இலக்கியம்கவிதைகள்

வீசிடும் வார்த்தைப்பொறி! பாய்ந்திடும் தீபஒளி!!

 

காவிரிமைந்தன்

aarat
போதைதரவல்ல பாதையது என்றால்
கவிதைகூட கள்ளின்வகை சேரும்!
தலைப்பாகை முன்கண்டால் அகத்துள்
கவிச்சிங்கம் பாரதியின் உருவே தோன்றும்!

ஜகத்துள் பிறந்த பிறவிகளுள் அவனொருவன்
யுகத்தில் பிறந்த கவிஞனாகின்றான்!
பொங்கும் உணர்வுகளின் புறப்பாட்டாய்
புரட்சித் தீமூட்டி வளர்த்திட்டான்!!

கண்களில் ஒளிமிளிர கர்ஜனை குரல்முழங்க..
நெஞ்சினில் கனல்பறக்க.. நேரிய பார்வையாலே
நீசரைக் கண்டுவிட்டால் வீசிடும் வார்த்தைப்பொறி
நேசரைக் கண்டுவிடின் பாய்ந்திடும் தீபஒளி!!

ஆங்கில ஆதிக்கத்தை அடியோடு வேரறுக்க
சுதந்திரக் காற்றைநாம் எந்நாளும் சுவாசிக்க..
பிறந்திடும் விடியலெங்கே தேடிய விழிகளங்கே..
சிறந்தநல் கவிதைகொண்டு முழங்கினன் பாரதியே!!

தேவையொரு ஏடும்எழுதுகின்ற ஓர்கோலும்
போதுமது என்றபடி பொங்கிவரும் வார்த்தைநதி!
பாரதியைப் பாடுயென்றால் பாய்ந்துவந்திடாதோ?
பல்லவியும் சரணமுமே சங்கதியைத் தாராதோ??

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க