— கவிஞர் காவிரி மைந்தன்
 
வாடிக்கை மறந்ததும் ஏனோ… பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு அவரைமட்டுமே சுட்டிக்காட்டுகிறது!

vadikai

மழை பொழிந்தது என்பது செய்தி. ஓருவரைக் கேட்டால் வெளுத்து வாங்கியது என்றார்.. அவர் சலவைத் தொழிலாளி! மற்றொருவரைக் கேட்டால் அடிச்சு சொல்றேன்.. இதுபோல் மழையை நான் பார்த்ததில்லை என்றார்.. அவரோ ஆசிரியர்! தன் உள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் வார்த்தைகள்தான் வாயில் வெளிப்படும்.. அதே போல் – பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு அவரைமட்டுமே சுட்டிக்காட்டுகிறது!

வெறும் புரட்சியில் இறங்கிடலாமோ? என்கிற வரி என்னை பிரமிக்க வைத்தது.

காதல் பாடலில் புரட்சியை இணைத்து பாடலைத்தர முடியும் என்கிற சிந்தனை எப்படிப் பிறந்தது தெரியுமா.. உள்ளமெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தம் கொடிகட்டிப் பறப்பதால் காதலிலும்கூட புரட்சி பூத்துவிடுகிறது!

ஈரிதயங்களின் ஈர்ப்புவிசையில் மனித வாழ்க்கைச் சுற்றிச் சுழன்றிருக்க.. கருத்தொருமித்த காதலர்தம்மில் கனிந்துருகும் வார்த்தைகளின் கூட்டு இந்தப் பாட்டு! என்ன பாத்திரம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற பொருள் அள்ளி வழங்கும் வள்ளல் அல்லவா கவிஞர்கள்? இளமையின் உச்சத்தில் இவர் இருந்தபோது எழுதியபாடல்கள் என்றாலும் இதய அறைகளில் எல்லாம் சமுதாயம் பற்றிய சிந்தனைகளே திடமாக.. தீர்க்கமாக.. நிறைத்திருந்த கவிஞர் அந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கிட வேண்டும் என்கிற வேட்கை கொண்டவராய்.. பாட்டாளிகள் படும் பாட்டிற்கான ஒரு சமத்துவ விடியல் எங்கே என்று குரல் கொடுக்கும் கவிஞர்.. இத்தனைச் சிந்தனைகளுக்கிடையே இதயத்திலிருந்து இறங்கிவந்த பாட்டு என்பதால் ‘புரட்சியைக் கைவிடாமல் புதிய பொருள்தருகிறார்..

அன்பின் வயப்படும் ஆனந்த நிலை காதல் என்பது உண்மையெனில் எந்த மனதிலும் இன்பத்துப்பால் வழியும். இலக்கணம் நன்றாய் புரியும்! ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா இணைந்தளித்த பாட்டில் இசையமைப்பு.. ஏ.எம்.ராஜா!

http://youtu.be/lvuKXddIXBE
காணொளி: -http://youtu.be/lvuKXddIXBE

 

பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ?

வாடிக்கை மறந்ததும் ஏனோ? – என்னை
வாட்டிட ஆசை தானோ – பல
கோடி மலரழகை மூடி வைத்து மனதை
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

வாடிக்கை மறந்திடுவேனோ? – என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? – புது
மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? – பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? – நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
தனித்துப் பெறமுடியாது

அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

காந்தமோ இது கண்ணொளிதானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

பொறுமை இழந்திடலாமோ? – பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ? – நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..?

சைக்கிளும் ஓட மண் மேலே – இரு
சக்கரம் சுழல்வது போலே – அணை
தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே…

 
 
பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ
திரைப்படம்: கல்யாணப்பரிசு (1959)
இசை: A.M.ராஜா
வரிகள்: கவிஞர் கல்யாணசுந்தரம்
பாடியவர்கள்: A.M.ராஜா – P.சுசிலா

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாடிக்கை மறந்ததும் ஏனோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.