பவள சங்கரி

ஷெல்லிதாசனின் பரவுபுகழ்!

abha

பாரதமும், பா- ரதமும் பாங்காய்
பாரதியின் பாசத்தால் இணைந்தது
மாதவமாய் மண்ணில் உதித்த
மாதவனின் எண்ணமெல்லாம் பண்ணானது
மங்கையரின் நலம்நாடும் சொல்லானது
எல்லோரும் ஓர்குலம் ஓரினமெனும்
மாமந்திரச் சுடரானது! இனிய
புன்முறுவல் இலங்கு திருநிறைந்தனை !

பாரினில் உண்டோ நம்பாரதம் போல
மற்றுமொரு தேசமென மார்தட்டி
மங்கையரெல்லாம் மதிநலம் பொங்க
கங்கையாய், காவிரியாய் பொங்கி
காவியமாய் கருணைசூழ் காளியாய்
நாளும் செய்தவமாய் நலம்சூழ்
நானிலம் போற்றும் நாமகளாய்
வெல்லுஞானம் விஞ்சி நிற்கும்.

பாகுமொழிப் புலவரெலாம் ஒன்றுகூடி
கோடியர்ச்சனை பொழிந்துனை வாழ்த்தியே
செய்வதனைத்தும் தவமாய் தத்துவமாய்
செப்புமொழியனைத்தும் தீந்தமிழ் திண்மையாய்
ஏழுலகாளும் வன்னமாய் நித்தஞ்சீருறுவார்
பொற்குவையும் உயர்போகமும் பெறுவார்
இன்னிசையாம் இன்பக்கடலில் மூழ்கி
தீஞ்சொற் களமேறி தேஞ்சொரி மலராய்
கவிமழையைப் பொழிந்து நாளும்
புவியதன் மீதில் களிப்புறுவார்.

புன்மையிருட்கணம் நீங்கி இன்னொளியெங்கும்
அறிவுச்சுடராய் பரவியே விழிதுயில்
மலர்ந்தெங்கும் பல்கிய பரவசமாய்
சொல்லறு மாண்புகள் சுவையமுதாய்
கனிவுறு மலராய் பெருந்தவப் பயனாய்
கண்ணொத்த பேரொளி இதிகாசங்கள்
பாரெங்கும் பரவி புண்ணொத்த புரைநீங்கி
காலங்கொன்ற விருந்து காணவே.

முற்றிய அறிவின் முடியில் முழங்கும்
மூதறிஞர் நன்னெஞ்சகப் பிடியில் மின்னும்
பரவுபுகழ் புவியெலாம் ஷெல்லிதாசனின்
கவிநயமும் தேசப்பற்றும் மனிதாபிமானமும்!
கனி வளமும், கனிம வளமும் நித்தமும்
கணக்கின்றித் தருநாடு! நம் இந்தியத் திருநாடு!
புவியோர் வியக்குவண்ணம் வளர்திருநாடு!
ஆம்! வாழ்க, வாழ்க நம் பாரத மணித்திருநாடு!!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஷெல்லிதாசனின் பரவுபுகழ்!

 1. தமிழ்த் திருநாடுதனைப் பெற்ற – எங்கள்
  தாயென்று கும்பிடடி பாப்பா

  என்று முதன்முதல் தமிழ் நாட்டைத் தாய்நாடு என்று வணங்கி வந்தே மாதரம் பாடிய முன்னோடிக் கவிஞன் பாரதி.  

  வாழ்க பாரத மணித் திருநாடு என்றும் முதலில் முழக்கிய கவிஞனும் அவனே.

  பாரதிக்குப் புகழாரம் சூட்டிய பவளாவுக்கு எனது பாராட்டு.

  சி. ஜெயபாரதன். 

 2. நல்ல கவிதை, பவளா அவர்களே! பாரதியின் பாடல்கள் அனைத்தும் உணர்ச்சிப்பெருக்கு உள்ளவை. அவனுக்கு எத்தனை புகழாரம் சூட்டினாலும் தகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *