Blog

  • பெண்ணென்றால் கேவலமோ?…….

     

    -பார்வதி இராமச்சந்திரன்

     

     

    பெண்ணென்றால் கேவலமோ?

    பெரும் பாவம் செய்தோமோ!!

    மண்ணிலே பிறவியெல்லாம்

    பெண்ணின்றிப் பிறந்திடுமோ?

     

    நல்லதொரு சுமை தூக்கி

    நாலெட்டு நடக்கு முன்னே

    இறக்கி வைக்க இடம் தேடி

    இங்குமங்கும் அலைகின்றீர்!!

    .

    பத்து மாதம் கருச்சுமந்து

    படும் பாடு நீர் அறிந்தால்

    பாரினிலே பெண்பிறவி

    பெருமையென்றே பேசிடுவீர்!!

     

    சூலறிந்த நாள் தொடங்கி

    சுகமான சுமையென்றெண்ணி

    தன்னுள்ளே உயிர் வளர்க்கும்

    தியாக வேள்விக்கு ஈடுண்டோ?

     

    முதல் மூன்று மாதம் வரை

    தலை சுற்றும், வயிறு குமட்டும்.

    குழம்பு கொதிக்கும் வாசமென்றாலும்.

    குடம் குடமாய் வாந்தி வரும்.

     

    புரண்டு படுக்க இயலாது.

    பூப் போல நடக்க வேண்டும்.

    பூமியின் பொறுமை எல்லாம்

    பொன்னுடலில் வர வேண்டும்.

     

    ஐந்து மாதம்  நிறைந்து விட்டால்

    அணையாத‌ பசித்தீ வாட்டும்

    எத்தனை முறை உண்டாலும்

    இன்னமும் வயிறு கேட்கும்.

     

    ஆறு மாதம்  ஆன பின்னே

    அயர்ந்து அமரச் சொல்லும்.

    அடி வயிற்றில் குழந்தை முட்டும்

    ஆழ்ந்த தூக்கம் தொலைந்து போகும்.

     

    நாலிரண்டு மாதத்திலே

    நாலெட்டு நடந்தால் திணறும்.

    நீர் கோர்த்து கால் வீங்கும்

    நிலவு முகம் பூசணியாகும்.

     

    ஒன்பதாம் மாதம் வந்தால்

    உள்ளங்கால் நரம்பு சுண்டும்.

    ஓரெட்டு நடக்கும் முன்னே

    உடலிலே அயர்ச்சி பொங்கும்.

     

    ஐயிரண்டு மாதத்திலே

    அங்கமெல்லாம் வலி பொறுத்து

    ஆருயிரின் ஓருறவை

    அகம் மகிழத் தருகின்றோம்.

     

    ஆயினும் பெண்ணென்றால்

    ஆயிரம் வசையொலிகள்.

    அன்பு தரும் உயிரில்லை.

    அரங்கேறும் கேவலங்கள்.

     

    அம்மாவும் பெண் தானே!!!

    அருமை மகள் பெண் தானே!!!

    அன்பு தந்து வாழ்விக்கும்

    அருந்துணைவி பெண் தானே!!

     

    பெண்களைத் தொழுது நிதம்

    பெருங்கோயில் கட்ட வேண்டாம்

    மண்ணிலே வாழ வந்தோம்

    வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (63)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.250px-HoeGrain
    இனியதோர் வாரத்திலே இகத்தின் நிகழ்வுகள் எழுதிடும் செய்திகளின் ஆழத்தின் அகழ்வுகளின் அடிப்படையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணமிது.

    மனித வாழ்க்கையின் அடிப்படையே கருணையின் அடித்தளத்தில் தான் எழுப்பப்படுகிறது. அன்பு வாழ்க்கையின் ஆரம்பம் , ஆதாரம், முடிவு என்று எமது வாழ்க்கையின் அனைத்தையும் நிர்ணயிக்கும் காரணியாகிறது.

    அன்பு இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்றதாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் காட்டும் அன்பு, சகோதரர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் பாசம், காதலர்களின் இதயத்தின் கனிவு , கணவன், மனைவியரிடையே கட்டி எழுப்பப்படும் அன்பு, அயலவர்களின் மீது காட்டும் பரிவு என அன்பு எடுக்கும் வடிவங்கள் ஆயிரம்.

    ஆனால் அதே மனித வாழ்க்கையில் தான் கொலைகாரர்களும் அடுத்தவருடைய வாழ்வைப் பறிக்கும் பாதகச் செயலின் காரணகார்த்தாக்களாகிறார்கள்.

    அதே அன்பு விளையும் மனதில்தான் கொலைவெறியும் 400px-Moors_murders_mapஎழுகிறது இவற்றில் சிலவற்றிற்கு நியாயமான காரணங்கள் எனச் சிலவற்றைக் காட்டினாலும் பல அகோரமாக அடுத்தவரின் வாழ்வை அரைகுறையாக முடிக்கும் அசுரத்தனத்திற்கு எடுத்துக் காட்டாகிறது.

    என்னடா? எதை நோக்கி இவனது இந்த வார மடலின் ஆரம்பம் அழைத்துச் செல்கிறது என்ற உங்களது ஆர்வத்துடனான கேள்வி எனக்குப் புரிகிறது.

    இங்கிலாந்து ஊடகங்களில் மிகவும் பிரபலமாக அடிபட்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இவ்வாரம்பம்.

    தற்போது “கிரேட்டர் மான்செஸ்டர்” (Greater Manchester) என்றழைக்கப்படும் இங்கிலாந்திலுள்ள பகுதியில் 1963ம் ஆண்டு யூலை மாதத்திற்கும் 1965ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 27 வயதே நிரம்பிய இளைஞன் “இயன் பிராடி ( Ian Brady ) ” என்பவனும் , 23 வயதே நிரம்பிய யுவதி ” மைய்ரா ஹென்லி (Myra Hindley ) என்பவளும் சேர்ந்து நிகழ்த்திய ஜந்து சிறுவர்களின் கொலை ” த மோர்ஸ் மேடர்ஸ் (Moors murders ) என்று மிகவும் பிரபலம் பெற்றது.

    இவ்விருவரும் இணைந்து 10 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 5 இளம் உயிர்களை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்திக் கொலை செய்து இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள ” மோர்ஸ் ( Moors ) என்றழைக்கப்டும் பகுதியில் புதைத்திருந்தார்கள்.

    இவர்களது இந்த அகோரத்தனமான , மிலேச்சத்தனமான நடவடிக்கை அப்போதைய இங்கிலாந்து தேசத்தை மட்டுமல்ல உலகெங்குமே அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. மனிதர்கள் மனதில் இத்தகைய வெறி உருவாவது சாத்தியமா ? எனும் கேள்வி அனைத்து மனிதாபிமானமிக்க நெஞ்சங்களையும் உலுக்கி விட்டிருந்தது.

    இவர்கள் இருவரது குழந்தைப்பிராய வாழ்வில் இடம்பெற்ற வன்முறை மிக்க வளர்ப்பின் காரணத்தினால் மனம் மிருக உணர்வுகளை உள்ளடக்கி வைத்திருந்து அதன் வெளிப்பாடகவே இவர்களது இந்நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன என்பதே மனோதத்துவ நிபுணர்களின் விளக்கமாகவிருந்தன.

    எத்தகைய வடிவங்களில் இந்நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தாலும் இளம் உயிர்களின் வாழ்க்கையைப் பறித்து அவர்களின் குடும்பத்தினரைத் மீளமுடியாத் துன்பச் சேற்றினுள் புதைத்த இவர்களை மிருகங்கள் என்று விவரிப்பதே சரியான விளக்கம் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாக இருந்தது.

    இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தில் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    தான் செய்த கொடூரத்தை உணர்ந்து திருந்தி விட்டதாகக் கூறிப் பல வருடங்களின் பின்னர் பலமுறை “மைரா ஹென்லி” நீதின்றத்தில் தன்னை விடுவிக்கும்படி விண்ணப்பித்தும் அவையனை250px-David_and_maureen_smith_nee_hindleyத்தும் நிராகரிக்கப்பட்டன.

    அப்பெண்ணின் வாழ்க்கை 60வது வயதில் 2002ம் ஆண்டு சிறையிலேயே நிறைவுற்றது. அம்மனிதன் சிறையிலேயே ” சித்த சுவாதீனமற்றவன் ” என்று தீர்மானிக்கப்பட்டு மனோநிலை பாதிக்கப்பட்ட கைதிகளைப் பாதுகாக்கும் “ஆஷ்வேர்டு வைத்தியசாலையில்” அனுமதிக்கப்பட்டிருந்தான்.

    சில வருடங்களுக்கு முன்னால் தான் உணவு உட்கொள்ளாமல் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்த அம்மனிதனுக்கு வலுக்கட்டாய உணவு கொடுத்துச் சிறையில் இங்கிலாந்து அரசாங்கம் உயிருடன் வைத்திருக்கிறது.

    தான் உண்மையிலேயே மனோநிலை அற்றவனில்லை என்றும் தன்னை வைத்தியசாலைச் சிறையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்றும் படியும் கோரி அவன் செய்திருந்த மனு விசாரணைக்கு கடந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் இம்மிருக உணர்வுகளையுடைய இம்மனிதனுக்கு வழங்கப்பட வேண்டுமா? தமது குடும்ப அங்கத்தினர்களை இழந்த மனிதர்களுக்கு மீண்டும் இவன் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவுபடுத்த வேண்டுமா? எனும் வாதமே ஊடகங்களில் கடந்த வாரம் பிரபல்யமடைந்தது.

    அவனது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவனுக்கு நீதிமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அவ்விதமான ஒரு சந்தர்ப்பம் அவனுக்கு அளிக்கப்பட வேண்டுமா? என்பதே பலரது வாதமாகும்.

    மற்றவரின் வாழ்க்கையைப் பறித்து அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்த ஒருவருக்கு மனிதர்களின் அடிப்படை சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா? என்பது ஒரு சாராரின் வாதம்.

    எது எப்படி இருப்பினும் குற்றம் புரிந்தவராயினும் அவருக்கு அடிப்படை உரிமைகளை மறுப்பது எம்மையும் அவர்களது தரத்திற்கு இழுத்துச் செல்லாதா? என்பது மறுபுறம் உள்ளவர்களின் வாதம்.

    இப்படிப்பட்ட வாதத்தில் எது சரியானது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எமக்கு உள்ளதா?

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    27.06.2013

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (17)

    images (1)

    பவள சங்கரி

    அனைவரும் கற்றுணர வேண்டிய மூன்று சத்தியங்கள் : பரந்த மனம், அன்பான பேச்சு, சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச் செய்யும் மகத்தான செயல்கள்.
    புத்தர்

    கருணையுள்ள இதயம் கடவுள் வாழும் இல்லம்!

    நல்ல எண்ணங்களே நம்முடைய நல்ல செயல்களுக்கு வித்தாகி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கச் செய்கிறது என்பது திண்ணம். அனைவரிடத்திலும், எப்பொழுதும் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது நல்லதொரு கருத்து என்றாலும், நடைமுறையில் அது முழுவதும் சாத்தியமாகுமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஆனாலும் பழகப் பழக நாளடைவில் அது சாத்தியமாகும் என்பதும் சத்தியம். தம்மைத் தாமே வலிமையாகவும், புத்திசாலியாகவும் ஆக்கிக்கொள்ளவும் மற்றும் அதிக தன்னம்பிக்கையுடனும், நெகிழ்த் திறனுடனும் நடந்து கொள்ளச் செய்யும் யதார்த்தமான பாதை இது. பச்சாதாபத்துடன் நடந்துகொள்ளும் மனோ நிலையை வளர்த்துக்கொள்ளும் போது, தம் அன்புக்குரியவர்களின் தேவைகளை உணர்ந்து தக்க சமயத்தில் உதவி செய்வதற்கும் வழிவகை செய்யும். அஞ்சி நடுங்கச் செய்யும் கடினமான நேரங்கள் மற்றும் வாழ்க்கையின் இருண்ட காலங்களையும் கூட பொறுமையுடன் எதிர்கொள்ளச் செய்யக்கூடியது ‘கருணை’ என்ற இந்த மகோன்னத குணம். மிகக் கடினமான நேரங்களில் கூட தம் சுயநலத்திற்காக மட்டுமே கண்களை மூடிக்கொண்டு கருணைக் கடலில் மூழ்கித் தெளிவதன் மூலம் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற முடியும். அதனாலேயே சக்தி வாய்ந்ததொரு ஆயுதமாக செயல்படக்கூடிய, ‘கருணை’ என்ற இந்த அற்புதமான குணத்தை வளர்த்துக் கொள்வது ஒரு வெற்றியாளருக்கு அவசியமாகிறது.

    images

    என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஆச்சரியப்படக்கூடிய ஒரு சம்பவம் இந்த இடத்திற்குப் பொருந்தக்கூடும். இயற்கையிலேயே கருணை எனும் அந்த தெய்வீகக் குணத்தைப் பெற்றவராயினும், யோகா, தியானம் என்ற சக்திகளின் மூலம் மேற்கொண்டு அதை உரம் போட்டு வளர்த்து தம் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பவர் சந்திரன். நகரத்தின் மையப்பகுதி என்றில்லாவிட்டாலும், பரபரப்பாக இயங்கும் ஒரு சாலையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்பவர். அதன் கீழ்பகுதியின் பின்புறம் ஒரு மூலையில் சிறிய இடத்தை மட்டும் தம் குடியிருப்பாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் அந்த நடுத்தர வயதுக்காரர். அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் கொடுக்கும் மீந்துபோன உணவுகளையும், பழைய துணிகளையும் பெற்றுக் கொண்டு தம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவர். அன்றாடம் சந்திரன் தன் பங்கிற்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். அவசரமாக வெளியே செல்லும்போது கையில் கிடைக்கும் சில்லறையைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவார். மற்றவர்கள் கொடுப்பதைப் பார்த்து தானும் ஏதோ செய்ய வேண்டுமே என்ற தனக்குள் இருக்கும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அதைத் தவறாமல் செய்து வந்து கொண்டிருந்தாலும், ஒரு நாள் திடீரெனெ ஏதோ தோன்ற சில்லறையை எடுத்து தட்டில் போட்டுவிட்டு, வீடு வாசல், சொந்த பந்தம் இல்லாமல் அனாதையாய் இருக்கும் அந்த மனிதரின்மீது ஒரு பச்சாதாபம் மேலிட, அவருடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து நட்புடன் ஒரு பார்வையை வீசினார். சற்றே தடுமாறிய அந்த மனிதரும் திரும்பி பார்க்கத்தான் செய்தார். அந்த இடத்தில்தான் கருணையின் வாசல் திறந்தது!.

    நாட்கள் வாரங்கள், மாதங்களாயின. அந்த ஆதரவற்ற மனிதரைப் பார்த்து ஆரம்பத்தில் புன்னகைக்க ஆரம்பித்த சந்திரன், மெல்ல மெல்ல ‘நலமா’ என்ற ஓரிரு வார்த்தைகள் பேச முற்பட்டார். மாலையில் திரும்பும் போது ‘இன்று பொழுது நன்றாகப் போனதா’ என்று அன்பாக கேட்கும் வழக்கமும் கொண்டார். வெகு விரைவில் சந்திரனின் கருணையுள்ளம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது, அந்த மனிதரின் மாற்றத்தில் தெரிந்தது. சுய பச்சாதாபம், சங்கோஜம் போன்ற கூட்டிலிருந்து மெல்ல வெளிவந்து சந்திரனைப் பார்த்து பதில் சொல்லவும் துணிந்தார். அவருடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த மாற்றங்கள் அவருடைய தன்னம்பிக்கையை உணர்த்தின. சந்திரனுக்கும் இது உற்சாகத்தை அளிக்க இதுவே வழமையாகி விட்டது. நல்ல நட்புணர்வும் தெரிந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த மனிதரைக் காணாமல் சந்திரனுக்கு பெரும் கவலையாகிவிட்டது. வாழ்க்கை ஓட்டத்தில் வெகு விரைவில் அந்த மனிதரைப் பற்றிய நினைவும் மறைந்து விட்டது.

    ஒரு நாள் சந்திரன் தன் பணி முடிந்து வீடு திரும்பும்போது அந்த மெத்தைப்படி அருகில் யாரோ ஒரு புதிய மனிதர், தன் இரு கரங்களையும் கூப்பி வணங்கி, ‘சார், நலமா’ என்று விசாரிக்கவும், எங்கேயோ பார்த்த முகமாக இருந்தாலும், யார் என்று சட்டென்று நினைவிற்கு வராமல் யோசித்தது, சுருங்கி, விரியும் நெற்றியின் மூலம் புரிந்தது. அந்த மனிதரும், வெகு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

    “சார், என்னைத் தெரியவில்லையா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஆதரவற்ற நிலையில், அடுத்தவரின் உதவியை நாடி காத்துக்கிடந்தபோது அன்பையும், நட்பையும் விதைத்து எனக்குள் தன்னம்பிக்கையை வளரச் செய்தீர்களே. அதுவரை ஒரு சடமாகக் கிடந்திருக்கிறேன் நான். நமக்கும் மரியாதை கொடுக்கவும், அன்பைக் காட்டவும் ஒருவர் இருக்கிறாரே என்ற எண்ணம் எனக்குள்ளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. என் சுயமரியாதையை தட்டி எழுப்பியது. மெல்ல என் அடிமைக் கூட்டிலிருந்தும் வெளிவர முடிந்தது. ஒரு கூலி வேலைத் தேடி முதலில் நல்ல உடை வாங்கினேன். பின் இன்னும் சற்று நல்ல வேலை தேடிக்கொண்டு, ஒரு சிறிய குடியிருப்பில் வாடகைக்கு இடம் வாங்கி தங்கியிருக்கிறேன். உங்களுடைய கருணையும், அன்பும், என்னையும் ஒரு மனிதனாக மதிக்கத் தோன்றிய எண்ணமும்தான் என் வாழ்க்கையையே மாற்றியமைத்துவிட்டது! என்மீதே எனக்கு ஒரு மரியாதை வந்ததற்கு காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன் என்று தன் கைகளை நீட்டினார். தன் கண்களைச் சந்திக்கவே தயங்கிக் கொண்டிருந்த மனிதர் இன்று கை குலுக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் வளர்ந்திருப்பது சந்திரனுக்கும் மன நிறைவைக் கொடுத்தது. இந்த மன நிறைவு சந்திரனின் அன்றைய பொழுதின் பணிகளை எளிதாகவும், மிகச் சிறப்பாகவும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்தது. உள் மனதில் ஒரு இனிமை சூழ்ந்திருந்ததால் உற்சாகம் பல நாட்களுக்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

    அன்னை தெரெசாவை நினைவு கூர்ந்தால் இந்த உண்மைக்கான ஆதாரம் தெளிவாகும். அவருடைய அமைதியான தன்னம்பிக்கை மட்டுமே அவரைத் தயக்கமில்லாத மற்றும் மனிதாபிமானமுள்ள தன்னலமற்ற சேவைகளுக்கு வழிநடத்தியது. உருவில் மிக எளிமையான, தோற்றம் கொண்டிருந்தாலும், மிகப் பரந்த மனப்பான்மையும், அபரிமிதமான மன உறுதியும் அவரை மிகப் பிரம்மாண்டமாகக் காணச் செய்தது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில் தம் இறுதிக் காலம் வரையில் துளியும் களைப்படையவில்லை அந்த அம்மையார். உண்மையான கருணையும், அன்பும் கொண்டால் களைப்பற்ற உற்சாகமான செயல்பாடுகளுக்கு உத்திரவாதம் உண்டு என்பதற்கு அன்னை தெரெசாவே முன் உதாரணம். கருணையைப் பொழிவதற்கு அதிக உழைப்போ அல்லது பெரிய முயற்சியோ தேவையில்லை. உண்மையான அன்பு மட்டுமே போதுமானது. அன்னை தெரெசாவின் பொன் மொழியான,

    “நம்மால் இந்த பூமியின் மீது பெரிய செயல்களையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறிய செயல்களை மட்டுமே செய்ய முடியும்” என்பதன் மூலம், இந்த சிறிய செயல்களே வாழ்க்கையின் பெரிய சாதனைகளை எதிர் கொள்வதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வழி என்பதை விளங்கச் செய்கிறது.

    மீண்டும் சந்திப்போம்

    படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://updateyourself.info/wp-content/uploads/2013/03/inspirational-words.jpg&imgrefurl=http://updateyourself.info/2013/04/inspirational-sunday-3-no-excuse/&h=960&w=1280&sz=116&tbnid=7tN9VCxvgbU_XM:&tbnh=95&tbnw=127&zoom=1&usg=__-w0LJLkrJbEn57B_VjDRHTfQcqU=&docid=Y3NgC37Es1nP5M&sa=X&ei=Jb7KUavTCIWNkAX4uID4BQ&ved=0CDUQ9QEwAg&dur=830

    Share
  • இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்!

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விஷயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா?

    சிறிய சமூகத்திற்கு இத்தனை பிரச்சனைகளா என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்கப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

    திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது, இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன. மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியச் சமுதாயம் கேட்பாரற்ற சமுதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா?

    தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தியச் சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும், சமுதாயத்தலைவர்களும் சொந்தச் சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா?

    கடந்த சில தினங்களாக மற்றுமொரு தலையாய பிரச்சனை ஒன்றைப் பற்றி ‘புதிய வெளிச்சம்’ என்ற பகுதியில் உண்மை விளம்பி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறையின் எதிர்காலம் குறித்தும் அத்துறை தொடர்ந்து பெருமை வாய்ந்த மலாயாப் பல்கலைக் கழகத்திலேயே தக்க வைக்கும் முயற்சியில் அரசாங்கமோ, எந்த அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஏனோதானோ என்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் 1956 ஆம் ஆண்டில் பல சிரமங்களுக்குக்கிடையில் கோ.சாரங்கபாணி அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட இத்துறையை இழந்துவிடாமல் இருக்க சமுதாயம் செய்யத் தயங்கும் நிலையில் எதிர்காலச் சந்ததியினரின் தேவை அறிந்து அதனைக் காக்கும் பொருட்டு கடுமையான போராட்டத்தில் தினக்குரல் இறங்கியுள்ளது. சக பத்திரிக்கைகளின் உதவியோடு பிரதமரை அணுகி பிச்சனைக்குத் தீர்வு காண்பது வரவேற்கத் தக்கது. எனினும், சமுதாயத்தின் தமிழ்மொழியைக் காக்கும் பணியில் ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் கடப்பாடுதான் என்ன?

    இந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி, கந்தசாமி, சபாவதி, குமரன், முகமது ராடுவான், கிருஷ்ணன் மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர். 2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன்?
    அப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே? சொல்லாமல் விட்டது ஏன்? உங்களை மலைபோல் நம்பியிருந்த சமுதாயத்திற்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டீர்களே! உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்குக் கைமாறாக வேறு துறைக்குத் தலைவராக்கி விடுவார்கள். தங்களின் கல்வித் தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப் பயிலும் வாய்ப்பு பறி போய்விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே! அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன?

    மொழிப்பிரச்சனை என்று வரும் போது, இந்திய சமுதாயத்திற்குக் காவலனாகத் திகழவேண்டிய, அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையா? இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா?
    தமிழ்மொழியின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மலேசிய தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், மலாயா தமிழ்ப்பள்ளி மன்றப் பொறுப்பாளர்கள்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசிய இந்து சங்கம், மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்த் தொடர்புடைய பிற சங்கங்களின் இந்தியல் ஆய்வுத்துறையைக் காக்க விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
    கையில் இருப்பதை இழந்துவிட்டு பின்னர் நமக்குள் குறைப்பட்டுக்கொள்வது அறிவுடைமையாகாது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்திய சமுதாயம் பல வாய்ப்புகளை இழந்துள்ளது. இப்போது, தமிழ் மொழியையும் இழப்பதன் மூலம் நமது உரிமையை விட்டுக்கொடுப்பது போலாகும். ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் நமது அடிச்சுவடுகளை அழித்துவருகிறார்கள்.அவற்றில் தமிழ்மொழியின் அழிப்பும் ஒன்று என்பதை உணரவேண்டும்.

    நம்மிடையே இருக்கும் பலர் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். தாய்த்தமிழைத் தூக்கிலிடும் தமிழ்த் துரோகிகளைத் தூக்கி எரிவோம். தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தமிழர்களைக் கைக்கூப்பி வணங்குவோம்.அவர்களால்தான் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடைமொழியோடு அன்றும் இன்றும் பெருமையோடு வாழ்ந்து வருகிறோம்!

    தாய்மொழித் தமிழை இழந்து, இன்று வருந்தும் இந்தோனேசியா, பீஜி, மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா? இங்கே சட்டம் நமக்குச் சாதகமாக இருந்து வருகிறது. இதுவரையில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மெத்தப் படித்த தமிழ்மக்களின் தமிழை ஏளனத்தோடு பார்ப்பதும், தமிழ்மொழி மீது பற்று கொண்டு அதனை வளர்க்கும் தமிழர்களை அலட்சியப்படுத்தும் போக்கினை இனியும் தொடருமானால், தமிழை அழித்த அவப்பெயரை இந்தப் பிறப்பு அழியுமட்டும் சம்பத்தப் பட்டோர் சுமக்கவேண்டும்.

    தமிழுக்காக நாம் ஒன்றுபடுவோம். நமதுரிமையைக் காக்கும் வகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியல் ஆய்வியல் துறையை நிலை நிறுத்த அனைவரும் இன்றே செயலில் இறங்குவோம்!

     

    Share
  • பணமூட்டை புகை மூட்டமானது

     

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

     

    சோற்றில் மண்ணைப் போடுதல்
    தர்மமாகுமா?
    காற்றில் விசத்தைக் கலத்தல்
    நீதியாகுமா?
    தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்
    நல்லதாகுமா?
    மக்கள் தினம் அவதிபடுதல்
    மனிதநேயமா?
    நோய்கள் தாக்க வழிசெய்தல்
    இதயம் தாங்குமா?

    உலகெங்கும் உன் சொத்து
    மதிப்பே பல கோடி
    நாளெல்லாம் அதன் பேச்சு
    நிம்மதியோ ஓடிப்போச்சு!

    ஏழை சிறுகுப்பை எரித்தல்
    பெரும் குற்றம் நொடியில்
    நீதிதேவன் வாசலில் நிற்பான்
    கனமுள்ளவன் காட்டை எரிப்பான்
    காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்
    தீ அணைப்பதற்கும் வானில்
    பணமழை பெய்யும் நீதிகேட்டால்
    முக்கியப் புள்ளிகளாம்
    மௌனமே பதிலாகும் என்றும்
    ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!

    மக்கள் அரசு நீதி காக்கும்
    பேதமின்றி கண்ணீர் துடைக்கும்
    பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்
    புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்
    காற்றாய்ப் பறந்து போகும்!

    இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித்தருவோம் மடமையில்
    எதிர்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    Share
  • வாழ்வை நேசிக்கும் வழியைத் தேடி…..

    அதிகரிக்கும் தற்கொலைகள்

    வாழ்வை நேசிக்கும் வழியைத் தேடி…..

    எஸ் வி வேணுகோபாலன்

    கடந்த ஓராண்டில் மட்டும் நமது நாட்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 445 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை எண்ணிக்கையில் பெண்களைப் போல் இரண்டு மடங்கு ஆண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், ஒரு மணி நேரத்திற்கு 15 – அதாவது நாள் ஒன்றிற்கு 371 தற்கொலைகள் நிகழ்கின்றன என்று சொல்கிறது. இதில் கூடுதல் வருத்தம் என்னவெனில், இந்தப் புள்ளிவிவரத்திலும் தமிழகம் (16,927) முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம் (16,112), மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் (இரண்டிலும் 14,328) ஆகியவை அடுத்த இடங்களில் வருபவை. நகரங்களை வைத்துப் பார்க்கையிலும் நமது சென்னை மாநகரம் தான் முதலாவதாக இருக்கிறது. சென்னையில் 2,183 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்த நகரம் பெங்களூரு (1989) என்பதும் நோக்கத் தகுந்தது.

    எண்ணிக்கையை விட வேறு சில கோணங்களில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் சமூக அக்கறை கொண்டுள்ளோர் கவனத்தைக் கோருகிறது. இந்த எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு தற்கொலை, இல்லத்தரசிகள் செய்துகொண்டது. ஆண்களைப் பொறுத்தவரையில் தற்கொலைக்கு சமூக-பொருளாதார பிரச்சனைகள் அதிக காரணம் என்றால், தனிப்பட்ட துயரங்களும், உளவியல் பிரச்சனைகளும் பெண்களின் தற்கொலைக்கு அதிக காரணிகளாக இருந்திருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டோரில் 70.3 சதவீதம் பேர் திருமணமானவர்கள்.

    2002ம் ஆண்டுக்குப் பிறகு தற்கொலை எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் தான் இருந்து வருகிறது. 2011ல் 1,35,585 பேர் என்கிறது ஆவணக் காப்பகத்தின் விவரம். தொடர்ந்து அதிகமான தற்கொலைகள் நடக்கும் சில மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது.

    ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் விவரங்களைக் கடந்தும் சில அம்சங்களை நோக்க வேண்டியிருக்கிறது. அண்மைக் காலமாக குடும்ப பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள் அல்லது கடன் தொல்லைகள் காரணமாக தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கும் மனிதர்கள் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளையும் இல்லாது செய்துவிடுவதை அதிர்ச்சியோடு பார்க்கிறோம். தாள மாட்டாத நெருக்கடி காரணமாக குடும்ப மொத்தமும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையோ, குழந்தை குட்டிகள், மனைவி ஆகியோர் கணக்கையும் தீர்த்துவிட்டுத் தாங்கள் பிறகு தங்களது வாழ்வை முடித்துக் கொள்ளும் சில மனிதர்களது விவரங்களையோ நாளேடுகள் விரிவாக வெளியிடுகின்றன.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில், காதல் தோல்வி – தேர்வில் தோல்வி ஆகிய காரணங்கள் கூடுதலாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு அப்பால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள், தவறான சேர்க்கை உள்ளிட்ட காரணங்களும் தற்கொலைக்கு இட்டுச் சென்றுள்ளன. தனிமை, கவனிப்பாரற்ற உளவியல் சுமை, பொருளாதார பாதுகாப்பின்மை போன்றவை காரணமாக தமது வாழ்வை முடித்தக் கொண்ட முதியோர் எண்ணிக்கையும் இந்தப் புள்ளிவிவரத்தில் கவலை அளிக்கிறது. நீண்ட கால நோயின் தவிப்பு தாளாமல் நிகழ்ந்த தற்கொலை குறித்த விவரங்களும் தரப்பட்டுள்ளன.

    தற்கொலை என்பது அவரவர் பலவீனம், தனிப்பட்ட விஷயம், இவற்றை எல்லாம் எதற்கு விவாதித்துக் கொண்டு..என்று நாம் கடந்து போய்விடமுடியாது. தனிப்பட்ட விஷயம் போன்று மேலாகத் தோற்றம் அளிப்பவை பலவும் சமூக ரீதியில் உள்ளான காரணங்களைக் கொண்டிருப்பவை.

    பொருளாதார சுமைகள், கடன்கள், வறுமை, பசி, பட்டினி போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கையில், இவற்றைத் தனிப்பட்ட விஷயமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? உடைந்து போகும் திருமண உறவுகள், குலைந்து போகும் பரஸ்பர நம்பிக்கை, தொடர்பற்று வாழும் சுவாரசியமற்ற வாழ்க்கை ஆகியவற்றை எப்படி எங்கோ ஒன்றிரண்டு நடப்பதாகப் புரிந்து கொள்ள முடியும் ?

    வளர்ச்சி, வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் அளந்து விட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வளர்ச்சி சீரானது அல்ல என்பதையும், அந்தச் சித்திரத்திற்குள் அடங்காதவர்களது எண்ணிக்கைதான் அதிகம் என்பதையும் நாம் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. பெருகிவரும் ஏற்றத் தாழ்வுகள், ஊதியத்திடையே நிலவும் வேறுபாடு பெரும் பள்ளமாக ஆகிக் கொண்டிருப்பது, நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நடக்கும் அன்றாட வாழ்க்கை இதன் ஒரு மோசமான பிரதிபலிப்பு தற்கொலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

    எதிர்ப்புச் சக்தி அற்று வளரும் அடுத்தடுத்த தலைமுறையினர் பெரும்பாலும் தோல்வி ருசி அறியாது வாழப் பழக்கப் பட்டிருக்கின்றனர். சின்ன சறுக்கல், சிறு ஏமாற்றம் எதையும் அவர்களால் பொறுத்திட முடிவதில்லை. ஒரு கதவு மூடினால், நூறு கதவுகளைத் திறக்க முயற்சி மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுள் வேர் விடுவதில்லை. உரையாடலுக்கு வழியற்ற எந்திரத்தனமான சூழல் பள்ளிப் பிள்ளைகளைக் கூட காவு வாங்கிவிடுகிறது.

    மிக எளிதில் முறிந்து விழும் உள்ளங்கள் பரஸ்பரம் தங்களது சுமையை இறக்கி வைத்துக் கொள்ளக் கூட நட்பு வட்டம் உருவாக்கிக்க் கொள்வதில்லை. தங்களது ஒற்றை வழி சிந்தனை முட்டுச் சந்தில் போய் மோதிக் கொள்ளும்போது அவர்களால் நின்று நிதானித்து சிந்திக்கக் கூட முடியாத அளவு ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கிறது அவர்களது எண்ண ஓட்டங்கள். யாரையோ பழி வாங்கவோ, யாருக்கோ பாடம் கற்றுக் கொடுக்கவோ, யாரிடமிருந்தோ நிரந்தரமாக தப்பித்துச் செல்லவோ அவர்கள் தற்கொலையின் குகைக் கதவை சிரமம் எடுத்து நெம்பித் திறக்கின்றனர். மீட்சியற்ற சோர்வு மன நிலையின் வேதனை முனை அது.

    எப்படியும் தாம் மட்டும் வெற்றி பெற்று விட முடியும் என்ற போலிக் கனவுகளை நவீன தாராளமயம் உற்பத்தி செய்து தருகிறது. குறுக்கு வழி தடங்களில் வண்டியை இயக்கப் பயிற்றுவிக்கிறது. போட்டி மனப்பான்மை, வெறியூட்டும் பந்தய இலக்குகள், மாய மான் துரத்தும் வேட்கை இவற்றின் போதையில் ஆழ்ந்துவிடும் மனிதர்கள் அந்த நம்பிக்கை நூலேணியின் இழைகள் இற்று அறுந்துவிடும்போது பள்ளத்தாக்கில் போய் விழ நேருகிறது. தற்கொலை உணர்வு அவர்களது மேசையில் எப்போதும் அருந்துவதற்குத் தயார் நிலையில் மூடியைத் திறந்து வைத்திருக்கும் பானமாகக் காத்திருக்கிறது.

    தவறான உறவுகளோடு குற்ற உணர்வும் சேர்ந்தே வளர்கிறது. அதன் நீட்சி தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளில் சிக்கிவிடும்போது கொலைகளும், தற்கொலைகளுமே அதிலிருந்து வெளியேறும் ஒரே வழி என்று ஆகிவிடும் அபாயம் நேர்கிறது.

    மனித மனங்களை ஆட்டிப் படைப்பது தற்கால சமூக பொருளாதார பண்பாட்டுச் சிக்கல்கள் என்பதை ஒரு வரியில் இப்படி சொல்லி முடித்துவிட முடியாது. பெருத்த விவாதங்களுக்கான கருப் பொருள் இந்த ஒற்றை வரியில் அடங்கியிருக்கிறது. தற்கொலை புள்ளிவிவரங்கள் மிகப் பெரும் படிப்பினையாக நமது வாசலில் வந்து நிற்கின்றன. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளின் கதி, காசு உள்ளவர்க்கே இவை என்ற உயரத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், நெறியோடு வாழ விரும்புவோரும் சரி, நெறியற்ற முறையில் எப்படியாவது இலட்சியக் கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என்று துடிப்போரும் சரி தடுக்கி வீழ்ந்து விடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வது சிரம் சாத்தியமானது. கொள்கை மாற்றங்கள் நிகழாமல், வாழ்க்கையின் போக்கில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடமுடியாது.

    தளர்ந்து விடாத உள்ளங்களை ஒரு சொற்பொழிவு நிகழ்த்தி ஏற்படுத்தி விட முடியாது. ஆனால் ஊடகங்கள், அரசு நிறுவனங்கள், ஜனநாயக அமைப்புகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்கொலை எண்ணிக்கையைக் குறைக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை சிந்திக்க முடியும். தற்கொலை உணர்வுகளுக்கு எதிரான போராட்டத்தை பல நிலைகளில் நின்று நடத்த வேண்டியிருக்கிறது.

    புன்னகை தவழும் முகங்களை சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுள்ள ஒரு சமூகம் செயற்கையாகக் கூட உருவாக்க முடியாது. வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கை, கூட்டான வாழ்க்கை முறைமையில் ஈடுபாடு, பரஸ்பர கருத்து பகிர்வு, பரந்து நேசிக்கும் தோழமை உணர்வு இவற்றைப் பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் முற்போக்காளர்களது முன்னுரிமைப் பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. இசை தவழும் இதயங்கள், இசைவான சமூக சூழல், இனிமை பொங்கும் நேய உணர்வுகள் ஆகியவை பெருகும் உலகில் மரணங்கள் வலியின்றியும், இயல்பாகவும் நேரும்.

    ****************

    நன்றி : தீக்கதிர்

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 15

    குன்றக்குடி அடிகள்

    15. கற்புக்கடம் பூண்ட வாழ்க்கை

    காதற் கடமை பூண்ட வாழ்வியலிலும் அறிவியல் உண்டு. உளவியல் ஒரு சிறந்த அறிவியல். இன்று நடைபெறும் சமூகத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணம் உளவியல் அறியாமை. ஏன், வாழ்க்கையையே அறிவியலடிப்படையில் இயக்கினால் எண்ணற்ற இன்பங்கள் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்கள் பண்டே உணர்ந்து வாழ்வியலுக்கும் அகத்திணை இலக்கணம் செய்தனர்.

    காதல் மலரினும் மெல்லியது; அதன் செவ்வி உணர்ந்தார் சிலரே என்பது வள்ளுவத்தின் முடிவு. காதல் மனையறத்தில் நம்பிக்கையும் நல்லெண்ங்களும் ஊற்றுக் கண்களாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், ஒத்துழைத்தலும் இன்றியமையாக் கடமை; மனையறத்தின் இணைகள்; மாண்புகளை ஒருவருக்கொருவர் சேர்க்கும் இணைகளாகும். ஆதலால் நமது அறத்தில் மனை வாழ்க்கை, பிரிவினைக்குரியது அல்ல. இஃதோர் ஒப்பந்த அளவில் அமைந்ததும் அல்ல. இஃதொரு தியாக வேள்வி.

    “செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க்கு உரை”

    என்பது வள்ளுவம்.

    ஆதலால், காதல் மனைவாழ்க்கையின்பம் ஆன்ம இன்பம்; ஆன்ம அனுபவம். ஆதலால் கற்புக்கடம் பூண்ட பெண்ணே வாழ்க்கைக்குத் துணை நிற்க முடியும்; மற்றவர்களால் இயலாது. ஒருவர், இருவருக்குச் சேவை செய்ய இயலாது. இங்ஙனம் விரும்புதல் புலால் சுவையேயாம். இது கொடிதினும் கொடிது. இத்தகு தவறுகள் செய்யாத வாழ்க்கையையே, பேராண்மை நிறைந்தது என்றும், கற்பென்னும் திண்மை கொண்ட வாழ்க்கை என்றும் வள்ளுவம் போற்றுகிறது.

     
    ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • அன்பே அழகானது – 5

    ராஜ்ப்ரியன்

    மதியம் என்ன லஞ்ச் என சுதாவிடம் மாலாதி டீச்சர் கேட்டதும்.

    உதடு பிரியாமல் புன்னகைத்த சுதா, அப்பாவோட ப்ரண்ட் பொண்ணுக்கு கல்யாணம். அதனால காலையில எல்லாரும் அங்க போய்ட்டாங்க. அதனால லஞ்ச் கொண்டு வரல. வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வரனும் மேடம்.

    என்ன மேடம் வந்து ஓருவாரம்மாச்சி. உங்க வீட்டப்பத்தி சொல்லவேயில்ல என ப்ரியா தான் கிளறினாள்.

    நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பொண்ணு சுவாதி ஐந்து பேர் தான். அப்பாவும், அண்ணனும் பிஸ்னஸ் பண்றாங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், அண்ணி இந்தியன் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்காங்க.

    ப்ரியா தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாயிடுச்சில்ல.

    ம்.

    வீட்டுக்காரர் என மாலதி இழுக்க சுதாவின் செல்போன் அன்பென்ற மழையிலே என பாடல் பாட அதை எடுத்து பார்த்தவள் அம்மா கூப்பிடறாங்க எனச்சொல்லியபடி ஆன் செய்தாள். சொல்லும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தல லஞ்ச் ஃபெல் அடிப்பாங்க வீட்டுக்கு வர்றம்மா எனச்சொல்லிவிட்டு காலை கட் செய்யவும் லஞ்ச் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

    நானும் இன்னைக்கு வீட்டுக்கு தான் போறன் வாங்களேன் உங்கள ட்ராப் பண்றன் என்றாள் ப்ரியா.

    உங்களுக்கு எதுக்கு சிரமம்.

    இதலபோய் என்னயிருக்கு வாங்க என்றாள்.

    ப்ரியாவும், சுதாவும் பார்கிங் ஏரியாவுக்கு நடந்து செல்ல குட் ஆப்டர்னோ மேடம் என்றார் கணக்கு ஆசிரியரான ஸ்டீபன்.

    திரும்பி பார்த்த ப்ரியா வணக்கம் சார் என்றாள்.

    எங்க போறிங்க ?.

    லஞ்ச் கொண்டு வரல சார் அதனால வீட்டுக்கு போறன். அதிருக்கட்டும் சார் ஸ்கூல் திறந்தது ஒருவாரம்மாச்சி இப்பத்தான் வர்றிங்க.

    ஃபேமிலி டூர் முடிஞ்சி, சொந்த ஊர்க்கு போய்ட்டு நேத்து தான் வந்தோம்.

    ஓஹே.

    இவுங்க யார் டீச்சர் ?.

    நியூ அப்பாய்மென்ட் சார். பேரு சுதா.

    சுதா பக்கம் திரும்பி ஸ்டீபன் புன்னகைக்க சுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

    சார் டுவல்த்துக்கு மேக்ஸ் எடுக்கறாரு என ப்ரியா அறிமுகப்படுத்த சுதா ஹலோ சார் என்றாள்.

    சரி சார் டைம்மாகிடுச்சி போய்ட்டு வந்துடறோம் என்றாள் ப்ரியா. அவரும் தலையாட்டிவிட்டு தன் டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றார். ப்ரியா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வர சுதா ஏறி அமர இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். சுதா தன் வீட்டுக்கு வழிச்சொல்ல ப்ரியா வண்டியை விரட்டினாள். காந்தி நகரில் உள்ள தன் வீட்டு முன் வந்ததும் நீங்களும் வாங்க இப்படியே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம் என அழைக்க ப்ரியா மறுத்துவிட்டு ரிட்டன் நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா என கேட்டதும் சுதா உங்களுக்கு எதுக்கு சிரமம். நூன் ஸ்கூல்க்கு வந்துடறன் எனச்சொல்ல ப்ரியா கிளம்பினாள்.

    வீட்டுக்குள் நுழைந்த சுதாவை கண்டதும் அவளது அம்மா காவேரி, ஏண்டீ காலையில தோசையாவது சுட்டு சாப்பிட்டுட்டு போக வேண்டியதுதானே.

    குhலையில பசிக்கல அதனால அப்படியே போய்ட்டன் என்றபடி பாத்ரூம் சென்று திரும்பி வந்து டைனிங்டேபிள் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே கல்யாணம் எப்படிம்மா நடந்தது என கேட்டபடியே சாப்பிட்டாள். சுhப்பிட்டு முடித்ததும் ஃபேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப எப்படிடீ போற என கேட்டார் காவேரி.

    ஏதாவது ஆட்டோ புடிச்சி போய்க்கறம்மா எனச்சொல்லியபடி வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.

    அப்போது அவள் அருகே சர்ரென ஒரு டூவீலர் வந்து பிரேக் அடித்து நின்றார் ஆசியர் ஸ்டீபன். மேடம் இங்க என்ன நிக்கறிங்க ?

    பக்கத்தல தான் சார் வீடு. ஸ்கூல்க்கு போகனும் ஆட்டோவுக்காக நிக்கறன்.

    எதுக்கு ஆட்டோ நானும் ஸ்கூல் தான் போறன், எதுவும் சங்கடம்மில்லைன்னா என்னோட வாங்க.

    பரவாயில்ல சார். ஆட்டோவுலயே வந்துடறன்.

    நீங்க என்னை ஃப்ரண்டா நினைச்சி வாங்க என சொல்லியபடி ஸ்டீபன் சுதாவை பார்க்க அதை காதில் வாங்கியபடி ரோட்டில் காலியாக வந்த ஆட்டோவை சுதா பார்க்க அது அவள் அருகே வந்து நின்றது. ஸாரி சார் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என்றபடி ஆட்டோவில் அமர்ந்தபடி குழந்தை ஏசு ஸ்கூல் போங்க எனச்சொல்ல ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவையே பார்த்தபடி நின்றிருந்தார் ஸ்டீபன்.

    பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தியவள் மாலை வீட்டுக்கு கிளம்பும்போது  ப்ரியாவிடம் மதியம் ஸ்டீபன் வண்டியில் வாங்க என அழைத்தது பற்றி சுதா சொன்னாள்.

    வந்தன்னைக்கே உங்கிட்ட ஆரம்பிச்சிட்டாரா?.

    என்ன மேடம் சொல்றிங்க என சந்தேகமாகவே கேட்டாள்.

    அவர் ரொமான்ஸ் மன்னன். கூட வேலை பாக்கற டீச்சராச்சேன்னு பாக்கமாட்டாரு வழிவாரு. மேனேஜ்மென்ட் அவர் விவகாரத்த கண்டுக்கறதில்ல. சர்ச்ல அவருக்கு செல்வாக்குயிருக்கு. அரசியல் செல்வாக்கும் வச்சியிருக்காரு. அதனால அவர்க்கிட்ட ஒதுங்கியே இருக்காங்க. அவரோட மனைவியும் டீச்சர் தான் ரொம்ப நல்லவங்க. மதியம் உன்ன பாத்துட்டு நீ யாருன்னு தெரிஞ்சிக்க தான் பேச்சு கொடுத்தாரு. நீ மட்டும் அவரோட வண்டியில வந்திருந்த உன் இமேஜ் காலியாகியிருக்கும். அவர்கிட்ட ஜாக்கிரதையா இரு. உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியால தான் அவரோட வீடு இருக்கு என்றாள்.

    பாத்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்கள ட்ராப் பண்றன்னு கேட்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க. வந்த கோபத்துக்கு திட்டிட்டுயிருப்பன் வேணாம்ன்னு விட்டுட்டன்.

    அவர் விவகாரத்தல கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றவள் வாங்க உங்கள வீட்ல ட்ராப் பண்ணிடறன். சரியென சுதா தலையாட்ட ஸ்கூட்டி சுதாவின் வீட்டுக்கு சென்றது. கதவை திறந்து வரவேற்ற காவேரியிடம் இவுங்க பேர் ப்ரியா கூட வேலை பாக்கறாங்கன்னு சொன்னயில்ல இவுங்க தான் என அறிமுகப்படுத்தினாள் சுதா.

    வாம்மா என்றவர் இருங்க காபி போட்டு எடுத்து வர்றன் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுதா ப்ரியாவுக்கு வீட்டை சுற்றி காட்டினாள். காபியுடன் வந்த காவேரி, ப்ரியாவிடம் நீ எங்கம்மாயிருக்க என விசாரிக்க தொடங்கினார். எனக்கு சொந்தவூர் விழுப்புரம். இங்க கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் வீட்டுக்காரரும் ஆசிரியரா இருக்காரு. ஒரு பொண்ணு. லலிதான்னு பேரு நாமக்கல் போர்டிங் ஸ்கூல்ல எட்டாவது படிக்கறா என்றார்.

    வேலைக்கு போய் சம்பாதிக்கனும்கிற நிலமையில இவயில்ல. வேலைக்கு போகனம்ன்னு அடம்பிடிச்சதால தான் இவுங்கப்பா அனுப்பிவைக்கறாரு. இவ சந்தோஷமா இருக்கனம்ன்னு நினைக்கறோம். அவ விதி அவளை சுத்தி விட்டு வேடிக்கை பாக்குது என கண் கலங்க ப்ரியாவுக்கு புரியவில்லை என்றாளும், சுதா வாழ்க்கை மகிழ்ச்சியா இல்லை என்பதை உணர்ந்தாள். காவேரி அழுவதை கண்டதும் என்னம்மா நீ என சுதா கேட்க தன் கண்களை முந்தானியால் துடைத்தபடி நான் ஒன்னும் அழுவலடியம்மா என்ற காவேரி கிச்சன் பக்கம் நடந்தார்.

    ஏதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி, மதியம் சாப்பிட வந்த உங்கப்பா நீ சாப்பிட வந்தியான்னு கேட்டாரு. வந்து சாப்பிட்டுட்டு ஆட்டோவுல திரும்ப போய்ட்டான்னு சொன்னதும் என்னை திட்டி தீத்துட்டாரு. உனக்கு ஸ்கூட்டி வாங்க போயிருக்காரு என்ன கலர் வேணும்ன்னு உன்ன போன் பண்ணச்சொன்னாரு என காவேரி சொன்னபோது ப்ரியா ஜெர்க்காகிவிட்டாள்.

    முன் சீட்டில் பாண்டியன், ரஞ்சித் அமர்ந்திருக்க, நடு சீட்டில் நான், பிரபு, ஸ்ரீதர் அமர்ந்திருந்தோம். பின் சீட்டில் மஞ்சு, கீதா, ரேவதி அமர்ந்திருந்த குவாலிஸ் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

    ஏன் கீதா ஆஸ்பிட்டல் சேர்த்து பத்து நாளாகியிருக்கு. அத ஆபிஸ்ல யார்க்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டு கொஞ்சம் பணம் வேணும்ன்னு கேட்கற. பிரபு மட்டும் பிரச்சனை என்னன்னு சொல்லலன்னா இது தெரிஞ்சே இருக்காது. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. எதுக்கு அலையனும் என கேட்டதற்க்கு அமைதியாகவே வந்தது.

    நேத்து காலையில எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப அவுங்க தான் கீதா அம்மா பத்தி சொன்னாங்க. நான் கீதாக்கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தன் மறந்தே போய்ட்டன். அது வெறும் முப்பதாயிரம் கேட்குதுன்னு சொன்னப்ப தான் கோபம் வந்துச்சி. 2 லட்ச ரூபாய் செலவாகும்ன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். நிறைய இடத்தல பணம் கேட்டுயிருக்கு. கடைசி வரை நம்மக்கிட்ட கேட்கவேயில்ல முப்பதாயிரம் தாங்கன்னு கேட்டதும் தான் கோபம் வந்துடுச்சி அதான் திட்டிட்டன் என்றான் பிரபு.

    ஸாரி சார் என்ற கீதா அவ்ளோ பணம் என்னை நம்பி தருவீங்களான்னு சந்தேகத்தல கேட்காம விட்டுட்டன் சார் என்றாள்.

    ஐந்து வருஷமா வேலை பாக்கற. இன்னமும் கூட வேலை பாக்கறவங்கள புரிஞ்சிக்கலயே என்றதும் அமைதியாக இருந்தாள்.

    ஏதாவது வேலை பாக்கனும்மேன்னு நானும், பிரபுவும் கல்யாண பத்திரிக்கை, போஸ்டர் விளம்பரம் டிசைன் பண்ணி தர்றவங்களா பத்துக்கு பத்து அறையில ஒரு கம்ப்யூட்டர வச்சிக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிச்சோம். மாசத்தல பாதி நாள் வெட்டியா உட்கார்ந்துயிருப்போம். பாண்டியன் வந்தப்பிறகு பாண்டியனோட கைவண்ணம் தான் பெருசா வளர முடிஞ்சது. பெரிய அளவுல ஆபிஸ் திறக்கலாம்ன்னு முடிவு செய்தப்ப நானும் பிரபுவும் பணம் போட்டோம், பாண்டியனால பணம் போட முடியலன்னாலும் பாண்டியனும் பாட்னர் மாதிரி தான். பாண்டியன் மட்டுமல்ல இந்த கம்பெனியில யார் வந்து வேலைக்கு சேர்ந்து உழைச்சாலும் அவுங்களோட நல்லது கெட்டதுல எல்லாருக்கும் பங்குயிருக்கும்ன்னு சொன்னோம். அதுப்பிறகாறம் தான் நடந்துக்கிட்டு வர்றோம். இத கம்பெனியா பதிவு செய்ததால நான் எம்.டி, இவன் மேனேஜர், மஞ்சுக்கு அக்கவுண்டன்ட்ன்னு பதவியிருக்கே தவிர அதுயெல்லாம் சும்மா. என்னைப்பொருத்தவரை எல்லாரும்மே ஒன்னு தான். இன்னைக்கு எங்களை தவிர 5 பேர் இருக்கிங்க. அதுவே 70 பேர் வேலை செய்யற இடமா மாறனாலும் இப்படித்தான் நடந்துப்போம்.

    பாஸ் அப்போ நாங்களும் பாட்னர்களா பாஸ்.

    இருக்க இடம் கொடுத்தா மடத்த புடிக்கனும்ன்னு நினைக்காதடா என பாண்டியன் சவுண்ட் விட்டதும் அமைதியானான்.

    மருத்துவ செலவுக்குன்னு தர்ற பணம் கடன் தான். சம்பளத்தல புடிச்சிக்குவோம் என பிரபு சொன்னதும் என்னயிருந்தாலும் நீங்க கணக்குல சரியா இருக்கிங்க சார் என்றான் ஸ்ரீதர்.

    சும்மா தருதுன்னு வச்சிக்க நீ மாசத்துக்கு இரண்டு முறை வண்டியில இருந்து கீழ விழுந்து ஆஸ்பிட்டல் பில் கட்டுன்னுவ அதனால தான் கடிவாளம் போட்டு வச்சியிருக்காரு சார் என மஞ்சு சொன்னதும் ஈஈ என சிரித்தான்.

    டாப்பிக்கை மாத்துவோம் என நினைத்து என்ன ஸ்ரீதர் எப்போ கல்யாணம்.

    யாருக்கு பாஸ்.

    உனக்குதான்யா

    நான் குழந்தை பாஸ்.

    டேய் உனக்கு காலாகாலத்துல கல்யாணம்மாகியிருந்தா இன்னேறம் நாலு புள்ளைக்கு அப்பனாயிருப்ப. நீ குழந்தையா என பிரபு காலாய்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டோம்.

    உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் சார்.

    கேட்டதுக்கு பதில் சொல்லுடா என பாண்டியன் சொன்னதும் தங்கச்சியிருக்கு பாஸ். அதுக்கப்பறம் தான் எனக்கு என்றான்.

    உன்னாலே உன்னாலே என திடீரென கார் ஸ்பீக்கரில் பாட்டு அலறியது. என்னவென பார்த்தாள் ரஞ்சித் தான் பாட்டு போட்டுயிருந்தான்.

    எங்கடா அமைதியா வர்றானேன்னு பாத்தன். ஆரம்பிச்சிட்டியா ?.

    ஃபோர் அடிக்குதுப்பா.

    சவுண்ட் கம்பியா வச்சி கேளு.

    தலையாட்டினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை முன் நின்றிருந்தோம். கீதா அனைவரையும் வார்டுக்கு அழைத்து சென்றாள். வெளியே கீதாவின் அண்ணனும், அப்பாவும் நின்றிருந்தார்கள். எங்களைப்பார்த்து வாங்க என அழைத்தனர்.

    மஞ்சு, ரேவதி, ரஞ்சித்தை தன் அம்மா இருந்த அறைக்குள் கீதா அழைத்து சென்றாள்.

    எப்படி இருக்காங்க என கீதாவின் அப்பாவிடம் நாங்கள் கேட்டதும், உள்ள தான் இருக்கா போய் பாருங்க என்றார். அவுங்க பாத்துட்டு வரட்டும் எனச்சொல்லிவிட்டு ஆரம்பத்தலயே பாக்க வேண்டியது தானே.

    நம்ம ஊர்லயே பாத்துக்கிட்டு தான் இருந்தோம், சரியா வைத்தியம் பாக்காததால வந்த விணை சார். எல்லாம் விதி என்றார் விரக்தியான குரலில்.

    ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்கயில்ல பணம்மில்லைன்னா கீதாக்கிட்ட சொல்லி ஆபிஸ்ல கேட்க சொல்ல வேண்டியதானே என பிரபு கேட்டதும் சொந்தக்காரங்ககிட்ட கேட்டுயிருந்தன் தர்றன்னு சொன்னாங்க கடைசியல தரல அதான் என்றார் தயங்கி தயங்கி.

    இப்ப எவ்ளோ கட்டனும் என பாண்டியன் கேட்டதும் ஒரு லட்ச ரூபாய் கட்டியாச்சி. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண டேட் குறிச்சியிருக்காங்க மீதிய டிஸ்சார்ஜ் பண்ணறப்ப கட்டனா போதும்ன்னு சொன்னாங்க என்றான் கீதாவின் அண்ணன்.

    உள்ளே போனவர்கள் வெளியே வர நாங்கள் உள்ளே சென்றோம். வாங்க என கிதாவின் அம்மா அழைத்தார். கையில் வைத்திருந்த பொருட்களை பெட் அருகே வைத்துவிட்டு உடம்பு எப்படியிருக்கும்மா என ஸ்ரீதர் தான் கேட்டான்.

    நாளைக்கு ஆப்ரேஷன்னு சொல்லியிருக்காங்;க தம்பி.

    கவலைப்படற அளவுக்கு ஒன்னும்மில்ல. சுகர், பிபி அதிகமாயிருக்கும் அதனால முடியாம போயிருக்கும். நாளைக்கு சின்ன ஆப்ரேஷன் தான் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் பிரபு. பின் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.

    மஞ்சு என அழைத்ததும் அனைவரும் உள்ளே வந்தனர். தலையாட்டியதும் உள்ளே வந்த மஞ்சு தன் ஃபேக்கில் இருந்த 500 ரூபாய் கட்டுகள் இரண்டை எடுத்து கீதாவிடம் தந்தாள்.

    என்னத்துக்குங்க இவ்ளோ பணம் என கீதாவின் அம்மா பதற. ஓன்னும்மில்லம்மா மெடிக்கல் செலவுக்குண்ணு கடன் கேட்டா அதான் சார் தரச்சொன்னாரு என மஞ்சு சொன்னதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

    வெளியே வந்த நாங்கள் கீதாவின் அண்ணன், அப்பாவிடம் பணம் வேணும்ன்னா கேளுங்க தந்து விடறோம். காசுயில்லன்னு அலையாதிங்க எனச்சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

    கார் வரை வந்த கீதாவிடம் அம்மா வீட்டுக்கு அழைச்சி வந்ததுக்கப்பறம் ஆபிஸ் வந்தா போதும் கீதா எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் பாஸ் என அழைத்தான் ஸ்ரீதர்.

    ம்.

    இங்க எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் பிளாசான்னு ஏதோ இருக்காம் பாஸ். அங்க போய்ட்டு போகலாம் பாஸ்.

    அவன் பக்கம் திரும்பி அங்க எதுக்கு என கேட்டதும் ஈஈஈ என இளித்தான். பின்னால் உட்கார்ந்திருந்த ரேவதி சைட் அடிக்கவா இருக்கும் சார் எனச்சொல்ல அதெல்லாம் இல்ல சார் என பதறி மறுத்தான்.

    டிரைவர் சார். எல்.ஐ.சி பக்கம் போங்க என்றதும் அவர் சரியென தலையாட்டினார். எல்.ஐ.சி தாண்டி ஸ்பென்ஸர் வந்ததும் காரை நிறுத்தி இறங்கிக்க ஸ்ரீதர், நீங்களும் போறதாயிருந்தா போங்க என மஞ்சு, ரேவதியிடம் சொன்னதும் நீங்க பாஸ் என கேட்டவனிடம், கொஞ்சம் ஒர்க் இருக்கு போய்ட்டு வந்துடறோம். நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரமாகும் அதுவரைக்கும் ஏதாவது வாங்கறதாயிருந்தா வாங்கிக்கிட்டு வெயிட் பண்ணுங்க எனச்சொன்னதும் மூவரும் இறங்கினர். நானும் போய்ட்டு வர்றன் டாடி என்றான் ரஞ்சித்.

    கொஞ்சம் யோசித்துவிட்டு ரேவதி இவனை பாத்துக்க என பொறுப்பை ஒப்படைத்ததோடு ஏதாவது கேட்டான்னா வாங்கித்தா, ஐஸ்கிரிம் மட்டும் அதிகம் வாங்கி தராத எனச்சொல்லிவிட்டு சேட்டை பண்ணாம ஒழுங்கா அவுங்களோட இரு என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    எங்கடா போறோம் என பிரபு தான் கேட்டான்.

    டிஸ்ப்ளே பத்தி நேத்து பேசனும்மில்ல. அதான் சோனி, சாம்சங் கம்பெனியில போய் என்ன ரேட் ஆகுதுன்னு விசாரிச்சிட்டு வருவோம் என்றதும் தலையாட்டினான். இரண்டு ஷோ ரூம்களை தேடிப்பிடித்து விசாரித்துவிட்டு, மாடல்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போதே ஸ்ரீதர்க்கு போன் செய்து நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் வெளியில வந்து ஆப்போசிட்ல நில்லுங்க என்றேன். சரியாக 2.15க்கு ஸ்பென்சர் அருகே பஸ் ஸ்டாப்பில் ரேவதி, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். கார் அவர்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோதே சார் ரஞ்சித்த காணோம் என்ற பாண்டியனின் குரலை கேட்டு அதிர்ச்சியாகி பார்த்தபோது அவர்கள் அருகில் அவன் இல்லை என்பதை என் கண் உறுதி செய்ததும் ஆயிரம் மடங்கு அதிர்ந்து போனேன்.

    தொடரும்……………..

    Share
  • இவ்விடம் கல் உடைக்கப்படும்; செங்கல், ஜல்லி, மற்றும் கிட்னிக்கல்

     

    – டாக்டர் அல்கேட்ஸ்


    stock-illustration-7915155-medical-symbol-with-snakes-wings-and-skullநமது கிளினிக்கில் பிஸியான ஒரு மாலைப்பொழுது…

    நர்ஸ் 30 ஈ அடித்திருந்தார். நான் ஈ அடிப்பதா?? என் கௌரவம் என்னாவரது. அதனால் கொசு அடித்துக் கொண்டிருந்தேன். 18…….19……

    ”வணக்கம் ஐயா”

    ஐயாவா? சரி அரசியல் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியதான்.

    ”ஹிஹி வணக்கம், வணக்கம். வாங்க, வாங்க. உக்காருங்க. நீங்களும் உக்காருங்க மேடம்”. தம்பி அல்கேட்சு. ரொம்ப கொழயாத. நீ ஆளில்லாம கொசு அடிக்கிறது தெரிஞ்சிட போவுது.

    “ஐயா, என்னோட பேரு சிக்குன சடை. நீங்கள் நலமா, உங்க குடும்ப அன்பர்கள் நலமா? உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு?”ன்னார்.

    ”பரவாயில்ல சார். எனக்கு தான் அப்பப்போ லைட்டா முதுகு வலி வருது. கொஞசம் செரிமானமும் சரியில்ல”. (டேய் அல்கேட்ஸ்! நம்மளை பேக்ஷண்ட் ஆக்கிட்டு அவரு டாக்டர் ஆகப் பாக்குறாரு. சுதாரி…)

    ”க்கூம்.. என்ன ப்ராப்ளம்?”ன்னேன்.

    “ஐயா, எனக்கு பின் இடுப்புல வலி. பின்னாடிலேந்து முன்னாடி வருது”.

    வரக் கூடாதே…..”எத்தன நாளா?”

    “மூனு நாளுங்க”

    கீழ் முதுகை அழுத்தி, “இங்க வலிக்குதா?”

    “ஆஆ. ஆமாய்யா. நீங்க அழுத்தும் போது அதிகமாவுது”.

    ”ஒகே. இந்த வலி எங்கயாவது பரவுதா?”

    ”ஆமா. அப்படியே முன்னால வந்து விரை வரையும் பரவுது”. (தயவு செஞ்சு படிக்கிறத நிறுத்தாதீங்க. வல்காரிட்டி கிடையாது. இது பல பேருக்கு, உண்மையாக இருக்கும் பிரச்சினை. பேக்ஷண்ட்ஸ் அப்படித் தான் சொல்லுவாங்க. வலி அவங்கவங்களுக்கு வந்தா தானே தெரியும்).

    அப்படியா, சரி தான்.

    “ஒகே. உங்களுக்கு கிட்னில கல்லு இருக்கு”.

    அவர், வீட்டுக்காரங்களைப் பாத்து, “பாத்தியாடி. பக்கத்து வீட்டுல, இவரை சொப்ப மருத்துவர்ன்னு சொன்னாங்களே. கரெக்டா கண்டுபுடிச்சிட்டாரு பாரு” ன்னார், என்னிடம், “மிகச் சரியாக கண்டு புடிச்சிட்டீங்க மருத்துவரே”.

    “ஒ. அப்ப இது முன்னாடியே தெரியுமா?”

    “இதுக்கு முன்னாடி, 3 சிறுநீர் குழாய் மருத்துவர்களோட கருத்தும் இதே தானய்யா”

    ”3  யூராலஜிஸ்ட்டா? அப்போ இந்த ப்ராப்ளம் ரொம்ப நாளா இருக்கா?”

    “4 வருக்ஷமாக ஐயா”.

    இதுல ’ஐயா’ வேற. ஓ. அவரா இவரு??? தமிழ் சகளை!! வியாதிய புதுசா கண்டுபிடிச்சு பேர் வாங்கலாம்னா, நம்ம கரெக்டா கண்டுபிடிக்கிறோமான்னு டெஸ்டிங் பண்றாரே. இன்னிக்கு அம்பது ருவா கொடுக்குறத்துக்கு ஒரு மணி நேரம் பில்டப் போட்டு பேசப் போறார், சரி கடமைய செய்வோம்.

    “ஒகேங்க சார். நாலு வருக்ஷமா கிட்னில கல்லு. என்ன ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கீங்க?”

    “மொதல்ல, சின்ன வாளி ஊர்ல, மருத்துவர் நரிமூலத்துக்கிட்ட பாத்தேன். அவர் தான் சிறுநீரகக் கல்னு கண்டுபுடிச்சார், அவரு மாத்திரையும் தண்ணி மருந்தும் குடுத்தார். தக்காளிய வெதய நீக்குன பின்னாடி தான் சாப்பிடணும்னார்”

    “ஈஙு. நரிமூலமா? சின்ன வாளி டவுன்ல பெரிய யூராலஜிஸ்ட் ஆச்சே”.

    ”ஆமா, ஆனா அவரு மருந்து கொடுத்து சரியாவல. அப்புறம் மருத்துவர் சின்னத்தூள் கிட்ட காமிச்சேன். அவரு, 5 பாட்டில் உப்புத்தண்ணி (ஸலைன்) ஏத்தி, வேகமா ஒன்னுக்கு வர ஊசி போட்டார். முட்டிக்கிட்டு சிறுநீர் கழிச்சா கல்லு அடிச்சிக்கிட்டு வெளியேறும்னாரு, வெளியேறல. அப்புறம் மாத்திரையும், தண்ணி மருந்தும் கொடுத்தார்.”

    “கரெக்ட். ஸலைன் ட்ரீட்மெண்ட். அதான் அடுத்த ஸ்டெப். திரும்ப அவருக்கிட்ட போனீங்களா?”

    “இல்லய்யா, சரியாவலயே! அதனால மாத்திட்டேன். அப்புறம் மதிப்பிற்குறிய, மருத்துவர் வெட்டி சிலந்திய பாத்தேன்.”

    “ஈஙு. சிலந்தியா? அய்யோ, அவரு தமிழ்நாட்லயே ஃபேமஸ் யூராலஜிஸ்ட் ஆச்சே”. இவரு எதுக்கு என்க்கிட்ட வந்துருக்கார்? வீட்ல பொழுது போகலன்னு பேச வந்திருக்காரா?

    ”சிறுநீரகக் கல்லு பெருசா இருக்கு, மருந்துல கரையாது”ன்னார்.

    ”ஆமா. 5 மில்லிமீட்டர் சைஸ் கல்லு தான் மருந்தில கரையும். அதுக்கு மேல இருந்தா கரையாது”

    ”ஆமா. அதுக்கு ஒரு வைத்தியம் பண்ணனும்னார்”.

    ”என்ன வைத்தியம்?”

    அவர், வீட்டுக்காரங்கள மொறச்சார். “துணைவி வெளுத்த தேங்காய், அந்த வைத்தியத்த சொல்லு”

    அவங்க, “லித்தோட்ரிப்ஸி பண்ணனும்னு சொன்னார் சார். லித்தோட்ரிப்ஸிக்கு தமிழ் கெடயாது பாருங்க. அதான் என்னைச் சொல்ல சொன்னார்”.

    சரி தான், ஐயாவுக்கு மொழிப் பற்று முத்திப்போச்சு போல.

    அவர், ”நன்றி துணைவி. ஆனா அப்போ பணம் இல்லாததினால, முடியாதுய்யானேன். அப்புறம் மாத்திரையும் தண்ணி மருந்தும் எழுதிக் கொடுத்தார்.”

    அலுப்புடன், ”வேற என்ன சொன்னார்?”னேன்.

    “பால் சாப்பிடாதீங்க, சுண்ணாம்புச் சத்து சேந்தா கல்லு பெரிசாயிடும், அதனால தேநீரும், கொட்டை வடிநீரும் குடிக்கச் சொன்னார். அடப்போங்கையா! தமிழ் கோட்பாடுல, அதெல்லாம் அந்நியரோடது. நான் சாப்பிடுறதே பால், சோறு, காய்கறிகளின்னால சமையல், கவுச்சி, முட்டை தான். அந்நிய பொருளை தொடுறது இல்ல. நாம என்ன அவன்களுக்கு அடிமையா?”ன்னு சூடாயிட்டார்.

    ஆமா, இதெல்லாம் பேசுங்க. வைத்தியத்துக்கு மட்டும் இங்கிலீக்ஷ் டாக்டர்ட்ட வந்து, வெள்ளக்காரன் கண்டுபுடிச்ச மாத்திரையா முழுங்குங்க. அய்யோ, இன்னிக்குப் பாத்து ஆறு பேர் வந்துருக்காங்களே. முந்நூறு ருவா. சீக்கிரம் முடிடா அல்.

    ”சரி சார், ஆறு மில்லிமீட்டர் கல்லுனு பழைய ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லுது. அதுவும் கிட்னில இல்ல. யூரேட்டர்ல இருக்கு. அதாவது கிட்னிலேந்து நீர் வெளியேருற குழாய்ல சிக்கி இருக்கு. அதான் வலி பரவுது. லித்தோட்ரிப்ஸி தான் கடைசி ஆப்க்ஷன்”

    ”அப்படியா மருத்துவர் அவர்களே!”

    பேரு கெட்டாலும் பரவால்ல, இவர அடிடா அல்கேட்சு, ஏதோ கட்சி மீட்டிங் மாதிரி பேசுறாரு.

    “ஆமா சார். வேற வழியில்ல. கல்லு பெரிசாயிடிச்சி. எறங்கிடிச்சி வேற. இன்னும் எறங்குச்சுனா வலி ஜாஸ்தியாயிடும், யூரின்ல ப்ளட் கூட வரலாம்”

    “நானும் பாத்து பாத்து அலுத்துட்டேன் ஐயா. அந்த சிகிச்சை பண்ணிக்குறேன்”.

    ”ரைட்”. நான் ஃபோனை டயல் பண்ணி, நம்ம சிட்டில பெரியாளான ஈஙு.யானை முடிக்கு பேசினேன், “சார், குட் ஈவினிங் சார், நான் அல்கேட்ஸ் பேசுறேன். நம்ம வண்டிய நாளைக்கு சாயங்காலம், ஒரு ஆறரை மணிக்கு அணுப்பிடுங்க. ஆமா சார். எறங்கிடிச்சி, 6 மில்லிமீட்டர். உடைக்கணும். வண்டி சர்வீஸ் ஆயிடிச்சில்ல? ஒகே சார். அனுப்பிடுங்க”ன்னேன்.

    சிக்குன சடை பேயறஞ்ச மாதிரி ஆயிட்டார். “என்ன வண்டி சார்?”

    ”சாரா? நான், ’ஐயா’வாக்கும். நாளைக்கு ஆறரைக்கு உங்க கல்லை ஒடைக்கிறோம். கத்தியில்லாம, ரத்தமில்லாம, வலி இல்லாம. 20,000 கொண்டாந்திடுங்க”.

    பயத்துடன், “அப்படியா, சரிங்கையா”

    “தம்பி, பாத்து ரிவர்ஸ் எடு. சாக்கடைல வுட்றப் போற”ன்னு மெடிக்கல க்ஷாப் ஒனர் வண்டிய கைடு பண்ணினார்.

    நான், “மிஸ்டர் சிக்குன சடை, தமிழய்யா, இங்க வாங்க”

    அவர் நடுங்கிக் கொண்டே வந்தார். “குட் ஈவினிங் சார், என்ன பெரிய பஸ் ஒன்னு வந்திருக்கு?”

    “சார். லித்தோட்ரிப்ஸி ஒரு கோடி ருபா மிக்ஷின். எல்லாராலையும் வாங்க முடியாது. பேக்ஷண்ட்ஸ் அங்க ஒன்னு இங்கொன்னுன்னு தான் இருப்பாங்க. ஈஙு. யானை முடி, ஒரு ஐடியா பண்ணி, லோன் போட்டு, இந்த மெக்ஷினை வாங்கி, ஒரு பஸ்சுக்குள்ள அடைச்சிட்டார். இதுக்காக ஒரு பில்டிங் கட்ட வேணாம் பாருங்க. எங்க வேணுன்னாலும் எடுத்துக் கிட்டு போலாம். நம்மள மாதிரி, சிட்டிக்கு வெளியே இருக்குற இடத்துக்கும் போய் ஈஸியா கல்லு உடைக்கலாம். இது புடிக்கலைன்னா, நீங்க 15 கிலோ மீட்டர் போய், அழி ரப்பர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிடுங்க. நாலு நாள் அட்மிக்ஷன், டோட்டலா 60,000 வரும். என்ன இங்க பண்ணலாமா? இல்ல அழி ரப்பருக்கு போறீங்களா?”

    அவர் கன்வின்ஸ் ஆகி, பஸ் கிட்ட போனார்.

    “கல் ஒடைக்கிறதுல்லாம் ஏறு”. அடப்பாவி, மெக்ஷின் டெக்னீக்ஷியன், கண்டக்டர் லெவலுக்கு கூவறானே!!

    “தம்பி, எனக்கு கல்லு ஒடைக்கணும்”.

    “டிக்கட், ச்சி, டாக்டரோட சீட்டு இருக்கா?”ன்னான்.

    “இங்க பாரு, ஈஙு.அல்கேட்ஸ் சீட்டு”

    ”சரி,  உள்ள ஏறிப் படுங்க”

    உள்ளே…

    “சார். அந்த பெட்ல இருக்குற வளையத்துல இடுப்ப வச்சிப் படுங்க, அதுல போய் தலை வச்சிப்படுத்துருக்கீங்க? அப்புறம் மூளைக் கல்லு தான் உடையும். ஹாஹாஹா”

    “சரி தம்பி”

    ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக், ட்ரிங்க் டிக்டிக்டிக்

    “ஒகே சார், நீங்க போவலாம்”

    அவர் என்னிடம் வந்து, “சார், கல்ல ஒடைச்சாச்சா, எனக்கு ஒன்னும் தெரியலயியே”

    “இப்ப தெரியாது. நாளைக்கு, கல்லு பொடிப்பொடியா வெளியே வரும்”

    “எப்படி?”

    “சார், உங்களுக்கு என்ன தொண்டைலயா கல்லு? சிவலிங்கம் மாதிரி வாயிலேந்து வர… கிட்னிக் கல்லு சார். இத்தன நேரம் அது அல்ட்ரா சவுண்ட் வேவ்ல பொடியாகியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா யூரின்ல ஃபுல்லா வெளியேரும்”.

    “அப்படியா அய்யா, மிக்க நன்றி”

    ஐயா திரும்ப வந்திடிச்சா? பிரச்சினை இல்லாதப்போ இப்படி பேசுறாரு. சொந்தமா ஒரு பிரச்சினைனோனையும், கொள்கையெல்லாம் காத்துல பறந்துடுது. பிரச்சினை போன உடனே, பழய புத்தி உடனே வந்திடுதே.

    “சரி, சிஸ்டர் வெளிய இருக்காங்க. 20,000 குடுத்துட்டு கெளம்புங்க. ஆல் தி பெஸ்ட்”

    “சரி ஐயா”ன்னு போயிட்டாங்க.

    ஈஙு. யானைமுடிக் கிட்ட சொல்லி, “கிட்னிக் கல்: புதைந்திருக்கும் பொக்கிக்ஷம்” புக்க வாங்கித் தர சொல்லணும். இவ்ளோ பேக்ஷண்ட் அனுப்பி இருக்கேனே.

    “சார், சார் சார்”, அந்த டெக்னீக்ஷியன் ஒடி வந்தார்.

    “என்னயா?”

    “சார், அவருக்கு பண்ணும் போது மிக்ஷின் ரிப்பேர் ஆகி, ஃப்ரீக்குவென்ஸி ஜாஸ்தியாயிடிச்சி. சுத்தி உள்ள சில கல்லும் ஒடஞ்சிருக்கும்”.

    நான் சுத்திமுத்திப் பாத்தேன், “அடப்பாவி, என் மார்பிள் புள்ளையார் எங்கயா?”

    அவன் மேஜை மேலிருந்த மண்ணைக்காட்டி, “தோ இருக்கு சார்”ன்னான்.

    அடுத்த நாள், தமிழய்யா, சிக்குன சடை வந்திருந்தார்.

    “வாங்க, உக்காருங்க, இப்ப எப்படி இருக்கு?”

    “சார். நான் ஜெம்ஸ் அண்ட் ஜீவல்சில், ஜாதகத்தை குடுத்து, சஃபையர் மோதிரம் வாங்கினேன். இப்போ மோதிரம் இருக்கு, சஃபையரைக் காணல”.

    என்ன பண்றது, சரி சமாளிப்போம். நான், “ஐயா, சஃபையர் என்பது நம்மை பன்நெடுங்காலமாக, பரங்கியர் நம்மை அடிமைப்படுத்த உண்டாக்கிய சொல். வைர, வைடூரியம், மரகதப் பச்சை இருக்கும் போது, உமக்கு ஏனையா ஆங்கில சஃபையர் மோகம்?”ன்னு ஒரு போடு போட்டேன்.

    சட்டுனு சுதாரிச்சு, “ஆம் ஐயா. இருந்தாலும், அது விலை அதிகமாச்சே?”

    “ஐயா, நீங்கள் ’தமிழ் தமிழ்’ என கூறுகிறீர்கள், ஆனால் தங்கள் மனதின் அடியாழத்தில் ஆங்கில மனோபாவம் புதைந்திருக்கிறது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”

    ”அது வந்து, கல்லு வெல ஜாஸ்தி…..”

    “சபையர். அதாவது போட்டுக் கொள்பவரை, ’சப்பை’ யர் ஆக்கி விடுகிறது”. மேலே பாத்து, “அம்மா மாரி, என்று தான் நீ உண்மையான தமிழனுக்கு நல்வழிக் காட்டப் போகிறாயோ?”

    “அது வந்து….”னு அவர் அப்படியே போயிட்டார். நான் வேர்வையை துடைத்துக் கொண்டேன்.

    3 வருக்ஷம் கழிச்சு….

    “ஈஙு. யானைமுடி சார். ஈஙு. அல்கேட்ஸ் பேசறேன். எனக்கு கிட்னில கல்லு. 7மிமீ, ஒடைக்கணும்”.

    “அட நீங்க எவ்ளோ பேர் அனுப்பிருக்கீங்க. உங்களுக்கு ஃபீஸ் கம்மி தான்”

    “தாங்க்ஸ் சார்”

    “அக்கவுண்ட் ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ல, 43,000 ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. லாரி, ச்சீ, எக்யூப்மெண்ட் வீடு தேடி வரும்”.

    “சார், அல்மோஸ்ட் 30 பேக்ஷண்ட் அனுப்பியிருக்கேன், 43,000மா?”

    “புரியாம பேசாதீங்க அல்கேட்ஸ். விலை வாசி, டீசல் வெல ஏறிப்போச்சு. அழி ரப்பர் ஹாஸ்ப்பிட்டல் போய்ப் பாருங்க, 1,40,000 ஆகும். எப்படி வசதி?”

    “வண்டிய அனுப்புங்க சார்”

    டெக்னீக்ஷியன், “சார், ஃப்ரிக்குவென்சி கம்மியாயிடிச்சி, கல்லு ஒடஞ்சிருக்காது”

    “யோவ். கல்ல ஒடைக்கல, ஒன்ன ஜெயில்ல களி திங்க வெச்சுருவேன். சொளையா 43,000 கொடுத்திருக்கேன். ஒட மொதல்ல”

    ட்ரிங்க் டிக் ட்ரிங்க் டிக் ட்ரிங்ங்ங்ங்….. டகடும் டகடும் கொய்ங்ங்ங்…

    டகடும் கொய்ங்கா? வித்தியாசமா இருக்கு?

    “சார், உங்க வீட்டை ஒடச்சிட்டோம். ஸாரி”

    ஒருத்தர் வந்தாரு, ”வணக்கம் சார்”

    “வாங்க ஒக்காருங்க” னேன். சோகமாக, வீடு போச்சே….

    “சார், நான் முன்னாடி வைர யாவாரம் பாத்துக்கிட்டுருந்தேன். அப்புறம் ஒரு கன்ஸைன்மெண்ட்டுல தண்ணி பூந்த வைரமா அனுப்பிட்டாங்க. நொடிச்சு போச்சு. இப்ப தான் பழைய லாரி வாங்கி ஜல்லி லோடு அடிக்கிறேன்”.

    இவரு பேக்ஷண்ட் இல்லயா, “ஒகே”

    “நேத்திக்கு உங்க வீட்டு முன்னாடி ஒரு வண்டியப் பாத்தேன். ஏதோ கல்லு உடைக்கிறதுனு பேசிக்கிட்டாங்க. சார். அதான் நம்ம ஒரு பிஸினஸ் பேசலாம்னு வந்தேன். நம்மக் கிட்ட பாறை 8 டன் இருக்கு. அத 6ஙிஙி க்கு ஒடைக்க எவ்ளோ ஆகும்”

    ”ஹலோ ஒரு கல்லு உடைக்க 43,000 ருவா”

    அவரு அதிர்ச்சியாகி, “அப்படி என்ன கல்லு சார்?”

    ”கிட்னிக் கல்லு. உடம்புல கிட்னிக் கல்லு, பித்தப் பை கல்லுனு நெறய இருக்கு. இங்க பாருங்க”ன்னு என் கிட்ட இருந்த சில பித்தப் பை கல்லைக் காட்டினேன். ”நீங்களே வெச்சுக்குங்க”.

    5 வருக்ஷம் கழிச்சு,

    கிளினிக் வாசலில் ஒரு பி.எம்.டபிள்யு கார் வந்துது.

    பார்றா. நம்ம கைராசிக்கு பெரிய ஆளுங்கல்லாம் வராங்க….

    ஒருத்தர் அப்படியே பளபளன்னு வராரு. அப்படியே தகதகங்குது.

    “வணக்கம் சார், உக்காருங்க”ன்னேன்.

    “சார் என்ன தெரியலியா, நான் தான் ஜல்லி லாரி டிரைவர்”

    “யாரு……..?”

    “நீங்க அன்னிக்கு கல்லு கொடுத்தீங்கல்ல? அதக் கொண்டு போய் ஒரு சேட்டு கிட்ட காட்டினேன். அவரு இது என்னா பளபளன்னு இருக்கு. பல க்ஷேப்லையும் இருக்குன்னு பாத்தார். யானை, கூஜா, மான் கொம்பு மாதிரி. அப்புறம் கண்டு புடிச்சேன். இது முத்து மாதிரி. உடம்புக்குள்ளே இருந்துட்டு இருக்கிற முத்து. அப்புறம் எல்லா ஆஸ்பத்திரிக்கும் போயி அங்க கிட்னிக் கல்லு, பித்தப்பைக் கல்லு ஆபரேக்ஷன் நடக்கும் போது கல்லை வாங்கியாந்துடுவேன். இப்போ லண்டன்ல இருக்குற, இண்டர்நேக்ஷனல் ரேர் ஸ்டோன்ஸ் மியூசியத்துல கூட நம்ம கல்லு நாலு இருக்கு. ஸ்டோன் கலெக்ட்டர்ஸ் நல்ல ரேட்டு குடுத்து வாங்கிப்பாங்க. நம்ம ஹெட் ஆபிஸ் ஜுரிச்ல. எல்லாம் உங்கள்ட்டேந்து ஆரம்பிச்சது. புது வீடு கட்டியாச்சா? வரேன் சார்”.

     

    Share
  • நினைவுகள் !!!

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஏடெடுத்து எழுதி வைக்க

    எத்துனையோ நினைவுகளுண்டு !!!

    நினைவுகளை எல்லாம்

    வண்ண மலர்ச்சரமாக்கி

    அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில்

    இலயித்திருக்க பொழுதேது ???

     

     

    காற்றினில் கலந்து வந்து

    நாசியில் படிந்திடும் – மலரின்

    நறுமணம் போல்

    நினைவலைகளில் கலந்து வந்து

    நெஞ்சமதில் இனித்திடும்

    இனிய  இன்ப நினைவுகள் !!!

     

     

    கதிரவனின் ஒளி பட்டு

    மெல்ல விலகி   ஓடும்

    பனித்திரை என – உள்ளமதில்

    படிந்த  துன்பச் சுவடுகளை

    துடைத்தெறியும் பேரலையென

    மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!!

     

     

    மலரும்  நினைவுகளால்

    மனதினில் உருவாகுமோர்

    மகிழ்ச்சி ஊற்று !  – அது

    இதழின் ஓரத்தில்

    கொண்டு  வருமே

    அழகானதோர்  புன்னகை கீற்று !!!

     

     

    நினைவுகள் – அவை தாம்

    ஆகுமே உள்ளக் காயங்கட்கு

    நல்லதோர் அருமருந்தாய் !!

    அவையும் தான் வருடுமே

    துடித்த தவித்த உள்ளங்களை

    மென்மையான மயிலிறகாய் !!!

     

     

    Share
  • வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் …

    தேமொழி

     

    “சாந்தி…சாந்தி…இதப்பாரு கதவத் திற… சாந்தீ …”

    என்ன இந்தப்பொண்ணு இப்படி செய்யறா? என்று எண்ணிய ராஜத்திற்குச் சட்டென்று முகம் முழுவதும் சூடாகியது. தலைக்குள் வேகமாக ரத்தம் பாய்வது போன்ற உணர்ச்சி வந்தது. இன்னமும் தனது மருமகள் சாந்தி செய்த செய்கையின் தீவிரம் புரிய ஆரம்பிக்கவில்லை ராஜத்திற்கு. ஒரு உப்புப் பெறாத விவகாரத்திற்கு அந்த விவாதம் தொடங்கியது. உண்மையிலேயே அது உப்புப் பெறாத விவகாரம்தான்.

    சென்ற ஆண்டு அந்த சிறிய ஊரின் கடைத்தெருவில் ஒரு மருந்துக்கடை வைத்திருந்த கணவர் வடிவேலு இறந்த பொழுது ராஜத்திற்கு அறுபத்தியிரண்டு வயது. அவர் ராஜத்தைவிட ஐந்து வயது மூத்தவர். சொந்தத் தாய்மாமன்தான். தாயற்ற பிள்ளையாக வளர்ந்த தனது அக்காவின் மகளான ராஜத்தைக் கைபிடித்தார்.

    ராஜத்தின் பள்ளிப் படிப்பு 11ஆம் வகுப்பு வரைதான். பதினாறு வயது ஆனதும் ஊரில் நல்ல சொத்து பத்தோடு இருந்த ராஜத்தின் தந்தை அவளை தனது மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்பொழுதும் வடிவேலுவிடம் இருந்தது அந்த ஒரு மருந்துக்கடைதான். அவருக்குப் பரம்பரையாக வந்த சொத்து அது. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று இறந்த மனைவிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வடிவேலுவுக்குத் திருமணம் செய்து வைத்தாலும், அருமையாக செல்வச் செழிப்புடன் வளர்த்த தனது மகள் ராஜத்தை தன்னைப்போலவே வடிவேலுவாலும் அருமையாக வைத்துக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ராஜத்தின் அப்பாவிற்கு சிறிதும் இல்லை.

    கணவனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தனது மகளுக்கு முதல் குழந்தையாக அவரது பேரன் சந்திரன் பிறந்ததும் ஒரு நல்ல வீடாக வாங்கிக் கொடுத்தார். அதை தனது மருமகன் பேரிலும் எழுதி வைக்கவில்லை, தனது மகள் பேரிலும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு வடிவேலுவின் திறமையிலும் நம்பிக்கை இல்லை, சூட்டிகையாக இல்லை என்று அவர் கணித்திருந்த ராஜத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. கணவன் ஏதாவது சிரமம் என்று கேட்டால் யோசிக்காமல் வீட்டை விற்க அனுமதித்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை வரலாம் என்பது அவர் எண்ணம். எனவே பேரன் பிறந்த கையோடு அவனது பெயரில் ஒரு வீடு வாங்கி எழுதி வைத்தார். பேரன் பெரியவனாகும் வரை யாரும் வீட்டை ஒன்றும் செய்ய முடியாது, பிறகு வளர்ந்து அவன் அம்மாவைக் காப்பாற்றுவான் என்பது அவர் தனது மகளுக்காகச் செய்த எதிர் காலத் திட்டம்.

    ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டுதான் ராஜம் தன் மருமகள் சாந்தியைக் கதவைத் திற என்று கெஞ்சிக் கொண்டிருதார். காலையில் குளித்து முடித்து, முடியைக் கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டு, முருகா என்று கை கூப்பி முருகனுக்கும், அருகிருந்த மறைந்த கணவரின் படத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திருநீரை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு சமையலறைக்கு சாப்பிட வந்தார். நீரிழிவு நோய் வேறு படுத்துகிறது. வேளாவேளைக்குச் சாப்பிடாவிட்டால் அவருக்கு தலை சுற்றல் வந்துவிடுகிறது.

    ஒரு தட்டில் அடுப்பு மேடையில் இருந்த பாத்திரத்தில் இருந்து மூன்று இட்லிகளையும், கொஞ்சம் சட்னியையும் வைத்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தார். மருமகள் சாந்தி செய்த சமையல் அது. அவள் வாசலில் கீரையோ,காய்கறியோ வாங்கிக் கொண்டு பேரம் பேசும் சப்தம் கேட்டது. இரண்டு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன், சட்னியில் உப்பு இல்லை என்று தெரிந்து முகம் சுழித்தார்.

    பேசாமல் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. கீரையுடன் உள்ளே வந்த சாந்தியிடம், “என்ன சாந்தி இது, நீ சட்னிக்கு உப்பு போடலையே”, என்றார். ஏதோ எரிச்சலில் இருந்த சாந்தி, “ஏன் உப்பில்லாவிட்டால் உங்களால் சாப்பிடமுடியாதா?” என்று எகத்தாளமாகக் கேட்டு விட்டுத் தட்டைப் பிடுங்கி பாத்திரம் விளக்கும் இடத்தில் தூக்கிப் போட்டாள்.

    இந்த அவமரியாதையில் அதிர்ச்சி அடைந்த ராஜம் திடுக்கிட்டு, “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு… ” என்று ஆரம்பிக்கவும், இடை மறித்தாள் சாந்தி.

    “எழுந்திரிங்க சொல்றேன்,” என்று அதட்டவும் மெதுவாக, ஒன்றும் புரியாமல் எழுந்தார். “இங்க வாங்க சொல்றேன்” என்று கையைப் பிடித்துத் தர தரவென்று வாசலுக்கு இழுத்துப் போய், “போங்க வெளியே” என்றாள்.

    “யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியே போகச் சொல்றே, இது என் வீடு, எங்க அப்பா எனக்கு கொடுத்த வீடு.”

    “இல்ல, இது என் வீடு, என் வீட்டுக்காரர் பேரில் இருக்கிற வீடு, அனுசரிச்சுப் போகத் தெரியலேன்னா போங்க வெளியே,” என்று சொல்லி ராஜத்தின் கழுத்தில் கையைக் கொடுத்து வெளியில் தள்ளினாள். ராஜம் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்து, சாந்தி தள்ளியதில் நிலைத்தடுமாறி விழாமல் கம்பிக் கதவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சமாளித்தார்.

    அவர் கையைக் கம்பிக் கதவில் இருந்து விடுவித்து வெளியே தள்ளி, கம்பிக் கதவை மூடித் தாழ்ப்பாளில் ஒரு நவ்தால் பூட்டையும் போட்டு பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு சாந்தி உள்ளே சென்று விட்டாள்.

    கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற ராஜம் அழைப்பு மணியை அழுத்தினார். மின்சாரம் இல்லாததால் அது வேலை செய்யவில்லை. அவமான உணர்வுடன் கண்ணில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருடன், “சாந்தி கொஞ்சம் கதவைத் திற” என்று குரலை உயர்த்தாமல் அழைத்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். அண்டை அயலில் யார் காதிலும் விழாமல் சாந்திக்கு மட்டும் கேட்கும் வண்ணம் எப்படி அவளை அழைப்பது.

    கணவர் வடிவேலு உயிருடன் இருந்தவரை நன்றாகத்தான் ஓடியது. பெரியவன் சந்துருவிற்குப் பின், மீண்டும் ஒரு மகன் சங்கர், பிறகு ஆசை ஆசையாய் எதிர் பார்த்தது மாதிரி மகள் தேவி பிறந்தார்கள். அனைவரும் நன்கு படித்தனர். சந்துருவுக்கு  பக்கத்தில் ஐந்து ஊர் தள்ளி இருக்கும் பல்கலையில் பேராசிரியராக வேலை. திங்களன்று தொடர் வண்டி ஏறினால், அங்கேயே தங்கிவிட்டு வார இறுதிக்குத்தான் வீடு வருவான். சின்னவன் சங்கர் கணினி படித்துவிட்டு ஹைத்திராபாத்தில் வேலை, மகள் தேவிக்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை அமைந்தது.

    சந்ருவிற்கு சொந்தத்தில் வடிவேலுவின் பலநாள் நண்பர் மகள் சாந்தியையே மணம் முடித்தார்கள். சாந்தியும் தன்னைப் போன்ற தாயில்லாப் பெண் என்பதால் ராஜத்திற்கு அவள் மீது என்றும் பரிவு உண்டு. சாந்தியின் திருமணத்தில் அவளுக்குப் போடுகிறேன் என்று வாக்கு கொடுத்த நகையைப் போட முடியாமல் போனது சாந்தியின் அப்பாவிற்கு. இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகியதில் திருமணத்திற்காக கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக, அடுத்த ஆண்டிற்குள் செய்து விடுகிறேன் என்று கூறித் தனது நெடுநாள் நண்பரிடம் கூனிக் குறுகினார்.

    அதைப் பற்றி இவர்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அடிக்கு மேல் அடியாக அவருக்கு மாரடைப்பு, மருத்துவமனைச் செலவு என்று தொடங்கி சம்பந்தி ஓராண்டிற்குள் உயிரையும் விட்டு விட்டார். சாந்தி குடும்பத்தின் சொத்தினைப் பங்கு போட்டுக் கொண்ட சகோதரர்களிடம் தந்தை தனக்குத் தருவதாகச் சொன்ன நகைகளைக் கொடுத்துவிட்டு பங்கு போட்டுக் கொள்ள சொல்லப் போவதாகச் சொன்னாள் சாந்தி.

    ஆனால் வடிவேலு தடுத்துவிட்டார். உனக்கு இருக்கும் சொந்தமே உன் அண்ணன்கள்தான். அவர்களுக்கேத் தெரிந்திருக்க வேண்டும் அவர்களது கடமையைப் பற்றி. அதை அவர்கள் மதிக்காத பொழுது சொத்து கேட்டு உறவை முறிக்காதே. அவர்கள் வரப் போக உனக்கும் உறவு என ஒருவர் இருக்க வேண்டும். உறவு முக்கியம். யாரும் இனி நகையைப் பற்றியோ சொத்தைப் பற்றியோ சாந்தியிடம் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார்.

    அவரது பெருந்தன்மை நினைவுக்கு வந்து கண் கலங்கியது ராஜத்திற்கு. மருமகள் மாதிரியா வைத்திருந்தோம் அவளை என்று எண்ணியவாறு மீண்டும் வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார். ஆள் அரவமே இல்லை. எவ்வளவு நேரம்தான் வெளிப்படியில் நிற்பது. கால் வலித்தது. வாசல் படியில் அமர்ந்தார். அந்தக் காலத்து வீட்டின் வாசலில் இரு புறமும் இருந்த பெருந்திண்ணைகளை பாதுகாப்பிற்காகவும், இடத்தை உபயோகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் இரும்புக் கிராதி போட்டு அடைத்துக் கம்பிக் கதவுகள் போட்டதில் உட்காரும் இடம் பறிபோய் வாசல் படி மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது அவருக்கு இப்பொழுது.

    வெயில் ஏறியது, மணி ஒரு பத்தரை இருக்குமோ என்று எண்ணினார். காலையில் இருந்து ஒரு வாய் காப்பி கூடக் குடிக்காமல் பசி காதை அடைத்தது. கணவர் வடிவேலு இறந்தவுடன் மருந்துக் கடையை சங்கருக்கு என்று குறித்து வைத்து, அதைக் குத்தகைக்கு விட்டு அதன் வருமானம் சின்னவன் சங்கருக்கு அனுப்புவது போல் சொத்து பிரித்தார்கள். பெரியவன் சந்துருவிற்குத் தாத்தா எழுதி வைத்த வீடே இருக்கட்டும் என்று முடிவெடுத்தார்கள்.

    போன மாதம் கோடை விடுமுறைக்கு மகள் தேவி ஊருக்கு வந்த பொழுது ராஜம், தனக்குப் பரம்பரை பரம்பரையாக வந்த நகைகள் அனைத்தையும் அவளுக்குரிய சொத்தின் பங்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டார். அவள் தடுத்துப் பார்த்தாள். தனக்கு இருப்பது இரண்டும் பையன்கள்தான், வெளிநாட்டில் தனக்கும் நகைகள் போட வாய்ப்பில்லை எனவே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்துவிட்டார். தனது கடமை முடிந்தது போன்ற மகிழ்ச்சி அவருக்கு.

    அனால் இதற்குப் பிறகுதான் சாந்தியின் குணம் மாறியது. சாந்தியின் ஒரு பெண்ணும் ஒரு மகனும் வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். சாந்தி தனது மாமியாரின் நகையை தனது மகளுக்குரியதாக நினைத்திருப்பாள் போலும். நேராகவே சண்டைக்கு வந்தாள். “பசங்கள மட்டியும் வச்சிருகிறவங்க, வேணாம், வேணாம்னு சொல்றாங்க, அப்படியும் அள்ளிக் கொடுக்காட்டி என்ன? இங்க கல்யாண வயசில ஒரு பேத்தி இருக்கிறது நினைப்பு இல்லையா?” என்று எரிந்து விழுந்தாள்.

    “நீ ஏம்மா அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுறே? உனக்கு வேணும்னா உன் வீட்டுக்காரன செஞ்சி கொடுக்கச் சொல்லு. என் பரம்பரை சொத்தை என் பொண்ணுக்குக் கொடுத்தேன், அதில் உனக்கேன் கோபம்?” என்று ராஜமும் பதிலுக்குச் சண்டைக்குப் போனார். இந்தப் பிரச்சனையை வைத்து தினமும் இருவருக்குள் சண்டை வர ஆரம்பித்தது. வார இறுதியில் வீட்டிற்கு வரும் சந்துருவிற்கு இவர்களின் சண்டையைத் தீர்ப்பதற்கே சலிப்பாக இருந்தது. ஏன் வீட்டிற்கு வருகிறோம் என்று வெறுத்துப் போய் “மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” என்று அவனும் தன் பங்கிற்குக் கத்திவிட்டு மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய் உட்கார்ந்து விடுவான்.

    பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பெருந்தேவி, வெய்யிலில் படியில் உட்கார்ந்திருக்கும் ராஜத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு, “தபாலுக்காக காத்திருக்கீங்களா பெரீம்மா, தபால்காரர் மத்தியானம்தான் வருவாரு” என்று அவளாகவே ஒரு காரணமும் கற்பித்து பதிலும் வழங்கிவிட்டுப் போனாள். இதற்கு மேல் மொட்டை வெய்யிலில் வாசல் படியில் உட்கார்ந்திருந்தால் அடுத்தவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று தோன்றியது ராஜத்திற்கு.

    தெருமுனையில் இருக்கும் ராமுத்தம்பி கடைக்கு சென்று மகனை அவன் கைபேசியில் அழைக்கலாம் என்றால் தொலைபேசி எண்ணும் தெரியவில்லை. தொலைபேசியில் ப்ரோக்ராம் செய்த பட்டனை அழுத்தி அழுத்திப் பேசியதில் எண் மனப்பாடம் ஆகாமலே போய் விட்டது. நல்ல வேளை இன்று வெள்ளிக் கிழமை, மகன் வீடு வந்துவிடுவான். மாலையில் அவன் வந்ததும் அவனுடன் வீட்டிற்குள் போய் விடலாம். இனிமேல் சாந்தியுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். கொள்ளைப்புற தாழ்வாரத்தில் முடங்கிக் கொள்ளலாம். கயிற்றுக் கட்டில், கிணற்றடி, கழிவறை எல்லாம் வசதியாக இருக்கும். சொந்த வீட்டிலேயே அப்படி பின்னால் அனாதையாகக் கிடந்தால் ஊருக்கு நிலைமை தெரியும் அவமானம் இல்லை. சாந்தி ஒரு வேளை சோறு கொடுத்தாலும் குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்து விட்டு, அரை வயிற்றோடு படுத்துக் கொள்ளலாம்.

    வரட்டும், சாயுங்காலம் சந்துரு வரட்டும். இவ்வளவு நாள் இந்த வீட்டில் சாந்தி என்னை விட்டு வைத்திருந்ததே அந்த நகைக்காகத்தானா? பேரன் பெயரில் வீடு எழுதி வைத்த அப்பாவும் இப்படி நான் நடுத்தெருவில் நிற்பேன் என நினைத்திருக்க மாட்டாரே என்று எண்ணிய ராஜத்திற்குத் தன்னிரக்கத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மகன் வரட்டும், இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது அவன் வர. இப்பொழுது மணி என்ன ஒரு பன்னிரண்டு இருக்குமா?

    ராஜத்திற்கு ஒருமுறை கழிவறை சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அந்தக் காலத்தில் வீட்டின் பின்புறமாக வந்து தோட்டி சுத்தம் செய்யும் ட்ரை லட்ரீன் வைத்த பழைய வீடு. கொல்லைபுறம் நாராசாலையின் கதவு வழியாக அவர்கள் வந்து போக வழி இருக்கும். அதனால் வீட்டின் பின்புறம் போக இக்கால வீடுகள் போல பக்கத்து சந்து இல்லை. ஒவ்வொரு வீட்டுச் சுவரும் அடுத்த வீட்டின் சுவராக பங்கு போட்டு அமைந்த பழங்காலத்து வீடு. காலம் மாறி நவீன கழிவறையாக மாற்றியாகிவிட்டது, அனால் பின்புறம் உள்ள அதை அணுக வீட்டின் உள் வழியாகத்தான் செல்ல வேண்டும். இவளுக்கு இது போன்ற தேவைகள் இருக்கும் என்று சாந்திக்குத் தோணாதா? வரட்டும், சந்துரு வரட்டும் என்று மனம் கருவினார்.

    மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். உச்சி வெய்யிலில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிருந்தது . மெதுவாகத் தெருமுனைக்குச் சென்று அங்கிருந்த குட்டிச் சுவருக்குப் பின்புறம், மீண்டும் யாரும் பார்கிறார்களா என்று ஒருமுறைப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டு வந்தார். “ஐயோ என் நிலை இப்படி ஆயிடுச்சே, யார் யாரையோ பழிச்சேனே, என்ன இது ஆடு மாடு மாதிரி தெருவில் ஒதுங்கறாங்களேன்னு கேலி செய்வேனே, நானே அந்த நிலைமைக்கு வந்துட்டேனே, கடவுளே,” என்று மனதிற்குள் புலம்பினார்.

    அங்கிருந்தே வீட்டின் வாசல் படியைப் பார்த்த பொழுது அது உச்சி வெய்யிலில் காய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. சாயுங்காலம் சந்துரு வரும் வரை எங்காவது நிழலாகப் போய் உட்காரவேண்டியதுதான் என்று எண்ணியபொழுது, இரண்டு தெரு தள்ளி இருக்கும் வரசித்தி விநாயகர் கோயில் மணியின் ஒலி காற்றில் வந்தது. அங்கு போய் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்ளலாம், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வரலாம் என எண்ணிக் கோயிலை நோக்கி மெல்லத் தள்ளாடி தள்ளாடி நடந்தார். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

    கோயில் வாசலில் பிச்சை கேட்டவர்களைப் பார்த்த பொழுது விரக்தி சிரிப்பு வந்தது. நானும் இப்பொழுது உங்களைப் போலத்தான் என நினத்துக் கொண்டு உள்ளே சென்றார். யாரோ தங்கள் வேண்டுதல் நிறைவேறியதில் மகிழ்ந்து சாமிக்கு சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதாமும் படைத்துவிட்டு அனைவருக்கும் தொன்னையில் அன்னதானம் கொடுத்தார்கள். யாராயிருந்ததாலும் நல்லா இருங்கப்பு, என்று மனதில் வாழ்த்திக்கொண்டு வரிசையில் நின்று சர்க்கரைப் பொங்கலும் தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு மண்டபத்தில் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

    நீரிழிவு நோய்க்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால் என்ன ஆவது என்ற கவலை மின்னலெனத் தோன்றி, அதே வேகத்தில் வயிற்றுப் பசிக்கு முன் இப்படி யோசிப்பது தேவையில்லை என்றும் தோன்றியது. மனதில் இப்படி பிச்சைக்காரி போல தானம் வாங்கிச் சாப்பிடும் நிலைக்கு வந்தது ராஜத்தின் மனதை அறுத்தது. இதே கோயிலில் தனது பேரக் குழந்தைகளின் காதுகுத்திற்கு, கணவரின் நினைவு நாள் என்று தானும் அன்ன தானம் கொடுத்ததது நினைவு வரத் துக்கம் தொண்டையை அடைத்தது. மூச்சுவிட சிரமமாக இருந்தது. “நெஞ்சை அடைக்குதா ராஜம்,” என்ற கணவரின் பரிவான குரல் அவர் காதில் கேட்டது. கண்கள் இருண்டது. “ஆமாங்க, நெஞ்சை அடைக்குதுங்க, பாருங்க மாமா, உங்களுக்கப்புறம் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே, பிச்சைக்காரியா, அனாதையா ஆயிட்டேனே” என்று வாய் விட்டுப் புலம்பினார்.

    அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூஜை சாமான் விற்கும் கடைக்காரம்மா, “என்ன தாயீ சொல்ற, நெஞ்சடைக்குதா?” என்ற கேட்டு விட்டு அருகில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பாட்டிலில் நீர் இருப்பதைப் பார்த்து, “ஐயா, இந்தப் பெரியம்மாவுக்கு தொண்டையடைக்குதாம் கொஞ்சம் தண்ணி கொடுங்க,” என்றாள். அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி சிறுவனிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, “கண்ணா, ஓடு. பாட்டிக்கு கொஞ்சம் தண்ணி கொடுப்பா” என்று அனுப்பினார்கள். அவன் “பாட்டி இந்தாங்க” என்று ராஜத்திடம் நீட்டிய பொழுது அவருக்கு மார்பில் சுரீரென்ற வலி ஏற்பட்டு ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். நீருக்காக நீட்டிய கை துவண்டு விழுந்தது, பளீரென்று ஒரு ஒளி அவர் கண் முன் தோன்றி மறைந்தது போலிருந்தது ராஜத்திற்கு.

    “ஐயோ, பெரீம்மா இங்கன பாருங்க” என்று சுற்றி இருந்தவர்கள் அவரை உலுக்கி, பிறகு அவரை அடையாளம் கண்டு, அவரை அவரது வீட்டில் சேர்த்த பின்பு; அவர் மறைந்த செய்தி தெரிந்து அரக்கப் பரக்க ஓடி வந்த சந்துருவிடமும், அண்டை, அயலார், உறவினர்களிடம், சாந்தி சொல்லிக் கொண்டிருந்தாள்; “அத்தை மனசு சரியில்லேன்னு கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னாங்க, புண்ணியவதி, கோயில்லேயே சாமி கூட போய் சேர்ந்துட்டாங்க.”

    படம் உதவி: http://naranammalpuramwelfare.blogspot.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

    என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும்.

    சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர் கடலூரில் இருந்து இதற்காகவே வந்த டாக்டர் தி.வாசுதேவன் எனும் அரசாங்க மருத்துவர். புத்தகங்கள், அதிலும் மிகப் பழமையான ஆவணங்கள் கொண்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்து வைத்தால் பிற்காலத்தில் எத்தனை உபயோகப்படும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தகவலை எனக்குக் கொடுத்து உதவியவர், நண்பர் ரீச் சந்திரா தான்.

    டாக்டர் தி. வா.வை மின்னுலகக் குழுமத்தினர் பலர் அறிந்திருக்கலாம். இவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு பெயர்க் குழப்பத்தில் எனக்காக தன் பெயரைத் ’தியாகம்’ செய்து, ‘திவாஜி’ என இனி அழைக்கவும் எனப் பிரகடனம் செய்ததோடு அவர் பெயரையும் திவாஜி என்றே கையெழுத்தில் போட்டவர்.

    நான் முதலில் ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. திவாஜி, பழமையைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் அப்படியே கடைப்பிடிப்பவர் கூட. சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேத தர்மத்தின் அடிச்சுவட்டில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தொழில் மருத்துவமானாலும் மூன்று வேளையும் அக்னிஹோத்திரம் செய்து வருபவர். வேதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு சனாதனியின் கடமை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் கடலூரில் தக்கதொரு வேத பாடசாலை (ஸ்வாமிநாதர் வேத பாடசாலை) அமைத்தவர். இந்த வேத பாடசாலை பற்றி அறிய http://www.swaminathar.org/ என்கிற தளத்திற்குச் சென்றால் எல்லா விவரங்களும் புரியும், இவர் எளிமையும், ஸனாதான தர்மத்தில் இவருக்கு உள்ள இந்தக் கடமையின் நேர்த்தியும் புரியும்.

    பழமை என்றில்லாமல் புதுமையான தற்காலத்து கணினி தொழில்நுட்பத்தை இவர் எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மிகவும் போற்றத்தக்கது . ’தொண்டுகிழங்களுக்குக் கணினி’ எனும் இவரது வலைப்பகுதியில் எளிய வகையில் எல்லோரும் புழங்கக்கூடிய வகையிலே கணினித் திறம் பெறுவது எப்படி என்று விளக்கி வருகிறார். இவரது இந்த வலைப்பகுதியிலே http://techforelders.blogspot.in/ சென்று பார்த்தாலே இவர் எப்படியெல்லாம் ஞானம் என்பது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது புரியும்.

    திவாஜியின் இந்தச் சமூக சேவை, மிகவும் பாராட்டுக்குரியது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் இந்தக் கலியுகத்தில் இப்படியும் சிலர் தேர்ந்தெடுத்த சில நல்ல சேவைகளைச் செய்வதால்தான் நாடெங்கும் மழை தவறாமல் பெய்து வருகின்றதோ என்று நினைக்குமளவுக்குத் தொண்டு செய்து வரும் டாக்டர் திவாஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து நாங்கள் கௌரவம் தேடிக்கொள்கிறோம்.

    **** **** ****

    கடைசி பாரா: அடடா.. இத்தனைப் பூக்களும் (புக்களும்?) ஒரு வாகனத்துக்காகவா தேமொழி?

    என்ன ஒரு செக்கச் சிவப்பு
    கண்ணைக் கவரும் வாளிப்பு
    மதியை மயக்கும் வனப்பு
    அழகிய பளபளப்பு மினுமினுப்பு

    Share
  • காவியா & ஓவியா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்.

    சற்றே இடைவெளி.

    தூரிகை என்ற காரிகை  யோடு
    இணைபிரி யாமல் இழைந்த நாட்கள்.
    வண்ணங் களே என் எண்ணங் களாக
    வார்த்தைகள் இன்றி வாழ்ந்த தினங்கள்
    திடீரென் றொருதினம்,திரும்பிப் பார்த்தால்,
    கவிதைக் காதலி காத்திருந் தென்னிடம்
    கண்ணீ   ரோடு நியாயம் கேட்கிறாள்!

    “எதுகை, மோனை, சீர்,தளை, தொடை என
    எத்தனை அணிகள் பூட்டிநான் மிளிர்ந்தேன்!
    வெண்பா, விருத்தம்,, வித வித சந்தம்
    எனப்பல வடிவொடு வனப்புடன் ஒளிர்ந்தேன்!

    என்னொடு களித்த இனிய தினங்களை
    மறந்திடப் போமோ? மறுபடி எனை நீ
    மருவிட வாரா திருத்தல் தகுமோ?”

    கவிதைக் காதலி பெருக்கிய கண்ணீர்
    நெஞ்சில்  நெருப்பாய்ச் சுட்ட(து;)அதுமுதல்,
    வண்ணம், வடிவம், வரைதல் மறந்து
    கவிதாயி னியைக் கலந்து  மகிழ்ந்தேன்.
    மாதங்கள் நீண்ட காதங்க ளாயின!

    ஒருநாள் காலை உலவச் செல்கையில்,
    நீளப் பரந்த நீல வானத்தில்,
    பனித்துளி உறங்கும் பசும்புல் நுனியில்,
    மரங்கள் விரித்த மரகதப் பச்சையில்,
    பூக்கள்  சிரிக்கும் புதுவண்ணத்தில்
    ஓவியப் பெண்ணாள் ஒயிலாய் அழைக்கிறாள்!

    இத்தனை நாட்கள் இவளை மறந்து
    எப்படி இருந்தேன்?   ஈசா, இனிநான்
    ஒருநா  ளேனும்  ஓவியா இன்றி
    உறங்கிட மாட்டேன் என்றொரு துணிபுடன்
    விடுவிடு வென்று  வீடு திரும்பி
    தூரிகையா லொரு காகிதப் பரப்பில்
    கோடுகள், வளைவுகள் வண்ணங்களென்று
    ஓவிய உழவனாய், உழைக்கப் புகுந்தேன்

    எனக்குள் இருந்து ஒலித்தது ஒருகுரல்:

    ” உனக்குள் இருப்பது ஒருபராசக்தி.
    ஓருபோ தவளே ஓவிய மானாள்.
    எண்ணங்களெல்லாம் வண்ணங்களாக
    அவளே அண்டம் நிறைந்தாள்; அவள்தான்
    உன்விழியானாள்; உன்விரல் வழியே
    உருப் பெறும் ஒவ்வொரு ஓவியத்துள்ளும்
    கருக் கொண்டு யிர்த்தாள்; அவளே மறுநாள்

    கலகல வென்று  கவிதையாய்ச் சிரித்தாள்!
    சிந்தனை என்ற ஆலயத்  துள்ளே
    மொழியெனும் பீடத் தமர்வாள்; வழிபடும்
    கவிதைப் பித்தர்தம் கணகளில் சரேலென்
    நொடிப் பொழு தளவில் மின்னலாய்த் தெரிவாள்
    எழுத்தும், வார்த்தையும் கழுத்தி லணிந்து
    அறிவெனும் மகுடமும், உணர்வெனும் ஆடையும்
    புனைந்து புதுப் புதுக் காவிய மென்னும்
    வாகனம் ஏறி வலம்வந்  திடுவாள்
    அருவியின் வீழ்ச்சியாய், அழகிய ஓடையாய்
    கட்டற்    றோடும்  காட்டாறு வெள்ளமாய்
    அமைதித் தென்றலாய் , அழிக்கும் புயலாய்
    எத்தனை வடிவெடுத் தாலும் உள்ளுறும்
    அனுபவமாவதும், , வெளிப்படும் கவிதையாய்
    யுகம்பல கடந்தும், படிப்பவர் நெஞ்சில்
    பரவசத் தீயைப் பற்ற வைப்பதும்
    பரா சக்தியின் செயலே உணர்வாய்!”

    ஓவியமாவதும் காவியமாவதும்
    உள்ளுறு சக்தியென் றுணர்ந்து மகிழ்ந்தேன்!

    இணைப்பு: பேலூர்- நாட்டிய சரஸ்வதி சாந்தலா தேவி
    பார்க்க, படிக்க, ரசிக்க…
     
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 77 (24.06.13)

    மலர் சபா
    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்

    அங்ஙனம் அளந்து அறிந்ததோடு
    இசை நூலோர் வகுத்த மரபு தவறாமல்
    ஐந்தாம் நரம்பாம் இளியைக்
    குரலாய் நிறுத்தி
    ஏழு நரம்புகளிலும் வாசித்தாள்.

    உழை குரலாகவும்
    உழை தாரமாகவும்
    குரல் குரலாகவும்
    குரல் தாரமாகவும்
    அகநிலை மருதம் புறநிலை மருதம்
    அருகியல் மருதம் பெருகியல் மருதம் எனும்
    நால்வகை சாதிப் பண்களையும்
    அழகுடன் இசைத்து
    வலிவு மெலிவு சமம் எனும்
    மூவகை இயக்கத்தாலும்
    முறைபட இசைத்துப் பாடினாள்.

    அதன் பின்பு
    அதன் இனத்தைச் சார்ந்த
    திறப்பண்புகளுடன் பாடும் நேரத்தில்
    கோவலன் பிரிவதனை நினைவு கூர்ந்து
    வாடினாள்; சற்றே மயங்கினாள்.
    விளைவாய், எடுத்துப் பாடிய
    பாட்டுக்குப் புறம்பான இசை வந்து கலந்தது.
    பூங்கொடி போன்ற மாதவி மயங்கினாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 44
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://www.vimlapatil.com/vimlablog/raja-ravi-varma-rules-the-art-world-more-than-100-years-after-his-death-in-1906-at-the-age-of-58/

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 32

     

    இன்னம்பூரான்

     

    வெட்டவெளியில் கரும்புள்ளி: அப்டேட்

     

    Inline image 1

     

    இந்த எஸ்-பாண்ட் ஊழல் நமது புகழ் வாய்ந்த விஞ்ஞானிகளில் சிலரின் பொன்னாசையை அம்பலப்படுத்துகிறது. ஆமாம், சார்! காண்டிராக்டர் தங்கக்காசு தருகிறான். இவர்கள் கூறு போட்டுக்கொண்டார்கள்.

    கதை சுருக்கம்:

    இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (ரூ.2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. குற்றச்சாட்டின் தீவிரத்தின் சூடு தாங்காமல், ஃபெப்ரவரி 2011ல் அரசே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுகிறது, தாங்கொண்ணா தாமதத்திற்கு பிறகு. போனவருடம், சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து, அரசு பிரகடனம் விடுத்தது. முந்திய கட்டுரையில் எழுந்த நான்கு வினாக்களுக்கு விடை தேடுவது தொடர்கிறது. முடிந்தபாடில்லை. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இந்த வெட்டவெளிச்சத்துறையை நன்கு அறிந்திருக்கும் ஜனாப் அப்துல் கலாம் அவர்கள், பொதுநலத்தை முன்னிட்டு, கருத்துக் கூறியிருக்கிறாரா என்று தேடித்தேடிக் களைத்து விட்டேன். அவர் கருத்துக்கூறவில்லையெனின், அதுவே முதல் கேள்வியாகி விடுகிறது.

    அடுத்த கட்டம்:

    ‘சாணோ,முழமோ’ தலைக்கு மேல் நீர் மூழ்கடிக்கிறது என்றால் வாதி-பிரதிவாதிகள் மத்தியஸ்தம் நாடுவார்கள். அது ஆராய்ச்சி மணி நியாயமாகவோ,அல்லது குரங்கின் கை பூமாலையாகவோ அல்லது ருத்திராக்ஷப்பூனையின் தந்திரமாகவோ, அல்லது வேறு எது வைபோகமாகவோ அமையலாம். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் நஷ்டமடைந்த தேவாஸ் மல்டி மீடியா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் மீது மத்தியஸ்தம் கோரி, லண்டனில் உள்ள அகில உலக ‘பஞ்சாயத்திடம்’ (International Court (ICC) of Arbitration in London) முறையிட தீர்மானித்தது. அதற்கு முட்டுக்கட்டை போட விழைந்தது, வெட்டவெளித்துறை. போன மாதம் (மே 2013) இந்திய உச்ச நீதிமன்றம் தேவாஸ் மல்டி மீடியாவின் கோரிக்கைக்கு தடை யாதுமில்லை என்று தீர்ப்பளிக்க, வெட்டவெளித்துறை மருண்டது! ஏன்? இது அடுத்து வரும் கேள்வி. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க விரும்பிய வெட்டவெளித்துறை அதற்காக சட்டத்துறையை அணுகியதும், சட்டத்துறை அதை ஏற்கவில்லை என்பதும் இன்றைய செய்தி. எனினும், அது அரசு வக்கீலாகிய சொலிஸிட்டர் ஜெனெரலிடம் ஆலோசனை கேட்டிருக்கிறது. Everyone is passing on the buck.

    இப்போது கேள்விக்களுக்கு தற்காலிக பதில்:

    சில விஞ்ஞானிகளை, மாஜி தலைவர் உள்பட, புறக்கணித்து…

    அணுகுமுறை சரியாக படவில்லை. அவர்கள் தவறு செய்திருந்தால், தக்கதொரு தண்டனை/ ப்ராஸிக்யூஷன் தான் சரி. இல்லையெனில், இந்த இருண்டுங்கெட்டான் இகழ்ச்சியும் நியாயமில்லை.

    2.பிரதமரின் அலுவலகம் இதை அறியாததா?

    ஆவணங்கள் பேசட்டும். அவற்றை பொதுமன்றத்தில் வைத்தால் தான் உண்மை தெரியும்.

    3. ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஆவணங்கள் இருக்கும். அவற்றை பொதுமன்றத்தில் வைக்கவேண்டும்.

    4.இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன?

    கதை சுருக்கம் நோக்குக.

    இன்னம்பூரான்

    Image Credit: http://sd.keepcalm-o-matic.co.uk/i/keep-calm-and-pass-the-buck-3.png

    Share