Blog

  • ஷெல்லிதாசனின் பரவுபுகழ்!

    பவள சங்கரி

    ஷெல்லிதாசனின் பரவுபுகழ்!

    abha

    பாரதமும், பா- ரதமும் பாங்காய்
    பாரதியின் பாசத்தால் இணைந்தது
    மாதவமாய் மண்ணில் உதித்த
    மாதவனின் எண்ணமெல்லாம் பண்ணானது
    மங்கையரின் நலம்நாடும் சொல்லானது
    எல்லோரும் ஓர்குலம் ஓரினமெனும்
    மாமந்திரச் சுடரானது! இனிய
    புன்முறுவல் இலங்கு திருநிறைந்தனை !

    பாரினில் உண்டோ நம்பாரதம் போல
    மற்றுமொரு தேசமென மார்தட்டி
    மங்கையரெல்லாம் மதிநலம் பொங்க
    கங்கையாய், காவிரியாய் பொங்கி
    காவியமாய் கருணைசூழ் காளியாய்
    நாளும் செய்தவமாய் நலம்சூழ்
    நானிலம் போற்றும் நாமகளாய்
    வெல்லுஞானம் விஞ்சி நிற்கும்.

    பாகுமொழிப் புலவரெலாம் ஒன்றுகூடி
    கோடியர்ச்சனை பொழிந்துனை வாழ்த்தியே
    செய்வதனைத்தும் தவமாய் தத்துவமாய்
    செப்புமொழியனைத்தும் தீந்தமிழ் திண்மையாய்
    ஏழுலகாளும் வன்னமாய் நித்தஞ்சீருறுவார்
    பொற்குவையும் உயர்போகமும் பெறுவார்
    இன்னிசையாம் இன்பக்கடலில் மூழ்கி
    தீஞ்சொற் களமேறி தேஞ்சொரி மலராய்
    கவிமழையைப் பொழிந்து நாளும்
    புவியதன் மீதில் களிப்புறுவார்.

    புன்மையிருட்கணம் நீங்கி இன்னொளியெங்கும்
    அறிவுச்சுடராய் பரவியே விழிதுயில்
    மலர்ந்தெங்கும் பல்கிய பரவசமாய்
    சொல்லறு மாண்புகள் சுவையமுதாய்
    கனிவுறு மலராய் பெருந்தவப் பயனாய்
    கண்ணொத்த பேரொளி இதிகாசங்கள்
    பாரெங்கும் பரவி புண்ணொத்த புரைநீங்கி
    காலங்கொன்ற விருந்து காணவே.

    முற்றிய அறிவின் முடியில் முழங்கும்
    மூதறிஞர் நன்னெஞ்சகப் பிடியில் மின்னும்
    பரவுபுகழ் புவியெலாம் ஷெல்லிதாசனின்
    கவிநயமும் தேசப்பற்றும் மனிதாபிமானமும்!
    கனி வளமும், கனிம வளமும் நித்தமும்
    கணக்கின்றித் தருநாடு! நம் இந்தியத் திருநாடு!
    புவியோர் வியக்குவண்ணம் வளர்திருநாடு!
    ஆம்! வாழ்க, வாழ்க நம் பாரத மணித்திருநாடு!!

     

    Share
  • கவி பாடினான்‏

    cb

    தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
    பாவினை ஊட்டினான் மனங்களிலே
    சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
    உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

    ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
    சாதி பேதங்களை மாற்றினான்
    உழைத்து வாழப் பாடினான் -வீணே
    சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

    கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
    உயர்வாய் மதித்து போற்றினான்
    பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
    பற்றின் உயர் வினைக் கூட்டினான்

    பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
    மதித்து நின்று வாழ்த்தினான்
    மண்ணின் மாணிக்கம் அவளென்று –தான்
    பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

    அடிமைத் தனத்தை சாடினான்
    நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
    சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
    மாறாப் புகழினை பெற்றிட்டான்

    பாரதிக்கு பா வடிக்கவே -என்
    சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
    மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
    மா கவி பாரதி விண்ணிலே ..

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • பாரதி்க்குச் சொன்னது

    இசைக்கவி ரமணன்

    Bharathy

    ராத்திரி அஞ்சும் ராட்சச இருளின்
    ரகசிய மடியினி லிருந்து, ஒரு
    பூத்திரி போலப் புறப்பெட் டெழுந்து
    புயலாய்ச் சீறிய புதிரே
    நேத்திரம் முழுதும் நெருப்பு ததும்ப
    நெஞ்சினில் நேசம் எழும்ப
    ஆத்திரம் கொண்ட அறவடி வாய்த் தமிழ்
    ஆர்த் தெழுந்ததென வந்தாய்

    அப்படி வந்தது நீயா? உனை
    அறவே அறிந்த நான்தானா?

    எத்தனை பெரியதிவ் வண்டம்! அதிலேimages
    எத்தனை சிறியவன் மனிதன்!
    எத்தனை சிறியவன் மனிதன்! அவனுள்
    எத்தனை சிறியது மனது!
    எத்தனை சிறியது மனது! மனதில்
    எத்தனை எத்தனை அண்டம்!
    அத்தனை அண்டமும் யாரோ ஒருத்தியின்
    நித்திரை யில் சிறு கனவு!

    அப்படிச் சொன்னது நீயா! உனை
    அறவே அறிந்த நான்தானா?

    எழுதா திருக்கும் வேளையில் தானே
    முழுதாய்க் கவியென் றுணர்ந்தோம்
    எண்ண மிலாவெளி நிலையில்தானே
    எல்லாம் எல்லாம் அறிந்தோம்
    பழுதோ விதியோ மானுடன் போலே
    பல்லோர் நடுவே திரிந்தோம்
    பலகணி திறந்து பரவச ஒளியைப்
    பக்குவக் கோப்பையில் குடித்தோம்

    அப்படி உணர்ந்தது நீயா? உனை
    அறவே அறிந்த நான்தானா?

    தேசம் தெய்வம் என்னும் கொள்கையில்
    தேகம் முடைந்து கொடுத்தாள்
    திரும்ப மறந்து விடலா காதெனத்
    தீரா ஏக்கம் தொடுத்தாள்
    நேசம் புரியா மோசச் சந்தையில்
    நிம்மதி நன்கு கெடுத்தாள், ஒரு
    நிமிடம் தெய்வ நிலையைத் தந்து
    நீக்கிப் பார்த்துச் சிரித்தாள்

    அப்படித் தவித்தது நீயா? உனை
    அறவே அறிந்த நான்தானா?

    அன்றைக் காலையில் அயர்ந்த தேகம்
    அனலில் வெடித்துச் சிதற
    ஆற்றங் கரையில் திலக மிட்டவள்
    அடிமனம் கொஞ்சம் பதற
    இன்றைக் கொருவன் இதுவாய் அதுவாய்
    இறந்தும் இருந்தும் உள்ளான்
    ஏடி! செல்லம் மாவென அழைத்தால்
    எவரு மிலாமல் நின்றான்

    அந்தக் குழப்பம் எனதா? என்னில்
    அழுந்தித் தொடரும் உனதா?

    புதிய கூட்டில் புகுந் திசைப்பது
    புராதானத்துப் பறவை; சித்தம்
    புடைக்க உள்ளே பொதிந்த சித்திரம்
    பூத்துக் காட்டும் உறவை
    அதிசயம் கொஞ்சம் விதிவசம் கொஞ்சம்
    அதனால் உழலும் நெஞ்சம்
    ஆதியும் அந்தமும் இல்லாத் தொடர்வில்
    அவளருள் ஒன்றே மிஞ்சும்

    இந்த ஞானமேனும் எனதா? இதுவும்
    எதுவும் போலே உனதா!!

    எனக்கு நீயார் உனக்கு நான் யார்
    எவரிடம் எப்படிச் சொல்ல?
    எதையும் காட்டும் கண்ணாடியிலே
    தெரிவதை எப்படித் தள்ள?
    உனக்கு நான் யார் உணரா திருந்ததே
    உனக்கு மிகவும் நன்று
    எனக்கு நீ யார் என்பதை அறிந்தேன்
    இதுவே எனக்கு நன்று

    இப்படிச் சொல்வது நான்தான்! இதை
    இன்றைக்கேனும் அறிவாய் நீதான்!

     

    Share
  • வீசிடும் வார்த்தைப்பொறி! பாய்ந்திடும் தீபஒளி!!

     

    காவிரிமைந்தன்

    aarat
    போதைதரவல்ல பாதையது என்றால்
    கவிதைகூட கள்ளின்வகை சேரும்!
    தலைப்பாகை முன்கண்டால் அகத்துள்
    கவிச்சிங்கம் பாரதியின் உருவே தோன்றும்!

    ஜகத்துள் பிறந்த பிறவிகளுள் அவனொருவன்
    யுகத்தில் பிறந்த கவிஞனாகின்றான்!
    பொங்கும் உணர்வுகளின் புறப்பாட்டாய்
    புரட்சித் தீமூட்டி வளர்த்திட்டான்!!

    கண்களில் ஒளிமிளிர கர்ஜனை குரல்முழங்க..
    நெஞ்சினில் கனல்பறக்க.. நேரிய பார்வையாலே
    நீசரைக் கண்டுவிட்டால் வீசிடும் வார்த்தைப்பொறி
    நேசரைக் கண்டுவிடின் பாய்ந்திடும் தீபஒளி!!

    ஆங்கில ஆதிக்கத்தை அடியோடு வேரறுக்க
    சுதந்திரக் காற்றைநாம் எந்நாளும் சுவாசிக்க..
    பிறந்திடும் விடியலெங்கே தேடிய விழிகளங்கே..
    சிறந்தநல் கவிதைகொண்டு முழங்கினன் பாரதியே!!

    தேவையொரு ஏடும்எழுதுகின்ற ஓர்கோலும்
    போதுமது என்றபடி பொங்கிவரும் வார்த்தைநதி!
    பாரதியைப் பாடுயென்றால் பாய்ந்துவந்திடாதோ?
    பல்லவியும் சரணமுமே சங்கதியைத் தாராதோ??

    Share
  • தரணியிலே உயர்ந்திடுவோம்

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

    தலைவருடி எனையணைத்து
    தனதுதிரம் தனைப்பாலாய்
    மனமுருகித் தந்தவளே
    மாநிலத்தில் தாய்தானே

    மடிமீது எனைவைத்து
    மாரியென முத்தமிட்டு
    விழிமூடித் தூங்காமல்
    விழித்தவளும் தாய்தானே

    படிமீது கிடந்தழுது
    பலமுறையும் வேண்டிநின்று
    பாருலகில் எனைப்பெற்ற
    பண்புடையோள் தாய்தானே

    விரதமெலாம் பூண்டொழுகி
    விதியினையே விரட்டிவிட்டு
    வித்தகனாய் இவ்வுலகில்
    விதைத்தவளும் தாய்தானே

    மலடியென மற்றவர்கள்
    மனமுடையப் பேசிடினும்
    மால்மருகன் தனைவேண்டி
    மாற்றியதும் தாய்தானே

    நிலவுலகில் பலபிறவி
    வந்துற்ற போதினிலும்
    நிம்மதியைத் தருவதற்கு
    நிற்பவளே தாய்தானே

    தாய்மைக்கு இலக்கணமே
    தாய்மைதான் ஆகிவிடும்
    தாய்போல இவ்வுலகில்
    தகவுடையார் யாருமுண்டோ

    வேருக்கு நீராக
    தாயிருப்பாள் எப்போதும்
    தாயிருக்கும் வீட்டினிலே
    சகலதுமே நிறைந்திருக்கும்

    நோய்க்குமவள் மருந்தாவாள்
    நுடங்கிவிடின் துடித்திடுவாள்
    வாய்க்குமவள் சுவையாவாள்
    வல்லமையின் உருவாவாள்

    தாய்க்குலமே இல்லையெனின்
    தரணிநிலை என்னாகும்
    தாய்தன்னைப் போற்றிடுவோம்
    தரணியிலே உயர்ந்திடுவோம்

    Share
  • பாரதியார் ஜதி பல்லக்கு, பார்த்தசாரதி பெருமாள் கோயில் வாசலில், வியாழக்கிழமை டிசெம்பர் 11 காலை 9.00 மணிக்கு, அனைவரும் வருக அருளைப் பெறுக….

    கிரேசி மோகன்

    cb

    அல்லிக் குளக்கரையில் ஆண்டவர் வாயிலில்
    வெள்ளிக்கு முன்னே வியாழனில், -பல்லக்கை,
    ஏந்துகிறோம் பாரதி, ஏறியமர் வீடடைவோம்,
    தாந்திமிதோம் தாளஜ திக்கு

    துட்டுக்கு ஏழை, திருவல்லிக் கேணியின்
    எட்டுக்கு(கிருஷ்ணன்) தோழனவன் என்றுமே, -பிட்டுக்கு,
    மண்சுமந்தோன் மைத்துனனைக் கண்சுமந்தோன் பல்லக்கு
    உன்சுமந்த தோளுக்(கு) உரம்….கிரேசி மோகன்….

     

    ”ஜாக்கிரதை! பார்த்து! ஜதிப்பல்லாக் கில்தமிழ்
    ஆக்கிர மித்தோன் அமர்ந்துள்ளார்-தூக்குற
    நாமெல்லாம் ’’கண்ணனென் நண்பன்’’ எனச்சொன்னக்,
    கோமானின் சீமான்தாங் கி’’….கிரேசி மோகன்….

    பெருமாள் தூக்குபவர்களை ‘’சீமான் தாங்கி’’ என்பார்கள்….

     

     

    Share
  • எட்டடுக்கு மாளிகையில்…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    savithiri

     

    எட்டடுக்கு மாளிகையில்… பாதகாணிக்கைக்காக கண்ணதாசன் எழுதிவைத்த காதல் காணிக்கை!

    உயிர்கள் வாங்கும் உள் மூச்சும் வெளிமூச்சும் வந்துபோவது போல் – உறவுகளில் உறவும் பிரிவும் அமைவது இயல்பே! ஆயினும் பிரிவு என்று வரும்போது… மனம் பேதலிக்கிறது! தடுமாறுகிறது! நிலைமாறுகிறது!! இந்தக் கோலம் அலங்கோலம்தான்! இந்த அலங்கோலத்தில் ஒரு பெண்ணின் மனம் என்ன சொல்லி கதறும்? அழகிய சொற்கோலமாய் – கால வெள்ளத்தில் அடித்துச் செல்ல முடியாத காதல் அகராதிகளே இவை!

    எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டுச் சென்றானடி – இன்று
    வேறுபட்டு நின்றானடி

    அட.. மெட்டுக்கு எழுதப்பட்ட பாடலிது என்று விட்டுவிட முடியாமல்.. கட்டிப் போடுகிறது கவிஞரின்பாணி – காலகாலமாய் நம்மிடையே நிலவிவரும் ஒரு பழமொழியைத்தான் கவிஞர் இப்பாடலில் பல்லவியாக்கியுள்ளார். அது என்ன தெரியுமா?

    ‘‘பெண்டாட்டியை தலைக்குமேல் வைத்து ஆடுகிறான்” என்பது நாம் வழக்கமாக கேட்டதுதான். அப்படித் தலைக்குமேல் மனைவியைக் கொண்டாடி மகிழ்ந்தவன் இன்று விட்டுவிட்டுச் சென்று விடுகிறான். இன்னும் பாருங்கள். எண் சாண் உடம்பிற்கு தலையே பிரதானம்! (எட்டடுக்கு மாளிகையில்) அந்த தலைக்கு மேல் வைத்து வாழ்ந்தவன் விலகிச் செல்கின்றபோது…

    பல்லவியைத்தாண்டிச் சரணங்கள் எல்லாம் கண்ணதாசனிடம் நாம் சரணடைந்த காரணத்தைக் கூறுகின்றன!

    கையளவு உள்ளம் வைத்து
    கடல் போல் ஆசை வைத்து
    விளையாடச் சொன்னானடி – என்னை
    விளையாடச் சொன்னானடி – அவனே
    விளையாடி விட்டானடி

    காலங்கள் உள்ளவரை
    கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி – எந்தன்
    கோலம் வர வேண்டாமடி

    பாதகாணிக்கைக்காக கண்ணதாசன் எழுதிவைத்த காதல் காணிக்கை!

    http://www.youtube.com/watch?v=78QH_tPh1RY
    காணொளி: http://www.youtube.com/watch?v=78QH_tPh1RY

     

    பாடல்: எட்டடுக்கு மாளிகையில்
    வரிகள்: கண்ணதாசன்
    இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
    குரல் : பி.சுசீலா
    படம் : பாத காணிக்கை
    திரையில்: நடிகையர் திலகம் சாவித்திரி

    எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டுச் சென்றானடி – இன்று
    வேறுபட்டு நின்றானடி – இன்று
    வேறுபட்டு நின்றானடி

    தேரோடும் வாழ்வில் என்று
    ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி – கண்ணில்
    நீரோட விட்டானடி – கண்ணில்
    நீரோட விட்டானடி

    கையளவு உள்ளம் வைத்து
    கடல் போல் ஆசை வைத்து
    விளையாடச் சொன்னானடி – என்னை
    விளையாடச் சொன்னானடி – அவனே
    விளையாடி விட்டானடி

    காலங்கள் உள்ளவரை
    கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி – எந்தன்
    கோலம் வர வேண்டாமடி – எந்தன்
    கோலம் வர வேண்டாமடி

    (எட்டடுக்கு)

    THREEp susheelaPaatha-Kaanikkai

     

     

     

    Share
  • ஜதிபல்லக்கு – அழைப்பு

    aba

    மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும்
    தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும்
    வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ
    மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே
    — கே.ரவி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    பாரதியுன் தோழனாமே! பாவி மிதித்துவிட்டேன்,
    ஆறறிவில் ஒன்றில்லா ஆனைநான், – ஊரதிர
    உற்சவமாய் பல்லக்கில் ஊர்வலம் பார்த்தறிந்தேன்,
    அச்சுதா மன்னித்(து) அருள் ….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்
    சூரி நாகம்மாளின் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….அஸிஸ்டெண்ட் லைப்ரேரியனை பகவான் சேவைக்கு பணித்தபோது அவரது புத்தக தாபத்தை போக்குவதற்காக அவரிடம் பகவான் ஆறுதலாக ‘சப்த ஜால மஹாரண்யம், சித்த பிரமண காரகம்’ என்று பரிவோடு சொல்லி அவரை தேற்றினாராம்…..சாஸ்திரங்களைக் கற்றல், புலமை முதலானவை வாழ்கையில் புகழை தருமே தவிர ‘முக்திக்கு முகுந்தனே’….

    crazy

    சொற்கள் பெருங்காடு, சித்தம் குழம்பிடும்
    அற்பம் அவற்றுள் அணுகாதே, -தர்கத்திற்(கு)
    ஆகவே கல்வி, அனுபூ தியைப்பெற
    பாகவத பாலனிடம் போ ….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 8, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு சமூகசேவகி அனுராதா கொய்ராலா அவர்கள் 

     

    Anuradha Koirala

     

    சென்ற மாதம் (நவம்பர்) “2014 ஆம் ஆண்டின் சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு உலகவிருது” (The Mother Teresa Memorial International Award for Social Justice 2014) வழக்கப்பட்டோரில் நேப்பாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா(Anuradha Koirala) வும் ஒருவர். கடந்த இருபதாண்டுகளில் நேப்பாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட 12,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அனுராதா கொய்ராலா. இவரை இவ்வார வல்லமையாளராகத் அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியியல், இலக்கிய எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள்.

    அறுபத்தைந்து அகவையை எட்டிய அனுராதா கொய்ராலா தனது இளமையில் வன்முறைகள் நிறைந்த மணவாழ்க்கையில் சிக்குண்டு துன்புற்று இறுதியாக அந்த வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக்  கொண்டவர். தன்னைப் போன்றே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து உதவ முடிவு செய்தவர். இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பற்ற நிலையில் வாழும் நேப்பாள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வன்முறைகள் நிகழும் குடும்ப சூழ்நிலையில் இருந்து அடைக்கலம் தரும் தற்காலிகப் புகலிடம் ஒன்றினை வழங்குவது இவரது முதல் நோக்கம். அதற்காக நேப்பாளத்தின் காட்மண்ட நகரில் அரசு சாரா மறுவாழ்வு மையமாக “மைத்தி நேபாள்” (Maiti Nepal)  என்ற அமைப்பை நிறுவினார். மைத்தி என்றால் நேப்பாள மொழியில் “தாய்வீடு” என்பது பொருள். திக்கற்றபெண்களுக்கு  உதவம் மையமாக வளர்ந்தது மைத்தி.

    Anuradha Koirala3  Anuradha Koirala4

    அடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பதின்மவயது சிறுமிகளும், இளம்பெண்களும் பணிவாய்ப்புகள் தருவதாகக் ஆசைகாட்டப்பட்டு, பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இந்தியாவிற்குக் கடத்தப்படுவதை அறிந்து மனிதர்களைக் கடத்துதும் இந்தத் தொழிலை முறியடிக்க முனைந்தார். காவல்துறையின் உதவியுடன் பாலியல் தொழிற்கூடங்களில் இருந்து பெண்கள் அதிரடியுடன் மீட்கப்பட்டு மைத்தி அமைப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்திய நேப்பாள எல்லையில் குடிமக்கள் மற்றும் காவல்துறையின்  உதவியுடன் எல்லை கண்காணித்தலிலும் மைத்தி தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மீட்கப்படும் பெண்களை பெற்றோருடனும் குடும்பத்துடனும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை பெரும்பாலும் அவர்கள் குடும்பமே நிராகரிக்கும் பொழுது கதியற்று மனமுடைந்த நிலையினை அடையும் பெண்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடனும், கர்ப்பிணிகளாகவும் இருக்கும்பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழில் காரணமாக எயிட்ஸ் நோயாலும் தாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழகப்படுகிறது. பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்காக கைத்தொழிலும் கல்வியும் வழங்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்களுக்காக சட்ட ஆலோசனையும், சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையிலும் உதவிகள் புரிந்து, தொழிலும், கல்வியும், மன ஆறுதலும் பெற்று வாழ்வதற்கு உதவும் மைத்தி அதன் பெயருக்கு ஏற்றார்போல, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாய்வீடாகவே அமைகிறது .

    அனுராதா கொய்ராலாவின் தொண்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததால் சி. என். என். செய்தி நிறுவனத்தின் 2010 ஆண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அனுராதா கொய்ராலா பரிந்துரைக்கப்பட்டார். சி. என். என். செய்தி நிறுவனம் இவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்து பாராட்டி 25,000 பரிசு வழங்கிய பொழுது இவரது சேவை நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சமூகப்பணிக்காக மேலும் நிதி உதவிகள் பல இடங்களில் இருந்தும், அமெரிக்க அரசிடம் இருந்து அரை மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவராற்றும் நற்பணிகள் தொடர்ந்து பாராட்டப்பட்டும் வருகின்றன. சி. என். என். வழங்கிய புகழ் பெற்ற விருது போன்றே இதுநாள் வரை முப்பதிற்கும் மேற்பட்ட அகிலஉலக அளவில் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றவர் அனுராதா கொய்ராலா. ஜெர்மனி 2007 ஆண்டு வழங்கிய யூனிஃபெம் விருது (German UNIFEM Prize 2007), அரசி சோபியாவின் 2007 ஆம் ஆண்டிற்கான வெள்ளி விருது (Queen Sofia Silver Medal Award 2007) மற்றும் பீஸ் ஆபி வழங்கும் சமாதனப் பரிசும் (The Peace Abbey, Courage of Conscience 2006) அவற்றில் குறிப்பிடத்தக்கன.

    சென்றமாதம் நல்லிணக்கம் சேவை மையம் (The Harmony Foundation ) தனது ஏழாமாண்டுசமூக நீதி பரிசு விழாவை நடத்தியது. நல்லிணக்கம் சேவை மையம் உலகளாவிய சமூகநீதி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அரசுசாரா சேவை அமைப்பு. சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டு அதனை ஒட்டிய விழாவும் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா துவக்கிய சேவை மையம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்த ஒரே விருது என்பது இதன் சிறப்பு.

    Anuradha Koirala1

    விருதினைப் பெற்றுக் கொண்ட அனுராதா கொய்ராலா தனக்கு சமுதாயத் தொண்டில் பற்றுதல் ஏற்பட அன்னை தெரசாவின் பணிகள் முன்மாதிரியாக அமைந்தது என்றும் எனவே அவர் நினைவாக வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமை மிகக் கொள்வதாகவும் கூறினார். உடன்வாழும் மனிதர்களின் துயர்களை உணர்ந்து இரங்கி உதவும் வகையில் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனுராதா கொய்ராலா கூறினார். இவர் அன்னை தெரசாவின் பெயர் தாங்கிய அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சென்ற மாதம் இந்தியா டுடே நடத்திய பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்ட அனுராதா கொய்ராலா கூறிய பெண்ணின முன்னேற்றக் கருத்துரைகள் சிந்தித்து செயலப்டுத்தப்பட வேண்டியவை.

    Anuradha Koirala2பெண்கள் தங்கள் துயர் துடைக்க அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காது தாங்களே தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேறுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. நாம் கைவிடப்பட்டவர்கள் என்று தன்னிரக்கம் கொள்ளும் எண்ணம் பெண்களால் கைவிடப்படவேண்டிய ஒன்று. பெண் ஆட்சியாளர்களும் பெண்கள் நலனை சீர்குலைக்கும் செயல்களை தடுத்து, இதுவரை பெண்களுக்கு உதவும் சரியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பெண்கல்விக்கு எதிரான நடவடிக்கைகள் தடுத்து தண்டிக்கப்பட வேண்டும். வரதட்சினை கொடுமையே நேப்பாள பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்குக் காரணம். பெண்களுக்காக ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் 33% ஒதுக்கீட்டிலேயே பெண்கள் மனநிறைவு கொள்ளக்கூடாது. பெண்களுக்கான ஒதுக்கீடு ஐம்பது விழுக்காடாகவோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வண்டும். இந்த இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏன் ஆண்களுக்கு நடைமுறையில் இல்லை? பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நிலையில் பெண்கள் வாழ்க்கை அமைவது சரியான நிலையல்ல.

    பெண்களுக்காகன சமூகப்போராளியாகவும் சமூக சேவகியாகவும் கடமையாற்றி வரும் அனுராதா கொய்ராலாவை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமையின் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தகவல் தந்து உதவிய தளங்கள்:
    Mother Teresa Award conferred on Koirala
    http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Mother+Teresa+Award+conferred+on+Koirala+&NewsID=433154

    Mother Teresa Memorial International Award for Social Justice held on Sunday
    http://www.dnaindia.com/mumbai/report-mother-teresa-memorial-international-award-for-social-justice-held-on-sunday-2033914

    Mother Teresa global awards for Anuradha Koirala, Amte
    http://www.firstpost.com/fwire/mother-teresa-global-awards-for-anuradha-koirala-amte-1795003.html

    Nepal actor and Everest climber at India Today Global Roundtable: No gender bias in Mother Nature
    Women should ask for 50 per cent reservation: Anuradha Koirala
    http://indiatoday.intoday.in/story/india-today-global-roundtable–no-gender-bias-hina-rabbani-khar-anuradha-koirala-meenakshi-lekhi/1/403699.html

    Anuradha Koirala
    http://en.wikipedia.org/wiki/Anuradha_Koirala
    http://ta.wikipedia.org/s/n13

    Maiti Nepal

    Home


    http://en.wikipedia.org/wiki/Maiti_Nepal
    http://ta.wikipedia.org/s/o5e

    Picture:
    http://www.omfood.kr/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 146

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    வையையைக் கடந்து, மூவரும் தென்கரை சேர்தல்

    “இந்த வைகை ஆறு நீர் நிறைந்த ஆறு அன்று;
    பூக்கள் நிறைந்த ஆறு” என்று
    அன்னம் போன்ற நடைகொண்ட கண்ணகியும்
    அவள் தலைவன் கோவலனும் வணங்கி,
    மாதவப் பிராட்டியாம் கவுந்தியடிகளுடன்

    அந்த அருந்துறையில் செலுத்தப்படும்
    குதிரைமுக ஓடம் யானைமுக ஓடம்     flag
    சிங்கமுக ஓடம் – இவற்றில் ஏறிப்
    பலரும் செல்லும் பெருந்துறைப்பக்கம் செல்லாது,
    தேன்மலர்கள் நிறைந்த சோலையுடைய
    தெற்குக் கரையை அடைந்தனர்.

    மதுரை மாநகரின் புறஞ்சேரியை அடைதல்

    தேவர்கள் வசிக்கும்
    மதுரை நகரை வலம் வந்தால்

    மிகச் சிறப்புண்டாகும் என்று கருதி
    அவ்விடத்தில் அழிப்பதற்கு இயலாத காடு
    காவலாய்ச் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர்.

    அந்த அகழியில் பூத்த
    கரிய நெடிய குவளைமலரும்
    அல்லிமலரும் தாமரை மலரும்
    கண்ணகியும் கோவலனும்
    பிரிவால் அடையும் துயர்தனை
    ஐயம் ஏதுமின்றி அறிந்தனபோல,
    தம்மிடம் வந்து தேன் உண்ணும் வண்டுகள்
    வாயாலே தாமும் அழுது
    தேன் எனும் கண்ணீரைச் சொரிந்து
    கால் பூமியில் நிலைத்து நிற்க இயலாமல் நடுங்கின.

    பகைவர் வருந்தப் போர் தொடுத்து வென்று
    அவ்வெற்றிக்கு அறிகுறியாகக்
    கோட்டையின் உச்சியில் பறந்த கொடி,
    “இம்மதுரை நகருக்கு நீங்கள் வராதீர்கள்”
    என்று கூறுவது போல் மறித்துக் கைகாட்டி நின்றது.

    பறவைகள் அழகு சேர்க்கும்
    வயல்களும் சோலைகளும் விளங்கப் பெற்று
    அதிகமான நீரையுடைய பண்ணைகளும்
    பரந்த நீர் கொண்ட ஏரிகளும்
    குலைகுலையாய்க் காய்களுடன் காணப்படும்
    தெங்கும் கமுகும் வாழையும்
    திரண்டிருந்த மூங்கிலால்
    ஏயப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலும்
    ஆகிய இவையனைத்தும் அமையப்பெற்ற
    இருப்பிடங்களை உடையதாய்,
    அறத்தினை விரும்பும் முனிவர் தவிரப்
    பிறர் யாரும் புகுந்திடமுடியாத
    மதுரைக்குப் புறத்தேயுள்ள சேரியை
    அவர்கள் மனம் விரும்பியபடியே
    மூவரும் அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://kundavairajeam.blogspot.in/

    Share
  • அமுத மொழி அன்றோ !

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

    காலையிலே எழுந்தவுடன்
    கண்ணெதிரே கண்டேன்
    கவலை இன்றிப் பூத்திருக்கும்
    கட்டழகு ரோஜா!

    வேலைசெய்ய விருப்பமின்றி              roses
    சோம்பலிலே கிடந்தேன்
    விருட்டென்று கேட்டதுமே
    வெலவெலத்துப் போனேன்!

    யாருக்காய்ப் பூக்கின்றோம்
    என்று தெரியாது
    பூக்கின்றோம் பூக்கின்றோம்
    பூத்தபடி நிற்போம்!

    பூப்பதிலே சோம்பலின்றி
    பூத்தபடி இருப்போம்
    பூப்பார்த்த வுடனேயே
    பூரிப்பைக் கொடுப்போம்!

    சோம்பல் வந்துவிட்டதெனச்
    சோர்ந்துவிட மாட்டோம்
    சுறுசுறுப்பாய் இருந்தபடி
    சுகம்கொடுத்து நிற்போம்!

    சாந்தம் எங்கள்போக்குவெனச்
    சகலருக்கும் தெரியும்
    சந்தோஷம் கொடுப்பதுவே
    எங்கள் குணமாகும்!

    மற்றவர் மகிழ்ச்சியுற
    மகிழ்ந்து நாம்நிற்போம்
    மற்றவர் மனமுடைய
    வாழ்நாளில் நினையோம்!

    சோம்பலுற்று வாழ்வினிலே
    சோர்ந்துவிட மாட்டோம்
    சொர்க்கத்தைக் காட்டுவதே
    சுகமென்று நினப்போம்!

    விழுகின்ற மலர்பார்த்து
    விழுதழுதல் மாட்டோம்
    விழுவது எழுவதற்கென
    விழித்தெழிந்து நிற்போம்!

    அழுகின்ற தொழிலைநாம்
    அழித்துமே விட்டோம்
    ஆனதால் என்றென்றும்
    அழகினையே தருவோம்!

    பறிப்பாரின் கையினைப்
    பக்குவமாய்ப் பார்ப்போம்
    பறித்தவர்கள் எம்மழகைப்
    பார்த்தபடி நிற்பர்!

    குறித்தமலர் அழகையவர்
    குதூகலத்தால் ரசிப்பர்
    கொண்ட்டாட்டம் வந்துவிட்டால்
    கொண்டையிலும் வைப்பர்!

    ஆண்டவனின் அருகினலே
    அடைக்கலமும் ஆவோம்
    ஆவேசக் கைகளிலே
    அசிங்கமும் படுவோம்!

    ஆனாலும் ஆத்திரத்தை
    அடக்கியே வைப்போம்
    ஆதலால் என்றுமே
    அழகாக இருப்போம்!

    மலர் சொன்னவார்த்தையால்
    மலைத்துமே விட்டேன்
    நிலைகுலையா நானும்
    நிலைகுலைந்து விட்டேன்!

    அழகான மலர்சொன்ன
    அத்தனையும் கேட்டேன்
    அவைசொன்ன அத்தனையும்
    அமுதமொழி அன்றோ!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(49)

    -செண்பக ஜெகதீசன்

    மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
    பெருந்தகை யான்கட் படின். (திருக்குறள்-217: ஒப்புரவறிதல்)

    புதுக் கவிதையில்…

    பிறர்க்குதவும் பெருந்தன்மையாளன்
    பெற்ற செல்வம்,
    வேர் முதலாயுள்ள
    உடல் உறுப்புக்களால்                                      Medicinal_tree
    உயிர்காக்கும்
    மருந்து மரம் போன்றதே…!

    குறும்பாவில்…

    நல்லவன் பெற்ற செல்வமும்,
    பிணி தீர்த்திடும்
    மருந்து மரமும் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்…

    உறுதியாய் வேருடன் கிளையும்
    உடனதாய் இலைபூ காய்கனி,
    உறுபிணி யகற்றும் மருந்தாய்
    உதவுமே மருந்து மரத்தில்,
    பெறும்தனம் சேர்த்து வைத்தே
    பிறர்நலம் பேணிக் காக்க
    உறுபொருள் கொடுக்கும் செல்வரும்
    உருவிலம் மருந்து மரமே…!

    லிமரைக்கூ…

    உடல்நலம்பெற உதவியாயிருக்கும் மருந்து மரம்,
    அத்தகையதே நல்ல மனத்தொடு
    பிறர்க்குதவும் செல்வத்தை வைத்திருப்பவன் கரம்…!

    கிராமிய பாணியில்…

    மருந்துமரம் மருந்துமரம்
    மனம்போல ஒதவும் மருந்துமரம்,
    எலபூவு காயோட
    எல்லாமே ஒதவும் மருந்துமரம்
    எல்லார்க்கும் ஒதவும் மருந்துமரம்…

    இதுபோல,
    அடுத்தவுனுக்கு ஒதவணுண்ண
    ஒயந்தகொணம் உள்ளவங்கிட்ட
    உள்ளபணம் மருந்துமரம்…

    மருந்துமரம் மருந்துமரம்
    மனம்போல ஒதவும் மருந்துமரம்…!


    Share