சு.ரவி

வணக்கம், வாழியநலம்.

சற்றே இடைவெளி.

தூரிகை என்ற காரிகை  யோடு
இணைபிரி யாமல் இழைந்த நாட்கள்.
வண்ணங் களே என் எண்ணங் களாக
வார்த்தைகள் இன்றி வாழ்ந்த தினங்கள்
திடீரென் றொருதினம்,திரும்பிப் பார்த்தால்,
கவிதைக் காதலி காத்திருந் தென்னிடம்
கண்ணீ   ரோடு நியாயம் கேட்கிறாள்!

“எதுகை, மோனை, சீர்,தளை, தொடை என
எத்தனை அணிகள் பூட்டிநான் மிளிர்ந்தேன்!
வெண்பா, விருத்தம்,, வித வித சந்தம்
எனப்பல வடிவொடு வனப்புடன் ஒளிர்ந்தேன்!

என்னொடு களித்த இனிய தினங்களை
மறந்திடப் போமோ? மறுபடி எனை நீ
மருவிட வாரா திருத்தல் தகுமோ?”

கவிதைக் காதலி பெருக்கிய கண்ணீர்
நெஞ்சில்  நெருப்பாய்ச் சுட்ட(து;)அதுமுதல்,
வண்ணம், வடிவம், வரைதல் மறந்து
கவிதாயி னியைக் கலந்து  மகிழ்ந்தேன்.
மாதங்கள் நீண்ட காதங்க ளாயின!

ஒருநாள் காலை உலவச் செல்கையில்,
நீளப் பரந்த நீல வானத்தில்,
பனித்துளி உறங்கும் பசும்புல் நுனியில்,
மரங்கள் விரித்த மரகதப் பச்சையில்,
பூக்கள்  சிரிக்கும் புதுவண்ணத்தில்
ஓவியப் பெண்ணாள் ஒயிலாய் அழைக்கிறாள்!

இத்தனை நாட்கள் இவளை மறந்து
எப்படி இருந்தேன்?   ஈசா, இனிநான்
ஒருநா  ளேனும்  ஓவியா இன்றி
உறங்கிட மாட்டேன் என்றொரு துணிபுடன்
விடுவிடு வென்று  வீடு திரும்பி
தூரிகையா லொரு காகிதப் பரப்பில்
கோடுகள், வளைவுகள் வண்ணங்களென்று
ஓவிய உழவனாய், உழைக்கப் புகுந்தேன்

எனக்குள் இருந்து ஒலித்தது ஒருகுரல்:

” உனக்குள் இருப்பது ஒருபராசக்தி.
ஓருபோ தவளே ஓவிய மானாள்.
எண்ணங்களெல்லாம் வண்ணங்களாக
அவளே அண்டம் நிறைந்தாள்; அவள்தான்
உன்விழியானாள்; உன்விரல் வழியே
உருப் பெறும் ஒவ்வொரு ஓவியத்துள்ளும்
கருக் கொண்டு யிர்த்தாள்; அவளே மறுநாள்

கலகல வென்று  கவிதையாய்ச் சிரித்தாள்!
சிந்தனை என்ற ஆலயத்  துள்ளே
மொழியெனும் பீடத் தமர்வாள்; வழிபடும்
கவிதைப் பித்தர்தம் கணகளில் சரேலென்
நொடிப் பொழு தளவில் மின்னலாய்த் தெரிவாள்
எழுத்தும், வார்த்தையும் கழுத்தி லணிந்து
அறிவெனும் மகுடமும், உணர்வெனும் ஆடையும்
புனைந்து புதுப் புதுக் காவிய மென்னும்
வாகனம் ஏறி வலம்வந்  திடுவாள்
அருவியின் வீழ்ச்சியாய், அழகிய ஓடையாய்
கட்டற்    றோடும்  காட்டாறு வெள்ளமாய்
அமைதித் தென்றலாய் , அழிக்கும் புயலாய்
எத்தனை வடிவெடுத் தாலும் உள்ளுறும்
அனுபவமாவதும், , வெளிப்படும் கவிதையாய்
யுகம்பல கடந்தும், படிப்பவர் நெஞ்சில்
பரவசத் தீயைப் பற்ற வைப்பதும்
பரா சக்தியின் செயலே உணர்வாய்!”

ஓவியமாவதும் காவியமாவதும்
உள்ளுறு சக்தியென் றுணர்ந்து மகிழ்ந்தேன்!

இணைப்பு: பேலூர்- நாட்டிய சரஸ்வதி சாந்தலா தேவி
பார்க்க, படிக்க, ரசிக்க…
 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காவியா & ஓவியா

 1. ///// உனக்குள் இருப்பது ஒருபராசக்தி.
  ஓருபோ தவளே ஓவிய மானாள்.
  எண்ணங்களெல்லாம் வண்ணங்களாக
  அவளே அண்டம் நிறைந்தாள்; அவள்தான்
  உன்விழியானாள்; உன்விரல் வழியே
  உருப் பெறும் ஒவ்வொரு ஓவியத்துள்ளும்
  கருக் கொண்டு யிர்த்தாள்; அவளே மறுநாள்
  கலகல வென்று  கவிதையாய்ச் சிரித்தாள்!/////

  பாராட்ட வார்த்தைகளில்லை. சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *