சு. ரவி

 

bharathy

கவிதை எழுத வேண்டும்- இன்றொரு
கவிதை எழுத வேண்டும்
கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு
கவிதை எழுதவேண்டும்
காகிதம் இல்லை, கற்பனை இல்லை
கைகளில் எழுதக் கோலெதும் இல்லை
மேகப் பரப்பில் மிதக்கும் நிலவின்
சீதக் கிரண விரல்களினாலொரு
கவிதை எழுத வேண்டும்!

உள்ளும் புறமும் ஓய்வில்லாமல்
கனல் வளர்த்தானே, கவிதை நெய்தானே
தெள்ளுதமிழ்க்குயிர் துள்ளித் துளிர்க்க
தென்திசைப் புயலாய்த் திமிர்ந்தெழுந்தானே
காற்றைப் பிடித்துக் கார்முகில் பரப்பில்
கவிதை எழுத வேண்டும்!

எல்லா உயிரும் தன்னுயிர் என்றே
எக்களித்தானே விடுதலைக்காகச்
சொல்லால் , செயலால் சோர்வில்லாமல்
சூறாவளியாய்ச் சுழன்றடித்தானே!

அலைகடற் பரப்பில் அவனுக்கென்றொரு
கவிதை எழுத வேண்டும்

கவலைகள் தின்னும் கணங்களில் கூடக்
கண்ணனைக் காளியைக் காதலித்தானே
தவமாய்க் கவிதைத் தீவளர்த்ததிலே
தன்னையே ஆகுதி தான் கொடுத்தானே

நெஞ்சத் திடலில் கோயிலெடுத்து
நில்லாது பெருகும் கண்ணீரால் ஒரு
கவிதை எழுதி வந்தேன்..இன்றொரு
கவிதை எழுதி வந்தேன்!
கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு
கவிதை எழுதி வந்தேன்!
சு.ரவி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க