாடுபட்டார். இறைவனின் படைப்பில் அனைவரும் சமமேயென்ற மெய்யறிவு சிதம்பரம் தீட்சிதர்களுட்படப் பல சனாதனிகளை அவர்மீது எரிச்சலடையச் செய்தது. பலரின் பகையையும் சம்பாதித்துக் கொண்டார்.
தமிழ் என்னும் சொல்லுக்கான வள்ளலாரின் விளக்கம் வடமொழிச் சொற்கள் மிகுந்து எளிதில் புரியமுடியாததாகவுள்ளது. இருப்பினும் அவ்விளக்கத்தின் முடிவுரை இங்கே தரப்படுகிறது:
‘மருளியற்கை மலஇருளைப் பரிபாக சத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சித்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர ககன, நடன அருட்பெருஞ்சோதியென்னும் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீதவியலால் அனுபவிக்கும் இயற்கையுண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க. இதன்கருத்து யாதெனில்: தமிழ் பாஷையே அதிசுலபமகச் சுத்த சிவானு பூதியைக் கொடுக்குமென்பதாம்.’ – இதுவே அவரது வார்த்தைப் பிரயோகம் – பக்கம் 306 திரு அருட்பா உரைநடைப் பகுதி – நான்காம் பதிப்பு, பாரதி அச்சகம் சென்னை.
மேற்கண்ட வள்ளலாரின் கூற்றின்மூலம் தமிழில் பூசை வழிபாடுகள் இயற்றுதல் மூலமே அனு பூதியை இலகுவாகப் பெறமுடியுமென்பதை உணர முடிகின்றது.
அவரின் விளக்கத்தின்படி: திருவாசகம், தேவாரம், திருமந்திரம் ஆகியன பரமார்த்த ரகசியங்களையுடையன வாகவும், அத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஆரிய, ஆந்திர, மகாராஷ்டிர மொழிப் பாஷ்யங்களுக்கான பொருள் விளக்கம்பெற அந்தந்த மொழிப் பண்டிதர்களைத் தேடித்திர வேண்டியுள்ள தென்றும், தேடினாலும் கிடைப்பதில்லையென்றும் ஆகவே தமிழிலேயே வழிபாடியற்றல் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்றும் அறிய முடிகின்றது.
இதன் மூலம் தமிழிலேயே வழிபாடியற்றல் வேண்டுமென்னும் கருத்தானது வள்ளலார் காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது.
வள்ளலாரின் இத்தகைய போக்கு சிதம்பரம் தீட்சிதர்களின் பிழைப்பைக் கெடுக்கும் போக்காகக் காணப்பட்டதால் அவர்களாலேயே வள்ளலார் கொலை செய்யப்பட்டார் என்று கூறுவோரும் உளர். ஆனால் வள்ளலாரைப் பின்பற்றுபவர்களோ, வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் அவர் கட்டிய சித்திவளாகத்தில் 1874 தைப்பூசத்தன்று ஓர் அறைக்குள் சென்று அதனைச் சிலகாலம் திறக்க வேண்டாமென்று கூறிக் கதவைப் பூட்டிவிட்டு உள்ளேயே சோதியில் கலந்தார் என்று நம்புகின்றனர். அதன் பிறகு அவர் அங்கு காணப்படவில்லை.
வள்ளலாரின் அருட்பாக்கள் சில :ஈழத்தில் கிழக்கு மாகாணத்தில் கோயில்களில் பாடப்படுவது வழக்கமாகும். குறிப்பாக ‘அம்பலத்தரசே அருமருந்தே…’ (ஆறாம் திருமுறை பாடல்: 2256 பக்கம்: 430)
என்னும் பாடல் அங்கு கூட்டுப் பிரார்த்தனைகளில் பஜனைப் பாடலாகப் பாடப்படுகின்றது.
‘ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க் வேண்டும்
பெரு நெறிபிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே’
பாடல்: 2938 பக்கம்: 554
என்னும் பாடலும் மிகப் பிரபலமானது. கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் சாவித்திரி பாடும் பாடல் காட்சியொன்றில் இப்பாடல் இடம்பெறுகின்றது.
வள்ளலாரின் பாடல்களில் பெரும்பாலானவை எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய பாடல்களாயிருந்தாலும், யோக ஞான சாதனைகளை உட்பொருளாக்கி அவர் பாடிய பாடல்கள் சித்தர் பாடல்களைப் போல் சற்று ரகசியப் பொருள் பொதிந்தனவாகக் காணப்படுகின்றன.
‘கையறவில்லாத நடுக் கண்புருவப் பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு
ஐயர்மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு’
ஆறாம் திருமுறை: பாடல் – 2242 பக்கம்: 428.
என்ற பாடல் அதற்கு ஓர் உதாரணமாகும். நடு நெற்றிக்குச் சற்றுக் கீழேயுள்ளதான புருவ நடுவில், புலனைச் செலுத்தி அவ்விடத்தை விட்டு கவனம் அகலா வண்ணம் பூட்டிடுவதால்; மூன்றாம் கண்ணான நெற்றிக்கண் திறந்து ஒளிவெள்ளம் பாயும். யோகியர் அதில் லயித்திருப்பார். அந்த விளையாட்டினால் வரும் ஞான வெளிப்பையே வேதங்களும் பாடுகின்றன. என்பதே அதன் கருத்தாகும்.
இங்கே கையறவில்லாத என்பதன் மூலம் எம்மைக் கைவிட்டுவிடாத சாதனை என்ற பொருளைப் பெறமுடியும், மாறாக அதனைக் கையுறவில்லாத என்றும் கொள்ளலாம். கைவிரலினால் நெற்றிப் பொட்டில் தொட்டபடி புருவ நடுவில் கவனத்தைச் செலுத்துவதையே அது குறிக்கும். சிலர் அவ்வாறு அந்தச்சாதனையை செய்வதுண்டு. விவேகானந்தருக்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் நெற்றிப்பொட்டில் ஓர் வில்லுக்கத்தியால் சற்றுக் கீறி அதிலே கவனத்தைப் போடுமாறு காண்பித்தபோது விவேகானந்தர் உடனடியாக நிர்விகற்ப சமாதிநிலையை அடைந்தாரென்றும். பரமஹம்சர் அதுபற்றி விவேகானந்தரிடம் பாராட்டிப் பேசியபோது நான் பலவருடங்களாக முயன்று அடைந்த அந்த சமாதி நிலையை நீ சில நிமிடங்களிலேயே அடைந்து விட்டாய் என்று மெச்சியதாகவும் வரலாறுண்டு. அந்த நெற்றிக்கண் யோகத்தையே வள்ளலார் இங்கே குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
இந்த மூடுமந்திரமான பாடலுக்கு அடுத்ததாக வரும் பாடல்கள் அந்தத் தியான சாதனையினால் வரும் இன்பானுபவத்தை எளிமையாக விளங்கப்படுத்துகின்றன.
‘சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்விலெனக்கென்னை இனி ஏச்சு என்பிறவித் துன்பமெல்லாம் இன்றோடே போச்சு’
பாடல் 2243 பக்கம் 428.
என்ற பாடல் வரிகளில் புருவமத்தியில் துலங்கும் ஒளிப்பிரமத்தின் லயிப்பில் தான் பெற்ற இன்பத்தினால் சித்தானுபவமாகிய சிற்றம்பலமும் கண்முன்னே தோன்றும் பொன்னம்பலமும் சொந்தமாகிவிட்டதான ஞானானுபவத்தைப் பெறுவதோடு, தேவர்கள், திருமால், பிரமன், உருத்திரன் ஆகியோரின் ஞான பாசையும் விளங்குவதாயிற்று, இல்லறத்திலிருந்தே இனி நான் நல்லறமியற்ற முடியும், என்பிறவித் துன்பமெல்லாம் இன்றோடே போய்விட்டது என்கிறார் வள்ளலார். வள்ளலார் தனது தமக்கையாரின் மகளைத் திருமணம் செய்து திருமணபந்தத்தில் சிலகாலம் வாழ்ந்தவரென்பதும் பின்னர் தனது இல்வாழ்வை வெறுத்து துறவையே மேற்கொண்டாரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
‘அருள் சோதித் தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வமுயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெமக்கருளும் தெய்வம்
தெருட்பாடலுவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்’
ஆறாம் திருமுறை. பாடல்: 737, பக்கம்:179
என்ற மற்றோர் அழகிய இசைப்பாடலும் திரையிசையாக இசைக்கப்படுகின்றது.
வள்ளலாரின் பாடல்களில் பல்வேறுபட்ட செய்யுள்வகைகளைக் காணக்கூடியதாயுள்ளது. இவை மரபு வழிச் செய்யுள்களை யாக்க விரும்புவோருக்குச் சிறந்த உதாரணங்களாக அமைந்துள்ளன. அச்செய்யுள் வகைகளின் பட்டியல்:
1.வெண்பா
போன்றனவாம். மேற்கண்ட பட்டியலிருந்தே வள்ளலாரின் புலமை புலனாகின்றது. மிகவும் சிறப்பான சந்த நடைகளுடன் எழுதப்பட்டுள்ள இந்தச் செய்யுள்களில் தனியே இலக்கியச் சிறப்பு மட்டுமன்றி பக்திப் பெருக்கும் அப்பக்தியினால் கிடைத்த ஞானானந்த உணர்வு வெளிப்பாடும் காணப்படுகின்றன. புலமை தெய்வீக சக்தியின் ஓர் விளைவென்பது வள்ளலாரின் பாடல்களிலிருந்து புலப்படுகின்றது. அதனாலேயே வள்ளலாரை ஓர் சிறந்த அனுபூதிமானாகப் பலரும் போற்றி அவர் வழியைப் பின்பற்றுகின்றனர்.
தேவார முதலிகள் மணிவாசகர் உட்பட பிற்காலத்துப் பட்டினத்தடிகள் தாயுமானவர் போன்றவர்களுக்கு அடுத்தததாக வந்த இடைவெளிக்குப்பின்னர் வள்ளலாரே தமிழ்நாட்டில் பக்திச்சுவையை மீண்டும் கொண்டு வந்து சமய மறுமலர்ச்சிக்கு உயிரூட்டினார் என்பதை மறுப்பதற்கில்லை.
தெய்வீகப் பாடல்களால் இறைவனைத் தமிழ் செய்தது மட்டுமல்லாது மக்கட் சேவையிலும் ஈடுபட்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் உட்பட பலவகை நன்மைகளையும் வள்ளலார் செய்யத் தொடங்கினார். வடலூர் சன்மார்க்க நிலையத்தில் உள்ள தர்மசாலையில் வள்ளலாரின் காலத்திலிருந்தே மூட்டப்பட்ட அடுப்பு இன்றும் அணையாது பாதுகாக்கப்பட்டு எழை எளியவர்களுக்காக அன்னதானம் செய்யப்படுகின்றது.
வள்ளலாரின் திருவருட்பா ஆறு திருமுறைகள் மட்டுமல்லாது அவரது உரை நடைப்பகுதியும் உள்ளது. அதனையும் திருவருட்பா உரைநடைப் பகுதியென்றே கூறுவர். வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தினால் அவ் வுரைநடைப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் உரைநடை நூல்கள், வியாக்கியானங்கள், மருத்துவக் குறிப்புகள், உபதேசங்கள், வள்ளலார் எழுதிய திருமுகங்கள், அழைப்பிதழ்கள், விண்ணப்பங்கள் என்று பல பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறிகள் சுருக்கமாயப் பின்வருவனவாகும்:
வைதிகரான மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் அருளிய கீழ்வரும் வெண்பா வள்ளலாரின் அருட்பாவின் மகிமையைக் கூறுவதாகவுள்ளது.
தண்ணீர் விளக் கெரித்த தன்மை போன் மாந்தர்கள்தம்
உண்ணீர் சிவம் விளங்க ஓங்குவிக்கும் – கண்மணியாம்
நங்கள் இராமலிங்கன் நல்ல அருட்பாமுறையைத்
துங்கமுற மாணா தொழு
இக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.
-மேகலா இராமமூர்த்தி
திரு. ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.
விண்ணில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் கதிரவனின் எழிற்பிம்பம் கடல்நீரிலும் தன் முகங்காட்டி நம் அகங்கவரும் அழகு அற்புதம்; இதுவொரு புனையா ஓவியம்!
அதோ… அந்த இணையரும் இணையில்லா இவ்வியற்கை எழிலில் மனங்கரைந்து நிழற்படம் எடுத்துக்கொண்டிருக்கக் காண்கின்றோம்.
இந்த இயற்கைச் சித்திரத்துக்கு உங்கள் எண்ணத் தூரிகையால் வண்ணந் தீட்டுங்கள் வண்டமிழ்க் கவிஞர்களே!
******
”வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்து இவ்வெழிலோவியத்தை வானில் வரைந்து அதன் நிழலை மண்ணில் விழவைத்த வித்தகன் எவன்? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமான அவனை ஆரறிவார்?” என வினவுகின்றார் திரு. அ. இராஜகோபாலன்.
மண்ணில் தெரியுது வானம்!
வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை
வானில் வரைந்தவர் யார்?
மண்ணில் அதன்நிழல் நீரில் விழும்படி
மாண்புறச் செய்தது யார்?
கண்ணைக் கவர்கிற காட்சியின் மாட்சியைக்
காட்டி மறைப்பவர் யார்?
எண்ணில் அவரிங்கு எங்கும் நிறைந்துளார்
என்பதை யாரறி வார்?
*****
கருமையும் வெளுப்புமாய், இருளும் ஒளியுமாய் நிழலற்று நிற்கும் நிறங்கடந்த காதலை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு. எஸ். கிரிதரன்.
உதயமா? இல்லை
ஒருநாளின் முடிவா?
கருமையும் வெளுப்பு
இருளும் ஒளியுமாய்
நிறம் கடந்த காதல்
நிழலற்று நிற்கிறது!
*****
”அடிநாதமாய் பூமிப்பந்தை அசைவிக்கும் கதிரோனே அப்பட்டமான இறைரூபம்” என்று ஒளிவடிவாய் அந்த ஒப்பிலாமணியைக் காண்கின்றார் திரு. ஏ.ஆர்.முருகன், மயிலம்பாடி
அகிலத்தின் ஆன்மா!!
அதிகாலை வரவோ?
அந்திவேளைமறைவோ?
அழகிய கிரகணங்களால்
அரும்பிடும் வெளிச்சம்
அகிலத்தின் இயக்கம்!!
அனைத்தையும் படைத்து
அரவணைக்கும் பேரொளி!
அணுவளவும் பிசகாமல்
அடிவானில் எழுந்து வந்து
அள்ளித்தரும் ஆற்றலின்
அற்புதத்துக்கிணையேது??
அடிநாதமாய் பூமிப்பந்தை
அசைவிக்கும் கதிரவனே
அப்பட்டமான இறைரூபம்!!
அலைகடல் ஓரம் நின்று
அவன் எழிலை தரிசிப்பது
அளவில்லாப் பேரானந்தம்!!
அனுபவிக்கும் போதுதான்
அதன் அர்த்தம் புரியும்!!
அண்டசராசரம் முழுதையும்
அவதானிப்பவனை எண்ணி
அடிபணியும்பிரார்த்தனையில்
அந்த ஆதவனைசரணடைந்து
அளப்பரிய வளம் பெறுவோம்!!!
*****
”அடக்கமாய்த் தெரியும் கடல் ஆர்ப்பரித்தெழுந்தால், அது கண்டு வெம்பாது அதனோடு போராடி மீள மீனவர்க்கு வேண்டும் தெம்பு!” என்று தண்ணீரில் பிழைக்கும் மீனவரின் கண்ணீர்க் கதையை கவிதையாய் விவரிக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.
கடலால் சூழ்ந்த கலையுலகம்
……….கணக்கே இலாத ஆழமுண்டு.!
அடக்க மிருந்தும் ஆபத்தாம்
……….ஆர்ப்ப ரிக்கும் அதனலையே.!
இடமும் கொடுத்து ஏகமாக
……….ஈந்த ருளுமே உணவையுமே.!
கடல்வி ளையும் அமுதங்கள்
……….கொடுப்ப தாலே வள்ளலாமே.!
கம்பு கொண்டு தள்ளுகின்ற
……….கட்டு மரமும் கடலினுள்ளே.!
அம்பு போன்று சீறுகின்ற
……….அலைகள் நடுவே மீனவர்கள்.!
வெம்பு மனமும் கொந்தளிக்க
……….வேத னையை உண்டாக்கும்.!
தெம்பு வேண்டும் கடல்சார்ந்து
……….தம்மு யிரையும் காப்பதற்கே.!
ஓடும் கப்பல் கடல்நடுவே
……….ஓடி ஆடும் ஒர்வாழ்க்கை.!
ஆடும் ஓடம் அதிலுண்டு
……….அடுத்த நொடிநிச் சயமில்லை.!
பாடும் பாட்டும் பண்ணாகும்
……….படும் துன்பம் அளவில்லை.!
தேடும் மீன்கள் அதிகளவில்
……….திண்டா டியபின் கிடைக்குமாமே.!
இந்தக் கவிதையோடு, பகலவனைப் போற்றியும், அன்பை வாழ்த்தியும், அலைகடலின் ஆர்ப்பரிப்பை ஆராதித்தும் மேலும் சில கவிதைகளை ஆர்வத்தோடு படைத்தளித்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதிக்கு என் தனிப்பட்ட பாராட்டு!
கவிஞனின் காதல்
கவிதை எழுதக் கருவாக வந்தாய்.!
கவிஞரின் நெஞ்சைக் குலைத்தாய்! – புவிதனில்
உன்னழக் கின்னோர் உவமையும் இல்லையே
நின்னையே சுற்றுமே நெஞ்சு.!
*****
அன்பான காதலர்கள் அங்கே படமெடுக்க
இன்பமாய் இன்று இணைந்தார்கள் – அன்பால்
எவரும் எதைச்செய்ய எத்தனித் தாலும்
எவருக்கும் வெற்றி எளிது!
*****
அலைகடல் ஆர்ப்பரிக்கும் அற்புதக் காட்சி
அலைபேசி உள்ளே அமர்ந்து – தலைமுறை
போற்றுகின்ற நல்ல படமாய் அமைந்தது
மாற்றம் விரும்பும் மனது.
*****
”இதயம் இணைந்த சதிபதியை வாழ்த்திச் சிவந்த கதிரவன் இவன்!” என்று கதிரோனின் செம்மைக்குச் சிறந்ததொரு காரணம் பகர்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
சந்திப்பு…
இதயம் இணைந்த காதலர்கள்
இணைந்தே வந்த கடற்கரையில்
உதய நேரக் கதிரவனும்
உவந்தே வந்தான் இணைகாண,
புதிதாய் வாழ்வைத் தொடங்குமிவர்
பகலவன் வரவில் மகிழ்கின்றார்,
சதிபதி யிவர்களை வாழ்த்தியேதான்
சிவந்தது வானின் முகமதுவே…!
*****
காதலியை வருணிக்கும் காதலனையும், கடல் குளித்தும் நிறம் மாறாச் சூரியனையும், மேற்கே புதைந்தாலும் கிழக்கே சிலிர்த்தெழும் அதன் விடாமுயற்சியையும் குறும்பாக்களில் அருமையாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வசந்திமணாளன்.
குழப்பம்
தூரத்தில் சூரியன்
அருகினில் நிலவு
எதை ரசிப்பது
குழப்பத்தில் அவன்!
*****
கண்ணாடி
அடி பெண்ணே
சூரியனுக்கு நீர்தான்
கண்ணாடி
அந்த சந்திரனுக்கு
நீதான் கண்ணாடியோ
ஆம் உன்முகத்தில்
நிலவு தெரிகிறதே!
*****
நீலக்கடலில்
குளித்த பிறகும்
நிறம் மாறவில்லை
சூரியன்!
*****
சுடும் நிலா
உன்னருகில் சந்திரனை
வைத்துக்கொண்டே
விண்வெளியின்
சூரியனை விரும்பிப்
படம் எடுக்கின்றாயே
அந்தச் சூரியனைவிடவா
சுடுகின்றாள் உந்தன் நிலா?
*****
விடாமுயற்சி
நேற்றுமாலை
மேகக்கூட்டம் அழைத்துச்சென்று
மேற்கில் புதைத்தன
இன்றுகாலை
அதன் சோகம் மனதில் சிறிதுமின்றி
கிழக்கில் உதித்தது!
*****
இயற்கை அழகைப் போற்றியும், இணையரை வாழ்த்தியும் கவிதைகள் வரைந்து குவித்திருக்கும் கவி வலவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக!
அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
செம்பொற் சோதி
அந்திச் சிவப்பழகா அதிகாலைச் சூரியனா
செந்தீ உமிழுகின்ற சிவனது நெற்றிக் கண்ணா
பரிதியாய் அடிவானத்தில் பளிச்சிடும் செம்பொற் சோதி
விரிதழலன்ன முன்னே விளங்கிடும் காட்சியென்னே?
புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
ரவியவன் சினக்கின்றானா? ரம்மியமூட்டி மண்ணை
அன்பொடு நோக்கும் நோக்கா அல்லது வெறுக்கும் போக்கா
இன்பமாய் வாழ்வீரென்றே எமக்கவன் அளிக்கும் வாக்கா
மேழியர் போற்றும் செய்ய விரிகதிர் தொலை தூரத்து
ஆழியின் விளிம்பிற் தோன்றும் அற்புதக் காட்சியோடு
ஆழியினீரமண்ணில் ஆதவன் விம்பம் வந்து
வீழ்வதும் அழகுக் காட்சி விரைந்தததை இருவர் சேர்ந்து
தோழமையோடு நின்று சொடுக்கியே கமராவுக்குள்,
வீழவைக்கின்ற காட்சி மேலும் பேரழகு அந்தத்
தோழரின் பின்னே மெல்லத் தொடர்ந்தொரு படஞ்செய்திட்டார்.
வாழ்வினில் இன்பஞ்சேர்க்கும் வழிகளிலிதுவு மொன்றே.
செம்பொற்சோதியாய்ச் சுடர்விட்டு விரிதழலன்ன காட்சி நல்கும் சூரியனின் தோற்றம் கண்டு,
”புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
ரவியவன் சினக்கின்றானா?” என்று வினவுகிறது இக்கவிதை.
இவ்வரிகள் எனக்கு,
”மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம் உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்இ தைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண்டு அந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!” என்று எளியோரின் இழிநிலைகண்டு அறச்சீற்றங்கொண்டு பாவேந்தர் எழுதிய வைர வரிகளை நினைவூட்டின.
வானிடைதிகழ் ஆதவன் ஆழியின் ஈரமண்ணிலும் தன் பிம்பம் பதிக்கும் எழிற்காட்சியை, அதனழகில் திளைக்கும் தோழர்கள் படமெடுக்கும் மாட்சியை, தேர்ந்த வரிகளில் விவரிக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
வேகமாய் நித்ரை விழிப்பு….!
அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்