அமெரிக்கக் கருப்பர்களுக்குச் சமஉரிமைகள் எப்போது?
—நாகேஸ்வரி அண்ணாமலை
கொலம்பஸ் ‘புது உலகத்தைக்’ (New World) கண்டுபிடித்த பிறகு நிறைய ஐரோப்பியர்கள் அமெரிக்கா கண்டம் முழுவதிலும் குடியேறினர். அங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர். பெரிய நிலப்பரப்புடைய கண்டத்தில் உழைப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களை அவர்கள் சம்மதமில்லாமலேயே புது உலகத்திற்குச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்களுக்குப் பழக்கமே இல்லாத புது இடத்தில் புது சீதோஷ்ண நிலையில் அவர்களின் உழைப்பை உறிஞ்சினர். வெள்ளை அமெரிக்கர்கள் அவர்களை மனிதர்கள் போல் நடத்தவில்லை. தங்களுடைய சொத்துக்களான மாடுகள், குதிரைகள் போல் நடத்தினர். குடும்பங்களைப் பிரித்தனர். தாய் கதறக் கதற குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்தனர். பெண்களைத் தங்கள் இச்சைக்கு உள்ளாக்கினர். ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக 1619-லிருந்து கொண்டுவரப்பட்டதிலிருந்து தொடர்ந்த இந்த அநியாயம் லிங்கன் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவரை தொடர்ந்தது.
அதன் பிறகும் அவர்களை நிம்மதியாக வாழவிட்டார்களா? பல கருப்பர்கள் வெள்ளையர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களைப் பயமுறுத்திவைப்பதற்காக அவர்களைத் தூக்கில் தொங்கவிட்டனர்; உயிரோடு எரித்தனர். அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. வெள்ளையர்களுக்குச் சமமான குடிமையுரிமைகள் இல்லை. இவற்றைப் பெறுவதற்கு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைத்த பிறகு நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. குடிமையுரிமையும் ஓட்டுரிமையும் கிடைத்தாலும் அவர்கள் இன்னும் இரண்டாம்தரக் குடிமக்கள் போல்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் கருப்பின மக்களை எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் சுட்டுக் கொல்வதிலும் அந்தக் குற்றங்களுக்கு அவர்களை விசாரணைக்கு உள்ளாக்க வேண்டிய ஜூரர்கள் அவர்கள் விசாரணைக்கு உட்பட வேண்டியவர்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்குவதிலும் புலனாகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் நியுயார்க் நகரில் மட்டும் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு கருப்பர்கள் காவல்துறையைச் சேர்ந்த வெள்ளை அதிகாரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்த வருடம் ஜூலையில் நியூயார்க்கில் நடந்த பல வெள்ளை இனக் காவல்துறை அதிகாரிகளால் அமுக்கப்பட்டு கருப்பர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும், ஆகஸ்டில் மிஸௌரி மாநில ஃபெர்குஸன் என்னும் ஊரில் நடந்த வெள்ளை இனக் காவல் அதிகாரியால் அநியாயமாகச் சுடப்பட்டு இறந்த சம்பவமும் சிறு தவறு செய்த கருப்பின மக்களுக்கு வெள்ளைக் காவல் அதிகாரிகளால் எப்படிப்பட்ட ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் அவர்கள் எவ்வளவு எளிதாக, சட்டத்தை மதித்து நடக்கும் அமெரிக்காவில் சட்டத்தின் பிடியிலிருந்து சட்டத்தைக் காப்பவர்களின் உதவியாலேயே தப்பித்துவிடுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்று நிரூபிக்கும் வகையில் சமூகத்தின் பெரிய புள்ளிகளைக் கூடத் தண்டிக்கும் அமெரிக்கக் காவல்துறையும் நீதிமன்றமும் வெள்ளை-கருப்பின மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெள்ளை இனக் காவல்துறை அதிகாரிகளுக்குச் சாதகமாகவும் கருப்பின மக்களுக்கு நியாயமில்லாமலும் நடந்துகொள்கின்றன.
ஃபெர்குஸனில் ஒரு கடையில் பதினெட்டு வயதுள்ள ஒரு கருப்பின இளைஞன் – அவன் பெயர் மைக்கேல் பிரௌன் – ஒரு சாக்கலேட்டை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் போயிருக்கிறான். கடைக்காரர் அவனை நிறுத்தியும் பேசாமல் தொடர்ந்து வெளியே சென்றிருக்கிறான். கடைக்காரர் காவல்துறையைக் கூப்பிட்டிருக்கிறார். துறை கொடுத்த தகவலின் பேரில் அவ்வழியே காரில் சென்ற காவலர் சாலையின் நடுவே நடந்துகொண்டிருந்த பிரௌனோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பிரௌன் தன்னைத் தாக்க வந்ததாகவும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிரௌனைச் சுட்டதாகவும் காவல் அதிகாரி வில்சன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் புரிந்த குற்றம் விசாரணைக்கு உரியதா என்று முடிவுசெய்ய ஒரு கிராண்ட் ஜூரியை (Grand Jury) அமெரிக்காவில் முதலில் நியமிக்கிறார்கள். வில்சன் பற்றிய வழக்கில் பன்னிரெண்டு ஜூரர்கள் – ஒன்பது பேர் வெள்ளையர்கள், மூன்று பேர் கருப்பர்கள் – வில்சன் மீது விசாரணை நடத்துமளவிற்கு அவர் குற்றம் புரியவில்லை என்று தீர்ப்புக் கொடுத்தார்கள். பகலில் முடிவான இந்தத் தீர்ப்பை, கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால், இரவு எட்டு மணிக்குத்தான் சட்ட அதிகாரி அறிவித்தார். அப்படியும் கலவரங்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
ஜூரி விசாரணையில் வில்சன் கூறியதை ஜூரிகள் அப்படியே எடுத்துக்கொண்டனர். பிராசிக்கூட்டரின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர். அவர் வேலையில் சுடப்பட்டு இறந்ததால் அதன் தாக்கம் இந்த வழக்கில் அவருக்கு இருக்கலாம் என்பதால் அவரை இந்த வழக்கிலிருந்து விலகிவிடுமாறு பிரௌனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டாலும், அவர் அப்படிச் செய்யவில்லை. குற்றம் காணும் பொறுப்பை ஜூரர்களிடம் விட்டுவிட்டார். நேரில் கண்ட சாட்சிகள் சொன்னவற்றில் வில்சன் சொன்னவற்றுக்கு ஏற்றவாறு இருந்ததை எடுத்துக்கொண்டு அதற்கு நேர்மாறானவற்றை ஜூரர்கள் ஒதுக்கிவிட்டார்களாம். வில்சன் கைகளைத் தூக்கிகொண்டு சரண் அடையப்போன பிரௌனைச் சுட்டிருக்கக் கூடாது என்று ஒரு பரவலான அபிப்பிராயம் இருக்கிறது. டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘நான் என் கைகளைத் தூக்கியிருக்கிறேன். என்னைச் சுட்டுவிடாதே’ என்று வாசகங்கள் எழுதுகிறார்கள். நாடு முழுவதும் கிராண்ட் ஜூரியின் முடிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன.
நியு யார்க் நகரில் எரிக் கார்னர் என்னும் ஒரு கருப்பர் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஒரு வெள்ளை இனக் காவல்துறை அதிகாரியும் ஜூரிகளால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதை எதிர்த்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் பதினெட்டு வயதை அடைந்தவர்களுக்கு அவர்களின் வயதுச் சான்றைப் பார்த்துவிட்டுத்தான் சிகரெட் விற்க வேண்டும். இந்த விதியை மீறி ஒரு கடைக்கு முன்னால் சில்லறையாக சிகரெட் விற்றுக்கொண்டிருந்த கார்னரை காவல்துறையைச் சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் கார்னரின் கழுத்தில் கைகளைப் போட்டு முறுக்கியிருக்கிறார். பலர் தாக்கியதால் கார்னர் கீழே விழுந்திருக்கிறார். அப்படியும் அவர்கள் தொடர்ந்து அவரைத் தாக்கியிருக்கிறார்கள். அவர் கழுத்தில் கைகளைப் போட்டு அவர் இறப்பிற்குக் காரணமாக இருந்த அதிகாரி, விசாரிக்கும் அளவிற்குத் தவறு செய்யவில்லை என்று ஜூரி முடிவுசெய்திருக்கிறது.
இன்னொரு சம்பவத்தில் பன்னிரண்டு வயது கருப்பினப் பையன் ஒரு காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். பையன் தன்னுடைய கையில் விளையாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தானாம். அதை பார்த்த காவலர் அது நிஜத் துப்பாக்கி என்று நினைத்துவிட்டதாகவும் அவன் தன்னைச் சுட்டுவிடலாம் என்று நினைத்து அவனைச் சுட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தான் பதினைந்து வயதாக இருந்தபோது வெள்ளை இன காவலர்கள் தான் செய்த ஒரு சிறு தவறுக்கு எப்படி மிருகத்தனமாக தன்னை நடத்தினார்கள் என்பதையும் அதன் பிறகு வளர்ந்து பெரியவனானதும் தான் காவல்துறையில் சேர்ந்தது பற்றியும் விவரித்து ஒரு கருப்பர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். காவல்துறையில் சேர்ந்த பிறகு காவல்துறையினர் எப்படி மிருகத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பது அவருக்கு நன்றாகப் புரிந்ததாம். அவருடைய சக வெள்ளை அதிகாரி ஒருவர் ‘யாராவது ஒரு வெள்ளையர் துப்பாக்கியுடன் இருப்பதைப் பார்த்தால் என்னுடைய பாதுகாப்போடு அவருடைய பாதுகாப்பையும் மனதில் கொண்டு செயல்படுவேன். அதே சமயம் ஒரு கருப்பர் துப்பாக்கியோடு வந்தால் என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளுவது என்பதைத்தான் நினைப்பேன்’ என்றாராம். இப்போது புரிகிறது ஏன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கருப்பர்கள் என்பது. சிறு சந்தேகம் வந்தாலும் உடனேயே கருப்பர்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள் வெள்ளை இன காவல்துறை அதிகாரிகள்.
எல்லாச் சம்பவங்களிலும் சுடப்பட்டவர்கள் வெள்ளையர்களாக இருந்தால் இம்மாதிரி நடந்திருக்காது. என்று கூறுகிறார்கள். வெள்ளை இன இளைஞர்கள் காவலர்களினால் சுட்டுக் கொல்லப்படுவதைவிட இருபத்தியொரு மடங்கு அதிகமாகக் கருப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்களாம். பிரௌன் விஷயத்திலாவது சாட்சியங்கள் சொல்வதில் முரண்பாடு இருக்கிறது. ஆனால் கார்னரின் விஷயத்தில் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னுடைய செல் போனில் எடுத்த போட்டோக்களில் காவலர்கள் கார்னரைக் கழுத்தை வளைத்துக் கீழே தள்ளி மூச்சுத் திணற வைத்த விதம் பதிவாகியிருக்கிறது. அப்படியும் காவல்துறை அதிகாரி மீது விசாரணை தேவையில்லை என்று ஜூரி முடிவுசெய்திருக்கிறது.
வெள்ளை அமெரிக்கர்களுக்கும் கருப்பு அமெரிக்கர்களுக்கும் இடையே செல்வத்தில் உள்ள இடைவெளி, படிப்பறிவில் உள்ள இடைவெளி, வேலைவாய்ப்பில் உள்ள இடைவெளி ஆகியவை மறைந்தாலொழிய கருப்பு அமெரிக்கர்கள் வெள்ளை அமெரிக்கர்களுக்கு சமமாக நடத்தப்படும் வாய்ப்பு ஏற்படும் சாத்தியம் இல்லை என்கிறார்கள் பத்திரிக்கையில் பத்தி எழுதுபவர்கள். ஜனாதிபதி ஒபாமா ‘அமெரிக்காவில் சட்டத்திற்கு முன் யாராவது சமமாக நடத்தப்படவில்லை என்றால் அது ஒரு நாட்டின் பிரச்சினை. ஜனாதிபதி என்ற முறையில் அதைச் சரிசெய்வது என் கடமை’ என்று கூறியிருக்கிறார். காவலர்களுக்குப் புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும், அவர்கள் உடையிலேயே காமராக்களைப் பொருத்த வேண்டும் போன்ற யோசனைகளை ஒபாமா கூறியிருக்கிறார். இதற்கு மேல் அவர் என்ன செய்யப் போகிறார், அவரைச் செய்யவிடுவார்களா, என்றாவது ஒரு நாள் அமெரிக்கக் கருப்பர்களுக்கு வெள்ளை அமெரிக்களுக்குச் சமமான உரிமைகள் தரப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படம் உதவி:
http://www.desertsun.com/story/news/2014/11/18/data-blacks-likely-arrested/19257947/
http://www.nydailynews.com/new-york/eric-garner-grand-jury-evidence-public-thursday-article-1.2033065