கவிஞர் காவிரிமனிதன்.

hqdefault

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா! பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையல்லவா என்பார் கவியரசு கண்ணதாசன். இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதைவிட சிறப்பேது? வலது கை கொடுப்பது தன் இடது கை அறியாது என வாழ்ந்த கர்ண பரம்பரைகளும் இங்கு உண்டு. அன்னதானம் செய்வது ஆலயம் தொழுவதிலும் சால நன்று! அதனினும் எழுத்தறிவித்தல் மேலும் உயர்ந்தது.

கல்விச் செல்வம் ஒரு மனிதனை தன்னம்பிக்கை உடையவனாக தன்னைச் சார்ந்தோரையும் வாழவைக்கும் வல்லமை தருகிறது. தன்னிடம் உள்ளதை பிறருக்கும் கொடுத்து மகிழ்விக்கும் பாங்கு எத்தனை பேருக்கு வாய்க்கும்? பெற்றவன் பெறுவது பேரின்பம்.. ஆயினும் அதைக் கொடுத்தவன் கொள்வது பேரானந்தம்! மற்றவர்க்கு தருகின்ற அளவில் நம்மை வைக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம்!

தனக்கென வாழ்வது மட்டுமின்றி பிறருக்காகவும் வாழுகின்ற வாழ்க்கையே அர்த்தமிக்கது. பொதுநலம் நாடுகின்ற உள்ளம் பூந்தோட்டம் போல் பொலிவுடன் விளங்கும். சுயநலம் என்கிற இருளில் வாழும் மனிதன் இவ்வுலக வாழ்வின் இன்பத்தையே இழக்கிறான். மனிதன் தோன்றி நாகரீகம் நோக்கி நடக்கத் தொடங்கிய நாள் முதல் இன்றும் பிறர்நலம் பேணும் மனிதர்களைத்தான் மா மனிதர்கள் என்கிறோம்!

எத்தனையோ வரிகளில் சொல்லப்பட்டாலும் நிறைவுறாத என்னரும் கருத்துக்களை தன் ஒற்றைப்பாடலில் உணர்த்தியிருக்கும் கவிஞர் வாலியின் கைவண்ணம் காணலாம்! ‘பாபு’ திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் .. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.. திரையிலோ நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சின்னஞ்சிறு குழந்தை நட்சத்திரமாய் ஸ்ரீதேவியும் நம் நெஞ்சில் நிறைந்த பாடலிது!

http://www.youtube.com/watch?v=Qd5TfWmm1CA
காணொளி: http://www.youtube.com/watch?v=Qd5TfWmm1CA

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
பாடல் – வாலி
படம் – பாபு
இயக்குனர் – ஏ சி. திருலோகச்சந்தர்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் – டி.எம்.சௌந்தரராஜன்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

msv vaaliACTtm-soundararajan-50-600

கட்டுரைக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம் என்பதையும் சுட்டிக்காட்டும் பொருள் நிறைந்த பாடலிது! நம் மனதினில் பதிந்திட்ட பாடல்! சாத்வீக குணங்களுடன் ஒரு சராசரி மனிதன் வாழும்போது அவன்மூலமும் தெய்வாம்சங்கள் கூடிவருகின்ற தரிசனம் காணலாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *