டிசம்பர் 8, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு சமூகசேவகி அனுராதா கொய்ராலா அவர்கள் 

 

Anuradha Koirala

 

சென்ற மாதம் (நவம்பர்) “2014 ஆம் ஆண்டின் சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு உலகவிருது” (The Mother Teresa Memorial International Award for Social Justice 2014) வழக்கப்பட்டோரில் நேப்பாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா(Anuradha Koirala) வும் ஒருவர். கடந்த இருபதாண்டுகளில் நேப்பாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட 12,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அனுராதா கொய்ராலா. இவரை இவ்வார வல்லமையாளராகத் அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியியல், இலக்கிய எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள்.

அறுபத்தைந்து அகவையை எட்டிய அனுராதா கொய்ராலா தனது இளமையில் வன்முறைகள் நிறைந்த மணவாழ்க்கையில் சிக்குண்டு துன்புற்று இறுதியாக அந்த வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக்  கொண்டவர். தன்னைப் போன்றே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து உதவ முடிவு செய்தவர். இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பற்ற நிலையில் வாழும் நேப்பாள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வன்முறைகள் நிகழும் குடும்ப சூழ்நிலையில் இருந்து அடைக்கலம் தரும் தற்காலிகப் புகலிடம் ஒன்றினை வழங்குவது இவரது முதல் நோக்கம். அதற்காக நேப்பாளத்தின் காட்மண்ட நகரில் அரசு சாரா மறுவாழ்வு மையமாக “மைத்தி நேபாள்” (Maiti Nepal)  என்ற அமைப்பை நிறுவினார். மைத்தி என்றால் நேப்பாள மொழியில் “தாய்வீடு” என்பது பொருள். திக்கற்றபெண்களுக்கு  உதவம் மையமாக வளர்ந்தது மைத்தி.

Anuradha Koirala3  Anuradha Koirala4

அடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பதின்மவயது சிறுமிகளும், இளம்பெண்களும் பணிவாய்ப்புகள் தருவதாகக் ஆசைகாட்டப்பட்டு, பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இந்தியாவிற்குக் கடத்தப்படுவதை அறிந்து மனிதர்களைக் கடத்துதும் இந்தத் தொழிலை முறியடிக்க முனைந்தார். காவல்துறையின் உதவியுடன் பாலியல் தொழிற்கூடங்களில் இருந்து பெண்கள் அதிரடியுடன் மீட்கப்பட்டு மைத்தி அமைப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்திய நேப்பாள எல்லையில் குடிமக்கள் மற்றும் காவல்துறையின்  உதவியுடன் எல்லை கண்காணித்தலிலும் மைத்தி தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மீட்கப்படும் பெண்களை பெற்றோருடனும் குடும்பத்துடனும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை பெரும்பாலும் அவர்கள் குடும்பமே நிராகரிக்கும் பொழுது கதியற்று மனமுடைந்த நிலையினை அடையும் பெண்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடனும், கர்ப்பிணிகளாகவும் இருக்கும்பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழில் காரணமாக எயிட்ஸ் நோயாலும் தாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழகப்படுகிறது. பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்காக கைத்தொழிலும் கல்வியும் வழங்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்களுக்காக சட்ட ஆலோசனையும், சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையிலும் உதவிகள் புரிந்து, தொழிலும், கல்வியும், மன ஆறுதலும் பெற்று வாழ்வதற்கு உதவும் மைத்தி அதன் பெயருக்கு ஏற்றார்போல, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாய்வீடாகவே அமைகிறது .

அனுராதா கொய்ராலாவின் தொண்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததால் சி. என். என். செய்தி நிறுவனத்தின் 2010 ஆண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அனுராதா கொய்ராலா பரிந்துரைக்கப்பட்டார். சி. என். என். செய்தி நிறுவனம் இவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்து பாராட்டி 25,000 பரிசு வழங்கிய பொழுது இவரது சேவை நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சமூகப்பணிக்காக மேலும் நிதி உதவிகள் பல இடங்களில் இருந்தும், அமெரிக்க அரசிடம் இருந்து அரை மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவராற்றும் நற்பணிகள் தொடர்ந்து பாராட்டப்பட்டும் வருகின்றன. சி. என். என். வழங்கிய புகழ் பெற்ற விருது போன்றே இதுநாள் வரை முப்பதிற்கும் மேற்பட்ட அகிலஉலக அளவில் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றவர் அனுராதா கொய்ராலா. ஜெர்மனி 2007 ஆண்டு வழங்கிய யூனிஃபெம் விருது (German UNIFEM Prize 2007), அரசி சோபியாவின் 2007 ஆம் ஆண்டிற்கான வெள்ளி விருது (Queen Sofia Silver Medal Award 2007) மற்றும் பீஸ் ஆபி வழங்கும் சமாதனப் பரிசும் (The Peace Abbey, Courage of Conscience 2006) அவற்றில் குறிப்பிடத்தக்கன.

சென்றமாதம் நல்லிணக்கம் சேவை மையம் (The Harmony Foundation ) தனது ஏழாமாண்டுசமூக நீதி பரிசு விழாவை நடத்தியது. நல்லிணக்கம் சேவை மையம் உலகளாவிய சமூகநீதி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அரசுசாரா சேவை அமைப்பு. சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டு அதனை ஒட்டிய விழாவும் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா துவக்கிய சேவை மையம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்த ஒரே விருது என்பது இதன் சிறப்பு.

Anuradha Koirala1

விருதினைப் பெற்றுக் கொண்ட அனுராதா கொய்ராலா தனக்கு சமுதாயத் தொண்டில் பற்றுதல் ஏற்பட அன்னை தெரசாவின் பணிகள் முன்மாதிரியாக அமைந்தது என்றும் எனவே அவர் நினைவாக வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமை மிகக் கொள்வதாகவும் கூறினார். உடன்வாழும் மனிதர்களின் துயர்களை உணர்ந்து இரங்கி உதவும் வகையில் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனுராதா கொய்ராலா கூறினார். இவர் அன்னை தெரசாவின் பெயர் தாங்கிய அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்ற மாதம் இந்தியா டுடே நடத்திய பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்ட அனுராதா கொய்ராலா கூறிய பெண்ணின முன்னேற்றக் கருத்துரைகள் சிந்தித்து செயலப்டுத்தப்பட வேண்டியவை.

Anuradha Koirala2பெண்கள் தங்கள் துயர் துடைக்க அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காது தாங்களே தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேறுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. நாம் கைவிடப்பட்டவர்கள் என்று தன்னிரக்கம் கொள்ளும் எண்ணம் பெண்களால் கைவிடப்படவேண்டிய ஒன்று. பெண் ஆட்சியாளர்களும் பெண்கள் நலனை சீர்குலைக்கும் செயல்களை தடுத்து, இதுவரை பெண்களுக்கு உதவும் சரியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பெண்கல்விக்கு எதிரான நடவடிக்கைகள் தடுத்து தண்டிக்கப்பட வேண்டும். வரதட்சினை கொடுமையே நேப்பாள பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்குக் காரணம். பெண்களுக்காக ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் 33% ஒதுக்கீட்டிலேயே பெண்கள் மனநிறைவு கொள்ளக்கூடாது. பெண்களுக்கான ஒதுக்கீடு ஐம்பது விழுக்காடாகவோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வண்டும். இந்த இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏன் ஆண்களுக்கு நடைமுறையில் இல்லை? பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நிலையில் பெண்கள் வாழ்க்கை அமைவது சரியான நிலையல்ல.

பெண்களுக்காகன சமூகப்போராளியாகவும் சமூக சேவகியாகவும் கடமையாற்றி வரும் அனுராதா கொய்ராலாவை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமையின் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

தகவல் தந்து உதவிய தளங்கள்:
Mother Teresa Award conferred on Koirala
http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Mother+Teresa+Award+conferred+on+Koirala+&NewsID=433154

Mother Teresa Memorial International Award for Social Justice held on Sunday
http://www.dnaindia.com/mumbai/report-mother-teresa-memorial-international-award-for-social-justice-held-on-sunday-2033914

Mother Teresa global awards for Anuradha Koirala, Amte
http://www.firstpost.com/fwire/mother-teresa-global-awards-for-anuradha-koirala-amte-1795003.html

Nepal actor and Everest climber at India Today Global Roundtable: No gender bias in Mother Nature
Women should ask for 50 per cent reservation: Anuradha Koirala
http://indiatoday.intoday.in/story/india-today-global-roundtable–no-gender-bias-hina-rabbani-khar-anuradha-koirala-meenakshi-lekhi/1/403699.html

Anuradha Koirala
http://en.wikipedia.org/wiki/Anuradha_Koirala
http://ta.wikipedia.org/s/n13

Maiti Nepal

Home


http://en.wikipedia.org/wiki/Maiti_Nepal
http://ta.wikipedia.org/s/o5e

Picture:
http://www.omfood.kr/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

 1. தேடினால் பெரும் செல்வம்…  என்று திரவியம் தேடுகின்றோம்…

  வாழ்வதற்கு பொருள் வேண்டும் என்று சொல்லி ….

  வாழ்வதன் பொருள் மறந்து விடுகிறோம்…..

  வாழ்வதில் அர்த்தம் வேண்டும்.. இவ்வையகம் நலமுற வேண்டும் 

  என்னாலே முடிந்ததெல்லாம் செய்தே தீரவேண்டும் என்று…

  தன்னளவில் தான் முனைந்து பெண்குலத்தை பேணி நிற்கும் 

  வல்லமைமிகு சமூகசேவகி அனுராதா கொய்ராலா அவர்களுக்கு 

  நெஞ்சமெலாம் பொங்கிவரும் நன்றிகளைக் காணிக்கையாக்கி..

  வல்லமைக்கும்..  தேர்வுக் குழுவிற்கும்..  பரிந்துரைத்த மனதிற்கும்..

  பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.