Blog

  • இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!

    கவிஞர் காவிரிமனிதன்.

    hqdefault

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா! பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையல்லவா என்பார் கவியரசு கண்ணதாசன். இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதைவிட சிறப்பேது? வலது கை கொடுப்பது தன் இடது கை அறியாது என வாழ்ந்த கர்ண பரம்பரைகளும் இங்கு உண்டு. அன்னதானம் செய்வது ஆலயம் தொழுவதிலும் சால நன்று! அதனினும் எழுத்தறிவித்தல் மேலும் உயர்ந்தது.

    கல்விச் செல்வம் ஒரு மனிதனை தன்னம்பிக்கை உடையவனாக தன்னைச் சார்ந்தோரையும் வாழவைக்கும் வல்லமை தருகிறது. தன்னிடம் உள்ளதை பிறருக்கும் கொடுத்து மகிழ்விக்கும் பாங்கு எத்தனை பேருக்கு வாய்க்கும்? பெற்றவன் பெறுவது பேரின்பம்.. ஆயினும் அதைக் கொடுத்தவன் கொள்வது பேரானந்தம்! மற்றவர்க்கு தருகின்ற அளவில் நம்மை வைக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம்!

    தனக்கென வாழ்வது மட்டுமின்றி பிறருக்காகவும் வாழுகின்ற வாழ்க்கையே அர்த்தமிக்கது. பொதுநலம் நாடுகின்ற உள்ளம் பூந்தோட்டம் போல் பொலிவுடன் விளங்கும். சுயநலம் என்கிற இருளில் வாழும் மனிதன் இவ்வுலக வாழ்வின் இன்பத்தையே இழக்கிறான். மனிதன் தோன்றி நாகரீகம் நோக்கி நடக்கத் தொடங்கிய நாள் முதல் இன்றும் பிறர்நலம் பேணும் மனிதர்களைத்தான் மா மனிதர்கள் என்கிறோம்!

    எத்தனையோ வரிகளில் சொல்லப்பட்டாலும் நிறைவுறாத என்னரும் கருத்துக்களை தன் ஒற்றைப்பாடலில் உணர்த்தியிருக்கும் கவிஞர் வாலியின் கைவண்ணம் காணலாம்! ‘பாபு’ திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் .. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.. திரையிலோ நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சின்னஞ்சிறு குழந்தை நட்சத்திரமாய் ஸ்ரீதேவியும் நம் நெஞ்சில் நிறைந்த பாடலிது!

    http://www.youtube.com/watch?v=Qd5TfWmm1CA
    காணொளி: http://www.youtube.com/watch?v=Qd5TfWmm1CA

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    பாடல் – வாலி
    படம் – பாபு
    இயக்குனர் – ஏ சி. திருலோகச்சந்தர்
    இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
    குரல் – டி.எம்.சௌந்தரராஜன்

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
    கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
    கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

    அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
    இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
    குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
    தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
    கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

    பல நூல் படித்து நீயறியும் கல்வி
    பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

    தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
    தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
    அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
    அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
    அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
    அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

    msv vaaliACTtm-soundararajan-50-600

    கட்டுரைக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்பதையும் சுட்டிக்காட்டும் பொருள் நிறைந்த பாடலிது! நம் மனதினில் பதிந்திட்ட பாடல்! சாத்வீக குணங்களுடன் ஒரு சராசரி மனிதன் வாழும்போது அவன்மூலமும் தெய்வாம்சங்கள் கூடிவருகின்ற தரிசனம் காணலாம்!

    Share
  • சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு

     

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FKui0MtFc2k

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ho5FEyftFss

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l1sAp-Qk16g

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_LBJz4TxG0I

    +++++++++++++

    புளுடோவின் நிகழ் காலம்
    இறந்த காலமானது !
    பரிதியைச் சுற்றும் கோள்கள் ஒன்பது
    என்பது மாறி விட்டது !
    புதன் முதல் புளுட்டோ வரை
    விதவித மான கோள்களில்
    நீக்கப் பட்டது குள்ளக் கோள் புளுடோ !
    நெப்டியூன் இறுதிக் கோளானது
    இப்போது !
    எட்டுக் கோள்கள் பரிதிக் கென்று
    பட்டியல் சிறுத்தது !
    புளுடோவை விடக் கால் மடங்கு
    பெரிய குள்ளக் கோள் ஏரிஸ்
    வடிவக் கணிப்பு
    முடிவானது தற்போது !
    முன்பு கண்டு பிடித்தது ஹப்பிள்
    விண்ணோக்கி !
    சூரியனைச் சுற்றும் குள்ளக் கோள்
    ஏரிஸ் புளுடோ இரட்டை !
    குறுக்கிடும் கோள் மதிப்புக் கீழாகிச்
    சரிந்த நீள்வட்ட வீதியில்
    மெதுவாய்ச் சுற்றிச் சுடர்வீசும்
    புதுக்கோள் ஏரிஸ் !

    +++++++++++++++++++

     

    Eris and Moon

    சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளிப் புறக்கோள் “ஏரிஸ்” [Dwarf Outer Planet Eris] கண்டுபிடிப்பு :

    2005 ஆண்டில் ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்த புறக்கோள் ஏரிஸ், சூரிய மண்டலத்தில் நெப்டியூன் கோளுக்கு அப்பால் நகரும் புளுடோவைத் தாண்டிச் சரிந்த நீள்வட்டப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகிறது.   புளுடோவை ஒன்பதாம் கோளாய்க் கருதிய காலத்தில் நாசா ஏரிஸைப் பத்தாவது கோளென்று கண்டுபிடித்த போது அறிவித்தது !   ஏரிஸ் இப்போது அறிந்துள்ள குள்ளக் கோள்களிலே எல்லா வற்றையும் விடப் பெரியதாய்க் கருதப் படுகிறது.  புளுடோவை விட, ஏரிஸ் 27% பருத்த வடிவானது.   ஏரிஸின் விட்டம்  2.3 கி.மீ. [1.5 மைல்].  அதற்கு டிஸ்நோமியா [Dysnomia] என்னும் ஒரு துணைகோளும் உள்ளது.  ஏரிஸ் சூரியனை 96.4 AU [Astronomical Unit] [1 AU = Earth and Sun distance] [1 AU = 150 million km (90 million miles)].  ஏரிஸ் சூரியனை ஒருமுறை சுற்ற சுமார் 557 வருடம் எடுக்கிறது.

    ஏரிஸ் பூமியில் கால் பங்கு பளு உள்ளது.  நமது நிலவு விட்டத்தை விட 1000 கி.மீ. [600 மைல்] சிறியது.   அதைக் கண்டுபிடித்த மூவரின் பெயர்கள் :  மைக்கேல் பிரௌன்,  சாட் டுரூஜில்லோ, டேவிட் ரபினோவிட்ச்.   2006 ஆண்டில் உலக விஞ்ஞான ஐக்கியக் குழுவினர் [International Astronomical Union (IAU)] முடிவு செய்த படி, புளுடோ குள்ளக் கோளாகி சூரிய குடும்பத்தி லிருந்து ஒன்பதாவது கோள் என்னும் மதிப்பு நீக்கப் பட்டது.  ஏரிஸ் குள்ளக் கோளும், புளுடோ போல் சூரிய குடும்பக் கோள் மதிப்பிழந்தது.  காரணம் அவை இரண்டும் பிறகோள் சுற்றுப் பாதையைக் குறுக்கிடுமின்றன.

     

    Eris in Solar System

     

    “நான் கெஞ்சிக் கேட்கிறேன் : (பரிதிக்கு) எத்தனைக் கோள்கள் உள்ளன வென்று உறுதியாகக் காரணங்கள் கூற முடியாதா உங்களுக்கு ?  (இப்போது) அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது . . !”

    ஜொஹான்னெஸ் கெப்ளர் (1571-1630)

    பூமியும் மற்ற எல்லாக் கோள்களும் தம்தம் இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பதும், பிரளயம் ஏற்படாத வரை அவை இருப்பிடத்திலிருந்து மாறிச் செல்லா என்பதும் இயற்கை நியதி !

    அரிஸ்டாட்டில் (கி.மு. 382-322)

    “இப்போது நான் குள்ளக் கோள் புளுடோவைக் (Dwarf Planet Pluto) கண்டுபிடித்த விஞ்ஞானியின் மனைவி”

    பாட்ரீஷியா, புளுடோவைக் கண்டுபிடித்த டாம் டாம்பாஹின் மனைவி (2006)

    பரிதியின் கோள்கள் வெவ்வேறு கட்டங்களில் விருத்தியான போது, பூமியை வடித்த ஒரே மாதிரி விசைகளால் அவையும் செதுக்கப்பட்டன.  ஆதலால் ஒரே மாதிரி தள வடிவமைப்பு, உயிரினத் தோற்றம், நமது கடந்த காலம், எதிர்காலம் அவற்றிலும் நிகழ எதிர்பார்க்கலாம் !

    அமெரிக்க ராக்கெட் விஞ்ஞானி ராபர்ட் கோடார்டு (1882-1945)

     

     

    புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது !

    1930 ஆம் ஆண்டு புளுடோ கண்டுபிடிக்கப் பட்ட காலம் முதலே அது பரிதி மண்டலத்தின் ஓர் அண்டக் கோள் என்னும் கருத்தில் அடிப்படை ஐயப்பாடுகள் விஞ்ஞானிகளிடையே எழுந்தன !  2006 ஆம் ஆண்டில் புளுடோ உலக விஞ்ஞானிகளால் பரிதிக் குடும்பத்திலிருந்து நீக்கப் பட்டு, புதிய கோள் குழுவில் ஒன்றாகக் “குள்ளிக் கோள்” (Dwarf Planet) என்று அழைக்கப் படுகிறது !  ஒன்பதாவது கோள் புளுடோவை முதன்முதல் கண்டுபிடித்த வானியல் நிபுணர் கிளைடு டாம்பாஹ் (Clyde Tombaugh) தனது 90 ஆவது வயதில் (1997) காலமானார்.  அவரை எரித்த சாம்பலைப் “புதிய தொடுவானம் விண்ணுளவி யில்” (New Horizon Space Probe) வைத்து விண்வெளி எங்கும் நாசா விஞ்ஞானி கள் தூவினர்.  2015 இல் திட்டப்படிப் புதிய தொடுவானம் விண்கப்பல் பயணம் செய்து, புளுடோவை உளவுவதற்கு முன்னமே புளுடோ பரிதி மண்டலத்தின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது குறித்து மிகவும் மனமுடைகிறார் 93 வயதான அவரது விதவை மனைவி பெட்ரீஷியா (Patricia) !  “இப்போது நான் குள்ளிக் கோள் புளுடோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் மனைவி” என்று தனது பெயர் தாழ்ந்து போய் விட்டதென்று அவர் கலங்குகிறார் !

     

    Orbit of Eris

     

    புளுடோ ஏன் பரிதி குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டது ?

    2006 ஆம் ஆண்டில் உலக வானியல் விஞ்ஞானிகள் [International Astronomical Union (IAU)] பிரேகில் (Prague) ஒன்றுகூடி, புளுடோ அண்டக் கோள்களின் பண்பாட்டு நிலையை ஒத்திருக்க வில்லை என்று முடிவு செய்து அதைப் பரிதிக் குடும்பத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.  பிறகு அதைக் கோளின் மதிப்பு நிலையிலிருந்து தாழ்த்திக் “குள்ளிக் கோள்” (Dwarf Planet) என்னும் புதிய குழுவில் தள்ளினார்கள் !  1992 இல் கியூபெர் வளையத்துக் கோள் (Kuiper Belt Object) ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு, டேவிட் ஜெவிட், ஜேன் லு (David Jewitt & Jame Luu) மற்றும் சில வானியல் நிபுணர்கள், வளையத்துக்கு அருகிலே சூரிய மண்டலத்தில் ஏராளமான புதிய அண்டக் குள்ளிகளைக் (70,000 Small Planet Bodies) கண்டார்கள். அவற்றில் எரிந்து போன வால்மீன்கள், விண்கற்கள் நெப்டியூன் கோளுக்கு அப்பால் பரிதியிலிருந்து 2.8-4.5 பில்லியன் மைல் தூரத்தில் இருப்பதை நோக்கினார்கள் !  அத்தகைய புதிய கோள் குள்ளிகளைக் கியூபெர் வளையத்தில் கண்டுபிடித்தது விஞ்ஞானிகளுக்குக் கோள்களைப் பற்றிய புதியதோர் கருத்தை உருவாக்கியது.

    புதிய கண்ணோட்டத்தில் கோள்கள் என விஞ்ஞானிகள் குறிப்பிடுபவை எவை ?  2006 இல் பிரேகில் கூடிய உலக வானியல் விஞ்ஞானிகள் கோளுக்கு ஒரு புதிய குறிவிளக்கம் (Definition of a Planet) தந்தனர்.

    முதன்முறை வந்த குறிவிளக்கம் :

    முதலாவது : கோள் என்பது விண்வெளியில் ஒரு விண்மீனைச் சுற்றி வருவது.  அது விண்மீனும் இல்லை.  வேறு ஒரு கோளின் துணைக் கோளும் இல்லை.

    இரண்டாவது : அதன் நிறை முழுவதும் ஈர்ப்பாற்றலால் இழுத்துச் சுருக்கப் பட்டுக் கோளமாய் உருட்டி யிருக்க வேண்டும்.

    மூன்றாவது :  அதன் வடிவம் பெரிதாக இருந்து சுற்றுவீதியில் எதுமில்லாது விலக்கப் பட்டிருக்க வேண்டும்.

    கோள் குறிவிளக்கம் தர்க்கத்துக்குள் சிக்கியது !

    உலக விஞ்ஞானிகள் பலர் முடிவு செய்த குறிவிளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத விஞ்ஞானிகள் சிலர் இருக்கிறார்கள்.  நாசாவின் “புதிய தொடுவான் விண்ணுளவிக் குறிப்பணியின் தலைவர் (New Horizon Space Probe Mission Leader) அலன் ஸ்டெர்ன் (Alan Stern) IAU விஞ்ஞானிகள் கூறிய மூன்றாவது விளக்கம் தவறு என்று சொல்கிறார்.  ஆகவே மூன்றாவது விளக்கம் தர்க்கமுள்ளதாக ஆகிவிட்டது. எப்படி ?  பூமி, செவ்வாய், வியாழக் கோள், நெப்டியூன் ஆகிய நான்கும் மூன்றாவது விதிக்கு முரணாக உள்ளன.  அந்த நான்கு கோள்களைச் சுற்றிலும் உள்ள தளப் பாதைகளில் எண்ணற்ற விண்கற்களின் குறுக்கீடுகள் உள்ளதால் கோள்கள் எனப்படும் குறிவிளக்கத்திற்கு அவை முரண் படுகின்றன என்று அலன் ஸ்டெர்ன் போல் எதிர்ப்பவரும் சிலர் இருக்கிறார்கள்.  பின்னால் IAU விஞ்ஞானிகளின் குறிவிளக்கத்துக்கு மேம்பட்ட செம்மை விளக்கமும் வெளிவந்தது.

     

    Hubble Space Telescope

    மேம்பட்ட குறிவிளக்கம் :

    1.  விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவது கோள்.

    2.  பெரிதாக உருண்டை வடிவில் இருப்பது கோள்.

    3.  அது பழுப்புக் குள்ளிபோல் (Brown Dwarf) ஆகப் பெரிதாக இருக்கக் கூடாது.  13-75 மடங்கு நிறையுள்ள வியாழக் கோள் அல்லது விண்மீன் போல “தவறிய விண்மீனாக (Failed Star) இருக்கக் கூடாது.

    கோள்களின் குறிவிளக்கம் எதிர்காலத்தில் நுட்பமாக இன்னும் செம்மைப் படலாம் அல்லது மாறலாம்.  21 ஆம் நூற்றாண்டு புதுக் குறிவிளக்கப்படி மைய நிறையுடைய பரிதியை எட்டுக் கோள்களும், நான்கு குள்ளிக் கோள்களும், மற்றும் எண்ணற்ற சிறு அண்டங்களும் (Small Bodies) சுற்றி வருகின்றன !

    புளுடோவின் நீள்வட்டக் கோணச் சுற்றுவீதி !

    பரிதியைச் சுற்றுவரும் புளுடோவின் நீள்வட்டச் சுற்றுவீதி மட்டும் மற்ற கோள்களின் சீர் மட்ட வீதிகள் போலின்றி 17 டிகிரிக் கோணத்தில் சாய்ந்துள்ளது.  மேலும் அதன் சுற்று வீதி நெப்டியூன் சுற்றுவீதியைத் தனித்துவ நிலையில் இரண்டு இடங்களில் வெட்டிக் குறுக்கிடுகிறது !  மேலும் புளுடோவின் நீள்வட்ட வீதி கியூபெர் வளையத்தை ஊடுருவிச் சென்று மீள்கிறது.  நெப்டியூனும், புளுடோவும் தம் பாதைகளில் சுற்றிவரும் போது எப்போதாவது இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கும் தருணத்தில் புளுடோ நெப்டியூனில் மோதித் தகர்ந்து போய் விடலாம்.  அல்லது நெப்டியூன் ஈர்ப்பு மண்டலத்தில் புளுடோ சிக்கிக் கொண்டு, நிரந்தரமாய் அதன் துணைக்கோளாகி விடலாம் !  அத்தகையதோர் விந்தைக் காட்சி எப்போது நிகழும் என்று கணனி மூலம் நுட்பமாகக் காலத்தைக் கண்டு விடலாம் !

     

    Hunt for Earth like planets

    ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புளுடோவில் எந்த வித வாயும் இருப்பதாக அறிய முடிய வில்லை. புளுடோவின் வாயு அழுத்தம் மிக மிக பலவீன மானது. காரணம், புளுடோ மண்டலத்தின் கடும் குளிரில் [-230 டிகிரி C] ஹைடிரஜன், ஹீலியம் தவிர மற்ற எல்லா வாயுக்களும் குளிர்த் திரவமாகும்; அல்லது தணிவு [Liquefied or Frozen] நிலை பெறும்! புளுடோ வலுவற்ற ஈர்ப்பு சக்தி கொண்டுள்ளதால், தணிவாகாத வாயுக்கள் விண்வெளியில் பறந்து போய்விடும்! புளுடோ ஒரு காலத்தில் நெப்டியூன் கோளுக்குச் சந்திரனாய் இருந்து, ஓடுகாலித் துணைக் கோளாய்த் [Runaway Satellite] தன்னை விடுவித்துக் கொண்டு பின்னல் பிரிந்திருக்கக் கூடும் என்று எண்ணப் படுகிறது!

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன.

     

    Solar System

     

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    சூரிய குடும்பத்திலே சிறிய குள்ளக் கோள் புறக்கோள் புளுடோ!

    இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இரண்டு புறக் கோள்களில் [Outer Planets] ஒன்று, புளுடோ. மற்றொன்று அதைச் சுற்றி வரும் அதன் துணைக்கோள், சாரன் (Charon). இரண்டும் விண்வெளியில் வெகு தூரத்தில் மிகவும் மங்கிப்போய் தெரியும் கோள்கள். சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளுடோவை, அமெரிக்க வானியல் விஞ்ஞானி, கிளைடு டாம்பாக் [Clyde Tombaugh] 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். ரோமானியக் ‘கீழுலகக் கடவுள்’ [God of the Underworld] புளுடோவின் பெயரால், புதுக் கோள் பெயரிடப் பட்டது.

     

    Dwarf Planets -1

    நெப்டியூன் கண்டுபிடிக்கப் பட்டதுபோல், புளுடோவும் வானியல் கணித முறைப்படி ஊகித்துக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு கோள்!  நெப்டியூன் சுற்றி வரும் வீதி, எதிர்பார்த்த பாதை போல் இல்லாமல் புதிராக இருந்தது! இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [1905-1916] அமெரிக்க வானியல் விஞ்ஞானிகள், பெர்ஸிவல் லோவெல் [Percival Lowell], வில்லியம் பிக்கரிங் [William Pickering] இருவரும், ஒளிந்து கொண்டுள்ள ஏதோ ஒரு புறக்கோள் பாதைத் திரிபு [Straying from the Path] செய்து வருகிறது, என்று உறுதியாக நம்பினார்கள்! அந்த நம்பிக்கையில் ஜமெய்கா மண்டவில் நோக்ககத்தில் [Observatory Mandeville, Jamaica] பிக்கரிங், புதுக் கோள் இருப்பிடத்தைக் கணித்துக், குறிப்பிட்ட விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தேடினார். அதே போல் லோவெல், பிளாக்ஸ்டாஃப், அரிஸோனா நோக்ககத்தில் [Observatory Flagstaff, Arizona] முயன்றார். பல வருடங்கள் தேடியும், இரண்டு விஞ்ஞானிகளும் புதுக்கோளைக் கண்டு பிடிக்க முடியவில்லை!

     

    இருவரும் காலஞ் சென்றபின், 1930 இல் அவரது கணிதக் குறிப்புக்களைப் பயன்படுத்தி ஓரிளைய வானியல் விஞ்ஞானி கிளைடு டாம்பாஹ் [Clyde Tombaugh], தனது புதிய தொலை நோக்கி மூலம், பல இரவுகள் தொடர்ந்து வானத்தை வேட்டையாடிக் களைத்துக் கடைசியில் [Feb 18, 1930] புதிர்க் கோளைக் கண்டு பிடித்தார். ஆனால் சில நாட்கள் பொறுத்து லோவெல் பிறந்த நாளன்று, 1930 மார்ச் 13 இல் புதுக்கோள் புளுடோ கண்டு பிடிப்பை உலகுக்கு அறிவித்தார்.

    புளுடோவைப் பற்றிய வானியல் தகவல்

    புளுடோவின் துணைக்கோள் சாரன் [Charon] 1977 இல் கண்டு பிடிக்கப் பட்டது. புளுடோவை 12,000 மைல் தூரத்தில் சுற்றி வருகிறது சாரன். மங்கலான புளுடோவின் விட்டத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினம்! 1994 இல் பூமியின் வட்ட வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope] புளுடோ [1410 மைல்], சாரன் [790 மைல்] என்று இரண்டு கோள்களின் விட்டங்களை மிகவும் துள்ளியமாக கணக்கிட உதவியது.  புளுடோவின் வடிவை ஒப்பு நோக்கினால், புதன் கோளின் விட்டம் 3030 மைல், பூமி நிலவின் விட்டம் 2100 மைல்.

     

    New Solar System -1

    பரிதிலிருந்து 3.7 பில்லியன் மைல் தூரத்தில் சூரிய குடும்பத்தின் புறவெளிக் கோளாக யுரேனஸ், நெப்டியூன் இரண்டுக்கும் அப்பால், புளுடோ சுமார் 248 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.  புளுடோ தன்னைத் தானே ஒருமுறைச் சுற்ற சுமார் 6 நாட்கள் எடுக்கிறது.  புதுக்கோள் புளுடோ பரிதியைச் சுற்றி வரும் நீண்ட நீள்வட்ட வீதி மட்டம் [Elongated Elliptical Orbital Plane], மற்ற சூரியக் கோள்கள் சுற்றும் நீள்வட்ட வீதி மட்டத்திற்கு 17 டிகிரி சாய்ந்துள்ளது, ஒரு சிறப்பான வேறுபாடு! நீண்ட நீள்வட்டத்தில் சுற்றும் புளுடோ ஒரே ஒரு கோள்தான் பரிதிக்கருகில் வரும் போது, நெப்டியூன் வீதியைக் குறுக்கிட்டு [Transit], நெப்டியூனுக்கும் முன்னே புகுந்து, பரிதியை மிகவும் நெருங்குகிறது! 1989 இல் புளுடோ அவ்வாறு நீண்ட நீள்வட்டத்தில் பவனி வந்து குறுக்கீடு செய்து, பரிதியைச் சிறு ஆரத்தில் [Perihelion] மிகவும் நெருங்கியது. பிறகு 124 ஆண்டுகள் [248/2=124] கழித்து 2113 இல் புளுடோ பரிதிக்கு உச்ச தூரத்தில், [நீள் ஆரத்தில் Aphelion] பயணம் செய்து திரும்பி, அடுத்து 124 ஆண்கள் தாண்டி கி.பி 2237 இல் மீண்டும் பரிதிக்கு அருகே வரும்!

    பரிதி மண்டலப் படைப்பில் தீர்க்கப்படாத சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை நீள்வட்ட வீதிகளில் ஒரே தளமட்டத்தில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணிகள் உள்ளன ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் காலம் மாறாமல் சுற்றி வருகின்றன ? சூரியனை மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஏன் ?  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவது ஏன் ?  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

     

    Dwarf Planets -2

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets are in the Solar System ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
    25 Newsweek Magazine : The New Solar System – Our Changing View of the Universe – Requiem for a Planet Pluto (1930-2006) By : Jerry Adler
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804172&format=html (Creation of Solar System Planets)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207221&format=html (புதனும், புளுடோவும்)
    28 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    29 New Scientist Magazine – New Planet Definition Sparks Furore (August 25, 2006)

    30  http://www.lunarplanner.com/asteroids-dwarfplanets/Eris.html  [2009]

    31  http://space-facts.com/eris/  [Facts About Eris]  [2014]

    32 https://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Dwa_Eris   [March 6, 2014]

    33 http://www.spacedaily.com/reports/Eris_Not_Only_Greek_Goddess_but_Largest_Dwarf_Planet_in_Solar_System_999.html  [December 3, 2014]

    34  http://en.wikipedia.org/wiki/Dwarf_planet  [December 4, 2014]

    35  http://www.space.com/15216-dwarf-planets-facts-solar-system-sdcmp.html   [April 10, 2012]

    36  http://en.wikipedia.org/wiki/Eris_%28dwarf_planet%29  [December 6, 2014]

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  December 6, 2014

    Attachments area
    Preview YouTube video Dwarf Planet Eris

    Dwarf Planet Eris

    Preview YouTube video Dwarf Planets Interesting Facts, Including Pluto, Heumea, Eris, Ceres, MakeMake & Moons

    Dwarf Planets Interesting Facts, Including Pluto, Heumea, Eris, Ceres, MakeMake & Moons

    Preview YouTube video Pluto

    Pluto

    Preview YouTube video Arrival at Pluto, July 2015 – NASA’s New Horizons Mission

    Arrival at Pluto, July 2015 – NASA’s New Horizons Mission
    Share
  • பாடுதும் காண் அம்மானை!

    மீனாக்ஷி பாலகணேஷ்

    மூன்று பெண்கள் அமர்ந்து கொண்டு கற்களால் செய்யப்பட்ட ஒருவிதமான காயை வீசிப் பிடித்து அம்மானை விளையாடுகிறார்கள். இது விளையாட்டாகவே இருப்பினும், ஆடுவதற்கும் அதன் வேகத்திற்கும் பொருத்தமாகப் பாடல்களையும் இப்பெண்கள் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!!

    முதலில் ஒருத்தி, “திருமாலாலும் அறிய இயலாத இறைவனாம் அண்ணாமலையாருக்கு அழகாக அமைந்த வில்லும் போர்வையும் அங்கமும் (உடலும்) முறையே மேருமலையும், யானைத் தோலும், மாதின் உடலில் பாதியும் ஆகும், அம்மானை,” என்று கூறி அம்மானையை மேலே வீசுகிறாள்.

    ‘நாராயணன் அறியா நாதர் அருணேசருக்கு
    வார் ஆர் சிலை கலை மெய் மாது அங்கம் அம்மானை’

    (வார் ஆர் சிலை= அழகான வில்; கலை= உடை, போர்வை; மெய்= உடல்; மாது அங்கம்= மாதின் உடல்; பார்வதியின் பாதி உடல்).

    அடுத்த பெண் இதற்கான மறுமொழியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்!! அவளும் சளைக்காமல் உடனே, “அழகான வில்லும் யானைத்தோல் போர்வையும் உடல் மாதின் அங்கமும் ஆனாலும், அடியே! ஆராய்ந்து பார்த்தால் அவர் எடுப்பது பிச்சை அல்லவோ, அம்மானை,” என்று ஏளனமாகக் கேட்டபடி அம்மானையை வீசுகிறாள்.

    ‘வாரார் சிலை கலை மெய் மாது அங்கம் ஆம் ஆயின்
    ஆராயும் கால் எடுப்பது ஐயம் அன்றோ அம்மானை!’

    (ஐயம்= பிச்சை)
    மூன்றாமவளோ வெகு சாமர்த்தியக்காரி. இருவர் கூற்றுகளுக்கும் பொருந்தும் வகையில், “அன்னம் கண்டறியாத அவர் பிச்சை எடுப்பதற்கு ஐயப்பாடும் உள்ளதோ? அம்மானை!” என இடக்காக விடையிறுக்கிறாள். இப்போது மற்றவர்கள் தான் இவளுடைய கூற்றுக்குத் தமக்குப் புரிந்தவாறு பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்!!

    ‘அன்னம் அறியார் எடுப்பது ஐயமோ அம்மானை!’

    (அன்னம் அறியார்= உணவைக் காணாதவர் என்ற பொருள்; ஆனால் உட்பொருள் அன்னப் பறவை வடிவான பிரம்மனும் காண இயலாத ஐயன் என்பதாம்! ஐயமோ= பிச்சையோ; ஆனால் இங்கு ஐயப்பாடு அல்லது சந்தேகம் என்ற பொருளில் வந்தது!)

    திருமால், பிரமன் ஆகிய இருவரும் பன்றி, அன்னப் பறவை ஆகிய உருவெடுத்துத் தேடியும் அடிமுடி காணவொண்ணாத ஒளிப்பிழம்பாக அண்ணாமலையார் நின்ற வரலாறு அழகுபட சாமர்த்தியமாக இங்கு இப்பெண்களால் அம்மானை விளையாட்டின் போது உரைக்கப் படுகின்றது.

    உட்கருத்து: (வராக உருவெடுத்த) திருமாலும் காண இயலாத அண்ணாமலையாருக்கு மேருமலையே வில்; யானையுரி உடை; பார்வதியான மாதின் உடலில் ஒரு பாதி அங்கம் ஆகும்; இரண்டாமவள் இப்பொருள் புரியாதவள் போல, வெளிப்படையான பொருளை மட்டும் கொண்டு, “இதுவெல்லாம் இருப்பின், அவர் ஏன் பிச்சை எடுக்கிறார்?” எனக் கேட்கிறாள். உடனே மூன்றாமவள் சமயோசிதமாக, இருபொருள் பட, “அன்னத்தையே (சோற்றையே) கண்டறியாதவர் பிச்சை எடுப்பதில் வியப்பு என்ன?” என்பாள். சிறிது ஆழ்ந்து பார்த்தால், “அன்னப் பறவை வடிவு கொண்ட பிரமனாலும் காண முடியாதவர் அல்லவோ? இதில் ஐயமும் உளதோ?” என்ற பொருள் தோன்றும்!
    முழுப் பாடலைப் பார்க்கலாம்:

    ‘நாராய ணனறியா நாதரரு ணேசருக்கு
    வாரார் சிலைகலைமெய் மாதங்கம் அம்மானை!
    வாரார் சிலைகலைமெய் மாதங்கம் ஆமாயின்
    ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ அம்மானை!
    அன்னம்அறி யார்எடுப்ப தையமோ அம்மானை?’

    இந்த வினாக்களும் அவற்றிற்குண்டான விடைகளும் அம்மானையை வீசும் சில நொடிகளில் நிகழ வேண்டும். சமயோசிதமும், உள்ளறிவும், புத்திக் கூர்மையும் கொண்டு புராணங்களில் நல்ல தேர்ச்சியும் உள்ள பெண்களால் தான் இவ்வாறு இருபொருள் படப் பாட முடியும். அல்லது அவர்கள் பாடியபடி அம்மானை ஆடுவதாகப் புலவர்கள் பாடலெழுதி உள்ளனர்.

    அம்மானைக்காகப் பாடலா? பாடலுக்காக அம்மானையா? எதுவானால் என்ன? ஒரு விறுவிறுப்பான விளையாட்டு; துறு துறுவென மூளைக்கு வேலை! தமிழுக்கு அழகான இலக்கியம்!!

    மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன் கதையை அல்லது அவன் புகழைப் பாடி வினா- விடையாக அம்மானைக் காய்களை வீசி விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

    மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயைப் பிடித்து வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

    அவற்றைப் பின்னால் காண்போம்.
    *************************************************************

    ஆதி காலம் தொட்டு, நாகரிகம் வளர்ந்து, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான ஒரு நெறியாகக் கடைபிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும், அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்து வந்தன. தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்த உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில் பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப் பட்டது. அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைந்து தனிச் சிறப்புப் பெற்றன. முக்கியமாக மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பொழுது போக்காக பலவிதமான விளையாட்டுகளை விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    இவற்றுள் பாவை நோன்பு, அம்மானை, மேலும் பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

    அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், பெரும்பாலும் கலம்பகம் என்னும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன. கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்ப் பேரறிஞர் உ. வே. சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும். முதன்முதலில் தமிழில் பாடப் பெற்றது நந்திக் கலம்பகம் ஆகும். இதன் இலக்கணத்திற்குள் புகாமல், இந்தக் கலம்பகங்களில் உள்ள அம்மானைப் பாடல்களை, அவற்றின் நயத்தை மட்டும் காண்போமே.

    மேற்கூறிய மூவர் அம்மானைப் பாடல்கள் பெரும்பாலும் கலம்பகத்தின் உறுப்பாகவே காணப்படுகின்றன. விறுவிறுப்பான விளையாட்டுக்கேற்ற வினா-விடைக் கவிதைகள் இவை. இவை தவிரத் தனியாக மூவர் அம்மானை என இலக்கியங்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. முதலில் மேலே நாம் பார்த்தது சைவ எல்லப்ப நாவலர் அருளிய திரு அருணைக் கலம்பகத்தில் பெண்கள் அம்மானை ஆடும் காட்சி.

    ***************************************************************************

    அடுத்து, குமர குருபரரின் மதுரைக் கலம்பகத்திலுள்ள அம்மானைப் பாடல்;
    அதே விதமாக மூன்று பெண்கள் அம்மானை ஆடிக் கொண்டு, புதிர் போடுவது போன்ற வினாக்களையும் விடைகளையும் கூறுகின்றனர்.

    முதல் பெண் கூறுகிறாள்: “பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும் தன் அடிமுடிகள் காண்பதற்கு அரியதானவரும், மதுரையின் ஈசனும் ஆகிய சிவபெருமான், தன் வெற்றியைக் காட்டும் மொழிகளைப் பேசி, ஒரு சித்தனின் உடம்பில் உறுப்புகளைத் தனித் தனியாக வெட்டி வென்று விட்டார்,” என்கிறாள்.

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண் அம்மானை’

    (விருது கட்டி- வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து கொண்டு; சித்தன் என்பவன் தனக்கு ஆயுதக் கலை பயிற்றுவித்த ஆசிரியரிடம் பொறாமை கொண்டு, தானும் சிலருக்குக் கற்பித்து வந்தான்; இதனால் ஆசிரியரின் வருவாய் குறைந்தது; ஆதனால் சிவபெருமான், சித்தனின் ஆசிரியர் வடிவு கொண்டு சென்று அவனைப் போருக்கு அழைத்து, அங்கத்தை வெட்டிக் கொன்றார் என்பது புராணக் கதை)

    இரண்டாமவள் கூற்று: “அவ்வாறு வெற்றி மொழி பேசி சித்தனின் உடலைத் துணித்து வென்றார் என்றால், அருமையான அவருடைய ஒரு உடம்பு இரண்டு கூறாக ஆவது ஏன்?” எனக் கேள்வி கேட்டு அம்மானையை வீசுகிறாள்.

    ‘விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரேயாம் ஆகில்
    அருமை உடம்பு ஒன்று இருகூறு ஆவது ஏன் அம்மானை’

    (உட்பொருள்: இருகூறாக ஆவது என்பது ஈசனின் பாதியும் அன்னையின் பாதியும் என்பனவாகும்)
    மூன்றாமவள் பகரும் விடை: “அவருக்கு உடம்பு இரண்டு கூறாக ஆயினும், தழும்பு (காயம்) ஏதும் இல்லை!” என உரைப்பாள்.

    ‘ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

    (ஆனாலும் அவருக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லையே என்பது உட்பொருள். காயம்- உடம்பு; புண் அல்லது தழும்பு)
    முழுப்பாடல் இதோ:

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
    அருமையுடம் பொன்றிருகூ றாவதேன் அம்மானை
    ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

    அம்மாடி! வாயாடிகள் தான் இந்தப் பெண்கள். ஒருத்தருக் கொருத்தர் சளைக்காமல் வினாக்களும் விடைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றனவே!

    ****************************************************************

    அடுத்து பூண்டி அரங்கநாத முதலியார் தமது கச்சிக் கலம்பகத்தில் பாடியுள்ள ஒரு அம்மானைப் பாடல்:
    முதற்பெண்: “குறையாத வளங்களையுடைய காஞ்சியம்பதியில் வாழ்ந்தருளும் ஏகாம்பரனார் பகைவரது முப்புரத்தை எரித்து அழித்த தீயவர் பாரடி, அம்மானை,” என ஒரு செய்தியைக் கூறி ஆட்டத்தைத் துவங்குகிறாள்.

    ‘வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருள் ஏகம்பரனார்
    செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை’

    (வற்றா- குறைவில்லாத; செற்றார்= பகைவர்; தீயர்= கொடியவர்)
    இரண்டாமவள்: “பகைவரின் முப்புரம் அழித்த கொடியவராக இருப்பினும் வேத நூல்களைக் கற்ற அந்தணர்கள் அவரை அழகிய குளிர்ந்த கருணையை உடையவராகக் கூறுவது ஏன், அம்மானை?” என இடக்காகக் கேள்வியைக் கேட்கிறாள்.

    ‘செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்
    கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை’

    (அந்தணர்- பிராமணர்; அம்+ தண் + அர்- அழகிய குளிர்ச்சியை உடையவர்; கழறுவது- கூறுவது)
    இதற்கு ‘நறுக்’கென மூன்றாமவள் தரும் நயமான விடை: “அவ்வாறு கூறுதல், ஆறுதொழில் சேர்ந்த காரணத்தால் அம்மானை,” என்பதாம்!

    ‘கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.’

    (அறுதொழில்= அழிக்கும் தொழில்; அழித்து யாவரையும் ஒழித்தல்; சிவன் சம்ஹாரக் கடவுள் என ஒரு பொருள்; இன்னொன்று, அந்தணரின் ஆறு தொழில்களான ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்).
    பாடல் இதோ முழுமையாக:

    ‘வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே கம்பரனார்
    செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை
    செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்
    கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை
    கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.’

    நாமும் ஒப்போது இந்த அம்மானை விளையாட்டில் ஆழ்ந்து விட்டோமல்லவா?

    **************************************************************

    அடுத்ததாக இவர்கள் பாடுவது, காசிக் கலம்பகத்தில் குமர குருபரர் பாடிவைத்துள்ள அம்மானைப் பாடல்:
    முதல் பெண் பாடியபடி ஆடுகிறாள்: “பிறைமதியின் கீற்றை அணிந்திருக்கும் காசி விஸ்வேசர் கரும்புவில்லைக் கொண்ட மன்மதனைத் தன் நெற்றிக் கண் நெருப்பால் எரித்தனர் கண்டாயோ, அம்மானை!”

    கலைமதியின் கீற்று அணிந்த காசிஅகி லேசர்
    சிலைம தனைக் கண்அழலால் செற்றனர்காண் அம்மானை
    (சிலைமதனை= வில்லேந்திய மன்மதனை)

    இதற்கு இரண்டாமவள், ” வில்லேந்திய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தார் என்றால், மலைமகளான உமையவளுக்குத் தன் உடலில் ஒரு பாகத்தை எதற்காகக் கொடுத்தார்”‘ என வினா எழுப்பி அம்மானையை வீசுகிறாள். அதாவது, தம்மைக் காதலில் விழச் செய்ய மதனன் அம்பு விடுத்ததனால் சினம் கொண்டு அவனை நெற்றிக் கண்ணால் எரித்தவர் பின் உமாதேவிக்கு தனது உடலில் ஒரு பகுதியை எதற்காகக் கொடுத்தாராம்? எனக் கேட்கிறாள்.

    சிலைமதனைக் கண்அழலால் செற்றனரே ஆமாகின்
    மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை

    அதற்கு மூன்றாமவள் சளைக்காமல் கூறும் சமயோசிதமான விடை: “அடியே! இறைவர் காதல் மயக்கம் கொண்டு விட்டதனால் தமது உடம்பில் பாதியை மலைமகளுக்குத் தர மாட்டாரோ?” என்பது.

    வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை
    பாடலை முழுமையாகக் காண்போமா?

    கலைமதியின் கீற்று அணிந்த காசிஅகி லேசர்
    சிலைம தனைக் கண்அழலால் செற்றனர்காண் அம்மானை
    சிலைமதனைக் கண்அழலால் செற்றனரே ஆமாகின்
    மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை
    வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை

    **********************************************************

    இப்பெண்கள் சிவபிரானைப் பற்றி மட்டுமல்ல; திருமாலின் கதைகளையும் பாடிக் களிக்கின்றனர்; பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்தில் இருந்து ஒரு அம்மானைப் பாடல்:

    முதல் பெண்: “வண்டுகள் விரும்பிச் சேரும் சோலைகளையுடைய திரு அரங்கர் எல்லாப் பொருளும் ஆனவர் ஆவார்; ஆயினும் ஆண், பெண், அலி அல்லாதவராவார். தெரியுமா? அம்மானை!” என ஆரம்பிக்கிறாள்.

    ‘தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
    ஆனவர்தாம்; ஆண், பெண், அலி அலர்காண், அம்மானை!’

    இரண்டாமவள்: “எல்லாப் பொருள்களும் ஆகிய அவர் ஆண், பெண், அலி அல்லாதவரானால் சீதையை மனைவியாகக் கொள்வாரோ? அம்மானை!” என நையாண்டி செய்கின்றாள்.

    ‘ஆனவர்தாம் ஆண், பெண், அலி அலரே ஆமாகில்
    சானகியைக் கொள்வாரோ தாரமாய்? அம்மானை!’

    மூன்றாமவள்: “அவ்வாறு அவர் சீதையை மனைவியாகக் கொண்டதும் ஒரு சாபத்தால் (வில்லின் பொருட்டால்) தான் அம்மானை!” என முத்தாய்ப்பு வைக்கிறாள்.

    ‘தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால், அம்மானை!’

    விரிவாக விளக்கத் தேவையிராது எனக் கருதுகிறேன். இப்பொழுது இந்த அம்மானை விளையாட்டின் வினா-விடை முறைமைகள் புரிந்திருக்கும் அல்லவா?
    முழுப் பாடல் இவ்வாறு:

    ‘தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
    ஆனவர்தாம்; ஆண், பெண், அலி அலர்காண், அம்மானை!
    ஆனவர்தாம் ஆண், பெண், அலி அலரே ஆமாகில்
    சானகியைக் கொள்வாரோ தாரமாய்? அம்மானை!
    தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால், அம்மானை!’

    (தொடரும்)
    ________________________

    _

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    CRAZY

    ”வானந் தனிலேறி வைகுண்ட லோகத்தை,
    தானம் அளிப்பு தரணிக்கு: -ஞான,
    வியனோ வியன்கேசவ், விண்ணிருந்து வந்த,
    மயனோ வியன்,வான் மகன்’’….கிரேசி மோகன்….

    மயனோவியன் -வானகத்து தேவச் சிற்பி மயன்….

    Share
  • ஓம் நமோ ஸ்ரீரமணாய….

    கார்த்திகை தீபம் பார்க்கும் ‘’பைனாகுலர் பகவான்’’…..ஓம் நமோ ஸ்ரீரமணாய….

    craz

    “பைனா குலரில் பகவான்பார் கின்றார்தன்
    நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்; -மெய்நானைக்
    கண்டவர் காண்கிறார், காண்பவனைக் காணென்று,
    விண்டவர் காலில் விழு”….கிரேசி மோகன்….

    Share
  • ஒரு ரசிகனின் பயணம்!

    உத்தமன் பேர்பாடி
    விம்மி விம்மி மெய்ம்மறந்து
    மார்கழிப்பூ மலர்கின்ற காலம்!

    மௌனமும் ஒலியும்
    தத்தம் முரண் நிலைகளை மறந்து,
    மெல்ல மெல்ல
    ஒன்றில் மற்றொன்றாய் மயங்கிப் பரவ,
    மோகமாய் முகிழ்த்தெழுந்த சுருதி,
    சூழலை இலேசாய் உரசும் நேரம்!

    அந்த உரசல்களில் உயிர்த்த சுவரங்கள்
    ஒன்றோடொன்று கைகோத்து
    மௌனத்தை வெட்டும் கணங்களில்
    மூச்சிழந்த மௌனம்
    முனகலாய் எழுகிறது!

    ‘ம்’ என்றே மௌனம்
    மெல்லத் தன் நிலையுடைக்க,
    சுவரங்கள் அந்த ஒலிக்குறிப்பைத்
    தமதாய்ச் சுவீகரித்துக்கொள்கின்றன!

    மௌனத்தின் கணங்களைக்
    கரைக்கத் தொடங்கும் சுவரங்கள்,
    வெவ்வேறு வரிசையில் அமைந்து,
    கீழ்மேலாய்த் தங்களுக்குள்ளே
    ஸ்தாயில் திரிந்தும்
    கமகமாய்ப் பொடிந்தும்
    காலங்களை அளந்துகொண்டிருக்க,
    மௌனம் மெல்ல மெல்ல உறைந்து
    ஸ்படிகமாகிச் சுவரங்களைப்
    பிரிக்கும் புள்ளிகளாய்த்
    தன்னைப் பிரித்துக் கொள்கிறது!

    மௌனத்தை உடைத்தெழுந்த சுவரங்கள்,
    மெல்லிய இழைகளாய்,
    இராகங்களின் சாயலில்
    இரகசியமாய்ப் பிரவேசிக்கின்றன!

    இரகசியத்தை அம்பலப்படுத்தும்
    தானம், மெல்லத் தன்நிலையெடுக்க,
    வெற்று ஒலிக்குறிப்புகள்
    எழுத்துகளாய் ஏற்றம் பெறுகின்றன!

    அந்த ஏற்றத்தின் உச்சமாய்
    பல்லவி பளிச்சிட,
    சொல்லாற்றின் முதற்சொட்டு
    சுழித்தெழுகிறது!

    சொற்களின் வீரியத்தில்,
    சுவரங்கள்,
    தாங்கள் தோற்பதாய் நினைத்து,
    எழுத்துக்களின் ஏற்றத் தாழ்விலெல்லாம்
    தங்களை விதவிதமாய் நிரவி
    தங்களின் நிலைப்பாட்டை
    உறுதி செய்துகொள்கின்றன!

    குரல் தன் கற்பனை வளத்தால்
    சுவரங்களையும் வார்த்தைகளையும்
    சுழற்றிச் சோதிக்கப்
    பிரவாகமாய்ச் சங்கதிகள்!

    அந்தச் சங்கதிப் பிரவாகத்தின்
    சௌந்தர்ய அலைகளில்,
    திக்குமுக்காடித் தன்னிலை மறந்து,
    தவழ்ந்தோடும் இலையாய்,
    ஒரு ரசிகனின் பயணம்!

    Share
  • திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ….

    பவள சங்கரி

    இறையருள் பெற்ற பிரபல சொற்பொழிவாளர், உபன்யாசகர், கனீர் என்ற வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர், அமரர் புலவர் கீரன் அவர்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. புலவர் கீரன் அவர்களின் கம்பராமயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம், திருவெம்பாவை போன்ற சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். மடை திறந்த வெள்ளம் போல, தெளிவான, எளிமையான விளக்கங்களுடனான அவருடைய உபன்யாசம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை பெற்றவை. அவர்தம் உரையில் பாடல்களுக்கு அழகாகப் பதம் பிரித்து, எளிய நடையில் விளக்கங்களும் அளித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றுவார்.

    keeran

    ‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். அந்த வகையில் புலவர் கீரன் அவர்களின் துணைவியார் திருமதி செல்ல பாப்பா கீரன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். தற்போது அம்மையார் தம் மகனாருடன் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருக்கிறார். அம்மையாரைத் தொடர்புகொண்டு பேட்டி எடுத்தபோது 75 அகவையைக் கடந்தவரின் நினைவாற்றலும், எழுத்துத் திறனும் ஆச்சரியப்பட வைத்தன. இதோ அம்மையாரிடம் நாம் கேட்டிருந்த வினாக்களுக்கு அவர்கள் அளித்துள்ள விரிவான பதில்கள் அவர்தம் கையெழுத்து வடிவிலேயே காணலாம். புலவர் கீரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு உட்பட பல நூல்கலை எழுதிக்கொண்டிருப்பவர். அம்மையார் அவர்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே படிக்கலாம்.

    வினாக்கள்:

    1. தங்கள் பெற்றோர் பற்றியும் அவர்கள் தமிழ் ஆர்வம் குறித்தும் கூறுங்கள்

    2. இளம் வயதிலேயே தமிழிலும், இலக்கியத்திலும், எழுதாற்றலும், பேச்சார்வமும் ஏற்பட்டதா?

    3. ஐயா உயர்திரு புலவர் கீரன் அவர்களுடனான காதல் வாழ்க்கைக்கு உங்கள் இலக்கிய பங்களிப்பு எந்த அளவில் இருந்தது?

    4. தங்களுடைய எழுத்துப் பணிகள் பற்றி கூறுங்கள்

    5. இலக்கியத்தில் தங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்கள். பிடித்ததற்கான காரணங்கள்

    6. மகாபாரதம் மற்றும் வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவற்றில் தாங்கள் கண்ட வேறுபாடுகள்

    7. கம்ப இராமாயணம் மற்றும் வால்மீகி இராமாயணம் ஆகியவற்றில் தாங்கள் காணும் வேறுபாடுகள் அல்லது சிலேடைகள் குறித்து கூற முடியுமா?

    8. மூன்று தலைமுறைகளைக் கண்ட தங்களுடைய பார்வையில் சமுதாய மாற்றங்களும், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை முறைகளும் எவ்வாறு உள்ளது – மாற்றங்கள் தேவையென்றால் அது எந்த வகையில் வேண்டும்?

    9. ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் தமிழில் ஏற்படுத்தியுள்ள எழுத்து மாற்றங்கள் குறித்த தங்கள் கருத்தை அறியத் தாருங்கள்.

    10. இளம் தமிழ் ஆர்வலர்களுக்கு தாங்கள் சொல்லும் செய்தி.

    11.தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்தும் தமிழ் சரியாக பேச முடியாமலோ அன்றி பேச விரும்பாமலோ இருக்கும் தமிழர்கள் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    mrs

    திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களின் விடைகள்:

    akee1

     

    akee2

    akee3

    akee4

    akee5

    akee6

    akee7

    akee8

     

    akee9

    akee10

    akee11

    akee12

     

    akee13

    akee14

    akee15

    akee16

    akee17

    akee18

    akee19

    akee20

    akee21

    akee22

     

    திரு. புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க : http://manoranjitam.wordpress.com/2012/02/25/pulavar-keeran-downloads/

    Share
  • புத்தொளி எங்கும் பரவட்டும்!

    பவள சங்கரி

    deepam

    புத்தொளி எங்கும் பரவட்டும்!
    கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில்
    முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு
    பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும்
    கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம்
    பிரிவறியா புத்தொளி வழியறியா வானில்
    விரிவுரையாய் வீசியிளம் பொழுதினில்
    கதிரொளியாய் பரவி இதயவொளி கூட்டும்!

    Share
  • அமெரிக்கக் கருப்பர்களுக்குச் சமஉரிமைகள் எப்போது?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    news

    கொலம்பஸ் ‘புது உலகத்தைக்’ (New World) கண்டுபிடித்த பிறகு நிறைய ஐரோப்பியர்கள் அமெரிக்கா கண்டம் முழுவதிலும் குடியேறினர். அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர். பெரிய நிலப்பரப்புடைய கண்டத்தில் உழைப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களை அவர்கள் சம்மதமில்லாமலேயே புது உலகத்திற்குச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்களுக்குப் பழக்கமே இல்லாத புது இடத்தில் புது சீதோஷ்ண நிலையில் அவர்களின் உழைப்பை உறிஞ்சினர். வெள்ளை அமெரிக்கர்கள் அவர்களை மனிதர்கள் போல் நடத்தவில்லை. தங்களுடைய சொத்துக்களான மாடுகள், குதிரைகள் போல் நடத்தினர். குடும்பங்களைப் பிரித்தனர். தாய் கதறக் கதற குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்தனர். பெண்களைத் தங்கள் இச்சைக்கு உள்ளாக்கினர். ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக 1619-லிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து தொடர்ந்த இந்த அநியாயம் லிங்கன் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவரை தொடர்ந்தது.

    அதன் பிறகும் அவர்களை நிம்மதியாக வாழவிட்டார்களா? பல கருப்பர்கள் வெள்ளையர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களைப் பயமுறுத்திவைப்பதற்காக அவர்களைத் தூக்கில் தொங்கவிட்டனர்; உயிரோடு எரித்தனர். அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. வெள்ளையர்களுக்குச் சமமான குடிமையுரிமைகள் இல்லை. இவற்றைப் பெறுவதற்கு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்த பிறகு நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. குடிமையுரிமையும் ஓட்டுரிமையும் கிடைத்தாலும் அவர்கள் இன்னும் இரண்டாம்தரக் குடிமக்கள் போல்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் கருப்பின மக்களை எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் சுட்டுக் கொல்வதிலும் அந்தக் குற்றங்களுக்கு அவர்களை விசாரணைக்கு உள்ளாக்க வேண்டிய ஜூரர்கள் அவர்கள் விசாரணைக்கு உட்பட வேண்டியவர்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்குவதிலும் புலனாகிறது.

    news4கடந்த பத்து ஆண்டுகளில் நியுயார்க் நகரில் மட்டும் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு கருப்பர்கள் காவல்துறையைச் சேர்ந்த வெள்ளை அதிகாரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்த வருடம் ஜூலையில் நியூயார்க்கில் நடந்த பல வெள்ளை இனக் காவல்துறை அதிகாரிகளால் அமுக்கப்பட்டு கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும், ஆகஸ்டில் மிஸௌரி மாநில ஃபெர்குஸன் என்னும் ஊரில் நடந்த வெள்ளை இனக் காவல் அதிகாரியால் அநியாயமாகச் சுடப்பட்டு இறந்த சம்பவமும் சிறு தவறு செய்த கருப்பின மக்களுக்கு வெள்ளைக் காவல் அதிகாரிகளால் எப்படிப்பட்ட ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் அவர்கள் எவ்வளவு எளிதாக, சட்டத்தை மதித்து நடக்கும் அமெரிக்காவில் சட்டத்தின் பிடியிலிருந்து சட்டத்தைக் காப்பவர்களின் உதவியாலேயே தப்பித்துவிடுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

    சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்று நிரூபிக்கும் வகையில் சமூகத்தின் பெரிய புள்ளிகளைக் கூடத் தண்டிக்கும் அமெரிக்கக் காவல்துறையும் நீதிமன்றமும் வெள்ளை-கருப்பின மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெள்ளை இனக் காவல்துறை அதிகாரிகளுக்குச் சாதகமாகவும் கருப்பின மக்களுக்கு நியாயமில்லாமலும் நடந்துகொள்கின்றன.

    ஃபெர்குஸனில் ஒரு கடையில் பதினெட்டு வயதுள்ள ஒரு கருப்பின இளைஞன் – அவன் பெயர் மைக்கேல் பிரௌன் – ஒருnews2 சாக்கலேட்டை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் போயிருக்கிறான். கடைக்காரர் அவனை நிறுத்தியும் பேசாமல் தொடர்ந்து வெளியே சென்றிருக்கிறான். கடைக்காரர் காவல்துறையைக் கூப்பிட்டிருக்கிறார். துறை கொடுத்த தகவலின் பேரில் அவ்வழியே காரில் சென்ற காவலர் சாலையின் நடுவே நடந்துகொண்டிருந்த பிரௌனோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பிரௌன் தன்னைத் தாக்க வந்ததாகவும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிரௌனைச் சுட்டதாகவும் காவல் அதிகாரி வில்சன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் புரிந்த குற்றம் விசாரணைக்கு உரியதா என்று முடிவுசெய்ய ஒரு கிராண்ட் ஜூரியை (Grand Jury) அமெரிக்காவில் முதலில் நியமிக்கிறார்கள். வில்சன் பற்றிய வழக்கில் பன்னிரெண்டு ஜூரர்கள் – ஒன்பது பேர் வெள்ளையர்கள், மூன்று பேர் கருப்பர்கள் – வில்சன் மீது விசாரணை நடத்துமளவிற்கு அவர் குற்றம் புரியவில்லை என்று தீர்ப்புக் கொடுத்தார்கள். பகலில் முடிவான இந்தத் தீர்ப்பை, கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால், இரவு எட்டு மணிக்குத்தான் சட்ட அதிகாரி அறிவித்தார். அப்படியும் கலவரங்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

    ஜூரி விசாரணையில் வில்சன் கூறியதை ஜூரிகள் அப்படியே எடுத்துக்கொண்டனர். பிராசிக்கூட்டரின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவர் வேலையில் சுடப்பட்டு இறந்ததால் அதன் தாக்கம் இந்த வழக்கில் அவருக்கு இருக்கலாம் என்பதால் அவரை இந்த வழக்கிலிருந்து விலகிவிடுமாறு பிரௌனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டாலும், அவர் அப்படிச் செய்யவில்லை. குற்றம் காணும் பொறுப்பை ஜூரர்களிடம் விட்டுவிட்டார். நேரில் கண்ட சாட்சிகள் சொன்னவற்றில் வில்சன் சொன்னவற்றுக்கு ஏற்றவாறு இருந்ததை எடுத்துக்கொண்டு அதற்கு நேர்மாறானவற்றை ஜூரர்கள் ஒதுக்கிவிட்டார்களாம். வில்சன் கைகளைத் தூக்கிகொண்டு சரண் அடையப்போன பிரௌனைச் சுட்டிருக்கக் கூடாது என்று ஒரு பரவலான அபிப்பிராயம் இருக்கிறது. டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘நான் என் கைகளைத் தூக்கியிருக்கிறேன். என்னைச் சுட்டுவிடாதே’ என்று வாசகங்கள் எழுதுகிறார்கள். நாடு முழுவதும் கிராண்ட் ஜூரியின் முடிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன.

    நியு யார்க் நகரில் எரிக் கார்னர் என்னும் ஒரு கருப்பர் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஒரு வெள்ளை இனக் காவல்துறை அதிகாரியும் ஜூரிகளால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதை எதிர்த்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் பதினெட்டு வயதை அடைந்தவர்களுக்கு அவர்களின் வயதுச் சான்றைப் பார்த்துவிட்டுத்தான் சிகரெட் விற்க வேண்டும். இந்த விதியை மீறி ஒரு கடைக்கு முன்னால் சில்லறையாக சிகரெட் விற்றுக்கொண்டிருந்த கார்னரை காவல்துறையைச் சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் கார்னரின் கழுத்தில் கைகளைப் போட்டு முறுக்கியிருக்கிறார். பலர் தாக்கியதால் கார்னர் கீழே விழுந்திருக்கிறார். அப்படியும் அவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்கியிருக்கிறார்கள். அவர் கழுத்தில் கைகளைப் போட்டு அவர் இறப்பிற்குக் காரணமாக இருந்த அதிகாரி, விசாரிக்கும் அளவிற்குத் தவறு செய்யவில்லை என்று ஜூரி முடிவுசெய்திருக்கிறது.

    இன்னொரு சம்பவத்தில் பன்னிரண்டு வயது கருப்பினப் பையன் ஒரு காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். பையன் தன்னுடைய கையில் விளையாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தானாம். அதை பார்த்த காவலர் அது நிஜத் துப்பாக்கி என்று நினைத்துவிட்டதாகவும் அவன் தன்னைச் சுட்டுவிடலாம் என்று நினைத்து அவனைச் சுட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    தான் பதினைந்து வயதாக இருந்தபோது வெள்ளை இன காவலர்கள் தான் செய்த ஒரு சிறு தவறுக்கு எப்படி மிருகத்தனமாக தன்னை நடத்தினார்கள் என்பதையும் அதன் பிறகு வளர்ந்து பெரியவனானதும் தான் காவல்துறையில் சேர்ந்தது பற்றியும் விவரித்து ஒரு கருப்பர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். காவல்துறையில் சேர்ந்த பிறகு காவல்துறையினர் எப்படி மிருகத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பது அவருக்கு நன்றாகப் புரிந்ததாம். அவருடைய சக வெள்ளை அதிகாரி ஒருவர் ‘யாராவது ஒரு வெள்ளையர் துப்பாக்கியுடன் இருப்பதைப் பார்த்தால் என்னுடைய பாதுகாப்போடு அவருடைய பாதுகாப்பையும் மனதில் கொண்டு செயல்படுவேன். அதே சமயம் ஒரு கருப்பர் துப்பாக்கியோடு வந்தால் என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளுவது என்பதைத்தான் நினைப்பேன்’ என்றாராம். இப்போது புரிகிறது ஏன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கருப்பர்கள் என்பது. சிறு சந்தேகம் வந்தாலும் உடனேயே கருப்பர்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள் வெள்ளை இன காவல்துறை அதிகாரிகள்.

    எல்லாச் சம்பவங்களிலும் சுடப்பட்டவர்கள் வெள்ளையர்களாக இருந்தால் இம்மாதிரி நடந்திருக்காது. என்று கூறுகிறார்கள். வெள்ளை இன இளைஞர்கள் காவலர்களினால் சுட்டுக் கொல்லப்படுவதைவிட இருபத்தியொரு மடங்கு அதிகமாகக் கருப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களாம். பிரௌன் விஷயத்திலாவது சாட்சியங்கள் சொல்வதில் முரண்பாடு இருக்கிறது. ஆனால் கார்னரின் விஷயத்தில் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னுடைய செல் போனில் எடுத்த போட்டோக்களில் காவலர்கள் கார்னரைக் கழுத்தை வளைத்துக் கீழே தள்ளி மூச்சுத் திணற வைத்த விதம் பதிவாகியிருக்கிறது. அப்படியும் காவல்துறை அதிகாரி மீது விசாரணை தேவையில்லை என்று ஜூரி முடிவுசெய்திருக்கிறது.

    வெள்ளை அமெரிக்கர்களுக்கும் கருப்பு அமெரிக்கர்களுக்கும் இடையே செல்வத்தில் உள்ள இடைவெளி, படிப்பறிவில் உள்ள இடைவெளி, வேலைவாய்ப்பில் உள்ள இடைவெளி ஆகியவை மறைந்தாலொழிய கருப்பு அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களுக்கு சமமாக நடத்தப்படும் வாய்ப்பு ஏற்படும் சாத்தியம் இல்லை என்கிறார்கள் பத்திரிக்கையில் பத்தி எழுதுபவர்கள். ஜனாதிபதி ஒபாமா ‘அமெரிக்காவில் சட்டத்திற்கு முன் யாராவது சமமாக நடத்தப்படவில்லை என்றால் அது ஒரு நாட்டின் பிரச்சினை. ஜனாதிபதி என்ற முறையில் அதைச் சரிசெய்வது என் கடமை’ என்று கூறியிருக்கிறார். காவலர்களுக்குப் புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும், அவர்கள் உடையிலேயே காமராக்களைப் பொருத்த வேண்டும் போன்ற யோசனைகளை ஒபாமா கூறியிருக்கிறார். இதற்கு மேல் அவர் என்ன செய்யப் போகிறார், அவரைச் செய்யவிடுவார்களா, என்றாவது ஒரு நாள் அமெரிக்கக் கருப்பர்களுக்கு வெள்ளை அமெரிக்களுக்குச் சமமான உரிமைகள் தரப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    படம் உதவி:
    http://www.desertsun.com/story/news/2014/11/18/data-blacks-likely-arrested/19257947/
    http://www.nydailynews.com/new-york/eric-garner-grand-jury-evidence-public-thursday-article-1.2033065

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “ஏனிந்த எக்காளம் யாதவக் கண்ணனுக்கு
    தானந்த தற்பரம் தானென்ற -ஆனந்த
    ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயின்றதில்!;
    வேணும்கட் டிக்கு வேணு”….கிரேசி மோகன்…
    (OR)
    ஞானம் பிறந்ததோ ! நான்யார் பயிற்சியால்!;
    சோணை ரமண சுகம்”….

    ****ஆதிமுலமே ஆயினும் அவனியில் அவதரித்து விட்டால் ஆதிதன் முலத்தை மறக்கும் அஞ்ஞானம் தவிர்க்க முடியாது போலிருக்கிறது…அது அகல அருணை ரமணர் அருளிய வழி “நான் யார்” (WHO AM I) விசாரணை…நம்மைப் போலவே நவநீதனும் நான் யார் விசாரணை செய்து நனி ஆனந்தம் கொண்டு நர்த்தனம் ஆடுகிறான் போலும்….

    Share
  • விழிவேண்டல் பதிகம்

    என்னை சபரிமலைக்கு வழிநடத்திச் செல்லும் என் குருநாதரின் விழியொளி மங்கிய போது அவருக்கு விழியொளி வேண்டிப் பாடிய பதிகம் இது.

    சு.ரவி

    ayya

    விழிவேண்டல் பதிகம்

    கண்ணான தெய்வமே கருணா விலாஸமே

    கானகத் துறையும் அழகே!

    காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே

    கதிராய் விரிந்த பரமே!

    எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும்

    எளிமை பொதிந்த தயையே

    எகாந்த வாஸியே, எழைபங்காளனே

    ஏதிலார்க் குற்ற துணையே!

    பண்ணோடியைந்த கவி பரவுபாவலர் நெஞ்சில்

    பரவசத் தீப்பிழம்பே!

    பற்றற்று நின்பாதம் பற்றுவைத் தார்க்கருளும்

    பந்தளத் தீங்கரும்பே!

    கண்ணுதற் பெருமானும் கருநிறத் திருமாலும்

    காதலுற் றருள் பாலனே!

    கற்பித்த குருநாதன் குறைதீர்த்த தெய்வமே

    கண்திறந் தருளுவாயே!

    கார்த்திகைத் திங்கள் தோன்றக்

    காத்திருந்தாற் போல் அன்றே

    ஆர்த்திடும் உவகை கொண்டுன்

    அடியவர் மாலை சூடும்

    நேர்த்தியைக் கண்டு விம்மி

    நேத்திரம் நெகிழ வேண்டும்

    சீர்த்தியே சிவனார் பெற்ற

    செல்வமே விழிகள் தாராய்! (1)
    ஐயனே உன்னை நெஞ்சில்

    அனுதினம் பூஜை செய்து

    மெய்த்தவக் கோலம் கொண்டு

    மண்டல நோன்பும் காத்து

    நெய்யினைத் தெங்கில் வார்க்கும்

    நிகரிலாக் காட்சி காண

    மைம்முகிற் கொண்டல் மேவும்

    மைந்தனே விழிகள் தாராய்! (2)
    ஆரியங் காவில் உன்னை

    ஐயனாய்க் காணவேண்டும்

    கூரிய வாளோ(டு) அச்சங்

    கோவிலில் கோனாம் கோலம்

    நேரிலே காண வேண்டும்

    நெஞ்செலாம் நெகிழ வேண்டும்

    சூரியச் சுடரை ஏற்றும்

    சுந்தரா விழிகள் தாராய்!! (3)
    அழகினை அமுதில் தோய்த்து

    அம்புலி ஒளியைச் சேர்த்து

    மழலையாய்த் தவழும் செல்வ

    மணிகண்ட னே!குளத்துப்

    புழையினில் குழந்தை யே!என்

    புன்னகை அரும்பே உன்னைத்

    தொழுது நான் காண வேண்டும்

    துணைவிழி இரண்டும் தாராய்! (4)
    கருமேனி அண்ணல் தோழன்

    கங்கையின் குகனைப் போல

    எருமேவி கோட்டை ஆண்டுன்

    எல்லையைக் காக்கும் வாவர்

    திருவாயில் தொடங்கி பக்தர்

    திந்தகத் தோமென் றாடி

    வருகின்ற காட்சி காண

    வளரொளி நயனம் தாராய்! (5)
    படிகநீர் அழுதை ஆடிப்

    பையவே பக்தர் கூட்டம்

    நெடிதுயர் மலைகள் தாண்டி

    நெருங்கிய காட்டின் ஊடே

    முடிசுமந் துன்பேர் கூவி

    முனைப்புடன் ஏகும் காட்சி

    அடியவன் காண வேண்டும்

    ஐயனே விழிகள் தாராய்! (6)
    சம்புவும் மாலும் ஈந்த

    சத்தியச் சுடரே! சீற்ற

    வெம்புலி இவரும் வல்வில்

    வீரமே! வேந்தே! வானில்

    உம்பரின் உடுக்கள் நாண

    உனதடி யார்கள் ஏற்றும்

    பம்பையின் தீபம் காணப்

    பழுதிலா விழிகள் தாராய்! (7)
    கரிமுகக் கடவுள் கோவில்

    கடந்துசெங் குத்தாய்ச் செல்லும்

    சரிவிலே ஏறிச் சென்று

    சபரியின் பீடம் கண்டு

    சரத்தினை ஆலில் தைத்து

    சன்னதி நோக்கி அன்பர்

    விரையுமக் காட்சி காண

    விழிகளில் ஒளியைத் தாராய்! (8)
    இருமுடி தலையில் ஏந்தி

    இணையடி நினைவில் மாந்தி,

    பரவசத் தோடே பதினெண்

    படிகளில் பணிவாய் ஏறி

    தரிசனம் கண்டு கண்ணீர்

    தாரையாய்ப் பெருக வேண்டும்!

    ஹரிஹர சுதனாம் எங்கள்

    ஐயனே விழிகள் தாராய்! (9)
    ஐயனே உந்தன் மேனி

    அடியவன் சுமந்து வந்த

    நெய்யிலே நனையக் கண்டு

    நெக்குநெக் குருக வேண்டும்!

    மெய்யெலாம் அணிகள் பூண்ட

    மின்னலே! மகர ஜோதித்

    தெய்வமே நின்னைக் காணத்

    தேசுறு விழிகள் தாராய்! (10)

    -சு.ரவி

    விழிவேண்டல் பதிகம்
    கண்ணான தெய்வமே கருணா விலாஸமே

    கானகத் துறையும் அழகே!

    காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே

    கதிராய் விரிந்த பரமே!

    எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும்

    எளிமை பொதிந்த தயையே

    எகாந்த வாஸியே, எழைபங்காளனே

    ஏதிலார்க் குற்ற துணையே!

    பண்ணோடியைந்த கவி பரவுபாவலர் நெஞ்சில்

    பரவசத் தீப்பிழம்பே!

    பற்றற்று நின்பாதம் பற்றுவைத் தார்க்கருளும்

    பந்தளத் தீங்கரும்பே!

    கண்ணுதற் பெருமானும் கருநிறத் திருமாலும்

    காதலுற் றருள் பாலனே!

    கற்பித்த குருநாதன் குறைதீர்த்த தெய்வமே

    கண்திறந் தருளுவாயே!

    கார்த்திகைத் திங்கள் தோன்றக்

    காத்திருந்தாற் போல் அன்றே

    ஆர்த்திடும் உவகை கொண்டுன்

    அடியவர் மாலை சூடும்

    நேர்த்தியைக் கண்டு விம்மி

    நேத்திரம் நெகிழ வேண்டும்

    சீர்த்தியே சிவனார் பெற்ற

    செல்வமே விழிகள் தாராய்! (1)
    ஐயனே உன்னை நெஞ்சில்

    அனுதினம் பூஜை செய்து

    மெய்த்தவக் கோலம் கொண்டு

    மண்டல நோன்பும் காத்து

    நெய்யினைத் தெங்கில் வார்க்கும்

    நிகரிலாக் காட்சி காண

    மைம்முகிற் கொண்டல் மேவும்

    மைந்தனே விழிகள் தாராய்! (2)
    ஆரியங் காவில் உன்னை

    ஐயனாய்க் காணவேண்டும்

    கூரிய வாளோ(டு) அச்சங்

    கோவிலில் கோனாம் கோலம்

    நேரிலே காண வேண்டும்

    நெஞ்செலாம் நெகிழ வேண்டும்

    சூரியச் சுடரை ஏற்றும்

    சுந்தரா விழிகள் தாராய்!! (3)
    அழகினை அமுதில் தோய்த்து

    அம்புலி ஒளியைச் சேர்த்து

    மழலையாய்த் தவழும் செல்வ

    மணிகண்ட னே!குளத்துப்

    புழையினில் குழந்தை யே!என்

    புன்னகை அரும்பே உன்னைத்

    தொழுது நான் காண வேண்டும்

    துணைவிழி இரண்டும் தாராய்! (4)
    கருமேனி அண்ணல் தோழன்

    கங்கையின் குகனைப் போல

    எருமேவி கோட்டை ஆண்டுன்

    எல்லையைக் காக்கும் வாவர்

    திருவாயில் தொடங்கி பக்தர்

    திந்தகத் தோமென் றாடி

    வருகின்ற காட்சி காண

    வளரொளி நயனம் தாராய்! (5)
    படிகநீர் அழுதை ஆடிப்

    பையவே பக்தர் கூட்டம்

    நெடிதுயர் மலைகள் தாண்டி

    நெருங்கிய காட்டின் ஊடே

    முடிசுமந் துன்பேர் கூவி

    முனைப்புடன் ஏகும் காட்சி

    அடியவன் காண வேண்டும்

    ஐயனே விழிகள் தாராய்! (6)
    சம்புவும் மாலும் ஈந்த

    சத்தியச் சுடரே! சீற்ற

    வெம்புலி இவரும் வல்வில்

    வீரமே! வேந்தே! வானில்

    உம்பரின் உடுக்கள் நாண

    உனதடி யார்கள் ஏற்றும்

    பம்பையின் தீபம் காணப்

    பழுதிலா விழிகள் தாராய்! (7)
    கரிமுகக் கடவுள் கோவில்

    கடந்துசெங் குத்தாய்ச் செல்லும்

    சரிவிலே ஏறிச் சென்று

    சபரியின் பீடம் கண்டு

    சரத்தினை ஆலில் தைத்து

    சன்னதி நோக்கி அன்பர்

    விரையுமக் காட்சி காண

    விழிகளில் ஒளியைத் தாராய்! (8)
    இருமுடி தலையில் ஏந்தி

    இணையடி நினைவில் மாந்தி,

    பரவசத் தோடே பதினெண்

    படிகளில் பணிவாய் ஏறி

    தரிசனம் கண்டு கண்ணீர்

    தாரையாய்ப் பெருக வேண்டும்!

    ஹரிஹர சுதனாம் எங்கள்

    ஐயனே விழிகள் தாராய்! (9)
    ஐயனே உந்தன் மேனி

    அடியவன் சுமந்து வந்த

    நெய்யிலே நனையக் கண்டு

    நெக்குநெக் குருக வேண்டும்!

    மெய்யெலாம் அணிகள் பூண்ட

    மின்னலே! மகர ஜோதித்

    தெய்வமே நின்னைக் காணத்

    தேசுறு விழிகள் தாராய்! (10)

    -சு.ரவி

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 34

    சு.கோதண்டராமன்.

     

    யக்ஞம் – உலகின் மையப் புள்ளி

    yajna

     

     

    தேவ என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக ரிக் வேதத்தில் மிகுதியாகத் தென்படும் வார்த்தை யக்ஞம் என்பதாகும். வழிபடுதல் என்ற பொருள் உடைய யஜ் என்ற தாதுவிலிருந்து தோன்றியது இது. யஜ் என்ற வினைச் சொல்லும் அதனிடத்தில் தோன்றிய யக்ஞம், யஜமான, யஜிஷ்ட, யக்ஞிய, யஜத்ர முதலான சொற்களும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    யக்ஞம் என்றால் என்ன?
    யக்ஞம் என்ற சொல்லுக்கு வழிபாடு என்பது பொருள். யாகசாலையில் அக்னியை மூட்டி சமித்தையும் நெய்யையும் இட்டு ஸ்வாஹா முதலான மந்திரங்களுடன் செய்யப்படும் வழிபாடு யக்ஞம் என்பதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. யக்ஞத்தில் முதலில் அக்னி அழைக்கப்பட்டு தோத்திரங்களால் மகிழ்விக்கப்படுகிறார். ஹவிஸ் என்று அழைக்கப்படும் ஒரு உணவு அக்னியில் இடப்படுகிறது. அதைத் தேவர்களிடம் சேர்ப்பிக்கும்படி அவர் வேண்டிக் கொள்ளப்படுகிறார். ஹவிஸை எடுத்துக் கொண்டு அக்னி தேவலோகத்துக்குச் சென்று தேவர்களிடம் தந்து அவர்களைப் பூமிக்கு வருமாறு அழைக்கிறார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பூமிக்கு வருகிறார்கள். விதத என்று அழைக்கப்படும் யாக சாலையில் பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பாசனத்தின் மீது அமர்ந்து, அங்கு அளிக்கப்படும் சோம பானத்தைக் குடிக்கிறார்கள். மேலும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பக்தர்களுக்குப் பல வகை வரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு அக்னி தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இடையில் தூதராகப் பணிபுரிவதாக வேதம் கூறுகிறது. ஹவிஸ் என்பது பொதுவாக, பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களைக் கொண்டதாகவும், சில சமயங்களில் மிருகங்களைக் கொண்டதாகவும் இருப்பது தெரிய வருகிறது.
    யக்ஞம் வேத காலத்து வழிபாட்டு முறை. கோயில், சிலைகள், பூவினால் அர்ச்சனை செய்தல், அபிஷேகம், பிரதட்சிணம், ஹாரத்தி முதலான வேறு வகையான வழிபாட்டு முறைகள் ரிக் வேதத்தில் சொல்லப்படவில்லை.

    யக்ஞத்தில் அக்னிக்குச் சிறப்பிடம்:
    எல்லாத் தேவர்களுக்கும் அக்னி மூலமாகத்தான் ஹவிஸ் போய்ச் சேருகிறது. எனவே யக்ஞத்தில் அக்னிக்கு ஒரு சிறப்பிடமும் அதன் காரணமாகச் சில சிறப்புப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
    யக்ஞத்தின் கேது (அடையாளம்),
    யக்ஞத்தின் தேவன்,
    யக்ஞபந்து,
    யக்ஞ பிதா, யக்ஞ ப்ராவிதா- அபிசஸ்தி பாவா (காப்பாற்றுபவர்)
    யக்ஞநீ- யக்ஞநேதா- யக்ஞபூர்வ்ய (தலைவர்),
    புரோஹித (முன் நிலையில் வைக்கப்படுபவர்)
    ரித்விக்- ஹோதா- யந்தா, யக்ஞ ஸாதக (நடத்துபவர்),
    அத்வரஸ்ரீ (வேள்விச் செல்வம்),
    ஹவ்ய வாட்- ரத்ய- யக்ஞ வாஹ (ஹவிஸைச் சுமந்து செல்பவர்),
    யக்ஞ நாபி (மையம்),
    ஸுக்ரது (நன்றாக யாகம் செய்பவர்),
    யக்ஞ வித்வான் (யக்ஞங்களை நன்றாக அறிந்தவர்),
    அத்வரேஷு ஈட்ய (யாகங்களில் போற்றப்படுபவர்)

    அக்னி யக்ஞத்தைத் தூண்டுகிறார். அவர் தீமை செய்பவர்களையும் தீயன பேசுபவர்களையும் அழித்து பக்தர்களுக்கு யக்ஞத்தின் பாதையை எளிதாக ஆக்குகிறார். நற்செயல்கள் செய்வோர் வீட்டில் யக்ஞத்தை நிலை நிறுத்துகிறார். பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையில் போய் வருகிறார். ஹவிஸ்ஸை தேவர்களுக்கு அளித்து திருப்தி செய்விக்கிறார். யக்ஞம் பற்றி நமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் அக்னி தானே பொறுப்பேற்று யக்ஞத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறார். அவர் யக்ஞத்தின் வடிவம்.

    எல்லாத் தேவர்களும் யக்ஞத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அதனால் மகிழ்விக்கப் படுகிறார்கள், வலுவூட்டப்படுகிறார்கள். அவர்கள் யக்ஞத்தைக் காக்கிறார்கள். யக்ஞம் செய்யும் யஜமானனுக்கு அவர்கள் நீண்ட ஆயுள், பாதுகாப்பு, பாவங்களிலிருந்து விடுதலை, செல்வம், புகழ், வலிமை, வெற்றி, சந்ததி, குதிரைகள், உணவு மற்றும் அக்னியின் சக்தி ஆகியவற்றை அளிக்கிறார்கள். பித்ருக்களும் யக்ஞங்களால் மகிழ்கிறார்கள்.

    யக்ஞமும் யாகமும் :

    யாகம் என்ற சொல்லும் யக்ஞம் என்ற பொருளிலேயே தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் இது ரிக் வேதத்தில் காணப்படவில்லை, பிற்காலத்தில் ஏற்பட்டது. யக்ஞம் என்ற சொல் ஆழமான பொருள் உடையது. பிற்காலத்தில் அது மேலும் விரிவடைந்தது. யாகம் என்ற சொல் அக்னி வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக நின்று விட்டது. தமிழில் வேள்வி என்பதும் இந்தத் தீ வழிபாட்டை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. யக்ஞத்தின் விரிவான பொருளைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

    யக்ஞத்தின் துணை அங்கங்கள்- மனம் :
    யக்ஞத்தில் ஹவிஸ்ஸை விட முக்கியமானது மனப்பாங்குதான். “என்னிடம் யக்ஞத்தில் சமர்ப்பிக்க நெய் இல்லை அதற்குத் தேவையான பசு இல்லை. சமித்து கொண்டு வருவோம் என்றால் அதை வெட்டி வருவதற்கான கோடரியும் இல்லை. கரையான் அரித்த சுள்ளிகளும் எறும்பு மொய்த்த எண்ணெயும்தான் உள்ளன. இதையே நெய்யாக ஏற்றுக் கொள்க” என்று அக்னியை வேண்டுகிறார் ஒரு ரிஷி. (8.102.19, 8.102.21)

    அக்னியில் நெய், ஹவிஸ் சேர்ப்பிப்பது நம் மனதில் இருக்கும் நன்றி மற்றும் பணிவின் அடையாளம். ஆனால் இவை மட்டும் போதாது.

    தேவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் நம் மனதின் வணக்கத்தை உடலால் வெளிப்படுத்த வேண்டும்.

    பெற்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு உதவிகள் கோரியும் பிரார்த்தனை மந்திரங்களைக் கூறவேண்டும். இது வாக்கினால் செய்யப்படுவது. பிரார்த்தனை இல்லாத யக்ஞம் பலன் தருவதில்லை என்கிறது வேதம்.(10.105.8)

    பிரார்த்தனையில் அர்க்க, உக்த, கிர, ப்ரஹ்ம, ஸ்தோமம் (अर्क, उक्थ, गिरः, ब्रह्म, स्तोम) என்ற ஐந்து வகை உண்டு. இவற்றின் தனித் தன்மை என்ன என்பது அறியப்பட முடியவில்லை. இது தவிர தீதி, தீ:, மன்ம, மதி, கான என்ற சொற்களும் (धीतिः, धीः, मन्म, मतिः, गानम्) பிரார்த்தனையையே குறிக்கின்றன.

    செய்யும் யக்ஞத்தை எதற்காகச் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்யவேண்டும். இதற்கு புத்தியைப் பயன்படுத்தல் அவசியமாகிறது.

    இவ்வாறு மனம், வாக்கு, உடல், புத்தி இந்த நான்கும் ஒருங்கிணைந்து ஸ்தோமம், நமஸ்காரம், ஹவிஸ், சோமம் எல்லாம் சேர்ந்த யக்ஞம்தான் அத்வரம், அதாவது, குறைவில்லாத, முழுமையான யக்ஞம் ஆகும்.

    கீழ்க்கண்ட மந்திரங்கள் வெறும் ஆகுதி மட்டுமே முழுமையான யக்ஞம் ஆகாது, அது அத்வரமாக ஆவதற்கு, அதாவது குறை இல்லாமல் இருக்க அத்துடன் ஸ்தோமம், நமஸ்காரம், புத்தி, ஹவிஸ் சேரவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
    சோமா, இந்த யக்ஞத்தையும் பிரார்த்தனை மந்திரங்களையும் ஏற்றுக்கொள்க. (1.91.10)
    நாங்கள் இந்திரனை யக்ஞத்தைக் கொண்டும் மந்திரங்களைக் கொண்டும், ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம்.(10.24.2)
    இந்த யக்ஞத்தில் நான் பூமியையும் ஆகாயத்தையும் நமஸ்காரத்தைக் கொண்டு போற்றுகிறேன்.(1.185.7)
    நாங்கள் பிரகஸ்பதிக்கு யக்ஞங்களைக் கொண்டும் நமஸ்காரங்களைக் கொண்டும் ஹவிஸைக் கொண்டும் வழிபடுகிறோம். (4.50.6)
    புரோகிதர்கள் அக்னியை யக்ஞத்தைக் கொண்டும் புத்தியைக் கொண்டும் வழிபடுகிறார்கள். (3.27.6)

    யக்ஞத்தின் பொருள் விரிவடைதல் :
    யக்ஞம் என்பது ஆகுதியை மட்டும் குறிப்பதல்ல என்பதைக் கீழ்க் கண்ட மந்திரம் கூறுகிறது.
    தேவர்கள் யக்ஞம் செய்கிறார்கள்.(10.90.15, 16)
    தேவர்கள் அக்னிக்கு யக்ஞம் செய்கிறார்கள். (5.21.3)
    அக்னி, மானிடர் சார்பில், தேவர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.15.12)
    அக்னி மானிடர்களுக்கு யக்ஞம் செய்கிறார். (1.26.3)

    தேவர்கள் நம்மைப் போல் யாக குண்டம் அமைத்து நெய், சமித், ஹவிஸ் இவற்றைக் கொண்டு ஆகுதி செய்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் வேதத்தில் இல்லை. எனவே மேற்கண்ட மந்திரத்தில், யக்ஞம் என்ற சொல் தீ மூட்டி ஹவிஸ்ஸைச் சமர்ப்பித்தல் என்ற பொருளில் அல்லாமல், வணங்குதல் அல்லது மரியாதை செய்தல் என்ற பொருள் உடையதாகக் காணப்படுகிறது. மற்ற தேவர்களும் அக்னியும் ஒருவர்க்கொருவர் உதவி செய்கிறார்கள். தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் வணக்கம் செய்கிறார்கள் என்பதுதான் ஒருவர்க்கொருவர் யக்ஞம் செய்வதாகக் கூறப்படுகிறது.

    போரில் வெற்றி பெற உதவும் ரதத்திற்கு யக்ஞம் செய்வதாகவும் ரதம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறும் மந்திரங்கள் உள்ளன.(6.47.27, 6.47.28)

    போரில் வெற்றி பெற ரதம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை அந்த மனிதர் நன்றியுடன் நினைவு கூர்வதாகத் தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

    எனவே உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதும், அவர்களை மேலானவர்களாகக் கருதி அவர்களிடம் பணிவுடன் இருப்பதும் யக்ஞம் என்பதன் விரிந்த பொருள்.

    இது மேலும் விரிவடைந்ததைப் பின்னர் ருதமும் யக்ஞமும் என்ற தலைப்பில் பார்ப்போம்.

    அத்வரம் என்ற சொல்லின் விரிந்த பொருள் :
    அத்வரம் என்ற சொல்லின் பொருளும் மேலும் விரிவடைந்தது. அது பயணம் என்ற பொருள் தரும் அத்வ என்ற சொல்லிலிருந்து வந்தது, அது ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கும் என்று அரவிந்தர் சொல்வது சில இடங்களில் பொருத்தமாக இருக்கிறது. அக்னியே, நீ எங்கள் யக்ஞத்தினால் மகிழ்வாயாக, எங்கள் அத்வரத்தினால் மகிழ்வாயாக(4.9.7) என்பதிலிருந்து அத்வரம் என்பது யக்ஞம் அல்லாத வேறொன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்னியே, நீ எனக்கு அத்வரத்தில் வலிமையும், மக்கட்பேறும், பெரும் செல்வமும், மகிழ்ச்சியும், புகழும் தருவாயாக (3.16.6)  என்ற மந்திரத்தில் அத்வரம் என்பதற்கு வாழ்க்கை என்ற பொருள்தான் பொருத்தமாக உள்ளது.

    அக்னியே, நீ யக்ஞங்களில் அமர்கிறாய். எங்கள் அத்வரங்களை நடத்துக. (1.14.11 )  இதில் யக்ஞம் என்பது முயற்சிகளையும் அத்வரம் என்பது வாழ்க்கையையும் குறிக்கும்.

    படம் உதவிக்கு நன்றி: https://www.kksblog.com/2013/04/accepting-krsnas-plan/

    Share
  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்: வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் -3

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்:

    வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் -3

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)
     

    ‘என் அன்புக்குரிய மேபெல்,

    என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப்பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினை களுக்கு ஊக்கமுடன் உழைப்பதை மாந்தருக்கு உணர்விக்கவும் வழி செய்திடு. எனது எண்ணங்கள் நிறைவேற, எனது கனவுகள் மெய்யாக என்னைத் தூண்டு. ஏதோ முதலில் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார், இப்போது மேற்கொண்டு படைக்க எதுவுமின்றி சும்மா இருக்கிறார் என்று எனது நண்பர்கள் குறை கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ‘.

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் [தன் மனைவி மேபெலுக்கு எழுதிய கடிதம்]

    ‘ஒரு கதவு நமக்கு மூடும் போது, அடுத்த கதவு திறக்கிறது! நீண்ட காலம் மீண்டும், மீண்டும் மூடிய கதவுப் புறத்தை நோக்கியே முன்னேற முயற்சி செய்கிறோம்! நமக்காகப் பின்புறம் கதவு திறந்திருப்பது நமது கண்களுக்குத் தெரிவதில்லை!

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    ‘நீ எடுத்துக் கொண்டிருக்கும் கைவச வேலையில் உன் கவனம் முழுவதையும் செலுத்து! பரிதியின் கதிர் ஒளியைக் குவியாடியில் ஒருங்கே குவியச் செய்யா விட்டால், கனல் சக்தியில் எதையும் எரிக்க முடியாது ‘.

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    முன்னுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதச் சாதனங்களைப் படைத்த அமெரிக்க ஆக்கமேதை தாமல் ஆல்வா எடிஸனை அறிந்து கொண்ட அளவுக்கு, உலக மாந்தர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை அறிய மாட்டார்கள்! விந்தை நிகழ்ச்சியாக அவ்விரு மேதைகளும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்! இருவரும் வட அமெரிக்காவில் தமது வல்லமைகளைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர் கள்! ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டவர். தொலைபேசி, ஒளிநார்த் தகவல் [Telephone, Photophone] ஆகியவற்றைப் படைத்ததில் காப்புரிமை பெற்ற பெல், அடுத்து மருத்துவத் துறை, இனவிருத்தி, இனவிருத்திச் சீர்பாடு, வான்வீதிப் பறப்பியல், கடற்துறைப் போக்குவரத்து [Medicine, Genetics, Eugenics, Aviation, Marine Navigation] ஆகிய துறைகளில் படைப்புக் கருத்துக்களை வழங்கினார்.

    மேலும் அவரது ஆக்கவினைகள் தொலைக்காட்சி, நாடாப் பதிவுச் சாதனம், பரிதிக் கனல் பயன்பாடு, வாயு வெப்ப ஈர வளப்பாடு, எரிசக்திச் சிக்கனப் பயன்பாடு, கருத்தடை [Television, Tape Recorder, Solar Heat, Air Conditioning, Energy Conservation, Birth Control] ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவியன. 1881 இல் அமெரிக்காவின் 20 ஆவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்டு [James Garfield] துப்பாக்கியால் சுடப் பட்டதும், வயிற்றில் தங்கிய ரவையைக் கண்டுபிடிக்க ஓர் உலோக உளவியைப் [Metal Detector] பெல் தயாரித்தார். இயற்கையாகக் கதிரியக்க முள்ள ரேடியத்தின் [Radioactive Radium] கதிர்வீச்சைப் பயன்படுத்தி, உடலுக்குள் பரவும் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று புதிய மருத்துவ ஆலோசனையை 1903 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்டவர், பெல்.

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் பிற்கால வாழ்க்கை

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் வாடிப் போகும் வெற்றி மாலைகளைச் சூடிக் கொண்டு மயங்கிக் கிடக்கும் ஒரு மனிதர் அல்லர்! டெலிஃப்போனைக் கண்டுபிடித்தற்குப் பிறகு, பெல் ‘ஒளிநார்ப்பேசி ‘ [Photophone] தயாரிக்க முற்பட்டார். அம்முறையில் பரிதி ஒளிமூலம் வாய்ச் சொற்களை அனுப்பிக் கேட்கும் ஒரு சாதனம் விருத்தியானது. ஒளிநார்த் தகவல் நியதிக்குப் [Fibre Optics Principle] பயன்படும் அப்படைப்பை ஒரு மூலகரமான ஆக்கமாகக் கருதினார், பெல். அந்தச் சாதனம் பூரணமாக வேலை செய்யும் என்று எவரும் நம்பிலர். பரிதி எப்போதும் ஒளியுடன் வானில் தென்படாததால், ‘ஒளிநார்ப்பேசி ‘ நடமுறைக்கு ஒவ்வாத ஒரு படைப்பு என்று பலர் புறக்கணித்தனர்.

    ஒளிநார்ப்பேசி [Photophone] ஒளிக் கற்றை மூலம் வாய்ப் பேச்சை அனுப்பும் முறை. அந்த முறையே இப்போது ஒளிநார்த் தகவல் [Fibre Optics] ஏற்பாட்டில் கையாளப் படுகிறது. அந்த முறையை விருத்தி செய்ய அவருடன் கூட்டாகப் பணி ஆற்றியவர், சார்லஸ் சம்னர் டெயின்டர் [Charles Sumner Tainter]. அதற்குப் பயன்படும் படிகம், ஒளி நுகர்ச்சி உள்ள ஸெலினியப் படிகச் செல் [Light-Sensitive Cells of Crystalline Selenium]. அப்படிகத்தின் சிறப்பான ஒரு பண்பு: ஒளிச்சக்தியின் தீவிரத்துக்கு ஒப்பாக, அதன் மின்தடைத் தலைகீழாக மாறுகிறது [Electrical Resistance varies inversely with the Illumination Intensity]. அதாவது ஒரு பண்டம் இருட்டில் இருந்தால் அதன் ஒளித்தீவிரம் குன்றி, படிக மின்தடை மிகையாகிறது. அப்பண்டம் வெளிச்சத்தில் இருக்கும் போது அதன் ஒளித்தீவிரம் மிகுந்து, படிக மின்தடை குறைவாகிறது. ஒளிநார்ப்பேசியில் இவ்விதம் நிகழ்கிறது: தொலைபேசி அனுப்பி [Transmitter] முன்பாக அதிரும் ஓர் ஆடியை வைத்தோ அல்லது சுற்றும் சுழலியை வைத்தோ குரல் தொனி ஒளியை மாறுபடுத்தும் போது, ஸெலினியப் படிகம் உள்ள ஓர் ஒளிவாங்கியில் [Receiver] அது விழும்படிச் செய்ய வேண்டும். அப்போது குரல் தொனிக்கு ஒப்பாக, ஒளிக்கற்றை மூலம் ஒளியின் தீவிரம் மிகுந்தோ அல்லது குறைந்தோ அனுப்பப் படுகிறது. பெல்லின் ஒளிநார்ப்பேசிக்கு 1881 இல் காப்புரிமை அளிக்கப்பட்டது. 1911 இல் பெல் முதன்முதலாக வட்டச் சுழற்றித் தொலைபேசியைப் [Dial Telephone] படைத்தார்.

    1957 இல் சார்லஸ் டெளனஸ், ஆர்தர் சாவ்லோ ஆகியோர் [Charles Townes & Arthur Schawlow] இருவரும் பெல் ஆய்வுக் கூடத்துக்காக லேஸர் ஒளிச் சாதனத்தை [Laser (Light amplification by Simulated Emission of Radiation)] விருத்தி செய்தனர். 1977 இல் பெல் நிறுவகம் லேஸர் ஒளிபெருக்கியுடன், ஒளிநார்த் தகவல் அனுப்பு [Fibre Optics] முறையைப் பயன்படுத்தி, முதன்முதலாக சிகாகோ நகர்த் வீதிகளில் வாய்ப் பேச்சுகள், வீடியோ சமிக்கைகள், மின்கணனி விளக்கக் குறிப்புகள் ஒளித்தீவிர அதிர்வில் [Phone Calls, Video Signals, Computer Data on Light Pulses] அனுப்பப் பட்டன. அடுத்து பெல் குழுவினர் மெழுகுச் சொற்பதிவுத் தட்டு [Wax Phonograph Record] தயாரிப்பதில் இறங்கினார்கள்.

    1881 இல் அமெரிக்காவின் 20 ஆவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்டு [James Garfield] வாழ்க்கையில் கசப்புள்ள ஓர் வழக்கறிஞரால் சுடப்பட்டு மரணக் காயம் அடைந்தார். அவரது வயிற்றில் தங்கிய ரவையின் இருப்பிடத்தைக் காண ‘உலோக உளவி ‘ [Metal Detector] ஒன்றைப் பெல் கண்டுபிடித்தார். பெல் தயாரித்த அந்த உலோக உளவி ஒரு மின்சாரத் தூண்டு-சமப்பாடுச் சாதனம் [Induction-Balance Electrical Device]. அச்சாதனம் ஜனாதிபதி உடம்பில் ரவையைக் காணத் தவறினும், பின்வந்தவர் அதைச் சீர்ப்படுத்த ஏதுவானது. அடுத்து பெல் அமைத்த ‘தொலை ஒலி உளவி ‘ [Telephonic Probe] வெற்றிகரமாகப் பல்லாண்டுகள் உலோகக் கண்டுபிடிப்பு உளவியாக உபயோகமாகி வந்தது. தொலை ஒலி உளவி தயாரிக்கப் பட்டு 20 ஆண்டு களுக்குப் பிறகு, எக்ஸ்ரே கருவி ஒன்று செம்மை யாக்கப்பட்டு உலோக உளவியாகப் பயன்படுத்தப் பட்டது. பெல்லின் இரண்டாவது புதல்வன் சுவாச உறுப்பு நோயில் இறந்து போனபின், பெல் சூனியக் கவசத்தைக் [Vacuum Jacket] கண்டுபிடித்தார். அதுவே பிற்காலத்தில் செயற்கை முறையில் இயங்கும் உலோகப் புப்புசத்தின் [Iron Lung] முன்னோடி மாதிரி யானது. இயற்கையாகக் கதிரியக்க முள்ள ரேடியத்தைப் [Radioactive Radium] பயன்படுத்தி, உடலுக்குள் பரவும் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று 1903 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்டவர், பெல்.

    பெல் குடும்பத்தாரின் கோடை வாழ்தளம் கனடாவில் நோவாஸ் கோஷியா மாநிலத்தில், கேப் பிரிடன் தீவில் இருக்கும் பெடாக் சிற்றூர் [Baddack in Cape Breton Island, Nova Scotia, Canada]. பெடாக் சிற்றூர் ஓர் பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது. பெல்லின் நீண்டகால நீர் சம்பந்தப்பட்ட படைப்புத் திட்டங்கள் அனைத்தும் கனடாவின் பெடாக் ஏரிக் கரையிலே செய்யப்பட்டவை. குறிப்பாக பெல்லின் நீர் ஊர்திகள், வான ஊர்திகள் யாவும் அங்குதான் விருத்தி செய்யப் பட்டன. அடுத்தபடியாக கடல்நீரில் உப்பு நீக்கு முறை [Desalination of Seawater], சூழ்வெளி நீர்ப் பிழிவு முறை [Condensation of Atmospheric Water] ஆகிய இரண்டு முறைகளை நிலைப்படுத்தச் சோதனைகள் புரிந்தார். அமெரிக்காவில் ‘நேஷனல் ஜியோகிராஃபிக் மாத வெளியீடு ‘ [National Geographic Magazine] அமைப்பாளர்களில் ஒருவராகி, அதன் முதல் அதிபராக அவரது மருமகன் டாக்டர் கில்பர்ட் கிரோஸ்வெனர் [Dr. Gilbert Grosvenor] நியமிக்கப் பட்டார். தற்போதைய நேஷனல் ஜியோகிராஃபிக் மாத வெளியீட்டின் மகத்தான அமைப்புக்கு அவரே காரண கர்த்தா!

    ஹெலென் கெல்லருக்கு பலகணி திறந்த பெல்

    யாராவது உங்கள் தொழில் என்ன வென்று பெல்லைக் கேட்டால், ‘ நான் காது கேளாதவரின் ஆசிரியன் ‘ என்பதாக அவரது பதில் இருக்கும்! அமெரிக்க மேதை ஹெலென் கெல்லர் [Helen Keller (1880-1968)] பிறந்து 19 மாதங்கள் கழித்து நோய்வாய்ப் பட்டதில், அவரது பார்வை போனது! காது செவிடானது! அத்துடன் வாயும் ஊமை யானது! மனிதர் வாழத் தேவை யான ஐம்பொறிகளில் மூன்று முக்கியப் பொறிகள் முடங்கிப் போயின. பெல்லின் தந்தையார் கண்களில் ஒளியற்ற, காதுகள் கேளாத, வாய் பேசாத ஹெலென் கெல்லரை ஆறு வயதாகும் போது பெல்லிடம் அழைத்து வந்தார். மற்றோரிடம் தொடர்பு கொள்ள இயலாமல் ஹெலென் குழம்பிப் போய், இரங்கத் தக்க முறையில் ஆரவாரமுடன் காணப்பட்டார். பெல்தான் சிறப்பு மிக்க பயிற்சியாளி அன்னி ஸல்லிவனைக் [Teacher Anne Sullivan] 1887 இல் கண்டுபிடித்து, ஹெலனுக்கு பிரெயில் ஏற்பாடு [Braille System] மூலம் கல்வியும், பிறரிடம் தொடர்பு கொள்ளும் பயிற்சியும் அளித்தவர். ஹெலன் கெல்லருக்குப் பலகணியைத் திறந்து, இருளை விட்டு ஒளி பெறப் பயிற்சி அளித்தவர் பெல்! காது கேட்காத ஊமை ஹெலெனைப் பேச வைத்தவர் பெல்! தனிமையில் தவித்த ஹெலென் கெல்லரை நட்பு உலகுக்கு அழைத்து வந்தவர் பெல்!

    இளமங்கை ஹெலென் கெல்லர் கனடாவில் இருக்கும் பெல்லின் வேனிற் கால மாளிகையான பெயின் பிராஃக்குக்கு [Beinn Bhreagh, Baddack] வருகை தந்து அடிக்கடி பெல் குடும்பத்தாருடன் பழகி வருவது வழக்கம். பெல் பட்டம் அமைத்து பறக்க விட்டுச் சோதிக்கும் சோதனைகளில் ஹெலென் பங்கெடுத்து மகிழ்வதுண்டு. எழுதப் பேச வாசிக்கக் கற்றுக் கொண்டு ஹெலென் கெல்லர் 1904 இல் மாஸ்ஸசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்பிரிட்ஜில் உள்ள ராட்கிளிஃப் கல்லூரியில் படித்துச் சிறப்பு மதிப்புடன் பட்டம் பெற்றார். 1902 இல் ஹெலென் கெல்லர் எழுதி வெளியிட்ட சுயவரலாற்று நூலை [The Story of My Life], ‘செவிடருக்குப் பேசச் சொல்லிக் கொடுத்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லுக்கு ‘ அர்ப்பணம் செய்தார்.

    வான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்

    தொலைபேசியைக் கண்டுபிடித்து அதனால் கிடைத்த உலகப் புகழோ, பாராட்டுகளோ பெல்லுக்குப் போதிய மனத் திருப்தி அளிக்க வில்லை! திருமணமான காலத்தில் அவருடைய மனைவிக்கு பெல் ஒரு கடிதத்தில் இவ்விதம் எழுதினார்: ‘என் அன்புக்குரிய மேபெல், என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப் பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினைகளுக்கு ஊக்கமுடன் உழைப்பதை மாந்தருக்கு உணர்விக்கவும் வழி செய்திடு. எனது எண்ணங்கள் நிறைவேற, எனது கனவுகள் மெய்யாக என்னைத் தூண்டு. ஏதோ முதலில் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார், இப்போது மேற்கொண்டு படைக்க எதுவுமின்றி சும்மா இருக்கிறார் என்று எனது நண்பர்கள் குறை கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ‘.

    ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார்! முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.

    1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave ‘s Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிய நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை! 1902 இல் பெல் அமைத்தது 64 கூடு இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால், பட்டத்தைக் காற்று தூக்கி விட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.

    [தொடரும்]

    ****

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9 Britannica Concise Encyclopedia [2003]

    10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

    13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

    14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

    15 The Penguin Desk Encyclopedia of Science & Mathematics [2000]

    *************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2009)]

     

     

     

     

    Share
  • வந்தனை செய்வோம் கந்தனை!

    -மேகலா இராமமூர்த்தி

    கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டது. மூலமுதற்பொருளாகிய சிவபெருமான் தன் அடிமுடி காணவியலாத திருமாலுக்கும், பிரமனுக்கும் சோதி வடிவாய்த் திருவண்ணாமலையில் காட்சி தந்தது இக்கார்த்திகை மாதப் முழுமதி நாளிலேயே என்கின்றனர் பௌராணிகர்கள். மணிவாசக் பெருமானும் திருவாசகத்தில்,

    அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
    நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
    சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. (திருச்சாழல்: 260) என்று அழலுருவாய் நின்ற அரனின் சிறப்பைப் பேசுகின்றார்.

    muruganசிவனாருக்கு மட்டுமன்று அவர் மகனாருக்கும் உகந்தது இக்கார்த்திகை மாதம். ’மாதங்களில் நான் மார்கழி’ என்றான் கண்ணபெருமான். அதுபோல் மாதங்களில் கார்த்திகையாகத் திகழ்பவன் கண்ணுதலானின் மகனான கந்தன். ஆம்…கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், பூர்ணிமையும் சேர்ந்த நன்னாளில்தான் அழகன்முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து தோன்றினான் என்கின்றன புராணங்கள். அத்தீப்பொறிகள் சரவணப் பொய்கையிலிருந்த ஆறு தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளானதும், அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் அன்போடு வளர்த்ததும் நாமறிந்த செய்திகளே.

    பின்பு, உமையம்மை அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையோடு அணைக்க, அவை ஒன்றுசேர்ந்து ஒரே குழந்தையாய் உருப்பெற்றன எனவும், அதுகண்ட உமாதேவியார் உவப்போடு அக்குழந்தையை ”(ஸ்)கந்தனே!” என்று அழைத்ததாகவும் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன. கந்தன் என்ற பெயருக்கு ’ஒன்றாக இணைந்தவன்’ எனப் பொருள். கார்த்திகைப் பெண்டிரின் அரவணைப்பில் வளர்ந்தமையால் ‘கார்த்திகேயன்’ என்ற பெயராலும் அவன் அழைக்கப்படுகிறான்.

    தேவர்களுக்கும் அவுணர்களுக்கும் நடந்த போரில் தேவர்களின் சார்பாய்ப் போரிட்டு அவர்களைக் காக்கவே முருகனின் திருஅவதாரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. தேவர்களைக் காக்கப் பிறந்த முருகவேள் பின் மானிடரைக் காக்கும் கடவுளாயும் ஆனான். தமிழ்மக்களின் ‘உள்ளங்கவர் கள்வனான’ அவன், ’தமிழ்க் கடவுள்’ என்ற பெயரானும் குறிக்கப்படுகின்றான். அதனாலன்றோ மலைப் பகுதியைத் தம்மிடமாகக் கொண்ட குறிஞ்சி நிலமக்கள் இக்குமரக் கடவுளைக் குன்றுறை தெய்வமாக்கி அழகுபார்த்தனர்; தம் குலதெய்வமாகக் கொண்டாடினர்.

    இவ்வழகனை, குழகனைச் ’சேயோன்’ என்று விளிக்கின்ற தொல்காப்பியம்,
    ’சேயோன் மேய மைவரை உலகமும்’ (சிவனின் சேயான முருகனைத் தலைவனாகக் கொண்டது மலைநாடு) என்று அவனுடைய மலைநாட்டை வரையறை செய்கின்றது. குன்றுகள் தோறும் இக்குறிஞ்சிக் கோமானே குடிகொண்டிருப்பதை இன்றும் நாம் காணமுடியும்.

    பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக வைத்தெண்ணப்படுகின்ற ’திருமுருகாற்றுப்படை’ முருகனின் சிறப்புக்களையும், அவன் சூரரை வென்ற செய்திகளையும், அவனுடைய அறுபடை வீடுகளையும் விரிவாகப் பேசுகின்றது. இந்நூலில் முருகனின் ஆறுமுகங்களின் இயல்பை விளக்கவந்த நூலாசிரியர் நக்கீரர்,

    முருகனின் ஒருமுகம் பெருமைமிகு இவ்வுலகமானது இருளிலிருந்து விடுபட்டு விளக்கமுறும் வகையில் பல கிரணங்களையும் தோற்றுவித்தது (உலகிற்கு ஒளி தந்தது); ஒருமுகம் தன்மேல் அன்புகொண்ட அடியார்கள் துதிக்க, அதனால் மகிழ்வெய்தி அவர் வேண்டுவனவற்றையெல்லாம் காதலோடு (வரமாய்) அளித்தது; ஒருமுகம் வேதநெறி வழுவாத அந்தணர்கள் செய்யும் யாகங்களுக்குத் தீங்கு நேரலாகாது எனும் நினைவோடிருந்தது; ஒருமுகம் இதுவரை அறிந்துகொள்ள முடியாத வேதங்களிலும் நூல்களிலுமுள்ள நுட்பமான பொருள்களை ஆராய்ந்து முனிவர்களும் மகிழ்ந்து களிக்கும் வகையில் அவற்றை உணர்த்தித் திங்கள்போல் எல்லாத் திசைகளிலும் ஒளியை வழங்கிக் கொண்டிருந்தது; ஒருமுகம் அவுணர்கள்பால் கோபம் கொண்டுக் களவேள்வி வேட்டது (போரில் வெற்றிபெற்று இறந்த உடல்களைப் பேய்களுக்கு உணவாகக் கொடுப்பதே களவேள்வி); ஒரு முகம் குறவர் குலமகளாகிய இளமை பொருந்திய, வல்லிக்கொடி போன்ற இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியோடு பொருந்தியிருந்தது என்கிறார்.

    ”..மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
    பல்
    கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,
    ஆர்வலர்
    ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
    காதலின்
    உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்
    மந்திர
    விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர்
    வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்
    எஞ்சிய
    பொருள்களை ஏமுற நாடி,
    திங்கள்
    போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்
    செறுநர்த்
    தேய்த்துச் செல் சமம் முருக்கி,
    கறுவுகொள்
    நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம்
    குறவர்
    மட மகள், கொடி போல் நுசுப்பின்
    மடவரல்
    , வள்ளியொடு நகை அமர்ந்தன்றே…” (திருமுருகு: 91-102)

    இப்பாடல் வரிகளின் பிரதிபலிப்பை நாம் அருணகிரிநாதரின் ‘ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே’ பாடலில் கண்டு மகிழலாம்.

    அழகுக்கும் பேரறிவுக்கும் இலக்கணமாய்த் திகழ்கின்ற முருகப் பெருமான் தன் தந்தையும் ஒப்பற்ற பரம்பொருளுமான சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்து ’அப்பனுக்கே வேதம் சொன்ன சுப்பன்’ என்று அன்போடு பக்தர்களால் பாராட்டப்படுகின்றான்.

    அடியார்களின் துயர் களைந்து அவர்களை வாழ்விப்பவன் முருகன்; கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்க் கருதப்படுபவனும் அவனே என்பது அருளாளர்களின் நம்பிக்கை. ’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பர் பாமர மக்கள். இதே செய்தியையே ‘ஸ்வாமி என்றால் அது சுப்ரமணியரையே குறிக்கும் என்கிற ’அமரகோசமும்’ (இதுவோர் வடமொழி நிகண்டு) உறுதி செய்கின்றது.

    இப்படிப் பாமரர்கள் முதல் கல்வியில் கரைகண்ட பண்டிதர் ஈறாக அனைவரும் போற்றும் தெய்வம் உமை மைந்தனாகிய முருகவேளே! அவனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; அதுமட்டுமா? எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் அவன் அடியார்கள் (பதினாறு பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வர்) என்கிறது கந்தசஷ்டிக் கவசம்.

    அளவற்ற அருளாளனான அந்தக் கந்தன், ஊமைக் குழந்தையான குமரகுருபரனைப் பார்போற்றும் ஞானக் குழந்தையாய் மாற்றியவன்; உலகப் பற்றுக்களில் மிதமிஞ்சி ஈடுபட்டு ஒழுக்கத்தைத் தவறவிட்டு, தீராத நோயுற்று உயிரை மாய்த்துக்கொள்ளவிருந்த ஒரு மனிதனைப் பின்னாளில் எப்போதும் தன் திருப்புகழையே ஓதிக்கொண்டிருக்கும் ’அருணகிரிநாதராக்கியவன்’.

    கந்தனின் அருள்பெற்றுக் ’கந்தரனுபூதி’ எழுதிய அருணகிரியாரின் பொருள் நிறைந்த அழகிய பாடலொன்று நம் பார்வைக்கு:

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. (கந்தரனுபூதி)

    மனிதர்களாகிய நமக்கு குருவாகவும், கதியாகவும், நம் வாழ்விற்கு ஒளியாகவும் விளங்குகின்ற முருகனை, முத்துக் குமரனை, ஆறுருவும் ஓருருவான கந்தனை, இப்புவியில் அவன் அவதரித்த ஒப்பற்ற திருநாளாம் கார்த்திகை நிறைமதி நன்னாளில் மனமுவந்து வந்தனை செய்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்!

     

    Share