இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (63)

சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.250px-HoeGrain
இனியதோர் வாரத்திலே இகத்தின் நிகழ்வுகள் எழுதிடும் செய்திகளின் ஆழத்தின் அகழ்வுகளின் அடிப்படையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணமிது.

மனித வாழ்க்கையின் அடிப்படையே கருணையின் அடித்தளத்தில் தான் எழுப்பப்படுகிறது. அன்பு வாழ்க்கையின் ஆரம்பம் , ஆதாரம், முடிவு என்று எமது வாழ்க்கையின் அனைத்தையும் நிர்ணயிக்கும் காரணியாகிறது.

அன்பு இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்றதாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் காட்டும் அன்பு, சகோதரர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் பாசம், காதலர்களின் இதயத்தின் கனிவு , கணவன், மனைவியரிடையே கட்டி எழுப்பப்படும் அன்பு, அயலவர்களின் மீது காட்டும் பரிவு என அன்பு எடுக்கும் வடிவங்கள் ஆயிரம்.

ஆனால் அதே மனித வாழ்க்கையில் தான் கொலைகாரர்களும் அடுத்தவருடைய வாழ்வைப் பறிக்கும் பாதகச் செயலின் காரணகார்த்தாக்களாகிறார்கள்.

அதே அன்பு விளையும் மனதில்தான் கொலைவெறியும் 400px-Moors_murders_mapஎழுகிறது இவற்றில் சிலவற்றிற்கு நியாயமான காரணங்கள் எனச் சிலவற்றைக் காட்டினாலும் பல அகோரமாக அடுத்தவரின் வாழ்வை அரைகுறையாக முடிக்கும் அசுரத்தனத்திற்கு எடுத்துக் காட்டாகிறது.

என்னடா? எதை நோக்கி இவனது இந்த வார மடலின் ஆரம்பம் அழைத்துச் செல்கிறது என்ற உங்களது ஆர்வத்துடனான கேள்வி எனக்குப் புரிகிறது.

இங்கிலாந்து ஊடகங்களில் மிகவும் பிரபலமாக அடிபட்ட ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இவ்வாரம்பம்.

தற்போது “கிரேட்டர் மான்செஸ்டர்” (Greater Manchester) என்றழைக்கப்படும் இங்கிலாந்திலுள்ள பகுதியில் 1963ம் ஆண்டு யூலை மாதத்திற்கும் 1965ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 27 வயதே நிரம்பிய இளைஞன் “இயன் பிராடி ( Ian Brady ) ” என்பவனும் , 23 வயதே நிரம்பிய யுவதி ” மைய்ரா ஹென்லி (Myra Hindley ) என்பவளும் சேர்ந்து நிகழ்த்திய ஜந்து சிறுவர்களின் கொலை ” த மோர்ஸ் மேடர்ஸ் (Moors murders ) என்று மிகவும் பிரபலம் பெற்றது.

இவ்விருவரும் இணைந்து 10 வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 5 இளம் உயிர்களை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்திக் கொலை செய்து இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள ” மோர்ஸ் ( Moors ) என்றழைக்கப்டும் பகுதியில் புதைத்திருந்தார்கள்.

இவர்களது இந்த அகோரத்தனமான , மிலேச்சத்தனமான நடவடிக்கை அப்போதைய இங்கிலாந்து தேசத்தை மட்டுமல்ல உலகெங்குமே அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. மனிதர்கள் மனதில் இத்தகைய வெறி உருவாவது சாத்தியமா ? எனும் கேள்வி அனைத்து மனிதாபிமானமிக்க நெஞ்சங்களையும் உலுக்கி விட்டிருந்தது.

இவர்கள் இருவரது குழந்தைப்பிராய வாழ்வில் இடம்பெற்ற வன்முறை மிக்க வளர்ப்பின் காரணத்தினால் மனம் மிருக உணர்வுகளை உள்ளடக்கி வைத்திருந்து அதன் வெளிப்பாடகவே இவர்களது இந்நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன என்பதே மனோதத்துவ நிபுணர்களின் விளக்கமாகவிருந்தன.

எத்தகைய வடிவங்களில் இந்நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தாலும் இளம் உயிர்களின் வாழ்க்கையைப் பறித்து அவர்களின் குடும்பத்தினரைத் மீளமுடியாத் துன்பச் சேற்றினுள் புதைத்த இவர்களை மிருகங்கள் என்று விவரிப்பதே சரியான விளக்கம் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாக இருந்தது.

இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தில் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தான் செய்த கொடூரத்தை உணர்ந்து திருந்தி விட்டதாகக் கூறிப் பல வருடங்களின் பின்னர் பலமுறை “மைரா ஹென்லி” நீதின்றத்தில் தன்னை விடுவிக்கும்படி விண்ணப்பித்தும் அவையனை250px-David_and_maureen_smith_nee_hindleyத்தும் நிராகரிக்கப்பட்டன.

அப்பெண்ணின் வாழ்க்கை 60வது வயதில் 2002ம் ஆண்டு சிறையிலேயே நிறைவுற்றது. அம்மனிதன் சிறையிலேயே ” சித்த சுவாதீனமற்றவன் ” என்று தீர்மானிக்கப்பட்டு மனோநிலை பாதிக்கப்பட்ட கைதிகளைப் பாதுகாக்கும் “ஆஷ்வேர்டு வைத்தியசாலையில்” அனுமதிக்கப்பட்டிருந்தான்.

சில வருடங்களுக்கு முன்னால் தான் உணவு உட்கொள்ளாமல் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்த அம்மனிதனுக்கு வலுக்கட்டாய உணவு கொடுத்துச் சிறையில் இங்கிலாந்து அரசாங்கம் உயிருடன் வைத்திருக்கிறது.

தான் உண்மையிலேயே மனோநிலை அற்றவனில்லை என்றும் தன்னை வைத்தியசாலைச் சிறையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்றும் படியும் கோரி அவன் செய்திருந்த மனு விசாரணைக்கு கடந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் இம்மிருக உணர்வுகளையுடைய இம்மனிதனுக்கு வழங்கப்பட வேண்டுமா? தமது குடும்ப அங்கத்தினர்களை இழந்த மனிதர்களுக்கு மீண்டும் இவன் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவுபடுத்த வேண்டுமா? எனும் வாதமே ஊடகங்களில் கடந்த வாரம் பிரபல்யமடைந்தது.

அவனது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவனுக்கு நீதிமன்றத்தில் பேசும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அவ்விதமான ஒரு சந்தர்ப்பம் அவனுக்கு அளிக்கப்பட வேண்டுமா? என்பதே பலரது வாதமாகும்.

மற்றவரின் வாழ்க்கையைப் பறித்து அவர்களின் வாழ்வுரிமையைப் பறித்த ஒருவருக்கு மனிதர்களின் அடிப்படை சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா? என்பது ஒரு சாராரின் வாதம்.

எது எப்படி இருப்பினும் குற்றம் புரிந்தவராயினும் அவருக்கு அடிப்படை உரிமைகளை மறுப்பது எம்மையும் அவர்களது தரத்திற்கு இழுத்துச் செல்லாதா? என்பது மறுபுறம் உள்ளவர்களின் வாதம்.

இப்படிப்பட்ட வாதத்தில் எது சரியானது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எமக்கு உள்ளதா?

அடுத்த மடலில் சந்திக்கும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
27.06.2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *