Blog

  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சரஸ்வதி இராசேந்திரன்

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன்  கருவிலேயே திருவுடைய  ஒரு பிறவிக் கவிஞன். பல கோணப்பாடகன். அவர் வெறும் கவிகளில் மட்டும் அழகொழுகப் பாடிப்போகவில்லை,  அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே சான்றாக்கித் தந்திருக்கிறார். பாமரனும் அறிந்து, புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக  பாடல்களை தந்தவர்.  தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனி இடத்தை பெற்றவர்.  இயற்கைப் பொருள்களை சுவைத்து  இயற்கையை இயல்பிற் பாடிய அவர் ஒரு இயற்கை கவிஎனலாம்   ( உதாரணம் ;  இது ஒரு பொன்மாலைப்பொழுது )    தெய்வ அருள் பெற்றுப் பாடிய தெய்வப்பாடல்கள் பல பாடியதால் அவர் ஒரு தெய்வீகக் கவி எனலாம்.

    தத்துவப்பாடல்களைப்பாடியதால்  தத்துவக்கவி (உதாரணம் ; பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது )  தெள்ளத்தெளிவுற  தமிழ் பாடல்கள் பல எழுதியுள்ளதால் தமிழ்க்கவி. காதல் பாடல்கள் பல எழுதியுள்ளதால்  காதல் கவி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் ஒரு பலகோண கவி என்று. அது மட்டுமா, உணர்ச்சியூட்டும் பாக்களும், எழுச்சியூட்டும் கட்டுரைகளும், கிளர்ச்சியூட்டும் பேச்சும்  என நல் விதைகளைத் தூவிச்சென்றவர். அவர் வெளிப்படையானவர், வெளி வேஷம் கொண்டவரில்லை, அரசியல் வாதிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இருந்தாலும் கண்டனக்காரர்களும் கூட அவருடன் கைகோர்த்து நின்றனர். நாத்திகத்திலிருந்து  ஆத்திகத்திற்கு வந்தவர், அவருடைய  அர்த்தமுள்ள இந்துமதமே இதற்கு சாட்சி. ஏசு காவியம் பாடி   இதயத்தில் நின்றவர். வாழ்க்கை பாடத்தையே  பல நேரங்களில்    பாட்டாகப்பாடியர்.

    கவிஞர் கண்ணதாசனை அறியாத மக்களில்லை, பேசாத நாவில்லை, அவர் பாடலை பாடாத நாவில்லை. வையத்துள் அவர் பாடல்களால் வாழ்வாங்கு வாழ்ந்து  அமர நிலை எய்திய அமரர் கண்ணதாசனை  நாளும் வாழ்த்துவோம். எண்ணிக்கை இல்லா பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வர் ‘என்னைப்பொ றுத்தவரையில்  என் பார்வையில் கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி என்றால் மிகையில்லை.

     
     
     
     
    சரஸ்வதி இராசேந்திரன் ,
    51 ,வடக்கு ரத வீதி ,மன்னார்குடி  614001

    sathiramannai@ gmail.com

    Share
  • தெய்வம் தந்த வீடு….

    — கவிஞர் காவிரிமைந்தன்

    தெய்வம் தந்த வீடு….

    வாழ்க்கை வெறுக்கத் தக்கதுமல்ல!
    வாழ்க்கை விரும்பத் தக்கதுமல்ல!!
    வாழ்க்கை வாழத் தக்கதுவே!!

    வாசல் இல்லாத வீடும்.. பிரச்சினை இல்லாத மனிதனும் சிருஷ்டிக்கப்படவில்லை என்பது கண்ணதாசன் வாக்கு.

    எவருக்குத்தான் வாழ்க்கை விரும்புவதுபோல் அமைகிறது?  எந்த மனதில்தான் சஞ்சலமில்லை!  சங்கடமில்லை??

    தன்னை ஆள்வது தவம் என்பார்கள்!  எங்கே மனிதன் தன்னை ஆள்கிறான்?  தன் மனதை வென்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தீர்க்கமான முடிவெடுப்பது அவ்வளவு சாதாரண விஷயமா? பேரறிஞர்கள் கூடத் தோற்றுப் போவது சொந்த வாழ்க்கையில்தான்!

    தட்டுத்தடுமாறிக் கரைசேரும் ஓடம்போல் மனித வாழ்க்கை.. அதுவும் நடுத்தர வர்க்கம் முதல் வறுமைக் கோடுகள் வரை அன்றாடம் சந்திக்கும் பிரச்கிகனைகள் சொல்லில் அடங்காதவை.  ஒவ்வொரு நாளும் ஏன்தான் விடிகிறது என்கிற கேள்வி எழாத இதயங்கள் இல்லை.  அன்பாலும் பாசத்தாலும் உறவுகள் ஒத்தடம் கொடுக்கப்பட்டாலும் .. பணம் என்கிற பொருளாதாரத் தேடலும்.. மனம் என்பதை கட்டிக் காக்க மறந்த மனிதர்களின் ஓலங்களும்.. ஓய்வதே இல்லை..

    தமிழ்த்திரையுலகில் இயக்குனர் வரிசையில் பீஷ்மர் என்று போற்றப்படும் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல.  ஒரு இயக்குனர் படத்தில் இருக்கிறார் என்பதை படத்தின் பெயர்ப்பட்டியலைத் தவிர.. அடிக்கடி நினைவு கூறப்பட்டவராய்.. பரிணமிப்பது பாலச்சந்தர் ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

    deivam thantha veeduஅவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது.  குடிகார அண்ணன் பாத்திரத்தில் திரு.ஜெய்கணேஷ் நடித்திருக்க.. ஒரு காட்சியில் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.  கதையும் காட்சியும் சொல்லவந்ததை, கவிதையில் (பாடலில்) சொல்ல இயக்குனர் விரும்புகிறார்.  பாடல் எழுத கவிஞர் வரவழைக்கப்படுகிறார்.  பாலு (கவிஞர் பாணியில்) கதை சொல்ல.. கவிஞர் பாடல் தருகிறார். மெல்லிசை மன்னர் இசை அமைக்கிறார்.  கடவுளின் அருளால் பெற்ற காந்தர்வக்குரலால் கே.ஜே.யேசுதாஸ் பாடுகிறார். பாடல் எழுத முற்படும்போது இயக்குனர் கவிஞரிடம் சொன்னதென்ன தெரியுமா?  இது ஒரு தத்துவப்பாடலாக அமைய வேண்டும். 18 சித்தர்களும் பட்டினத்தாரும் தந்த தத்துவங்களைக் கொட்டிக்கவிழ்க்க வேண்டும்.. கவிஞரின் சிந்தனையில் அந்த அற்புதம் நடந்தேற இப்பாடல் பிறக்கிறது!

     

     

     


    தெய்வம் தந்த வீடு-http://youtu.be/AGuuEpdDpTY

     

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ….

    படம்: அவள் ஒரு தொடர்கதை
    பாடல்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: கே.ஜே. ஜேசுதாஸ்

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு …..
    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
    இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
    நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? – இல்லை
    என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
    தெய்வம் செய்த சாபம் இது போடி தங்கச்சி
    கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
    ஆதி வீடு அந்தம் காடு இதில்
    நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
    மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
    கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
    காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
    கொண்டதென்ன கொடுப்பதென்ன – இதில்
    தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் – அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
    உண்மை என்ன பொய்மை என்ன இதில்
    தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு …..
    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ……

     

    தமிழ் மண்ணில் .. கலையின் வளர்ச்சியில்… திரைத்துறையில்.. இணைந்த கலைஞர்களின் கூட்டணி வெற்றிக்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்?  ரசிகப்பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற பாடல் அல்லவா?

    2003ஆம் ஆண்டு கண்ணதாசன் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் இந்தப்பாடல் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டபோது தனது சிறப்புரையில்  திரு.கே.ஜே.யேசுதாஸ் முன்னிலையில் பதிலும் தந்தார்.  (இதோ…)

    “காவிரிமைந்தன் சொன்னதுபோல்.. இந்தப்பாடலை ஒரு தத்துவப்பாடலாக தரவேண்டும் என்று கவிஞரிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் உண்மைதான்.. அதுசரி.. கண்ணதாசனைவிட இந்தச் சூழலுக்கு பாடல் எழுதத் தகுதி உடையவர் யார்” ரென்றும் தன் உரையில் முத்திரை பதித்தார் அந்தப் பெருமகன்!

    Share
  • கானல் நீர் பெண்!

    -பொன்ராம் (லட்சுமி) 

    சாலையெங்கும் பெண் முன்னேற்றக்
    கானல் நீர்!
    சறுக்கி விளையாடிய                                                                     small girl - kanal neer pen
    சிறுமி…நடந்த பாலியல் வேட்டையில்
    கல்லறைப் பெட்டிக்குள்
    பன்னீர் ரோஜாக்களின்
    கண்ணீருடன் உறங்குகின்றாள்!

    வீதியெங்கும் முளைத்த
    மதுப்புட்டிகளின் விளக்குக் கம்ப
    வெளிச்சத்தில் ஆணாதிக்க இதய
    கான்கிரீட் கட்டிடங்கள்!

    பொய் வருத்தத்தில் முளைத்த
    சுயநலக் கள்ளிப்புதர்களாய்ப்
    போதை மருந்துப் பூக்களின்
    நாற்றம்!

    பெண்முன்னேற்றம் பாடிய
    ஊடகத்தில் அரைகுறை
    ஆடையுடன் வெண்குழல்
    ஒழிப்பு விளம்பரத்தில்
    யார் அங்கே வருவது?

    உயரத் தெரிந்த குடும்பப்
    பணிபீடப் பனைமரத்தின்
    உச்சியில் தெரிந்த
    நங்கை பனங்காய்களின்
    கருத்துப் பரிமாற்றம்
    யாருக்காக நாம்
    என்றே அறியாமல்
    வாழ்கிறோம்!

    பனையோலைத் தாத்தாவின்
    படல்காற்றுக் கண்ணீரில்
    நனைந்த விறகாய்,
    தூரத்துச் சிறுமியின்
    கல்லாமைக்காகக்
    கண்ணீர் விடுகின்றது!

    கனிந்த பனம்பழமோ
    மாதந்தோறும் வரதட்சணையாய்
    மாறிய தூரத்து இரட்டைக்குதிரை
    பூட்டிய சாரட்டில் சாரதியான
    பெண்ணிற்காக
    விருந்தோம்பலுக்காகக் காத்திருக்கிறது!

    விதைப்பார் யாருமின்றி
    நச்சென்று மண்மாதாவை
    முத்தமிட்டுக் காத்திருக்கும்
    விழிப்புணர்வு வித்தை
    விதைக்க மறந்த ஆணாதிக்கம்
    எங்கே?

    பனைமரத்தின் வேர்களில்
    புரையோடிக் கொண்டிருக்கும்
    சாதி, பாலியல் வன்முறைக்
    கிருமிகளை அழிக்க மந்திரமாய்
    மாற ஔவையாருக்கு
    எங்கே போவது?

                                

    Share
  • உன்னைப் போலவே…

    -கீதா மதிவாணன்

    ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை             small baby for geetha kavithai
    ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
    பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
    ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

    உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
    உயிர்க்குடத்தில் கருவானது!
    உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
    உடுத்தவும் உரிமையுடையது!
    உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
    சிந்திக்கவும் கூடியது!

    உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
    அணைக்கவும் தலைப்பட்டது!
    உன்னைப் போலவே உணரவும் புணரவும்
    மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

    சாமான்யமாய் எண்ணிவிடாதே…
    சாபத்துக்கு ஆளாகிவிடும்
    சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

    Share
  • சங்கர லிங்காஷ்டகம்

    கிரேசி மோகன்

    சு.ரவியும் ,நானும் பொறியியல் படிப்பதாக சொல்லிவிட்டு ‘’ரவிவர்மா, கோபுலு, சில்பிகளைப்’’ படம்படித்துக் கொண்டிருந்த காலத்தில், என் நண்பன் லாயர் சுப்புவின் ஆபீஸ் திறப்பு விழாவுக்காக ,பரிசளிக்க ஆச்சாரியாள் படத்தை பாலமுரளி கிருஷ்ணாவின் ‘’பத்ராசல கீர்த்தனை’’ டேப் பிய்ந்து போகும் அளவு கேட்டபடி வரைந்து, கூடவே கையோடு கையாக ‘ப்ரும்ம முரார்ச்சித லிங்கம்’’ எஸ்.பி.பி பாடிய மெட்டில் எழுதியது….இதை சுப்பு பாட அவன் மகன் இசையமைத்திருக்கிறான்….

     ———————————————————————-

    சங்கர லிங்காஷ்டகம் – கேட்டு மகிழ!

    —————————————————————————

     

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    சங்கர லிங்காஷ்டகம்
    —————————-

    ”பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம்”…. மெட்டில்….
    —————————————————————-

    சத்சிவ சித் தானந்தன லிங்கம்
    சகுண உபாசக நிர்குண லிங்கம்
    புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
    சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

    தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
    தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
    சின்மயமான சிதம்பர லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

    ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
    அண்ட சராசர மாயா லிங்கம்
    ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

    முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
    மன்மத தகன மகாதவ லிங்கம்
    அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

    அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
    அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
    நயன நுதலிடை நீறணி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

    ”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
    குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
    அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

    ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
    சத்திய சிவமய சுந்தர லிங்கம்
    உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

    இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
    இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
    பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

    பலஸ்ருதி
    ————-
    ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
    ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
    தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
    தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….
    ————————————————————————

    Share
  • நான் எழுவேன் – கவிதை

    –தேமொழி

    நான் எழுவேன் !!!

    Maya Angelou

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

    நீ வரலாற்றில் என்னைப் பற்றி எழுதலாம்
    உனது கசப்பான சரடுகளை
    நீ என்னை மண்ணோடு மண்ணாகப் புதைக்கலாம்
    எனினும், நான் தூசு போல மேலெழுவேன்

    எனது துடுக்குத்தனம் எரிச்சலூட்டுகிறதா?
    எதனால் நீ சோர்வில் மூழ்கினாய்?
    வீட்டிலேயே எண்ணைக் கிணறுள்ள  செல்வச்
    சீமாட்டிபோல நான் வலம் வருவதாலா?

    நிலவினைப்போல கதிரவனைப் போல
    நிரந்தரமான அலைகளைப்போல
    மேலெழும் நம்பிக்கை போல
    நானும் மேலெழுவேன்

    என்னை மனமுடைந்தவளாகக் காண விருப்பமா?
    கவிழ்ந்த தலையுடன்  தாழ்ந்த கண்களுடன்
    தொங்கிய தோள்களையும் உறுதியிழந்து  உயிரை
    உருக்கும் அழுகையையும்  என்னிடம்  எதிர்பார்த்தாயா?

    எனது செருக்கு உன்னைப் பாதிக்கிறதோ?
    அதனைக் கண்டு நீ சோர்வு கொள்ளாதே
    ஏனெனில் நான் நகைப்பேன் என் வீட்டுத்
    தோட்டத்தில் தங்கச்சுரங்கம் வைத்திருப்பவள் போல

    நீ என்னைத் தாக்கலாம் உன் சொற்களால்
    நீ என்னை கண்டிக்கலாம் உன் பார்வையால்
    நீ என்னைக் கொல்லவும் செய்யலாம் உன் வெறுப்பால்
    எனினும், உயரும் காற்றாக நான் மேலெழுவேன்

    எனது கவர்ச்சி உன்னை வருத்துகிறதா?
    எனது துள்ளாட்டம் வியப்பளிக்கிறதா?
    மடியிலேயே வைரச் சுரங்கம் கொண்டவள் போல
    நானாடும் நடனம் வியப்பளிக்கிறதா?

    வரலாற்றின் அவமானக் குடில்களில் இருந்து
    நான் எழுவேன்

    வேரூன்றிப் போன கடந்த காலத்தின் வலிகளில் இருந்து
    நான் எழுவேன்

    கொந்தளித்து எழும்பும் அலைகளுடன்
    நானொரு பரந்து விரிந்த கருங்கடலாக
    இரவுகளின் திகிலையும் அச்சத்தையும் பின்தள்ளி
    நான் எழுவேன்

    புலரும் வேளையில் தெளிவான பொழுதில்
    நான் எழுவேன்

    என் முன்னோர் வழங்கிய பரிசுகளுடன்
    ஒரு அடிமை காணும்  கனவாக,  நம்பிக்கையுமாகவும்
    நான் எழுவேன்
    நான் எழுவேன்
    நான் எழுவேன்

     

     

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share
  • திருமால் திருப்புகழ் (103)

     

    கிரேசி மோகன்

    Bhagavatha - Raasa Leela Keshav
    Bhagavatha – Raasa Leela Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————–

    Ulukala bandhanam. Oil on canvas.
    Ulukala bandhanam. Oil on canvas.

    ஆலிங் கனித்தராதை, தோளிங்க நர்த்தனத்தால்,

    காளிங்கக் காட்சி கவனமுற, – மாலிங்கு,
    மாதை தலைசுமந்து காதல்கூத் தாடுகிறான்
    கீதை வரிகள் மறந்து….(124)

    ஆத்திலொரு காலாக, சேத்திலொரு காலாக,
    காத்திருக்கேன் கேள்விக் குறியாக, -பூத்திருவை,
    மார்பினில் சூடிய, மாதவா நேருக்கு,
    நேர்பதில் கூறுவதென் நாள்….(125)

    ஆழியில் தூங்கியொரு, நாழி முழித்துலகை,
    ஊழியி லுண்டு களைத்தவா, -வாழிநீ,
    உன்னை நினைந்து, ருகியுறங்கு மென்னைநீ,
    உன்கனவில் காண உறங்கு….(126)

    அடிசறுக்கி ஆனை, துடிதுடித்த போது,
    நொடிக்கணக்கில் வந்தகால நேமி, -வடிவெடுத்து
    ஆவென வாய்பிளந்த, பாவத்தின் பற்களுற்றேன்,
    ஆவன செய்யவா தேவு….(127)

    அறியாமை கொண்டேன், அகங்கார முற்றேன்,
    அரிஆமை தோற்றம் எடுத்தோய், -சரியான
    ஆளிதற்கு நீதான் அலைமனம் ஆழ்கடல்
    போலிருக்கு, யோகம் புகட்டு….(128)

    அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்,
    கம்மென நிற்பதன் தாத்பர்யம், -நம்மனம்,
    புத்தியை, மாற்றிடும் யுக்தியாம் கீதையை,
    ஒத்திகை பார்ப்பதற்க் கோ….(129)

    ———————————————————————————

    படங்களுக்கு நன்றி: http://kamadenu.blogspot.in/2013_07_01_archive.html

     

    Share
  • இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    Ilayaraja-Wallpaper

    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ… கவிஞர் வாலி இசை ஞானி இளையராஜா ஜெயச்சந்திரன் பி. சுசீலா

    உள்ளத்து உணர்வுகளில் பொங்கி வருவது கவிதை! கால வெள்ளத்தில் கோடிக்கணக்கான மறைந்த போதிலும், தங்களது பூவுலக வாழ்விற்குப் பின்னரும் புகழ் உலகில் வாழ்பவர்கள் மிகக் குறைவே! எனினும் கவிஞர்கள் என்று போற்றப்படும் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளால் யுகங்களைக் கடந்து நினைக்கப்படுவதும் அவர்தம் வரிகளால் வாசிக்கப்படுவதும் பிற துறைகளில் சாதனைப் படைத்தவர்களைக் காட்டிலும் அதிகமே!

    எனவேதான் திருவள்ளுவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருகிறார்… திருக்குறள் மூலமாக.. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வாயிலாக.. கவிச்சக்ரவர்த்தி கம்பன் – கம்ப ராமாயணம் வழியாக.. மேலும் இவர்தம் கவித்துவ சிந்தனைகளில் ஆழ்ந்திடும் காரணத்தால் படைப்பாளன் தனது படைப்புகளில் இவர்கள் பயன்படுத்திய யுக்தி.. உவமைகள் போன்றவற்றின் பிம்பங்களைக் காணமுடிகிறது.

    ஒரு பெண்ணை வர்நிக்கின்றபோது.. நிலவோடும்.. மலரோடும்.. தென்றலொடும்.. நதியோடும்.. எனப் பல்வேறு உவமைகளைக் கையாண்டுவரும் கவிஞர்கள் – அவளைக் கவிதை அணவும் தவறவில்லை.. புதுக்கவிதை எழுத்தாளர்கள்கூட ஒற்றை வார்த்தையில் கவிதை கேட்டார்கள்…. நான்.. உன் பெயரைச் சொன்னேன் என்று விளம்புவதும் இவ்வகையில்தானோ?

    கவிஞர் வாலியோ… இதற்கும் ஒருபடி மேலாக..

    காளிதாசன்.. கண்ணதாசன்.. கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம்.. ரசிக்கலாம்.. என பல்லவியெடுத்து பாடல் தருகிறார். ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ திரைப்படத்தில் இசை ஞானியின் இனிய இசையில் இன்னுமொரு காதல் தாலாட்டாக.. ஜெயச்சந்திரன் பி. சுசீலா குரல்களில்…

    ‘பிரம்மன் கண்ணதாசனே உன்னைப் படைத்ததாலே..’ என்று மின்சாரக் கண்ணா திரைப்படத்திலும் ஒரு வரியும் இதே வரிசையில் உருவானதே.. (உன் பேர் சொல்ல ஆசைதான்)..

    காளிதாசன் கண்ணதாசன்
    கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…
    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

    காளிதாசன் கண்ணதாசன்
    கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…
    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

    ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய …
    ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
    தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
    பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக

    இனிமை தான் … இனிமை தான் பொழிந்ததே வழிந்ததே
    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
    நெருங்கி வா… படிக்கலாம்… ரசிக்கலாம்…
    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

    ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய … ஹோய்
    மேலும் கீழும் கண் பார்வை அபினயம் புரிய
    பூ உடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க
    பாற் கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
    சமயம் தான் …
    சமயம் தான் அமைந்ததே அழைத்ததே

    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
    நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்…

    காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

    திரைப் படம்: சூரக் கோட்டை சிங்கக் குட்டி
    பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா மற்றும் குழுவினர்
    இசை: இளையராஜா

    Share
  • திருமால் திருப்புகழ் (102)

    கிரேசி மோகன்

     Bhagavatha: Putana  Keshav
    Bhagavatha: Putana Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————–

    Krishna 04

    பல்லில்லா பாலகன், என்றெண்ணி பூதனை,
    கொல்லவந்த கண்ணனைக் கண்டதும், -இல்லம்,
    புகுந்து முலைதிணித்துப், பார்த்திட வாயில்,
    முகுந்தனுக்கு முப்பத்தி ரெண்டு….(119)

     
    பள்ள மதைநோக்கிப், பாய்கின்ற வெள்ளமென,
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய், -உள்ளமே,
    கள்ளமில்லா நம்பிக்கை, கண்மூடக் கும்பிடு,
    வள்ளலென மாறும்காண் வாழ்வு….(120)
    ———————————————————————————————————————
    நரஸிம்ஹ மந்த்ரராஜம்
    —————————–
    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||
    மேலே கூறிய ஸ்லோகத்தின் வெண்பாவாக்கம்….
    ————————————————————————————–

     

     

    Yagna - Varaha - Keshav
    Yagna – Varaha – Keshav

    வீரியன், வீரன், வியாபகன், சைதன்ய

    சூரியன், சூக்கும காரியன், -கூரிய
    சிங்கன், எதிரிக்கு சொப்பனம், காலகாலன்,
    மங்களம் சேர்த்திடும் மால்….(121)

    ஏன வடிவெடுத்து, ஏந்தி உலகெடுத்து,
    தீனர்க்(கு) அருள்புரிந்த தெய்வமே, -வான
    வராகா பிணிகள், வருமுன் தடுத்து,
    வராதுகா வைகுந்தா வா….(122)

    வளைத்தாள் புருவத்தை, வைதேகி வில்லாய்,
    வளைத்தான் சிவதனுசை ராமன், – முளைத்த,
    முகச்சிகை கோதி, முனிவன் குளிர்ந்தான்,
    இகத்தில் பரத்தை இணைத்து….(123)

    ————————————————————————————————————————

     படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது

    Space Dust

    சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    பிரபஞ்ச  அகண்ட வெளியிலே
    பால்வீதி ஒளிமந்தையின்
    பரிதி மண்ட லத்திலே
    கோடான கோடி ஆண்டுகள்
    உயிரினம் உதித்தாய் நாமறிந்தது,
    ஒரு கோளிலே !
    பெருங்கோள் ஒன்று மோதி
    பூமியை உடைத்துத்
    தெறித்தது நிலவு !
    புவிக் குழியில் நிரம்பும் கடல்நீர் !
    பரிதியின் ஒளிக்கதிரில்
    பகல் இரவு மீண்டும் எழும் !
    உயிரினம் தோன்றிப் பிழைத்ததும்
    பயிரினம் வளர்ந்ததும்
    மயிலினம் பறந்ததும்
    புழுவினம் ஊர்ந்ததும்
    ஒரே  ஒரு  நீர்க் கோளிலே !
    பூகம்பங்கள் கிளம்பிக் கரியின்
    புகை மண்டலம் புவியில்
    சுற்றுலா புரியும் !

     

    பனியுகம் தோன்றி
    இனிப்பு நீர்ச் சேமிப் பாகும் !
    வெப்பத்தில் உருகி கடல் நீர் உயரும்,
    கரை யெல்லாம் உப்பாகும் !
    பம்பரமாய்ச் சுற்றும் பூமியின்
    துருவ அச்சு கோணிப்
    பருவங்கள் மாறிவிடும் !
    வேனல், கூதல், வசந்த காலம்
    தானாக மாறி விடும் !
    பெரும்புயல் அடிக்கும் ! பேய்மழை பெய்யும் !
    பனிக் குன்றுகள் உருகி
    ஆறுகள் அருவிகள் ஓடும்,
    ஏரிகள் உருவாகும் !
    குறையுடை மாந்தரைப் புவியில்
    பிறப்பு வித்த
    இறைவன் சலித்துப் போய்
    வேறெங்கும் இனிப் படைக் காதது
    விந்தை அப்பா !

    ++++++++++++++++++

     

     

    jay

    Impact Crater

    முரண்கோள் மோதுதலில் உண்டான வெடிப்புப் பெருங்குழி

     

    “சுமார் நான்கு பில்லிய ஆண்டுகட்கு முன்பு முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிப் பூர்வீகப் பூகோளம் பெரும் மாற்றம் அடைந்த சமயத்தில்தான், ஆரம்ப கால உயிரின மூலவிகள் தோன்றின என்பதற்குச்  சான்றுகள் கிடைத்துள்ளன.   இத்தகைய பூர்வீகக் கோரக் கொந்தளிப்பின் போது, உயிரின மூலவிகள் ஏன் தோன்றின  என்று ஒருவர் கேட்கலாம்.   அதற்கு விடை இதுதான் :  பூகோள மோதல் தாக்குதல்கள் உண்டாக்கிய பெருங்குழிகள்  ஒருவேளை  உயிரின மூலவிகள் உருவாகப் பங்கேற்றிருக்கலாம்.”

    ஹேலி ஸேப்பர்ஸ் [Canadian Astrobiolgy Program, McGill University, Montreal]

     

    பூகோளத் தாக்குதல்கள் பூர்வீகத்தில் நேர்ந்த போது உயிரின மூலவிகள் புதைந்த சான்றுகள்

    பேரளவு நீர்வளம் கொண்ட பூமியில் பேரதிர்வுத் தாக்குதல்கள் செத்த குளிர்ச்சி நிலையை மாற்றி உயிரின வளர்ச்சிக்குத் தேவையான வெப்பமும், சக்தியும் அளித்துள்ளன.   பூமிபோல் அத்தகைய நீர்மை வெப்பம் இயக்கங்கள் [Hydrothermal Activity] செவ்வாய்க் கோளிலும் ஆரம்ப காலங்களில் நேர்ந்திருக்கலாம்.  அப்போது நீரில் மூழ்கிய பகுதிகளில் வெப்பத்தால் நீர் கொதிப்பு நிலை [Boiling Stage] அடையும்.  அந்த சமயத்தில் கடல் மடி வெந்நீர் ஊற்றுகளுக்கு  [Seafloor Hot Springs, called Hyrothermal Vents]   ஒருமைல் நீளம் இடமளித்து, நீர்க்கோள்  பூமியில் உயிரினத் தாவரச் செழிப்புக்கு [Ecosystems] வசதி அமைக்கிறது..

     

    Solar Effects with water

     

    அப்போது கடலில் 6 அடி நீளமுள்ள [2 மீடர்] புழுக்கள் கூட எழுகின்றன.   ஜெர்மனியில் உண்டான ரைஸ் பெருங்குழி  [Ries Crater, in Germany] [http://en.wikipedia.org/wiki/Nördlinger_Ries/ ] விளைவித்த நீர் வெப்ப இயக்கங்கள் [Hyrothermal Activity] சுமார் 10,000 ஆண்டுகள் நீடித்தன வென்று தெரிகிறது.   அதற்குள் விருத்தியாகி அங்குப் பெருகிக் குடியேற, நுண்ணியிர் இம்மிகளுக்கு [Microbes]  போதிய காலம் கிடைத்துள்ளது.

    முரண்கோள், வால்மீன்களின் [Asteroids & Comets] தாக்குதல்கள் ஒரு யுகத்தில் வாழ்ந்த அசுர வலு டைனசார்ஸ்களை ஒருங்கே அழித்தது போல் உயிரினப் பாதங்களும் நேர்ந்துள்ளன.   இப்போது புதியதோர் தகவல் கூறுவது :  அத்தகைய கோர வெடிப்பு விளைவுகள் புதைவுத் திரவ உயிரினங்களை மிஞ்சிய சமாதிகளாக்கி, உண்டாகிய குழிகளில் பல மில்லியன் ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.   மற்றொர் ஆய்வுரையில் அச்சமாதிகளிலிருந்து பின்னர் புதிய உயிரினங்கள் புத்துயிர் பெற்று எழுந்துள்ளன என்றும் அறியப் படுகின்றது.  பேரளவு வெடிப்பு வெப்பத்தில் சமாதிச் சான்றுகள் திரவ நிலையில் கண்ணாடியாகிப் பயிரின இலைகளை உள்ளடக்கி வைத்துள்ளன.  இத்தகைய கண்ணாடிப் பூர்வச் சான்றுகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த கிழக்கு அர்ஜென்டைனா வெடிப்புக் குழியில்  ஆய்வுக்குத் கிடைத்துள்ளன.   இந்த அறிவிப்பைச் சமீபத்தில் [ஏப்ரல் 15, 2014] பூதளவாதி பீட்டர் சுழ்ஸ் [Peter Schultz of Brown University in Providence R.I.] பூதளவியல் வெளியீட்டில் பதிப்பித்து இருக்கிறார்.

     

     

    Early Impacts on Earth

    “பூதட்டு நகர்ச்சிகள்” (Plate Tectonics) ஏற்படுவது பூமியின் தனித்துவ சுற்று நிகழ்ச்சி.  இம்மாதிரி நிலவிலோ, செவ்வாய்க் கோளிலோ நிலநடுக்கம் நிகழ்வதில்லை.  பூமியின் 70% பங்கு நீர்மயமானது.  கடல்நீர் பூதட்டு நிகழ்ச்சிக்கு மசகுத் திரவமாய் (Lubricant) உதவி செய்கிறது.  இம்மாதிரி உட்கருவின் வெப்பமும், இடையடுக்கு (Mantle), மேலடுக்கு (Crust) அமைப்புகளும் பூமியில் இல்லாவிட்டால் பூதட்டு நகர்ச்சி எழவே எழாது !  பூமியில் உயிரினமும் நீடித்திருக்காது !”

    ஜொநாதன் லூனின் (Jonathan Lunine) அரிஸோனா பல்கலைக் கழகத்தின் அண்டக்கோள் விஞ்ஞானி [டிசம்பர் 2008].

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)


    Life from Asteroids & Comets

     

    “கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது பூமண்டலம் சூடேறி விட்டதென்று, ஆழ்ந்து செய்த காலநிலை வரலாற்று ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன!  அதற்குக் காரணம் ஓரளவு இயற்கைச் சம்பவங் களே தவிர, மனிதரியக்கும் தொழிற்சாலை வெளியேற்றும் துர்வாயுக்கள் அல்ல என்று கூறும் மறுப்புவாதிகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தரும் முறையில் பறைசாற்றப் படுகிறது.”

    இயான் ஸாம்பிள் [Ian Sample, “Not Just Warmer: It’s the Hottest for 2000 Years” Guardian Unlimited *(Sep 1, 2003)]

    “3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது.  ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!”

    ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)]

     

    fig-1b-greenhouse-effect

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

     

    நமது பூமியில் உயிரின நீடிப்புக்கு உகந்த மகத்தான படைப்புகள்

    நமக்கு இதுவரைத் தெரிந்த பிரபஞ்சத்திலே பரிதி மண்டலத்தின் ஓர் அண்டக் கோளான பூமியைப் போன்று உயிரினம், பயிரினம் தோன்றவும், விருத்தி அடையவும், நீடித்து நிலைக்கவும் ஏற்றவொரு புனிதக் கோளம் வேறு எதுவும் கிடையாது.  பரிதியின் உட்புறக் கோளான பூமியின் தளவியல் வடிவ, பௌதிக, உயிரியல் ஏற்பாடுகளில் (Geological, Geophysical & Geobiological Systems) மிகவும் சிக்கலானது.  கோடான கோடி ஆண்டுகளாய்ப் பூமி படிப்படியாகச் சீராகிச்,  மாறி மாறிச் செம்மையாகி இன்னும் மாறுபட்டு வருகிறது.  4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பரிதியின் ஒளிக்கதிர்களில் மிதமான, சுகமான, தட்ப-வெப்பச் சூழ்வெளியில் இயங்க பூமியானது போதிய சக்திகளால் ஊட்டப்பட்டு வருகிறது.

     

    fig-1c-photo-chemistry

     

    பால்வீதி ஒளிமந்தையின் விளிம்பில் சுற்றும் எளிய, சிறிய விண்மீனான பரிதியை வலம்வரும் எட்டுப் பெருங் கோள்களில் மூன்றாவது கோளாகப் பூமி சுற்றி வருகிறது.  பரிதியின் கோள்களில் ஒன்றான பூமியில் மட்டும் ஏன் உயிரினங்கள் வசித்து வருகின்றன என்ற வினா எழுகிறது.  திரவ நிலையில் நீர் வெள்ளம் பேரளவில் கொட்டிக் கிடக்கும் ஒரே ஓர் அண்டமாக பூமி மட்டும் எட்டுக் கோள்களில் ஒன்றாக இருப்பது ஏன் என்பதும் புதிராக இருந்து வருகிறது.  உயிரனங்கள் விருத்திக்கு நீர்மயச் சூழ்நிலை மிக முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், உயிரினங்களின் நீடிப்புக்கு நீர் மட்டும் பூமியில் இருப்பது போதாது.  அல்லது பரிதிக்கு உகந்த தூரத்தில் மிதமான தட்ப-வெப்ப நிலையில் பூமி நகர்ந்து வருவது மட்டும் உயிரினங்கள் நீடித்து வாழ உதவி செய்கிறதா ?

     

    fig-1d-inside-the-earth

    பூகோளத்தில் ஆக்ஸிஜென் வாயு செழித்த சூழ்வெளியே பரந்து கிடக்கும் உயிரியல் கோளத்தில் (Biosphere) வாழும் பெரும்பான்மை உயிரினங் களைப் பூமியில் நீடித்து விருத்தி செய்யத் துணை புரிகிறது.  பரிதியின் ஒளிச்சேர்க்கையால் (Photo-Synthesis) பயிரினங்கள் தொடர்ந்து ஆக்ஸிஜெனை உற்பத்தி செய்து தீர்வதைத் தொடர்ந்து நிரப்பி வருகின்றன.  கடலான நீர் வெள்ளத்தைப் பூமியின் கவர்ச்சி இழுத்துத் தன்னுடன் வைத்துள்ளது,  அதுபோல் பூமியைச் சுற்றிப் பேரளவு வாயு மண்டலத்தைப் பாதுகாப்புக் குடையாக அதன் ஈர்ப்பாற்றல் சக்தி பிடித்துக் கொண்டிருக் கிறது.  ஆதலால் பூகோளத்தின் தீராத நீர்வளம், ஆக்ஸிஜென் உள்ள வாயு மண்டலம், பரிதியின் ஒளிச்சக்தி, பூதளத்தின் புதிரான உயிரியல் அமைப்புகள் ஆகிய முக்கிய இயற்கைப் படைப்புகளே உயிரினம், பயிரினம், விலங்கினம், மீனினம் நீடித்து வாழ வசதிகள் செய்கின்றன.

     

    fig-1e-worlds-tectonic-plates

     

    பிரபஞ்சத்தில் பூகோளம் புதிரான ஓர் தனித்துவப் படைப்பு

    பூகோளத்தைத் தனித்துவ முறையில் படைத்த கடவுள் இனி வேறோர் உலகை அதுபோல் ஆக்கியுள்ளதா வென்று விஞ்ஞானிகள் தொடர்ந்து பிரபஞ்சத்தில் ஆழ்ந்து உளவி வருகிறார்கள்.   இதுவரை பூமியை ஒத்த வேறோர் கோளை விஞ்ஞானிகள் தொலை நோக்கிகள் மூலம் காண வில்லை.  உயிரினங்கள், பயிரினங்கள் தொடர்வதற்கும், விருத்தி அடைவதற்கும் பூகோளத்தில் வாழ்வுக்கேற்ற பருவக் காலநிலை பல பில்லியன் ஆண்டுகள் நீடித்தது ஒரு காரணம்.  அடுத்து பூகோளத்தின் தளவியல் ஏற்பாடுகள் (Global Geological Processes) காரணங்களாகும்.  சூரிய மண்டலத்தின் பெரும்பான்மைக் கோள்களை ஒன்றுக்கு மேற்பட்ட துணைக்கோள்கள் ஈசல்கள் போல் சுற்றிக் கொண்டு வருகின்றன.  பரிதி மண்டலத்தின் 169 துணைக்கோளில் (2008 எண்ணிக்கை) பூமியைச் சுற்றும் துணைக்கோள் நிலவு ஒன்றுதான்.  கடல் அலைகளின் உயர்ச்சி, தாழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒற்றை நிலவும் பூமிக்கு ஒரு தனித்துவ அமைப்பே !  சூரிய மண்டலத்தில் பூமியின் தனித்துவ அமைப்பைக் காட்டுவது என்னவென்றால் உயிரினங்கள் தொடர்ந்து வாழும் நிலமைப் பல பில்லியன் ஆண்டுகளாய் நீடித்து வந்திருப்பதே !  65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது விண்பாறை ஒன்று வீழ்ந்து ஏற்பட்ட பூகோளக் கொந்தளிப்பில் டைனோசார்ஸ் விலங்குகள் அனைத்தும் ஒருமுறை அழிந்து போயின என்பது குறிப்பிடத் தக்கது.

     

    fig-2-global-warming-cooling

     

    திட உட்கருக் கனல் உலோகங்கள் திரண்ட பூமி

    பூமியில் ஏற்படும் எரிமலை எழுச்சிகள், பூகம்ப ஆட்டங்கள், மலைத் தொடர்ப் படைப்புகள், சமவெளிப் பள்ளங்கள் உண்டாவது அனைத்தும் பூகோளத்தின் உட்கருவில் பரவிக் கிடக்கும் வெப்பக் களஞ்சியம் கசிந்து வெளியாவதால் ஏற்படுபவை.  அதில் ஒரு பகுதி வெப்பம் பூமி தோன்றிய போதே பூமிக்குள்ளே சேமிப்பானது.  ஒருசில பகுதி வெப்பம் பாறையில் கிடக்கும் யுரேனியம் போன்ற கன மூலக உலோகங்கள் கதிரியக்கத் தேய்வால் (Radioactive Decay of Heavier Elements) உண்டானது.  உட்கருவின் வெப்பம் பூமியின் அடித்தட்டுகளில் “பூதட்டு நகர்ச்சியை” (Plate Tectonics) உண்டாக்கிப் பூகம்பமாய் மேல்தளத்தில் கொந்தளிப்பை எழ வைக்கிறது.  அந்த அதிர்ச்சி நிகழ்ச்சியே அடுத்து பூகோளத் தட்ப-வெப்ப நிலைக் கட்டுப்

    ​ ​

    பாட்டை நிலைநாட்டிப் (Global Thermostat) பருவக் காலநிலைச் சுழற்சியைத் தூண்டி வருகிறது.  பூமியில் உயிரினம் பயிரினம் இன்னும் நீடித்துள்ளதற்கு பூதட்டு நகர்ச்சி ஒரு காரணம்.

     

    fig-3-the-water-cycle

     

    பூகம்ப நிகழ்ச்சிக்கு மூல இயக்கமான பூதட்டு நகர்ச்சி எவ்விதம் உயிரின நீடிப்பைத் தூண்டுகிறது என்பது ஒரு புதிரான கோட்பாடு.  ஆரம்ப காலத் தோற்றத்தின் போது உட்தள வெப்பம் உட்கருவைச் சூடாக்கி இரும்பு உலோகம் மையத்தில் சேமிப்பானது.  எளிய மூலகங்கள் (Light Elements) ஆழங் குன்றிய பகுதிகளில் தங்கி பூமியின் “இடையடுக்கு” (Mantle) அமைப்பானது. பிறகு இடையடுக்கு மெதுவாக நழுவி ஈர்ப்பாற்றலில் இறங்குகிறது.  எளிய பளுவுள்ள “மேல்தட்டு” (The Crust) இடையடுக்கு மீது மிதக்கிறது.  மேல்தட்டுப் பாறை கோழி முட்டையின் கூடுபோல் எளிதில் நொறுங்கி முறியும் உறுதி கொண்டது (Regid & Brittle like an egg shell).  அடித்தட்டில் கொந்தளிப்பாகி அது பூகம்பமாகி அந்த உந்துசக்தி அதற்கு மேலுள்ள இடையடுக்கையும், அதற்கும் மேலே இருக்கும் மேற்தட்டையும் நகர்த்திப் பேரளவு பாதிப்பை உண்டாக்கும்.  அதுவே “பூதட்டு நகர்ச்சி” என்று சொல்லப்படுகிறது.

     

    fig-4-earths-climate-thermostat

    கடற்தட்டு (Ocean Plate) கண்டத் தட்டைச் (Continental Plate) சந்திக்கும் போது, முந்தைய தட்டுப் பிந்தைய தட்டுக் கீழாக நுழைந்து, பல்லாயிரம் மைல் ஆழத்தில் வீழ்ந்து “அடிதணியும் அரங்கு” (Subduction Zone) உருவாகும்.  இறுதியில் அது முழுவதும் உருகி இடையடுக்கின் ஒரு பகுதியாகிறது.  இந்த மேலெழுச்சி நழுவிக் கீழே நுழையும் நிகழ்ச்சி சுழல் இயக்கமாக மீளுகிறது.  “பூதட்டு நகர்ச்சிகள்” (Plate Tectonics) ஏற்படுவது பூமியின் தனித்துவ சுற்று நிகழ்ச்சி.  இம்மாதிரி நிலவிலோ, செவ்வாய்க் கோளிலோ நிலநடுக்கம் நிகழ்வதில்லை.  பூமியின் 70% பங்கு நீர்மய மானது.  கடல்நீர் பூதட்டு நிகழ்ச்சிக்கு மசகுத் திரவமாய் (Lubricant) உதவி செய்கிறது.  இம்மாதிரி உட்கருவின் வெப்பமும், இடையடுக்கு (Mantle), மேலடுக்கு (Crust) போன்றஅமைப்புக்கள் பூமியில் இல்லா விட்டால் பூதட்டு நகர்ச்சி எழவே எழாது !  பூமியில் உயிரினமும் நீடித்திருக்காது !” என்று அரிஸோனா பல்கலைக் கழகத்தின் பௌதிகரும், அண்டக்கோள் விஞ்ஞானியுமான ஜொநாதன் லூனின் (Jonathan Lunine) கூறுகிறார்.

     

    fig-5-where-is-earths-water

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிக

    ​ ​

    மாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்தி ருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

     

    fig-6-distribution-of-water

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

     

    Life on the Earth

    பனி யுக, வெப்ப யுக விளைவுகள்

    சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசிப் பனியுகம் உலகைத் தொட்டுக் கடந்து போனது.  நமது பூமியின் காலநிலை வரலாறு கடும் பனிப்பாறைப் படுகையிலும், பிறகு சுடும் வெப்பப் பாலை வனங்களிலும் எழுதப் பட்டுள்ளன!  மனித நாகரீகத் தொடக்கமே 10,000 ஆண்டுகளுக்குப் பின்னால்தால் வளர்ச்சி அடைந்து வந்திருப்பதாக அறியப்படுகிறது! ஒவ்வொரு காலநிலை யுகமும் தனது வரலாற்றுத் தடங்களைக் கடற்படுகை ஆழத் தட்டுகளில் பதிவு செய்திருப்பதைத் தற்போது மாதிரிகள் எடுத்து ஆராயப் பட்டுள்ளது.  பனிப்பாறையில் பதுங்கிக் கிடக்கும் ஆக்சிஜென் வாயுவின் அளவு, பனிப்பாறை உருவான காலத்து உஷ்ணத்தைக் காட்டுகிறது.  பனிபடிந்து பாறையாகும் சமயத்தில் உஷ்ண ஏற்றத் தணிவுக்கு ஏற்ப ஆக்ஸிஜென் அளவு பாறையில் சேமிக்கப் படுகிறது.  கீரின்லாந்தின் பூர்வீகப் பனிப்பாறைகளைத் துளையிட்டு மாதிரிகளை எடுத்து, உயரப் பகுதித் துண்டுகளில் உள்ள ஆக்ஸிஜென் அளவைக் கணக்கிட்டு கடந்த 100,000 ஆண்டுகளாகப் பூமியில் காலநிலை வேறுபாடு வரலாறுகளை எழுதி யுள்ளார்கள்!

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]

    24. http://www.dailygalaxy.com/my_weblog/2014/05/common-ancestors-for-life-may-have-originated-billions-of-years-before-the-earth-was-created.html#more%5B/  [May 18, 2014]

    25.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/05/why-did-life-begin-during-early-earths-heavy-impact-period-new-research-shows-a-link.html?

    26.  http://en.wikipedia.org/wiki/Nördlinger_Ries[/  [October 21, 2013]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)   June 1, 2014]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 2, 2014

     

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. கேசவ் வெங்கட்ராகவன் அவர்கள்

    keshav-0

    இந்தியாவின் முன்னணி பத்திரிக்கையான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் துணையாசிரியராகவும், கால்நூற்றாண்டிற்கும் மேலாக அந்த நாளிதழில் கருத்துப்படம் வரைபவராகவும் பணியாற்றிவரும் திரு. கேசவ் அவர்கள் இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சென்ற வாரம், இந்தியாவின் புதிய தலைமை அமைச்சராகப் பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு விழாவினை ஒட்டிய கருத்துப் படங்களுக்காக இவர் இவ்விருதினைப் பெறுகிறார்.

    தன்னைப்பற்றிக் கூறுகையில் “Cartooning is my profession. Painting is my passion” என்றும் விவரிக்கின்றார் கேசவ். கேசவ் அவர்களும், அவரது வண்ண ஓவியங்களும் வல்லமை வாசகர்களுக்கு புதியதல்ல. இவரது நண்பரும், வல்லமை இதழில் ‘தினம் ஒரு திருமால் திருப்புகழ்’ எழுதும் கவிஞர், பலகலைகளிலும் திறமைபெற்ற திரு. கிரேசி மோகன் அவர்களின் பாடல்களுக்குச் சுவை சேர்த்து வருபவை கேசவ்வின் வண்ண ஓவியங்கள். இதிகாசங்கள், புராணக் கதைகளின் நிகழ்வுகளை நீர் மற்றும் எண்ணை வண்ண ஓவியங்களாக வரைவதில் மிக்க ஆர்வமும் திறமையும் கொண்டவர் இவர்.

    keshav-5

    தனது “அம்பாள் பஞ்சகம்” பதிவில் கேசவ் வரைந்த அழகிய “கற்பகாம்பாள்” கோட்டோவியத்தைப் பகிர்ந்து கொண்ட கிரேசி மோகன், “கல்லூரி நாட்களில்…இந்த ஓவியம் வந்தவுடன் என் அறைதான் கர்பக்கிருகம்….இந்த ஓவியம்தான் மூலவர் என்றாகிவிட்டது” என்று கூறுகின்றார்.

    இவரது 80 க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்கள் வல்லமை இதழில் வெளியாகியுள்ளன. இவையாவும் வல்லமையின் முகநூல் பகுதியிலும் தொகுக்கப் பட்டுள்ளன [https://www.facebook.com/media/set/?set=oa.810805988930871&type=1]. கண்ணனை இவர் பற்பல கோணங்களில் வரைந்துள்ளார், ஒரே கோட்டில் துவக்கி முடித்த கண்ணனின் ஓவியங்கள் புதுமையாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்தவை.

    அத்துடன் ஒருவரின் குணநலன்களை மிகைப்படுத்தி விவரிக்கும் பகடிப் படங்களும் (caricature) இவருக்குக் கை வந்த கலை. பற்பல இசைக்கலைஞர்களின் படங்களையும் இவர் வரைந்துள்ளார். அப்படங்களை Keshavcaricatures: http://keshavcaricatures.blogspot.com என்ற தளத்தில் காணலாம். இங்கு மாதிரிக்காக கே. ஜே. ஜேசுதாசின் படம் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது

    மேலும் இவரது படங்கள் கீழுள்ள வலைதளங்களிலும் …
    Kamadenu: http://kamadenu.blogspot.in/
    Srimadbhagavatham: http://bhagavatham.blogspot.com/?view=flipcard
    Keshav cartoons: http://keshavcartoons.blogspot.com/
    Keshav caricatures: http://keshavcaricatures.blogspot.com
    Keshav illustrations: http://keshavsketches.blogspot.com/

    சமூக வலைதளங்களிலும் …
    Twitter: https://twitter.com/keshav61/media
    Facebook: http://facebook.com/keshav.keshav
    Google Plus: https://plus.google.com/112286640734369272376/posts
    Pinterest: http://www.pinterest.com/keshav61/my-drawings/
    WordPress: http://keshavgallery.wordpress.com/
    இவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு பலவகைப்பட்ட ஓவிய பாணிகளில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், தொழில்முறையில் இவர் இந்து நாளிதழில் கருத்துப்படம் வரைந்து வருபவர். கடந்த மே 26 ஆம் தேதி, இந்தியாவின் 15 ஆவது தலைமை அமைச்சராக பதவியேற்ற திரு. நரேந்திர மோதி அவர்களின் பதவியேற்பு பற்றிய கீழ் காணும் கருத்துப் படங்களை இவர் வரைந்துள்ளார்.

    Another swearing-in:- https://pbs.twimg.com/media/Bom5vjXIEAAFcIv.jpg

     

    Modi and the half-empty glass:- https://pbs.twimg.com/media/BoScJOPCMAIgIux.jpg

     

    The cabinet cube:- https://pbs.twimg.com/media/BoNJsVnCcAA3xpW.jpg

     

    Namo, Nomy, Economy:- https://pbs.twimg.com/media/BosACNbCUAAauQ1.jpg

    இந்திய மக்களின் மத்தியில் பெரிதும் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு நிகழ்வை, திரு. மோதி அவர்களின் பதவியேற்பு விழாவில் வரவேற்கப்பட்ட தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்பை தனது கருத்துப் படம் மூலம் பிரதிபலித்ததற்காக கேசவ் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

     — நாகேஸ்வரி அண்ணாமலை

    இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

     

    பல நாட்களுக்குப் பிறகு மனதை வருடிக் கொடுக்கும் மிக நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது.  போப் ஃப்ரான்ஸிஸ் மத்திய கிழக்கிற்கு வந்து எல்லா மதத்தினருக்கும் இணக்கமான பேச்சுக்களாகப் பேசி தீராத பிரச்சினையான இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நல்லுரைகளை வழங்கியிருக்கிறார்.  நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்ற பாணியில் தன் கருத்துக்களைக் கூறிவருகிறார்.  இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

    அதுவும் இவருக்கு முந்தைய போப் பெனெடிக்ட் ஒரு முறை அவர் ஆற்றிய உரையில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முஸ்லீம் அரசர் ஏதோ சொல்லியதாகக் கூறப் போய் உலகம் முழுவதும் – அப்போது எப்போதையும் விட முஸ்லீம் எதிர்ப்பு அதிகமாக இருந்தது – கொந்தளித்தது.  ஒரு மதத் தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் சொற்களைக் கூறலாமா என்று நான் ஆயாசப்பட்டிருக்கிறேன்.  உலகில் உள்ள மக்களிடையே நட்பும் நல்லெண்ணமும் நிலவப் பாடுபடுவதுதான் மதத் தலைவர்களின் தலையாய கடமை என்றால் போப் ஃப்ரான்ஸிஸ் இந்த இலக்கணத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.

    இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று முழக்கமிடும் ஒரு கோஷ்டியோடு நெருக்கமுள்ள ஒரு அரசியல் தலைவர் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறாரே என்று பயப்படும்படியாகத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் இந்த நேரத்தில் எல்லா மதங்களையும் இணைக்கும் விதத்தில் பேசிவரும் ஒரு மதத் தலைவரின் செயல்கள் உலகம் உய்ய இன்னும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைத்து மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.

    இஸ்ரேலுக்கு இதுவரை வந்த போப்கள் சாதாரணமாக வாடிகனிலிருந்து நேரடியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவிற்கு வருவார்கள்.  இவர் அதில் ஒரு மாற்றம் செய்தார்.  நேரே ஜோர்டான் வழியாகப் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பெத்லஹேமுக்குச் சென்றார். தன் நாட்டு ஜனத்தொகையில் பாதிக்கு மேலாகப் பாலஸ்தீன அகதிகளையும் சமீபத்தில் உள்நாட்டுப் போரின் விளைவாக சிரியாவிலிருந்து வந்திருக்கும் ஆறு லட்சம் அகதிகளையும் வரவேற்றிருக்கும் ஜோர்டானைப் புகழ்ந்ததோடு உலகின் மற்ற நாடுகளும் இதில் ஜோர்டானுக்கு உதவ வேண்டும் என்று அறிவுரையும் கூறினார்.  சிரியாவில் அமைதி ஏற்பட எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும் ஆயுதங்கள் மூலம் அமைதியை வாங்க முடியாது என்றும் அமைதி எல்லோரும் ஒத்துழைத்துப் பெற வேண்டிய ஒன்று என்றும் கூறினார்.

    இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் வெஸ்ட் பேங்கிற்குப் போகும் முதல் போப் இவர்தான்.  2012-இல் ஐ.நா. சபை பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து (non-member observer status) கொடுத்திருப்பதை ஆதரிக்கும் முகமாக போப் ஜோர்டானுக்குச் சென்று, பின் அங்கிருந்து பெத்லஹேமிற்குச் சென்றார்.  பெத்லஹேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் அகதிகள் முகாமில் வசிப்பவர்களோடு மதிய உணவு அருந்தினார்.  பக்கத்தில் இருக்கும், 1948-இல் நடந்த இஸ்ரேல்-அரபு போரில் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, சுமார் 12,000 அகதிகளும் அவர்களின் சந்ததிகளும் வாழும் அகதிகள் முகாமிலிருந்து வந்திருந்த சிறுவர்களின் பாடலைக் கேட்டார்.  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இவர்கள் படும் கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.

    பெத்லஹேமிலிருந்து வாடிகன் திரும்பிய போப் பலர் கொடுத்த பரிசுகளைத் தன்னோடு கொண்டுவந்தார்.  அதில் விலை மதிக்க முடியாதது அகதிகள் முகாமில் இருக்கும் பெத்லஹேம் சிறுவர்கள் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஒரு அடையாள அட்டை.  அதில் குடும்பத்தின் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருப்பவர் இயேசு.  குடும்பத்தின் அங்கத்தினர்கள் யார் யார் தெரியுமா?  காந்திஜி, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர்.  இயேசு வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குப் போக விரும்பினால் அவர் கூட ஒரு அடையாள அட்டை இல்லாமல் போக முடியாது என்பதையும் அதனால் அவர்கள் படும் துன்பங்களையும் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் இந்தச் சிறுவர்கள்!  (இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வெஸ்ட் பேங்கில் வாழும் பாலஸ்தீனர்கள் வேலைக்காகவோ, தங்கள் நிலங்ளில் உழைப்பதற்காகவோ, ஜெருசலேமில் உள்ள தங்கள் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதற்காகவோ இஸ்ரேலுக்குள் போவதற்கு இந்த அடையாளச் சீட்டுகள் வேண்டும்).

    Mideast Popeபெத்லஹேமிலிருந்து ஜெருசலேம் போகும் வழியில் யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று தான் சென்றுகொண்டிருந்த வாகனத்திலிருந்து இறங்கி, இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் யூதர்களைக் குடியேற்ற அமைத்திருக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கிப் பாலஸ்தீன தற்கொலைப் போராளிகள் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்கக் கட்டியிருக்கும், பிரமாண்ட கான்கிரீட் சுவரில் ‘போப் அவர்களே, நியாயத்தைப் பற்றிப் பேச எங்களுக்கு யாராவது தேவை’ என்று பெயின்டால் எழுதப்பட்டிருந்த இடத்தில் சுவரில் தலையை வைத்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். பாலஸ்தீனர்கள் தினம் தினம் இல்ரேலுக்குப் போய்வருவதில் உள்ள கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.  இவர் கிறிஸ்தவ மதத்தினராயினும் பாலஸ்தீன முஸ்லீம் அகதிகள் படும் கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்து அவர்களுக்காக இஸ்ரேல் அரசிடம் நியாயம் கிடைக்க வேண்டியிருக்கிறார்.  அது மட்டுமல்ல முதல் முதலாக போப்பின் இணையதளத்தில் (web site) பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி ‘பாலஸ்தீன நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இது பாலஸ்தீனர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.

    சாலை வழியாக பெத்லஹேமிலிருந்து ஜெருசலேம் சென்றால் அரை மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.  ஆனால் போப் இஸ்ரேலியர்களைத் திருப்திப்படுத்த முதலில் டெல் அவிவ் சென்றார்.  அங்கிருந்து தன் பயணத்தைத் தொடர்ந்து ஜெருசலேம் சென்றார்.  போப் கான்கிரீட் தடுப்புச் சுவரில் தன் தலையை வைத்துப் பிரார்த்தனை செய்ததை அறிந்த இஸ்ரேல் அரசு உடனேயே தாங்களும் கஷ்டப்பட்டதாகப் போப்பிற்குத் தெரிவிக்க விரும்பி ஸயனிஸம் (யூதர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று முயன்று அதில் வெற்றி கண்ட இயக்கம்) தோன்றியதற்கு முக்கிய காரணமாக இருந்த தியோடர் ஹெர்ஸல் என்பவரின் கல்லறைக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைக்க ஏற்பாடு செய்தனர்.  இப்படி யூதர் ஒருவரின் கல்லறைகுச் சென்று மலர் வளையம் வைத்த முதல் போப் ஃபிரான்ஸிஸ்தான்.  இதே ஹெர்ஸல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரோமில் அப்போதிருந்த போப்பைச் சந்தித்து தனி நாடு நிறுவப் பாடுபடும் அவருடைய முயற்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டபோது அந்த வேண்டுகோளை போப் நிராகரித்துவிட்டார்.  அதனால் இப்போது ஹெர்ஸல் கல்லறைக்கு போப் சென்றது யூதர்களுக்குப் பெரிய ஆதரவின் அடையாளமாகத் தெரிகிறது.  மேலும் யூதர்களின் பெயர்பெற்ற டேவிட் அரசரின் கல்லறை இருக்கும் இடம் என்று யூதர்களாலும் இயேசு கடைசியாகத் தன் சீடர்களோடு இரவு விருந்தை உண்டதாகக் கிறிஸ்தவர்களாலும் உரிமை கொண்டாடப்படும் ஸயன் மலைக்குன்றில் போப் பிரார்த்தனை நடத்தினார்.

    2000-த்தில் இரண்டாவது ஜான் பால் (John Paul II) முதல் முதலாக யூதர்களின் புண்ணிய இடமான மேற்குச் சுவருக்குப் போனபோது அவர் பெயரில் இஸ்ரேல் தபால்தலை வெளியிட்டது.  இப்போது போப் ஃப்ரான்ஸிஸ் கான்கிரீட் சுவரில் தலைவைத்துப் பிரார்த்தனை செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் பொருட்டு அவர் பெயரில் தபால்தலை வெளியிடப் போவதாக பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் போப்பிடம் கூறினாராம்.

    சாதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போப்கள் அங்குள்ள நிலவரம் பற்றி எதுவும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.  ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுப்பானேன்’ என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.  ஆனால் போப் ஃப்ரான்ஸிஸ் அப்படியல்ல.  உலகில் சமத்துவமின்மை நிலவுவதைக் கண்டிக்கும் இவர் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ வேண்டும், அப்படி ஏற்படும் அமைதி பாலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்த பிறகு ஏற்படும் அமைதியாக இருக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

    போப் ஃப்ரான்ஸிஸ் எல்லா மதத்தினரையும் சந்தித்திருக்கிறார்.  ஜோர்டானுக்குச் சென்று அங்குள்ள முஸ்லீம் அரசரைப் புகழ்ந்திருக்கிறார்.  இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற இடமான செப்பல்கர் (Sepulcher) கோவிலில் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்.  யூதர்களின் புண்ணிய தலமான மேற்குச் சுவரில் தலையை வைத்துப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.  எந்த மதத்தையும் குறைத்துப் பேசவில்லை.  மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட வேண்டிய அவசியத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுதுரைத்திருக்கிறார்.

    எல்லா இடங்களிலும் போப் ஃப்ரான்ஸிஸ் பிரர்த்தனை செய்திருக்கிறார்.  இதற்கு மேலும் இஸ்ரேல் ஜனாதிபதி பெரெஸையும் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸையும் வாடிகனில் உள்ள தன் அப்பார்ட்மென்டிற்கு பிரார்த்தனை செய்ய அழைத்திருக்கிறார்.  (போப்பிற்குரிய பெரிய பங்களாவில் இவர் வசிக்கவில்லை.  எளிய வாழ்க்கை நடத்தும் இவர் ஒரு அப்பார்ட்மென்டில்தான் வசிக்கிறார்.  பிரார்த்தனை மூலம் எதையும் சாதிக்கலாம் என்று நம்புகிறார்.  இந்தப் பிரார்த்தனை சமாதானப் பேச்சு போன்றதல்ல; இதனால் பெரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று பத்திரிக்கையாளர்களும் சில தலைவர்களும் கூறினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இது ஒரு ஆக்கமுறையான (positive effect) எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

    இந்துத்துவம் என்று பேயாக அலையும் ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்த, புதிதாகப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் மோடியின் மூலம் இந்தியா முழுவதும் இந்துத்துவத்தைப் பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் போப் ஃப்ரான்ஸிஸைப் பின்பற்றுவார்களாக.

    பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் வேறு இடத்தில் வசிக்கும் தன் தாயை அடிக்கடி சென்று பார்த்து வருவாராம்.  தாயின் மேல் அவ்வளவு பாசமாம்.  மோடியின் தாயார் மோடிக்கு இனிப்பு வழங்குவதைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம்.  இவர்கள் இருவரும் போப் ஃப்ரான்ஸிஸின் செய்கைகளைக் கண்டு நெகிழ்ந்து போனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பகைமையே ஏற்படாது.

     
     
     
     
    படம் உதவி:

    http://thinkprogress.org/world/2014/05/29/3442219/pope-francis-middle-east-prayer-summit-is-more-about-religion-less-about-politics/
    http://thinkprogress.org/wp-content/uploads/2014/05/AP661693373459.jpg

    Share
  • மறக்க முடியாத மதுரை – 5

    இசைக்கவி ரமணன்

    rama
    மதுரை டவுன் ஹால் ரோட்டைப் பார்க்காதவர்களுக்கு மனித வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ரயில்வே நிலையம் இருக்கும் சாலையில் உள்ள டவுன்ஹால் என்ற அரங்கில் துவங்கி, மீனாட்சி கோவிலின் மேலக்கோபுர வாசல் வரை செல்லும் இந்தச் சந்தை, சாலை என்பது ஆனாலும் ரொம்பத்தான் மிகை என்கிறவர்களுக்குச் சொல்லுவேன். சென்னையில் ‘பிராட்வே’ பார்த்திருக்கிறீர்களா? அறவே குறுகலான சந்துக்கு ஆங்கிலேயன் பெயர் வைத்தான் என்பதால் சரியாகி விடுமா?

    ra

    நான்மாடக் கூடலான மதுரையை மேலிருந்து பார்த்தால் அழகான சதுரம் புலப்படும். மீனாட்சி திருக்கோவில் மையம். உள்ளேயே ஆடிவீதி; பிறகு சித்திரை, மாசி, ஆவணி வீதிகள்; முடிவாய் வெளி வீதி. இவ்வளவுதான் அன்றைய மதுரை. அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்பக் கச்சிதமாக அமைக்கப்பட்ட அழகிய, சிறிய நகரம் மதுரை. ஆடி வீதியிலிருந்து வெளி வீதி வரை உள்ள அமைப்பில், பலப்பல சிறு வீதிகள் சிற்றோடைகளாய் நெளிந்து, திருக்கோவிலையே வந்தடையும். அமைக்கப்பட்ட இந்தப் பகுதியை விரிவுபடுத்த முடியாது. மேலும் நெருக்கலாம். இந்த நெருக்கலின் நிதர்சனமே டவுன் ஹால் ரோடு!

    ra1

    இரண்டு எட்டு எடுத்துவைத்தால் எதிர்ப்புறம் சென்று விடலாம். வைத்துத்தான் பாருங்களேன்! ஓரெட்டு வைக்கும் முன்னேயே, ஓரெட்டுப் பின்னுக்குத் தள்ளும் முரட்டுப் போக்குவரத்து! டவுன் ஹாலிலிருந்து மேலக்கோபுர வாசலை வந்தடையச் சில நிமிடங்களே போதும்! நடந்து பாருங்களேன்! அங்கங்கே அசைய முடியாதபடி நிற்கவைத்துவிடும் கூட்டம். அடிக்கடி, பச்சைக்குதிரை தாண்டுவோமா என்று தோன்றும் நெருக்கடி. அல்வாக் கடை, நேர்த்திக்கடன் ஊர்வலம், ‘வக்கப் பிரி’ சூதாட்டம், திரு சொக்கலிங்கத்தின் ‘விஜயா பதிப்பகம்’, ‘இஞ்சி’ என்ற சரக்கைச் சரளமாக விற்கும் வெற்றிலை பாக்குக் கடைகள், இந்து பத்திரிகையின் ஏஜெண்டான திரு ஜகன்னாதன் அவர்களின் அலுவலகம், அங்கே பலவிதமான சரித்திரத் தகவல்களைத் தேதிவாரியாகச் சொல்லும் சுந்தரராஜன், பழங்களைத் துவம்சம் செய்து கண்ணாடி டம்ளரில் வண்ணமயமாக விற்கப்படும் ‘மிக்சர்,’ விரட்டிக் கொண்டே இருக்கும் போக்குவரத்துக் காவல்துறை, அதற்கு மிரளாமல் விடாப்பிடியாய்க் குறுக்கே வண்டிகளை நிறுத்தும் முரட்டுக் குணம், ஊர்மீது கவிழ்ந்துகொண்டு உறுத்தித் துரத்தும் மதுரையின் பிரத்யேகமான வெய்யில், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புதுச்சேலை, பட்டுவேட்டிச் சட்டை, கனத்த பாவாடை என்று நந்தவனத்து நிலவொளியில் பவனி வருவதுபோல வளைய வரும் மருதைக்காரர்கள், வண்டிவண்டியாய் வந்திறங்கும் வெளியூர்ப் பயணிகள், அவர்களை வாரி விழுங்கக் காத்திருக்கும் ‘கயிடு’கள், அவர்கள் பேசும் மதுரை இந்தி, மதுரை பெங்காலி, மதுரைத் தெலுங்கு, எல்லாவற்றையும் அசையாமல் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் காலத்தின் கோலமான மேலைக் கோபுரம், இதுதான் டவுன்ஹால் ரோடின் சுருக்கம்.

    சொட்டுத் தண்ணீர்கூடக் கலக்காமல், ஆரஞ்சுகளை அப்படியே ‘மிஷினி’ல் பிழிந்து கொடுப்பார் மாணிக்கம். சாட்டையின் கடைசித் துண்டை மீசையாக்கி வைத்திருப்பார்! அந்த மீசையின் துல்லியமான முனைகளுக்குப் பூர்த்தி தரும்படிக் குங்குமப் பொட்டு. அரைக்கைச் சட்டைதான். பாட்டுப் பாடுவதில் உற்சாகம். அவரது பாட்டும், பிழிதலும் பொருத்தமாகவே இருக்கும். எனக்குக் காமாலை கண்டபோது ஒவ்வொரு நாளும் அவரது கடையில்தான் ஆரஞ்சு ரசம் அருந்துவேன். ‘ச்சீனி வேண்டாம், குளுகோசு ச்சேத்துக்குவோம்,’ என்று எனக்காகப் பிறையில் தனியே வைத்திருப்பார். இயல்பாகவே இனிக்கும் பழரசத்தில், க்ளுகோஸ் சேர்த்தே கொடுப்பார். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. காமாலையை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாணிக்கம்தான் எனக்குக் கனிவாகவும், கண்டிப்பாகவும் சொன்னார்: ‘தம்பி! கண்ணுல மஞ்சக் கட்டிருச்சி; வியாதியோடு வீம்பு பிடிக்கிறது வீரமாயிறாது; நமக்கு ஒண்ணுன்னா அது நமக்கு மட்டும் இல்ல தம்பி. நம்மச் சாந்தவங்களுக்குந்தேன்; நீங்க வயித்தியரப் பாக்காம சூஸைக் குடிச்சிட்டுத் திரியறதப் பாத்தாய்ங்கன்னா என்னபாடு படுவாய்ங்களோ! செவத்த வச்சித்தேன் சித்திரம்பாய்ங்க பெரியவய்ங்க. நீங்க மொத ஊரப்பாத்துப் போய்ச்சேருங்க. இனிமே சூஸு கொடுக்கமாட்டேன்; சொல்லிபுட்டேன்,” என்று க்ளுகோஸ் பாக்கெட்டைத் திருப்பித் தந்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

    உடனே புறப்பட்டு ஊருக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டேன். உடம்பு சரியாக ஒன்றரை மாதங்கள் பிடித்தன. இன்று நான் உயிரோடு இருப்பதற்கு, எந்த விதமான உறவுமில்லாமல், மாணிக்கம் சொன்ன அறிவுரையும் ஒரு காரணம் என்பதை, இந்த முறையும் நான் டவுன் ஹால் ரோட்டில் திரியும்போதும் நன்றியோடு நினைத்தேன்.

    மாணிக்கத்தைக் காணவில்லை. அவர், எங்கிருந்தாலும், யாருக்காவது, வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாய் ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டுதான் இருப்பார், பாடிக் கொண்டே, மீசையைப் பெருமையுடன், தடவாமல் பார்த்துக்கொண்டே!

    புகைப்படங்கள் : ரமணன்

    Share
  • பெற்றோர் கற்க வேண்டியது

    எஸ் வி வேணுகோபாலன்

    ameமொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது என்று சிந்தித்தார்…கடுமையாகப் போராடி முதல் வகுப்பில் சேர்த்துவிடப்பட்ட மொகலம்மா பிறகு திரும்பிப் பார்க்க நேரவே இல்லை…கல்லூரிப் படிப்பையே அழகாக முடித்துக் காட்டினார். அசையவும், நகரவும் இயலாத ஒரு பெண் பிறகு எத்தனை பேரை அசைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

    ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மொகலம்மாவின் தாய் போராடி வந்தார். ஒரு கட்டத்தில் மொகலம்மா தனது தாய் முடியாது என்று நினைத்த படிக்கட்டுகளிலும் ஏறத் தொடங்கியது முக்கியமானது. தனது சிற்றூரின் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வரவு செலவு கணக்கு எழுதுவது முதல், எத்தனையோ விதங்களில் தனது படிப்பின் பயனை வழங்கிக் கொண்டிருக்கிறார் மொகலம்மா.

    பெற்றோரின் பங்கு

    தமது குழந்தைகளுக்கான கல்விக்குப் பாடு எடுப்பதில் பெற்றோர் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி பெறுதல் சவால் மிகுந்ததாக மாற்றப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் பெற்றோர் செய்யும் தேர்வு, பெற்றோர் மேற்கொள்ளும் அணுகுமுறை, பெற்றோர் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை.

    குழந்தைகளின் மீதான எதிர்பார்ப்பு, குழந்தைகளது எதிர்காலம் குறித்த கலக்கம் போன்றவை பெற்றோர் உள்ளத்தில் ஆதிக்கம் கொள்கின்றன. இதன் பிரதிபலிப்பாக, குழந்தைகள் அவர்களாக என்ன விரும்புகின்றனர், என்ன தேவையில்லை என்று கருதுகின்றனர் போன்றவை குறித்தெல்லாம் பெற்றோர் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. உளவியல் ரீதியாக இரண்டு பக்கங்களிலும் இதனால் நேரும் அதிர்ச்சியும், அதன் தொடர் நிகழ்வுகளும் அதிகம் பேசப்படாது போகின்றன.

    பெற்றோர் பொறுப்பில் நுட்பமான மாற்றங்கள்

    பெற்றோர் பொறுப்பு என்ற அம்சத்தில் கடந்த பத்து இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் நுட்பமான மாற்றங்கள் ஒரு தனி ஆய்வுக்கு உரியவை. புதிய தாராளமய காலத்தின் தாக்கம் இதிலும் இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா? அது மட்டுமின்றி, ஐம்பதுகள், அறுபதுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த தலைமுறை பெற்றோர் அவர்களும் கல்வி பெற்று முன்னேறியவர்களாக மாறுகையில் தங்களுடைய குழந்தைகளது கல்வி விஷயத்தில் அவர்களது ஈடுபாடு என்பதன் தன்மை முந்தைய தலைமுறை பெற்றோர் கொண்டிருந்த ஈடுபாட்டின் தன்மையிலிருந்து மாறுபட்டு வந்திருப்பதில் வியப்பில்லை. நாம் இங்கே விவாதிக்க இருப்பது, அந்த ஈடுபாடு என்பது வழிகாட்டுதல்-ஒத்துழைப்பு-பேருதவி என்ற வகையிலிருந்து குறுக்கீடு-தலையீடு-முட்டுக்கட்டை என்கிற இன்னோர் எல்லை வரை பயணம் செய்வது பற்றியதுதான்.

    இன்னும்கூட சிற்றூர்களிலிருந்து முதல் தலைமுறை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்கல்விக்கும் இன்றும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சமூகத்தின் தட்டுக்களில் அடுத்த முனையில் உயர் கல்வி பயின்ற மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்துவிட்ட குடும்பங்களையும் பார்க்கிறோம். இந்த முரண்பாட்டின் எதிரொலியும் இப்போதைய பெற்றோர் நடவடிக்கைகளில் தென்படுவதைப் பார்க்க முடியும்.

    கல்வி எதற்காக?

    கல்வி என்பது சமூக மதிப்பீடு என்ற காலம் ஒன்று இருந்தது. அது தேவையில்லை, வாழத் தெரிந்தால் போதும், சொத்து இருந்தால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்ச சிந்தனைகளோடு முட்டி மோதி கல்வியின் வளர்ச்சி ஏற்படவே செய்தது. கல்வி நாகரிகத்தின் அடையாளம் என்ற வரையறையை முன்வைத்தாலும், சமூக பாகுபாடுகளின் தாக்கத்தின்முன் கல்வி பெற்றவர்களும் தங்களை ஒப்புக் கொடுத்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. படிப்பு என்பது வேறு, கால காலமான சமூக வழக்கம் என்பது வேறு. அந்த சமூக வழக்கத்தில் ஊறிய சிந்தனைகளைத்தான் நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டும் என்ற தேர்வு தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால் கல்வி இதற்கான ஒரு வேகத் தடையை நிச்சயம் ஏற்படுத்தவே செய்கிறது. அது விரிந்த விவாதத்திற்கு உட்பட்ட பொருள்.

    இந்தப் பின்புலத்தில் பெற்றோரின் இயங்குதல் வெவ்வேறு முறைகளில் அமைகிறது.

    எந்த மாதிரியான ஊடாட்டம் ஆரோக்கியமானது?

    குழந்தைகள் வளர்ச்சியில் பெற்றோர் என்ன மாதிரியான முறையில் ஊடாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பலர் ஏராளம் சொல்லியிருக்கின்றனர். மருத்துவ உலகம்-குறிப்பாக உளவியல் மருத்துவம் அருமையான அம்சங்களை சமூக போக்கிலிருந்தும், தனித் தனி அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்தும் படிப்பினைகளாகவும் கூட வழங்கிக் கொண்டே இருக்கிறது.

    அதற்கெல்லாம் வெகுமுன்பே கலீல் கிப்ரான், அதிரடியாகச் சொன்ன கவிதை மொழியை உலகம் இன்னும் கற்க மறுக்கிறது.

    உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் புதல்வர்களும் புதல்வியரும் ஆவர். அவர்கள் உங்கள் மூலம் வந்தவர்களே அன்றி உங்களிடமிருந்து தோன்றியவர்கள் அல்ல.
    உங்களோடு இருப்பதனானேலேயே அவர்கள் உங்களுக்கானவர்கள் ஆகிவிட மாட்டார்கள்.
    உங்கள் அன்பைச் செலுத்தலாம் நீங்கள், உங்கள் எண்ணங்களை அல்ல.
    ஏனெனில் அவர்களுக்கே உரித்தான எண்ணங்கள் அவர்களுக்கு உண்டு….

    என்று விரியும் அந்தக் கவிதை குழந்தைகளின் தனித் தன்மைக்கு குந்தகம் விளைவிக்காத உதவிகளையே பெற்றோர் செய்யக் கேட்டுக் கொள்கிறது.

    நடைமுறையில் ‘சொன்னா சொன்ன பேச்சைக் கேட்கணும் இல்லையென்றால் எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்பதான அணுகுமுறை பெற்றோரிடம் ஆதிக்கம் செய்கிறது. நொடிக்கு நொடி தலையீடு செய்வதும் சரி, கண்டு கொள்ளாமலே விட்டு விடுவதும் சரி ஒரு புள்ளியில் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    கல்வியைக் குறித்த மட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் இங்கே சற்று காண்போம். இப்போதைய கல்வி முறையின் வேகத் தன்மை, போட்டி உலகம், சம வயதில் உள்ள குழந்தைகளை ஒப்புநோக்கும் பிரச்சனை இவையே அதிகம் கவனிக்கத் தக்க விஷயங்களாக உருப்பெற்று வருகின்றன.

    சலவை எந்திர உளவியல் போக்கு

    பள்ளியில் தொடக்கநிலை வகுப்பில் சேர்த்ததும், இனி அடுத்தடுத்த வளர்ச்சியை இந்த நிறுவன ஏற்பாடே கவனித்துக் கொள்ளும் என்று கருதுகிற தன்மை அதிகமாகி வருகிறது. அவ்வப் பொழுது எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதனைச் செலுத்தி வருவது; நன்கொடையோ, புத்தகங்களோ, இதுவோ, அதுவோ என்ன கேட்டாலும் கொட்டிக் கொட்டிச் செய்துவிட்டு பள்ளி இறுதி வகுப்பு, பிளஸ் 2, பின்னர் உயர் கல்விக்குத் தகுதியாக வெளியேறி விட்டால் போதும் என்கிற மனப்பான்மை அது! அங்கே என்ன நடக்கிறது; என்னவிதமான கல்வி கிடைக்கிறது; குழந்தையின் பன்முகத் தேடலுக்கு ஊக்கம் பிறக்கிறதா, முடங்கிப் போகிறதா என்ற எதையும் பெற்றோர் அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை.

    மேற்கண்ட அணுகுமுறையை ‘சலவை எந்திர உளவியல்‘ (WASHING MACHINE PSYCHOLOGY) என்ற பெயரால் அடையாளப்படுத்தலாம். துணிமணிகளை தனித்தனியாக எடுத்து, தண்ணீரில் அழுக்கு போக அலசி, சலவைக் கட்டியைப் பயன்படுத்தித் துவைத்து, வெளுத்து, அலசிப் பிழிந்து உலர்த்திய காலம் இப்போது மாறிவிட்டது; பொறுப்பை ஓர் எந்திரத்திடம் ஒப்படைத்து தண்ணீர், சலவைப் பொருள், வெப்ப அளவு, துவைக்க வேண்டிய துணிக்கேற்ற வேக அளவு இவற்றை மட்டும் சரி பார்த்து விசையை அழுத்திவிட்டு நாம் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடலாம். எந்திரம் அதன் வேலையை முடித்தபின் துணியை எடுத்து உலர்த்தினால் போதும். அதிநவீன எந்திரம் கிடைத்தால் அதுவே துணிகளை உலர்த்தியும் கொடுத்துவிடும்.

    இப்படி பட்டும் படாத தன்மை குழந்தைகளை ஆரம்ப நிலையில் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு உயர் கல்விக்குப் போகும் நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான பழியை அவர்கள் மீதே சுமத்துவதில் முடிகிறது. காசு கொடுத்தால் போதும்; அதோடு என் கடமை முடிகிறது என்ற போக்கு. குழந்தைகளது நலனில் உண்மையான பாத்திரம் வகிக்க விடுவதில்லை. மாணவர்களிடம் தோன்றும் முரட்டுத் தனம், தகாத சேர்க்கை, தவறான பழக்க வழக்கங்கள், எந்தத் தீய செயலுக்கும் ஆட்பட்டுவிடும் அபாயம் இவற்றுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் காரணமாகிறது. அருமையான குழந்தைகள் முடங்கிப் போவதும் நேர்கிறது.

    அர்ச்சனா எத்தனை மதிப்பெண் வாங்கினால் எனக்கென்ன?

    இன்னொருபுறம் ஓயாத தலையீடு, ஒப்பு நோக்கல் பிரச்சனை. மதுரை எஸ் பி ஓ ஏ மாணவர் கார்நியோ நிமலன் (தி இந்து: திறந்த பக்கம்:மார்ச் 11, 2012) எழுதியிருந்த கட்டுரையில், “தேர்வுகளில் எனது மதிப்பெண் பற்றிப் பேசுங்கள் என் தந்தையே, அர்ச்சனா எவ்வளவு வாங்கி இருக்கிறாள் என்று எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று பொரிந்து தள்ளி இருந்தார். போட்டி எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருப்பதில் தவறில்லை. என் பெற்றோருக்கும் அவள் பெற்றோர்க்கும் எதற்கு போட்டி என்று மேலும் எழுதுகிறார் அந்த மாணவர்.

    மதிப்பெண் பட்டியல் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர், 99 மதிப்பெண்கள் வாங்கினாலும் தனது மகள் ஏன் நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்று வாதம் செய்கின்றனர். இது ஏதோ பத்தாம் வகுப்பு காலத்தில் அல்ல, ஏழாம் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கே இந்த சோதனை. கொண்டாட வேண்டிய குழந்தைகளை ஓயாது துரத்தித் துரத்தி வெறுப்படைய வைப்பது மோசமான உளவியல் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.

    மைதானமே இல்லாத பள்ளிக்கூடங்கள்

    குழந்தைகளுக்கு பாடத்தின் மீது மட்டுமே கவனம் வேண்டும் என்ற வகையில், விளையாட்டு நேரத்தை அவர்களுக்கு மறுப்பது அவர்களை வேறு வகையில் தங்களது கேளிக்கைகளைத் தேர்வு செய்து கொள்ளத் தூண்டுகிறது. வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப்படும் பிள்ளைகள் கடைசியில் அலைபேசி, கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்களில் மூழ்கி தங்களது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நல்ல மதிப்பெண்களுக்காக விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில் சேர்க்கக் கூட தயங்குவதில்லை பெற்றோர்.

    மதிப்பெண்கள் குறித்த பெற்றோரது பதட்டத்தின் மிகப் பெரிய சோக வெளிப்பாடுதான் பெருகிவரும் ‘போர்டிங்’ பள்ளிகள். பல மைல் தொலைவுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர் மாணவர்கள். குழந்தைகளை ஜெயிலில் போட்டு, பின்னர் பெயிலில் எடுத்துப் பார்த்துவரும் பெற்றோர் என்று இதைத் தான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சோகமாக வருணிக்கிறார்.

    கல்வி என்பது மூளைக்கான விஷயம் என்ற பெற்றோரின் தவறான புரிதலால் குழந்தைகளுக்கான கல்வி பலவித வாழ்க்கை அம்சங்களையும் உள்ளடக்கியது என்பது பிடிபடாமலே போகிறது. துள்ளாட்டமான கல்விப் பயணம் வாடி வதங்கிய களைப்பான நகர்த்தலாக மாறிவிடுவதில் பெற்றோரின் வருந்தத் தக்க பங்களிப்பு சேர்ந்திருக்கிறது. அவர்களது போதாமை அல்லது அவர்களது பிடிவாதம் அல்லது அவர்களது பரிதாபத்திற்குரிய குழப்பம் இதற்கு காரணமாகிறது. வறுமை, பொருளாதார நெருக்கடி இவை ஏற்படுத்தும் சிக்கல்கள் தனியே விவாதிக்க வேண்டியவை.

    கசங்கிப் போகும் மலரின் இதழ்களாய்

    unnamedதங்களைப் பெருமைப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோராக எல்லோரும் இருக்க விரும்புகிறோம். சங்கடமான எந்த இடைச் செருகலையும் நாம் கடந்து போகத் துடிக்கிறோம். பதட்டமான அன்றாட வாழ்க்கை குழந்தைகளின் மீதான சந்தேகமாக வெளிப்படுகிறது. பிள்ளைகள் எந்த விஷயத்தைப் பேச வரும்போதும், நாம் குறுக்கிட்டுக் கேட்கும் அவர்களது தேர்வுகள், மதிப்பெண்கள் குறித்த கேள்விகள் அவர்களது முகத்தில் படரும் வெளிச்சத்தை ஊதி அனைத்துவிடுகிறது. மற்ற குழந்தைகளின் குறும்புகள், வகுப்பறையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு, சேட்டைகள் பற்றியெல்லாம் காதுகொடுத்து கேட்பதற்கு அனுமதிக்காத வேகமான வாழ்க்கைமுறை ரசனை மிக்க பருவத்தின் அத்தனை இதழ்களையும் ஈவிரக்கமின்றிக் கசக்கிப் போடுவதாகிறது.

    கண்கள் விரிய விரிய அவர்கள் புதிதாகக் கற்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளவரும்போது எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற பதிலடி அவர்களது உளவியலைச் சிதைக்கிறது. இதன் பிரதிபலிப்பு அவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் அல்லது உயர் கல்விக்கான தயாரிப்பில் இருக்கையில் பெற்றோர் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் எரிந்து விழுவதில் காணப்படுகிறது.

    வேற்று உலக ஜீவராசிகளா?

    பத்தாம் வகுப்பு எட்டுகிற குழந்தையின் பெற்றோர் அந்த நாளிலிருந்து பதட்டமான உடைகளை அணிந்து, வேகமான உணவுவகைகளை ருசித்து, தடுமாற்றமான சாலைகளில், நெரிசல் மிக்க நேரங்களில் நடையாய் நடந்து, குழப்பமான கனவுகளுக்குப் பயந்து தூங்காமலே விழித்திருந்து வேறு ஓர் உலகத்தின் ஜீவராசிகள் மாதிரி நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர்.

    பள்ளிகளும், நண்பர்களும்,உறவினர்களும் இந்தப் பெற்றோரை வாட்டி எடுப்பது சொல்லி மாளாது. ஹால் டிக்கெட்டை கோவிலுக்குச் சென்று வைத்து அருச்சனை செய்வதிலிருந்து, பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, தேர்வு நாளன்று பள்ளி வாசலில் கும்பலாகத் திரண்டு சென்று வாழ்த்தோ வாழ்த்தென்று சொல்லி உருட்டி மிரட்டி அனுப்புவது என நடப்பு காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுக் காலங்களில் பெற்றோர் படும் பாடும், அவர்கள் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கும் பாடும் சித்திரவதை.

    ஒரு காலகட்டம் வரை பட்டப் படிப்புதான் முன்னுரிமை பட்டியலில் இருந்தது. எல்லாரும் பி ஏ, பி எஸ் சி என்று அலைந்தனர். தொண்ணூறுகளின் இறுதியில் எல்லா பெற்றோர்க்கும் பொறியியல் தேவதை கனவில் வரத் தொடங்கினாள். மருத்துவ அம்மன் ஆட்டிப் படைத்தாள். இலக்கியம், சமூக அறிவியல், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பாடப் பொருள்கள் எதற்கும் விளங்காது போனவர்களுக்கு என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.

    தனி அனுபவங்களும் பொதுவான படிப்பினைகளும்

    இதன் அவஸ்தைகளும் பெற்றோர்-குழந்தைகள் விவாதத்தில் பெருத்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நிறைய பிள்ளைகள் பாதியில் கல்லூரிப் படிப்பிலிருந்து நின்றுவிடுவது, திணறுவது, தோல்வியடைந்து நொறுங்கிப் போவது என்ற பல பாதிப்புகளை பொது விவாதங்களில் நாம் பேசுவது கிடையாது. அது தனித் தனி நபரது அனுபவம் போலவும், அவரவர் விதி என்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

    கல்வி குறித்த புரிதலில் ஏற்படும் அடிப்படை குழப்பங்களே இத்தனை பிரச்சனைகளுக்கும் தோற்றுவாய். சமூக மனிதர்கள் நாம் என்பதும், கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றப் படி என்பதும், சொந்தத் திறன்-தேடல்-பேரார்வம் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்களை வெளிப்படுத்த முடியும் என்பதும், யாரும் யாரோடும் ஒப்பிடத் தக்கவர் இல்லை என்பதும் நமக்குப் பிடிபட்டு விடுமானால் சமூகத்தின் தோற்றம் அதிசயிக்கத் தக்க விதத்தில் உருமாறும்.

    மொகலம்மா அவரது தாய்க்கு ஒற்றைக் குழந்தை அல்ல. ஆனால், படிப்பு வாசனை அற்ற அந்தத் தாய், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், உடல் ஊனமுற்றிருக்கும் மொகலம்மாவுக்குத் தான் கல்வி முக்கியம் என்று கண்டறிந்தார். இன்று அந்தக் குடும்பத்தை மொகலம்மா தனது ஊதியத்தைக் கொண்டு பொறுப்பேற்று நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார். கல்வியற்ற தாய்க்கு அவரது அடிப்படை மனித இயல்பு உரமூட்டியது. புறக்கணிப்பு, விதி, சாபம் என்ற எல்லா ஊழையும் உப்பக்கம் கண்டு உழைவின்றித் தாழாது முயற்சி மேற்கொண்டு முன்னேறும் துணிவை மொகலம்மாவுக்கு அவரது கல்வி புகட்டியது. இதுவே வாழ்க்கையின் வலிமிகுந்த ஆனால் சுவாரசியமிக்க நம்பிக்கை வழிப் பயணம்.

    *************
    நன்றி: செம்மலர் ஜூன் 2014 இதழ்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 121

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை

    இடைப்பட்ட வழி

    ”முன்பு கூறிய இரு வழிகளிலும்
    நீவிர் செல்லவில்லையென்றால்                                                                திரௌபதி for kaadukaan kaathai
    இடைப்பட்ட செவ்விய வழியொன்று காணப்படும்.
    அவ்வழி செல்லுங்கள்.

    அவ்வழிதனில்
    தேன் வடியும் பூக்களையுடைய சோலைகளும்,
    ஊர்களும், காடுகளும்
    இடையிடையே காணப்படும்.
    அவற்றைக் கடந்து சென்றால்
    ஆங்கே அரிய வழியொன்று தென்படும்.

    அங்கே துன்பம் துடைக்கும்
    தெய்வம் ஒன்று உள்ளது.
    அவ்வழியில் செல்பவர்களை
    அச்சுறுத்தாது அத்தெய்வம்;
    என்றாலும்,
    கண்டவர் நடுங்காத வண்ணம்
    அழகான தோற்றம் கொண்டு
    அவர்களை மயக்கிப்
    பயணம் தொடரவிடாமல் தடுத்திடும்.

    அதற்கு மயங்கிவிடாமல்
    நீங்கள் தொடர்ந்து சென்றால்,
    பல கிளைவழிகளைத் தன்னுள் அடக்கியிருக்கும்
    ஒன்றியிருக்கும் இடைப்பட்ட வழியான
    மதுரைப் பெருவழி காண்பீர்கள்.
    அவ்வழியை மேற்கொண்டு செல்லுங்கள்.

    இந்நிலவுலகையளந்த நெடுமுடி கொண்ட
    எம் தலைவனாம் திருமாலின் அடிகளைக்
    கண்டுதொழ நானும் போக வேண்டும்”
    என்றான் மாங்காட்டு மறையோன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  141 – 149

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:

    http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section30a.html

     

    Share