இந்த வார வல்லமையாளர்!
பிப்ரவரி 23, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு வைதேகி அவர்கள்
“மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை வாழ்ந்து காட்டும் வைதேகி அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராக வல்லமை இதழ் அறிவிக்கிறது. வைதேகி சென்ற ஞாயிறு அன்று தனது வலைப்பூவில் புற்றுநோயை எதிர்த்து தான் போராடியதை “My fight against the dreadful disease – CANCER” (http://vaidehivc.blogspot.com/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html) என்று எழுதியிருந்தார். கொடிய நோய் என்று மனம் தளர்ந்துவிடாமல்,போராடி வெற்றிபெற்றதுடன், நோயைப்பற்றியும், அவர் பெற்ற சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் பற்றிய அவரது அனுபவங்களை படங்களுடன் அவர் மிக விரிவாக பகிர்ந்து கொண்டது பாராட்டத் தக்க செயலாகும். அத்துடன் நில்லாமல் நோயைப் பற்றி மேலும் தகவல் பெற விரும்பினால், நம்பிக்கை, ஊக்கமூட்டும் வார்த்தைகளை கேட்க விரும்பினால் தான் உதவத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டதன் மூலம் தனது வாழ்க்கை பிறருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் என்பதையும் உணர்த்துகிறார். வைதேகியை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம். அவரை பரிந்துரைத்த வல்லமை வாசகர், ஓவியர், கவிஞர் சு. ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. வைதேகியின் சோதனையான வாழ்க்கையையும், அதில் அவர் சாதனை நிகழ்த்தியதையும் வல்லமைக் குழுவினருடன் பகிர்ந்து கொண்ட வல்லமை எழுத்தாளர் திரு. பழமைபேசி அவர்களும் பாராட்டிற்குரியவர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெற்றவர் வைதேகி. அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மற்ற எல்லா சென்னை பெண்களைப் போலத்தான் நானும் பொறியியல் படித்தேன், கணினி மென்பொருள் துறையில் வேலைக்கும் சேர்ந்தேன், 23 வது வயதில் எனது அன்புக் கணவரை மணந்தேன், மறு ஆண்டு ஆசை மகள் பிறந்தாள் என்று குறிப்பிடுகிறார். தற்பொழுது ‘ஈ ஆர் பி ஆலோசகராக’ ‘சி டி எஸ் குளோபல்’ நிறுவனத்தில் பணிபுரிகிறார் (Eenterprise Resource Planning, Consultant at Cognizant Technology Solutions).
அலுவலகத்தில் நண்பர்களுடன் அனுதினமும் வேலையில் கருத்தாலோசனை, தோழியருடன் ஹோலி கொண்டாட்டம், தானும் பாடுவதுடன் மகள் ‘எஸ் கே’ யின் மழலைக் குரல் பாடல்களை இணையத்தில் பதிவேற்றுவது, மகளுக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்வது, சேமியா உப்புமா, வெஜிடபிள் பிரியாணி சமைத்து அவற்றைப் படங்கள் எடுத்து நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் பகிர்ந்து கொள்வது, சுற்றுலா சென்ற படங்களை பகிர்ந்து கொள்வது என சராசரிப் பெண்ணாக அவர் வாழ்க்கை ஓடியது.
நடிகர் கமல்ஹாசனைப் பிடிக்கும், எம் ஜி எம் ரிசார்ட் பிடிக்கும், கைவினைப் பொருட்கள் பிடிக்கும், ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும் என்று சிறுமி போன்ற ஆர்வத்துடன் தன்னைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த மென்மையான் உள்ளம் கொண்ட, பார்ப்பதற்கு நமது அடுத்த வீட்டுப்பெண் போன்ற தோற்றம் கொண்டவரின் உள்ளம் இவ்வளவு உறுதியானதா என வியக்கவும் வைக்கிறார் நோயுடன் தான் நடத்திய போராட்டத்தை விவரிக்கும் பொழுது.
இவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாழ்க்கையின் ஓரத்திற்குச் சென்று வந்தவர் இவர். சென்ற ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் இவரது கழுத்தின் வலதுபுறம் சிறு கட்டி ஒன்று தோன்றவும், அதைத் தொடர்ந்து காய்ச்சல், தொண்டையில் வலி, உடல் அசதி என்று தோன்றியிருக்கிறது. பணி முடித்து வந்து வீட்டு வேலைகளை செய்ய இயலாமல் சோர்ந்திருக்கிறார். இந்நிலை தொடரவும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றதில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இவருக்கு நிணநீர் மண்டலப் புற்று நோய் இருப்பதும், அது இரண்டாம்நிலையை அடைந்துள்ள “ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா” என்ற வகையைச் சார்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டது.
நோயின் தீவிரத்த்தின் அடிப்படையிலும், 28 வயதே ஆன இவரது இளவயதையும் கணக்கில் கொண்டு இரத்தக்குழாய்களின் வழியே மருந்து செலுத்தும் கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சையின் பக்க விளைவுகளான வாய் மற்றும் வயிற்றில் புண், ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்வதால் அதிகம் பசித்தாலும் வாய்க்கு சுவையின்றி இருப்பதால் உணவை உண்ணமுடியாத நிலை, கழுத்திலும் மார்பிலும் கொழுப்பு படிமங்கள், நீர்கோர்த்து உடல் எடை அதிகரித்தல், முகம் ஊதிப் போதல், முடி கொட்டுதல், அடர்வு நிறைந்த மருந்துகளை செலுத்துவதால் ரத்த நாளங்களில் வலி என்று பல துன்பங்களை அடைந்திருக்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க வழியின்றி உடல்வலியும் அசதியும் இவரை ஆட்டிப்படைத்ததில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் விருப்பமின்றி மனம் சோர்ந்திருக்கிறார்.
இவர் தனது வாழ்வில் எதிர்கொண்டதை இவரது ஃபேஸ்புக் காலக்கோடு பதிவுகளும் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட்டில் நோய் தோன்றி அதைக் கண்டுபிடித்து அக்டோபரில் சிகிச்சை தொடங்கும் பொழுது, “சென்ற ஆண்டு இதே நேரம் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதைப் பற்றிய விளக்கம் இல்லை. “வாழவிருப்பமுள்ளவர்கள் போராடுவார்கள், நம்பிக்கையுடன் இருப்பார்கள், வெற்றி அடைவார்கள், புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வோம்” என்று மற்றொரு பதிவு வருகிறது. “நான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன், யாரேனும் என்னிடம் உன்னைப் பின்பற்றியதால் நான் போராட்டத்தைக் கைவிடவில்லை என்று சொல்வதை விரும்புகிறேன்” என்கிறார். ஆனால் அவர் குறிப்பிட்டதன் பொருள் நண்பர்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல “லைக்” போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.
மறுவாரம் வருத்தம் நிறைந்த முகம் கொண்ட தனது படத்தை பதிவிடுகிறார், ஏன் முகம் வாடியிருக்கிறது? என்ன ஆயிற்று? என்ற மறுமொழிகள் நண்பர்களிடம் இருந்து வருகிறது. அதற்கு மறுவாரம் “எனக்கு லிம்போமா புற்றுநோய், அதை ஒழித்துக் கட்டுவேன்” என்ற வாக்கியம் கொண்ட படம் போடுகிறார். நண்பர்கள் ஆறுதல் சொல்லி, நம்பிக்கையை கைவிடாதே என்று உற்சாக மூட்டுகிறார்கள். அடுத்தமாதம் நோயின் தாக்கம் கொடுமையாக இருக்கிறது என்றும், அதற்கடுத்த மாதம் டிசம்பரில் சிகிச்சையின் பக்க விளைவால் தலை வழுக்கையானதை வேடிக்கையாக, அழகிய வழுக்கை விழுந்த பெண், புற்றுநோயை தாக்குகிறாள் என்றும் குறிப்பிடுகிறார்.
நகைச்சுவையை உணர்வைக் காட்ட நினைத்தாலும், சிறுவயதிலேயே நோயுடன் போராடும் நிலையும், எதிர்காலம் கேள்விக்குறியானதை எதிர்கொள்வதும் அவருக்கு சுலபமாக இருந்திருக்கவில்லை. அடுத்தவரை நம்பி தினசரி செயல்களை முடிப்பதும், சிகிச்சையினால் முடி கொட்டுவது என உருவத்தை மாற்றிய பக்க விளைவுகள் ஆகியவற்றால் மனம் மிகத் துவண்டு இருக்கிறார். தனது நம்பிக்கையை கைவிடாது இருக்கவும், தனது மனதை வேறுவழிகளில் செலுத்தி தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் காகித கைவினைபொருட்கள் செய்வது, கார் ஓட்டும் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவது, உடற்பயிற்சிகள் செய்வது, குழந்தையுடன் விளையாடுவது போன்றவற்றில் மனதைச் செலுத்தி நோயின் கொடுமையை மறக்க முயன்றிருக்கிறார். கணவரும், மகளும், குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும் அவருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இத்துயர நாட்களில் உண்மையான அன்பு செலுத்துபவர்களையும் அவர் அடையாளாம் காண நேர்ந்திருக்கிறது.
டிசம்பர் முதல்வாரத்தில் 6 சுற்று கீமோதெரப்பி மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் செல்கள் உடலில் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் அறிவித்த பின்னர், மேலும் இரண்டு சுற்று கீமோதெரப்பி சிகிச்சை அளித்து முற்றிலும் குணமடையச் செய்துவிடலாம் என்று நம்பிக்கையை அளித்துள்ளார்கள். டிசம்பர் ஆறாம் தேதி சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் முற்றிலும் நீங்கி கடந்த இரண்டரை மாதங்களாக உடல்நலம் தேறி வருகிறார்.
தங்களின் அன்புக்குரியவர்களை புற்றுநோய் பாதித்த அனுபவம் கொண்டவர்களை இவர் சந்தித்த பொழுது அவர்களது அனுபவங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார். யாருக்குமே வாழ்வு சுலபமானதல்ல, வாழ்வில் அனைவருமே துன்பத்தை சந்தித்தவர்கள்தான் என்பதை உணர்ந்தேன் என்கிறார். பெயர், புகழ், செல்வம் ஆகியவை முக்கியமல்ல. பிறரிடம் நாம் அன்பு செலுத்துவதும், அவர்கள் அன்பைப் பெறுவதும்தான் வாழ்வில் முக்கியமானது என்றும் கூறுகிறார்.
நோய் தொடங்கிய பொழுதே இதனை எதிர்த்து போராடி மற்றவருக்கு முன்மாதிரியாக தான் இருக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்ட வண்ணம் அதை நிறைவேற்றியும் உள்ள வைதேகியின் வல்லமை பாராட்டிற்குரியது. புற்றுநோயுடன் தளராது போராடி மீண்டு வந்த வைதேகியின் மன உறுதியையும், தனது போராட்டத்தை அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம் அறிவித்து பிறருக்கும் ஊக்கம் தர முன்வந்த வைதேகியை உடல்நலத்துடன் நீடூழி வாழவும், மேலும் பல சாதனைகள் புரியவும் வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
தொடர்புக்காக:
மின்னஞ்சல்: vaidehi1986@gmail.com
கூகுள் பிளஸ்: https://plus.google.com/111332645448742010863
வலைப்பூ: http://vaidehivc.blogspot.in/
பேஸ் புக்: https://www.facebook.com/vaidehi.vc
லிங்ட் இன்: https://in.linkedin.com/pub/vaidehi-vc/26/321/318
இசைக்கோர்வைகள்: https://soundcloud.com/vaidehi-vc/
வாதை தனை வென்று வரலாறு கண்டாய்,
வதைபடும் பலருக்கும் நம்பிக்கை தந்தாய்
பாதை புதிதாய்ச் சமைத்த வைதேகி வாழ்க
பளிச்சிடும் உள்ளொளியில் புற்றிருள் மாய்க!
நோய் நொடி நீங்கிய வைதேகி என்றென்றும் வாழட்டும் இதே மன திடத்துடன்.
வழக்கம்போல் இந்த வாரமும் வல்லமையாளர் ஒரு எழுத்தாளர் எனும் எண்ணத்தில் படிக்க துவங்கினேன், படிக்க படிக்க ” பார்ரா இந்த பொண்ணோட தைரியத்தை” என்று என் வாய் என்னை அறியாமல் சொன்னது. நோய் வந்தால் சுருள்வது சிகிச்சை எடுத்துக்கொள்வது குணமானபின் வெளியில் வருவது என்பது எத்தனை மன திடகாத்திரம் உள்ளவருக்கும் இது பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் போட்டோ எடுத்து பஞ்ச் எழுதி அப்லோட்
செய்வதெல்லாம் இதுபோன்ற தைரிய மனுஷியால் மட்டுமே முடியும்.
இரும்பு பெண்மனி என்று படிக்கிறோம் எழுதுகிறோம் , ஆனால் காண்கிறோம் என்பது சம காலத்தில் இவர் ஒருவர்தான்.
வைதேகி.. என்ற பெயர் சீதையை நினைவூட்டும் நேற்று வரை..
நம்பிக்கை .. மன திடம் போன்ற வார்த்தைகளை நினைவூட்டும் இன்று முதல்…
படிக்கின்ற போதே புத்துணர்வு தருகின்றதம்மா உமது வைராக்கியம்…
ஒன்றுமில்லா பிரச்சனைகளே நம்மை மூழ்கவைக்கின்றன என்கிறோம்… இதோ
பிரச்சினையையே ஒன்றுமில்லாமல் ஆகிய உம்மை உளமாரப் பாராட்டுகிறோம்!
வல்லமையாளர் என்கிற வார்த்தை இன்றுமுதல் கெளரவம் பெறுகிறது!
உங்கள் பதிவு இனிவரும் தலைமுறைக்குப் பாடம்..
வாழ்த்துகள்.. பாராட்டுகள்… நலமுடன் நாளெலாம் வாழ்க!! வாழ்க!!
காவிரிமைந்தன்
மனிதருக்கு மரண வலிபோல் இடையூறு எது வரினும் அதைத் தாங்கிக் கொண்டு வேதனையுடன் போராடி, ஆக்க பூர்வப் பாதை ஒன்றைக் காட்டி வெற்றி பெற்ற மாதர் குல மாணிக்கம், வைதேகியை அறிமுகம் செய்த தேமொழிக்குப்பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்