இலக்கியம்கவிதைகள்

கானல் நீர் பெண்!

-பொன்ராம் (லட்சுமி) 

சாலையெங்கும் பெண் முன்னேற்றக்
கானல் நீர்!
சறுக்கி விளையாடிய                                                                     small girl - kanal neer pen
சிறுமி…நடந்த பாலியல் வேட்டையில்
கல்லறைப் பெட்டிக்குள்
பன்னீர் ரோஜாக்களின்
கண்ணீருடன் உறங்குகின்றாள்!

வீதியெங்கும் முளைத்த
மதுப்புட்டிகளின் விளக்குக் கம்ப
வெளிச்சத்தில் ஆணாதிக்க இதய
கான்கிரீட் கட்டிடங்கள்!

பொய் வருத்தத்தில் முளைத்த
சுயநலக் கள்ளிப்புதர்களாய்ப்
போதை மருந்துப் பூக்களின்
நாற்றம்!

பெண்முன்னேற்றம் பாடிய
ஊடகத்தில் அரைகுறை
ஆடையுடன் வெண்குழல்
ஒழிப்பு விளம்பரத்தில்
யார் அங்கே வருவது?

உயரத் தெரிந்த குடும்பப்
பணிபீடப் பனைமரத்தின்
உச்சியில் தெரிந்த
நங்கை பனங்காய்களின்
கருத்துப் பரிமாற்றம்
யாருக்காக நாம்
என்றே அறியாமல்
வாழ்கிறோம்!

பனையோலைத் தாத்தாவின்
படல்காற்றுக் கண்ணீரில்
நனைந்த விறகாய்,
தூரத்துச் சிறுமியின்
கல்லாமைக்காகக்
கண்ணீர் விடுகின்றது!

கனிந்த பனம்பழமோ
மாதந்தோறும் வரதட்சணையாய்
மாறிய தூரத்து இரட்டைக்குதிரை
பூட்டிய சாரட்டில் சாரதியான
பெண்ணிற்காக
விருந்தோம்பலுக்காகக் காத்திருக்கிறது!

விதைப்பார் யாருமின்றி
நச்சென்று மண்மாதாவை
முத்தமிட்டுக் காத்திருக்கும்
விழிப்புணர்வு வித்தை
விதைக்க மறந்த ஆணாதிக்கம்
எங்கே?

பனைமரத்தின் வேர்களில்
புரையோடிக் கொண்டிருக்கும்
சாதி, பாலியல் வன்முறைக்
கிருமிகளை அழிக்க மந்திரமாய்
மாற ஔவையாருக்கு
எங்கே போவது?

                            

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க