வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (17)

1

images (1)

பவள சங்கரி

அனைவரும் கற்றுணர வேண்டிய மூன்று சத்தியங்கள் : பரந்த மனம், அன்பான பேச்சு, சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச் செய்யும் மகத்தான செயல்கள்.
புத்தர்

கருணையுள்ள இதயம் கடவுள் வாழும் இல்லம்!

நல்ல எண்ணங்களே நம்முடைய நல்ல செயல்களுக்கு வித்தாகி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கச் செய்கிறது என்பது திண்ணம். அனைவரிடத்திலும், எப்பொழுதும் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது நல்லதொரு கருத்து என்றாலும், நடைமுறையில் அது முழுவதும் சாத்தியமாகுமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஆனாலும் பழகப் பழக நாளடைவில் அது சாத்தியமாகும் என்பதும் சத்தியம். தம்மைத் தாமே வலிமையாகவும், புத்திசாலியாகவும் ஆக்கிக்கொள்ளவும் மற்றும் அதிக தன்னம்பிக்கையுடனும், நெகிழ்த் திறனுடனும் நடந்து கொள்ளச் செய்யும் யதார்த்தமான பாதை இது. பச்சாதாபத்துடன் நடந்துகொள்ளும் மனோ நிலையை வளர்த்துக்கொள்ளும் போது, தம் அன்புக்குரியவர்களின் தேவைகளை உணர்ந்து தக்க சமயத்தில் உதவி செய்வதற்கும் வழிவகை செய்யும். அஞ்சி நடுங்கச் செய்யும் கடினமான நேரங்கள் மற்றும் வாழ்க்கையின் இருண்ட காலங்களையும் கூட பொறுமையுடன் எதிர்கொள்ளச் செய்யக்கூடியது ‘கருணை’ என்ற இந்த மகோன்னத குணம். மிகக் கடினமான நேரங்களில் கூட தம் சுயநலத்திற்காக மட்டுமே கண்களை மூடிக்கொண்டு கருணைக் கடலில் மூழ்கித் தெளிவதன் மூலம் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற முடியும். அதனாலேயே சக்தி வாய்ந்ததொரு ஆயுதமாக செயல்படக்கூடிய, ‘கருணை’ என்ற இந்த அற்புதமான குணத்தை வளர்த்துக் கொள்வது ஒரு வெற்றியாளருக்கு அவசியமாகிறது.

images

என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஆச்சரியப்படக்கூடிய ஒரு சம்பவம் இந்த இடத்திற்குப் பொருந்தக்கூடும். இயற்கையிலேயே கருணை எனும் அந்த தெய்வீகக் குணத்தைப் பெற்றவராயினும், யோகா, தியானம் என்ற சக்திகளின் மூலம் மேற்கொண்டு அதை உரம் போட்டு வளர்த்து தம் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பவர் சந்திரன். நகரத்தின் மையப்பகுதி என்றில்லாவிட்டாலும், பரபரப்பாக இயங்கும் ஒரு சாலையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்பவர். அதன் கீழ்பகுதியின் பின்புறம் ஒரு மூலையில் சிறிய இடத்தை மட்டும் தம் குடியிருப்பாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் அந்த நடுத்தர வயதுக்காரர். அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் கொடுக்கும் மீந்துபோன உணவுகளையும், பழைய துணிகளையும் பெற்றுக் கொண்டு தம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவர். அன்றாடம் சந்திரன் தன் பங்கிற்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். அவசரமாக வெளியே செல்லும்போது கையில் கிடைக்கும் சில்லறையைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவார். மற்றவர்கள் கொடுப்பதைப் பார்த்து தானும் ஏதோ செய்ய வேண்டுமே என்ற தனக்குள் இருக்கும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அதைத் தவறாமல் செய்து வந்து கொண்டிருந்தாலும், ஒரு நாள் திடீரெனெ ஏதோ தோன்ற சில்லறையை எடுத்து தட்டில் போட்டுவிட்டு, வீடு வாசல், சொந்த பந்தம் இல்லாமல் அனாதையாய் இருக்கும் அந்த மனிதரின்மீது ஒரு பச்சாதாபம் மேலிட, அவருடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து நட்புடன் ஒரு பார்வையை வீசினார். சற்றே தடுமாறிய அந்த மனிதரும் திரும்பி பார்க்கத்தான் செய்தார். அந்த இடத்தில்தான் கருணையின் வாசல் திறந்தது!.

நாட்கள் வாரங்கள், மாதங்களாயின. அந்த ஆதரவற்ற மனிதரைப் பார்த்து ஆரம்பத்தில் புன்னகைக்க ஆரம்பித்த சந்திரன், மெல்ல மெல்ல ‘நலமா’ என்ற ஓரிரு வார்த்தைகள் பேச முற்பட்டார். மாலையில் திரும்பும் போது ‘இன்று பொழுது நன்றாகப் போனதா’ என்று அன்பாக கேட்கும் வழக்கமும் கொண்டார். வெகு விரைவில் சந்திரனின் கருணையுள்ளம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது, அந்த மனிதரின் மாற்றத்தில் தெரிந்தது. சுய பச்சாதாபம், சங்கோஜம் போன்ற கூட்டிலிருந்து மெல்ல வெளிவந்து சந்திரனைப் பார்த்து பதில் சொல்லவும் துணிந்தார். அவருடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த மாற்றங்கள் அவருடைய தன்னம்பிக்கையை உணர்த்தின. சந்திரனுக்கும் இது உற்சாகத்தை அளிக்க இதுவே வழமையாகி விட்டது. நல்ல நட்புணர்வும் தெரிந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த மனிதரைக் காணாமல் சந்திரனுக்கு பெரும் கவலையாகிவிட்டது. வாழ்க்கை ஓட்டத்தில் வெகு விரைவில் அந்த மனிதரைப் பற்றிய நினைவும் மறைந்து விட்டது.

ஒரு நாள் சந்திரன் தன் பணி முடிந்து வீடு திரும்பும்போது அந்த மெத்தைப்படி அருகில் யாரோ ஒரு புதிய மனிதர், தன் இரு கரங்களையும் கூப்பி வணங்கி, ‘சார், நலமா’ என்று விசாரிக்கவும், எங்கேயோ பார்த்த முகமாக இருந்தாலும், யார் என்று சட்டென்று நினைவிற்கு வராமல் யோசித்தது, சுருங்கி, விரியும் நெற்றியின் மூலம் புரிந்தது. அந்த மனிதரும், வெகு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“சார், என்னைத் தெரியவில்லையா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஆதரவற்ற நிலையில், அடுத்தவரின் உதவியை நாடி காத்துக்கிடந்தபோது அன்பையும், நட்பையும் விதைத்து எனக்குள் தன்னம்பிக்கையை வளரச் செய்தீர்களே. அதுவரை ஒரு சடமாகக் கிடந்திருக்கிறேன் நான். நமக்கும் மரியாதை கொடுக்கவும், அன்பைக் காட்டவும் ஒருவர் இருக்கிறாரே என்ற எண்ணம் எனக்குள்ளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. என் சுயமரியாதையை தட்டி எழுப்பியது. மெல்ல என் அடிமைக் கூட்டிலிருந்தும் வெளிவர முடிந்தது. ஒரு கூலி வேலைத் தேடி முதலில் நல்ல உடை வாங்கினேன். பின் இன்னும் சற்று நல்ல வேலை தேடிக்கொண்டு, ஒரு சிறிய குடியிருப்பில் வாடகைக்கு இடம் வாங்கி தங்கியிருக்கிறேன். உங்களுடைய கருணையும், அன்பும், என்னையும் ஒரு மனிதனாக மதிக்கத் தோன்றிய எண்ணமும்தான் என் வாழ்க்கையையே மாற்றியமைத்துவிட்டது! என்மீதே எனக்கு ஒரு மரியாதை வந்ததற்கு காரணம் நீங்கள்தான். அதற்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன் என்று தன் கைகளை நீட்டினார். தன் கண்களைச் சந்திக்கவே தயங்கிக் கொண்டிருந்த மனிதர் இன்று கை குலுக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் வளர்ந்திருப்பது சந்திரனுக்கும் மன நிறைவைக் கொடுத்தது. இந்த மன நிறைவு சந்திரனின் அன்றைய பொழுதின் பணிகளை எளிதாகவும், மிகச் சிறப்பாகவும் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்தது. உள் மனதில் ஒரு இனிமை சூழ்ந்திருந்ததால் உற்சாகம் பல நாட்களுக்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

அன்னை தெரெசாவை நினைவு கூர்ந்தால் இந்த உண்மைக்கான ஆதாரம் தெளிவாகும். அவருடைய அமைதியான தன்னம்பிக்கை மட்டுமே அவரைத் தயக்கமில்லாத மற்றும் மனிதாபிமானமுள்ள தன்னலமற்ற சேவைகளுக்கு வழிநடத்தியது. உருவில் மிக எளிமையான, தோற்றம் கொண்டிருந்தாலும், மிகப் பரந்த மனப்பான்மையும், அபரிமிதமான மன உறுதியும் அவரை மிகப் பிரம்மாண்டமாகக் காணச் செய்தது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதில் தம் இறுதிக் காலம் வரையில் துளியும் களைப்படையவில்லை அந்த அம்மையார். உண்மையான கருணையும், அன்பும் கொண்டால் களைப்பற்ற உற்சாகமான செயல்பாடுகளுக்கு உத்திரவாதம் உண்டு என்பதற்கு அன்னை தெரெசாவே முன் உதாரணம். கருணையைப் பொழிவதற்கு அதிக உழைப்போ அல்லது பெரிய முயற்சியோ தேவையில்லை. உண்மையான அன்பு மட்டுமே போதுமானது. அன்னை தெரெசாவின் பொன் மொழியான,

“நம்மால் இந்த பூமியின் மீது பெரிய செயல்களையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறிய செயல்களை மட்டுமே செய்ய முடியும்” என்பதன் மூலம், இந்த சிறிய செயல்களே வாழ்க்கையின் பெரிய சாதனைகளை எதிர் கொள்வதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வழி என்பதை விளங்கச் செய்கிறது.

மீண்டும் சந்திப்போம்

படங்களுக்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://updateyourself.info/wp-content/uploads/2013/03/inspirational-words.jpg&imgrefurl=http://updateyourself.info/2013/04/inspirational-sunday-3-no-excuse/&h=960&w=1280&sz=116&tbnid=7tN9VCxvgbU_XM:&tbnh=95&tbnw=127&zoom=1&usg=__-w0LJLkrJbEn57B_VjDRHTfQcqU=&docid=Y3NgC37Es1nP5M&sa=X&ei=Jb7KUavTCIWNkAX4uID4BQ&ved=0CDUQ9QEwAg&dur=830

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (17)

  1. கருணையுள்ள இதயங்கள் ஏற்படுத்தும் பிரமிக்கத்தக்க மாற்றங்களை அற்புதமாக எடுத்துக் காட்டும் உண்மைச் சம்பவ பகிர்விற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எவ்வித செலவுமின்றி, சுற்றியிருப்போர் உள்ளத்தில் நம் புன்னகை ஒன்றினால் நல்ல மாற்றங்களை விதைக்க முடிவதும்  அது நம் வாழ்விலும் பொன்னான மாற்றங்களை ஏற்படுத்துவதும் நிஜம் தான். அருமையான கட்டுரைத் தொடர். தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *