Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (110)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்களுடன் இம்மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    இங்கிலாந்து அரசியல் ஆழியில் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், ஜரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தலும்.

    அப்படி என்ன அதிர்வலைகள் என்று கேட்கிறீர்களா?

    இதுவரை காலமும் இங்கிலாந்து அரசியலில் முத்திரை குத்திவந்த மூன்று அரசியல் கட்சிகளுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் நான்காவது கட்சி ஒன்று இத்தேர்தல்களில் தனது முத்திரையை ஆணித்தரமாகப் பதித்துள்ளது.

    ஆமாம், இதுவரை காலமும் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளே இங்கிலாந்து அரசியல் உலகில் கோலோச்சி வந்தன ஆனால் இத்தேர்தலின் மூலம் யூகிப் (UKIP) – ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி எனும் கட்சி தனது ஆளுமையை நிலைநாட்டியுள்ளது எனலாம்.

    நைஜல் போல் ஃப்ராஜ் (Nigel Paul Farage) என்பவரின் தலைமையின் கீழியங்கும் யூகிப் எனும் கட்சியே இப்போது இங்கிலாந்து அரசியல் வானில் நான்காவது நட்சத்திரமாக உதித்துள்ளது.

    sakthidasan1 ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம்          வெளியேற வேண்டும் என்பதை முக்கியக் கொள்கையாக வைத்து இங்கிலாந்தினுள் வரும் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கையை மறுதலிக்கும் கொள்கையையும் பிரதிபலிக்கும் இவரது கட்சி, வரலாற்று முக்கியத்துவம் பெறக்கூடிய வெற்றியடைந்துள்ளது எனலாம்.

    sakthidasan2

    இவரது கொள்கைகள் வலதுசார் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவரது கருத்துக்கள் சிலசமயங்களில் நிறவேற்றுமை, இனவேற்றுமை கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பவையாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டு இவர்மீது பலமுனைகளில் இருந்து எழுவதுண்டு.

    ஆயினும் தான் ஒரு இனவாதி அல்ல என்று மிகவும் ஆணித்தரமாக அடித்துரைக்கும் இவர் மிகவும் வெளிப்படையாகத் தனது கருத்துகளைக் கூறும் துணிச்சலுடையவர்.

    சமுதாயத்தின் அடித்தளத்தில் நிலவிவரும் முரணான கருத்துக்களை விவாதிக்க முன்னணி அரசியல் தலைவர்கள் தயங்கும் சமயத்தில் அதன் விவாதங்களை வெளிக்கொணர்ந்து அதற்கான மேடையமைத்துக் கொடுத்தவர் இவர் என்று கூறுவதில் தவறேதுமில்லை.

    வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை எனும்போது இவரது ஆதங்கம் ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அதுவும் குறிப்பாகச் சமீபத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பிரஜைகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஜக்கிய இராச்சியத்தினுள் நுழையும் உரிமை பெற்றிருப்பதுவே.

    இவர் குறிப்பிடும் மற்றொரு கருத்தானது நன்கு கல்வித்தேர்ச்சி பெற்று இங்கிலாந்தின் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய இந்தியர்களைத் தடுத்து எவ்விதக் கல்வித் தகைமையும் இல்லாத, இங்கிலாந்து அரசாங்க உதவியில் தங்கியிருக்கக்கூடியவர்களைக் கட்டுப்பாடின்றி உள்ளே விடுவது எவ்வகையில் நியாயம் என்பதே.

    நடந்து முடிந்த இந்தத் தேர்தலானது ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் பலவித சர்ச்சைகளைக் கிளப்பி பலமுனை விவாதங்களை முடுக்கி விட்டுள்ளது.

    கட்சிகள் ஒவ்வொன்றும் தத்தமது தலைமைகளை மீண்டும் பரிசீலிக்கத் தொடங்கி உள்ளன. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றியடைய வேண்டுமானால் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

    தேர்தலில் இங்கிலாந்தில் மட்டுமல்ல, முக்கியமான ஜரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்கால நடைமுறைகளில் அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.

    இத்தேர்தல்களைத் தொடர்ந்து நடந்த ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் பேசிய இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் அபிலாஷைகளை உள்வாங்க வேண்டிய தேவை ஜரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளது எனவும், ஜரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பில் நிச்சயம் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

    இதனை ஆதரித்து பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியும் பேசியது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து அரசியல் அரங்கத்தில் எழுந்த ஆர்ப்பரிப்பு அலைகள் தொடர்ந்து இங்கிலாந்துப் பொதுத்தேர்தல் வரை போகுமா? இல்லையானால் இது வெறும் ஜரோப்பிய எதிர்ப்பு அலைதானா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்,
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

    — சக்தி சக்திதாசன்

    என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

     

     

    Kannadasan

    எழுபதுகளில் புலம்பெயர்ந்த ஒரு புலம்பெயர் தமிழனின் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் எவ்வகையில் விழுந்தார் எனும் கோணத்திலே எனது இந்த சிறிய பதிவு அமைகிறது.

    நாம் பிறந்த மண்னை விட்டு வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறி தமது வாழ்வை வெவ்வேறு இடங்களில் அமைத்துள்ளோம்.

    அவ்வகையில் எழுபதுகளின் நடுப்பகுதியில் மேற்படிப்புக்காக நான் பிறந்த என் தாய்மண்ணாம் ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் எனது வாழ்வினை அமைத்துக் கொண்டவன் .

    என்னைப் போன்ற எனது நிலையில் உள்ள அநேகம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

    எனது வாழ்க்கையில் எனது தாய்மண் நினைவுகளோடு என்னை பிணைத்து வைத்துப் பார்க்கும் கவியரசரின் பாடல் ஒன்றை இங்கு எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

    கவியரசர் தானே தனது வார்த்தைகளில் ” நான் கவியத்தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன் ” என்று தன்னைப்பற்றிய விளக்கத்தை அழகாக அளித்துள்ளார்.

    ஒரு நாயகி தன் நாயகனின் பிரிவை எண்ணிப் பாடும் இந்தப் பாடலை நான் எனது தாய்மண்ணைப் பற்றிய பிரிவுத்தூயர் வாட்டும் போதெல்லாம் எண்ணிப்பார்த்து எனது மனதைத் தேற்றுவதுண்டு.

    கவியரசரின் தனித்துவமே அதுதான். எந்தவொரு சூழலில் நாம் எம்மைக் கண்டாலும், எத்தகையதோர் உணர்வுத் தாக்குதலுக்கு நாம் உள்ளாகினாலும் அங்கெல்லாம் அந்த ரணத்திற்குக் களிம்பாக அவரது ஏதாவது ஒரு பாடல் எமக்குக் கை கொடுக்கிறது.

    பாலும் பழமும் எனும் படத்தில் பீ.சுசிலாவின் இன்னிசைக்குரலும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி அவர்களின் இனிமையான இசையும் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டிய பாடலொன்றிலிருக்கும் இரு பத்திகள் எனது தாய் நாட்டோடு எனைப் பிணைக்கும் வரிகளாய் அமைந்திருக்கிறது.

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா…

    ஆமாம் புலம் பெயர்ந்தோர் வாழ்விலே தாய்நாட்டின் எண்ணங்கள் தானே மிகுந்திருக்கின்றன. அவ்வெண்ணங்களின் துணையாலே பாலம் அமைத்து எனது தாய்நாட்டை நோக்கி நான் இரவும் பகலும் நடப்பதைப் போன்ற ஒரு இனிமையான உணர்வை எனக்கு கவியரசரின் வரிகள் ஈந்திருக்கின்றன.

    தாய்மண்ணை விட்டு இற்றைக்கு சுமார் நாற்பது வருடங்களாய் பிரிந்திருக்கும் என் மன உணர்வுக்கு,

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா.. ,
    இரு கை கொண்டு வணங்கவா..

    எனும் வரிகள் எத்தனை இதமாய் இருக்கிறது என்பது என்னைப்போலுள்ளவர்களின் உணர்வுகளாலேயே புரிந்து கொள்ள முடியும்.

    35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு எனது தாய்மண்ணில் மீண்டும் நான் கால்பதித்தபோது மீண்டும் என் மானசீகக் குரு கவியரசரின் வரிகள் உணர்வோடு உள்ளத்தில் சதிராடின

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேசமறந்து சிலையாய் இருந்தால்….
    பேசமறந்து சிலையாய் இருந்தால்…
    அதுதான் தெய்வத்தின் சந்நிதி…..
    அதுதான் காதல் சந்நிதி

    ஆமாம் அத்தனை காலம் பிரிந்து இருந்த எனது தாய்மண்ணின் மீது கால்கள் பதித்தபோது வார்த்தைகளுக்கு அங்கே என்ன வேலை பேச மறந்து சிலையாக இருந்து எனது தாய்மண்ணை தெய்வசந்நிதியாக எண்ணி வணங்கத்தானே முடியும் !

    தாய்மண்ணின் மீதுள்ள காதலுக்கு அதுதானே சங்கமாகின்றது.

    புலம்பெயர்ந்தவன் எனும் வகையிலே எனது மொழியயும் எனது தாய்மண்ணின் மீதான பாசத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு என் மனதில் மானசீகக் குருவாக இருந்து என்னை வழிநடத்தும் கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்களாகத் திகழ்கின்றன.

    அத்தனை முத்துக்களையும் உள்ளடக்கிய முத்துமாலையென கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் ஒரு புலம்பெயர் தமிழனாக என்னுள்ளத்தில் கொலுவிற்றிருக்கிறது.

    ஒரு இளைஞனாக புலம் பெயர்ந்த என் வாழ்க்கைப் பயணத்தில் அகவைகள் நாற்பது அவசரமாக ஓடியே போய்விட்டது. இந்த காலங்களில் எத்தனையோவிதமான இன்ப துன்ப நிகழ்வுகளுக்குள்ளால் நான் உருண்டோடிப் போயிருக்கிறேன்.

    அந்தச் சமயங்களிலெல்லாம் கவியரசரின் அற்புதமான இலக்கியங்கள் தான் எனக்கு கைகொடுத்து எனது உணர்வுகளைச் சீராக்கியிருக்கின்றன.

    வாழ்வு என்மீது தொடுக்கும் அம்புகளின் வலிகளைத் தாங்கும் கேடயங்களாக அர்த்தமுள்ள இந்துமதம் முதற்கொண்டு அவரது பல படைப்புக்கள் என்னை இக்கட்டான சூழல்களில் வழிநடத்தியிருக்கின்றன.

    எப்படி அவரது எழுத்துக்கள் மட்டும் இத்தகையதோர் பாதிப்பை ஏற்படுத்தின ?

    அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களோடு, அதாவது ஒரு சாதாரண இளைஞனாக ஒரு குடும்பத்தலைவனாக, நட்புக்களை நம்பி பின் வஞ்சிக்கப்பட்டவராக, நல்ல மனிதர்களின் உதவியால் உயர்ந்தவராக தனது எழுத்துக்களை பிணைத்து அதனை எமக்கு அனுபவ அறிவாக ஊட்டியதால் தான்.

    அவர் நடந்த பாதைகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் போல் எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சறுக்கல்களைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்கள் உதவின.

    என் பார்வையில் கண்ணதாசன் ஒரு குன்றின் முன்னே வீற்ரிருக்கும் மாமலை போல் தென்படுகிறார்.

    எனது எழுத்துக்களுக்கு ஒரு உந்துசக்தியைத் தருகிறார். எனது கவிதைகளுக்குள் அவரின் நினைவுகள் வாழ்கின்றன.

    ஆக மொத்தம் அவரை எண்ணும் போதெல்லாம் என் விரல்களில் எழுத வேண்டுமென்ற துடிப்பெழுகின்றது.

    அவர் காவியத்தாயின் இளையமகன் மட்டுமல்ல தனித்துவமிக்க ஒரு தமிழ்மகன்.

     

     
     

     
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –எம். ஜெயராமசர்மா

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanகாலத்தை வென்றவன். காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன். சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.  முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். “முத்தைத்தரு” என்று அருணகியாரைப் பாடவைத்து – அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது. கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது. இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

    அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு “சந்தத்தை” தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

    நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. காலமும் கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.

    நாத்திகம் பேசி நாத்தழும்பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது. “நாத்தினாக இருந்தது இரண்டு மூன்று ஆண்டுகளே. “கந்தபுராணம், பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயிரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன். ஆனால், அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார். “நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன்” என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.

    கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? ” திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” என்பதாகும். அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் “கிருஷ்ணர்” படமாகும்.

    இந்தியாவிலே கடவுளை நம்பாதவர்கள் ஒரு கட்சியாகக் கூட இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளைக் கண்டனம் செய்தாலும் அதனால் கடவுளுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அதே வேளை கடவுள் நம்பிக்கையும் இல்லாமற் போய்விடவும் இல்லை. இதில் கண்ணதாசன் மிகவும் நம்பிக்கை உடையவராக இருந்த படியால்தான் படித்தவர்களும் போற்றுகிறார்கள் பாமரரும் போற்று கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

    கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு …

    தெய்வம் என்றால் அது தெய்வம்
    வெறும் சிலை என்றால் அது சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை

    என்று சொல்லும் விளக்கத்தைவிட வேறு எப்படிச் சொல்லமுடியும். இதுதான் கண்ணதாசன். சினிமாவுக்கு என்று எழுதப்பட்டாலும் உள்ளத்தில் இருப்பதுதானே வரமுடியும்.

    பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
    ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
    அவனைப் புரிந்து கொண்டால்
    அவன்தான் இறைவன்

    பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டிவது அவரின் தனித்துவம்தானே.

    ஆண்டவனின் அருள் அவருள் உறைந்து கிடந்தமையால்தான் அவரின் வார்த்தைகளில் அத்வைதம் இருந்தது. துவைதம் இருந்தது. விசிட்டாத்வைதமும் இருந்தது. வேதாந் தமும் சைவசித்தாந்தமும் கூட இருந்தது எனலாம். சரஸ்வதி அவரது நாவிலே சம்மாணம் போட்டே இருந்தாள். மேலே காட்டிய தத்துவங்களை எவ்வாறு நாசூக்காகக் கண்ணதாசன் காட்டுகிறார் பாருங்கள்…..

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
    அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
    மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
    உண்மை என்ன பொய்மை என்ன
    இதில் தேன் என்ன
    கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன
    நீ வந்த கதை என்ன

    தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
    இந்த ஊரென்ன
    சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
    வாழ்வின் பொருளென்ன
    நீ வந்த கதை என்ன

    சகல வித தத்துவங்களும் இங்கே பாமரரரும் புரியச் சொல்லி நிற்கின்றார் கண்ண தாசன். இதனால் வெற்றித்திருமகன் தானே!

    கவிஞன் என்பவன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கக் கூடாது. அவன் சொல்லும் கருத்துக்கள் உலகம் தழுவ வேண்டும், வள்ளுவர் குறள் அப்படிப்பட்டதுதான். வள்ளுவரின் பரந்து விரிந்த நோக்கால் அவரின் திருக்குறள் உலகம் தழிவியதாக இருக்கிறது. நமது கவிஞரும் அப்படியான ஒரு மனநிலையில்தான் செயற்பட நினைக்கின்றார். வள்ளுவர் அறம், பொருள், இன்பம் பற்றியெல்லாம் பாடினார். கண்ணதாசனும் அறத்தை , இன்பத்தை , பொருளை எல்லாம் பாடினார். அத்தோடு அருளையும் தமது பாட்டுக்களால் தந்தும் நின்றார்.

    சங்கரமடத்தைச் சரண் அடைந்தார். ஒருகாலத்தில் காவிகட்டியவர்களையும் சங்கரமடத்தாரையுமே சாடியவர் பின்பு தானாகவே சரண்புகுந்தார். இது அவரிடம் ஏற்பட்ட மடை மாற்றமாகும். அதே கண்ணதாசனே ” யேசுகாவியத்த ” ப்பாடி மீண்டும் தனது நோக்கை விரிவாக்கிக் கொள்கின்றார். புத்தரைப் பாடுகிறார். நபிகளைப் பாடுகிறார். சத்தியம், நேர்மை, சமத்துவம் யாவற்றையும் போற்றிப் பாடுகின்றார். இறையுணர்வு ஊறிவிட்டால் யாவும் சிறந்த கருத்துக்களாகவே வந்து நிற்கும். அதில் பல தத்துவங்கள் வந்துவிடும். வேதத்திலும், உபநிடதத்திலும், உன்னை அறிதல் என்பது அரிய பெரிய தத்துவமாகும். “தத்துவம் அஸி ‘ அஹம் பிரம்மாஸி” உபநிடதத்தின் உயிநாடியாகக் கருதப்படுகிறது. ரமண மகரிஷியும் “முதலில் நீ யார் என்பதை அறி” என்றுதான் சொல்லுகிறார். இப்படியான உயர்தத்துவக் கருத்தை கண்ணதாசன் மிகவும் எளிதாக்கி எமக்குத் தரும்விதம் அவரின் உயராற்றலைத்தான் வெளிப்படுத்துகிறது எனலாம்.

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல்  நீ வாழலாம்

    வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் வாழுவோம் என்பது எல்லோரிடத்தும் எளிதாக் வரக்கூடிய தல்ல. அதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை. “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்னும் நாவுக்கரசர் அஞ்ஞாவார்த்தை “தலை வணங்காமல்வாழுதலில்” தெரி கிறதல்லவா?

    மனமானது சமநிலைக்கு வந்து விட்டால் எதற்கும் அது ஆயுத்தமாகிவிடும். இது ஒரு யோக நிலையாகும். இதனைக் கவிஞர் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்.

    கடலளவே கிசைதாலும்  மயங்கமாட்டேன் – அது
    கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்

    இந்த நிலை சாதாரணமாக எல்லோருக்கும் வந்து விடமாட்டாது என்பதைக் கவிஞரின் வரிகள் மிக அற்புதமாகக் காட்டிநிற் கின்றன் அல்லவா?

    குழப்பங்கள் வருவது மனித வாழ்வில் தடுக்கமுடியாத ஒன்று. ஆனால் அந்தக் குழப்பத்தையும் நாம் விலக்கி மனத்தைக் கலங்க விடக்கூடாது என்கின்றார் கவிஞர்.

    மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்

    வாழ்க்கையில் குழப்பம் வந்தால் தயக்கம்வரும், அதே நேரம் நடுக்கமும் வந்தே சேரும். அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் இந்த நிலை வெவ்வேறு உருவத் தில் – வெவ்வேறு விதமாக வரும். எல்லார் வீட்டுக்கும் வாசற்படி இருப்பது போல வேதனைகளும் வீடுதோறும் இருக்கவே செய்யும். இது எத்தனை அனுபவமான ஒரு மிகப்பெரிய கருத்து. யாருமே வேதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது. எனவே …

    “கலங்காதிருமனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என ஆறுதலும் கூறுகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

    அதே வேளை …

    வந்த துன்பம் எது என்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயமிருந்தால்
    இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்

    …..

    நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

    என்று புத்தியும் கூறுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மிகவும் முக்கியமாக ஒன்றையும் சொல்லி நிற்கின்றார்…

    உனக்குக் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    எப்பொழுதும் நாம்  அனைவருமே நம்  நிலையை மட்டுமே தினமும் பார்த்துப்பார்து எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவன் நல்லாய் இருகிறானே! என்று அல்லும் பகலும் மற்றவர்களைப் பார்த்து நமக்குக் கிடைத்தவற்றையும் வீணடித்து விடுவோம். காலுக்குச் செருப்பில்லை என்பவனுக்கும் கவலை. அதே நேரம் காலே இல்லை என்பவனுக்கும் கவலை. கஞ்சிக்கு உப்பில்லை என்பவனுக்கும் கவலை. குடிக்கக் கஞ்சி இல்லையே என்பவனுக்கும் கவலை. இதில் எது முக்கியம் என்பதை உணராமல் இருப்பதே பெரிய கவலை என்பதை யாவரும் உணர்தல் வேண்டும் என்பதை கவிஞர் சொல்லுவதை விட யாராலும் இவ்வளவு எளிமையாகச் சொல்லி விட முடியாதல்லவா? எத்தனையோ பேர் எம்மைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் என்பதை ஒர் கணம் நினைத்தால் நாங்கள் படும் துன்பம் பெரிதாகவே தெரியாமல் போய்விடும் என்பதைக் கண்ணதாசன் சொல்லும் இடத்தால் அவர் உயர்ந்த கவிஞன் ஆகி நிற்கிறார் எனலாம்.

    வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத இன்பங்களும் இல்லை, .துன்பங்களும் இல்லை எனலாம். அவற்றை யெல்லாம் அவர் எங்களுக்குத் தனது கவிதைகள் வாயிலாகத் தரவும் மறக்க வில்லை.

    எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது
    எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம்
    என்பது எவருக்கும் தெரியாது 

    இது பெரிய தத்துவம்தான் ஆனால் இதில் கவிஞரின் ஒரு பங்கும் காணப்படுகிறது. சிறு கூடல்பட்டியில் இருந்து சென்னை வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை ஓரத்தில் படுக்க அங்கும் படுக்க முடியாமல் போலீஸ்காரர்களால் கண்ணாதாசன் போக்கிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்படுகிறார். அப்பொழுது அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி அமையப் போகிறது எங்கே முடியப்போகிறது என்பது அவருக்கே புரியாத ஒன்றாக இருந்திருக்கலாம் அல்லவா? இதுவும் ஒருகருத்தாயும் இருக்கலாம். அதேவேளை மனித வாழ்வை நாங்கள் தீர்மா னிக்கவும் முடியாதிருக்கும் என்பதும் கூட கருத்தாகலாம்தானே!

    சுத்திச்சுத்தி கடவுளிடம்தான் கண்ணதாசன் வருகின்றார். எதைச் சொல்லுவதானாலும் கடவுளையும் கூடவே வைத்திருப்பார்.

    நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி
    ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
    அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா — அதுதான் உண்மையின் சாட்சியம்மா

    மனிதர்களே மனட்சாட்சிக்கு மதிப்பளியுங்கள். அல்லது தெய்வத்தை நம்புங்கள். இப்படி செய்யாதுவிட்டால் அது உங்களுக்கு ஏற்றதல்ல அது நல்ல வாழ்வுக்கும் வழி வகுக்காது என்று சொல்லி எமக்கு நற்சிந்தனை வழங்குகின்றார் கண்ணதாசன் அவர்கள்.

    அவரின் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றன என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கண்ணதாசன் வாழ்கின்றார் என்றால் அவரின் “அர்த்த முள்ள இந்துமதம்” பெருங்காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது.

    முப்பத்தெட்டு வருடங்கள் கவியரசனாகப் புவியையாண்டவன் கண்ணதாசன். எழுத்தாலும், பேச்சாலும் எம்மைக்கட்டிப்போட்டவன். “வாழநினைத்தால் வாழலாம்” என்று தைரியம் கூறிய தமிழ்க்கவிஞன். ஆகவே அவன் காலத்தை வென்று , காவியமாக வெற்றித்திருமகனாகவே நிற்கிறான்.

    [எம். ஜெயராமசர்மா, மெல்பேண்]

     

     

     

     

     

     

     

    Share
  • ரசிகப்ரியா

    -நடராஜன் கல்பட்டு

     

    10349865_496511930476459_1740650219317154467_n“என்னங்க… என்னங்க…”

    “என்ன இப்போ?  காலங் காத்தாலெ என்னங்க என்னங்கன்னு என் கழுத்த அறுக்கறே?”

    “ஒண்ணும் இல்லீங்க…”

    “ஒண்ணும் இல்லேன்னா எதுக்கு என்னங்க என்னங்க?”

    “நீங்க ரொம்ப மாறீட்டீங்க.  கல்யாணம் ஆன புதுசுலெ இருந்தாப்புள இப்பொ இல்லீங்க.  அப்பொல்லாம் எப்பொவும் ’பிரேமா பிரேமா’ன்னு எம் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பீங்க.  இப்பொ என்னடான்னா வீட்டுலெ இருந்தா எப்பொவும் அந்த பாழாப் போற கணினியெக் கட்டிக்கிட்டு அழுவுறீங்க.”

    “இப்பொ என்ன செய்யணுங்கறே?  ஒட்டடெ அடிக்கணுமா இல்லே வீட்டெக் க்ளீனு பண்ணனுமா?  கண்டபடி கெடக்குற புஸ்தகங்களெ ஒழுங்கா எடுத்து வைக்கணுமா?”

    “அதெல்லாம் இல்லீங்க.  எனக்கும் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொடுத்தீங்கன்னா… நான் பாட்டுக்கு ஒரு பக்கம் ஒக்காந்து வாரப் பத்திரிகைங்க படிச்சுக்கிட்டு இருப்பேன் இல்லெ?”

    “சரி சரி இந்த மாசம் போனஸ் வருதாம்.  அது வந்ததும் ஒனக்கு ஒரு மடிக் கணினி வாங்கித் தரேன்.”

    கணினி வருகிறது வீட்டிற்கு.  கூடவே மேடத்துக்குச் சவுகரியமாக இருக்க வீட்டில் இருக்கும் மோடத்தின் இடத்தை ஒரு புதிய வயர்லெஸ் மோடம் எடுத்துக் கொள்கிறது.

    பத்தினிக்குப் பரம சந்தோஷம் படித்திடலாமே வாரப் பத்திரிகைகள் பலவும், வாங்கிடாமலே அவற்றைக் கடையில் இருந்து காசு கொடுத்து…

    பகலில்லை…இரவில்லை.  அம்மா நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணினியில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ‘சினிமா நடிக நடிகைகள் பற்றிய கிசு கிசுச் செய்திகள்’, நகைச்சுவைத் துணுக்குகள் எனப் படித்தபடி…

    “என்ன அழகாக் கதெ எழுதுறாரு இந்த மகிழன்?  பேரும் நல்லாத்தான் வெச்சுக்கிட்டு இருக்காரு.  இது நிஜப் பேரா இருக்குமா…இல்லே புனைபெயரா இருக்குமா?  எப்படி இருந்தா என்ன?  அழகாக் கதெ எழுதறாரே அவரு.”

    ஒன்று விடாமல் படித்து மகிழ்ந்தாள் மகிழனின் கதைகளைப் பிரேமா.

    இந்தப் பத்திரிகெலெதான், “வாசகர் கடிதமும் படைப்பாளிகளின் பதிலும்”னு ஒரு பகுதி இருக்கே, அதுக்கு ஒரு கடுதாசு போட்டா என்ன?  அன்றே எழுதி அனுப்பினாள் ஒரு கடிதம் பிரேமா.

    “அன்பு மகிழன் அவர்களுக்கு,

    உங்கள் கதைகள் ஒன்று விடாமல் படித்து வருபவர்களில் நானும் ஒருத்தி.  அது எப்படி சார் ஒங்களுக்கு மட்டும் இப்பிடிக் கற்பனை வருகிறது காட்டாற்று வெள்ளம் போல?  வியக்கிறேன் உங்கள் ஆற்றலைக் கண்டு!

    இப்படிக்கு உங்கள் வாசகி,

    ரசிகப்ரியா.”

    ஆவலுடன் ஒரு வாரம் காத்திருந்த பிரேமாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, பிரேமாவின் கடிதமும் அதற்கு பதிலாய் மகிழனின் கடிதமும் வந்திருந்தன.

    அன்பு ரசிகப்ரியா,

    உங்கள் மடலுக்கு நன்றி.  எனது எழுத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.  உங்களைப் போன்ற ரசிகர்களின் மடல்கள்தான் ஒரு எழுத்தாளனுக்குச் சஞ்சீவினி மருந்து.  அவனுக்கு ஊக்கம் அளித்து மேலும் சிறப்பாக எழுதிடத் தூண்டிடும் மூலமந்திரம் அவை.

    இப்படிக்கு,
    மகிழன்

    அடக்க முடியவில்லை ஆனந்தத்தைப் பிரேமாவுக்கு.  உடனே தன் மகிழ்ச்சியைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அடுத்த கணம் மற்றொரு எண்ணம்.  தனி மரம் தோப்பாகாது.  இன்னும் வரட்டும் பல பதில்கள்.  அதன் பின் அவருக்குச் சொல்லி அவரை ஆச்சரியத்தில் திக்கு முக்காடச் செய்வோம்.  அடக்கி வைத்தாள் தன் ஆசையை.

    மறு வாரம் வந்தது மகிழனின் ‘மல்லிகைப்பூ’ என்ற கவிதை.  உடனே எழுதினாள் பிரேமா கடிதம் ஒன்று.  “மகிழனின் கையில் மகிழம்பூவாய் வாசம் தந்தது மல்லிகைப்பூ” என்று.

    அதற்குப் பதிலாய் எழுதி இருந்தார் மகிழன், “மலர் மணத்தின் ரசிகைக்கு என் நன்றிகள்.”

    தொடர்ந்தன இப்படிப் பல கடிதங்களும் மகிழனின் பதில்களும்.  ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுதினாள் பிரேமா,

    “அன்பு மகிழன் அவர்களே வணக்கம்.  உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து வாழ்த்திட ஆவலாய் இருக்கிறேன்.  இது சாத்தியப்படுமா?  உங்களை எங்கு, எப்போது சந்திக்கலாம்?”

    கடிதத்துக்குப் பதில் வந்தபோது உடனே அதைக் கொண்டுபோய் கணவனிடம் காட்டித் தற்பெருமை அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அடுத்த கணம் அடக்கிக் கொண்டாள் அந்த ஆசையை.  மகிழனைச் சந்தித்துவிட்டு வந்தபின் சொல்லலாம் அவரிடம் என்று நினைத்து.  அன்று இரவு பூராவும் தூக்கம் வரவில்லை பிரேமாவிற்கு.  என்ன ஒரு பெரிய எழுத்தாளனை சந்திக்கப் போகிறாம் என்ற நினைப்பில்.

    இரண்டு நாட்களுக்குப் பின்…

    “என்னங்க… என்னங்க…”

    “என்ன பிரேமா?”

    “நாளெக்கி ஆடி வெள்ளிக் கெழமையா இருக்குங்க.  அதுனாலெ வெங்கட் நாராயணா ரோடுலெ இருக்குற வெங்கடாசலபதி கோவிலுக்குப் போயி அலமேலு மங்காவெ தரிசனம் பண்ணீட்டு வரலாமுன்னு நெனெச்சுக் கிட்டு இருக்கேங்க.”

    “சரி போயிட்டு வா.  நல்ல காரியந்தான்.  எனக்கும் சேத்து வேண்டிக்கிட்டு வா.  ஆமாம், எத்தினி மணிக்குப் போகலாம்னு இருக்கே?”

    “காலேலெ எட்டு மணிக்குங்க.  எதுக்குக் கேக்குறீங்க?”

    “நான் வழக்கமா காலேலெ ஏழரெ மணிக்கு வாக் போவேன் இல்லியா? திரும்ப எப்பொ வருவேன்னு தெரியாது.  அதான் கேட்டேன்.  ஒண்ணு பண்ணு.  எதுத்த ஃப்ளேட்டுலெ சாவியெக் குடுத்தூட்டு போ.  நீ முன்னெ வந்தியானா நீ வாங்கிக்கலாம்.  நான் முந்தி வந்தா நான் வாங்கிக்கலாம்.”

    “சரீங்க.”

    மறுநாள் காலை எட்டரை மணி.  நடேசன் பார்க்கில் ஒரு பெஞ்சில் வெள்ளை வேட்டி கட்டி வெள்ளை ஜிப்பா போட்ட ஒருவர், தலையில் போட்டிருந்த கதர் குல்லாயால் முகத்தை மூடியபடி உட்கார்ந்திருக்கிறார்.

    அங்கு அப்போது வந்த பிரேமா ஓரிரு முறை குட்டிபோட்ட பூனையாக இப்படி அப்படி நடக்கிறாள்.  அவள் மனதுள் ஓடுகின்றன சில கேள்விகள்.  நடேசன் பார்க்குக்குள் நுழைந்ததும் ரெண்டாவது பெஞ்ச் என்று தானே சொன்னார் மகிழன்.  இங்கு உட்கார்ந்திருப்பவராகத்தான் இருக்குமோ?  முகத்தை எதுக்கு மூடிக்கிட்டு இருக்கார்?  முகம் வெளியில் தெரிஞ்சா ஜனக் கூட்டம் கூடீடும்.  எதுக்குக் கூட்டம்னுதான் அப்படி மூடிக்கிட்டு ஒக்காந்து இருக்காரோ?  சரி எதுக்கும் ஒரு குரல் எழுப்பிப் பாப்போம் என்று நினைத்தவள், “சார்” என்றாள் அவர் அருகில் சென்று.

    குல்லாயை அவர் கழற்ற, “என்னங்க நீங்க எப்பிடி இங்கெ?” என்றாள் பிரேமா சற்றே தடுமாற்றத்துடன்.

    “அது ஒண்ணும் இல்லேம்மா.  நாலு ரவுண்டு நடந்து முடிச்சீட்டு திரும்பலாம்னு பார்க்கு வெளிலெ வந்தப்பொ ஃப்ரெண்டு ஒருத்தன் போனு பண்ணான், “எங்கெடா இருக்கே நீ?  ஒன்னெ அர்ஜென்டா பாக்கணுண்டா” ன்னு.

    “வீட்டுக்கு வாடா எப்பொ வாணான்னேன் நான்.  இல்லெடா மேட்டர் ரொம்ப அர்ஜென்டுடா.  நீ எங்கெ இருக்கே சொல்லு இப்பொ.  அங்கெயே வந்து பாக்குறேன்னான்.

    நான் நடேசன் பார்க்குலெ நடந்துகிட்டு இருக்கேண்டான்னேன்.  பார்க்குலெ நெரெயெ பேரு நடந்துகிட்டு இருப்பாங்கடா.  ஒன்னெக் கண்டுபிடிக்கிறது கஷ்டம்.  அதுனாலெ நீ ஒண்ணு பண்ணு.  பார்க்கு உள்ளெ நொழெஞ்சதும் ரெண்டாவது பெஞ்சுலெ ஒக்காந்திரு.  நான் பத்து நிமிசத்துலெ வந்தூடறேன்னான்.  இருபது நிமிஷம் ஆகுது இன்னும் காணும் அவனெ.  ஆமாம் நீ எங்கெ வந்தெ இங்கே?  நீயும் பார்க்குலெ தினோம் நடக்கலாம்னு முடிவு பண்ணீட்டையா?”

    “இல்லீங்க.  நான் கோவிலுக்கு வந்தேனா.  அப்பொ என் கூடப் படிச்சவொ ஒத்தி போனு பண்ணா.  பாரு நீ எங்கேடி இருக்கேன்னு.  நான் வெங்கடாசலபதி கோவிலுலெ இருக்கேன்னேன்.  அவ சொன்னாக் கோவிலுக்கு நான் வந்தா ஒங்கூட ஜாஸ்தி நாழி பேச முடியாதுடீ.  நான் இப்போ பனகல் பார்க்கு மார்கெட்டுலெ கறிகா வாங்கீட்டு இருக்கேன்.  இன்னும் அஞ்சு நிமிசத்துலெ நடேசன் பார்க்குக்கு வந்து உள்ளெ நொழெஞ்சதும் ரெண்டாவது பெஞ்சுலெ ஒக்காந்து இருக்கேன்.  நீ முந்தி வந்தெயானா அங்கெ வந்து ஒக்காரு.  ரெண்டு பேரும் பேசலாம்.  ரொம்ப நாளாச்சுடீ ஒன்னெப் பாத்துன்னா.”

    “அப்பிடீங்களா ரசிகப்ரியா அம்மா?”

    “என்னாங்க மகிழனா நீங்க?  முன்னாடியே இது எனக்குத் தெரிஞ்சிருந்தா ஒங்க கதெயெல்லாம் எழுதி முடிச்சதுமே சுடச் சுட நான் மொத வாசகியாப் படிச்சிருப்பேன் இல்லே?  ஏனுங்க எங்கிட்டெ கூட சொல்லாமெ ரகசியமா வெச்சிருந்தீங்க இந்த விசயத்தெ?  இனிமே நான் எப்பொவுமே ஒங்களெத் திட்ட மாட்டேங்க பாழாப் போன கணினியெக் கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு.”

    “சரி சரி வா வீட்டுக்குப் போகலாம்.”

     

    Share
  • காதல் நாற்பது (7)

     

    காதல் நாற்பது (7)
    உன் காதலில் சிக்கினேன் !

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    jay

    உலகின் முகமெலாம் மாறிப் போகும்,
    எவரும் அறியாது,
    என்னருகே நீ
    இன்னும் நெருங்கி
    உன் ஆத்மாவின் தட ஓசை
    எனக்குக் கேட்டது முதல் !
    வாழ்வின் பயங்கர விளிம்பில்
    மூழ்கிப் போவேன்
    என்னும் மரணப் பயத்துக்கும்
    எனது வாழ்வுக்கும்
    இடையே
    உனது காதலில் சிக்கினேன் !
    எனக்கு அது படிப்பித்தது
    வாழ்விலே,
    புதியதோர் துடிப்பு உணர்ச்சி !
    ஞானக் குளிப்புக்குக்
    கடவுள் அளித்தது எனக்கு
    இடர்க் கிண்ணம் !
    மடக்கென குடித்தேன் மகிழ்ந்து !
    என்னருகே நீ உடனிருப்பதில்
    பொங்கி எழும் இனிமை !
    இங்கோ, அங்கோ
    எங்கோ நீ இருந்தாலும்
    அந்நாட்டின் பெயரும்
    சொர்க் கத்தின் பெயரும்
    மாற்றம் அடையும் !
    நேற்று
    என்னைக் கொள்ளை கொண்டது
    உன் புல்லாங் குழலிசை !
    ஏனெனில்
    கான மிசைக்கும் தேவதைகள்
    அறியும்
    அமுத மொழியில்
    உனது பெயர் செம்மை யாய்
    உலவி வருதலால் !

    ********************

    Poem -7

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing
    The face of all the world is changed, I think,
    Since first I heard the footsteps of thy soul
    Move still, oh, still, beside me, as they stole
    Betwixt me and the dreadful outer brink
    Of obvious death, where I, who thought to sink,
    Was caught up into love, and taught the whole
    Of life in a new rhythm. The cup of dole
    God gave for baptism, I am fain to drink,
    And praise its sweetness, Sweet, with thee anear.
    The names of country, heaven, are changed away
    For where thou art or shalt be, there or here;
    And this . . . this lute and song . . . loved yesterday,
    (The singing angels know) are only dear
    Because thy name moves right in what they say.
    **********

    Share
  • வாடிக்கை மறந்ததும் ஏனோ…

    — கவிஞர் காவிரி மைந்தன்
     
    வாடிக்கை மறந்ததும் ஏனோ… பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு அவரைமட்டுமே சுட்டிக்காட்டுகிறது!

    vadikai

    மழை பொழிந்தது என்பது செய்தி. ஓருவரைக் கேட்டால் வெளுத்து வாங்கியது என்றார்.. அவர் சலவைத் தொழிலாளி! மற்றொருவரைக் கேட்டால் அடிச்சு சொல்றேன்.. இதுபோல் மழையை நான் பார்த்ததில்லை என்றார்.. அவரோ ஆசிரியர்! தன் உள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் வார்த்தைகள்தான் வாயில் வெளிப்படும்.. அதே போல் – பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு அவரைமட்டுமே சுட்டிக்காட்டுகிறது!

    வெறும் புரட்சியில் இறங்கிடலாமோ? என்கிற வரி என்னை பிரமிக்க வைத்தது.

    காதல் பாடலில் புரட்சியை இணைத்து பாடலைத்தர முடியும் என்கிற சிந்தனை எப்படிப் பிறந்தது தெரியுமா.. உள்ளமெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தம் கொடிகட்டிப் பறப்பதால் காதலிலும்கூட புரட்சி பூத்துவிடுகிறது!

    ஈரிதயங்களின் ஈர்ப்புவிசையில் மனித வாழ்க்கைச் சுற்றிச் சுழன்றிருக்க.. கருத்தொருமித்த காதலர்தம்மில் கனிந்துருகும் வார்த்தைகளின் கூட்டு இந்தப் பாட்டு! என்ன பாத்திரம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற பொருள் அள்ளி வழங்கும் வள்ளல் அல்லவா கவிஞர்கள்? இளமையின் உச்சத்தில் இவர் இருந்தபோது எழுதியபாடல்கள் என்றாலும் இதய அறைகளில் எல்லாம் சமுதாயம் பற்றிய சிந்தனைகளே திடமாக.. தீர்க்கமாக.. நிறைத்திருந்த கவிஞர் அந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கிட வேண்டும் என்கிற வேட்கை கொண்டவராய்.. பாட்டாளிகள் படும் பாட்டிற்கான ஒரு சமத்துவ விடியல் எங்கே என்று குரல் கொடுக்கும் கவிஞர்.. இத்தனைச் சிந்தனைகளுக்கிடையே இதயத்திலிருந்து இறங்கிவந்த பாட்டு என்பதால் ‘புரட்சியைக் கைவிடாமல் புதிய பொருள்தருகிறார்..

    அன்பின் வயப்படும் ஆனந்த நிலை காதல் என்பது உண்மையெனில் எந்த மனதிலும் இன்பத்துப்பால் வழியும். இலக்கணம் நன்றாய் புரியும்! ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா இணைந்தளித்த பாட்டில் இசையமைப்பு.. ஏ.எம்.ராஜா!

    http://youtu.be/lvuKXddIXBE
    காணொளி: -http://youtu.be/lvuKXddIXBE

     

    பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ?

    வாடிக்கை மறந்ததும் ஏனோ? – என்னை
    வாட்டிட ஆசை தானோ – பல
    கோடி மலரழகை மூடி வைத்து மனதை
    கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

    வாடிக்கை மறந்திடுவேனோ? – என்னை
    வாட்டிடும் கேள்விகள் ஏனோ? – புது
    மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
    மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

    அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
    அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
    அமுத விருந்தும் மறந்து போனால்
    உலகம் வாழ்வதும் ஏது? – பல
    உயிர்கள் மகிழ்வதும் ஏது? – நெஞ்சில்
    இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
    தனித்துப் பெறமுடியாது

    அந்தி நேரம் போனதால்
    ஆசை மறந்தே போகுமா?
    அன்புக் கரங்கள் சேரும்போது
    வம்பு வார்த்தைகள் ஏனோ?
    இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

    காந்தமோ இது கண்ணொளிதானோ?
    காதல் நதியில் நீந்திடும் மீனோ?
    கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

    பொறுமை இழந்திடலாமோ? – பெரும்
    புரட்சியில் இறங்கிடலாமோ? – நான்
    கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
    வரம்பு மீறுதல் முறையோ..?

    சைக்கிளும் ஓட மண் மேலே – இரு
    சக்கரம் சுழல்வது போலே – அணை
    தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
    சேர்ந்ததே உறவாலே…

     
     
    பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ
    திரைப்படம்: கல்யாணப்பரிசு (1959)
    இசை: A.M.ராஜா
    வரிகள்: கவிஞர் கல்யாணசுந்தரம்
    பாடியவர்கள்: A.M.ராஜா – P.சுசிலா

     

     

     

    Share
  • அம்பாள் பஞ்சகம்

    கிரேசி மோகன்

    சு.ரவியால் தடுத்தாட் கொள்ளப்பட்ட கல்லூரி நாட்களில் எழுதப்பட்டது….அப்போதெல்லாம் ,அர்த்த மதியத்தில்(அர்த்த ஜாமத்திற்கு ஆப்போஸிட்) வாயிலா நாயனார் சன்னிதியில், ரவி என்னை வாயுள்ள ஆழ்வாராக மாற்ற முயற்ச்சிப்பான்….இணைப்பு திரு.கேசவ் டாக்டர் ஸ்ரீதருக்காக வரைந்த கற்பகாம்பாள்….நமக்கெல்லாம் ‘’கைகொடுப்பாள் கற்பகாம்பாள்’’…ஆனால் கேசவ்கோ ‘’கைபிடிப்பாள் கற்பகாம்பாள்’’ வரைய வசதியாய்….இந்த ஓவியம் வந்தவுடன் என் அறைதான் கர்பக்கிருகம்….இந்த ஓவியம்தான் மூலவர் என்றாகிவிட்டது

    ———————————————————————————————————————–
    அம்பாள் பஞ்சகம்
    (க்ரேஸி மோகன்)
    —————————————————————————————————————————

    மதியது கொண்டவனின் – மரகத

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    மங்கைக்கடியவன் முன்
    விதியது வீழ்ந்திடுமே ! – வெவ்விய
    வினையது சாய்ந்திடுமே !
    கதிர் முன் பனி போலே – கவலைகள்
    கரைந்து போகுது பார் !
    எதிர் வரும் துன்பெமெலாம் -என்னிடம்
    என்னிடம் ஏவல் செய்யுது பார்! (1)

    கருமயிலே, பரமன் -கபாலி
    கணவருடன் அழகாய்த்
    திருமயிலாப் புரியில் -திகழும்
    தேவி பராசக்தீ !
    ஒரு பொழுதும் மறவேன் -உமையே
    ஓமெனும் மந்திரமாய்
    உறைபவளே வருவாய் -உலகில்
    உழலுமெனக் கருள்வாய் (2)
    அம்மா என்றுனையே -அடியேன்
    ஆசை மனம் கொண்டு
    இம்மா புவியினிலே -இயம்ப
    இமயக் கரு முகிலே
    சும்மா நிற்பதுவும் -சரியோ
    சொல்வாய் சிவ சக்தீ !
    பெம்மான் சொக்கருடன் -பிடியே
    பிள்ளை என் முன் வருவாய் ! (3)

    பச்சை நிறத்தவளே -பதியின்
    பாகம் கொண்டவளே
    அச்சை ஒடித்திடுமோர் -அழகன்
    ஆனை முகன் தாயே !
    மெச்சத் தகும் ஊராம் -மயிலை
    மாது மஹா காளி !
    பிச்சை அளித்திடுவாய் -பரமே
    பக்குவ மனமதனை ! (4)

    வள்ளிக் குறுதுணையாய் -வேலன்
    வளர்ந்த தொரு மலையாம்
    வெள்ளிப் பனி மலையில் -வாழும்
    வேந்தற் குரியவளே !
    உள்ளக் கோவிலதில் -உனை நான்
    உறங்க வைத்திடுவேன்
    தெள்ளத் தமிழ முதால் -தாயுனைத்
    தாலாட் டிடுவேனே ! (5)

    *******************************************************

    Share
  • திருமால் திருப்புகழ் (98)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கீழென்றும் மேலென்றும், தாழ்வு தகவென்றும்,
    வாழ்வென்றும் சாவென்றும் வாடுவதேன், -பாழ்மனமே,
    எங்கும் எதனுள்ளும், எப்போதும் உள்ளுறையும்,
    சிங்கத்தைச் சந்திக்க முந்து….(96)

    முந்துகின்ற மூளையும், உந்தும் புலன்களும்,
    அந்தநாள் தொட்டே அசுரர்கள், -சிந்தையாம்,
    எண்ணக் குடத்தினை, எண்ணற்ற தூளாக்கிக்,
    கண்ணன் கழலடியில் கொட்டு….(97)

    கொட்டுது தேளின், கொடுக்காய்ப் புலனைந்தும்,
    பட்டது போதும் பரந்தாமா, -சட்டென,
    வந்தெனக்குச் சத்துவ, வாழ்வை அளித்திடுவாய்,
    நந்தலாலா இந்தநாளே நீ….(98)

    நீயின்றி நானில்லை, நானின்றி நீயுண்டு,
    தீயின்றி தீபம் திரிதானே, -வாஇன்றே,
    வெப்பமாய் வந்தென்னை, அப்புவாய் சந்தனமாய்,
    அப்பனே ஆரா அமுது….(99)

    அமுதா அளவினை, விஞ்சுகின்ற நஞ்சாம்,
    எமதாசை நெஞ்சினை ஏற்று, -குமுதவாய்,
    பேய்ச்சி முலைப்பாலை, உண்டதுபோல் எம்மனச்,
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….(100)

    ———————————————————————————————————————-

    Share
  • சிரஞ்சீவி

    கிரேசி மோகன்

     

    crazy

    ’’ மருந்துண்ணும் போது ,குரங்கெண்ணம் கொள்வாய்,
    அருந்தும் மருந்து, அனுமான், -சிரஞ்சீவி,
    கொண்டுவந்த சஞ்சீவிக், குன்றாய் இருக்குமேல்,
    உண்டென்றும், ஈரெட்டாய் உய்’’….கிரேசி மோகன்…

     

    Share
  • திருமால் திருப்புகழ் (97)

    கிரேசி மோகன்

    Indra Garvabhangam, acrylic on canvas, 2005 Keshav
    Indra Garvabhangam,
    acrylic on canvas, 2005 Keshav

    ——————————————————————————————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    Harineela hari, oil on canvas, 2005 Keshav
    Harineela hari,
    oil on canvas, 2005 Keshav

    கொள்ளை அவன்கொள்கை, பிள்ளை அவன்செய்கை,
    இல்லை எனும்சொல்லாய் உள்ளவன், -முள்ளை,
    அவன்பெயர் சொல்லி, அணிந்திட மல்லி,
    அவனேநான் ஆதல் அமைவு….(91)

    அமைவதிங்(கு) எல்லாம், அவனருளால் அன்றோ,
    சமயம் அவனால் அமையும், -குமையும்,
    மனதே ஒருமுகம், ஆகி அவனை,
    உனதே உனதாக்கி உய்….(92)

    உய்ய வழியறியேன், உன்னிடம் சொல்லயென்ன,
    பொய்யில் உழல்கிறேன் அய்யனே, -கையில்
    கனியாக நீயிருந்தும், காய்ந்தேனே காமத்தில்,
    முனியாக வந்தென்னை, மாற்று….(93)

    மாற்ற உடையின்றி, மானமே கூரையாய்க்,
    காற்றைப் புசிப்போரும் காணாத, -நாற்றத்
    துழாய்மணி மார்பா, திருவருளை இந்தக்,
    குழாய்வழி சோவென்று, கொட்டு….(94)

    கொட்டும் மழைக்குக், குடையாகக் குன்றினைச்,
    சுட்டு விரலால் சுமந்தவா, -திட்டம்,
    உனக்குண்டோ என்னை, உருப்படியாய் ஆக்க,
    குணக்குன்றே கொள்ளுந்தன், கீழ்….(95)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2006_03_01_archive.html

     

    Share
  • ஐயப்ப சாமி ஓவியமும், வெண்பாக்களும்

    கிரேசி மோகன்

    Iyappan
    ’’ஐயப்பன் வெண்பாக்கள்’’
    —————————————-

    ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
    பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
    உண்மைக்குள் உய்ய உதவு….(1)….13-03-2008

    அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
    கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
    அரனில் அரியை அறிய புரிவாய்
    சரணம் சபரி மலைக்கு….(2)….22-6-2008

    ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்ததில்
    ஞானமாம் நம்பிக்கை நட்சத்ரம் -கானிலே
    உத்திர மானதன் உற்சவ கோலத்தின்
    சித்திரம் கண்டேன் சபாஷ்….(3)….8-9-2008

    சந்தன வாசன் சபரி விலாசனை
    வந்தனம் கூறி வழிபட -பந்தள
    ராச குமாரன் ரசனை மிகுந்தவன்
    ஆசுகவி ஆக்குவான் ஆம்….(4)….1-12-2008

    வாஸ்த்தவமே, வன்புலி வாகனனே நீலிமலை
    ஆஸ்த்தானம் ஆளும் அரிஹர -சாஸ்தாவே
    வந்துன்னை ஒவ்வோர் வருடமும் காணத்தா
    பந்தளனே தேக பலம்….(5)….9-1-2009

    பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
    செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
    தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
    ஊன்றிடும் கோலுன் உறவு….(6)….8-4-2009

    பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
    மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
    இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
    தொல்லையாம் தேங்காய் தெறித்து….(7)….8-4-2009

    மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
    மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
    அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
    சபரிகிரி வாசன் ஜனிப்பு….(8)….10-4-2009

    அய்யனை அன்பர்தம் நெய்யனை அல்லல்தீர்
    கையனை மாலரன் பையனை -மெய்யனை
    சாமி சரணம் சதாஸ்மரணம் செய்வோரை
    காமிய கர்மமணு கா….(9)….10-4-2009
    அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
    தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
    ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
    நேசா வணக்கம் நினக்கு….(10)….26-09-2009

    வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
    அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
    அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
    பண்ணாத பாவமும் போச்சு….(11)….15-10-2009

    பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
    இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
    காமக் குரோத உலோபமத மாச்சரியம்
    நாமத் திருநீறோ னே….(12)….02-01-2010

     

     

     

    Share
  • அமரத்வனி

    கே. ரவி

     

    (35 ஆண்டுகளுக்கு முன் ஷோபனா எழுதி என் இசையமைப்பில் எங்கள் இனிய நண்பர் ராஜு என்ற திரு.கே.எஸ்.ராஜகோபால் பாடிய ஒரு பாடல் இது. 1980-களில் வெளியான ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையில் உள்ளது. ராஜு ஒரு பெரிய வங்கியின் மேலாளராகப் பணியில் இருந்தார். திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களில், “கீரை அறுக்கையிலே கிழக்கு வெளுக்கையிலே” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபாலின் கணவர் இவர்.)

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/04.Layame-Sivame.mp3

     

    ஷோபனா ரவி

    shiv2_800x600

     

    லயமே சிவமே தயங்காத காருண்யமே
    மயனால் பிறந்த த்ரிபுரங்களை வெல்ல
    பாணம் தந்த சிலையே
    காலம் வென்ற நிலையே
    (லயமே சிவமே)

    பனியில் பூத்த தழலே – வெண்ணீறு
    கனவு காணும் நிழலே
    மதியும் அரவமும் நதியும் உலவிடும்
    கானகக் குழலே
    முகிலுலாவும் நுதலே
    (லயமே சிவமே)

    தீம் தோம் தீம் தோம் தீம்திரனதீம் தீம் தோம்
    தவம்கலைந்ததும் தாண்டவம் தீம் தோம் – புயல்
    நிமிர்ந்ததைப்போல் நர்த்தனம் தீம் தோம்
    இமை விரிந்து சடை பிரிந்து – இசை
    சிலிர்த்துத் தாளம் தெறிக்க
    வீழ்ந்தோம் எனத் தீமைகள் நடுங்கும்
    வாழ்ந்தோம் என வேதங்கள் முழங்கும்
    கண் பனிக்க மனம் துடிக்கக் – கை
    குவித்த படிவான் திகைக்க
    வந்தோம் எனத் துந்துபி பாடிவரும்
    தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம்
    (லயமே சிவமே)

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (31)

    31. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! மூஸியோ டி செரா(2), மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ​மெழுகுச் சிலைகளில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் உருவத்தை வடித்து வைத்து ​இதனைக் காட்சிக்கு வைப்பதே இத்தகைய அருங்காட்சியகங்களின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாட்டின் சூழலிலும் அங்கே பிரபலமாகக் கருதப்படுவோர் இந்த உருவச் சிலை வடிவங்களில் இடம்பெறுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மனிதர்களின் சிலைகளை உருவாக்கும் அதேவேளை உள்ளூர் அரசியல், சினிமா, சமூக, வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்கெடுத்தோர் இத்தகைய மெழுகு உருவச் சிலைகளாக இவ்வகை அருங்காட்சியகக் கூடங்களில் காட்சிக்கு நிற்பர். அர்சியல் தலைவர்களில் ஒபாமா, தற்போது இத்தகைய அனேக மெழுகு அருங்காட்சியகங்களில் காட்சி தருகின்றார். நடிகர்களில் ஆஞ்சலினா ஜூலி அவர் கணவர் நடிகர் ப்ராட் பிட் இருவரும் இதே வகையில் நான் பார்த்த வேறு மெழுகு அருங்காட்சியகங்களிலும் காட்சியில் இருக்கின்றனர். இதே போல காந்தியும். இரண்டு வெவேறு அருங்காட்சியகங்களில் காந்தியின் மெழுகுச் சிலையப் பார்த்திருக்கின்றேன்.

    மூஸியோ டி செரா, காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் தேதி 1972ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2000 சதுர அடி விரிவான கட்டிடத்தில் இரண்டு மாடித்தளங்களில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துளளது. எந்த அளவிற்கு வரலாற்று பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றனவோ அதே அளவு பொழுது போக்கு அம்சங்களான காற்பந்து, சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சிலைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

    mc8
    பைரட் ஆஃப் கரீபியன் ​(ஜூலை 2013)

    பல பெண்களின் கனவு நாயகரான ஜோர்ஜ் க்ளூனி, ப்ராட் பிட் ஆகியோரும் இளைஞர்களின் கனவு தேவதைகளான ஆஞ்சலினா ஜூலி, பெனலோப் க்ரூஸ் போன்றோரும் இங்கு காட்சியளிக்கின்றனர். ஸ்பெயினில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த காற்பந்து குழுக்களான ரியால் மட்ரிட் குழுவின் பிரபலங்களும் எஃப்ஸி பார்ஸலோனா குழுவின் பிரபலங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு வடிவத்தில் உருவச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.

    சில பிரபலங்கள் தங்கள் உருவச் சிலைகள் தயாராகி இங்கு காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு நடைபெறும்போது நேரில் மூஸியோ டி செரா வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் நடக்கின்றது. உதாரணமாக ரியால் மட்ரிட் காற்பந்து குழுவில் பிரபலமான போர்த்துக்கீஸியரான ரொனால்டோ, தனது உருவச் சிலை இந்த அருஙகட்சியகத்தில் இடம் பெறத் தயாரான வேளையில் அந்த நிகழ்வுக்கு நேரடியாக வந்து இவ்விழாவைச் சிறப்பு செய்தார் என்ற செய்தியையும் இணையத்தில் காணலாம்.

     mc6

    அமெரிக்க ஜனாதிபதிகள் ​(ஜூலை 2013)


    ​​
    மெழுகுச் சிலைகள்​ (Wax sculptures) என நாம் அறிந்திருக்கும் இவ்வகை உருவச் சிலைகள் ஐரோப்பாவில் பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரில் யாரேனும் இறக்கும் போது அவர்களை ஒத்த வடிவில் உருவம் அமைத்து மரியாதைச் செலுத்தும் நோக்கில் ஆரம்பகாலத்தில் உருவாகியது. மிகப் பழமையான இவ்வகை உருவச் சிலை எனத் தேடினால் இப்போது நமக்குக் கிடைப்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இருக்கும் British royal wax effigies சேகரிப்புக்களைக் குறிப்பிடலாம். இதில் குறிப்பாக மன்னர் 3ம் எட்வர்ட் (1377) அவர்களின் மெழுகு உருவத்திலான உருவச் சிலையும் உள்ளது.

    ​19ம் நூர்றாண்டில் மேடம் தூஸோ ​(Madame Tussauds) இத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது உருவாக்கங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அவர் நிறுவினார். அதுவே லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மேடம் தூஸோ மெழுகுச் சிலைஅருங்காட்சியகம். இங்கு நடப்பதற்குக் கூட இடம் கூட குறைவு. அந்த அளவிற்கு எல்லா பகௌதிகளையும் நிறைத்துக் கொண்டு இவ்வகை சிலைகள் நிறைந்திருக்கின்றன. மேடம் தூஸோ அவர்களின் பெயரிலேயே இங்கிலாந்து தவிர்த்த பல இடங்களில் மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் உருவாகின. சில தனியார், அல்லது அரசாங்க முயற்சிகளினால் உருவான இவ்வகை அருங்காட்சியகங்களும் உலகின் பல நாடுகளில் காணக்கிடைக்கின்றன.

    mc7
    தி லாச்ட் சப்பர் ​(ஜூலை 2013)

    நாம் விரும்பும் பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து அது சாத்தியமல்ல என நினைக்கும் பலருக்கு இவ்வகை அருங்காட்சியகங்கள் மகிழ்ச்சி தருபவை. நேரில் இவ்வகை அருங்காட்சியகங்கள் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே தமக்குப் பிடித்தோரின் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வதைக் கண்டு ரசிக்க முடியும். ஒரு வகையில் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே இவ்வகையிலான அருங்காட்சியகங்களும் அமைக்கப்படுகின்றன!

    இத்தகைய அருங்காட்சியகங்கள் சென்று வரும் போது பலரை ஒரே இடத்தில் பார்த்த ஒரு திருப்தியும் ஏற்படும் 🙂 அடுத்த பதிவில் உங்களை மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.

    Share
  • மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 2

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    sundaranar

    பேரா. பெ. சுந்தரம்பிள்ளை

    பாண்டிய மன்னன் சீவகவழுதிக்கும் சேரவேந்தன் புருடோத்தமனுக்கும் போர் மூளும் சமயம் ஊரெங்கும் ஒரே பேராரவாரம். இதனைக் கேட்ட மனோன்மணி இதுபற்றித் தன் தோழி வாணியிடம், ”ஊரில் என்ன ஆரவாரம்!” எனக் கேட்கின்றாள். அவள் கவனத்தைத் திருப்ப எண்ணிய வாணி, பிற செய்திகளைப் பேசுகின்றாள். அப்போது மனோன்மணி வாணியை நோக்கி, “நின் இசைவிளங்கு குரலால் பாடுக!” எனச் சொல்லுகிறாள். அப்பாடலே இந்நூலில் இடம்பெற்றுள்ள ’சிவகாமி சரிதை’யாகும். இக்கதை, மனோன்மணீய நாடகத்திற்கு நேரடித் தொடர்பில்லாமல் இடம்பெற்றுள்ள கிளைக் கதையாகும்.

    Oliver Goldsmith

    கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

    இச்சிவகாமி சரிதை மனோமணீய நூலின் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. இரண்டாம் பதிப்பிலேயே இடம்பெற்றதென்பர். இக்கதையும் ஆங்கிலக் கதையின் தழுவலே என்று கூறுவாருமுளர். இதன் மூலக்கதை ஆங்கிலக் கவிஞர் ’Oliver Goldsmith’ எழுதிய ‘The Vicar of Wakefield’ என்னும் நூலில் கிளைக் கதையாக இடம்பெற்றுள்ள “Edwin and Angelina, a ballad” என்பதைத் தழுவி அமைந்துள்ளது. Edwin சிதம்பரமாகவும், Angelina சிவகாமியாகவும் சுந்தரம்பிள்ளையால் படைக்கப்பெற்றுள்ளனர். சிவகாமி சரிதை மனோன்மணீய நாடகத்தின் மூன்றாம் அங்கம், மூன்றாம் களத்தில் வாணியின் கூற்றாக அமைந்துள்ளது.

    சிவகாமி சரிதையையும், Edwin and Angelina, a ballad கதையையும் ஒருங்குவைத்துக் கற்பார், சிவகாமி சரிதை இந்த ஆங்கிலக் கதையின் தழுவலே என்பதை நன்கறிவர். தொடக்கமுதல் இறுதிவரை இத்தழுவலின் சாயல் நன்கு புலப்படுகின்றது.

    எனினும், ஈண்டும் சுந்தரம்பிள்ளை தமிழ் மரபையும், தமிழ் நாகரிகத்தையும் மிக நன்றாகப் போற்றியுள்ளார். கதை நிகழுமிடம் பூம்புகார். கதைத் தலைவியான சிவகாமியின் தாய்வழிப் பாட்டிக்கு மக்கள் மூவர்; இருவர் பெண்டிர்; ஒருவர் ஆண். பெண்களுள் ஒருத்தியின் மகள் சிவகாமி; மற்றொருத்தி மகப்பேறில்லாதவள். ஆனால் பெரும் செல்வமுடையவள். அச்செல்வம் முழுவதையும் அவள் சிவகாமிக்கே தந்தாள். ஆண் மகனுக்குச் சிதம்பரம் என்ற ஒரே மகன். சிவகாமியும், சிதம்பரனும் உடன்பிரியா நிழல்போல் ஒன்றாக வளர்ந்தனர். ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

    “ஆனாலும், யான் பெற்ற பொருட்செல்வத்தால் தலை மயங்கினேன்; செருக்குற்றேன். தலைவர் என்ற அவரது நிலையை மறந்தேன். இதனால் அவர் என்னைவிட்டுச் சென்றார். பொருள்கருதி மணம் பேச வந்தனர் பலர். பின்னரே எனக்கு உண்மை புலனாயிற்று. எனவே அவரைத் தேடிப் பலவிடங்களிலும் அலைந்தேன்; அவரைக் காணவில்லை. இறுதியாக இக்காட்டிற்கு வந்தேன்” என்று சிவகாமி ஓர் முனிவரிடம் கூறுவதாக இக்கதை நடைபோடுகின்றது.

    சிவகாமி ஆண் வேடத்தில் முனிவரிடம் தன் துயரக் கதையினைக் கூறுகின்றாள். அவள் வேடம் கலைகின்றது. ஆற்றொணாது கண்ணீர் பெருக்குகின்றாள் சிவகாமி. மனம் வெறுத்து வெளியேறிய சிதம்பரனே ஆண்டு முனிவர் வேடத்தில் உள்ளான். அவனிடம் தன் கதையைக் கூறிவந்த சிவகாமி, முனிவர் குளிர்காய மூட்டிய தீயில் வீழ முற்படவும் ”சிவகாமி! யானுனது சிதம்பரனே!” எனச் செப்பினான் முனிவர் வேடத்தில் இருந்த சிதம்பரன். இருவரும் ஓருருவமாய் இணைந்தனர். இதுவே சிவகாமி சரிதை. ‘உண்மைக் காதல் வெல்லும்!” என்ற கோட்பாட்டை, வாணி இச்சரிதை வாயிலாக மனோன்மணிக்கு உணர்த்துகின்றாள். எனவே, மனோன்மணி சேரவேந்தன்பால் கொண்ட காதலும் வெல்லும் என்பதை வாசகர்கட்குக் குறிப்பால் உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

    மேலும் நாயகியாகிய உயிர் – பசு – சீவான்மா, மாயையின் வயப்பட்டு அல்லலுற்று இறுதியில் தலைவனை – பதியை – பரமான்மாவை அடைவதை உணர்த்துவது சிவகாமி சரிதை. இவ்வண்ணம் நுண்பொருளாகிய தத்துவக் கருத்தையும் தன்னுள் கொண்டிலங்குவது இக்கதை.

    சிவகாமியைச் சிதம்பரன் தீயில் விழாது தழுவிக் கொண்டாற்போல, எட்வினும் ஏஞ்சலினாவும் இணைந்தனர். அதனை,

    “Forbid it, Heaven!” the Hermit cried,
    And clasp’d her to his breast:
    The wond’ring fair one turn’d to chide—
    ’Twas Edwin’s self that prest.

    என்ற செய்யுள் வரிகள் நமக்குணர்த்தும். மேலும் அடுத்த பாடல்,

    “Turn, Angelina, ever dear!
    My charmer, turn to see
    Thy own, thy long lost Edwin here,
    Restor’d to love and thee.

    என்பதாகும்.

    ’Thy own, thy long lost Edwin here’ என்ற அடியின் தழுவலே ’சிவகாமி யானுனது சிதம்பரனே!’ என்னும் செய்யுளடி. உண்மைக் காதலும், காதலரும் உலகெங்கிலும் ஒன்றுபோலவே உள்ளனர் என்பதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித்தும், நம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் ஒன்றுபோலச் சுட்டியுள்ளனர். இதனை எண்ணுங்கால் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற புறநானுற்றுப் புலவனின் கருத்தும், ‘Great minds think alike’ என்ற ஆங்கிலப் பழமொழியும் நம்முன் தோன்றுகின்றன.

    இங்ஙனம் மனோன்மணீய நூலும் அதன்கண் இடம்பெற்றுள்ள சிவகாமி சரிதையும் கற்பார்க்குக் கழிபேருவகை ஊட்டுவதுடன் அமையாது, அவர்தம் அலைபாயும் மனங்களையும் பக்குவப்படுத்தும் பான்மையது என்றால் அவ்வுரை வெறும் புகழுரையன்று! முற்றிலும் உண்மையேயாம்.

    இறுதியாக ஓருரை. மணிவாசகரின் திருக்கோவையாரைப் பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துரை நம் மனோமணீயக் காப்பியத்திற்கும் முற்றிலும் பொருந்தும். திருக்கோவையார், “இலக்கிய நயங் காண்பார்க்கு ஓரினிய இலக்கிய நூல்; சமயக் கருத்துக்களைத் தேடுவார்க்கு அஃதொரு சமயநூல்; தத்துவ ஆய்வாளருக்குத் தத்துவ நூல்; இறைநிலை காண விழைவார்க்கு அஃதொரு வழிகாட்டி; பேரின்ப வீட்டிற்கு அஃதொரு திறவுகோல் என்பர் அறிஞர்பெருமக்கள். இப்பாராட்டுரைகள் அனைத்தும் மனோன்மணீயத்திற்கும் நன்கு பொருந்துவதைக் காணலாம்.

    எனவே, தமிழ்நலங்காண விரும்புவாரும், தமிழ் மாணாக்கர்களும் இவ்வினிய நாடக இலக்கியத்தைக் கற்று இன்புறுக!

    (முற்றும்)

     

    Share
  • படுகொலை செய்யப்பட்ட கவிதை!

    செல்வி. டிமாஷா கயனகி

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     

    dimasha

    செல்வி. டிமாஷா கயனகி

      (சம்பவம்: இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இராணுவத் தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.)

    கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி மரணிக்கும் முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

    எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
    விட்டுச் செல்லவேண்டியிருக்கும்!
    எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது                 dimasha0
    எனினும் அதைத்
    துயரமின்றிச் செல்லமுடிந்தால்
    எவ்வளவு நன்றாகவிருக்கும்!

    அந்நாளில்
    நினைவில் வராதோர் அனேகர்
    எனினும்
    நினைவில் வரக்கூடிய சிலரில்
    நீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

    நான் மரிக்கும் நாளில் வாருங்கள்!
    என்னைப் பார்க்கவென்றே வந்துசெல்லுங்கள்!
    ஒருபோதும் சிந்தியிராத கண்ணீரில்
    ஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்!

    இரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்                          dimasha2
    குளிர்ந்த சரீரத்துடனிருந்த போதிலும்
    முன்பு பழகியதையெண்ணி                                                                           
    நெற்றியிலொரு முத்தமிடுங்கள்!                                                                           

    ஆயிரம் கண்கள் பார்த்திருக்கும்                                               
    எனது நற்குணங்களை விமர்சிக்கும்
    பதிலாக எதுவும் பேசாது
    ஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்!                                                 

    கல்லறையிலிருந்து நீங்கள்
    நீங்கிச் செல்கையில்
    மாபெரும் தனிமையை நான் உணரக்கூடும் – எனவே
    ஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு
    நீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது!

     

    Share