மீ.விசுவநாதன்

“கல்லிடைக் குறிச்சி”

DSC_0435

தமிழகத்தின் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்பொதிகையின் அடிவாரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் கல்லிடைக்குறிச்சி. அது வற்றாத ஜீவ நதி தாமிரபரணியின் செல்லக் குழந்தை . பசுமையான வயல் வெளிகளும், தோட்டங்களும் , தென்னந் தோப்புகளுமானச் செழிப்பான பூமி. பதினெட்டு அக்ரஹாரங்கள். அந்தக் காலத்தில் , அதுதான் 1950களில் அக்ரஹாரம் முழுவதும் பிராமணர்களே குடியிருந்தார்கள். தவிர செட்டிப் பிள்ளைமார் தெரு, முதலிமார் தெரு, பள்ளிவாசல் தெரு, மாதாகோவில் தெரு என்று அனைத்து மக்களும் அன்போடு இன்றும் வாழ்கின்ற ஊர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு கோவிலும் உண்டு. ஸ்ரீ ஆதிவராஹப் பெருமாள் கோவில்தான் மிகப் பழமையானதும் , குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான புகழ் மிக்க ஒன்று. தவிர டுண்டிவினயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வாழ உகந்த அம்மன், ஸ்ரீ வடக்கு பார்த்த செல்வி, ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ குமாரன், ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி, ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ காமாக்ஷி, ஸ்ரீ வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ மானேந்தியப்பர் , ஸ்ரீ காந்தாரி அம்மன் இவை தவிர சிறு சிறு பிள்ளையார் கோவில்களும் உண்டு. சித்திரை மாத ஸ்ரீ ஆதிவராகர் தேரோட்டம் மிகப் பிரபலம். எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தேரோட்டம் பார்ப்பதற்காகவே விடுமுறையில் வந்துவிடுகின்ற என்போன்ற ஊர்ப் பைத்தியங்கள் இன்றும் இருக்கிறார்கள்.

வேதம் நிறைந்த ஊர்

DSC_0167

ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் குறைந்தது இரண்டு தீஷிதர்கள், நான்கு கனபாடிகள், மற்றும் வேதம் கற்ற பண்டிதர்கள் என்று இருந்ததால் இந்த ஊரை வேதக் கல்லிடைக்குறிச்சி என்றும் அழைத்தனர். கார்த்திகை மாத முதல் தேதியில் இருந்து முப்பதாம் தேதி வரையில் கந்தப்பபுரம் தெருவில் உள்ள “ஸ்ரீ முருகன்” கோவிலிலும், ஸ்ரீ வராகபுரம் தெருவின் கடேசியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா கோவிலில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பதினொன்றாம் தேதி வரை பதினோரு தினங்களும் “வாரம்” என்று அழைக்கக் கூடிய வேத பாராயணம் நடக்கும். அதில் வேதத்தில் மிகுந்த பாண்டித்தியம் உள்ள தீஷிதர்கள், கனபாடிகள் மற்றும் பண்டிதர்களும் (சாஸ்திரிகள்) கலந்துகொண்டு தாங்கள் கற்ற வித்தையை மற்றவர்களோடு சுவாமியின் சன்னதியில் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கக் கண்கள் கோடி போதாது. தவறு இல்லாமல் சொன்ன வேத பண்டிதருக்கு சன்மானமும், கௌர்வமும் கிடைக்கும். இரவில் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானமும் உண்டு. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வேதியர்கள் தங்களது வேதக் கல்வியறிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு சமஸ்கிருத கல்லூரியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது. பின்னாளில் அங்கு காசி விசுவநாதர், விசாலாக்ஷி பூஜையும் , வருடா வருடம் ஐந்து தினங்கள் ஸ்ரீ சங்கர ஜயந்தி உற்சவமும் நடைபெற்று வந்தது. கரந்தையார் பாளைய பிராமண சமூகத்துக்குச் சொந்தமான இந்த இடம் இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கிறது. இதன் மேற்குப் புறத்தில், நதிக்குச் செல்லும் பாதையில் நிறைய அதிஷ்டானங்கள் (துறவிகளின் சமாதி) இருப்பதை இப்போதும் காணலாம்.

சங்கீத ரசனைச் சீமை

DSC_0338சங்கீதத்திலும் மிகச் சிறந்த வித்வான்கள் இந்த ஊரில் இருந்தார்கள். அதில் சங்கீத கலாநிதி வேதாந்த பாகவதர் (இவர் ஒரு தேவி உபசகரும் கூட) , அவருடைய சகோதரர் இராமலிங்க பாகவதர் மிக முக்கியமானவர்கள். இவர்களைத் தவிர வி. ராமலிங்க பாகவதர் என்று இன்னொருவரும் வடக்கு ரத வீதியில் வசித்து வந்தார். வேதாந்த பாகவதரின் சீடர்கள்தான் மகாதேவ பாகவதர், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். இவர்களுக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாதமி “சங்கீத கலா ஆசார்யா” என்ற விருது கொடுத்துச் சிறப்பித்தது. இவர்களைப் போல ஹரிஹர பாகவதர், எம்.ஆர்.ஆதிவராகன் போன்ற சங்கீத வித்வான்களும் இருந்தனர்.

எம். சங்கரநாராயணன் (அம்பிச்சா..என்று அழைக்கப் படுபவர்) GNB அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். தஞ்சாவூர் கல்யாணராமன் அவர்களிடமும், TMT அவர்களிடமும் சங்கீதம் கற்றவர். இன்றும் தியாகராஜர் ஆராதனை உற்சவத்தை ஊரில் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். அதேபோல சிலேடைப்புலி சுப்பையா பாகவதரும் தெற்கு மாடத் தெருவின் முதல் வீட்டில் குடியிருந்தார். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, கல்கத்தா குருமூர்த்தி ஆகியோர்களிடம் சங்கீதம் கற்ற கல்கத்தா கலா, சித்ரா சகோதரிகளுக்கும் இவ்வூர்தான்.

DSC_0320

முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் பக்தி பஜனையின் மூலமாக ஆன்மிகச் சிந்தனையை மக்களிடம் பரப்பி வந்தார். துவாதசி தோறும் உஞ்சவிருத்தி பஜனை செய்வார். ஒவ்வொரு வருடமும் மாசி மாத சிவராத்திரி அன்று “முருகன்” அகண்ட நாம உத்சவம் நடத்துவார். அதில் பிரபல வித்வான்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு பாடுவார்கள். பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் ஸ்ரீ ஐயாஸ்வாமிகளின் முருகன் அகண்ட நாம நிகழ்ச்சிகளில் விரும்பிக் கலந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஸ்ரீ ஐயாஸ்வாமிகள் ஆடி அம்மாவசை அன்று பாபநாசத்துக்கு மேல் இருக்கக் கூடிய பாணதீர்த்தத்தில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்வதைக் கடமையாகவே கொண்டிருந்தார்.

வடக்கு மாடத்தெருவில் இருக்கிற பஜனை மடத்தில் நடைபெறும் கோகுலாஷ்டமி உற்சவத்தின் போது மிகப் பிரபலமான தமிழகத்தின் சங்கீத வித்வான்கள் பலர் கச்சேரிகளும், உபந்யாசங்களும் செய்திருக்கிறார்கள். வெங்கட்ராமையர் , பண்ணை சுந்தரம் ஐயர் இருவரும் காலாருமினியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினர். இருவருமே மிராசுதாரர்களாக இருந்தவர்கள். சங்கீத பிரியர்கள். பஜனை பாடுவதில் சஞ்ஜீவி பாகவதரைப் போலவே நம்பி ஐயங்கார், எம்.ஆர். ராமநாராயணன் போன்றவர்கள் செவிக்கு விருந்து வைத்த செம்மல்கள். பொதுவாகவே இந்த கிராமத்து ஜனங்களுக்கு சங்கீதத்தில் நல்ல ரசனை உண்டு. மாடுகளை மேய்த்துக் கொண்டு போகும் பொன்னன் ,” எலே அங்கன தெக்கநீக்கி மாட்டப் பத்திக்கிட்டு போலே” என்று இழுத்துச் சொல்வதிலும், “கத்தரி, வெண்டை, கரணை, பாவக்காய்” என்று வியாபாரக் குரல் கொடுக்கும் மூக்கனின் குரலிலும் சங்கீதம் இருக்கத்தான் செய்கிறது.

செய்யும் தொழிலே தெய்வம்

அப்பளத் தொழிலில் இருந்து சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வரை இந்த கிராமம் திறமைசாலிகளைப் பெற்றிருந்தது. இந்தியா சிமென்ட் நிறுவனர் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர், ஈசன் நிறுவனத்தின் ஈஸ்வர கிருஷ்ண ஐயர், ராயல் என்பீல்ட் கே.எஸ். சுந்தரம் ஐயர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பிற்காலத்தில் அவர்களது தலைமுறையில் வந்த இந்தியா சிமென்ட் கே.எஸ்.நாராயணன் (இவர்தான் பின்னாளில் “கெம்பிளாஸ்ட்” நிறுவனத்தை உருவாக்கினார்), என்பீல்ட் எஸ். விஸ்வநாதன், ஈஸ்வர கிருஷ்ண ஐயரின் மகன் ஹரி ஈஸ்வரன், கிருஷ்ணா மைன்ஸ் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கிட்டா மணி ஐயர்) என்று தொடர்ந்தது.

“உண்டியல் கடை” என்று வைத்து வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த செல்வர்களால் சிறப்புப் பெற்றதும் இந்த ஊர்தான்.

அப்பளத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அம்மாமி அப்பளம் டெப்போ , கணபதிலிங்கம் அப்பளம் டெப்போ, சந்திரா அப்பளம் டெப்போ, சக்தி அப்பளம் டெப்போ, செல்லவிலாஸ் அப்பளம் டெப்போ, ஆதிவராஹா அப்பளம் டெப்போ, லக்ஷ்மிவிலஸ் அப்பளம் டெப்போ, ஸ்ரீ சீதாராமன் அப்பளம் டெப்போ, காந்திமதி அப்பளம் டெப்போ என்று எங்கு திரும்பினாலும் அப்பளக் கம்பெனிகளே கிராமத்தில் குடிசைத் தொழிலாக நிரம்பி இருந்தது . சுவைக்கும், தரத்திற்கும் பெயர் பெற்று விளங்கியது. “வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும்” நினைத்தாலே சுவைக்க வைக்கும் அனுபவத்தை இந்த ஊர் தந்தது. போகப் போக இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. இப்பொழுது சங்கர் அப்பளம், ஸ்ரீ சீதாராமன் அப்பளம், ஸ்ரீ ஆஞ்சநேயா அப்பளம் என்று ஒரு சில அப்பள டெப்போக்கள்தான் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுதும் அரிசி அப்பளம், புழுங்கல் அரிசி முறுக்கு, தட்டை, மாலாடு, முனகரம், சீடை மற்றும் இனிப்பு வகைகளின் தயாரிப்பில் இந்த ஊர் பேர்சொல்லும் பிள்ளையாகவே இருக்கிறது.

இலக்கியச் செல்வங்கள்

சரித்திர ஆராச்சியாளர் நீலகண்ட சாஸ்திரி, சிறுகதை, நாவல் என்று முத்திரை பதித்த “ஆதவன்”, பாரதிக்கு தொண்டு செய்துவரும் பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, திரைபடத் துறையில் குறிப்பாக “டப்பிங்” தொழிலில் சிறந்து விளங்கி , இராமாயணம், கிருஷ்ணா போன்ற சின்னத்திரை நீண்ட தொடர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த கவிமாமணி கு. தேவநாராயணன் போன்ற இலக்கிய வாதிகளையும் இந்த உலகத்துக்குத் தந்து மகிழ்தது இவ்வூர்.

சிவராத்திரி காலத்தில் தெருவுக்குத் தெரு நாடகம் போடும் குழந்தைகளை ஊக்குவிப்பார்கள் இந்த ஊர் மக்கள். வெங்கடாசலம் ஐயர் கதை, வசனம் , இயக்கத்தில் நடைபெற்ற “ஜெய் பவானி” என்ற நாடகத்தை என் சிறுவயதில் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் வைத்துப் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது. அதில் பாரத மாதாவாக நடித்த சி. சங்கரசுப்ரமணினும்(சி.எஸ்.), ஔரங்கசீப்பாக நடித்த சங்கரராம சுப்பிரமணியனும் (இன்றும் அவரை ஔரங்கசீப் மாமா என்றல்தான் தெரியும்.), கையில் தடியுடன் போலீஸ்காரனாக நடித்த பேப்பர் ராமலிங்கம், H.கிருஷ்ணன் அவர்களையும் இன்றும் என் இதயம் நினைத்துக் கொண்டிருக்கிறது. இன்று நாடகத் துறையில் பிரபலமாக விளங்குகின்ற “நாணு” (ச. லெஷ்மி நாராயணன்) வுக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.

தேச விடுதலை, கல்வியில் ஊரின் பங்கு

சுகந்திரப் போராட்ட காலத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட கோமதி சங்கர தீட்ஷிதர், லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், ய்க்யேஸ்வர சர்மா , தியாகி சுப்ரமணிய ஐயர் போன்ற தீரர்களையும் பெற்றது இவ்வூர். அவர்களின் முயற்சியாலும் , தர்மசிந்தனையுள்ள ஆர்.எஸ்.ஏ. லக்ஷ்மண ஐயர், எஸ்.எஸ். சங்கர ஐயர், ஏ.விஸ்வநாத ஐயர் போன்றவர்களின் ஆதரவாலும் ஜார்ஜ் நடு நிலைப்பள்ளியைத் துவக்கினர். இந்தப் பள்ளியில்தான் ஏ.என்.சிவராமன் எட்டாண்டு காலம் ஆசிரியர் பணிசெயததாக அவரே தன் கைப்பட அப்பள்ளிக்கு எழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “வித்யா சங்கம்” என்ற அமைப்பையும் துவக்கினர். அதன் பலன் இன்று “திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளி” என்ற பெயருடன் ஏழை எளிய குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கக்கூடிய மிகப் பெரிய கல்விச் சாலையாக விளங்குகிறது. இந்த ஸ்தாபனம் கே.எஸ். ராமனைத் தலைவராகவும், கே.எஸ். சங்கரசுப்ரமனியனைத் செயலாளராகவும் கொண்டு சிறப்பாக நடந்து வருகிறது. மகாகவி பாரதியின் வாக்குப்படி தெருவுக்கு ஒரு பள்ளியாக ஸ்ரீ லக்ஷ்மீபதி ஆரம்பப் பள்ளி, மகாத்மா காந்தி பள்ளி, லலிதா ஆரம்பப்பள்ளி என்றும் விரிந்து இன்றும் கல்விப் பணியில் சிறந்து நிற்கிறது கல்லிடைக்குறிச்சி.

இப்படி எத்தனையோ சிறப்புகளைக் கொண்டதால்தான் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ சச்சிதானந்தா சிவாபினவ ந்ருசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் இந்த ஊரைக் கல்யாணபுரி என்று அழைத்தார்கள்.

இத்தகு புகழ் மிக்க ஊரில் தான் “அவனும்” பிறந்தான் …

வாரம் ஒருமுறை தொடர்ந்து வருவான் ……….

படங்கள்: கே.வி.அன்னபூர்ணா

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on "அவன், அது , ஆத்மா"

  1. Kavingar Viswanathan’s writing is always simple,specific and carries lot of interesting real life descriptions.Interesting begging for avan athu and athma….Picture support to the article by his daughter, Ms Annapurna, adds up to a higher visual level..seeing the place with its embedded nature..

    I am from Kallidaikurichi and Kavingar is my best friend….
    But  my comment about the article is in no way influenced by such relationship

  2. கல்லிடைக்குறிச்சி என் அப்பாவழிப் பாட்டியின் ஊர். தாத்தா வீரவநல்லூர். அம்மா அப்பா இரண்டு பேருக்கும் ஊர் வீரவநல்லூர். நான் பிறந்ததும் வீரவநல்லூரே. வளர்ந்தது மதுரையில். அம்மாவழித் தாத்தா சேரன்மகாதேவி. அவர் கோமதி சங்கர தீட்சிதருக்கு மிக நெருங்கிய நண்பர். ஹரிஹர பாகவதர் வீரவநல்லூரில் கொள்ளுப்பாட்டி வீட்டுக்கு வந்து என் அம்மா, சித்திகள், பெரியம்மா, அம்மங்கா எல்லாருக்கும் பாட்டுச் சொல்லிக்கொடுத்தாராம்.

    கல்லிடைக்குறிச்சியில் பாட்டிவழி உறவினர் வீட்டுக்குப் போயிருந்தது நன்றாக நினைவிருக்கிறது. பின்னால் தாமிரபருணி ஓடும்!

    சிறுபிள்ளைப் பருவத்தில் கல்லிடைக்குறிச்சி என்ற பெயரின் பொருள் தெரியாதவர்கள் சொன்னது: ஒரு குரங்கை ஒருவன் பார்த்தானாம். உடனே ‘கல் எடு’ என்றானாம். அந்தக் குரங்கு ‘குர் குர்’ என்று உறுமினதாம். கல் எடுத்தவன் ‘ச்சீ’ என்றானாம். அதனால் ‘கல்+ எடு+ குர் குர் + ச்சீ > கல்லிடைக்குறிச்சி.’ வேர்ச்சொல் ஆய்வாளரை அந்தக் காலத்திலிருந்தே எனக்குத் தெரியும்!!

    தெக்கத்தி ஊர்கள் அருமையானவை.

  3. ஒரு நீண்ட பதிவு செய்தேன், அது இங்கே பதிவாகவில்லை, ஏன் என்று தெரியவில்லை.

    சரி, மறுபடியும் நாளைக்கு முயல்வேன்.

  4. என் தந்தை வழி தாத்தா ஊர். எங்கள் கிரகத்திற்க்கும் எங்கள் குடும்ப கோவில் சண்டி ஹோமத்திற்க்கும் இந்த ஊர் புகழ் சங்கர வாத்தியார் தான் ஆச்சாரியாள் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறேன்.  அவர் மறைவு எங்களுக்கு எல்லாம் இழப்பு 

  5. நல்ல கட்டுரை!  நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.  நன்றி! கல்லிடைகுறிச்சி என் அம்மாவழி பாட்டியின் சொந்த ஊர்.  அவர்களின் உறவினர்கள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள். என் மாமனாரும் ( தே .கி குடும்பம் ) கல்லிடைகுறிச்சிதான். 

    — 
    ​சாய் கிருஷ்ணன் 

  6. கோவில் கொண்டிருக்கும் ஆண்டவன் பெயராலேயே இருக்கும் விஸ்வநாதபுரம் தெரு வின் முன்புற வளாகத்தில் ஸ்ரீ விசாலாக்ஷி அம்மை சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இதே கோவிலின் அருகில் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணர் சந்நிதியும், அதனுள் இருக்கும் பஜனை மடமும் சிவ விஷ்ணு ஐக்கியத்தை பிரதிபலிக்கின்றன . இக்கோவில்களுக்கு ஏகாம்பரபுரம் வழியாக நுழையலாம் .  

  7. My father born in this Kalyanapuri as called by our Achaaryaal and use to go every summer and enjoyed. Marundukadai Soma mamas family and our family very close and use to spend the time with Saathu. Kallidaikurichi keerai Thambraparani Canadian kaalvai how to forget it. Perumal  kovil Vaykkal Pilliyar kovil Sastha how one can forget about. I love Kalyanapuri. 

  8. rarely retired persons pour this much of expression recollecting  the younger days.i am proud our friendship continues even in the second generation//// my father had few friends I am proud hhis father was also one of them . I like his simplicity  transparency in his thoughts and writings since his childhood. The blessings of goddess Bharathi to continue to shower through his pen

  9. I was born and brought up in kallidaikurichi.it is the best place to live on earth. Where ever I go my heart still remains there. Love my school and house. Very proud to call myself a K I C ite

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.