உன்னைப் போலவே…
-கீதா மதிவாணன்
ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!
உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
உயிர்க்குடத்தில் கருவானது!
உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
உடுத்தவும் உரிமையுடையது!
உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
சிந்திக்கவும் கூடியது!
உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
அணைக்கவும் தலைப்பட்டது!
உன்னைப் போலவே உணரவும் புணரவும்
மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!
சாமான்யமாய் எண்ணிவிடாதே…
சாபத்துக்கு ஆளாகிவிடும்
சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!