-பார்வதி இராமச்சந்திரன்

 

 

பெண்ணென்றால் கேவலமோ?

பெரும் பாவம் செய்தோமோ!!

மண்ணிலே பிறவியெல்லாம்

பெண்ணின்றிப் பிறந்திடுமோ?

 

நல்லதொரு சுமை தூக்கி

நாலெட்டு நடக்கு முன்னே

இறக்கி வைக்க இடம் தேடி

இங்குமங்கும் அலைகின்றீர்!!

.

பத்து மாதம் கருச்சுமந்து

படும் பாடு நீர் அறிந்தால்

பாரினிலே பெண்பிறவி

பெருமையென்றே பேசிடுவீர்!!

 

சூலறிந்த நாள் தொடங்கி

சுகமான சுமையென்றெண்ணி

தன்னுள்ளே உயிர் வளர்க்கும்

தியாக வேள்விக்கு ஈடுண்டோ?

 

முதல் மூன்று மாதம் வரை

தலை சுற்றும், வயிறு குமட்டும்.

குழம்பு கொதிக்கும் வாசமென்றாலும்.

குடம் குடமாய் வாந்தி வரும்.

 

புரண்டு படுக்க இயலாது.

பூப் போல நடக்க வேண்டும்.

பூமியின் பொறுமை எல்லாம்

பொன்னுடலில் வர வேண்டும்.

 

ஐந்து மாதம்  நிறைந்து விட்டால்

அணையாத‌ பசித்தீ வாட்டும்

எத்தனை முறை உண்டாலும்

இன்னமும் வயிறு கேட்கும்.

 

ஆறு மாதம்  ஆன பின்னே

அயர்ந்து அமரச் சொல்லும்.

அடி வயிற்றில் குழந்தை முட்டும்

ஆழ்ந்த தூக்கம் தொலைந்து போகும்.

 

நாலிரண்டு மாதத்திலே

நாலெட்டு நடந்தால் திணறும்.

நீர் கோர்த்து கால் வீங்கும்

நிலவு முகம் பூசணியாகும்.

 

ஒன்பதாம் மாதம் வந்தால்

உள்ளங்கால் நரம்பு சுண்டும்.

ஓரெட்டு நடக்கும் முன்னே

உடலிலே அயர்ச்சி பொங்கும்.

 

ஐயிரண்டு மாதத்திலே

அங்கமெல்லாம் வலி பொறுத்து

ஆருயிரின் ஓருறவை

அகம் மகிழத் தருகின்றோம்.

 

ஆயினும் பெண்ணென்றால்

ஆயிரம் வசையொலிகள்.

அன்பு தரும் உயிரில்லை.

அரங்கேறும் கேவலங்கள்.

 

அம்மாவும் பெண் தானே!!!

அருமை மகள் பெண் தானே!!!

அன்பு தந்து வாழ்விக்கும்

அருந்துணைவி பெண் தானே!!

 

பெண்களைத் தொழுது நிதம்

பெருங்கோயில் கட்ட வேண்டாம்

மண்ணிலே வாழ வந்தோம்

வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பெண்ணென்றால் கேவலமோ?…….

  1. ஒரு உயிர் கொடுக்க பெண் படும் பாட்டையும், அதை மறந்து பெண்ணுக்கு தரும் தொல்லையும், துயரமும் பட்டணம் முதல் பட்டிக்காடு வரை சமமாகவே உள்ளது. பாரதி பாடினான் அவனுக்கும் நூற்றாண்டு முடிந்து விட்டது. ஆனால் அவன் விரும்பியது கிடைத்ததா என்றால் இல்லை.

    பெண்ணுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு பயந்து வாலாட்டி நாயாக வாழ்வது குற்றம். அப்படி வாலாட்டும் செயல்களிடம் நாகமாக மாறாமல் இருப்பதும் குற்றம். நல்ல கவிதை. பாராட்டுகள்.

  2. நல்ல கவிதை பார்வதி…
    கேட்பது என்னவோ நீங்கள் சொல்வது போல,

    “பெண்களைத் தொழுது நிதம்
    பெருங்கோயில் கட்ட வேண்டாம்
    மண்ணிலே வாழ வந்தோம்
    வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.”

    இதற்கே எத்தனை பாடு பட வேண்டியிருக்கிறது காலம் காலமாய், தலைமுறை தலைமுறையாய்.
    பெண்கள் மனித குலத்திற்கு ஆற்றும் பங்கைக் காட்டி நியாயத்தைக் கேட்டுள்ளீர்கள், நன்று, நன்றி. 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  3. “பெண்களைத் தொழுது நிதம்

    பெருங்கோயில் கட்ட வேண்டாம்

    மண்ணிலே வாழ வந்தோம்

    வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.”

    அழகான வரிகள்.
    ஆனால், இவை நடக்கும் நாளும் தான் எந்நாளோ???

  4. @ தனுசு,
    தங்கள் அருமையான கருத்துரைக்கும் பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தாங்கள் கூறியது போல், பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்காமல் இருப்பதும் குற்றம் தான். மிக்க நன்றி சகோதரரே!!!

    @தேமொழி.
    /////இதற்கே எத்தனை பாடு பட வேண்டியிருக்கிறது காலம் காலமாய், தலைமுறை தலைமுறையாய்.//////

    ஆமாம். ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’ என்ற பாரதியின் பாடலை நாம் எத்தனை காலம் தான் பாடிச் சலிப்பது என்று தெரியவில்லை. நடைபாதையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கண்டால் பாய்ந்து எடுப்பது போல், ஒரு பெண் தனியாக நடந்து போவதைக் கண்டாலும் ஏற்படுவது கொடூரத்தின் உச்சம். என்று விடியுமோ நம் இரவுகள்?!! 

    தங்கள் ஆழ்ந்த வாசிப்பிற்கும் அருமையான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தேமொழி.

    @ தமிழ் முகில் நீலமேகம்,

    ////அழகான வரிகள்.
    ஆனால், இவை நடக்கும் நாளும் தான் எந்நாளோ???////

    ஒட்டு மொத்தப் பெண்களின் ஏக்கமும் ஒன்றாகவே இருக்கிறது. தங்கள் அழகான கருத்துரைக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

  5. பெண்ணின் பெருமையை, அருமையை அழகிய வரிகளில் வடித்தெடுத்திருக்கிறீர்கள்.
    ”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று முழங்கினார் கவிமணி; ஆனால் இன்றும் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் (வன்)கொடுமைகள் குறைந்தபாடில்லை. ஒட்டுமொத்தப் பெண்கள் சமுதாயத்தின் உரிமைக் குரலாகவே தங்கள் கவிதை தோற்றமளிக்கிறது. பாராட்டுக்கள் பார்வதி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.