எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

தலைவருடி எனையணைத்து
தனதுதிரம் தனைப்பாலாய்
மனமுருகித் தந்தவளே
மாநிலத்தில் தாய்தானே

மடிமீது எனைவைத்து
மாரியென முத்தமிட்டு
விழிமூடித் தூங்காமல்
விழித்தவளும் தாய்தானே

படிமீது கிடந்தழுது
பலமுறையும் வேண்டிநின்று
பாருலகில் எனைப்பெற்ற
பண்புடையோள் தாய்தானே

விரதமெலாம் பூண்டொழுகி
விதியினையே விரட்டிவிட்டு
வித்தகனாய் இவ்வுலகில்
விதைத்தவளும் தாய்தானே

மலடியென மற்றவர்கள்
மனமுடையப் பேசிடினும்
மால்மருகன் தனைவேண்டி
மாற்றியதும் தாய்தானே

நிலவுலகில் பலபிறவி
வந்துற்ற போதினிலும்
நிம்மதியைத் தருவதற்கு
நிற்பவளே தாய்தானே

தாய்மைக்கு இலக்கணமே
தாய்மைதான் ஆகிவிடும்
தாய்போல இவ்வுலகில்
தகவுடையார் யாருமுண்டோ

வேருக்கு நீராக
தாயிருப்பாள் எப்போதும்
தாயிருக்கும் வீட்டினிலே
சகலதுமே நிறைந்திருக்கும்

நோய்க்குமவள் மருந்தாவாள்
நுடங்கிவிடின் துடித்திடுவாள்
வாய்க்குமவள் சுவையாவாள்
வல்லமையின் உருவாவாள்

தாய்க்குலமே இல்லையெனின்
தரணிநிலை என்னாகும்
தாய்தன்னைப் போற்றிடுவோம்
தரணியிலே உயர்ந்திடுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தரணியிலே உயர்ந்திடுவோம்

  1. உறவுகளின் உச்சம் நீ..
    உள்ளம் தொழும் உருவம் நீ!
    எனக்காகப் பிறந்தவள் நீ!
    என்னை ஈன்றவள் நீ!
    பாசத்தின் ஊற்று நீ!
    பசியாற்றிய பாத்திரம் நீ!
    நேசத்தின் ஒட்டுமொத்தம்
    நெஞ்சுருக நினைவுருக..
    என்றைக்கும் வருபவள் நீ!
    தாயெனும் தெய்வம்தானே
    தரணியிலே யாம் கண்டது!
    பேசித்தான் முடியாது.. எந்த
    பேதமையும் கிடையாது! அவள்
    பெருமை வார்த்தைக்குள் அடங்காது
    பரம்பொருளே தந்த வரம்!!
     
    அன்னை பற்றி அழகுதமிழில்
    வளமான கவிதை வார்த்தெடுத்தீர்!
    உளமுருகி நீயெழுதும்
    ஒவ்வொரு கவிதையுமே
    உணர்வின்பால் உருவாகி
    உயிரோட்டம் கொள்கிறதே!
    வாழ்த்துக்களுடன்..
    காவிரிமைந்தன் 08.12.2014 அபுதாபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.