-எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

காலையிலே எழுந்தவுடன்
கண்ணெதிரே கண்டேன்
கவலை இன்றிப் பூத்திருக்கும்
கட்டழகு ரோஜா!

வேலைசெய்ய விருப்பமின்றி              roses
சோம்பலிலே கிடந்தேன்
விருட்டென்று கேட்டதுமே
வெலவெலத்துப் போனேன்!

யாருக்காய்ப் பூக்கின்றோம்
என்று தெரியாது
பூக்கின்றோம் பூக்கின்றோம்
பூத்தபடி நிற்போம்!

பூப்பதிலே சோம்பலின்றி
பூத்தபடி இருப்போம்
பூப்பார்த்த வுடனேயே
பூரிப்பைக் கொடுப்போம்!

சோம்பல் வந்துவிட்டதெனச்
சோர்ந்துவிட மாட்டோம்
சுறுசுறுப்பாய் இருந்தபடி
சுகம்கொடுத்து நிற்போம்!

சாந்தம் எங்கள்போக்குவெனச்
சகலருக்கும் தெரியும்
சந்தோஷம் கொடுப்பதுவே
எங்கள் குணமாகும்!

மற்றவர் மகிழ்ச்சியுற
மகிழ்ந்து நாம்நிற்போம்
மற்றவர் மனமுடைய
வாழ்நாளில் நினையோம்!

சோம்பலுற்று வாழ்வினிலே
சோர்ந்துவிட மாட்டோம்
சொர்க்கத்தைக் காட்டுவதே
சுகமென்று நினப்போம்!

விழுகின்ற மலர்பார்த்து
விழுதழுதல் மாட்டோம்
விழுவது எழுவதற்கென
விழித்தெழிந்து நிற்போம்!

அழுகின்ற தொழிலைநாம்
அழித்துமே விட்டோம்
ஆனதால் என்றென்றும்
அழகினையே தருவோம்!

பறிப்பாரின் கையினைப்
பக்குவமாய்ப் பார்ப்போம்
பறித்தவர்கள் எம்மழகைப்
பார்த்தபடி நிற்பர்!

குறித்தமலர் அழகையவர்
குதூகலத்தால் ரசிப்பர்
கொண்ட்டாட்டம் வந்துவிட்டால்
கொண்டையிலும் வைப்பர்!

ஆண்டவனின் அருகினலே
அடைக்கலமும் ஆவோம்
ஆவேசக் கைகளிலே
அசிங்கமும் படுவோம்!

ஆனாலும் ஆத்திரத்தை
அடக்கியே வைப்போம்
ஆதலால் என்றுமே
அழகாக இருப்போம்!

மலர் சொன்னவார்த்தையால்
மலைத்துமே விட்டேன்
நிலைகுலையா நானும்
நிலைகுலைந்து விட்டேன்!

அழகான மலர்சொன்ன
அத்தனையும் கேட்டேன்
அவைசொன்ன அத்தனையும்
அமுதமொழி அன்றோ!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமுத மொழி அன்றோ !

  1. நீண்டதொரு இடைவெளிக்குப் பின் நெஞ்சம்தொடும் கவிதைமலர் தீட்டக் கண்டேன்!  நெடுங்கனவுதான் கலைந்து எழுகின்ற விதம்போல நேற்றுவரை பல பணிகள் எனும் கனத்தால், இதுபோன்ற கவிச்சோலைக்குள் கைவீசி நடைபோட வழியேதுமில்லாமல் இருந்ததம்மா!!  
     
    எழுதுகின்ற கவிதையதன் உட்பொருளில் உயிரோட்டம்.. ஒருபொழுதும் மங்காமல் எழுதுகின்ற ஜெயராமசர்மா.. மறுபடியும் மலர் ஒன்றை மையமிட்டு.. எழுதுகோலின் மையெடுத்து உழுதபோது.. உண்மை பல வெளிவந்ததோ? அழகுமலர் தன்வரையில் சொல்லியதெல்லாம் ஆறறிவு படைத்த மனிதருக்கு அறிவுரையோ?  முழுமையாக அவ்வழியே ஓடிய நின் கவித்திறத்தால்.. மலர்பேசும் மந்திரங்கள் மனிதருக்காக..  அதிலே எனை ஈர்த்த வரிகள் இவையென்றால் மாற்றமேது?
     
    விழுகின்ற மலர்பார்த்து
    விழுதழுதல் மாட்டோம்
    விழுவது எழுவதற்கென
    விழித்தெழிந்து நிற்போம்

    கிட்டிய நல்வாய்ப்பாய் கவிதை இன்பம்..

    தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
    கற்றனைத்து ஊறும் அறிவு.

    உம் கவிதை ஒவ்வொன்றும் தொட்டு அணைத்து அதனால் ஊறும் எந்தன் மணற்கேணி.. கற்று அதன்மூலம் பாடும் என் கவித்திறனே அறிவு!!
    அன்புடன்..
    காவிரிமைந்தன்

  2. அன்றலர்ந்த மலரின் அமுதமொழிள்

    நன்றினும் நன்று நன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *