உத்தமன் பேர்பாடி
விம்மி விம்மி மெய்ம்மறந்து
மார்கழிப்பூ மலர்கின்ற காலம்!

மௌனமும் ஒலியும்
தத்தம் முரண் நிலைகளை மறந்து,
மெல்ல மெல்ல
ஒன்றில் மற்றொன்றாய் மயங்கிப் பரவ,
மோகமாய் முகிழ்த்தெழுந்த சுருதி,
சூழலை இலேசாய் உரசும் நேரம்!

அந்த உரசல்களில் உயிர்த்த சுவரங்கள்
ஒன்றோடொன்று கைகோத்து
மௌனத்தை வெட்டும் கணங்களில்
மூச்சிழந்த மௌனம்
முனகலாய் எழுகிறது!

‘ம்’ என்றே மௌனம்
மெல்லத் தன் நிலையுடைக்க,
சுவரங்கள் அந்த ஒலிக்குறிப்பைத்
தமதாய்ச் சுவீகரித்துக்கொள்கின்றன!

மௌனத்தின் கணங்களைக்
கரைக்கத் தொடங்கும் சுவரங்கள்,
வெவ்வேறு வரிசையில் அமைந்து,
கீழ்மேலாய்த் தங்களுக்குள்ளே
ஸ்தாயில் திரிந்தும்
கமகமாய்ப் பொடிந்தும்
காலங்களை அளந்துகொண்டிருக்க,
மௌனம் மெல்ல மெல்ல உறைந்து
ஸ்படிகமாகிச் சுவரங்களைப்
பிரிக்கும் புள்ளிகளாய்த்
தன்னைப் பிரித்துக் கொள்கிறது!

மௌனத்தை உடைத்தெழுந்த சுவரங்கள்,
மெல்லிய இழைகளாய்,
இராகங்களின் சாயலில்
இரகசியமாய்ப் பிரவேசிக்கின்றன!

இரகசியத்தை அம்பலப்படுத்தும்
தானம், மெல்லத் தன்நிலையெடுக்க,
வெற்று ஒலிக்குறிப்புகள்
எழுத்துகளாய் ஏற்றம் பெறுகின்றன!

அந்த ஏற்றத்தின் உச்சமாய்
பல்லவி பளிச்சிட,
சொல்லாற்றின் முதற்சொட்டு
சுழித்தெழுகிறது!

சொற்களின் வீரியத்தில்,
சுவரங்கள்,
தாங்கள் தோற்பதாய் நினைத்து,
எழுத்துக்களின் ஏற்றத் தாழ்விலெல்லாம்
தங்களை விதவிதமாய் நிரவி
தங்களின் நிலைப்பாட்டை
உறுதி செய்துகொள்கின்றன!

குரல் தன் கற்பனை வளத்தால்
சுவரங்களையும் வார்த்தைகளையும்
சுழற்றிச் சோதிக்கப்
பிரவாகமாய்ச் சங்கதிகள்!

அந்தச் சங்கதிப் பிரவாகத்தின்
சௌந்தர்ய அலைகளில்,
திக்குமுக்காடித் தன்னிலை மறந்து,
தவழ்ந்தோடும் இலையாய்,
ஒரு ரசிகனின் பயணம்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க