Blog

  • சந்தேகம்

    ரா. பார்த்தசாரதி.

    காலை ஆறு மணி. டேப் ரெகார்டரில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. விஜயா சுடச் சுட காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.

    “டீப்பா மேலே வச்சிட்டு போ” என்றான் சிவா.

    சிவா எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அன்றைய வேலைகளை டைரியில் மார்க் பண்ணி ஒரு முறை பார்த்துக்கொள்வான். ஆபீசில் அவனுக்கு ஆல்ரௌண்டெர் என்று பெயர். பொது சேவையிலும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. சாலைகளில் மர நடு விழா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
    மருந்து, ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக ப்ளட் ஏற்பாடு … மற்றும் பல. வீட்டை விட அவன் வெளியில் சுற்றுவதே அதிகம்.

    விஜயாவிற்கு அவனிடம் பிடித்தது அவனது பொறுமை. எந்த விஷயத்திலும் நியாயத்தை எடுத்துச் சொல்பவன். அப்படி பட்டவன் சிலவற்றை ஏன் மறைக்கின்றான். ஒரு பெண், ஒரு மகன் என்ற நிறைவான குடும்பம். சனி, ஞாயிறில் அவளையும் குழந்தைகளையும் வெளியே கூட்டிச் செல்வது வழக்கம். அவனுக்கு நாற்பது வயதானாலும், நரைக்காத தலைமயிர் முப்பதாகவே மதிப்பிட தோன்றும். அந்த அளவிற்கு உணவு கட்டுப்பாடு யோகா செய்தும் உடம்பை கட்டுடன் வைத்திருந்தான். எந்த பெண்ணும் அவன் பேச்சிற்கு வயப்படலாம். அதனால் சிலர் சில சமயம் பொறமை படுவார்கள். இதை விஜயாவின் காதுபட சொன்னவர்களும் உண்டு.

    விஜயாதான் அவனது துணிகளையும், குழந்தைகள் டிரெஸ்ஸையும் வாஷின் மெஷினில் போட்டு துவைப்பாள். போடும் முன் பேண்ட் பாக்கெட்டில், எதாவது இருகிறதா என்று செக் பண்ணிவிட்டுதான் போடுவாள்.

    அன்று ஞாயிற்று கிழமை. எல்லோர்க்கும் ஒரு சோம்பேறித்தனம் வரும் நாள். சிவா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் செல்லில் இருந்து ஒரு வாய்ஸ் மெயில். பல தடவை சிவாவே செல்லை எடுக்கச் சொல்வான். ஏதாவது அவசர காலாக இருக்கலாம் என நினைத்து கொண்டு எடுத்தாள். “நீங்க இல்லை என்றால் நான் இல்லை. நான்தான் உஷா. இன்று ஈவினிங்க் நான்கு மணிக்கு நீங்க என்னை கண்டிப்பாக மீட் பண்ணனும்…” என்று வாய்ஸ் மெயிலில் ரெகார்ட் ஆகி இருந்தது.

    சிவா எழுந்தவுடன் நிதானமாகத் தனது செல்லில் உள்ள ரிசிவிங் நெம்பர்களை செக் பண்ணும் போது உஷா அனுப்பிய வாய்ஸ் மெய்லைப் பார்த்ததும் விஜயாவிடம், “இன்னைக்கு எனக்கு இரண்டு மூன்று ப்ரோக்ராம் இருக்கு. எப்படியும் ஈவினிங்க் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்,” என்று சொல்லி அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் கிளம்பினான்.

    ஈவினிங் லேட்டாக வந்தான். ஆறு மணிக்கு வந்தவன் எல்லோரையும் அவசரப் படுத்தி உட்லண்ட் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தான். விஜயா வேண்டா வெறுப்பாக அவனிடம் நடந்து கொண்டாள். சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று இரவு அவளை செல்லமாக கட்டியணைக்க முற்பட்டான். என்றும் விலக்காதவள், “சீ …கையை கொண்டு வராதிங்க. நீங்களும் சராசரி ஆம்பளை என்பதை நிரூபிக்கிறிங்க,” என்றாள்.

    washingசிவாவும் இன்று அம்மாவிற்கு மூடு சரியில்லை என நினைத்துத் தூங்கலானான். அவனுக்குத் தெரியாது அவள் உஷாவை நினைத்து பழிவாங்குகிறாள் என்று. மறுநாள், விஜயா அவன் துணிகளை வாஷின் மெஷினில் போடும்போது அவன் பேண்ட்டில் இருந்து ஒரு வண்டி டோக்கன், கூடவே ஒரு பேப்பர் ஆகியவறைக் கண்டாள். அவன் ஆபீஸ்ஸுக்குப் போன பின்னர் பிரித்துப் படித்துப் பார்த்தாள். அதில், ஜீவன் ப்ளட் பேங்க்… உஷா, அப்போலோ ஹாஸ்பிட்டல் இருதய மாற்று அறுவை சிக்கிச்சை, ப்ளட் அரெஞ்சமென்ட் அண்ட் பை சிவா என்று எழுதியிருந்தது.

    அன்று மாலை வந்ததும், “என்னங்க, உங்களுக்குப் பிடித்த பூரி மசாலா செய்து வச்சி இருக்கேன். குழந்தைகள் சாப்பிடாச்சு. நீங்க வாங்க,” என்று பக்கத்தில் இருந்து கனிவுடன் அவனை பார்த்துக் கொண்டே பரிமாறினாள். விஜயா நான் சொல்ல மறந்தேன். நேற்று உஷா என்ற முப்பது வயது பெண்ணிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக நான் பிளட் ஏற்பாடு செய்தேன். அவளுக்கும் நம்ப மாதிரி இரண்டு குழந்தைகள். பணக்கார வீட்டுப் பெண். என்னைப் பாராட்டி அவள் தந்தைக்கும், கணவருக்கும் அறிமுகம் செய்தாள். அவள் கணவன் உடனே எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அதை அவரிடம் கொடுத்துவிட்டு, சார்… இதை நான் ஒரு சேவையாகச் செய்கின்றேன். இது எல்லாம் வேண்டாம் என்று சொல்லி கொடுத்து விட்டேன். இதோபார் விஜயா, நாம் செய்ற நல்லது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு நன்மை கொடுக்கும் என்றான்”.

    சிவாவின் செயலால் அவள் மனதில் அவன் உயர்ந்தான், அவள் பெருமை அடைந்தாள். அன்று இரவு சிவாவின் … நேற்றுதான் முரண்டு பண்ணின, இன்னிகாவது, என்ற கெஞ்சும் பார்வையை புரிந்துகொண்டு… உங்க இஷ்டம் என்றாள். சிவாவும் ஆனந்தமாக அவளை கட்டியணைத்தான்.

     

     

    படம் உதவி: http://www.token.uk.com/images/tips/img_washing_tips-5.png

    Share
  • உயிர் நண்பன்

    -றியாஸ் முஹமட்

    பள்ளியிலே சேர்ந்து படித்ததுமில்லை
    பனங்காட்டிலே சேர்ந்து மேய்ந்ததுமில்லை
    பாலைவனம் மேய்கையிலே
    பால் நிலவு ஒளியினிலே
    பார்வையில் பட்ட மின்னலடா
    பாரதிதாசனின் கவிதைப் புத்தகமடா
    பக்கத்தில் நீ இல்லையென்றால்
    படபடக்கும் என் இதயமடா
    பரதேசிபோல வாழ்ந்தேனடா
    பரிதாபப்பட்ட அந்த இறைவனோ
    பரிசாக உன்னைத் தந்தானடா!

    Share
  • இவ்வளவுதான் உலகம்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    ரெலிவிஷனின் காலம் முடிந்து, ஐ-பாட் கொம்பியூட்டருடன் நேரம் கரைகின்றது. உள்ளங்கையில் உலகம் தெரிகின்றது.
    கழிவு அகற்றும் கவுன்சில் வாகனம் வருகின்றது. அதை வைப்பதற்கும் எடுப்பதற்கும் மாத்திரம் முன்புறம் போவதுண்டு. எதிர் வீட்டிலிருந்து ஒருவன் புன்னகைக்கின்றான். இதுவரையும் அங்கே ஒரு பெண்ணைத்தான் கண்டிருக்கின்றேன்.
    கடந்த டிசம்பரில் அந்த வீடு விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. இப்போது அடுத்த கிறிஸ்மஸ்.

    அவனே என்னை நோக்கி வருகின்றான்.

    அவன்!

    என்னுடன் வேலை செய்யும் சக நண்பன்.

    Share
  • திருமதி வசந்தா குகேசன் மறைந்தார்

    அண்ணாகண்ணன்

    வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன், நேற்று 23.02.2015 அன்று மதியம், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. அவரது இறுதிச் சடங்கு, 24.02.2015 அன்று மதியம் 1.30 மணிக்குச் சென்னையில் நடைபெறுகிறது.

    Vasantha_Gukesan_631x455

    திருமதி வசந்தா குகேசன், சமையல் கலையில் 50 ஆண்டுக் காலம் அனுபவம் வாய்ந்தவர். நம் பாரம்பரிய உணவு முதல், இன்றைய நவீன மைக்ரோவேவ் சமையல், பன்னாட்டு உணவு வகை, மூலிகை உணவு வகை, சைவம் மற்றும் அசைவம் என்று அனைத்து வகைச் சமையலிலும் கைதேர்ந்தவர். வல்லமையின் சமையல் கலைப் பகுதியில் அவரது பற்பல சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்தப் பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/samaiyal/archives/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

    திருமதி வசந்தா குகேசனின் மறைவு குறித்து, இன்றைய தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியான விளம்பரம் இங்கே – http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16582878&code=8208

    Vasantha_Gukesan_obituary

    திருமதி வசந்தா குகேசன் அவர்களின் மறைவுக்கு வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரை இழந்து வாடும் பவளசங்கரி மற்றும் அவரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.  திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 23, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு வைதேகி அவர்கள்

    வைதேகி1

    “மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை வாழ்ந்து காட்டும் வைதேகி அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராக வல்லமை இதழ் அறிவிக்கிறது. வைதேகி சென்ற ஞாயிறு அன்று தனது வலைப்பூவில் புற்றுநோயை எதிர்த்து தான் போராடியதை “My fight against the dreadful disease – CANCER” (http://vaidehivc.blogspot.com/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html) என்று எழுதியிருந்தார். கொடிய நோய் என்று மனம் தளர்ந்துவிடாமல்,போராடி வெற்றிபெற்றதுடன், நோயைப்பற்றியும், அவர் பெற்ற சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் பற்றிய அவரது அனுபவங்களை படங்களுடன் அவர் மிக விரிவாக பகிர்ந்து கொண்டது பாராட்டத் தக்க செயலாகும். அத்துடன் நில்லாமல் நோயைப் பற்றி மேலும் தகவல் பெற விரும்பினால், நம்பிக்கை, ஊக்கமூட்டும் வார்த்தைகளை கேட்க விரும்பினால் தான் உதவத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டதன் மூலம் தனது வாழ்க்கை பிறருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் என்பதையும் உணர்த்துகிறார். வைதேகியை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம். அவரை பரிந்துரைத்த வல்லமை வாசகர், ஓவியர், கவிஞர் சு. ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. வைதேகியின் சோதனையான வாழ்க்கையையும், அதில் அவர் சாதனை நிகழ்த்தியதையும் வல்லமைக் குழுவினருடன் பகிர்ந்து கொண்ட வல்லமை எழுத்தாளர் திரு. பழமைபேசி அவர்களும் பாராட்டிற்குரியவர்.

    சென்னை நங்கநல்லூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெற்றவர் வைதேகி. அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மற்ற எல்லா சென்னை பெண்களைப் போலத்தான் நானும் பொறியியல் படித்தேன், கணினி மென்பொருள் துறையில் வேலைக்கும் சேர்ந்தேன், 23 வது வயதில் எனது அன்புக் கணவரை மணந்தேன், மறு ஆண்டு ஆசை மகள் பிறந்தாள் என்று குறிப்பிடுகிறார். தற்பொழுது ‘ஈ ஆர் பி ஆலோசகராக’ ‘சி டி எஸ் குளோபல்’ நிறுவனத்தில் பணிபுரிகிறார் (Eenterprise Resource Planning, Consultant at Cognizant Technology Solutions).

    அலுவலகத்தில் நண்பர்களுடன் அனுதினமும் வேலையில் கருத்தாலோசனை, தோழியருடன் ஹோலி கொண்டாட்டம், தானும் பாடுவதுடன் மகள் ‘எஸ் கே’ யின் மழலைக் குரல் பாடல்களை இணையத்தில் பதிவேற்றுவது, மகளுக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்வது, சேமியா உப்புமா, வெஜிடபிள் பிரியாணி சமைத்து அவற்றைப் படங்கள் எடுத்து நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் பகிர்ந்து கொள்வது, சுற்றுலா சென்ற படங்களை பகிர்ந்து கொள்வது என சராசரிப் பெண்ணாக அவர் வாழ்க்கை ஓடியது.

    நடிகர் கமல்ஹாசனைப் பிடிக்கும், எம் ஜி எம் ரிசார்ட் பிடிக்கும், கைவினைப் பொருட்கள் பிடிக்கும், ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும் என்று சிறுமி போன்ற ஆர்வத்துடன் தன்னைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த மென்மையான் உள்ளம் கொண்ட, பார்ப்பதற்கு நமது அடுத்த வீட்டுப்பெண் போன்ற தோற்றம் கொண்டவரின் உள்ளம் இவ்வளவு உறுதியானதா என வியக்கவும் வைக்கிறார் நோயுடன் தான் நடத்திய போராட்டத்தை விவரிக்கும் பொழுது.

    இவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாழ்க்கையின் ஓரத்திற்குச் சென்று வந்தவர் இவர். சென்ற ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் இவரது கழுத்தின் வலதுபுறம் சிறு கட்டி ஒன்று தோன்றவும், அதைத் தொடர்ந்து காய்ச்சல், தொண்டையில் வலி, உடல் அசதி என்று தோன்றியிருக்கிறது. பணி முடித்து வந்து வீட்டு வேலைகளை செய்ய இயலாமல் சோர்ந்திருக்கிறார். இந்நிலை தொடரவும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றதில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இவருக்கு நிணநீர் மண்டலப் புற்று நோய் இருப்பதும், அது இரண்டாம்நிலையை அடைந்துள்ள “ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா” என்ற வகையைச் சார்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டது.

    நோயின் தீவிரத்த்தின் அடிப்படையிலும், 28 வயதே ஆன இவரது இளவயதையும் கணக்கில் கொண்டு இரத்தக்குழாய்களின் வழியே மருந்து செலுத்தும் கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சையின் பக்க விளைவுகளான வாய் மற்றும் வயிற்றில் புண், ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்வதால் அதிகம் பசித்தாலும் வாய்க்கு சுவையின்றி இருப்பதால் உணவை உண்ணமுடியாத நிலை, கழுத்திலும் மார்பிலும் கொழுப்பு படிமங்கள், நீர்கோர்த்து உடல் எடை அதிகரித்தல், முகம் ஊதிப் போதல், முடி கொட்டுதல், அடர்வு நிறைந்த மருந்துகளை செலுத்துவதால் ரத்த நாளங்களில் வலி என்று பல துன்பங்களை அடைந்திருக்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க வழியின்றி உடல்வலியும் அசதியும் இவரை ஆட்டிப்படைத்ததில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் விருப்பமின்றி மனம் சோர்ந்திருக்கிறார்.

    இவர் தனது வாழ்வில் எதிர்கொண்டதை இவரது ஃபேஸ்புக் காலக்கோடு பதிவுகளும் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட்டில் நோய் தோன்றி அதைக் கண்டுபிடித்து அக்டோபரில் சிகிச்சை தொடங்கும் பொழுது, “சென்ற ஆண்டு இதே நேரம் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதைப் பற்றிய விளக்கம் இல்லை. “வாழவிருப்பமுள்ளவர்கள் போராடுவார்கள், நம்பிக்கையுடன் இருப்பார்கள், வெற்றி அடைவார்கள், புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வோம்” என்று மற்றொரு பதிவு வருகிறது. “நான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன், யாரேனும் என்னிடம் உன்னைப் பின்பற்றியதால் நான் போராட்டத்தைக் கைவிடவில்லை என்று சொல்வதை விரும்புகிறேன்” என்கிறார். ஆனால் அவர் குறிப்பிட்டதன் பொருள் நண்பர்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல “லைக்” போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

                        வைதேகிவைதேகி3

                                                            வைதேகி2

    மறுவாரம் வருத்தம் நிறைந்த முகம் கொண்ட தனது படத்தை பதிவிடுகிறார், ஏன் முகம் வாடியிருக்கிறது? என்ன ஆயிற்று? என்ற மறுமொழிகள் நண்பர்களிடம் இருந்து வருகிறது.  அதற்கு மறுவாரம் “எனக்கு லிம்போமா புற்றுநோய், அதை ஒழித்துக் கட்டுவேன்” என்ற வாக்கியம் கொண்ட படம் போடுகிறார். நண்பர்கள் ஆறுதல் சொல்லி, நம்பிக்கையை கைவிடாதே என்று உற்சாக மூட்டுகிறார்கள். அடுத்தமாதம் நோயின் தாக்கம் கொடுமையாக இருக்கிறது என்றும், அதற்கடுத்த மாதம் டிசம்பரில் சிகிச்சையின் பக்க விளைவால் தலை வழுக்கையானதை வேடிக்கையாக, அழகிய வழுக்கை விழுந்த பெண், புற்றுநோயை தாக்குகிறாள் என்றும் குறிப்பிடுகிறார்.

    நகைச்சுவையை உணர்வைக் காட்ட நினைத்தாலும், சிறுவயதிலேயே நோயுடன் போராடும் நிலையும், எதிர்காலம் கேள்விக்குறியானதை எதிர்கொள்வதும் அவருக்கு சுலபமாக இருந்திருக்கவில்லை. அடுத்தவரை நம்பி தினசரி செயல்களை முடிப்பதும், சிகிச்சையினால் முடி கொட்டுவது என உருவத்தை மாற்றிய பக்க விளைவுகள் ஆகியவற்றால் மனம் மிகத் துவண்டு இருக்கிறார். தனது நம்பிக்கையை கைவிடாது இருக்கவும், தனது மனதை வேறுவழிகளில் செலுத்தி தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் காகித கைவினைபொருட்கள் செய்வது, கார் ஓட்டும் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவது, உடற்பயிற்சிகள் செய்வது, குழந்தையுடன் விளையாடுவது போன்றவற்றில் மனதைச் செலுத்தி நோயின் கொடுமையை மறக்க முயன்றிருக்கிறார். கணவரும், மகளும், குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும் அவருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இத்துயர நாட்களில் உண்மையான அன்பு செலுத்துபவர்களையும் அவர் அடையாளாம் காண நேர்ந்திருக்கிறது.

    டிசம்பர் முதல்வாரத்தில் 6 சுற்று கீமோதெரப்பி மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் செல்கள் உடலில் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் அறிவித்த பின்னர், மேலும் இரண்டு சுற்று கீமோதெரப்பி சிகிச்சை அளித்து முற்றிலும் குணமடையச் செய்துவிடலாம் என்று நம்பிக்கையை அளித்துள்ளார்கள். டிசம்பர் ஆறாம் தேதி சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் முற்றிலும் நீங்கி கடந்த இரண்டரை மாதங்களாக உடல்நலம் தேறி வருகிறார்.

    வைதேகி5

    தங்களின் அன்புக்குரியவர்களை புற்றுநோய் பாதித்த அனுபவம் கொண்டவர்களை இவர் சந்தித்த பொழுது அவர்களது அனுபவங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார். யாருக்குமே வாழ்வு சுலபமானதல்ல, வாழ்வில் அனைவருமே துன்பத்தை சந்தித்தவர்கள்தான் என்பதை உணர்ந்தேன் என்கிறார். பெயர், புகழ், செல்வம் ஆகியவை முக்கியமல்ல. பிறரிடம் நாம் அன்பு செலுத்துவதும், அவர்கள் அன்பைப் பெறுவதும்தான் வாழ்வில் முக்கியமானது என்றும் கூறுகிறார்.

                       வைதேகி6வைதேகி4

    நோய் தொடங்கிய பொழுதே இதனை எதிர்த்து போராடி மற்றவருக்கு முன்மாதிரியாக தான் இருக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்ட வண்ணம் அதை நிறைவேற்றியும் உள்ள வைதேகியின் வல்லமை பாராட்டிற்குரியது. புற்றுநோயுடன் தளராது போராடி மீண்டு வந்த வைதேகியின் மன உறுதியையும், தனது போராட்டத்தை அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம் அறிவித்து பிறருக்கும் ஊக்கம் தர முன்வந்த வைதேகியை உடல்நலத்துடன் நீடூழி வாழவும், மேலும் பல சாதனைகள் புரியவும் வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

     

    தொடர்புக்காக:
    மின்னஞ்சல்: vaidehi1986@gmail.com
    கூகுள் பிளஸ்: https://plus.google.com/111332645448742010863
    வலைப்பூ: http://vaidehivc.blogspot.in/
    பேஸ் புக்: https://www.facebook.com/vaidehi.vc
    லிங்ட் இன்: https://in.linkedin.com/pub/vaidehi-vc/26/321/318
    இசைக்கோர்வைகள்: https://soundcloud.com/vaidehi-vc/

    Share
  • அவன், அது , ஆத்மா

    மீ.விசுவநாதன்

    “கல்லிடைக் குறிச்சி”

    DSC_0435

    தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி. அது வற்றாத ஜீவ நதி தாமிரபரணியின் செல்லக் குழந்தை . பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும் , தென்னந் தோப்புகளுமானச் செழிப்பான பூமி. பதினெட்டு அக்ரஹாரங்கள். அந்தக் காலத்தில் , அதுதான் 1950களில் அக்ரஹாரம் முழுவதும் பிராமணர்களே குடியிருந்தார்கள். தவிர செட்டிப் பிள்ளைமார் தெரு, முதலிமார் தெரு, பள்ளிவாசல் தெரு, மாதாகோவில் தெரு என்று அனைத்து மக்களும் அன்போடு இன்றும் வாழ்கின்ற ஊர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவிலும் உண்டு. ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோவில்தான் மிகப் பழமையானதும் , குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான புகழ் மிக்க ஒன்று. தவிர டுண்டிவினயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வாழ உகந்த அம்மன், ஸ்ரீ வடக்கு பார்த்த செல்வி, ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ குமாரன், ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ மானேந்தியப்பர் , ஸ்ரீ காந்தாரி அம்மன் இவை தவிர சிறு சிறு பிள்ளையார் கோவில்களும் உண்டு. சித்திரை மாத ஸ்ரீ ஆதிவராகர் தேரோட்டம் மிகப் பிரபலம். எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தேரோட்டம் பார்ப்பதற்காகவே விடுமுறையில் வந்துவிடுகின்ற என்போன்ற ஊர்ப் பைத்தியங்கள் இன்றும் இருக்கிறார்கள்.

    வேதம் நிறைந்த ஊர்

    DSC_0167

    ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் குறைந்தது இரண்டு தீஷிதர்கள், நான்கு கனபாடிகள், மற்றும் வேதம் கற்ற பண்டிதர்கள் என்று இருந்ததால் இந்த ஊரை வேதக் கல்லிடைக்குறிச்சி என்றும் அழைத்தனர். கார்த்திகை மாத முதல் தேதியில் இருந்து முப்பதாம் தேதி வரையில் கந்தப்பபுரம் தெருவில் உள்ள “ஸ்ரீ முருகன்” கோவிலிலும், ஸ்ரீ வராகபுரம் தெருவின் கடேசியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா கோவிலில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பதினொன்றாம் தேதி வரை பதினோரு தினங்களும் “வாரம்” என்று அழைக்கக் கூடிய வேத பாராயணம் நடக்கும். அதில் வேதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உள்ள தீஷிதர்கள், கனபாடிகள் மற்றும் பண்டிதர்களும் (சாஸ்திரிகள்) கலந்துகொண்டு தாங்கள் கற்ற வித்தையை மற்றவர்களோடு சுவாமியின் சன்னதியில் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கக் கண்கள் கோடி போதாது. தவறு இல்லாமல் சொன்ன வேத பண்டிதருக்கு சன்மானமும், கௌர்வமும் கிடைக்கும். இரவில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும் உண்டு. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வேதியர்கள் தங்களது வேதக் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு சமஸ்கிருத கல்லூரியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. பின்னாளில் அங்கு காசி விசுவநாதர், விசாலாக்ஷி பூஜையும் , வருடா வருடம் ஐந்து தினங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவமும் நடைபெற்று வந்தது. கரந்தையார் பாளைய பிராமண சமூகத்துக்குச் சொந்தமான இந்த இடம் இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கிறது. இதன் மேற்குப் புறத்தில், நதிக்குச் செல்லும் பாதையில் நிறைய அதிஷ்டானங்கள் (துறவிகளின் சமாதி) இருப்பதை இப்போதும் காணலாம்.

    சங்கீத ரசனைச் சீமை

    DSC_0338சங்கீதத்திலும் மிகச் சிறந்த வித்வான்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அதில் சங்கீத கலாநிதி வேதாந்த பாகவதர் (இவர் ஒரு தேவி உபசகரும் கூட) , அவருடைய சகோதரர் இராமலிங்க பாகவதர் மிக முக்கியமானவர்கள். இவர்களைத் தவிர வி. ராமலிங்க பாகவதர் என்று இன்னொருவரும் வடக்கு ரத வீதியில் வசித்து வந்தார். வேதாந்த பாகவதரின் சீடர்கள்தான் மகாதேவ பாகவதர், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். இவர்களுக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாதமி “சங்கீத கலா ஆசார்யா” என்ற விருது கொடுத்துச் சிறப்பித்தது. இவர்களைப் போல ஹரிஹர பாகவதர், எம்.ஆர்.ஆதிவராகன் போன்ற சங்கீத வித்வான்களும் இருந்தனர்.

    எம். சங்கரநாராயணன் (அம்பிச்சா..என்று அழைக்கப் படுபவர்) GNB அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். தஞ்சாவூர் கல்யாணராமன் அவர்களிடமும், TMT அவர்களிடமும் சங்கீதம் கற்றவர். இன்றும் தியாகராஜர் ஆராதனை உற்சவத்தை ஊரில் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். அதேபோல சிலேடைப்புலி சுப்பையா பாகவதரும் தெற்கு மாடத் தெருவின் முதல் வீட்டில் குடியிருந்தார். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, கல்கத்தா குருமூர்த்தி ஆகியோர்களிடம் சங்கீதம் கற்ற கல்கத்தா கலா, சித்ரா சகோதரிகளுக்கும் இவ்வூர்தான்.

    DSC_0320

    முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் பக்தி பஜனையின் மூலமாக ஆன்மிகச் சிந்தனையை மக்களிடம் பரப்பி வந்தார். துவாதசி தோறும் உஞ்சவிருத்தி பஜனை செய்வார். ஒவ்வொரு வருடமும் மாசி மாத சிவராத்திரி அன்று “முருகன்” அகண்ட நாம உத்சவம் நடத்துவார். அதில் பிரபல வித்வான்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு பாடுவார்கள். பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஸ்ரீ ஐயாஸ்வாமிகளின் முருகன் அகண்ட நாம நிகழ்ச்சிகளில் விரும்பிக் கலந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் ஆடி அம்மாவசை அன்று பாபநாசத்துக்கு மேல் இருக்கக் கூடிய பாணதீர்த்தத்தில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்வதைக் கடமையாகவே கொண்டிருந்தார்.

    வடக்கு மாடத்தெருவில் இருக்கிற பஜனை மடத்தில் நடைபெறும் கோகுலாஷ்டமி உற்சவத்தின் போது மிகப் பிரபலமான தமிழகத்தின் சங்கீத வித்வான்கள் பலர் கச்சேரிகளும், உபந்யாசங்களும் செய்திருக்கிறார்கள். வெங்கட்ராமையர் , பண்ணை சுந்தரம் ஐயர் இருவரும் காலாருமினியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினர். இருவருமே மிராசுதாரர்களாக இருந்தவர்கள். சங்கீத பிரியர்கள். பஜனை பாடுவதில் சஞ்ஜீவி பாகவதரைப் போலவே நம்பி ஐயங்கார், எம்.ஆர். ராமநாராயணன் போன்றவர்கள் செவிக்கு விருந்து வைத்த செம்மல்கள். பொதுவாகவே இந்த கிராமத்து ஜனங்களுக்கு சங்கீதத்தில் நல்ல ரசனை உண்டு. மாடுகளை மேய்த்துக் கொண்டு போகும் பொன்னன் ,” எலே அங்கன தெக்கநீக்கி மாட்டப் பத்திக்கிட்டு போலே” என்று இழுத்துச் சொல்வதிலும், “கத்தரி, வெண்டை, கரணை, பாவக்காய்” என்று வியாபாரக் குரல் கொடுக்கும் மூக்கனின் குரலிலும் சங்கீதம் இருக்கத்தான் செய்கிறது.

    செய்யும் தொழிலே தெய்வம்

    அப்பளத் தொழிலில் இருந்து சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வரை இந்த கிராமம் திறமைசாலிகளைப் பெற்றிருந்தது. இந்தியா சிமென்ட் நிறுவனர் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர், ஈசன் நிறுவனத்தின் ஈஸ்வர கிருஷ்ண ஐயர், ராயல் என்பீல்ட் கே.எஸ். சுந்தரம் ஐயர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பிற்காலத்தில் அவர்களது தலைமுறையில் வந்த இந்தியா சிமென்ட் கே.எஸ்.நாராயணன் (இவர்தான் பின்னாளில் “கெம்பிளாஸ்ட்” நிறுவனத்தை உருவாக்கினார்), என்பீல்ட் எஸ். விஸ்வநாதன், ஈஸ்வர கிருஷ்ண ஐயரின் மகன் ஹரி ஈஸ்வரன், கிருஷ்ணா மைன்ஸ் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கிட்டா மணி ஐயர்) என்று தொடர்ந்தது.

    “உண்டியல் கடை” என்று வைத்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த செல்வர்களால் சிறப்புப் பெற்றதும் இந்த ஊர்தான்.

    அப்பளத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அம்மாமி அப்பளம் டெப்போ , கணபதிலிங்கம் அப்பளம் டெப்போ, சந்திரா அப்பளம் டெப்போ, சக்தி அப்பளம் டெப்போ, செல்லவிலாஸ் அப்பளம் டெப்போ, ஆதிவராஹா அப்பளம் டெப்போ, லக்ஷ்மிவிலஸ் அப்பளம் டெப்போ, ஸ்ரீ சீதாராமன் அப்பளம் டெப்போ, காந்திமதி அப்பளம் டெப்போ என்று எங்கு திரும்பினாலும் அப்பளக் கம்பெனிகளே கிராமத்தில் குடிசைத் தொழிலாக நிரம்பி இருந்தது . சுவைக்கும், தரத்திற்கும் பெயர் பெற்று விளங்கியது. “வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்” நினைத்தாலே சுவைக்க வைக்கும் அனுபவத்தை இந்த ஊர் தந்தது. போகப் போக இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. இப்பொழுது சங்கர் அப்பளம், ஸ்ரீ சீதாராமன் அப்பளம், ஸ்ரீ ஆஞ்சநேயா அப்பளம் என்று ஒரு சில அப்பள டெப்போக்கள்தான் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுதும் அரிசி அப்பளம், புழுங்கல் அரிசி முறுக்கு, தட்டை, மாலாடு, முனகரம், சீடை மற்றும் இனிப்பு வகைகளின் தயாரிப்பில் இந்த ஊர் பேர்சொல்லும் பிள்ளையாகவே இருக்கிறது.

    இலக்கியச் செல்வங்கள்

    சரித்திர ஆராச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி, சிறுகதை, நாவல் என்று முத்திரை பதித்த “ஆதவன்”, பாரதிக்கு தொண்டு செய்துவரும் பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, திரைபடத் துறையில் குறிப்பாக “டப்பிங்” தொழிலில் சிறந்து விளங்கி , இராமாயணம், கிருஷ்ணா போன்ற சின்னத்திரை நீண்ட தொடர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த கவிமாமணி கு. தேவநாராயணன் போன்ற இலக்கிய வாதிகளையும் இந்த உலகத்துக்குத் தந்து மகிழ்தது இவ்வூர்.

    சிவராத்திரி காலத்தில் தெருவுக்குத் தெரு நாடகம் போடும் குழந்தைகளை ஊக்குவிப்பார்கள் இந்த ஊர் மக்கள். வெங்கடாசலம் ஐயர் கதை, வசனம் , இயக்கத்தில் நடைபெற்ற “ஜெய் பவானி” என்ற நாடகத்தை என் சிறுவயதில் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் வைத்துப் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. அதில் பாரத மாதாவாக நடித்த சி. சங்கரசுப்ரமணினும்(சி.எஸ்.), ஔரங்கசீப்பாக நடித்த சங்கரராம சுப்பிரமணியனும் (இன்றும் அவரை ஔரங்கசீப் மாமா என்றல்தான் தெரியும்.), கையில் தடியுடன் போலீஸ்காரனாக நடித்த பேப்பர் ராமலிங்கம், H.கிருஷ்ணன் அவர்களையும் இன்றும் என் இதயம் நினைத்துக் கொண்டிருக்கிறது. இன்று நாடகத் துறையில் பிரபலமாக விளங்குகின்ற “நாணு” (ச. லெஷ்மி நாராயணன்) வுக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.

    தேச விடுதலை, கல்வியில் ஊரின் பங்கு

    சுகந்திரப் போராட்ட காலத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட கோமதி சங்கர தீட்ஷிதர், லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், ய்க்யேஸ்வர சர்மா , தியாகி சுப்ரமணிய ஐயர் போன்ற தீரர்களையும் பெற்றது இவ்வூர். அவர்களின் முயற்சியாலும் , தர்மசிந்தனையுள்ள ஆர்.எஸ்.ஏ. லக்ஷ்மண ஐயர், எஸ்.எஸ். சங்கர ஐயர், ஏ.விஸ்வநாத ஐயர் போன்றவர்களின் ஆதரவாலும் ஜார்ஜ் நடு நிலைப்பள்ளியைத் துவக்கினர். இந்தப் பள்ளியில்தான் ஏ.என்.சிவராமன் எட்டாண்டு காலம் ஆசிரியர் பணிசெயததாக அவரே தன் கைப்பட அப்பள்ளிக்கு எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “வித்யா சங்கம்” என்ற அமைப்பையும் துவக்கினர். அதன் பலன் இன்று “திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளி” என்ற பெயருடன் ஏழை எளிய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கக்கூடிய மிகப் பெரிய கல்விச் சாலையாக விளங்குகிறது. இந்த ஸ்தாபனம் கே.எஸ். ராமனைத் தலைவராகவும், கே.எஸ். சங்கரசுப்ரமனியனைத் செயலாளராகவும் கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது. மகாகவி பாரதியின் வாக்குப்படி தெருவுக்கு ஒரு பள்ளியாக ஸ்ரீ லக்ஷ்மீபதி ஆரம்பப் பள்ளி, மகாத்மா காந்தி பள்ளி, லலிதா ஆரம்பப்பள்ளி என்றும் விரிந்து இன்றும் கல்விப் பணியில் சிறந்து நிற்கிறது கல்லிடைக்குறிச்சி.

    இப்படி எத்தனையோ சிறப்புகளைக் கொண்டதால்தான் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ சச்சிதானந்தா சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் இந்த ஊரைக் கல்யாணபுரி என்று அழைத்தார்கள்.

    இத்தகு புகழ் மிக்க ஊரில் தான் “அவனும்” பிறந்தான் …

    வாரம் ஒருமுறை தொடர்ந்து வருவான் ……….

    படங்கள்: கே.வி.அன்னபூர்ணா

    Share
  • திருவையாறு பஞ்சநதீஸ்வரர் சந்நிதியில் நாட்டிய விழா.

    கோபாலன் வெங்கட்ராமன்

    திருவையாறு பஞ்சநதி க்ஷேத்திரம் எனப் புகழ் பெற்ற ஊர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பிறகு தஞ்சையில் 180 ஆண்டுகள் அரசுபுரிந்த மராத்திய மன்னர்கள் காலத்திலும், இங்கு பல பண்டிதர்களும், இசை, நாட்டியக் கலைஞர்களும் வசித்து வந்திருக்கின்றனர். இவ்வூருக்குப் புகழ் சேர்க்கும் சிலரில் தியாகராஜ சுவாமிகளின் குரு ஷொண்டி வெங்கடரமணையாவும் ஒருவர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவ்வூருக்கு விஜயம் செய்த தேவார மூவரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் இவ்வூரின் இயற்கை அழகோடு இங்கு எதிரொலித்த இசையைப் பற்றியும், காந்தாரத்தில் இசையமைத்து காரிகையர் தேம்தாம் என்று நடனமாடிய அழகினையும் வர்ணித்திருக்கின்றனர்.

    அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகி ஆலயத்தில் கடந்த 2003இல் சிறு அளவில் தொடங்கப்பட்ட நாட்டியாஞ்சலி வளர்ந்து இவ்வாண்டு அதன் 13ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மிகச் சிறப்பாக கடந்த பிப்ரவரி 16 முதல் 18 வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த நாட்டியாஞ்சலி பெரும்பாலும் பழைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்துக் கோயில்களில்தான் சிறப்பாக நடந்து வருகிறது. இங்குள்ள வழுவூரும், பந்தநல்லூரும், தஞ்சையும் பரதநாட்டியம் செழித்து வளர காரணமாக இருந்திருக்கிறார்கள். தஞ்சை நால்வர்கள் தொடங்கி, ருக்மணி அம்மாள் போன்ற இசை நடனக் கலைஞர்கள் இவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    திருவையாற்றில் தொடர்ந்து 2003 முதல் நடந்து வரும் நாட்டியாஞ்சலி ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில் நாட்டியக் கலைஞர்களை இங்கு வந்து பங்குபெற ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆலயத்திலிருந்துதான் தஞ்சை பெரிய கோயிலுக்கு ராஜராஜசோழன் முதன் முதலாக நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடல் அரசிகளை மாற்றல் செய்து அவர்களுக்குத் தங்க வீடுகளும் கட்டிக் கொடுத்ததாகக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன.

    அத்தகைய ஆலயத்தில் திருவோலக்க மண்டபத்தில் 1946 வரை ‘சதிர்’ எனும் இறைவனுக்கு ஆடலரசிகள் பரதம் ஆடி வழிபட்ட சான்றுகள் இருக்கின்றன. இப்போதும் அதே மண்டபத்தில் “ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி” நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டில் மட்டும் 48 குழுக்கள் கலந்து கொண்டன. இவற்றில் சுமார் 480க்கும் மேற்பட்ட நடனமணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கெல்லாம் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இவ்வாண்டு கலந்து கொண்டு சில நாட்டியக் குழுக்களைப் பற்றி பார்க்கலாம். வேறு மாநிலங்கலிலிருந்தும் பல குழுக்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மும்பையிலிருந்து மும்பை நிருத்ய கலா நிகேதன் எனும் அமைப்பிலிருந்து குரு திருமதி மயூரி காரத் தனது மாணவிகளுடனும், மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் பாரிஜாத் சுந்தரவன பூங்காவிலிருந்து திருமதி லதா ராஜேஷ் என்பவர் தன் மாணவிகளுடனும் மும்பை காட்கோபர் பகுதியிலிருந்து செளந்தர்யா நாட்டிய கலாலயாவிலிருந்து திருமதி பத்மினி ராதாகிருஷ்ணன் தலைமையில் மாணவிகள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர்.

    அடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் நகரத்திலிருந்து பாரம்பரிய மிக்க கலைக் குடும்பத்தின் வாரிசான பரத நாட்டியாலயாவின் குரு திருமதி சித்ரா நாராயண் தலைமையில் அவரது மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்திலிருந்து அபிக்ஞா கவின்கலை பள்ளியின் திருமதி சுவேதா தலைமையில் அவரது மாணவிகளும், பெங்களூர் கலாக்ஷேத்ரா திருமதி அம்பிலி தேவியின் மாணவியர் பரத நாட்டியமும், டெல்லியில் பிரபல நடன ஆசிரியர் கோவிந்தராஜன் அவர்களின் மாணவியும், பரதக் கலைஞர்களில் சிறந்தவருமான திருமதி உமா B.ரமேஷ் திருஞானசம்பந்த மூர்த்தியின் வரலாற்றை நாட்டிய நாடகமாகவும், வழுவூர் ராமையா பிள்ளையின் கொள்ளுப் பேத்தியும், பிரபல பின்னணி இசைப்பாடகர் மாணிக்க விநாயகத்தின் பேத்தியுமான சீர்காழி பி.வரலட்சுமி என்கிற சிவரஞ்சனியின் நடனமும், திருவண்ணாமலையிலிருந்து கலாரத்னா நாட்டியாலயாவின் கலைச்செல்வி கங்காதரன் மாணவியரும், திண்டுக்கல் நாதலயா நாட்டியப் பள்ளியிலிருந்து திருமதி சுஜாதா ரமேஷ் தலைமையில் அவரது மாணவியரும், சிதம்பரம் தகதிமிதா குழுவினர் குரு அகிலன் தலைமையிலும், காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீ பைரவ விக்யான் நாட்டியாலயாவின் நளினி குழுவினரும், கரூர் எம்.சுகந்தப்பிரியாவின் ஆடவல்லான் நாட்டியக் குழுவினரும் வந்து நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    சென்னை மாநகரத்திலிருந்து பெரும்பாலான நடனக் கலைஞர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அவர்கள் சென்னை பரத நாட்டியாலயாவின் திருமதி லதா ரவியின் குழுவினர், மணலி மோகன அபிநய நாட்டியப் பள்ளி ம.ஹேமலதாவின் மாணவியரும், மாம்பலம் சாய் நிருத்யாலயாவின் ஷோபனா சுரேஷ் மாணவியரும், சென்னை நந்தனம் செல்வி மாதுர்யாவும், செங்கல்பட்டு சரஸ்வதி நாட்டியாலயாவின் சசிகலாவும், மீஞ்சூர் தில்லைக்கூத்தன் நாட்டியப் பள்ளி. சென்னை பிராட்வே தொல்லிசை நாட்டியக் கூடம், சென்னை வேளச்சேரி நூபுர்லயா நாட்டிய அகாதமியின் லலிதா கணபதியின் மாணவியரும், மடிப்பாக்கம் திருமதி மிருணாளினி குழுவினரும், கலாக்ஷேத்ரா மாணவியர் ஸ்வாதி லக்ஷ்மண், அனிதா எட்வர்ட் ஆகியோரும், முகப்பேர் அபிநயவர்ஷினி நாட்டியாலயாவின் இரா.காசிராமனின் மாணவியரும், அரும்பாக்கம் நிருத்ய நிருத்யாலயா மற்றும் கடலூர் அபிநயா நாட்டியாலயாவின் முனைவர் சுமதியின் மாணவியரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    கலைகளுக்குப் பெயர் போன கும்பகோணத்திலிருந்து ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி, தேவிபிரசாத் சங்கீத வித்யாலயாவின் ஜென்சி லாரன்ஸ் குழுவினரும், சிவசக்தி நடனப் பள்ளியின் கவிதா விஜயகுமார் குழுவினர், அபிநயாஸ் விஜயமாலதி மாணவியரும் சிறப்பாக நடனமாடி சிறப்பித்தார்கள்.

    தஞ்சையிலிருந்து பத்மஸ்ரீ நாட்டியாலயாவின் வடிவுதேவி குழுவினரும், ஸ்ரீசக்தி நாட்டியக் கலாலயம் அருணா சுப்ரமணியம் அவர்களின் மாணவி பி.அபிநயாவும், ஓம் சிவாலயா நடனப் பள்ளியின் பரமேஸ்வரி மாணவியரும், தஞ்சை ஜெயா நாட்டியப் பள்ளியின் ஜெயா குழுவினரும், ஆராதனா நாட்டியக் குழுவின் சு.சுலட்சணா மாணவியரும் பட்டுக்கோட்டை பரத கலார்ப்பணா குழுவின் ரமேஷ் கண்ணன் குழுவினரும் ஆடி விழாவைச் சிறப்பித்தனர்.

    16ஆம் தேதி தொடக்க விழாவுக்கு சிட்டி யூனியன் வங்கித் தலைவர் திரு எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் துவங்கி வைத்தார். அப்போது திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ரத்தினவேலு எம்.எல்.ஏ.வும் பேரூராட்சி மன்ற தலைவர் திரு செந்தில்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் போது தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கு.பரசுராமன் அவர்கள் கலந்து கொண்டு, திருவையாறு ஆலயத்தின் ராஜகோபுரத்துக்கு ஒளிவிளக்கு அமைத்துக் கொடுப்பதாக அறிவித்து விழாவைச் சிறப்பித்தார்.

    நிறைவு நாளன்று விழாவுக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆலய நிர்வாகத்தார், விழாவுக்கு நன்கொடை கொடுத்து ஆதரவு தந்த நன்கொடையாளர்கள். தொண்டர்களாக இருந்து சிறப்பாகப் பணிபுரிந்த திருவையாறு அரசர் கல்லூரி சமூகப் பணித்துறை பேரா.மணிக்குமரி மற்றும் அவரது மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவு பெற்றது.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 155

    மலர் சபா
    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    amalar

    சிவந்த இலவம் போன்ற இதழ்களால்
    இளமுத்துப் பற்கள் தெரியச் சிரிப்பர்.
    ஊடியிருந்த காலத்தில்
    கூறாமல் விட்ட மொழிகளையெல்லாம்
    நீலோறபவம் போன்ற
    கண்களையுடைய மகளிர்,
    நெஞ்சில் உள்ள வார்த்தைகளுக்கு
    எழுத்துருவம் கொடுத்து
    இப்போது மயக்கத்துடன்
    குழறிக் குழறிப் பேசுவர்.

    காண்பவர் எல்லாம் சிரிக்கும் வண்ணம்
    அக்காட்சி அமைந்திருந்தது.
    அழகிய செங்கழுநீர்ப்பூ போன்ற
    கயலை ஒத்திருக்கும் சிவந்த நீண்ட கண்கள்
    தம் கடைப்பகுதி திறந்து பூசலுடன் நிற்க
    கொல்கின்ற வில் போன்ற
    புருவங்களின் வளைவுகள்
    உள்நோக்கி வளைந்திருக்க

    திலகம் அணிந்த சின்ன நெற்றியில்
    அரும்பிய வியர்வையுடன்
    தாம் கொண்டுள்ள ஊடல்
    தீரும் வேளையை எதிர்பார்த்து,
    செழுமையான குடியில் பிறந்த
    செல்வந்தர்கள் மட்டுமின்றி
    வையத்தைக் காத்து நிற்கும் அரசர்களும்
    விரும்பி நிற்கும் சிறப்புக்கொண்ட
    காமக்கிழத்தியர் வீதிகளைக் கண்டவாறு
    சென்றான் கோவலன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 137 – 145

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:

    Share
  • குறளின் கதிர்களாய்…(60)

    செண்பக ஜெகதீசன்

     

    உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
    யிடுக்கண் களைவதாம் நட்பு.
    -திருக்குறள் -788 (நட்பு)

     

    புதுக் கவிதையில்…

    உடை நெகிழ்வதைத்
    தடைசெய்துவிடும் கரங்கள்
    உடனடியாய் வந்து..

    அவை போன்றதுதான்
    நட்பும்-
    துன்பம் நண்பருக்கு வருகையில்
    விரைவாய்த்
    துடைத்துவிடுவதால்…!

    குறும்பாவில்…

    ஆடையவிழ்ந்தால் ஓடிவரும் கைபோல்
    நட்பு வரும்,
    நண்பருக்குத் துன்பம் வரும்போது…!

    மரபுக் கவிதையில்…

    இடுப்பில் கட்டிய ஆடையது
    இயல்பு மாறி அவிழ்கையிலே,
    தடுத்து மானம் காத்திடவே
    தானாய் வந்திடும் கையதுபோல்,
    இடுக்கண் வாழ்வில் வரும்போததை
    இதமாய் உடனே விலக்கியேதான்
    கொடுக்கும் நல்ல வாழ்வதையே
    கூடத் துணையாம் நட்பதுவே…!

    லிமரைக்கூ…

    உடையது நெகிழ்ந்தால் கைகள்வரும் ஓடி,
    இதுதான் கதையும் நட்பில்-
    இன்னலகற்ற உடனடியாய் நட்புவரும் தேடி…!

    கிராமிய பாணியில்…

    ஓடிவரும் ஓடிவரும்
    ஒடனக்கை ஓடிவரும்,
    ஒடல்லதுணி அவுந்துண்ணா
    ஒடனக்கை ஓடிவரும்..

    நண்பங்கதயும் இதுபோல,
    துன்பங்கொஞ்சம் நமக்குவந்தா
    துடிச்சிப்போவான் நண்பனுமே,
    தொணவருவான் நம்மகூட
    தொடச்சிருவான் தொயரத்தயே,
    ஒதவிடுவான் கைபோல..

    ஓடிவரும் ஓடிவரும்
    ஒடனக்கை ஓடிவரும்…!

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • தினங்கள்

    றியாஸ் முஹமட்

    awater

    உழைக்கும் தம்பியை
    போற்றுகிறது
    ‘மேதினம்’..!!

    படிக்கிற வயதிலேயே
    உழைப்பா..?  கேட்கிறது
    ‘சிறுவர்’ தினம்..!!

    எப்படியோ போங்கடா
    தண்ணீரை சேமியுங்கடா
    என்கிறது ‘தண்ணீர்’ தினம்..!!

    தினமும்
    தினங்கள்
    போடும் சண்டைகளைப்
    பார்த்து சிரிக்கிறது
    ‘முட்டாள்’ தினம்..!!

    இனி,
    இந்தத் தம்பிக்கு
    எப்பதான் வருமோ
    ஒரு ‘சுதந்திர’ தினம்..!!

    Share
  • தங்கப்பதக்கத்தின் மேலே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தங்கப்பதக்கத்தின் மேலே..

    ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல்ரசம் ததும்பும் கனிவான பாடல்! இதயம் தொடுகின்ற இனிய கலை காதலென்பதை இதுபோன்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நிரூபிக்கின்றன. அட்டியின்றி அவள் அழகை வர்ணிக்கக் காதலன் முற்படும்போது வட்டியும் முதலுமாக அவளும் திருப்பித்தரும் பேரழகு இப்பாடலெங்கும் வியாபித்திருக்கிறது. நாயகனும் நாயகியும் இணைசேர்ந்து இயற்றமிழை உச்சரிக்க நடப்பது அங்கே நாட்டியம் தமிழன்றோ? இவற்றை ஒருங்கிணைக்கும் இனிய பணியை இசைத்தமிழ் இனிதே நிறைவேற்றிட மற்றொரு வெற்றிப்பாடல் மக்களை வந்து சேர்ந்தது.

    amsv

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இது அவரின் பாணி என்று பாடலைக் கேட்கும்போதே சொல்லிவிடலாம்! அதே போல் இரட்டைக்குரல்கள் இணைந்தே ஒலிக்கும்..டி.எம்.செளந்திரராஜன் மற்றும் பி.சுசீலா.. ஜோடிப் பாடலுக்கு இதுபோல் எங்கே இணையான மற்றுமொரு ஜோடிக்குரல்கள்?

    ‘ீபட்” என்கிற இசை வார்த்தையில் சொல்வதென்றால் தலைமுறைகள் பல தாண்டி இன்றும் மக்கள் விரும்பிக் கேட்கும் பாடலாய் இதோ..

    akav

    தங்கப் பதக்கத்தின் மேலே ….akav1

    தங்க பதக்கத்தின் மேலே
    ஒரு முத்து பதித்தது போலே
    இந்த பட்டு கன்னங்களின் மேலே
    ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
    நீயும் விட்டு கொடுத்திடலாமோ

    முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
    மெல்ல தவழ்வது கண்டு
    ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
    மின்னி மறைவது உண்டு
    அழகு நடையை பழகும் சிலையை
    அணைக்க வந்தேனே
    இதழ்கள் பொழியும் அமுத மழையில்
    மிதக்க வந்தேனே (தங்க)

    பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
    பக்கம் நடந்தது என்ன ?
    உயிர் காதல் தலைவன் காவல் இருக்க
    தொட்டு இழுத்தது என்ன ?
    பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்கதோ ?

    ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்கதோ ?

    (தங்க பதக்கத்தின்) மேலே

    கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
    தொட்டு தொடர்ந்தது என்ன
    அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
    கொட்டி அளப்பது என்ன ?
    அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
    கொட்டி அளப்பது என்ன ?
    ஊரும் உறவும் அறியும் வரையில்
    கண்கள் மட்டோடு
    மண மாலை தோளில் சூடும் நாளில்
    கைகள் தொட்டாடு (தங்க)

    தமிழ்க்குலப் பெண்களோடு கற்பு நெறி மாண்பை இரண்டே வரிகளில் இயம்பிடுதல் என்பது வாலி அவர்களைப் போன்ற அனுபவமிக்க கவிஞர்களால் மட்டுமே இயலும்!

    மக்கள்திலகமும் கலைச்செல்வியும் திரையில் தோன்றிடும் இப்பாடல் காட்சி மக்கள் மனதிலும் இன்றும் பசுமையாக! நெஞ்சத்தை விட்டகலாப் பாடலிது என்பதற்கு காரணங்கள் ஒன்றா? இரண்டா?

    https://www.youtube.com/watch?v=EECTm1VOiL0

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் 

      ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல்
    ஏற்றம் பல பெற்றார்.இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால்
    என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.
    வாழவைத்த தெய்வமானார்.கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப் 
    பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

    images (7)

    அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம் பியதாகும்.அவர் தென்றலைத் தீண்டியதில்லை.தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை.பசியாற உண்டதும் இல்லை.அரைவயிறு,கால்வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டைவிட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது.தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார். பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது.பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியைவிட்டு நாடகத்துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது.வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது. எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன்  எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரா னார்.
    நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார்.1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான  ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள். 1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.

    இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம்.சாதாரண எம்ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளே- தான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார் .முரண்டு பிடிக்க மாட்டார். பரியாதை கொடுப்பார்.சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட்டார்.காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்து காணப்பட்டது. அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது.உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுக வில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும் … கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறை கூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.

    ” பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள்.மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை “ என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர்  திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார்.எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது
    கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள் …… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவையில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம்.இயலாத வர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.

    எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம்.அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக் கொள்ளுவாராம்.கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளமாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டு கிறார்.

    எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச்சிந்தனை இருந்து கொண்டே வந்திருக்கிறது. ஆனால் வெளியே அதனை விளம்பரப் படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது.இந்த ஆத்மீகபலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.

    நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு.அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத்தொடங்கினார்.எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.

    மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கினார்.காஞ்சிப் பெரியவரே எம்ஜிஆரை ” இவர் நல்லமனுஷன் ” என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்திகத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால்தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து …. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே ” பொன்மனச் செம்மல் ” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக்குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது அவிப்பிராயமாகும்.

    தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது , தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது …. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி அர்ச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம்ஜிஆரிடம் வந்து கொடுக்கிறார்.

    எம்ஜிஆரும் தேவர் கொடுத்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல் … அதனைவாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல
    எடுத்துக்காட்டுகள் அல்லவா ?

    பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும்.ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது.” முன்னேறியஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள்.அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும் “என்று எம்ஜிஆர் கூறினார்.ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கைதான்.
    கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.

    எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததேயார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !

    எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?
    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத்தொடங்கினார்.திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.
    திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்கு, இவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.
    ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.அதே வேளைதனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர்.ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது.பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை.அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?

    எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை.

    ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர் விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.

    அதற்கு வாலி சொன்னார்- அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக .. வாலிஅவர்களே கூறியிருக்கிறார்கள்.
    தனது கருத்தைச் சொன்னார்.ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவேஇருந்ததை யாவரும் அறிவர்.

    எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர்.ஒழுக்கமாக வாழ்ந்தவர்.ஏழ்மையை நன்கு அனுபவித்தவர்.வீடு இல்லாமல், படிக்கமுடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர்.இல்லாமை இல்லாமல் போகவேண்டும்.

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும்.ஏழைஎன்று சொல்லும் நிலை இருக்கவே கூடாது.கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் ,உணவு அனைவருக்கும் கிடைக்கவேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.

    அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.

    எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன்றினார்.வெற்றியும் கண்டார்.அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக்கொடுத்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய
    தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவனாக,சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய , யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள்,காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.

    இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.

    இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும் கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்களொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை.எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது. இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட .. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.

    எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது … அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து ..

    தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும்.மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.

    அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார்.தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை.எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞ்ஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை.நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது.அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.

    தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார்.கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார்.சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார்.

    அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார். எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கின்றார்.இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.

    மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது.எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது.எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.

    அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல.ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார்.அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறியவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.

    அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள்ளுவார்கள்.கலைஞ்ஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார்.

    எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதையே நினைப்பார்.தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை.அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.

    படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார்.அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்கள்.ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடைவள்ளல் எம்ஜிஆர் அவர்கள்.தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாமனிதர்மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள்.அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தைவிடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.

    ” இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

    நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு
    ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடிநடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக்காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம்.

    அதுமட்டுமல்ல .. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும் ?

    குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும் .. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை.

    ” நான் செத்துப் பிழைச்சவன்டா ” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘ உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே ” என்று எம்மையெல்லாம்உற்சாகப்படுத்தி ” நாளை நமதே இந்த நாளும் நமதே ” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘ நாடோடி மன்னனாகவும் கண்டோம்’ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” ” ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்’ அந்த ” இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா ? அவர்தான் ‘ மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டுகொண்டு இருக்கிறார் !

    Share
  • அகதியும் அதிதியும்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.

    பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.

    வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனுக்கும் சண்டை.

    “நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்? எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறது

     

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++

    http://www.educatedearth.net/video.php?id=3459

    http://education-portal.com/academy/lesson/hot-cold-dark-matter-wimps.html

    http://www.dailymail.co.uk/sciencetech/article-2959836/Could-DARK-MATTER-lead-demise-Mysterious-particles-trigger-volcanic-eruptions-comet-strikes-Earth.html#v-3938513637001

    ++++++++++++++++++++

    காலக் குதிரையின்
    ஆழியைச் சுற்றுவது பரிதி.
    ஊழியின் கரம் பூமியில் வண்ண
    ஓவியம் வரைவது !
    பால்வெளி மந்தை சுற்றும் போது
    கரும்பிண்டம் சேர்ந்து,
    பூமியின் உட்கருவில் சூடு மிகும் !
    தொடரியக்கம் தூண்டி
    வெடிக்கும் எரிமலை,  இடிக்கும் பூகம்பம் !
    உயிரினப் பாதிப்புகள் உண்டாகும் !
    பூமி ஒரு வெங்காயம் !
    உடுப்புத்  தட்டுகள்
    அடுக்கடுக் காய் அப்பித் திரண்ட
    பொரி உருண்டை !
    சூரிய காந்தம், கதிர் வீச்சு
    காமாக் கதிர்கள்
    சூழ்வெளி மாற்றுபவை !
    பூமியின் உட்கரு வெப்பக் கனல்
    அரங்கேற்றம் செய்யும்
    பூகம்ப அடித்தட்டு நடனத்தை !
    வெப்பம் மீறி சுனாமி எழும் !
    கடல்நீர் தாக்கி வீடுகள் உடைபடும் !
    இடி மின்னல் தாக்கும் !
    பரிதி வடுக்களின் காந்தப் புலம்
    கரம் நீட்டி பூமியில்
    நிலநடுக்கம் உண்டாகி
    நிகழும் மனிதச் சேதாரம் !

    +++++++++++++

      Dark matter Influence

    புவியின் வரலாற்றிலே பேரளவில் அழித்த மரண நிகழ்ச்சிகள் உயிரினத்துக்குப் பெரும் பாதகம் செய்துள்ளன.  சிலவற்றுக்குக் காரணம் கூற முடியாமல் நாங்கள் திண்டாடுகிறோம். இன்னும் விளக்க இயலாது பிரபஞ்சத்தில் சுமார் 25% இருக்கும் கரும்பிண்டம் [Dark Matter] ஒருவேளை இதற்கொரு விடை அளிக்கலாம். பெரிதான அளவில் கரும்பிண்டம் சேர்ந்து, பூகோள உயிரினத்தை  நேரிடையாகப் பாதிக்கலாம் என்று கருதுகிறோம்.   நமது பால்வீதி ஒளிமந்தை கரும்பிண்டம் ஊடே சுற்றி எப்போதோ நேரும் எதிர்பார்ப்புப் பூகோளச் சுழற்சி நிகழ்ச்சியால் பூதளவியல், உயிரினவியல் விளைவுகளில் நேரடியாக முக்கியப் பாதிப்புக்களை உண்டாக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

    மைக்கேல் ராம்பினோ [உயிரினவியல் பேராசிரியர்,  நியூயார்க் பல்கலைக் கழகம்]

    கருமைப் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் உயிரினப் பாதிப்பு நேர்கிறது. 

    நமது பால்மய வீதி ஒளிமந்தையுள் சுழலும் பரிதி மண்டலம், பேரளவு காந்த சக்தியுள்ள கரும்பிண்டத்தின் ஊடே செல்லும் போது, பூமியில் எரிமலை வெடிப்பு, பூகம்ப ஆட்டம் ஏற்பட்டு பேரளவு உயிர்ச் சேதங்கள் நேரலாம் என்று பிரிட்டீஸ் ராஜீய வானியல் விஞ்ஞான இதழ் ஒன்றில் [Royal Astronomical Society]  2015 பிப்ரவரி 19 இல் நியூயார்க் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பேராசிரியர் மைக்கேல் ராம்பினோ வெளி யிட்டுள்ளார்.   அவற்றில் சிலவற்றுக்குக் காரணங்கள் என்ன வென்று அறிய முடியாமல் திண்டாடுவதாகவும் அவர் கூறுகிறார்.  பிரபஞ்ச விளைவுகள் பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், பூதளவியல், மின்னியல், கதிர் அலைவியல், காந்தவியல்  சம்பந்தப் பட்ட முறைப்பாடுகளால் மாறுதல் அடைகின்றன.  நாம் தெளிவாக அறியாமல், பிராஞ்சத்தில் 25% நிலவும் கரும்பிண்டம் [Dark Matter] ஒருவேளை நமக்கு விடை அளிக்கலாம்.  பூமியில் நாம் எதிர்பார்க்கும் பாதையில் எப்போதோ நிகழும் பால்வீதித் தட்டு சுழற்சியில் புவி  உயிரினங்களுக்கு நேரடிப் பாதிப்புகள் நேரலாம் என்று ராம்பினோ தன் போலிக் கணினி மாடல் மூலம் கணித்து அறிவிக்கிறார்.   மேலும் பூமியானது கரும்பிண்ட நுழைவாலும், சேமிப்பாலும் வால்மீன்கள் பாதை மாறித் தாக்கி , பூமியின் உட்கரு மேலும் சூடேறி, புவியில் பேரளவு உயிரின மரிப்புகளுக்கு இணைப்பு உண்டாக்கும் என்றும் கூறுகிறார்.

    Dark matter accummulations

    கருந்துகள்கள், கரும்பிண்டம் தூண்டும் பூகோள நேரடிப் பாதிப்புகள்

    1.  பூமியின் உட்கரு சூடேறி வெப்பம் மிகுந்து கடல் நீர் சூடும், அடித்தட்டு அமைப்புகளும் பாதிக்கப் படுகின்றன.

    2.  பால்வீதி ஒளிமந்தை வழியாக நமது பரிதி மண்டலம் சுற்றி வருவதால், பூமியில் பெரு வெள்ளம், சுனாமி, சூறாவளி போன்ற அழிவுகளில் பேரளவு உயிர்ச்சேதாரம் நேர்கிறது.

    3.  நமது பால்மய ஒளிமந்தை ஆப்பத் தட்டில் பேரளவு திரண்டுள்ள கரும்பிண்டமே மேற்கூறிய விளைவுகளுக்கு ஒருவேளை காரணியாக இருக்கலாம்.

    4. நமது நீர்க்கோள் பூமி  சுமார் 30 மில்லியன் ஆண்டுகட்கு ஒருமுறை இத்தகைய பெரும் பிரளய நிகழ்ச்சிகளை [பூகாந்த மாற்றம், டைனோசார்ஸ் மரணம், கடல் மட்ட உயர்ச்சி / தணிவு] எதிர்கொள்ளும்.

    5.  சுமார் 35 மில்லிய ஆண்டுக்கு ஒருமுறை கரும்பிண்டத்தின் ஊடே செல்லும் போது நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் குறுக்கிடவோ, கோள்களைத் தாக்கிடவோ செய்யும்.

    6.  கரும்பிண்டம் வழியே சூரிய மண்டலம் புகும் போது, கரும்பிண்டம் பூமியில் சேர்ந்து, பூமியின் உட்கரு சூடாகி, எரிமலை எழுச்சி அல்லது பூகம்ப ஆட்டத்தைத் தூண்டிவிடும்.

    Lightening striking Earth

    பரிதியின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் மின்னல் அடிப்பு வீதத்தை மிகைப் படுத்தத் தூண்டுவதில் பெரும்பங்கு ஏற்கிறது.  சூரிய காந்தப்புலம் ஒரு பட்டைக் காந்தம் போல் [Bar Magnet] நடந்து கொள்கிறது.  பரிதி சுற்றும் போது, அதன் காந்தப்புலம் பூமியை நேராக நோக்கியோ அல்லது மாறாக எதிர் நோக்கியோ தென்பட்டுப் பூகாந்தப் புலத்தை இழுத்தோ, விலக்கியோ வருகிறது.  காந்தப்புல மாற்றங்கள் மின்னேற்றும் பாட்டரிபோல் [Battery Charger]  சேர்ந்து இடிமின்னல் புயல்களைத் தீவிரமாக்கி அதிகப் படுத்துகின்றன.

    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 

    காலநிலை அறிவிப்போர் சம்பிரதாய முன்னறிப்புடன், துல்லியமாகப்  பரிதியின் சுழி வடிவக் காந்தப் புலத்து அளவையும் [Spiral-shaped Magnetic Field, known as Heliospheric Magnetic Field (HMF)] சேர்த்து வெளியிட வேண்டும்.   2001  ஆண்டு முதல் 2006 வரை கிடைத்த காலநிலைத் தகவலை ஆராய்ந்து, பரிதி காந்தப்புலம் பூமிக்குப் புறம்பாக நோக்கிய போது,  இங்கிலாந்தில் 50% இடிமின்னல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 

    LIGHTNING IN UK -1

    பரிதியின் காந்தப் புலச் சுழற்சி இடிமின்னலை மிகையாக்குகிறது

    2014 நவம்பர் 19 ஆம் தேதி வெளியான ஓர் விஞ்ஞான அறிக்கையில் [IOP Journal, Environmental Research Letters] இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக் கழக [University of Reading, UK] ஆராய்ச்சியாளர், ஐந்தாண்டு காலத்தில் 50% மிகையான எண்ணிக்கையில் இடி மின்னல்கள் இங்கிலாந்தில் அசுர ஆற்றலில் அடித்துள்ளன வென்று கூறியுள்ளார்.  குறிப்பாக அந்தக் காலங்களில் பூமியின் காந்தத் தளத்தைச் சூரியனின் காந்தப் புலம் ஒருபுறமாய் வளைத்துள்ளது என்று காரணம் தெரிந்துள்ளது.  விண்வெளியிலிருந்து வீழும் அகிலக் கதிர் மின்னேற்றத் துகள்களிலிருந்து [Charged Particles like Protons from the Cosmic Rays ] பாதுகாத்துக் கவசம் அளிப்பது பூமியின் காந்த மண்டலமே.  அவ்விதத் துகள்களே தொடரியக்கங்களைத் தூண்டி, தீவிரமான இடி மின்னல் களை முன்பு அறியப்பட்டது.  இம்முறைகள் மூலமாய் இப்போது பல வாரங்களுக்கு முன்பே இடி மின்னல் பேரிடர் விளைவுகளை முன்னதாகவே அறிவிக்க முடியும் என்பது புலனாகிறது.  அதைச் செய்ய காலநிலை அறிவிப்பாளருக்கு, சம்பிரதாயக் காலநிலைக் குறிப்புகளும், துல்லியமாக சூரியனின் கோள நிலைக் காந்தப் புலம் [Heliospheric Magnetic Field (HMF)]  தேவைப்படுகிறது.  சூரியன் சுற்றும் போது, பரிதிப் புயல், பூமியை நோக்கிக் காந்தப் புலத்தை உதைத்துத் தள்ளுகிறது.

    Lightning on Earth

    இதை அறிவித்த பிரிட்டீஷ் ஆய்வாளர் டாக்டர் மாத்யூ ஓவனஸ் [Dr. Matthew Owens] “சூரியனின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் வீழும் இடி மின்னல் எண்ணிக்கையை அதிகமாக்கு வதில் பெரும் பங்கு ஏற்கிறது,” என்றார்.  இங்கிலாந்தின் காலநிலை நிறுவகம் [United Kingdom Met Office], கடந்த 2001 ஆண்டு முதல் 2006 வரை கணிசமாக இடிமின்னல் எண்ணிக்கை 50% கூடியுள்ளதாக வெளியிட்டுள்ளது.

    இடிமின்னல்களின் எண்ணிக்கை, தீவிரத்தை முன்பெல்லாம் முன்னறிய முடியாது.  புதிய ஆய்வுகளின்படி எங்கு, எப்போது இடிமின்னல்கள் தாக்கும் என்பதை முன்னறிவிப்பு செய்வது எளிதானது.   சூரியனின் காந்தப் புல எழுச்சி மேலும், கீழும் ஏறி இறங்கும் போது, பூமியின் காந்தப் புலத்தை ஒருபுறம் வளைத்து, தீவிரச் சக்திப் புரோட்டான்கள் கொண்ட அகிலக் கதிர்களைப் [The Cosmic Rays (High Energy Protons)] புவித்தளம் மீது பொழியச் செய்கிறது.   அப்போது அகிலக் கதிர்கள் புவியின் வாயு மண்டலத்தில் வழியுண்டாக்கிப் புயல் முகிலில் மின்னேற்றம் மிகையாக்கி [Electrical Charge builds up in Storm Clouds] பூமியைத் தாக்குகிறது.  சூரிய கோளம் 27 நாட்களுக்கு ஒருமுறை தன்னச்சில் சுற்றுகிறது.  அதாவது சூரிய காந்தப் புலம் இரண்டு வாரங்கள் பூமியை நேர் நோக்கியும், இரண்டு வாரங்கள் எதிர் நோக்கியும் உள்ளது.  ஆதலால் பாதி பரிதி சுழற்சியில், பூமியில் தாக்கும் இடிமின்னல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

     Solar magnetic field -1

    “சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே !  பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர்  நிகோலா ஸ்கஃபீட்டாவும்  ஒப்புக் கொண்டோம்.”

    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)

    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது !  பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன.  இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”

    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)

    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது !  பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது.  துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை !  வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன.  இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை.  இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.

    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)

    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது.  அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும்.  [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”

    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1A Earth's Internal Structure

    அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?

    பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை !  ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது.  கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டுகளையும் நகர்த்தி வருகிறது.  பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடு கிறார்கள்.  இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது.

    இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன !  ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன !  அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது !  இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் !  பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது !  உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.

    Sun's Pole Reversal

    ஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது !  இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள்.  கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன.  ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன.  அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம்.  1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன !  அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் !  உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை !  வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !

    பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்

    பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி !  அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது !  இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ?  எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ?  ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ?  பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும்.  அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது.  மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது.  லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன !  அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன.  அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    Fig 1D Earthquake Wave Travel

    பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள்.  நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது.  பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது.  நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.

    பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு

    பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார்.  அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :

    Mitch Buttros Equation :

    Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption

    Fig 3 The Equation for Sunspots & Extreme Weather

    மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :

    பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>> பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத் துன்பங்கள்.

    மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகியோருடன் உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.

    Fig 5 Ulysses Solar Probe

    சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்

    பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின் வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத் தெரிகிறது.  பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின் கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது.  அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே !  சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது !  நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும் (விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின் பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன.

    பூமியில் இடி மின்னல் தாக்குவது போல் பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது.  பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகியவற்றை ஆய்ந்து உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின் “கனற் திணிவு வெளியேற்றம்” [Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத் துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும் உண்டாக்குகின்றன !

    Fig 1G The Climate Connection

    பூகாந்த முனைத் திருப்பமும் கண்டங்கள் நகர்ச்சியும்

    1900 ஆண்டுகளில் ஜெர்மன் பூதள விஞ்ஞானி ஆல்ஃபிரட் வெகினர் (Alfred Wegener) உலகக் கண்டங்களின் வரைப்படங்களைக் கண்டு ஒரு யுகத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கே ஒட்டி இருந்தன என்றும் பிறகு மெதுவாக அவைத் தனித்தனியாக புலம்பெயர்ந்து தற்போதுள்ள இடங்களில் அமைந்துள்ளன என்னும் தனது “உலகக் கண்டங்களின் பிரிப்பு” நியதியை (Continental Drift Theory) அறிவித்தார்.  அதற்குச் சான்றாக பொருந்திடும் விளிம்புகளில் 1918 இல் அவர் பல்வேறு கண்டத்துப் பாறைகள் ஒத்திருந்ததைக் கண்டார்.  கடலில் மிதந்து நகரும் பெரும் பனிப்பாறைகள் போல், கண்டங்களும் பூமியின் உலோக திரவத்தில் மிதந்து நகர்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார்.  அவ்விதம் பல மில்லியன் ஆண்டுகள் மெதுவாக நகர்வதற்குச் சக்தி அளித்தது பூமியின் உட்கரு வெப்பமே என்றும் கூறினார்.  ஆல்ஃபிரட் வெகினர் கூறிய கண்ட நகர்ச்சி நியதிக்குக் கடும் எதிர்ப்பு பூதள விஞ்ஞானிகளிடம் முதலில் இருந்து, பின்னால் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    மீளும் பூகாந்த முனைத் திருப்பங்கள்

    எரிமலைக் கண்ணில் பொங்கிக் கசியும் குழம்பு (Lava) பூமியின் மேல்தளத்தில் குளிர்ந்து பாறையாக இறுக்கம் அடைகிறது.  பெரும்பான்மையாக அது கறுப்பாக இருக்கும் பஸால்ட் பாறைக் காந்தமாகும் (Magnetic Basalt Rock).  அப்பாறைக் காந்தம் குளிரும் போது பூகாந்தத் தளத்தின் துருவத் திசையிலே உண்டானது.  காந்த மானிகள் பஸால்ட் காந்த துருவத்தைக் கண்டுவிடும்.  அவ்விதம் பலதடவைகளில் எரிமலை கக்கும் போது உண்டாகும் பாறைப் படிமானங்கள் வெவ்வேறு (நேர்-எதிர்) திசைக் காந்த முனைகளைக் கொண்டிருந்ததால் பூமியானது தனது காந்த முனைத் திருப்பங்களை எத்தனை முறை செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

    [தொடரும்]
    +++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
    19 India Daily Technology Team (Aug 8, 2005)
    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)
    29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
    29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website :http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov&gt; (April 25, 2007)
    31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
    32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
    33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    34 National Geographic Picture Atlas of Our Word (1990)
    35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    36.  http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field  [March 7, 2014]

    37.  http://www.sciencedaily.com/releases/2014/11/141119204849.htm  [November 19, 2014]

    38.  http://www.iop.org/news/14/nov/page_64495.html  [November 19, 2014]

    39. http://www.spacedaily.com/reports/Suns_rotating_magnetic_field_may_pull_lightning_toward_Earth_999.html  [November 24, 2014]

    40. http://en.wikipedia.org/wiki/Stellar_magnetic_field    [November 24, 2014]

    41.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/02/our-solar-systems-milky-way-orbit-through-dark-matter-impacts-life-on-earth.html?  [February 19, 2015]

    42.   http://www.astrobio.net/news-exclusive/how-to-keep-lonely-exoplanets-snug-just-add-dark-matter/ %5BJune 23, 2011]

    43.  http://www.nyu.edu/about/news-publications/news/2015/02/19/does-dark-matter-cause-mass-extinctions-and-geologic-upheavals.html  [February 19, 2015]

    44.  http://www.dailymail.co.uk/sciencetech/article-2959836/Could-DARK-MATTER-lead-demise-Mysterious-particles-trigger-volcanic-eruptions-comet-strikes-Earth.html  [February 19, 2015]

    ******************

    [S. Jayabarathan] jayabarathans@gmail.com (February 21, 2015)

    Share
  • பழமைபேசியின் தந்தை இயற்கை எய்தினார்!!

    நம் பழமைபேசியின் தந்தையார் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

    பழமைபேசியை தொடர்பு கொள்ள ; 04222688726

    வல்லமை ஆசிரியர் குழுவினர்

    apaza

    Share