பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 179

 1.    ‌ ஆழியின் கொடை!!
      ——————————–
  கவர்ச்சி இளமங்கை
  கழுத்தும்குமிண்வாயும்
  கழன்று கிடக்கிறதோ?
  அமுதம் எடுப்பதற்காய்
  ஆழ்கடல் கடைகையில்
  அமரர்கள் எடுத்துவோ?
  அரிசிக்குள் புதைத்தாலும்
  அலுங்காமல் மேல் வரும்
  அதிசய வலம்புரியோ?
  பாரதப்போரில் கண்ணன்
  பாங்குடன் ஊதிய
  பாஞ்சசன்னியமோ?
  கடல்நங்கை களிப்போடு
  கதிரவனைக் காதலித்து
  ஆழத்தில் ஈன்றெடுத்த
  ஆழியின்நன்கொடையோ?
  முற்றிய சிப்பிகளோ?
  மூத்த நண்டு ஓடுகளோ?
  மூச்சடக்கித்தேடினாலும்
  முத்து எதில்? யாரறிவார்?
  ஐந்தும் கிடப்பது போல்
  ஐம்புலன்கள் அடங்க
  ஐயமின்றி முக்தி வரும்!!!
  ________________________________
  ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி..
  பவானி.. ஈரோடு..9442637264.
  _________________________________

 2. விளையாடவே…

  சிப்பி யென்றால் முத்திருக்கும்,
  சீதரன் ஊதும் சங்கென்றால்
  எப்படி யாயினும் ஏற்றிடுவர்
  எல்லா வகையாம் பூசைக்கே,
  உப்பைத் தந்திடும் கடல்நீரும்,
  உதிரியாய்ச் சோளிகள் எங்களாலே
  செப்பிடத் தகுந்த பயனிலாததால்
  சேர்ப்பர் பலரும் விளையாடவே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. ————————————————
  உன் நினைவாய்…
  ————————————————

  கடற்கரை மணற்பரப்பில்
  கையிரண்டைக் கோர்த்தபடி
  கதைபேசி நடக்கையிலே
  திடுக்கென்று உதறிவிட்டு
  ஓடிபோய் ஒவ்வொன்றாய் – நீ
  குனிந்தெடுத்த சோழிகள் தாம்

  விடைபெற்றுப் போகையிலே
  எதன்பொருட்டோ என்கையில்
  வெடுக்கென்று திணித்துவிட்டு
  வேகமாய் நீ மறைந்தாய்

  நீ நகர்ந்துப் போனபின்னும்
  உன் கரத்தைப் பிடித்தபடி
  நடப்பதுபோல் ஓர் உணர்வு
  ஐவிரலாய் அவை எனக்குள்

  விரல்களை வருடிக்கொண்டே
  வீடுவந்து சேர்ந்தேன் நான்
  முகம் கழுவி உடைமாற்றி
  உணவருந்திப் படுத்தபின்னே
  உறக்கம் துளிர்க்கும் நொடி
  சோழிகளை நினைத்திட்டேன்

  மேசைமீது வைத்திருந்த – உன்
  விரல் நிறத்துச் சோழிகளை
  கைபேசி ஒளிபாய்ச்சி
  கண்கொட்டப் பார்த்திருந்தேன்

  உயிரற்றக் கூடுகள் போல்
  உருவத்தில் தெரிந்தாலும்
  உயிர்ப்போடு உள்ளிருந்து
  உன் நினைவு நெளிகிறது

  ஈரமாய் இருப்பதன்
  காரணம் உணர்ந்திட்டேன்
  உன் காதல் கடல் திரண்டு
  அதிலிருந்து வழிகிறது

  இன்னமும் உதிராமல்
  அதன்மீதிருக்கும் மணல் துகள்போல்
  உன் நினைவுகளில்
  ஒட்டிக்கொண்டிருக்கின்றன என் பொழுதுகள்.
  —————————————-
  – புதுவைப் பிரபா –
  —————————————–

 4. காலம்

  ஓடி ஓடி உட்கலந்த
  காலக்கணக்கை,
  கண்டுகொண்ட மகத்தான
  கண்டுபிடிப்பு,
  எண்கள் வாழ்க்கையின்
  புதிா்களைக் கட்டவிழ்க்கும்
  அற்புதக் மாயக்கயிறு இவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *