வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் …

10

தேமொழி

 

“சாந்தி…சாந்தி…இதப்பாரு கதவத் திற… சாந்தீ …”

என்ன இந்தப்பொண்ணு இப்படி செய்யறா? என்று எண்ணிய ராஜத்திற்குச் சட்டென்று முகம் முழுவதும் சூடாகியது. தலைக்குள் வேகமாக ரத்தம் பாய்வது போன்ற உணர்ச்சி வந்தது. இன்னமும் தனது மருமகள் சாந்தி செய்த செய்கையின் தீவிரம் புரிய ஆரம்பிக்கவில்லை ராஜத்திற்கு. ஒரு உப்புப் பெறாத விவகாரத்திற்கு அந்த விவாதம் தொடங்கியது. உண்மையிலேயே அது உப்புப் பெறாத விவகாரம்தான்.

சென்ற ஆண்டு அந்த சிறிய ஊரின் கடைத்தெருவில் ஒரு மருந்துக்கடை வைத்திருந்த கணவர் வடிவேலு இறந்த பொழுது ராஜத்திற்கு அறுபத்தியிரண்டு வயது. அவர் ராஜத்தைவிட ஐந்து வயது மூத்தவர். சொந்தத் தாய்மாமன்தான். தாயற்ற பிள்ளையாக வளர்ந்த தனது அக்காவின் மகளான ராஜத்தைக் கைபிடித்தார்.

ராஜத்தின் பள்ளிப் படிப்பு 11ஆம் வகுப்பு வரைதான். பதினாறு வயது ஆனதும் ஊரில் நல்ல சொத்து பத்தோடு இருந்த ராஜத்தின் தந்தை அவளை தனது மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்பொழுதும் வடிவேலுவிடம் இருந்தது அந்த ஒரு மருந்துக்கடைதான். அவருக்குப் பரம்பரையாக வந்த சொத்து அது. சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று இறந்த மனைவிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வடிவேலுவுக்குத் திருமணம் செய்து வைத்தாலும், அருமையாக செல்வச் செழிப்புடன் வளர்த்த தனது மகள் ராஜத்தை தன்னைப்போலவே வடிவேலுவாலும் அருமையாக வைத்துக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ராஜத்தின் அப்பாவிற்கு சிறிதும் இல்லை.

கணவனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த தனது மகளுக்கு முதல் குழந்தையாக அவரது பேரன் சந்திரன் பிறந்ததும் ஒரு நல்ல வீடாக வாங்கிக் கொடுத்தார். அதை தனது மருமகன் பேரிலும் எழுதி வைக்கவில்லை, தனது மகள் பேரிலும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு வடிவேலுவின் திறமையிலும் நம்பிக்கை இல்லை, சூட்டிகையாக இல்லை என்று அவர் கணித்திருந்த ராஜத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. கணவன் ஏதாவது சிரமம் என்று கேட்டால் யோசிக்காமல் வீட்டை விற்க அனுமதித்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை வரலாம் என்பது அவர் எண்ணம். எனவே பேரன் பிறந்த கையோடு அவனது பெயரில் ஒரு வீடு வாங்கி எழுதி வைத்தார். பேரன் பெரியவனாகும் வரை யாரும் வீட்டை ஒன்றும் செய்ய முடியாது, பிறகு வளர்ந்து அவன் அம்மாவைக் காப்பாற்றுவான் என்பது அவர் தனது மகளுக்காகச் செய்த எதிர் காலத் திட்டம்.

ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டுதான் ராஜம் தன் மருமகள் சாந்தியைக் கதவைத் திற என்று கெஞ்சிக் கொண்டிருதார். காலையில் குளித்து முடித்து, முடியைக் கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டு, முருகா என்று கை கூப்பி முருகனுக்கும், அருகிருந்த மறைந்த கணவரின் படத்திற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திருநீரை அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டு சமையலறைக்கு சாப்பிட வந்தார். நீரிழிவு நோய் வேறு படுத்துகிறது. வேளாவேளைக்குச் சாப்பிடாவிட்டால் அவருக்கு தலை சுற்றல் வந்துவிடுகிறது.

ஒரு தட்டில் அடுப்பு மேடையில் இருந்த பாத்திரத்தில் இருந்து மூன்று இட்லிகளையும், கொஞ்சம் சட்னியையும் வைத்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தார். மருமகள் சாந்தி செய்த சமையல் அது. அவள் வாசலில் கீரையோ,காய்கறியோ வாங்கிக் கொண்டு பேரம் பேசும் சப்தம் கேட்டது. இரண்டு விள்ளல் எடுத்து வாயில் போட்டவுடன், சட்னியில் உப்பு இல்லை என்று தெரிந்து முகம் சுழித்தார்.

பேசாமல் சாப்பிட்டிருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. கீரையுடன் உள்ளே வந்த சாந்தியிடம், “என்ன சாந்தி இது, நீ சட்னிக்கு உப்பு போடலையே”, என்றார். ஏதோ எரிச்சலில் இருந்த சாந்தி, “ஏன் உப்பில்லாவிட்டால் உங்களால் சாப்பிடமுடியாதா?” என்று எகத்தாளமாகக் கேட்டு விட்டுத் தட்டைப் பிடுங்கி பாத்திரம் விளக்கும் இடத்தில் தூக்கிப் போட்டாள்.

இந்த அவமரியாதையில் அதிர்ச்சி அடைந்த ராஜம் திடுக்கிட்டு, “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு… ” என்று ஆரம்பிக்கவும், இடை மறித்தாள் சாந்தி.

“எழுந்திரிங்க சொல்றேன்,” என்று அதட்டவும் மெதுவாக, ஒன்றும் புரியாமல் எழுந்தார். “இங்க வாங்க சொல்றேன்” என்று கையைப் பிடித்துத் தர தரவென்று வாசலுக்கு இழுத்துப் போய், “போங்க வெளியே” என்றாள்.

“யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியே போகச் சொல்றே, இது என் வீடு, எங்க அப்பா எனக்கு கொடுத்த வீடு.”

“இல்ல, இது என் வீடு, என் வீட்டுக்காரர் பேரில் இருக்கிற வீடு, அனுசரிச்சுப் போகத் தெரியலேன்னா போங்க வெளியே,” என்று சொல்லி ராஜத்தின் கழுத்தில் கையைக் கொடுத்து வெளியில் தள்ளினாள். ராஜம் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்து, சாந்தி தள்ளியதில் நிலைத்தடுமாறி விழாமல் கம்பிக் கதவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சமாளித்தார்.

அவர் கையைக் கம்பிக் கதவில் இருந்து விடுவித்து வெளியே தள்ளி, கம்பிக் கதவை மூடித் தாழ்ப்பாளில் ஒரு நவ்தால் பூட்டையும் போட்டு பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு சாந்தி உள்ளே சென்று விட்டாள்.

கதவைப் பிடித்துக் கொண்டு நின்ற ராஜம் அழைப்பு மணியை அழுத்தினார். மின்சாரம் இல்லாததால் அது வேலை செய்யவில்லை. அவமான உணர்வுடன் கண்ணில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீருடன், “சாந்தி கொஞ்சம் கதவைத் திற” என்று குரலை உயர்த்தாமல் அழைத்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். அண்டை அயலில் யார் காதிலும் விழாமல் சாந்திக்கு மட்டும் கேட்கும் வண்ணம் எப்படி அவளை அழைப்பது.

கணவர் வடிவேலு உயிருடன் இருந்தவரை நன்றாகத்தான் ஓடியது. பெரியவன் சந்துருவிற்குப் பின், மீண்டும் ஒரு மகன் சங்கர், பிறகு ஆசை ஆசையாய் எதிர் பார்த்தது மாதிரி மகள் தேவி பிறந்தார்கள். அனைவரும் நன்கு படித்தனர். சந்துருவுக்கு  பக்கத்தில் ஐந்து ஊர் தள்ளி இருக்கும் பல்கலையில் பேராசிரியராக வேலை. திங்களன்று தொடர் வண்டி ஏறினால், அங்கேயே தங்கிவிட்டு வார இறுதிக்குத்தான் வீடு வருவான். சின்னவன் சங்கர் கணினி படித்துவிட்டு ஹைத்திராபாத்தில் வேலை, மகள் தேவிக்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கை அமைந்தது.

சந்ருவிற்கு சொந்தத்தில் வடிவேலுவின் பலநாள் நண்பர் மகள் சாந்தியையே மணம் முடித்தார்கள். சாந்தியும் தன்னைப் போன்ற தாயில்லாப் பெண் என்பதால் ராஜத்திற்கு அவள் மீது என்றும் பரிவு உண்டு. சாந்தியின் திருமணத்தில் அவளுக்குப் போடுகிறேன் என்று வாக்கு கொடுத்த நகையைப் போட முடியாமல் போனது சாந்தியின் அப்பாவிற்கு. இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகியதில் திருமணத்திற்காக கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து போக, அடுத்த ஆண்டிற்குள் செய்து விடுகிறேன் என்று கூறித் தனது நெடுநாள் நண்பரிடம் கூனிக் குறுகினார்.

அதைப் பற்றி இவர்கள் யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அடிக்கு மேல் அடியாக அவருக்கு மாரடைப்பு, மருத்துவமனைச் செலவு என்று தொடங்கி சம்பந்தி ஓராண்டிற்குள் உயிரையும் விட்டு விட்டார். சாந்தி குடும்பத்தின் சொத்தினைப் பங்கு போட்டுக் கொண்ட சகோதரர்களிடம் தந்தை தனக்குத் தருவதாகச் சொன்ன நகைகளைக் கொடுத்துவிட்டு பங்கு போட்டுக் கொள்ள சொல்லப் போவதாகச் சொன்னாள் சாந்தி.

ஆனால் வடிவேலு தடுத்துவிட்டார். உனக்கு இருக்கும் சொந்தமே உன் அண்ணன்கள்தான். அவர்களுக்கேத் தெரிந்திருக்க வேண்டும் அவர்களது கடமையைப் பற்றி. அதை அவர்கள் மதிக்காத பொழுது சொத்து கேட்டு உறவை முறிக்காதே. அவர்கள் வரப் போக உனக்கும் உறவு என ஒருவர் இருக்க வேண்டும். உறவு முக்கியம். யாரும் இனி நகையைப் பற்றியோ சொத்தைப் பற்றியோ சாந்தியிடம் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார்.

அவரது பெருந்தன்மை நினைவுக்கு வந்து கண் கலங்கியது ராஜத்திற்கு. மருமகள் மாதிரியா வைத்திருந்தோம் அவளை என்று எண்ணியவாறு மீண்டும் வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார். ஆள் அரவமே இல்லை. எவ்வளவு நேரம்தான் வெளிப்படியில் நிற்பது. கால் வலித்தது. வாசல் படியில் அமர்ந்தார். அந்தக் காலத்து வீட்டின் வாசலில் இரு புறமும் இருந்த பெருந்திண்ணைகளை பாதுகாப்பிற்காகவும், இடத்தை உபயோகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் இரும்புக் கிராதி போட்டு அடைத்துக் கம்பிக் கதவுகள் போட்டதில் உட்காரும் இடம் பறிபோய் வாசல் படி மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது அவருக்கு இப்பொழுது.

வெயில் ஏறியது, மணி ஒரு பத்தரை இருக்குமோ என்று எண்ணினார். காலையில் இருந்து ஒரு வாய் காப்பி கூடக் குடிக்காமல் பசி காதை அடைத்தது. கணவர் வடிவேலு இறந்தவுடன் மருந்துக் கடையை சங்கருக்கு என்று குறித்து வைத்து, அதைக் குத்தகைக்கு விட்டு அதன் வருமானம் சின்னவன் சங்கருக்கு அனுப்புவது போல் சொத்து பிரித்தார்கள். பெரியவன் சந்துருவிற்குத் தாத்தா எழுதி வைத்த வீடே இருக்கட்டும் என்று முடிவெடுத்தார்கள்.

போன மாதம் கோடை விடுமுறைக்கு மகள் தேவி ஊருக்கு வந்த பொழுது ராஜம், தனக்குப் பரம்பரை பரம்பரையாக வந்த நகைகள் அனைத்தையும் அவளுக்குரிய சொத்தின் பங்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டார். அவள் தடுத்துப் பார்த்தாள். தனக்கு இருப்பது இரண்டும் பையன்கள்தான், வெளிநாட்டில் தனக்கும் நகைகள் போட வாய்ப்பில்லை எனவே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்துவிட்டார். தனது கடமை முடிந்தது போன்ற மகிழ்ச்சி அவருக்கு.

அனால் இதற்குப் பிறகுதான் சாந்தியின் குணம் மாறியது. சாந்தியின் ஒரு பெண்ணும் ஒரு மகனும் வெளியூரில் கல்லூரியில் படிக்கிறார்கள். சாந்தி தனது மாமியாரின் நகையை தனது மகளுக்குரியதாக நினைத்திருப்பாள் போலும். நேராகவே சண்டைக்கு வந்தாள். “பசங்கள மட்டியும் வச்சிருகிறவங்க, வேணாம், வேணாம்னு சொல்றாங்க, அப்படியும் அள்ளிக் கொடுக்காட்டி என்ன? இங்க கல்யாண வயசில ஒரு பேத்தி இருக்கிறது நினைப்பு இல்லையா?” என்று எரிந்து விழுந்தாள்.

“நீ ஏம்மா அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுறே? உனக்கு வேணும்னா உன் வீட்டுக்காரன செஞ்சி கொடுக்கச் சொல்லு. என் பரம்பரை சொத்தை என் பொண்ணுக்குக் கொடுத்தேன், அதில் உனக்கேன் கோபம்?” என்று ராஜமும் பதிலுக்குச் சண்டைக்குப் போனார். இந்தப் பிரச்சனையை வைத்து தினமும் இருவருக்குள் சண்டை வர ஆரம்பித்தது. வார இறுதியில் வீட்டிற்கு வரும் சந்துருவிற்கு இவர்களின் சண்டையைத் தீர்ப்பதற்கே சலிப்பாக இருந்தது. ஏன் வீட்டிற்கு வருகிறோம் என்று வெறுத்துப் போய் “மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?” என்று அவனும் தன் பங்கிற்குக் கத்திவிட்டு மடிக்கணினியைத் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய் உட்கார்ந்து விடுவான்.

பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பெருந்தேவி, வெய்யிலில் படியில் உட்கார்ந்திருக்கும் ராஜத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு, “தபாலுக்காக காத்திருக்கீங்களா பெரீம்மா, தபால்காரர் மத்தியானம்தான் வருவாரு” என்று அவளாகவே ஒரு காரணமும் கற்பித்து பதிலும் வழங்கிவிட்டுப் போனாள். இதற்கு மேல் மொட்டை வெய்யிலில் வாசல் படியில் உட்கார்ந்திருந்தால் அடுத்தவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று தோன்றியது ராஜத்திற்கு.

தெருமுனையில் இருக்கும் ராமுத்தம்பி கடைக்கு சென்று மகனை அவன் கைபேசியில் அழைக்கலாம் என்றால் தொலைபேசி எண்ணும் தெரியவில்லை. தொலைபேசியில் ப்ரோக்ராம் செய்த பட்டனை அழுத்தி அழுத்திப் பேசியதில் எண் மனப்பாடம் ஆகாமலே போய் விட்டது. நல்ல வேளை இன்று வெள்ளிக் கிழமை, மகன் வீடு வந்துவிடுவான். மாலையில் அவன் வந்ததும் அவனுடன் வீட்டிற்குள் போய் விடலாம். இனிமேல் சாந்தியுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். கொள்ளைப்புற தாழ்வாரத்தில் முடங்கிக் கொள்ளலாம். கயிற்றுக் கட்டில், கிணற்றடி, கழிவறை எல்லாம் வசதியாக இருக்கும். சொந்த வீட்டிலேயே அப்படி பின்னால் அனாதையாகக் கிடந்தால் ஊருக்கு நிலைமை தெரியும் அவமானம் இல்லை. சாந்தி ஒரு வேளை சோறு கொடுத்தாலும் குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்து விட்டு, அரை வயிற்றோடு படுத்துக் கொள்ளலாம்.

வரட்டும், சாயுங்காலம் சந்துரு வரட்டும். இவ்வளவு நாள் இந்த வீட்டில் சாந்தி என்னை விட்டு வைத்திருந்ததே அந்த நகைக்காகத்தானா? பேரன் பெயரில் வீடு எழுதி வைத்த அப்பாவும் இப்படி நான் நடுத்தெருவில் நிற்பேன் என நினைத்திருக்க மாட்டாரே என்று எண்ணிய ராஜத்திற்குத் தன்னிரக்கத்தில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மகன் வரட்டும், இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது அவன் வர. இப்பொழுது மணி என்ன ஒரு பன்னிரண்டு இருக்குமா?

ராஜத்திற்கு ஒருமுறை கழிவறை சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அந்தக் காலத்தில் வீட்டின் பின்புறமாக வந்து தோட்டி சுத்தம் செய்யும் ட்ரை லட்ரீன் வைத்த பழைய வீடு. கொல்லைபுறம் நாராசாலையின் கதவு வழியாக அவர்கள் வந்து போக வழி இருக்கும். அதனால் வீட்டின் பின்புறம் போக இக்கால வீடுகள் போல பக்கத்து சந்து இல்லை. ஒவ்வொரு வீட்டுச் சுவரும் அடுத்த வீட்டின் சுவராக பங்கு போட்டு அமைந்த பழங்காலத்து வீடு. காலம் மாறி நவீன கழிவறையாக மாற்றியாகிவிட்டது, அனால் பின்புறம் உள்ள அதை அணுக வீட்டின் உள் வழியாகத்தான் செல்ல வேண்டும். இவளுக்கு இது போன்ற தேவைகள் இருக்கும் என்று சாந்திக்குத் தோணாதா? வரட்டும், சந்துரு வரட்டும் என்று மனம் கருவினார்.

மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். உச்சி வெய்யிலில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிருந்தது . மெதுவாகத் தெருமுனைக்குச் சென்று அங்கிருந்த குட்டிச் சுவருக்குப் பின்புறம், மீண்டும் யாரும் பார்கிறார்களா என்று ஒருமுறைப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டு வந்தார். “ஐயோ என் நிலை இப்படி ஆயிடுச்சே, யார் யாரையோ பழிச்சேனே, என்ன இது ஆடு மாடு மாதிரி தெருவில் ஒதுங்கறாங்களேன்னு கேலி செய்வேனே, நானே அந்த நிலைமைக்கு வந்துட்டேனே, கடவுளே,” என்று மனதிற்குள் புலம்பினார்.

அங்கிருந்தே வீட்டின் வாசல் படியைப் பார்த்த பொழுது அது உச்சி வெய்யிலில் காய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. சாயுங்காலம் சந்துரு வரும் வரை எங்காவது நிழலாகப் போய் உட்காரவேண்டியதுதான் என்று எண்ணியபொழுது, இரண்டு தெரு தள்ளி இருக்கும் வரசித்தி விநாயகர் கோயில் மணியின் ஒலி காற்றில் வந்தது. அங்கு போய் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்ளலாம், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வரலாம் என எண்ணிக் கோயிலை நோக்கி மெல்லத் தள்ளாடி தள்ளாடி நடந்தார். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

கோயில் வாசலில் பிச்சை கேட்டவர்களைப் பார்த்த பொழுது விரக்தி சிரிப்பு வந்தது. நானும் இப்பொழுது உங்களைப் போலத்தான் என நினத்துக் கொண்டு உள்ளே சென்றார். யாரோ தங்கள் வேண்டுதல் நிறைவேறியதில் மகிழ்ந்து சாமிக்கு சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதாமும் படைத்துவிட்டு அனைவருக்கும் தொன்னையில் அன்னதானம் கொடுத்தார்கள். யாராயிருந்ததாலும் நல்லா இருங்கப்பு, என்று மனதில் வாழ்த்திக்கொண்டு வரிசையில் நின்று சர்க்கரைப் பொங்கலும் தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு மண்டபத்தில் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

நீரிழிவு நோய்க்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டால் என்ன ஆவது என்ற கவலை மின்னலெனத் தோன்றி, அதே வேகத்தில் வயிற்றுப் பசிக்கு முன் இப்படி யோசிப்பது தேவையில்லை என்றும் தோன்றியது. மனதில் இப்படி பிச்சைக்காரி போல தானம் வாங்கிச் சாப்பிடும் நிலைக்கு வந்தது ராஜத்தின் மனதை அறுத்தது. இதே கோயிலில் தனது பேரக் குழந்தைகளின் காதுகுத்திற்கு, கணவரின் நினைவு நாள் என்று தானும் அன்ன தானம் கொடுத்ததது நினைவு வரத் துக்கம் தொண்டையை அடைத்தது. மூச்சுவிட சிரமமாக இருந்தது. “நெஞ்சை அடைக்குதா ராஜம்,” என்ற கணவரின் பரிவான குரல் அவர் காதில் கேட்டது. கண்கள் இருண்டது. “ஆமாங்க, நெஞ்சை அடைக்குதுங்க, பாருங்க மாமா, உங்களுக்கப்புறம் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே, பிச்சைக்காரியா, அனாதையா ஆயிட்டேனே” என்று வாய் விட்டுப் புலம்பினார்.

அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பூஜை சாமான் விற்கும் கடைக்காரம்மா, “என்ன தாயீ சொல்ற, நெஞ்சடைக்குதா?” என்ற கேட்டு விட்டு அருகில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பாட்டிலில் நீர் இருப்பதைப் பார்த்து, “ஐயா, இந்தப் பெரியம்மாவுக்கு தொண்டையடைக்குதாம் கொஞ்சம் தண்ணி கொடுங்க,” என்றாள். அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி சிறுவனிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து, “கண்ணா, ஓடு. பாட்டிக்கு கொஞ்சம் தண்ணி கொடுப்பா” என்று அனுப்பினார்கள். அவன் “பாட்டி இந்தாங்க” என்று ராஜத்திடம் நீட்டிய பொழுது அவருக்கு மார்பில் சுரீரென்ற வலி ஏற்பட்டு ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். நீருக்காக நீட்டிய கை துவண்டு விழுந்தது, பளீரென்று ஒரு ஒளி அவர் கண் முன் தோன்றி மறைந்தது போலிருந்தது ராஜத்திற்கு.

“ஐயோ, பெரீம்மா இங்கன பாருங்க” என்று சுற்றி இருந்தவர்கள் அவரை உலுக்கி, பிறகு அவரை அடையாளம் கண்டு, அவரை அவரது வீட்டில் சேர்த்த பின்பு; அவர் மறைந்த செய்தி தெரிந்து அரக்கப் பரக்க ஓடி வந்த சந்துருவிடமும், அண்டை, அயலார், உறவினர்களிடம், சாந்தி சொல்லிக் கொண்டிருந்தாள்; “அத்தை மனசு சரியில்லேன்னு கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னாங்க, புண்ணியவதி, கோயில்லேயே சாமி கூட போய் சேர்ந்துட்டாங்க.”

படம் உதவி: http://naranammalpuramwelfare.blogspot.com/

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள் …

  1. நல்லா வந்திருக்குங்க. அமெரிக்க இந்தியக் கதை. நவ்தால் பூட்டெல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நன்று!!

  2. இன்றைய உலக நடப்பினைத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள். பெரும்பாலான மாமியார்களின் நிலை இதுவே. கதையோட்டம் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தேமொழி.

  3. கதையினைப் படித்துக் கருத்தினைப் பகிர்ந்து கொண்டதற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி பழமைபேசி.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. கதையைப் பற்றிய உங்களது ஊக்கமூட்டும் கருத்துரைக்கு மிக்க நன்றி பார்வதி.

    அன்புடன்
    ….. தேமொழி 

  5. இந்தியச் சூழலில் ஒரு கதை. பின்னனி மாற்றமே கதையை படிக்க தூண்டுகிறது. மாமியார்-மருமகள் சண்டை இல்லாத வீடே இல்லை. இன்றைய மருமகள் நாளைய மாமியார் என்பதை மறந்துவிட்டு வாழ்வது தான் வேடிக்கையும் வேதனையும்.

    தேமொழி அவர்களின் எழுத்தில் இப்போதெல்லாம் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.. தொடரட்டும் வாழ்த்துகள்.

  6. உண்மைதான் … எதிர்காலத்தைப் பற்றியும் யோசிப்பதில்லை, மனித நேயமும் இருப்பதில்லை.  பணத்திற்கு கொடுக்கும் மதிப்பை மனிதர்களுக்கு கொடுப்பதில்லை. 
    உங்கள் கருத்துரைக்கு நன்றி தனுசு.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  7. பணம் இருக்கும் இடத்தில்
    மனம் இருப்பதில்லை !
    மனம் இருக்கும் இடத்தில் ஏனோ
    மனித நேயம் இருப்பதில்லை !
    பணத்திற்கு இருக்கும் மதிப்பு
    பாச பந்தங்களின் மேல் இல்லை !

    இதுவே இன்றைய உண்மை நிலை. நல்ல கதை. வாழ்த்துகள் தோழி !!!

  8. மனத்தை நெகிழவைத்தக் கதை. பொன்னுக்கும் பொருளுக்கும் கொடுக்கும் மதிப்பை மனத்துக்கும் குணத்துக்கும் கொடுக்கும் நாளில்தான் உறவு வலுப்படும். மனம் தொட்ட கதைக்குப் பாராட்டுகள்.

  9. பிள்ளையை எதிர்பார்த்துத் தாயவள் காத்திருந்தாள் தன் உரிமைக்குக் குரல் கொடுக்க; ஆனால் அவளைத் தேடி வந்ததோ மரணம்.

    நெஞ்சைத் தொட்ட கதையைப் படைத்த தேமொழிக்குப் பாராட்டுக்கள்!!

  10. கதையினைப் படித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு ஊக்கமூட்டிய தோழியர் தமிழ்முகில், கீதா, மேகலா ஆகியோருக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.