வாழ்க்கை நலம் – 15

0

குன்றக்குடி அடிகள்

15. கற்புக்கடம் பூண்ட வாழ்க்கை

காதற் கடமை பூண்ட வாழ்வியலிலும் அறிவியல் உண்டு. உளவியல் ஒரு சிறந்த அறிவியல். இன்று நடைபெறும் சமூகத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணம் உளவியல் அறியாமை. ஏன், வாழ்க்கையையே அறிவியலடிப்படையில் இயக்கினால் எண்ணற்ற இன்பங்கள் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்கள் பண்டே உணர்ந்து வாழ்வியலுக்கும் அகத்திணை இலக்கணம் செய்தனர்.

காதல் மலரினும் மெல்லியது; அதன் செவ்வி உணர்ந்தார் சிலரே என்பது வள்ளுவத்தின் முடிவு. காதல் மனையறத்தில் நம்பிக்கையும் நல்லெண்ங்களும் ஊற்றுக் கண்களாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், ஒத்துழைத்தலும் இன்றியமையாக் கடமை; மனையறத்தின் இணைகள்; மாண்புகளை ஒருவருக்கொருவர் சேர்க்கும் இணைகளாகும். ஆதலால் நமது அறத்தில் மனை வாழ்க்கை, பிரிவினைக்குரியது அல்ல. இஃதோர் ஒப்பந்த அளவில் அமைந்ததும் அல்ல. இஃதொரு தியாக வேள்வி.

“செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை”

என்பது வள்ளுவம்.

ஆதலால், காதல் மனைவாழ்க்கையின்பம் ஆன்ம இன்பம்; ஆன்ம அனுபவம். ஆதலால் கற்புக்கடம் பூண்ட பெண்ணே வாழ்க்கைக்குத் துணை நிற்க முடியும்; மற்றவர்களால் இயலாது. ஒருவர், இருவருக்குச் சேவை செய்ய இயலாது. இங்ஙனம் விரும்புதல் புலால் சுவையேயாம். இது கொடிதினும் கொடிது. இத்தகு தவறுகள் செய்யாத வாழ்க்கையையே, பேராண்மை நிறைந்தது என்றும், கற்பென்னும் திண்மை கொண்ட வாழ்க்கை என்றும் வள்ளுவம் போற்றுகிறது.

 
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.