Blog

  • நான் அறிந்த சிலம்பு – 147

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    சூரியன் உதித்தல்

    அவர்கள் புறஞ்சேரி புகுந்தபின்
    அங்கிருந்த பூஞ்சோலைகளிலும்,
    விளங்குகின்ற நீரையுடைய பண்ணைகளிலும்,      sunrise lotus
    கதிர்கள் வளைந்து தொங்குகின்ற கழனிகளிலும்,
    பறவைகள் எழுந்து ஆர்ப்பரித்து ஒலியெழுப்பின.

    வைகறைப் பொழுது புலரும் போது,
    குளத்தின்கண் உள்ள தாமரைகளை மொட்டவிழ்க்கும்
    உலகிலுள்ளோர் யாவரும் தொழுது வணங்கும் கதிரவன்,
    பகையரசர்கள் நடுங்கும் வண்ணம்
    வீரவாளை ஏந்திய பாண்டியன் அவனின்
    வீரத்தால் ஏற்றம் பெற்ற
    மதுரை நகரின் துயில் எழுப்பினான்.

    காலை முரசத்தின் ஒலி

    நெற்றியில் கண்ணுடைய
    சிவபெருமான் கோயிலிலும்,
    சேவல் கருடனைக் கொடியாகக் கொண்ட
    பெருமாள் கோயிலிலும்,
    வெற்றிக் கலப்பை ஏந்திய
    பலராமன் கோயிலிலும்,
    சேவற்கோழிக் கொடியுடைய
    முருகன் கோயிலிலும்,
    அறநெறி சார்ந்து வாழ்கின்ற
    முனிவர்களின் பள்ளிகளிலும்,
    வலிமை அமைந்த
    மன்னனின் அரண்மனையிலும்,
    தூய வெள்ளைச் சங்கின் ஒலியுடன் சேர்ந்து
    கொடை முரசு, வெற்றி முரசு, நீதி முரசு எனப்படும்
    மூவகை முரசுகளும் முழங்கின.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://nature.desktopnexus.com/wallpaper/1726024/

    Share
  • குறளின் கதிர்களாய்…(50)

    -செண்பக ஜெகதீசன்

    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல். (திருக்குறள்-279: கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    நேரான அம்பு
    நோகடிக்கும் புண்படுத்தி,
    வளைந்திருந்தாலும் யாழ்தரும்                yazh_fish
    இனிய இசை…

    இதுபோல்தான் மாந்தர்கள்,
    அவர்தம்
    செயலின் தன்மையறிந்து
    சேர்ந்திடு அவருடன்…!

    குறும்பாவில்…

    அம்பு நேரானதானாலும் ஆபத்து,
    வளைந்திருந்தாலும் யாழ்தரும் இன்னிசை,
    செயல்திறன் பார்த்து சேர்ந்திடு மனிதரிடம்…!

    மரபுக் கவிதையில்…

    நேராய் அம்பது இருந்தாலும்
    நோவைத் தந்திடும் புண்படுத்தி,
    ஏராய் வடிவில் வளைந்திருந்தும்
    இனிய இசைதரும் யாழதுவே,
    பாராய் மனிதரில் பலவகையே
    பார்க்கும் உருவதை நம்பிடாதே,
    ஆராய்ந் தறிந்திடு செயல்திறனை
    அதன்பின் சேர்ந்திடு அவருடனே…!

    லிமரைக்கூ…

    புண்படுத்திடும், அம்பது இருந்திடினும் நேராய்,
    வளைந்த யாழதும் இசைதரும்,
    மாந்தருடன் சேருமுன்னவர் செயல்திறம் பாராய்…!

    கிராமிய பாணியில்…

    தெரியாது வெளிய தெரியாது
    நல்லது கெட்டது தெரியாது…
    நேராயிருக்க அம்புதானே
    நெஞ்சக்குத்திக் கிழிச்சிப்புடும்,
    வளஞ்சிருக்க யாழுலதான்
    வருமே நல்ல சங்கீதம்…

    இந்தக்கததான் மனுசங்கிட்ட,
    உருவத்தப்பாத்து ஏமாறாத
    ஆளப்பாத்து அசந்துடாத,
    அவஞ்
    செய்கயநல்லா ஆராஞ்சி
    சேந்துக்கநீ அவங்கிட்ட…

    தெரியாது வெளிய தெரியாது
    நல்லது கெட்டது தெரியாது…!

    Share
  • விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

     

     

     

    சி. ஜெயபாரதன்


    விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்.

    முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு

    முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை. அதே சமயம் ஐரோப்பாவில் விஞ்ஞானத் துறைகள் செழித்தோங்கி, தொழிற் புரட்சி ஏற்பட்டு, ஐரோப்பிய மொழிகளும் அவற்றை நூல்களில் வடித்து எதிரொலித்தன. வானியல், கணிதத்தில் முன்னோடி யான இந்தியா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகள் மொகாலாயர் கைவசப்பட்டு, அடுத்து பிரிட்டன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைத் தேசமாக அகப்பட்டுக் கொண்டதால், தமிழ்மொழி உள்பட மற்ற அனைத்து இந்திய மொழிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளை நூல் வடிவில் காட்ட முடியாமல் போயின. ஆங்கில மொழியைப் பிரிட்டன் முதன்மை மொழியாக்கி, முறையான கல்வித்துறை நிறுவகங்களை நாடெங்கும் நிறுவினாலும், தேசம் விடுதலை அடைந்த பிறகுதான் இந்தியாவில் மூலாதார விஞ்ஞானத் துறைகள் பெருகவும், விஞ்ஞான நூல்கள் தோன்றவும் வாசற் கதவுகள் திறக்கப்பட்டன.

    இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பி

    பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்து, தொழிற் துறைகளைத் திறந்து வைத்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் விஞ்ஞானப் பொறித்துறைப் பாதையில், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் பம்பாயில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! பண்டித ஜவஹர்லால் நேரு பாரதத்தின் பொற்காலச் சிற்பி எனப் போற்றப்படும் முற்போக்குச் சிந்தனையாளர்.

    1946 இல் வெளிவந்த தனது ‘இந்தியாவைக் கண்டுபிடிப்பு ‘ [Discovery of India] என்னும் நூலில் பண்டித நேரு பண்டைக் கால இந்திய வல்லுநர்களின் கணிதச் சாதனைகளை மெச்சுகிறார். கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagorus] எழுதியதற்கும் முன்பே [500 BC] ஜியாமெற்றித் தேற்றங்களை [Geometric Theorems] இந்திய கணித ஞானிகள் படைத்திருந்ததாக அறியப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பத்து இலக்கக் கணிதத் தொகுப்புகளைக் கையாண்டு, ஏழாம் நூற்றாண்டில் பூஜியத்தை [Zero] ஓரிலக்கமாகப் படைத்தனராம். ‘இக்கணித முன்னோடிகள் மனித சிந்தனையை விடுதலை செய்து, கணித இலக்கங்களை முக்கியமாக்கிச் சுடரொளி பாய்ச்சினர் ‘ என்று அந்நூலில் நேரு கூறுகிறார். சதுரம், நீண்ட சதுரம், வட்டம், கோணம், பின்னம், பத்தின் பன்னிரெண்டாம் அடுக்கு [Ten to the power 12], அல்ஜீப்ரா சமன்பாடுகள் [Algebriac Formulae], வானியல் [Astronomy] போன்றவை 3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து வேத நூல்களில் காணப்படுகின்றன. இந்தியா மற்ற கிரேக்க, எகிப்து, ஐரோப்பிய நாடுகள் போல் வானியல், ஜோதிடக் கணிதத்திலும் நுணுக்கமான தேர்ச்சி அடைந்திருந்தது.  மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே, பூமி தட்டை வடிவம் என்ற கிரேக்க மேதை டாலமிக்கு முன்னே சந்திர கிரகணத்தின் போது நிலவின் மீது பூமியின் நிழல் வட்ட வடிவில் தெரிவதைக் கண்டு நமது இந்திய வானியல் வல்லுநர் பூமி உண்டை வடிவானது என்று உறுதியாய் எழுதி வைத்துள்ளார்.  ஆனால் முகலாயர் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி ஆட்கொண்ட பிறகு, கணித, விஞ்ஞான வளர்ச்சிகள் முற்றிலும் முடங்கித் தடைபட்டு, ஐரோப்பாவை ஒப்பு நோக்கினால், இந்தியா ஐநூறு ஆண்டுகள் பின்தங்கிப் போனது!

    அன்னியரின் ஆதிக்கத்தில் அடிமைப் பட்ட இந்திய மொழிகள்

    ஏசுக் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னும் பின்னும் அரிஸ்டாடில் (384-322 BC), டாலமி (367-283) போன்ற கிரேக்க ஞானிகளின் வேதாந்த விஞ்ஞானக் கருத்துகள் தலை ஓங்கி, ரோமாபுரி போப்பாண்டவர் ஆணையின் கீழ் ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம், நாகரீகம் விருத்தி யடைந்தது. அரிஸ்டாட்டில் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வரைந்து கொடுத்த வழியைப் பின்பற்றி, முதன் முதலில் படையெடுத்து இந்திய மண்ணில் கால்வைத்த கிரேக்க மன்னன், மகா வீர அலெக்ஸாண்டர் (356-323 BC). அடுத்து அன்னியப் பயணி மார்கோ போலோ [Marco Polo (1288-1293)] ஆண்டுகளில், தென்னிந்தியாவுக்கு விஜயம் செய்தார். 15 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புரட்சியும் அதைத் தொடர்ந்து தொழிற் புரட்சியும் ஐரோப்பாவில் ஏற்பட்டு இணையாக ஐரோப்பிய மொழிகளும் மலர்ச்சி யடைந்தன.

    துருக்கியின் தலைநகர் கான்ஸ்டான்டிநோபிளின் [Constantinople, Turkey] தரைவழிப் பாதை மூடப்பட்ட பின்பு, ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு வர முடியாது போகவே, மகாதீரக் கப்பல் மாலுமிகள் புதிய கடல் மார்க்கங்களில் இந்தியாவுக்கு பாதை கண்டுபிடிக்கக் கிளம்பினர். கிரிஸ்டபர் கொலம்பஸ் (1451-1506) இந்தியாவுக்குப் புதுக் கப்பல் மார்க்கம் தேடி, இறுதியில் புதிய அமெரிக்க நாடுகளுக்குக் கடல்பாதை அமைத்தார். அவரைப் பின்பற்றி ஃபெர்டினென்டு மாஜெல்லன் (1480-1521) உலகை முதன் முதல் ஒருமுறை சுற்றி வந்து, பூமி தட்டையானது அன்று, அது ஒரு பொரி உருண்டை என்று நிரூபித்துக் காட்டினார். அடுத்து வாஸ்கோட காமா [Vasco da Gama (1460-1524)] இந்தியாவிக்குப் புதிய கப்பல் மார்க்கத்தைக் கண்டு பிடித்து 1498 இல் இந்தியாவுடன் வர்த்தகம் நிலைநாட்டப் பட்டது. இவ்வாறு ஐரோப்பாவிலிருந்து அன்னிய தேசத்தவர் [அலெக்ஸாண்டர், மார்க்கப் போலோ, வாஸ்கோட காமா] கிரேக்கர், ரோமானியர், போர்ச்சுகீஸியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் பாரதத்தில் காலூன்றிய பின், இந்தியக் கலாசாரம், நாகரீகம், கல்வி அறிவு, மொழிகள் யாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன!

    1192 ஆண்டில் முகமது கோரி ராஜபுத்திர்களைச் சரித்திரப் புகழ் பெற்ற குருச்சேத்திராவில் தோற்கடித்து, அடுத்து 14 வருடங்கள் கழித்து வடநாட்டில் சுல்தான்களின் ஆட்சி ஆரம்பமானது. 1206 முதல் 1526 வரை 27 துருக்கியின் சுல்தான்கள் டெல்லி ஆசனத்தில் ஆட்சி செய்தனர்! 1526 இல் பாபர் கடேசி சுல்தானைப் பானிபட் என்னும் இடத்தில் தோற்கடித்து, முகலாய சாம்ராஜியத்தை டெல்லியில் நிலைநாட்டினார்! முகலாயர் ஆட்சியில் அவரது உருது மொழி உன்னத நிலை அடைந்து, ஓரளவு வான சாஸ்திரம் உயர்நிலை அடைந்தது. பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டாது இருந்திருந்தால், இந்தியா ஒரு முஸ்லீம் நாடாக ஈரான், ஈராக், அல்லது பாகிஸ்தான் போல் ஆகியிருக்கும்!

    ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இந்தியக் கல்வித் துறைகள் அமைப்பு

    1520 ஆம் ஆண்டிலே போர்ச்சுகீஸியக் குடியினர் தடம் சென்னையில் படிந்து விட்டது. தமிழில் அல்மேரா, ஜன்னல், சாவி போன்ற போர்ச்சுகீஸியச் சொற்கள் கூடிக் கலந்தன! அடுத்து இந்தியாவில் 1600 ஆண்டு பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி [East India Company] துவங்கி, 1639 ஆம் ஆண்டு சென்னையிலும், 1668 ஆம் ஆண்டு மொம்பையிலும், 1699 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலும் வர்த்தகத் துறைகள் ஆரம்பமாயின. பிறகு 1765 இல் ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் சாம்ராஜியத்துக்கு இந்தியாவில் அடிக்கல் நாட்டியதை நாம் அறிவோம். தென்னகத்தில் 1746-1760 ஆண்டுகளில் பிரென்ச் ஆதிக்கம், தமிழகத்தின் சில பகுதிகளில் மேலோங்கி யிருந்தது! பிறகு ஆங்கிலேயர் அவர்களைத் தோற்கடித்து அவ்விடங்களைக் கைப்பற்றினர்! ஆயினும் பாண்டிச்சேரி பிரெஞ்ச் கைவசம் இருந்தது!  [1757-1858] ஆண்டுகளில் பிரிட்டன் சிறிது சிறிதாக முழு இந்தியாவையும் கைப்பற்றித் தன்னாதிக்கத்தில் கொண்டு வந்தது.

    துண்டு துண்டான இந்தியா 15 ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது ? தனித்தனி அரசர்களின் ஆட்சியில் சிக்கி, பிராந்திய மொழிகள் ஏதோ ஓரளவு வளர்ச்சி பெற்றன. இந்தியா மொகலாய மன்னர்களின் போர்க்களமாகி இந்தியக் கலாசாரமும், நாகரீகமும் நசுக்கப்பட்டு, மொழிகளின் வளர்ச்சியைக் கண்காணிப்போர் குறைந்து போயினர். ஐரோப்பிய நாடுகள் விஞ்ஞானத்திலும், தொழில் நுணுக்கத்திலும் முன்னேறி, அவற்றின் மொழிகள் வளர்ச்சி யடைந்து வரும் போது, இந்திய மொழிகள் புறக்கணிக்கப் பட்டு தளர்ச்சி யடைந்து வந்தன. பிறகு பிரிட்டன் இந்தியா வெங்கும் இரயில் பாதைகள் அமைத்து, பல இடங்களில் அஞ்சல் நிலையங்கள் கட்டி, கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நிறுவகம் செய்து, ஆங்கிலத்தை முதன் மொழியாக்கி, இந்தியாவை இணைத்து முழு தேசமாக்கியது! பத்தாண்டுகளில் (1833-1843) முறையான கல்வித்துறை நிறுவகங்கள் இந்தியாவில் துவங்கக் காரணமான பிரிட்டனின் முக்கிய அறிவாளிகள்: மெக்காலே, எல்ஃபின்ஸ்டோன், திரிவேலியன் [Macaulay, Elphinstone, Charles Trevelyan] ஆகியோர்.

    தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி

    பாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை ? கலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு ? சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன ? எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ?

    இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமை நாடாக உழன்ற போது, விஞ்ஞான மேதை சி.வி. இராமனும், வேதாந்த மேதை இரவீந்திரநாத் தாகூரும் தனித்துவ நோபெல் பரிசைப் பெற்றார்கள். பாரதம் விடுதலை அடைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும், பாரதத்திலோ, தமிழகத்திலோ தனித்துவ நோபெல் பரிசு பெற, எத்தனை விஞ்ஞான வல்லுநர்கள் தலைதூக்கி நிற்கிறார்கள் ? இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி மாந்தரிடம் அறிவும் திறமையும் இருந்தாலும், விஞ்ஞானத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து நோபெல் பரிசு பெறத் தனித்துவத் தகுதியும், வேட்கையும், கடும் உழைப்பும் இல்லை என்று தீர்மானம் செய்வதா ? குறிப்பாகத் தமிழகத்தில் மற்ற கலைகளில் வல்லுநர் முன்னேறி இருந்தாலும், விஞ்ஞானத் துறைகளில் ஏதாவது ஒன்றில் மேன்மை மிக்க ஒருவர் கூட தற்போது இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய தகவல்!

    கலப்பற்ற தூயமொழிகள் உலகில் எங்கே உள்ளன ?

    கலப்பற்ற ‘தூயமொழி ‘ என்று பலர் பேசும் ஒரு வழக்கியல் மொழி, எங்காவது உலகில் தற்போது இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதில் கிடைப்பது சிரமம்! வடதுருவத்துக்கு அருகில் எங்காவது நாகரீகக் காற்றுப் படாமல் வாழும் எஸ்கிமோ இனத்தவர், அல்லது நீலகிரி மலை உச்சியில் தனித்து வாழும் காட்டினத்தவர் பேசும் எழுத்தற்ற சில மொழிகள் கலப்பற்றுச் சுத்தமாக இருக்கலாம்! அவர்களில் பலரது மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லாமல் இருப்பதால், கலப்பதற்கு மூல வடிவங்களே இல்லாத அந்த வாய் மொழிகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வில்லை! எழுத்து வடிவங்கள் கொண்டு பல்லாண்டு காலம் பெரும்பான்மை இனத்தவர் பயன்படுத்தும், மொழிகளின் கலப்பற்ற தூய்மையைப் பற்றியே என் வினா எழுகிறது.

    மனித இனங்கள் உலகெங்கும் தோன்றிய போதே அவற்றின் பேச்சு மொழிகளும் வளர்ச்சி யடைந்து, சிறுகச் சிறுக எழுத்து வடிவங்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகங்கள் நல்லாட்சி நிழலில் வளர்ந்து, நாகரீகம் அடைந்து, தொழில் வாணிபங்களால் செல்வம் பெருகிய பொற்காலத்தில், மொழிகள் ‘இலக்கணக் கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டு இலக்கியங்களும், காவியங்களும் பிறந்திருக்க வேண்டும். தனித்தனி இனங்களின் இடப்பெயர்ச்சியாலும், அன்னிய இனத்தவர் படையெடுப்பாலும், வேறின மக்கள் கலந்து பிணைந்த போது, நாட்டு மொழிகளிலும் கலப்புச் சொற்கள் நாளடைவில் சேர்ந்தன! இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேதியர்கள் கையாண்ட சமஸ்கிருதத்தின் பிணைப்புத் தமிழ்மொழியில் சேர்ந்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு, அச்சொற்களையும் தமிழில் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடமையாகும்.

    கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம். ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில்  ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!

    ஆங்கிலம் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் அகிலத்தின் பலகணி

    ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!

    கல்லூரிப் போதனை நூல்கள் யாவும் ஆங்கிலத்திலே அமைந்து, தொடர்ந்து ஆங்கிலத்திலே பயிற்பிக்கப் பட்டன. விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், சட்டப் படிப்பு போன்றவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள ஆங்கில மொழிக்குள்ள தகுதிபோல் பிராந்திய மொழிகளுக்குத் திறமை வர குறைந்தது 50 முதல் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆயினும் முழுக்க முழுக்க தமிழ் மொழியிலோ அல்லது மற்ற பிராந்திய மொழிகளிலோ கல்லூரியின் தரத்திற்குப் பட்டக் கல்வி புகட்ட முடியுமா என்பதில் ஐயப்பாடுள்ளது! தமிழ் மொழியிலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் பட்டப் படிப்புக்குத் தகுதியுள்ள நூல்கள், தற்போது அறிஞர்களால் எழுதப்படாமையே அதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

    பன்மொழிகள் கலந்த கூட்டு மொழியே தற்கால ஆங்கிலம்

    ஆங்கில மொழி பல நூற்றாண்டுகளாக புதுச் சொற்களை ஏற்று மாறிக் கொண்டே வந்துள்ளது. அதில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் எண்ணற்றவை. ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தலி போன்ற ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், சமஸ்கிருதம் போல் பூர்வீக மொழியான கிரேக்க, லத்தீன் மொழிச் சொற்கள் அநேகம் கலந்துள்ளன. இந்திய மொழிகளிலிருந்து குரு, யோகா, பறையா, நிர்வனா, கர்மா, மந்திரம், மாயா கட்டுமரான் [கட்டுமரம்], பண்டிட், பஜார், கர்ரி [Curry-Spice] போன்ற சொற்கள் இணைந்து, ஆங்கில அகராதியிலும் இடம் பெற்றுள்ளன! உலக நாடுகளில் பல இடங்களில் சைனாவின் கராத்தே பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளது போல், யோகா பயிற்சிக் கூடங்கள் தோன்றி, மேலை நாட்டவருக்கு யோகாவைச் சொல்லிக் கொடுக்கின்றன! நமது நகரங்களில் ராக் சங்கீதம் இறக்குமதி ஆனதுபோல், யோகா பயிற்சி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி யுள்ளது!

    இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!

    விஞ்ஞானப் படைப்புக் களஞ்சியத்தை நூலாக்கும் புதுத்தமிழ்

    ‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

    கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும் படியும், புரியா விட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.

    ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ? பார்க்கப் போனால் ஒவ்வொரு மொழியிலும் சில குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காக விஞ்ஞானச் சொற்களைத் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்று முயலாமல் இருப்பதும், தேவைப்படும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் ஒதுக்குவதும் மடமையோடு, விஞ்ஞானத் தமிழை வளர விடாமல் தடுக்கும் பிற்போக்குப் பண்பாகும்!

    விஞ்ஞானப் புதுத்தமிழ் (கலப்புத்தமிழ்) = தமிழ்ச்சொற்கள் (80%-90%) +வடமொழிச் சொற்கள் அல்லது +ஆங்கிலச் சொற்கள் அல்லது +திசைச்சொற்கள் (10%-20%)

    திசைச்சொற்கள் என்று இங்கு நான் குறிப்பிடுபவை: வடமொழி (சமஸ்கிருதம்), ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்கள் [தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, வங்காளம், உருது, போர்ச்சிகீஸ் போன்றவை].

    வேட்கை மிகுந்து விஞ்ஞானத்தை வளர்த்த இந்திய மேதைகள்:

    விஞ்ஞானம் இந்தியாவில் வளர நமக்கு வழிகாட்டிகள் துருவ விண்மீன் போல் பலர் உள்ளார்கள். டாக்டர் ஸர்.சி.வி. இராமன் (1888-1970), ஜகதீஷ் சந்தர போஸ் (1858-1937), சத்யேந்திர நாத் போஸ் (1894-1974), கணித மேதை இராமானுஜன் (1887-1920), மேகநாத் ஸாகா, சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995), டாக்டர் ஹோமி பாபா (1909-1966), டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971), டாக்டர் அப்துல் கலாம், ஜெயந்த் நர்லிகர், டாக்டர் ராஜா ராமண்ணா, பேராசிரியர் பிரியா நடராஜன்,  ஆகியோர். ஆயினும் நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் விரல்விட்டுக் கணக்கிடும் எண்ணிக்கையில் விஞ்ஞான மேதைகள் தோன்றி யிருப்பது வருந்தத் தக்க வரலாறுதான்! தமிழகத்தில் குறிப்பிடத் தக்க விஞ்ஞான நிபுணர்கள் தற்சமயத்தில் யாருமிருப்பதாகத் தெரியவில்லை! இந்தியாவில் அணுத்துறை, அண்ட வெளித் துறைகளில் விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சிக்கு நிதித் தொகை ஒதுக்கி ஆராய்ச்சிகள் நடத்தி வருவதுபோல், தமிழக மாநில அரசு தற்கால விஞ்ஞான நிபுணர்களையோ, எதிர்கால வல்லுநர்களையோ ஊக்குவிப்பதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை! அதுபோல் தமிழகத்தில் விஞ்ஞானமோ, தமிழ்மொழியில் விஞ்ஞான நூல்களோ வித்திடப் பட்டு விருத்தி யடையும் திட்டங்களை வகுக்க தமிழ் நாட்டரசு எம்முயற்சியும் எடுத்துள்ளதாக அறியப்பட வில்லை!

    விஞ்ஞானத் தமிழ் எழுத்தாளர்களின் கடமைப்பணி

    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மின்கணணி யுகம் தோன்றி, தனியார் மின்கணணிகள் [Personal Computers] ஒவ்வொரு வீட்டிலும் கைக் கருவி யாகவும், பன்னாட்டுப் பிணைப்புக் கருவியாகவும் பயன்பட்டு வருகின்றன. அகிலவலை தோன்றி அனைத்து நாடுகளும் இணைந்து, உலகம் சுருங்கி மக்கள் தொடர்பு கொள்வது மிக எளிதாகப் போனதால், இப்போது தமிழ் மொழிக்குப் புத்துயிரும், சக்தியும் மிகுந்து புதிய இலக்கியங்கள், காவியங்கள், கட்டுரைகள் [அரசியல், சமூகம், விஞ்ஞானம்] நூற்றுக் கணக்கில் தமிழ் அகிலவலைகளில் படைக்கப் படுகின்றன. திண்ணையில் குறிப்பாகத் தரமுள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை வே. வெங்கட ரமணன், டாக்டர். சரஸ்வதி, கோ. ஜோதி, டாக்டர் ஊர்மிளா பாபு (சிங்கப்பூர்), மா. பரமேஸ்வரன், சி. குமாரபாரதி, வ.ந. கிரிதரன், இ. பரமசிவம், டாக்டர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், ராமதுரை,  வல்லமை, திண்ணை வலைகளில் எழுதி வரும் முனைவர். தேமொழி, சி. ஜெயபாரதன் ஆகியோர் படைத்து வருவது வரவேற்கத் தக்கதே.

    ரஷ்யாவில் பொதுடமை ஆதிக்கம் வலுத்திருந்த காலங்களில் (1950-1990), மாஸ்கோவின் மாபெரும் நூலகம் ஒன்றில், மகத்தான விஞ்ஞானப் பணி ஒன்று அரசாங்க ஆதரவில் சிறப்பாக, ஒழுங்காக நடந்து கொண்டு வந்தது! ஆங்கிலத்தில் வெளியான புது நூல்களை ரஷ்ய மொழிபெயர்ப்புச் செய்வது. அதுபோல் ரஷ்ய விஞ்ஞானப் படைப்புகளை ஆங்கிலம், மற்றும் ஏனைய ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் பெயர்ப்பது. விஞ்ஞான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கும் அவ்வரிய விஞ்ஞானப் பணி தமிழ் நாட்டிலும், தமிழரசின் கண்காணிப்பில் ஒரு கடமை நெறியாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசு நிதி ஒதுக்கி, விஞ்ஞானத் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, வல்லுநர்களை உறுப்பினராக்கி விஞ்ஞான நூல்களை வடிக்க வழி வகுக்க வேண்டும்.

    விஞ்ஞானத் துறையின் பிரிவுகளான உயிரியல் [Biology], உடலுறுப்பியல் [Physiology], இரசாயனம் [Chemistry], பெளதிகம் [Physics], மருத்துவம் [Medical Sciences], பொறியியல் [Engineering Sciences], உலோகவியல் [Metallurgy] போன்றவை வெகு விரைவாக உலகில் முன்னேறி வருகின்றன. அவை முன்னேறும் வேகத்திற்கு ஒப்பாக விஞ்ஞானத் தமிழ் நூல்களையும் எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஒரு கடமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம்.

    **************************

    Share
  • காதல் நாற்பது (27)

    உயிர்ப்பூட்டும் காதல் !

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    jay

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    எனக்குரிய இனியனே !
    மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட
    எனைக் கைதூக்கி விட்டவன் நீ !
    உனது முத்தம் பெறுவதற்கு முன்னே
    சோகச் சுருள் கூந்த லிடையே
    உயிர் மூச்சு ஊதி
    நெற்றியின் மினுமினுப்பு
    முற்றிலும் தெரிகிறது,
    தேவதைகள் கண்ணில் படுவது போல் !

    உலகம் என்னை
    விலக்கி விட்ட போது,
    கடவுளை நான் தேடிப் போகக்
    கண்ணில் பட்டது நீ !
    எனக்குரிய நீ, எனக்குரி யவன் நீ
    என்னிடமே வந்தாய் !
    உனைக் கண்டு பிடித்தவள் நான்;
    பாதுகாப் பெனக்கு;
    பலம் கிடைத்த தெனக்கு;
    பரவச மெனக்கு;
    வாடா  மல்லி போல் நிற்கிறேன்,
    மூடாது பனித்துளி !
    பின்னோக்கிப் பார்க்கிறேன்;
    மேற்குடி வாழ்க்கையில்
    சலித்துப் போன உன்
    தருணங்களை !

    மார்பு பொங்கி எழும்ப
    நல்லதுக்கும் தீயதற்கும் நடுவே
    நானிங்கு,
    சாட்சி அளிப்பேன்;
    மரணத்தின் வல்லமை போல்
    மறுபடி உயிர்ப் பூட்டும்
    அந்தக் காதல் !

    ********************

    Poem -27

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    My own Beloved, who hast lifted me
    From this drear flat of earth where I was thrown,
    And, in betwixt the languid ringlets, blown
    A life-breath, till the forehead hopefully
    Shines out again, as all the angels see,
    Before thy saving kiss! My own, my own,
    Who camest to me when the world was gone,
    And I who looked for only God, found thee!
    I find thee; I am safe, and strong, and glad.
    As one who stands in dewless asphodel
    Looks backward on the tedious time he had
    In the upper life,–so I, with bosom-swell,
    Make witness, here, between the good and bad,
    That Love, as strong as Death, retrieves as well.

    **********

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “ஏனிந்த எக்காளம் யாதவக் கண்ணனுக்கு
    தானந்த தற்பரம் தானென்ற -ஆனந்த
    ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயின்றதில்!
    வேணும்கட் டிக்கு வேணு”….கிரேசி மோகன்…
    (OR)
    ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயிற்சியால்!
    சோணை ரமண சுகம்”….

    ****ஆதிமுலமே ஆயினும் அவனியில் அவதரித்து விட்டால் ஆதிதன் முலத்தை மறக்கும் அஞ்ஞானம் தவிர்க்க முடியாது போலிருக்கிறது…அது அகல அருணை ரமணர் அருளிய வழி “நான் யார்” (WHO AM I) விசாரணை…நம்மைப் போலவே நவநீதனும் நான் யார் விசாரணை செய்து நனி ஆனந்தம் கொண்டு நர்த்தனம் ஆடுகிறான் போலும்….

    Share
  • நிலவுக்கு அப்பால் பறக்கக் கூடிய நாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல் முதல் சோதனை முடிந்தது

     
     

    cjay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GLgnZ89b8Po

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DlkjMnWNjic

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gdxeDdwmEb0

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p6TWU4o0xQQ

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DSK_mymJvkM

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uo5hhIZ4qjM

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UEuOpxOrA_0

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sdk3qVI2Q5A

    ++++++++++++++++

    நிலவில் தடம் வைத்த நாசா
    செவ்வாய் நோக்கிச் செல்ல
    முதல் சோதனை செய்து முடித்தது !
    ஓரியன் விண் கப்பல்
    ஒருநாள் செவ்வாய்க் கோள்
    நோக்கிப் போகும் !
    அகில நாட்டு விண்வெளி
    நிலையத்தில்  இணைந்து சற்று
    இளைப்பாறிக் கொள்ளும் !
    நிலவில் இறங்கித்
    தங்குமிடத்தில் களைப்பாறும் !
    அங்கிருந்து கிளம்பி
    செந்நிறக் கோளில் இறங்கி நாசா
    முந்திக் கொள்ளும் !
    செந்நிறக் கோளைச் சுற்றியது
    இந்திய விண்ணுளவி  மங்கல்யான் !
    செந்நிறக் கோளில் தடமிடப்
    பந்தயம் வைக்கும்
    உலக நாடுகளில் ஒருநாள்
    பாரதமும்
    ஈரடி வைக்கும் ! புதிய
    ஓரியன் விண்வெளிக் கப்பல்
    சூரியக் கோள் களை
    இனிமேல் சுற்றப் போகுது
    மனிதர் இயக்கி !

    ++++++++++++++++++++

     

    Exploration Test -1

    “நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் முதல் சோதனை வெற்றி விஞ்ஞானத் தேடல் கண்டுபிடிப்பு எல்லையை நிலவுக்கு அப்பால் தள்ளி வைத்துள்ளது.”

    மைக்கேல் ஹாஸ் [Mike Hawes, Lockheed Martin Vice President & Orion Program Manager] 

    “இந்த விண்வெளிக் குறிப் பயணம் அமெரிக்காவின் பெருந்தூரப் பயண விண்வெளித் தேடல் முயற்சியில் ஒரு பெரிய  மைல் கல்லை நாட்டி விட்டது.  செந்நிறக் கோளுக்கு அடுத்து மனிதர் தடம் வைக்கப் போகும் திட்டத்துக்கு ஐயமின்றிப் பாதை விரிக்கிறது.  இதனால் அமெரிக்கர் அனுதின வாழ்வில் பெரும் பயன்கள் பக்க விளைவுகளாய் நேரப் போகின்றன.

    சார்லி பிரிகோர்ட் [Charlie Precourt, Vice President ATK Space Launch System]

     

    fig-6-parachute-landing-on-the-earth

     

    முறிவு ராக்கெட் சோதனை வெற்றி ஓரியன் விண்வெளி ஒளிமந்தைத் தேடல் திட்டத்தின் (Abort Motor Testing in Orion Constellation Program) ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.  அந்த வெற்றி ஓரியன் விண்வெளி விமானிகள் 2015 இல் அகில நாட்டு விண்வெளி நிலையத் துக்குச் சென்று அங்கே தங்கி, நிலவில் ஓய்வெடுத்து அடுத்து 2020 இல் செவ்வாயை அடைந்து மனிதர் பூமிக்குத் திரும்ப வசதி உண்டாக்கும்.  உந்துகணை ஏவுதல் முறிவு ஏற்பாடு ராக்கெட்டில் எந்த விதப் பழுதுகள் நேரினும் விண்சிமிழைத் துண்டித்துப் பாதுகாப்பாக விமானிகளை நிலத்தில் இறக்கி விடும்.”

    மார்க் கேயர் (Mark Geyer, Orion Project Manager NASA Johnson Space Center, Houstan) [Nov 20, 2008]

     

    Origin Spaceship with Solar panels

     

    நாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல் முதல் சோதனை வெற்றிகரமாய் முடிந்தது.

    2014 டிசம்பர் 5 ஆம் தேதி நாசாவின் புதிய ஓரியன் விண்வெளிக் கப்பல் ஏவப்பட்டு, பூமிக்கு மேல் 3600 மைல் உயரத்தை முதன்முதல் ராக்கெட் தொட்டு, விண்சிமிழ் பூமியை இருமுறைச் சுற்றி, மீண்டும் இறங்கி பாதுகாப்பாய் பசிபிக் கடலில் மீட்கப் பட்டு முதல் சோதனை முடிந்தது.  இந்தப் புதிய ஓரியன் விண்கப்பலைத் தயாரித்த அமெரிக்க நிறுவகம் : லாக்கீடு மார்டின் [Lockheed Martin].  இந்த முதல் விண்வெளிச் சோதனை நாசா பிற்காலத்தில் மனிதர் பயணம் செய்து ஆராயப் போகும் முரண்கோள் [Asteroid] முயற்சிக்கு அடித்தளம் இடுகிறது.  இந்த சோதனையில் முதன்முதல் ஆற்றல் மிக்க அசுர ராக்கெட் டெல்டா -4 [United Launch Alliance Delta IV Heavy Thrust Rocket]  பயன்பட்டது.   நாசா சோதனைத் திட்டப்படி ஓரியன் விண்கப்பல் உச்ச வேகம் 20,000 mph அடைந்து, 3600 மைல் உயரத்தில் இருமுறை பூமியை சுற்றி வந்து, பூமிக்கு இறங்கும் போது மீள் நுழைவு உராய்வுக் கனல் [Re-Entry Friction Heat] 4000 டிகிரி F [2200 டிகிரி C] உஷ்ணத்தில் சிதையாமல், பாராசூட் குடைகள் விரித்துப் பசிபிக் கடலில் பாதுகாப்பாய் நேர்கூம்பு வடிவில்  விழுந்தது.  கண்காணித்த அமெரிக்கக் கப்பல் ஒன்று விண்வெளிச் சிமிழைக் கடலிலிருந்து எடுத்துக் கருவிப் பதிவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

     

    Main Capsule

     

    நாசா ஓரியன் விண்கப்பல்  முதல் சோதனையில் வெற்ற வெற்றிகள்

    நாசாவின் எதிர்கால விண்வெளிப் பயணக் குறிக்கோள் திட்டங்களின் பொறியியல் நுணுக்கத் துறைகளுக்கு இந்தப் புதிய வழிமுறைகள் அடிப்படையாயின.

    1.  மீள் நுழைவுக் கனல் கவசம் :  [Earth Re-Entry Space Capsule Heat Shield] 

    ஓரியன் கனல் கவசம் இருமடங்கு திரவக் கனல் உஷ்ணத்தைத் [4000 டிகிரி F (2200 C)]  [Liquid Lava Temperature] தாங்கியது.  விண்சிமிழில் அமர்ந்து பயணம் செய்யப் போகும் மனிதரை இந்தக் கவசம் தான் பூமிக்கு மீளும் போது பாதுகாப்பது உறுதி யானது.

    2.  அபாய சமயத்தில் விமானிகள் காப்பு விடுப்பு ஏற்பாடு   [Launch Abort System] 

    அபாயம் நேர்ந்தால், விமானிகள் தப்பிக் கொள்ள பணிச்சிமிழ், ஆட்சிக் கருவிகள், ஒரு முன்மூடி ஆகிய மூன்றும் அற்று விடும் அமைப்புச் சோதிப்பில் வெற்றி.

     

    Rocket Launch

     

    3.   [Guidance & Navigation System]

    வழி நடத்தி, திசை காட்டும் சாதனங்கள் :  இத்துறைகளுக்குத் தேவையான உந்தியல் / உணர்வு [Boosters & Sensors]  முற்போக்குச் சாதனங்கள் வெற்றிகரமாய்ச் சோதிக்கப் பட்டன.  பணித் துவக்கம், கோள் சுற்றல் முடிந்து  தானாகப் பூமிக்கு மீளும் முறைகள் [Launch, Orbit, Re-Entry] சுய இயக்கம் சோதிப்பில் உறுதி யாக்கப் பட்டன.

    4.  [Radiation Protection System]

    ஓரியன் விண்கப்பல் இரண்டு முறை பூமிக்கு மேலிருக்கும் பரிதியின் கடும் கதிர்த் தாக்கம் உள்ள “வான் ஆலயம் வளையத்தைக்” [Van Allen Radiation Belt] கடந்து தீவிரக் கதிர் வீச்சுகளைப் பதிவு செய்தது.  விண்வெளி விமானிகள் மற்றும் கருவிகள் பாதிக்கப்படும் கதிரடிப் பாதிப்பு நிலை அறிய உதவும்.

    5.  [Parachute & Recovery Operations]

    பதினொரு பாராசூட் குடைகள் அடுத்தடுத்து இயங்கி விண்சிமிழ் இறங்கும் வேகத்தை 20,000 மைலிலிருந்து 20 mph குறைத்து, வேகத் தடுப்பு அதிர்வு தொல்லையைத் தவிர்த்தது.

    6.  [Environmental Control Module for the Crew]

    விண்கப்பல் இயக்கத்தால் எழும் யந்திர அதிர்வு, ஒலி அதிர்வு, தாக்கு விசைகள், [Vibrations, Acoustics, Forces] உஷ்ணம் ஆகியவை விண்சிமிழில் பதிவு செய்யப் பட்டன.

     

    Parachutes location

    21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டுப் பயணம் போகும் நாசா !

    1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது.  240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டி ருக்கும் இயற்கைத் துணைக்கோள் நிலவு ஒன்றுதான்.  அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கப் போகிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ?  பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ?  சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகில வெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை.  ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும்  ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

     

    fig-1-orion-going-to-the-moon

    நாசாவின் அப்பொல்லோ-16 பயணத்தில் மட்டும் விண்வெளித் தீரர்கள் 96 கி.கிராம் எடையுள்ள 731 பாறை மாதிரிகள் சந்திரனில் எடுத்துப் பூமிக்குக் கொண்டு வந்தனர்.  இறுதியில் செய்த அப்பொல்லோ-17 பயணத்தில் 110 கி.கிராம் மாதிரிகள் எடுத்து வந்தனர்.  அடுத்து 2009 ஏப்ரல் 24 ஆம் தேதித் திட்டமிட்டுள்ள “நிலவுத் தள ஆய்வுச் சுற்றி” (Lunar Reconnaissance Orbiter) தயாரிப்பாகி வருகிறது.  அதன் முக்கிய குறிக்கோள் “சுய இயக்க விண் எந்திரம்” (A Robotic Spacecraft) ஒன்றைச் சந்திரனில் இறக்கி மனிதருக்குத் தங்குமிடம் அமைக்க ஏற்ற தளத்தைக் கண்டுபிடிப்பது.  மேலும் அந்த எந்திரம் சந்திரனில் உள்ள எரிசக்திப் பொருள்களைத் (Lunar Resources) தேடி அறியும்.  ஆகவே சந்திரனில் இப்போது மாதிரி எடுத்துச் சோதிக்க நாசா நிதியைச் செலவழித்து புதிய விண்கப்பல் ஓரியனைத் தயாரிக்க வில்லை.  பிறகு எதற்காக ஓரியன் திட்டத்தை நாசா தயாரித்து வருகிறது ?

     

    Exploration vehicle -2

     

    நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?

    முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே !  அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது.  ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள்.  அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன.  குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.

     

    fig-1d-various-spaceships

     

    ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது.  இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது.  மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது.  இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

    செவ்வாய் நோக்கி ஓரியன் ஒளிமந்தை விண்கப்பல் திட்டம்

    21 ஆம் நூற்றாண்டில் நாசா புது நுணுக்க விண்வெளி தேடும் நூதனக் கப்பலைப் படைத்து வருகிறது.  “ஓரியன் ஒளிமந்தைத் திட்டம்” (Orion Constellation Program) எனப்படும் இது முதலில் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு 2020 ஆண்டுகளில் நான்கு விண்வெளி விமானிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது.  முதன்முதல் 1969 இல் சந்திரனில் தடம் வைத்த அப்போல்லோ-11 விண்கப்பலில் மூவர்தான் அமர்ந்து செல்ல முடிந்தது.  அடுத்தடுத்து ஓரியன் விண்கப்பல் எதிர்காலத்தில் சூரிய மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு மனிதப் பயணம் செய்யத் தயாரிக்கப்படும்.

    fig-1h-relative-sizes-of-rockets

     

    2010 ஆம் ஆண்டில் விண்வெளி மீள்கப்பல் ஓய்வெடுத்ததும் ஓரியன் விண்கப்பல் உணவுப் பண்டங்களையும், உதவும் சாதனங்களையும் விண்வெளி நிலையப் பயிற்சி விமானிகளுக்கு நிரந்தரப் பணிசெய்ய ஆரம்பிக்கும்.  அதற்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட (Spaceship Docking or Rendezvous) ஓரியன் விண்கப்பலில் சாதனங்கள் அமைக்கப்படும்.  மேலும் சந்திர தளத்தில் இறங்கும் இரதத்தை (Lunar Landing Module) ஏந்திச் செல்லும் தூக்குச் சாதனங் களும் இணைக்கப்படும்.  ஒருநாள் செவ்வாய்த் தளத்தில் இறங்கும் விண்ணுளவி களைக் கொண்டு போகும் எந்திர அமைப்புகளும் கட்டப்படும்.  இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால்  ஓரியன் விண்கப்பல் விமானிகள் நிலவுக்குப் போய் வரவோ அல்லது செவ்வாயிக்குப் போய் வரவோ அவற்றுக்கு ஏதுவான இரட்டை வசதி உள்ளது.  அத்துடன் ஓரியன் விண்கப்பல் 21 ஆம் நூற்றாண்டு ராக்கெட், பொறியியல், மின்னியல், மின்கணினி, பாதுகாப்பு, கவச முற்போக்குச் சாதனங்களை உடையது.

     

    fig-2-orion-spaceship-near-space-station1

     

    ஓரியன் விண்வெளிக் கப்பலின் அமைப்புகள்

    20 ஆம் நூற்றாண்டு அப்பொல்லோ விண்சிமிழ்கள் போல் வடிவம் இருப்பினும், ஓரியன் விண்கப்பல் பெரியது.  ஓரியன் அடித்தட்டு 16 அட் 6 அங்குலம் விட்டமும், 11 அடி உயரமும் கொண்டது.  அதன் எடை 25 டன்.  ஓரியன் விண்கப்பல் கொள்ளளவு அப்பொல்லோ சிமிழ் போல் இரண்டரை மடங்கு உள்ளது.  ஓரியனில் நிலவுக்குச் செல்லும் போது நால்வர் இருக்கலாம்.  விண்வெளி நிலையத்துக்கோ அல்லது செவ்வாயிக்கோ போகும் போது ஆறு பேர் அமர்ந்து செல்லலாம்.  ஓரியன் கப்பலின் முதல் பயணம் விண்வெளி நிலையத்துக்கு 2010 ஆண்டிலும், நிலவை நோக்கி 2014 ஆண்டிலும், செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டிலும் இருக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளன.

     

    SLS Rockets

     

    ஓரியன் விண்கப்பலை சுமார் 350 அடி உயரமுள்ள ஏரிஸ்-1 (Ares-1) ராக்கெட் ஏந்திச் செல்லப் போகிறது.  ஏதாவது பழுதுகள் ஏற்பட்டுப் பாதகம் விளையும் முன்பே அதைத் தடுத்து விமானிகளைப் பாதுகாக்க விண்சிமிழின் மேல் “ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு” (Launch Abort System) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.  ஓரியன் உந்துகணை அமைப்புச் சாதனங்கள் விண்சிமிழின் கீழ் “பணித் தேரில்” (Service Module) உள்ளன.  விண்வெளி நிலையத்துடன் பிணைக்கப் பட்டுள்ள போது ஓரியன் விண்கப்பல் ஆறு மாதங்கள் இணைந்திருக்க முடியும்.  எப்போது வேண்டுமாலும் ஓரியன் மீண்டு பூமிக்கு இறங்கலாம்.  அதுபோல் நிலவில் உள்ள போதும் அது ஆறு மாதங்கள் தங்கியிருக்க முடியும்.

     

    fig-1c-orion-details-testing

     

    ஓரியன் விண்கப்பல் எப்படி நிலவுக்குச் செல்லும் ?

    சந்திரனுக்குப் பயணம் போக இரண்டு ஏவுகணை ராக்கெட்டுகள் ஏரிஸ்-1 & ஏரிஸ்-5 அடுத்து அடுத்துப் பயன்படுத்தப்படும்.  ஓரியன் விண்கப்பலைத் தூக்கிச் செல்வது ஏரிஸ்-1 ராக்கெட் தொடுப்பு.  அது அனுப்பப் படுவதற்கு முன்பு பளு சுமக்கும் ஏரிஸ்-5 ராக்கெட் (Ares-5 Cargo Launch) ஏவப்படும்.  ஏரிஸ்-5 ராக்கெட் பூமியைச் சுற்றும் கீழ்ச் சுற்று வீதிக்கு முதற்கட்ட புவிநீக்கு ராக்கெட் பளுவையும், சந்திர தள இரதத்தையும் (Earth Departure Stage & Lunar Module) தூக்கிச் செல்லும்.  சந்திர தள இரதத்தில் இறுதியில் நிலவுக்குச் செல்லும் விமானிகள் பயணம் செய்வார்.  ஏரிஸ்-1 இருக்கும் ஓரியன் விண்கப்பல் புவிச்சுற்று வீதியில் சுற்றிக் கொண்டு சந்திர தள இரதத்துடன் பிணைத்துக் கொள்ளும்.  பிறகு புவிநீக்கு ராக்கெட் இரண்டையும் சேர்த்துக் கொண்டு நிலவுக்குச் செல்லும்.

     

    Exploration vehicle -1

    நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் சந்திரனைச் சுற்ற ஆரம்பித்த வுடன், ஓரியன் விண்கப்பலில் ஒரு விமானி சுற்றிக் கொண்டிருக்க நிலவுத் தளம் இறங்கும் இரதம் அதிலிருந்து பிரிந்து இரண்டு அல்லது மூன்று விமானிகளுடன் தளத்தை வந்தடையும்.  பிறகு மீண்டும் ஓரியன் விண்கப்பலுடன் சேர்ந்து கொள்ள விமானிகள் நிலவித் தள இரதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.  விமானிகள் நால்வரும் பூமிக்கு மீள வேண்டு மானால், பணித்தேரின் முக்கிய உந்துகணை எஞ்சினை (Service Module Main Rocket Engine) உபயோகித்துக் கொள்வார்.

     

    Future Capsule

     

    (தொடரும்)

    *******************

    தகவல்:

    Picture Credits :  ISRO Indian Website & www.Tamilhindu.com

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
    14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)
    15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)
    16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)
    17. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1
    18. BBC News – India in Multi-satellite Launch
    19. Times Now – India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
    20. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
    21. Cosmos Magazine – The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
    22..  Space Expolaration – Chembers Encyclopedic Guides (1992)
    23. The Times of India – After Mood Odyssey, It’s “Mission to Sun” for ISRO [2008]
    24.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]
    24.  Chandrayaan-1 Enters Lunar Orbit – Makes History [Nov 8, 2008]
    25.  Latest News – Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
    26.  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
    27. Chrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008]
    28. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
    29. Science Annual Volume Library -The Moon Revisited By : Dennis Mammana (1995)
    30. Readers’ Digest Publication -Why in the World ? -Uncovering Moon’s Secrets (1994)
    31. Time Great Discoveries – An Amazing Journey through Space & Time – Man on the Moon – Science or Show ? (2001)
    32. India Abroad Magazine : “Pie in the Sky” By Supriya Kurane [Nov 21, 2008]
    33. Time Magazine : “Back to the Moon” By Jeffrey Kluger & Houstan [Nov 24, 2008]
    34.. http://en.wikipedia.org/wiki/Orion_(spacecraft) (NASA’s Orion Voyage to the Moon) [Nov 26, 2008]
    35. BBC Science News – ESA Europe’s 10 Billion Euro Space Vision By Jonathan Amos
    36. http://en.wikipedia.org/wiki/Lunar_Reconnaissance_Orbiter – NASA’s Lunar Reconnaissance Orbiter [November 27, 2008]

    37.  http://www.nasa.gov/orion/  [December 8, 2014]

    38. http://wonderfulengineering.com/nasas-orion-spacecraft-ready-to-launch-in-december-2014/

    39. http://www.spacedaily.com/reports/NASAs_New_Orion_Spacecraft_Completes_First_Spaceflight_Test_999.html [December 9, 2014]

    40.  http://en.wikipedia.org/wiki/Orion_(spacecraft)  [December 13, 2014]

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com (December 13, 2014)]

    Attachments area
    Preview YouTube video Orion: The Journey Begins

    Orion: The Journey Begins

    Preview YouTube video ORION – NASA’s Deep Space Exploration Spacecraft – Explained in Detail – SUBTITLED

    ORION – NASA’s Deep Space Exploration Spacecraft – Explained in Detail – SUBTITLED

    Preview YouTube video Orion Exploration Mission 1 Animation 2013 NASA

    Orion Exploration Mission 1 Animation 2013 NASA

    Preview YouTube video NASA’s Orion Spacecraft Development & Testing (1080p)

    NASA’s Orion Spacecraft Development & Testing (1080p)

    Preview YouTube video Mission to Mars: Orion nuclear propulsion (remastered) – Orbiter Space Flight Simulator 2010

    Mission to Mars: Orion nuclear propulsion (remastered) – Orbiter Space Flight Simulator 2010

    Preview YouTube video Taking Man To Mars: Nasa Reveals The Technology Behind Its Orion Capsule

    Taking Man To Mars: Nasa Reveals The Technology Behind Its Orion Capsule

    Preview YouTube video Orion Soars on First Flight Test

    Orion Soars on First Flight Test

    Preview YouTube video Orion Atmospheric Reentry and Pacific Ocean Splashdown – Total Success

    Orion Atmospheric Reentry and Pacific Ocean Splashdown – Total Success
    Share
  • கவிதை எழுத வேண்டும்!

    சு. ரவி

     

    bharathy

    https://soundcloud.com/su-ravi/enssgi9f6lm9

    கவிதை எழுத வேண்டும்- இன்றொரு
    கவிதை எழுத வேண்டும்
    கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு
    கவிதை எழுதவேண்டும்
    காகிதம் இல்லை, கற்பனை இல்லை
    கைகளில் எழுதக் கோலெதும் இல்லை
    மேகப் பரப்பில் மிதக்கும் நிலவின்
    சீதக் கிரண விரல்களினாலொரு
    கவிதை எழுத வேண்டும்!

    உள்ளும் புறமும் ஓய்வில்லாமல்
    கனல் வளர்த்தானே, கவிதை நெய்தானே
    தெள்ளுதமிழ்க்குயிர் துள்ளித் துளிர்க்க
    தென்திசைப் புயலாய்த் திமிர்ந்தெழுந்தானே
    காற்றைப் பிடித்துக் கார்முகில் பரப்பில்
    கவிதை எழுத வேண்டும்!

    எல்லா உயிரும் தன்னுயிர் என்றே
    எக்களித்தானே விடுதலைக்காகச்
    சொல்லால் , செயலால் சோர்வில்லாமல்
    சூறாவளியாய்ச் சுழன்றடித்தானே!

    அலைகடற் பரப்பில் அவனுக்கென்றொரு
    கவிதை எழுத வேண்டும்

    கவலைகள் தின்னும் கணங்களில் கூடக்
    கண்ணனைக் காளியைக் காதலித்தானே
    தவமாய்க் கவிதைத் தீவளர்த்ததிலே
    தன்னையே ஆகுதி தான் கொடுத்தானே

    நெஞ்சத் திடலில் கோயிலெடுத்து
    நில்லாது பெருகும் கண்ணீரால் ஒரு
    கவிதை எழுதி வந்தேன்..இன்றொரு
    கவிதை எழுதி வந்தேன்!
    கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு
    கவிதை எழுதி வந்தேன்!
    சு.ரவி

    Share
  • பாடுதும் காண் அம்மானை-2

    மீனாட்சி பாலகணேஷ்

    கலம்பகங்கள் மட்டுமே அம்மானைப் பாடல்களை உறுப்பாகக் கொண்டவை அல்ல. மற்ற சிற்றிலக்கியங்களான உலா நூல்கள், பிள்ளைத்தமிழ் போன்றனவும் அம்மானை பற்றிய பாடல்களையும் விளக்கங்களையும் அருமையாகச் சித்தரிக்கின்றன.

    பெருமானான இரத்தினகிரீசர் உலா வருகின்றார். உலா வரும் அவரைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழுபருவத்து மகளிரும் காதல் வயப்படுகின்றனர். இவர்களில் மங்கைப் பருவத்துப் பெண்ணொருத்தி, தனது தோழியருடன்  பலவிதமான மகளிர் புடைசூழ அம்மானை விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறாள். பொழுது போவதே தெரியவில்லை. விறுவிறுப்பான வினாக்களும் இருபொருள் புதைந்த விடைகளுமாகக் களிப்புடன் இவர்கள் அம்மானையாடுகின்றனர். மற்ற பருவத்துப் பெண்கள் சூழ்ந்து நின்று இவர்கள் விளையாட்டைப் பார்த்த வண்ணம் உள்ளனர்!

    அழகு மிகுந்த மதுரைச் சொக்கலிங்கரான அந்தப் பெருமானைப் பற்றிப் பாடிய வண்ணம் அம்மானை ஆடுகின்றனராம். சிவனின் பலப்பல திருவிளையாடல்களைக் கூறி ஆடுகிறாள் இவள். தக்க யாகத்தில் தலையை இழந்த தனது மாமனாரான தக்கனுக்கு ஆட்டுத்தலை ஒன்றைக் கூட்டிக் கொடுத்தவனாகிய சிவபிரான் என்னும் ‘அம்மானை’ப் பாடி அம்மானை என்னும் விளையாட்டைப் பயில்கிறாள் இவள்.

    ‘வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே

    அந்த மிகுமதுரை அம்மானைச்- சொந்தமதாம்

    கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே

    ஆட்டுத்தலை படைத்த அம்மானை

    (புலவர் அம்மானை எனும் சொல்லைக் கொண்டே சொற்சிலம்பம் செய்வது படிக்கவும் செவிக்கும் இன்பமாக உள்ளது)

    மற்றொருத்தி கடலில் வலைவீசி மீன்பிடிக்க சிவபிரான் மீனவனாக வந்த திருவிளையாடலைக் கூறி அம்மானை ஆடுகிறாளம். எப்போதும் ஒரு மலையையே இருப்பிடமாகக் கொண்ட அவனைப் பாடியபடி இவர்கள் விளையாடுகின்றனர்!

    அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்

    மலைக்கே துறையாம் அம்மானை

    பாச்சில் என்னும் சிறந்த ஊரில் திருவாசிரமத்தில் நிறைந்த பெரியோருக்கும் பெரியானாகிய சிவபெருமான் உறைந்துள்ளான். அவ்வூரில் கமலன் எனும் ஒரு வைசிய குலத்தானின் மகளைச் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டாராம்; அந்த நிகழ்ச்சியைக் கூறி,  -அவருக்குப் பெண்மானைக் கொடுத்த செட்டி எனும் ஒரு மாமனையும் கொண்ட பெருமானாகிய அம்மானைப் பாடி இவள் அம்மானை ஆடுகின்றாள்.

    நிலைப்பாய்

    அட்டிபுரி பாச்சி லாச்சிரமத் தேபுணரக்

    கொட்டமிகு மானைக் கொடுத்தருளும்- செட்டியெனும்

    அம்மானையும் படைத்த அம்மானைப் பாடியிவள்

    அம்மானை யாடும் அளவிலே..

    சேறைக் கவிராச பிள்ளை இந்த  வாட்போக்கி உலா எனும் இரத்தினகிரி உலாவினை இயற்றியுள்ளர். அம்மானை என்ற சொல்லைத் திரும்பத் திரும்ப அடுத்தடுத்த வரிகளில் கையாண்டு புலவர் நயமுடன் கவித்திறனைக் காட்டியுள்ள அழகு படிப்பவர் மனதையும் கருத்தையும் அம்மானையாட வைக்கும்!

    இவ்வாறெல்லாம் அம்மனையாடும் பெண், வாட்போக்கி நாதனான இரத்தினகிரீசன் வரும் தேரானது தனது அருகாமையில்  வர, ஆடலை நிறுத்தி விட்டுப் பூக்களைச் சொரிந்து அவனை வணங்குகிறாள் என்கிறார்.

    பாடலை முழுமையாகக் காணலாமா?

    ‘வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே

    அந்த மிகுமதுரை அம்மானைச்- சொந்தமதாம்

    கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே

    ஆட்டுத்தலை படைத்த அம்மானை- வீட்டி

    அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்

    மலைக்கே துறையாம் அம்மானை- நிலைப்பாய்

    அட்டிபுரி பாச்சி லாச்சிரமத் தேபுணரக்

    கொட்டமிகு மானைக் கொடுத்தருளும்- செட்டியெனும்

    அம்மானையும் படைத்த அம்மானைப் பாடியிவள்

    அம்மானை யாடும் அளவிலே- பெம்மான்‘ 

    இவர்கள் ஆடினதும் மூவர் அம்மானையாகவே இருந்திருக்கலாம். அந்தப் பாடல்களக இவை இங்கு தரப்படவில்லை. ஆனால் அம்மானை ஆடிய விதம், எவ்வாறெல்லாம் ஈசனைப் பாடி அம்மானை ஆடினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

    மற்ற உலா நூல்களிலும் அம்மானை பற்றிய செய்திகள் இருந்திருக்க வேண்டும். இது புத்திக்கூர்மை படைத்த பெண்கள் ஆடிவந்த ஒரு சுவாரசியமான விளையாட்டு என்று எண்ண இடமிருக்கிறது.

    இலக்கிய நயமிக்க அம்மானை!

    பழங்காலந் தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்-சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள் என்கிறது தமிழ் விக்கிபீடியா. சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

    இவற்றை இங்கு விளக்குவதன் காரணம், எவ்வாறு ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக பழம் தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

    இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை : மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

    முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

    வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

    ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

    இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் காணடி, அம்மானை!”

    ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

    தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

    மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

    சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை! (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

    (இப்பாடல் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனைப் பற்றியது)

    திரும்பவும் இன்னொரு பாடலைப் பாடுகிறார்கள்:

    முதலாமவள்: “ஒரு புறாவுக்காக விண்ணுலகம் எல்லாம் புகழுமாறு தனது குறையற்ற உடலின் தசையை அரிந்து கொடுத்த சோழ அரசன் யாரடி அம்மா?”

    புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்

    குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன்யார் அம்மானை!

    இரண்டாமள் விடை பகருகிறாள்: “அவ்வாறு தசையினை அரிந்து கொடுத்தவன் யாரெனின், பசுவின் முறையீடு கேட்டுத் தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்த சோழ மன்னனின் வம்சத்தில் முன்னதாக வந்தவன் தானே அம்மானை!”

    குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த

    கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை!

    மூன்றாமவள் இவ்வாறு முடிக்கிறாள்: ஆகவே அத்தகைய மாமன்னனின் பூம்புகாரை நாம் பாடுவோம் அம்மானை!”

    காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை! (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-17)

    இவ்வாறு இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

    இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

    அம்மானை ஆடுவதை விடவும் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதை விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப்பாடல்கள். ஓரிரண்டைக் காணலாமே!

    அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் கல கல என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

    ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

    மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப

    இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

    சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாயிருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

    ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

    கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

    மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

    அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

    ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!’ (திரு அம்மானை-13)

    இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை! அம்மானை ஆடும் பெண்ணாகவே தன்னைக் கருதிக் கொண்டு மேலும் கூறுவார்:

    “கொன்றை மலர் சூடியவன் எம்பிரான்; ஆகவே நானும் பொலிகின்ற கொன்றை மாலையைச் சூடுவேன். அன்பு மேலிட்டு அவனுடைய திரண்ட தோள்களைத் தழுவுவேன்; அவனுடன் கூடுவேன்; கூடி மயங்குவேன்; சிறிது ஊடவும் செய்வேன். சிவந்த வாய் கண்டு கனிந்து உருகுவேன்; மனம் உருகி அவனைத் தேடுவேன். சிவபிரானது திருவடியையே சிந்திப்பேன். அவன் அருள் பெறவில்லையே என வாடுவேன்; அருள் கிடைத்ததும் மனம் மகிழ்வேன். அனலாகிய நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுகின்ற பெருமானின் செவ்விய திருவடிகளையே பாடி அம்மானை ஆடுவோம்,” என்கிறாள்.

    சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்

    கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று

    ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள் உருகித்

    தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்

    வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி

    ஆடுவான் சேவடியே பாடுதும்காண் அம்மானாய். (திரு அம்மானை-17)

    அடியார்களை இறைவன் பால் இட்டுச் செல்ல இதைவிட வேறு ஒரு இனிய வழியும் உண்டோ? தன்னையே மறந்து இறைவனுடன் ஒன்றி விட்ட நிலையன்றோ இது?

    நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

    பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில், பெண்குழந்தை அம்மானை விளையாடும் பருவம் எட்டாவது பருவமாக பாடப் பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்களைக் கொண்டது. (பிள்ளைத்தமிழ் பற்றிய விளக்கங்களுக்கு திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சிற்றிலக்கியங்கள்’ எனும்  நூலைக் காணவும்). இவற்றில் ஐந்தாறு வயது நிரம்பிய பெண்மகவு (பெரும்பாலும் பெண் தெய்வங்கள்) அம்மானை விளையாடும் அழகும் நேர்த்தியும், பெருமையும், பொருள் நயத்துடன் கூறப்படுகின்றது.

    குமரகுருபரர் பாடியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காணலாம். மீனாட்சியம்மை அம்மானையாடுவது எவ்வாறு உள்ளது எனப் பத்து பாடல்களில் விதம் விதமாக வருணிக்கிறார். அவற்றுள் ஒன்று:

    சிறந்த மரகதத்தாலும்,  நீலக் கற்களாலும் பருத்த ஒளி நிறைந்த முத்துக்களாலும் இழைக்கப்பட்ட அம்மனைகளை முறையே எடுத்து மீனாட்சி என்னும் குழந்தை வானில் வீசுகிறாள். குழந்தையால் அம்மானை விளையாட முடியுமா? தெய்வக் குழந்தையால் கட்டாயம் முடியும். ஆனால் இங்கு ஒரு மங்கையல்லவோ அம்மானை ஆடுகிறாள்? அவள் கண்ணுதல் பெருமானாகிய சிவபெருமானிடம் கொண்டுள்ள காதலால் அவருக்கு அம்மானைக் காய்கள் மூலமாகத் தூது விடுகிறாளாம்! அட! இப்படியும் ஒரு தூது முறை உண்டா என எண்ணுபவர்களுக்கு விளக்குகிறார்- மீனாட்சி தன் கையில் வைத்து வளர்க்கும் பச்சைக் கிளியைப் போலுள்ளதாம் மரகத நிறத்து அம்மானை; கருநீலக் குயில் போலுள்ளதாம் நீலமணி அம்மானை! ஒளி சிந்தும் பருத்த முத்தாலான அம்மானை இளமையான வெள்ளோதிமம்- வெண்மையான அன்னப்பறவை- போலுள்ளதாம்! என்ன அழகான கற்பனை! இவற்றையும் அம்மானைக் காய்கள் ஒரு ஒழுங்கில் மேலே வீசப் படுவதைப் போன்று முறையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தனது காதலைத் தலைவனிடத்தில் கூறிவர அனுப்புகிறாளாம் மீனாட்சியம்மை!

    ஒள்ளொளி மரகதமும் முழு நீலமும்

    ஒண்தரளத் திரளும்

    ஒழுகொளி பொங்க இழைத்திடும் அம்மனை

    ஓருமூன்று அடைவில் ஒடாக்

    கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ

    கண்ணுதல் பால்செல நின்

    கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்

    காமர் கருங்குயிலும்

    பிள்ளை வெளோதிமமும் முறைமுறையால்

    பெருகிய காதலைமேல்

    பேசவிடுப்ப கடுப்ப அணைத்தொரு

    பெடையொடு அரசஅனம்

    அள்ளல் வயல்துயில் மதுரைத் துரைமகள்

    ஆடுக அம்மனையே

    அழகு தழைந்தகல் யாண சவுந்தரி

    ஆடுக அம்மனையே. ( அம்மானைப் பருவம்-10)

    இவ்வாறு தூது விடும் இவள் யார்? மதுரைத் துரைமகள் ஆன மீனாட்சி- ‘அரச அன்னம் தன் பெடையொடு வயலில் உறங்கும் மதுரைக்கு அரசியே! நீ அம்மானை ஆடி அருளுக,’ என்கிறார். அற்புதமான கற்பனை விருந்து.

    தெய்வத் தமிழ் அம்மானை!

    இவ்வாறு காலகட்டத்தில் விதம் விதமாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன அம்மானை விளையாட்டும் அதனைச் சார்ந்த இலக்கியங்களும்!

    எனது சிறுமிப் பருவத்தில் கூட தோழியர்களுடன் வழுவழுப்பான கூழாங்கற்களைக் கொண்டு- அவை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் அமையும்- மேலே வீசியெறிந்து பிடித்து விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த கருத்துச் செறிந்த பாடல்களைப் பாடவில்லை. முந்தைய தலைமுறையினரான பாட்டிமார், அன்னையர் எவரும் சொல்லித் தரவில்லை. இவை நீண்ட நாட்களுக்கு முன்பே வழக்கிலிருந்து அழிந்தொழிந்து விட்டனவோ எனத் தோன்றுகிறது. மிக்க வருத்தமாயுள்ளது. எவரேனும் இந்த அருமையான விளையாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனரா எனத் தேட வேண்டும்.

    தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பின்குறிப்பு: பிற்காலத்தில் கள்ளழகர் அம்மானை, ராமப்பய்யன் அம்மானை, சிவகங்கை அம்மானை என்ற சில நூல்கள் பிறந்தன. இவற்றில் அம்மானை விளையாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒரு வீரத் தலைவனின் புகழ் நீண்டதொரு நாட்டுப்புறப் பாடல் நயத்தில் இசைக்கப் பட்டது. இவை முற்றிலும் Ballads  எனப்படும் நாட்டுப் பாடல் வகையைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை ஒரு காலத்தவரின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன.

     நன்றி: சொல்வனம் மின்னிதழ்

    Share
  • அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளியில் வாரம் ஒரு முறை கிறிஸ்தவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ வேதபாட வகுப்புகள் (Bible Study) உண்டு. கிறிஸ்தவர் அல்லாத மாணவிகளுக்கு நீதி வகுப்புகள் (moral classes) உண்டு. ஆனால் அங்கேயும் பைபிளிலுள்ள கதைகளைத்தான் சொல்வார்கள். கல்லூரிப் படிப்பும் கிறிஸ்தவ நிறுவனத்தில்தான். அந்தக் கல்லூரியை நடத்திய கிறிஸ்தவக் கன்னிமார்கள் (Christian nuns) அடிக்கடி கிறிஸ்தவ மதத்தில் உள்ள நீதி போதனைகளை எடுத்துச் சொல்வார்கள். அதனால் எனக்குக் கிறிஸ்தவ மதம் பற்றி ஓரளவு தெரியும். தங்கள் மதத்தைப் பரப்புவதில் சில கிறிஸ்தவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் நன்றாகத் தெரியும்.

    pledge2நேற்று காலையில் ‘வாக்’ போகும்போது என்னை ஒரு அமெரிக்கப் பெண் நிறுத்தினார். ‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்று என்னிடம் கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன். ‘இதைப் படியுங்கள்’ என்று கூறி என்னிடம் ஒரு சிறு துண்டு வெளியீட்டை நீட்டினார். நான் தயங்காமல் அதைப் பெற்றுக்கொண்டேன். அதோடு ‘அதைக் கண்டிப்பாகப் படிக்கிறேன்’ என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டும் வந்தேன். இந்த மாதிரியான அனுபவங்கள் அமெரிக்காவில் எனக்கு முன்பே பல முறை ஏற்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்பும் பல பெண்கள் (எல்லாம் பெண்கள்தான்; அது ஏனோ தெரியவில்லை என்னை ஆண்கள் யாரும் அணுகியதில்லை) என்னைச் சாலையில் சந்தித்தால் துண்டுச் சீட்டுகளைக் கொடுத்துப் படிக்குமாறு கூறுவார்கள். ஒரு முறை இரண்டு பெண்கள் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதாகக் கூறினார்கள். அது வேண்டாம் என்று நான் பணிவாக மறுத்துவிட்டேன். நேற்றுக் கிடைத்த துண்டுச் சீட்டிலும் தேவைப்பட்டால் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவ மதம் பற்றிப் பேசுவதாகக் கடைசியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்தவ மதம் பற்றிய புத்தகங்களையும் அனுப்புவதாகவும் வேண்டுமானால் ஒரு முகவரிக்கு எழுதும்படியும் கூறி அதற்குரிய முகவரியையும் கொடுத்திருந்தார்கள்.

    சாதாரண பிரச்சாரகர்கள் மூலம் மதத்தைப் பரப்புவதோடு அமெரிக்காவில் ஆர்கன்ஸாஸ், மிஸிஸிபி, வடக்கு கரோலினா, தென் கரோலினா, டென்னஸி, டெக்ஸாஸ், மேரிலாண்ட் ஆகிய ஏழு மாநிலங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தங்கள் அரசில் வேலை கொடுப்பதில்லை என்ற கொள்கையை இப்போதும் அவர்களுடைய அரசியல் சாசனத்தில் வைத்திருக்கின்றனவாம். ஐம்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் மேரிலாண்ட் மாநிலத்தில் அரசில் வேலைபார்த்த ஒருவர் தனக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கூற மறுத்ததால் அவரை நோட்டரியாக நியமிக்க மறுத்துவிட்டதாம். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடினார். இறுதியில் உச்ச நீதிமன்றம் அவருக்குச் சாதகமாக அளித்த தீர்ப்பில் பொதுத்துறையில் வேலைபார்ப்பதற்கு மாநிலங்கள் மத சம்பந்தமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று கூறியது. ஆனால் அதற்குப் பிறகு பல வருடங்கள் ஆன பிறகும் அந்த ஷரத்து மேரிலாண்ட் சாசனத்தில் இருக்கிறதாம்.

    மிஸிஸிபி மாநில அரசியல் சாசனத்தில் ‘எல்லோருக்கும் மேலாக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாநிலத்தில் பொதுத்துறையில் வேலைபார்க்க முடியாது’ என்று இருக்கிறதாம். வட கரோலினாவின் சாசனத்தில் ‘கீழே குறிப்பிடப்பட்டவர்கள் இம்மாநிலப் பொதுத்துறையில் வேலைபார்க்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். முதலாவதாக, கடவுள் ஒருவர் இருப்பதை மறுப்பவர்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறதாம். பென்சில்வேனியா மாநில அரசியல் சாசனம் இதையே வேறு விதமாகக் கூறுகிறது. அது ‘கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் சொர்க்கம், நரகம் என்பவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் பொதுத்துறை வேலை மறுக்கப்படமாட்டாது’ என்று கூறுகிறதாம்.

    அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசில் வேலைபார்ப்பதற்கு ஒரு போதும் மத சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று இருக்கிறதாம். இருப்பினும் மேலே குறிப்பிட்ட ஏழு மாநிலங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்குத்தான் வேலை கொடுப்பது என்ற ஷரத்தை இன்னும் வைத்திருக்கின்றன. ‘இந்த மாதிரி ஷரத்துக்கள் அமெரிக்க அரசியல் சாசனத்துக்குப் புறம்பானவை, இவற்றை அந்த மாநிலங்கள் அமுல்நடத்த முடியாது என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பிரிவில் வேலைபார்க்கும் பேராசிரியர் ஒருவர். ஆனாலும், எந்த அரசியல்வாதி இவற்றையெல்லாம் நீக்கப் போகிறோம் என்று துணிந்து வாக்களித்து வாக்காளர்களிடம் ஆதரவு கேட்கப் போகிறார் என்று கேட்கிறார்.

    god-bless-americaபொதுவாக, கடவுள் நம்பிக்கை வேண்டும் என்ற நிபந்தனை பற்றிய சர்ச்சை எப்போதாவதுதான் வெளியே கொண்டுவரப்படுமாம். 1992-இல் தென்கரோலினாவில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ஒருவர் நாத்திகர் என்பதால் அவருக்கு நோட்டரி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதாம். அவர் வழக்குத் தொடர்ந்து தென்கரோலினா மாநில உயர்நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்ததாம். 2009-இல் கூட நாத்திகர் ஒருவர் வட கரோலினாவில் ஆஷ்வில் என்ற ஊரின் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிலர் அந்த மாநிலத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் நிபந்தனையைப் பற்றிக் கூறி அவருக்குப் பதவி கிடைக்காமல் செய்ய முயன்றார்களாம். ஆனால் பின்னால் அதை விட்டுவிட்டார்களாம்.

    அமெரிக்காவில் கடந்த ஏப்ரலில் நடந்த ஒரு வாக்கெடுப்பில் 53 சதவிகித அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரைத் தாங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்களாம். போதைப்பொருள் உபயோகித்திருந்தவர்களையோ மனைவிக்குத் துரோகம் இழைத்திருந்தவர்களையோ கூட (இதுவரை பெண்கள் யாரும் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததில்லை) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பார்கள்; ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அமெரிக்கர்கள் விரும்புவதில்லை என்று அந்த வாக்கெடுப்பில் தெரிய வந்ததாம் (திருமணம் ஆகாமலே யாரோடும் சேர்ந்து வாழலாம் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தபோதும் திருமணம் ஆன பிறகு மனைவிக்கோ கணவனுக்கோ துரோகம் இழைப்பதை அமெரிக்கச் சமூகம் அனுமதிப்பதில்லை).

    IN-GOD-WE-TRUSTஇந்த ஏழு மாநிலங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று சில மதச்சார்பற்ற கழகங்கள் முயன்று வருகின்றன. பல மதத்தினர் வாழும் அமெரிக்க சமூகத்தில் நாத்திகர்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த வாதம் நியாயமானதுதான் என்று ஒப்புக்கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இவற்றை நீக்குவதற்குரிய முயற்சிகளை எடுக்கத் தயங்குகிறார்கள். மேரிலாண்ட் செனட்டர் ஒருவர், மதப் பன்மையில் (pluralism) தனக்கு விருப்பம் இருந்தாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இருக்கும் இந்தத் தடையை நீக்கும்படி மதச்சார்பற்றவர்கள் விடுக்கும் இந்தக் கோரிக்கை நிறைவேறினால் மேரிலாண்ட் மக்களுக்கு கிறிஸ்தவ மதத்தின்மேல் நம்பிக்கை இல்லை என்றாகிவிடும், அது அவர்களைப் புண்படுத்துவதாகும் என்கிறார்.

    பல விஞ்ஞான முன்னேற்றங்கள் நடந்துவரும் அமெரிக்காவிலும் கடவுள் நம்பிக்கைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் கடவுளை மறுக்கும் கம்யுனிச நாடாக சோவியத் யூனியன் உருவாகிக்கொண்டிருந்தபோது தன்னை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள அமெரிக்கா தன்னுடைய இருபத்து ஐந்து சென்ட் நாணயத்தில் ‘கடவுளை நம்புகிறோம்’ (In God we trust) என்று எழுதிக்கொண்டதாம். அமெரிக்க அரசியல் சாசனப்படி அரசுக்கு எந்த மதமும் இல்லை. எனவே எந்த மதக் கடவுள் என்று குறிப்பாகக் குறிப்பிடாமல் கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களுக்கு மதமும் கடவுளும் வேண்டும் என்பது புலனாகிறது.

    Share
  • மண்ணுக்கு மரம் பாரமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

    mannuku maram barama

    தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்திற்காக உருவான அனைத்துப் பாடல்களுமே அருமையெனலாம்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பல்வேறு குரல்களின் வழியே கேட்டு உருகவைக்கிற கானங்கள்! கவிஞர்களும் இத்திரைப்படத்திற்காக அணிவகுத்து எழுதியிருக்க.. இதோ ஒரு பாடல்..கவிஞர் மருதகாசி எழுத்தில்..

    திரைக்கதையைப் பின்னிக்கொண்டு அதைநம்மிடம் சொல்ல வருகிறது! தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு பற்றி இப்படி ஒரு தங்கமான பாடல் கிடைத்ததே.. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்திற்கு கிடைத்த வெற்றி என்பேன்!

    சூழ்நிலையின் காரணமாய் பெற்ற பிள்ளையை பிரிந்து பயணம் கொள்ளும் தாய்.. அவள் மனதில் உள்ள காயங்கள்.. விழிகளில் நீர் ததும்பிக்கிடக்க நடிப்பில் நவரசம் காட்டும் நடிகை திருமதி.ராஜசுலோசனா.. அவர் காணும் காட்சியில் தாயொருத்தி தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகின்ற பாடலாய்..

    வரிவரியாய் வரிந்துகட்டி எழுகின்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் இடையில் ஒரு சொந்தம்.. ஒரு பந்தம்.. பிரிக்க முடியாதவை இரண்டை சுட்டிக்காட்டி.. எழுத்துரதத்தை இயல்பாக ஓட்டுகிறார் கவிஞர்.

    இயற்கையான இந்த பந்தங்களை எவரால் மறுத்துச் சொல்ல முடியும்? அதுவும் தாய் தன் சேயை பாரம் எனக் கருத முடியுமா? அன்புசார்ந்த வினாக்கள் அடிமனதைத் தாக்க அன்னையின் இதயம் துடிக்கிறது! தாய்மை என்கிற பேற்றை தந்தது சேயல்லவா.. நீ அதன் தாயல்லவா.. பெற்றதுமட்டும் அங்கே போதுமா? பேணி வளர்த்திட வேண்டாமா? என்கிற தொடர் கேள்விகளுக்கு விடைசொல்ல முடியாமல் அன்னை மனம் படுகிற பாடு..

    எம்.எஸ்.இராஜேஸ்வரி அவர்களின் குரலில் தவழும் இந்த கானம் வெறும் தாலாட்டல்ல! தாய்மையை நோக்கிய கேள்விப்படை!! இனிமை நிறைந்த அந்தக் குரலில் இதயம் நோக்கிவரும் பாடலின் வரிகள் .. அர்த்தமிக்கவை.. ஆழமானவை.. இசையும் கவிதையும்.. துன்பத்தை எடுத்துச் சொல்லும்போதும்.. அதை இனிமை சேர்க்கும் இன்பராகமாய் அமைத்த இசையமைப்பாளர்.. இப் பாடல் கேட்கும்போதெல்லாம் நாம் பெறும் சுகம் கொஞ்சமல்ல!!

    http://youtu.be/c_3KefG0vxQ
    காணொளி: http://youtu.be/c_3KefG0vxQ

     

     

    படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
    பாடல்: கவிஞர் மருதகாசி
    இசை: கே.வி.மகாதேவன்
    குரல்: எம்.எஸ்.இராஜேஸ்வரி

    Marudhakasi_Book Reading Posem s rajeswzriK.-V.-Mahadevan-Songs thaipiranthal

    மண்ணுக்கு மரம் பாரமா
    மரத்துக்கு இலை பாரமா
    கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
    குழந்தை தாய்க்கு பாரமா

    வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
    தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
    மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
    தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே
    கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
    குழந்தை தாய்க்கு பாரமா
    [மண்ணுக்கு மரம் பாரமா]

    அழுதால் அரும்புதிரும் அன்னாந்தால் பொன்னுதிரும்
    சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேனுதிரும்
    பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
    பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
    அல்லலை கண்டு மனசு அஞ்சுமா
    குழந்தை அழுவதை கேட்டு மனசு விஞ்சுமா
    [மண்ணுக்கு மரம் பாரமா]

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 35

    சு.கோதண்டராமன்.

     

    யக்ஞத்தை விடமேலான வழிகள்

    http://www.dreamstime.com/-image1626895

    யக்ஞத்தை விட பிரார்த்தனை சிறந்தது:
    மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை யக்ஞத்துடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள் (1.86.2) என்று சொல்லப் படுவதிலிருந்து யக்ஞம் இல்லாமல் வெறும் பிரார்த்தனை மந்திரங்கள் மட்டுமே கொண்டு வழிபடுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அறிய முடிகிறது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. அதே நேரத்தில் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தருவது என்பதால் யக்ஞம் என்பது வெளிப்புறச் சடங்கு மட்டுமே என்பதும் அதை விடப் பிரார்த்தனையே அதிகப் பலன் தருவது என்பதும் தெரிய வருகிறது.

    அதே கருத்து வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது – இந்திரனை யக்ஞங்களால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் ஸ்தோமங்களால் அறிகிறார்கள் (1.131.2).

    உழைப்பின் முக்கியத்துவம்:
    யக்ஞமும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள் (1.142.2, 4.23.2, 6.3.2).

    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர் (4.33.11) என்று கூறும் வேதம் வேள்வியோடு கூட முயற்சியும் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

    யக்ஞத்தை விட சமீ மேலானது:
    ரிபு சகோதரர்களைப் பற்றி முன்னர் பார்த்ததை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம். அவர்கள் ஒரு மண் கிண்ணத்தை நான்காக மாற்றினர். தங்கள் பெற்றோர்களை இளமையாக்கினர். எலும்பும் தோலுமாக இருந்த ஒரு பசு மாட்டை உயிர்ப்பித்தனர். இந்திரனுடைய ரதத்திற்காக, வாய்ச் சொல்லைப் புரிந்து கொண்டு செயல்படவல்ல இரு குதிரைகளை உருவாக்கினர். அச்வின்களுக்காக மூன்று சக்கரம் உடைய, எளிதில் இயங்க வல்ல ஒரு ரதத்தை உருவாக்கினர்.

    அவர்களுடைய செயல்கள் தீ வழிபாடு என்ற பெயருக்கு உரியவை அல்ல. வேதத்தில் அவை சமீ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் அருஞ் சாதனை என்று கூறலாம்.

    யக்ஞத்தினால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபுக்கள் சமீ மூலமாக அடைந்தார்கள் என்கிறது வேதம் (1.20.2).

    ஆழ்ந்து ஆராய்ந்தால் யக்ஞத்தை விட சமீ மேம்பட்ட பலனைத் தருவது என்பதை அறிய முடியும். யக்ஞம் மனிதனை ரிஷி நிலைக்குத் தான் உயர்த்தும். சமீயோ மனிதனைத் தேவநிலைக்கு உயர்த்தும். ஆம், ரிபுக்கள் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையும் அமரத்வமும் பெற்றனர்.

    வணங்கினாலோ, சமீ செய்தாலோ, அல்லது மகம் (யாகம்) செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார் (8.75.14) என்று சொல்லப்படுவதிலிருந்து சமீயும், வணக்கமும் யாகத்தைப் போலவே பலன் தருபவை என்பது பெறப்படுகிறது.

    இந்திரனுக்கே ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது போன்ற பல அருஞ் செயல்கள் செய்ததனால்தான் இந்திர பதவி கிடைத்தது என்கிறது ரிக் வேதம் (8.89.5, 8.89.6).

    இவற்றிலிருந்து வேதம் யக்ஞத்தை மட்டுமே உயர்வாகப் பேசவில்லை, பிரார்த்தனைக்கும் உழைப்புக்கும் சமமான முக்கியத்துவம் தருகிறது என்பதை அறிகிறோம்.

    படம் உதவி: http://www.dreamstime.com/royalty-free-stock-photo-gold-statue-indian-woman-praying-hands-image1626895

    Share
  • எதிரியின் வீட்டில் கையை நனைக்கலாமா?

    தஞ்சை வெ.கோபாலன்

    இப்போதெல்லாம் எதிரிகள் என்றால் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொள்ளக்கூட முன்வர மாட்டார்கள். பொதுவான ஒரு நிகழ்ச்சிக்குப் போவதென்றாலும் ஒருவர் வந்துவிட்டுப் போன பிறகுதான் மற்றவர் அங்கு விஜயம் செய்வார். இப்படி எதிரிகளின் நடவடிக்கைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு உரியவர்களுக்குச் செய்தி போய்விடும். இதுபோன்ற மனப்போக்கு எப்போது தொடங்கியது? இது சரியா? பல ஆண்டுகளுக்கு முன்பு நம் பகுதிகளில் இருந்த பெரியவர்கள் விரோதம் என்பது எந்தத் துறையிலோ, அதோடு மட்டும் விரோதம் பாராட்டிவிட்டு மற்ற சமூகப் பழக்க வழக்கங்களில் சுமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பல பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது தெரிய வருகிறது. அதுபோன்றதொரு சூழ்நிலை மனதுக்கு இதமாகவும், அந்த நிலைமை இப்போது வராதா என்கிற ஏக்கமும் கூடவே ஏற்படுகிறது. இந்த எண்ணங்கள் எனக்குத் தோன்ற காரணமாக இருந்தது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் காணப்பட்ட நிகழ்ச்சிகள்தான்.

    200px-Ptrajanதமிழவேள் பி.டி.ராஜன் என்றதும், அவர் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர், மிகப் பெரிய செல்வந்தர், உத்தமபாளையம் ஜமீன், மதுரை மீனாட்சியின் பரம பக்தர், 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தை ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். மேலும் ஒரு கொசுறுச் செய்தியாக அவருடைய புதல்வர் பி.டி.ஆர்.பழநிவேல்ராஜன் தி.மு.க.ஆட்சியில் சென்னை மாநில சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்தவர் என்பதும் தெரியும். வேறு என்ன தெரியவேண்டும்? ஆம், மிக முக்கியமான செய்தியொன்று, முதல் பாராவில் சொன்ன விவரங்களின் அடிப்படையில் இவரைப்பற்றிய விருந்தோம்பல் அல்லது அன்னதானம் அல்லது எதிரிகளுக்கும் பசியாற உணவளித்த வரலாறு இவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரைப் பற்றி முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்வதே அறிவுடைமை. ஒரு பக்க செய்திகளோடு நிறுத்திக் கொள்வது, நாம் அவர்களுக்குச் செய்யும் துரோகமாகும். அந்த வகையில் பி.டி.ராஜன் பற்றி ஒரு சில விபரங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    பி.டி.ராஜன் அவர்களுடைய முழுப்பெயர் பொன்னம்பலத் தியாகராஜன். மதுரையில் இருக்கும் நாட்களில் ஒரு நாள்கூட தவறாமல் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்துவருவார். ஜஸ்டிஸ் கட்சி என்றதும் அதன் அடுத்த பிறவிகளான திராவிடக் கட்சிகள் நம் நினைவுக்கு வருவதும், அவர்களது நாத்திகக் கொள்கைகளும், கடவுள் மறுப்பும் நம் மனதில் தோன்றுவதும் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்தக் கால ஜஸ்டிஸ் கட்சியினரில் பெரும்பாலோர் ஆத்திகர்களாவும், இறை நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது ஏனோ அதிகம் வெளிச்சத்துக்கு வரவில்லை.

    சென்னையில் இருந்த நாட்களில் அவர் காலத்தில் மிகச்சிறிய கருவறையொன்றில் குடிகொண்டிருந்த வடபழனி முருகனை தரிசிக்காமல் அவர் இருந்ததில்லை. 1963இல் பெரும் செலவில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய குடமுழுக்கினை ஏற்பாடு செய்து நடத்தியவர் இவர். இவரைப் பற்றி எழுதும் தமிழறிஞர் ஒருவர் சொல்லும் செய்தி, இவர் ஆழ்வார்பேட்டை மெளபரீஸ் சாலையில் (இப்போது TTK சாலை), அமைச்சராக இருந்த காலத்தில் வசித்து வந்தாராம். அந்த வீட்டில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வருவோ போவோர் அனைவரும் நேரே போய் இலையில் உட்கார்ந்து அறுசுவை விருந்து சாப்பிட்டு விட்டுப் போகலாமாம். யார், எவர் என்பதெல்லாம் கேள்வி இல்லை; பசித்தவர் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாப்பிடலாமாம். மதுரை இல்லத்திலும் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே நிலைமைதானாம். அந்தக் காலத்தில் இதுபோன்ற அன்னதானம் மிக உயர்ந்தது. இப்போது போல தெருவுக்கு பத்து உணவகங்கள், தெரு முனைகளில் எல்லாம் டீக்கடைகள் என்று இல்லாத காலம். இப்படிப்பட்டதொரு தர்மத்தை விளம்பரமில்லாமல், இன்றைய தலை முறையினருக்கும் இப்படியெல்லாம் நடந்தது என்பது தெரிவிக்காத அளவுக்கு மெளனமாக இந்த பெருஞ்செயல் நடந்திருப்பது அதிசயமாக எண்ணத் தோன்றுகிறது.

    இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு நிகழ்ச்சிதான் நம்மை திக்குமுக்காட வைக்கிறது. இப்படியுமா நடக்கும் என்று வியக்க வைக்கிறது. அது என்ன? சொல்கிறேன்! 1928ஆம் வருஷத்தில் சென்னை மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சிலுக்குத் தேர்தல் நடைபெற்றது. ஜஸ்டிஸ் கட்சி சார்பில் பி.டி.ராஜன் வேட்பாளர். அவரை எதிர்த்து மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தியாகி மட்டப்பாறை வெங்கட்டராமையர் என்பார் காங்கிரசின் சார்பில் போட்டியிடுகிறார். சர் பி.டி.ராஜன் அவர்களோடு ஒப்பிடுகையில் ஐயர் மிகவும் வசதிக் குறைவானவர். காங்கிரஸ் தியாகி, பிரபலமான தலைவர் என்பதுதான் அவருக்கு உள்ள தகுதிகள். இதில் இன்னொரு வேடிக்கை இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் வேறு. எதிரெதிர் கட்சியினர்தானே தவிர எதிரிகள் அல்லர்.

    தேர்தல் சமயத்தில் மட்டப்பாறை ஐயருக்கு ஆதரவு திரட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் பல இடங்களிலிருந்து சொந்த செலவில் வந்து தங்கி பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். அப்படி அவர்கள் பணியாற்றிய போது பகல் உணவுக்கு பி.டி.ராஜன் இல்லத்துக்குத்தான் வருவார்களாம். அவர்கள் எதிர் கட்சிக்குப் பணியாற்றுபவர்கள் என்றெல்லாம் பாராமல் அவர்கள் அனைவருக்கும் உணவு படைத்தவர் பி.டி.ஆர். தேர்தல் முடிவும் வந்தது, அதில் பி.டி.ஆர். வெற்றி பெற்று விட்டார். இந்த முடிவு பற்றி சொல்லும்போது மட்டப்பாறை ஐயர் சொன்னாராம், “சோறு போட்டே பி.டி.ஆர். என்னைத் தோற்கடித்து விட்டார்” என்று. என்ன பண்பாடு! என்ன ஆரோக்கியமான அரசியல். ஊ….ம், இப்போது நினைத்துப் பார்த்தால்? “இனி நினைந்திரக்கமாகின்று……..” எனும் தொடித்தலை விழுத்தண்டூன்றினாரின் புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது.

    ஆதாரம்: “நான் கண்ட பெரியவர்கள்” பேரா.அ.ச.ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம், சென்னை.

    படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/P._T._Rajan

    Share
  • என்னளவில் மகிழ்கின்றேன்!

       – எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

         பார்த்தவர்கள் எல்லோரும்
         பக்குவமாய் வந்தமர்ந்து
         பலகதைகள் பேசிநிதம்
         பானமெலாம் பருகிடுவர்!

         வேர்த்துதொழுகி நிற்பார்கள்
         விரைந்தங்கே ஓடிவந்து
         வியர்வைதனைப் போக்கிவிட்டு
         வியந்தென்னைப் பார்த்துநிற்பர்!            tree

         பெரியவரும் சிறியவரும்
         பேதமின்றி வந்திடுவார்
         அருமையாய்ப் பலகதைகள்
         அவரங்கே பேசிடுவார்!

          உரசல்களும் வருமங்கே
          ஊர்வம்பும் தேடிவரும்
          பெருமளவில் சண்டைகளும்
          பின்னேரம் நடக்குமங்கே!

          பஞ்சாயம் செய்வாரும்
          பலகாதல் செய்வாரும்
          பாங்காக என்னிடத்தை
          தேர்ந்தெடுத்து நிற்பார்கள்!

          வெயில் நேரமானாலோ
          விரைந்தங்கே கூட்டம்வந்து
          பையவே அமர்ந்திருந்து
          பரவசமே கொண்டுநிற்பர்!

          எங்கிருந்தோ பறவையெலாம்
          எனைநாடி ஓடிவந்து
          இங்கிதமாய் இருந்தபடிச்
          சங்கீதம் பாடிநிற்கும்!

          குயில்கூவும் ஒருபக்கம்
          குரங்கோடும் மறுபக்கம்
          அணிலெல்லாம் அணிவகுத்து
          ஆடியசைந் தோடிநிற்கும்!

          இளனிவெட்டி விற்பாரும்
          இனிப்புச்செய்து விற்பாரும்
          இருப்பதனைப் பார்த்துவிட்டு
          எங்கிருந்தோ கூட்டம்வரும்!

          என்னிழலில் எல்லோரும்
          இருப்பதனைப் பார்த்தவுடன்
         எனக்குவரும் இன்பமதை
         எண்ணிவிட முடியாது!

         ஊர்நடுவே நானிருந்தேன்
         உதவிநின்றேன் யாவருக்கும்
         யார்செய்த பொல்லாங்கோ
         நானங்கே இல்லையிப்போ!

         புதுத்தலைவர் வந்தவுடன்
         புதுத்திட்டம் போட்டார்கள்
         திட்டம்வந்த காரணத்தால்
         தீர்ந்துபோச்சு என்வாழ்வு!

         ஊர்நடுவேநான் நின்றால்
         உபத்திரவம் எனச்சொல்லி
         வேரோடுஎனைச் சாய்க்க
         விரைந்தங்கே செயற்பட்டார்!

         வீதியைப் பெருக்குதற்கு
         வில்லங்கம் நானென்று
         வெட்டுதற்குத்  தீர்மானம்
         விரைந்தங்கே எடுத்திட்டார்!

         வெட்டுகின்ற செயல்பற்றி
         விவாதங்கள் நடந்தாலும்
         வெட்டவேணும் எனும்கட்சி
         வெற்றியங்கே பெற்றதுவே!

         இரவோடு இரவாக
         எனைவெட்டி வீழ்த்தினரே
         மறுநாளே விறகாக
         மண்மீது நான்கிடந்தேன்!

          நிழல்கொடுத்து நின்றயெனை
          நினைத்துமே பார்க்காமல்
          எனையெடுத்து எரிப்பதற்கு
          எல்லோரும் படையெடுத்தார்!

         இப்படியா இருப்பார்கள்
         எண்றெண்ணிப் பார்க்கையிலே
         மனிதமனம் மரத்துவிட்ட
         வக்கிரத்தை நினைக்கின்றேன்!

          எப்படித்தான் இருந்தாலும்
          எல்லோர்க்கும் நிழல்கொடுத்தேன்
          எனும்நினைப்பு  எழும்போது
          என்னளவில் மகிழ்கின்றேன்!

     

    Share
  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : கனடாவின் முதல் விமானப் பயணம் – 4

    சி. ஜெயபாரதன்

     

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)
     

    எனக்கு இரண்டு வெற்றிகள் இன்று! இரண்டும் (என் மனைவி) மேபெல் சொல்லிய ஆலோசனைகளின் விளைவே! முதல் ஆலோசனை: காற்றுக் காகக் காத்துக் கிடக்காமல், ஓடும் குதிரையுடன் அல்லது வாகனத்துடன் பட்டத்தை இணைத்துப் பறக்க விடுவது! நேற்று சிறிய பட்டங்களை அவ்விதம் பறக்க விட்டுப் பயின்று கொண்டோம். நாங்கள் பெரிய பட்டங்களை அப்படிப் பறக்க விட்டதில் எங்களுக்கு மாபெரும் வெற்றி! பறப்பியல் யந்திர நுணுக்கத்தை சூழ்வெளிக் காற்றில் கற்க முடிந்தது போல், செயற்கையாகக் காற்றை ஏற்படுத்திப் பயிலவும் முடிந்தது! முக்கியமாக செயற்கைக் காற்று முறையில் பட்டங்கள் கீழே விழுகின்ற நிகழ்ச்சியை நன்கு ஆய்வு செய்ய முடிந்தது! மேபெல்லின் இரண்டாவது ஆலோசனை: முக்கோணப் பட்டங்களை இணைப்பதற்கு அடைப்பு மெழுகையும், கூந்தல் பின்களையும் (Sealing Wax, Hairpins) பயன்படுத்துவது! மேபெல்லின் கருத்துரைகள் மிகப் பொருத்தமாக அமைந்து பேருதவி புரிந்தன!

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (பெல்லின் நாட்குறிப்பு நவம்பர் 18, 1902)

    பேரறிஞர் ஜோஸஃப் ஹென்றி அவர்கள், ‘படித்து அறிந்துகொள் ‘ என்று அன்போடு உரைத்த அவ்விரண்டு சொற்கள் எப்படி மனதில் ஆழமாய்ப் பதிந்து என்னை ஊக்குவித்தன என்பதை என்னால் விவரிக்க முடியாது! விஞ்ஞானத் தேடலில் ஊக்குவிப்பார் யாருமற்ற சூழ்நிலையில் நான் ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தேன். மின்சாரக் கம்பி மூலமாக வாய்ச் சொற்களை அனுப்பலாம் என்னும் நம்பத் தகுதியற்ற ஆக்க முயற்சிக்கு ஊக்கம் அளித்து, உடன் உழைத்த ஜோஸஃப் ஹென்றிக்கு என் மனமார்ந்த நன்றி! 

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    முன்னுரை: 1783 ஆம் ஆண்டு அக்டோபர் 15 இல் பிரெஞ்ச் மகாதீரர் பிராங்காய்ஸ் பிலேடர் தி ரோஸியர் [Froncois Pilatre De Rozier] என்பவர் வெப்பக் காற்றுப் பலூனில் [Hot Air Balloon] 84 அடி (26 மீடர்) உயரத்தில் முதன்முதலாக வானில் பறந்து காட்டினார்! அதை முதலில் ஆக்கிய பிரெஞ்ச் பொறி நுணுக்கப் படைப்பாளிகள் இருவர்: ஜோஸஃப் & ஜேக்ஸ் எட்டின் மாண்கல்ஃபியர் [Joseph & Jacques Etinne Montgolfier]. ஆனால் அதற்கும் முந்திய 1709 ஆண்டு வெப்பக் காற்றுப் பலூன் போர்ச்சுகல் நாட்டில் [Casa da India, Terreiro do Poco] சோதனை மாளிகைக்கு உள்ளேதான் பறந்தது! அதைப் படைத்த நிபுணர் பார்டோலொமியூ தி குஸ்மா [Bartolomeu de Gusmao] ‘பறக்கும் பலூனின் தந்தை ‘ என்று போற்றப் படுகிறார்.

    1848 இல் பிரிட்டீஷ் நிபுணர் ஜான் ஸ்டிரிங்ஃபெல்லோ [John Stringfellow (1799-1883)] என்பவர்தான் முதன்முதல் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி யந்திர சக்தியின் மூலம் வானத்தில் பறக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவரால் அப்போது பறந்து காட்ட முடிய வில்லை! முதன்முதல் யந்திர சக்தியில் வான ஊர்தி அமைத்துப் பறந்து காட்டியவர் அமெரிக்காவின் சைக்கிள் நிபுணர்களான ரைட் சகோதரர்களே! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] ஆர்வில் ரைட் (1871-1948) 12 H.P. (Horse Power) ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் இயக்கும், முதல் மனிதர் அமர்ந்து ஓட்டும் வான ஊர்தியை விண்ணில் பறக்கவிட்டு விமானப் பறப்பியில் யுகத்தை ஆரம்பித்து வைத்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த வான ஊர்தி மணிக்கு 7 மைல் வேகத்தில், பூமிக்கு மேல் 12 அடி உயரத்தில், 120 அடி தூரம் பயணம் செய்தது!

    1908 ஆண்டில் பிரெஞ்ச் எஞ்சினியர் லூயிஸ் பிளேரியட் [Louis Bleriot (1872-1936)] ஒற்றை விமானி ஊர்தியைச் [Monoplane] செம்மையாக்கித் தற்கால விமான மாதிரிக்கு வடிவம் அமைத்துத் தந்தார். 1909 ஜூலை 25 ஆம் தேதி முதன் முதலில் இங்கிலீஷ் கால்வாயைத் தன் ஒற்றை ஓட்டுநர் விமானத்தில் கடந்து தீரச் செயல் புரிந்தார்! அந்த மாடலில் அமைக்கப் பட்ட விமானங்களே பின்னால் முதல் உலகப் போரில் (1914-1917) குண்டு வீசப் பயன்படுத்தப் பட்டன! ஜெட் எஞ்சினை 1939 இல் முதலில் இணைத்த விமானத்தைப் படைத்தவர், ஜெர்மன் நிபுணர் ஹான்ஸ் ஃபான் ஓஹைன் [Hans Von Ohain].

    ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தன் குழுவினருடன் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாகப் பயிற்சிகள் செய்ய முற்பட்டார். ரைட் சகோதர்கள் தமது பறப்பியல் ஊர்திச் சோதனைகளைக் காற்று

    வீசும் மணற் பாங்கான கிட்டி ஹாக்கில் செய்தனர். பெல் குழுவினர் தமது பறப்பியல் பயிற்சிகளை கனடாவின் நோவாஸ் கோஷியாவில் பெடாக் (Baddeck, Nova Scotia, Canada) அருகில் உள்ள ஏரிக் கரையில் செய்தனர். பறப்பியல் பொறி நுணுக்கத்தை விருத்தி செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினரின் யந்திரத் துறைச் சாதனை களையும், சோதனைகளையும் எடுத்துக் காட்டுகிறது, இக்கட்டுரை.

    வான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்

    ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங் களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார்! முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.

    1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave ‘s Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிதான நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை! 1902 இல் பெல் அமைத்தது 64 கூடுகள் இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால் பட்டத்தைக் காற்று தூக்கிவிட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.

    பெல்லின் பறப்பியல் துறைப் பயிற்சிகள்

    பெல் பல விதமான முக்கோணப் பிரமிட் பட்டங்களைச் செய்து பறப்பியல் அடிப்படைப் பண்புகளைக் கற்றுக் கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு பிரமிட் பட்டத்துக்கு ‘ஓயோநாஸ் ‘ [Oionos] என்று அழைக்கப்படும் உயரத்தில் பறக்கும் கிரேக்கப் பறவையின் பெயரை இட்டார். ஊர்தியின் நிலைப்பாடுக்கும், எழுச்சி ஆற்றலுக்கும் [Stability & Lifting Power] உறுதிப்பாடைக் கொடுத்ததால், பெல் குழுவினர் ஒயோநாஸ் பட்டத்தின் சாய்ந்த பக்கத்துடன், மட்டநிலைத் தட்டுகளை (Oblique & Horizontal Surfaces) 1903 இல் இணைத்தனர். மிகச் சிறப்பாகப் பறந்த பெல்லின் ஒரு வட்ட வளையப் பட்டம், பக்கவாட்டில் சரிந்து கீழே விழுந்து நொறுங்கிப் போனது! அவரது பறப்பியல் பயிற்சிகள் திருத்தமாகி, விருத்தியாகி வெற்றிகரமாக இயங்கிய தால், அடுத்து எடுத்துக் கொள்ளப்பட்ட பெல் குழுவினரின் பட்டங்கள் மாபெரும் பூத வடிவங்களில் அமைக்கப் பட்டன.

    பெல் பறப்பியல் கூட்டாளிகளின் ‘வான் பறப்பியல் பயிற்சிக் குழுவகம் ‘ [Aerial Experiment Association] 1907 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. அவற்றின் முக்கிய கூட்டாளிகள்: டக்லஸ் மெக்கார்டி, கேசி பால்டுவின், பெல், கிலென் கர்டிஸ், தாமஸ் செல்ஃபிரிட்ஜ் [Douglas McCurdy, Casey Baldwin, Alexander G. Bell, Glenn H. Curtiss, Thomas E. Selfridge] ஆகியோர். டக்லஸ் மெக்கார்டி தான் 1909 இல் முதன் முதலில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினர் தயாரித்த, ‘சில்வர் டார்ட் ‘ (Silver Dart) அல்லது ‘பறக்கும் வெள்ளி அம்பு ‘ எனப்படும் வான ஊர்தியை மணிக்கு 40 மைல் வேகத்தில், அரை மைல் தூரம் விண்ணில் பறந்து காட்டியவர். அமெரிக்கா வில் ரைட் சகோதரர்கள் 1903 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக் மணற் திடல் மேலாக 12 அடி உயரத்தில், 12 வினாடிகள், 120 தூரம், மணிக்கு 7 மைல் வேகத்தில் பறந்து காட்டினார்.

    ஐரோப்பாவில் முதன்முதல் பிரேஸில் விமான நிபுணர், அல்பர்டோ சாண்டாஸ் துமான்ட் [Alberto Santos Dumont] 1906 நவம்பரில் 725 அடி உயரத்தில் 21 வினாடிகள் பறந்து காட்டினார். துமான்ட் ஏற்கனவே 1897 இல் வெற்றிகரமாக வாயுப் பலூனில் பறந்து காட்டியவர். 1901 இல் ஹைடிரஜன் நிரம்பிய வாயுக் கப்பலில் [Hydrogen-filled Airship] பறந்து, முதன்முதல் பாரிஸில் ஐஃபெல் கோபுரத்தைச் சுற்றி வந்தவர். 1902 இல் வாயுக் கப்பலில் பயணம் செய்து மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சி செய்யும் போது, வாயுக் கப்பல் கடலில் திடார் வீழ்ச்சி அடைந்தது!

    கனடாவில் பெல் குழுவினர் தயாரித்த முதல் வான ஊர்தி

    ‘சில்வர் டார்ட் ‘ அலெக்ஸாண்டர் குழுவினரால் [Aerial Experiment Association] முதலில் தயாரிக்கப்பட்ட வான ஊர்தி. கனடாவின் முதல் விமானப் பறப்பை 1909 பிப்ரவரி 8 ஆம் தேதி நோவாஸ் கோஷியாவின் பெடாக் பனித்தளத்தில் ஓடி விண்ணில் பறந்து காட்டியவர் ஜான் மெக்கார்டி. மெக்கார்டி சில்வர் டார்ட் ஊர்தியை டிசைன் செய்து தயாரித்தவரில் ஒருவர். குழுவைச் சேர்ந்த ஜான் மெக்கார்டியும், ஃபிரடெரிக் பால்டுவினும் கனடாவின் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற எஞ்சினியர்கள். கோடை விடுமுறையைக் கழிக்க நோவாஸ் கோஷி யாவுக்கு வந்த இருவரும், பெல் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு பெரும் வாய்ப்புக் கிடைத்தது. மெக்கார்டியின் தந்தை பெல்லின் தனிச் செயலாள ராகப் பணி ஆற்றினார். அவர்கள் மூவரும் பெல்லின் பெடாக் மாளிகையில் ஒருநாள் பறப்பியல் துறைப் பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, பெல்லின் திறமை மிக்க மனைவி, மேபெல் ஓர் சிறந்த ஆலோசனையைக் கூறினார்: பெல், மெக்கார்டி, பால்டுவின் ஆகிய மூவரும் இணைந்து, ஒரு பறப்பியல் குழுவகத்தை அமைத்துத் தமது படைப்புக் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வச் செழிப்புள்ள மேபெல், விமானப் படைப்புத் திட்டங் களுக்கு நிதி உதவி அளிப்பதாக வாக்களித்தாள்.  தீரா ஆர்வமுள்ள எஞ்சினியர்களின் கூட்டு உழைப்பும், மேபெல்லின் நிதிக் கொடையும் ஒருங்கே கிடைத்தது, விமானப் பறப்பியலை விருத்தி செய்ய பெல்லின் பொற்கால வாய்ப்பு நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது!

    அடுத்து இரண்டு நிபுணரின் கூட்டு உதவியும் பெல்லுக்கு கிடைத்தது. அமெரிக்காவின் மோட்டர் சைக்கிள் டிசைனரும், உற்பத்தியாளரும், பெட்ரோல் எஞ்சின் இயக்க நிபுணருமான கெலென் கர்டிஸ் [Glenn H. Curtiss] அழைக்கப் பட்டு, பறப்பியல் குழுவகத்தில் சேர்க்கப் பட்டார். அமெரிக்க அரசாங்கம் பெல் கனடாவில் செய்து வரும் பரபரப்பான பறப்பியல் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, தனது பிரதிநிதியாக லெஃப்டினன்ட் தாமஸ் செல்ஃபிரிட்ஜை [Lt Thomas Selfridge] குழுவகத்துடன் சேர்த்திட வேண்டிக் கொண்டது.

    1908 இல் பெல் குழுவினர் தயாரித்த சில்வர் டார்ட் நான்காவது வான ஊர்தி! அதன் முன்னோடியான ‘ஜூன் வண்டு விமானம் ‘ [June Bug Plane] ஏற்கனவே வட அமெரிக்காவில் 1 கிலோ மீடர் பயணம் செய்த ஒரு பறப்பு முத்திரையை நிலைநாட்டி, சையன்டிஃபிக் அமெரிக்கன் பரிசைப் [Scientific American Trophy] பெற்றிருந்தது! அதனைப் பின் தொடர்ந்த சிலவர் டார்ட் விமானத்தை 1909 இல் ஜான் மெக்கார்டி ஓர் வட்ட வீதியில் சுற்றி 20 மைலுக்கும் மேலாகப் பறந்து காட்டிப் புதியதோர் பறப்புப் பதிவை நிலை நாட்டினார். 1909 ஆகஸ்டு 2 ஆம் தேதி கனடாவில் முதன்முதல் விமானப் பயணிகளை சில்வர் டார்ட் விமானத்தில் ஏற்றிச் சென்றதாக அறியப்படு கின்றது.

    சில்வர் டார்ட் ஊர்தியின் நீளம்: 39 அடி, உயரம்: சுமார் 10 அடி, இறக்கை யின் நீட்சி: 49 அடி. மொத்த எடை: 860 பவுண்டு (390 கி.கிராம்). உச்ச வேகம்: மணிக்கு 43 மைல். பறக்கும் தூரம்: 2100 அடி (640 மீடர்). ஆற்றல் தரும் எஞ்சின்: 65 H.P. (Continental A-65). முதல் பறப்புப் பயிற்சி: 1908 ஆம் ஆண்டில். சில்வர் டார்ட் இரும்புக் குழல், மூங்கில் கம்புகளால் அமைக்கப் பட்டது. விமானச் சட்டங்கள் பிறகு ரப்பர் திரவத்தில் மூழ்க்கிய பட்டு பலூன் துணியால் மூடப் பட்டவை. விமானத்துக்கு ஆற்றல் தரும் எஞ்சின் சுழலி [Propeller] திட மரக் கட்டையில் செதுக்கப் பட்டது. அதனுடைய வால்புறம் விமானத்தின் பின்புறம் இல்லாது, முன்புறம் இணைக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்து விமானங்களைப் போன்றே, சில்வர் டார்ட்டும் போதிய ஆட்சிக் கட்டுப்பாடு இன்றியே [Poor Control Characteristics] இயங்கி வந்தது!

    விமானப் பறப்பியல் துறை முன்னோடிகளில் ஒருவர் பெல்

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது. மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்படுகிறார்.

    யந்திர ஆற்றல் விமானப் படைப்பாளிகளில் ரைட் சகோதரருக்கு இணையாக வருபவர் பெல் குழுவினர் என்பதில் வாக்கு வாதங்கள் இருப்பினும், விமானப் பறப்பு விருத்திக்கு பெல் குழுவினர் சீராக முற்பட்டு செம்மைப்படுத்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எடிஸனும், பெல்லும் வட அமெரிக்காவில் தமது வல்லமையைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! விஞ்ஞானப் பறப்பியல் முயற்சிகளையும், மற்ற கண்டுபிடுப்பு களையும் நிழற்படங்கள் எடுத்தும், நாட்குறிப்பில் பதிவு செய்தும் பெல் ஒழுங்காகச் செய்து வந்தது, எதிர்காலச் சந்ததிகளுக்குப் பாடமாகவும், பயிற்சியாகவும் இருந்து வருகிறது.

     
    சில்வர் டார்ட்டின் மாடலை கனடாவின் விமானப்படைத் துறையினர் [Royal Canadian Airforce (RCAF)] (1956-1958) ஆண்டுகளில் மீண்டும் தயாரித்து பெடாக், நோவாஸ் கோஷியாவில் விமானம் முதலில் பறந்த 50 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவில் பறந்து காட்டினர்! ஆனால் பெடாக்கில் அன்று அடித்த பேய்க் காற்றில், விமானம் திடார் வீழ்ச்சியாகிச் சேதம் அடைந்தது! அது பின்னால் செம்மை யாக்கப்பட்டு, கனடாவின் விமானக் காட்சி மாளிகையில் கண்காட்சி ஊர்தியாக வைக்கப் பட்டுள்ளது. இரண்டாம் யந்திரப் புரட்சி உண்டான இருபதாம் நூற்றாண்டின் மகத்தான படைப்பாளி களில் ஒருவராக அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் திகழ்கிறார் என்று விஞ்ஞான யுகம் பாராட்டுகிறது!
     

    [முற்றும்]

    *****************

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9 Britannica Concise Encyclopedia [2003]

    10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

    13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

    14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

    15 The Penguin Desk Encyclopedia of Science & Mathematics [2000]

    16. Guinness World Records (2005) Special 50th Anniversary Edition.

    17. Minipedia -World History Events That Have Shaped The World (2005)

    **********

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (134)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாரமொன்று ஓடியதால், காலைங்கு கரைந்ததினால் விரைந்து நானும் இங்கே வரைகின்றேன் இம்மடலை.

    barathi41882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி அரும்பாகி 1921ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மண்ணில் உதிர்ந்த தமிழன்னையின் தவப்புதல்வன் எமதினிய புரட்சிக் கவிஞன் பாரதியின் 132 வது பிறந்தநாளில் இம்மடலை இங்கிலாந்திலிருந்து வரைந்து கொண்டிருக்கிறேன்.

    நான் ஈழத்தில் பள்ளி மாணவனாக பதின்ம வயதுகளில் வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் என் இதயத்தில் ஒரு பெரும் இடத்தை பிடித்திருந்தாலும் அதன் உண்மையான தாக்கத்தின் விளைவை அறியா முடியாமல் வாலிபக் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

    பாரதியின் பெருமைகளை என் தந்தை பட்டியலிட்டுக் கூறும்போது அதற்குரிய கனத்துடன் அவற்றைச் செவிமடுத்திருப்பேனா என்பது சந்தேகமே !

    அவ்வயதுக்கேயுரிய காதல் உணர்வுகளில் அழுந்தி அவற்றை வரிகளாக்கித் தந்த கவிஞர்களின் பாடல்களை வாய் முணுமுணுக்கும் போதும் அக்கவிஞர்களின் கைகளில் விளையாடிய தமிழின் நர்த்தனத்தைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனது சிந்தனை விரிவடைந்திருக்கவில்லை.

    காதலென்று கண்டதை கணக்கிட்டு கொண்டு மனதுக்குள் சிறகடித்துப் பறந்து விட்டு பின்பு அது காதலல்ல வெறும் கானலேயென்று உணர்ந்து கொண்டதும் அவ்வுணர்களின் வலி கொடுக்கும் சுகமான சுமைகளை சுவைக்கத் தொடங்கும் உள்ளத்தில் உறையத் தொடங்கின.

    புலம்பெயர் தேசத்தில் தனிமையான வாழ்க்கை அதனுள் எமது வாழ்க்கையை ஒட்டிச் செல்ல வேண்டிய காலத்தின் கட்டாயம் இப்படியான சூழல்களில். பலரின் சந்திப்புகளும் அச்சந்திப்புகளின் வழி நான் எடுத்து வைத்த அடிகளும் எனக்குக் கொடுத்த அனுபவச் சவுக்கடிகள் தமிழின் ஆழத்தை அதன் அழகின் வரைவிலக்கணத்தை எனக்கு புரியவைக்கத் தொடங்கியது.

    தமிழை நேசித்தேன், நேசிக்கிறேன். ஆனால் அந்நேசிப்புகளுக்காக நான் கொடுத்த விலைகள் ஏராளம். அத்தகைய ஒரு சூழலில் தான் என் தந்தை வழி என் சிந்தையில் ஏற்றப்பட்ட மகாகவி பாரதியின் பெருமைகளை ஏறெடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

    பாரதியார் எனும் மகாகவியின் உடலானது மறைந்து போயிருக்கலாம் ஆனால் அவரால் ஏற்படுத்தப்பட்ட கவிதைவழி உணர்ச்சிப்பேரூற்று என்றுமே காயாமல் வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியாகத் திகழ்கிறது .

    barathi3

    குற்றால அருவியில் வாழ்வின் சகல மட்டத்தில் வாழும் மனிதர்களும் நீராடி மகிழ்வது போல தமிழென்னும் அளவுகோலில் எத்தகைய அளவு அறிவுபடைத்தவர்களும் பாரதியின் படைப்புகள் எனும் அந்த தமிழ் ஊற்றில் நீராடி மகிழ்கிறார்கள்.

    அன்னைத்தமிழ் அவருக்களித்த மாபெரும் ஆற்றலை தான் வாழ்ந்த அக்கால சமுதாய மேம்பாட்டுக்காக ஓர் அஹிம்சா ஆயுதமாக உபயோகித்த மகாகவி தன் சொந்த வாழ்வில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அளித்தது வறுமை எனும் மாறாத சோகமே !

    தனது கருத்துக்கள் தனது சமூகத்தினரிடையே தனக்கு மாபெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்திருந்தும் மனிதாபிமானமே மனிதனுக்குத் தேவையான முக்கியமான செல்வம் என்பதை வாழ்ந்து காட்டிய மகா மனிதராக மாறியவர் பாரதியார்

    தமிழ்ப்பா எனும் ஆயுதம் கொண்டு

    தரணியிலே தனித்தன்மை கொண்டு

    பாரதி எனும் எம் தமிழ்ப்பாட்டன்

    பாரதிர புதுயுகம் காணத்த துடித்தான்

    பெண் என்றும் பேதையரல்லர் அவர்

    புதுமைகள் புரிந்திடும் பூவையர் என்றே

    புரட்சிக் கருத்துக்கள் சொல்லி பாரதி

    பொங்கியதால் விழித்தது சமூகம்

    ஏற்புடை கருத்துக்கள் கூறாததினால்

    ஏற்றிட மறுத்திட்ட மூடர் நிறைந்ததினால்

    சித்தம் இழந்தவன் என்றெம் பாரதியை

    சிறுமதியர் விளித்ததும் அன்றேயன்றோ

    தமிழை நேசித்தான் மகாகவி பாரதி

    தமிழைச் சுவாசித்தான் எம் கவி

    தனினும் என்றும் மொழிமேல்

    தணியாத வெறி கொள்ளவில்லை

    யாமறிந்த மொழிகள் என்றே அவனும்

    அடுத்தவர் மொழியை அறிந்ததினால்

    தாய்மொழியின் பெருமைகளை அழகாய்

    தத்ரூபமாய் எடுத்தியம்பி கவிசொன்னான்

    அரும்பெரும் புலவனவன் பெருமைகளை

    அவந்தன் பிறந்தநாள் தனிலே

    நினைந்திட்டு சிலவரிகள் வரைந்து

    வணங்கிட்டேன் அவன் பாதங்களை

    பெண்களை பேதையர் என்றே எம் சமுதாயம் அடுக்களையில் பூட்டிவைத்து அழகு பார்ப்பதை துணிச்சலுடன் தூளாக்கும் கவிதைகள் தந்தான்.

    ஜாதி எனும் பெயரால் மனிதனை மனிதன் இழிவு செய்யும் நிலை மாற வேண்டும் என்று தான் பிறந்த சமூகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டினான் எம் தனிக்கவி.

    வாழ்க்கை வறுமை எனும் பெயரால் அவன் மீது வீசிய சவால்களைத் தமிழ் எனும் தன் தாய்மொழியின் துணை கொண்டே தகர்த்தெறிந்தான்.

    அவனுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் எம்மை நாமே புடம்போட்டுக் கொள்ள உதவும் என்பதே உண்மையாகும். பிறந்தோம், வாழ்ந்தோம்,மடிந்தோம் என்பது மட்டுமா எமது சரித்திரமாக வேண்டும்? எனும் கேள்விக்கணைகளினால் எம்மைத் துளைத்தெடுத்து சிந்திக்கத் தூண்டியவன்.

    220px-Subramanya_Bharathi

    இதோ,

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?

    ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் உழன்று கொண்டிருக்கும் என் மனதில் எண்ண அலைகளில் உற்பத்தியாகி அவற்றின் வழி என் தாய்மொழியாம் தமிழை சுவாசிக்கப் பண்ணிய அற்புதத் தமிழ்த் தலைமைந்தன் பாரதியாரின் பிறந்தாளில் உங்களோடு இணைந்து அவனை நினைந்து கொள்கிறேன்.

    மலரட்டும் மகாகவியின் நினைவுகள்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share