-நடராஜன் கல்பட்டு

 

10349865_496511930476459_1740650219317154467_n“என்னங்க… என்னங்க…”

“என்ன இப்போ?  காலங் காத்தாலெ என்னங்க என்னங்கன்னு என் கழுத்த அறுக்கறே?”

“ஒண்ணும் இல்லீங்க…”

“ஒண்ணும் இல்லேன்னா எதுக்கு என்னங்க என்னங்க?”

“நீங்க ரொம்ப மாறீட்டீங்க.  கல்யாணம் ஆன புதுசுலெ இருந்தாப்புள இப்பொ இல்லீங்க.  அப்பொல்லாம் எப்பொவும் ’பிரேமா பிரேமா’ன்னு எம் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பீங்க.  இப்பொ என்னடான்னா வீட்டுலெ இருந்தா எப்பொவும் அந்த பாழாப் போற கணினியெக் கட்டிக்கிட்டு அழுவுறீங்க.”

“இப்பொ என்ன செய்யணுங்கறே?  ஒட்டடெ அடிக்கணுமா இல்லே வீட்டெக் க்ளீனு பண்ணனுமா?  கண்டபடி கெடக்குற புஸ்தகங்களெ ஒழுங்கா எடுத்து வைக்கணுமா?”

“அதெல்லாம் இல்லீங்க.  எனக்கும் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொடுத்தீங்கன்னா… நான் பாட்டுக்கு ஒரு பக்கம் ஒக்காந்து வாரப் பத்திரிகைங்க படிச்சுக்கிட்டு இருப்பேன் இல்லெ?”

“சரி சரி இந்த மாசம் போனஸ் வருதாம்.  அது வந்ததும் ஒனக்கு ஒரு மடிக் கணினி வாங்கித் தரேன்.”

கணினி வருகிறது வீட்டிற்கு.  கூடவே மேடத்துக்குச் சவுகரியமாக இருக்க வீட்டில் இருக்கும் மோடத்தின் இடத்தை ஒரு புதிய வயர்லெஸ் மோடம் எடுத்துக் கொள்கிறது.

பத்தினிக்குப் பரம சந்தோஷம் படித்திடலாமே வாரப் பத்திரிகைகள் பலவும், வாங்கிடாமலே அவற்றைக் கடையில் இருந்து காசு கொடுத்து…

பகலில்லை…இரவில்லை.  அம்மா நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணினியில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ‘சினிமா நடிக நடிகைகள் பற்றிய கிசு கிசுச் செய்திகள்’, நகைச்சுவைத் துணுக்குகள் எனப் படித்தபடி…

“என்ன அழகாக் கதெ எழுதுறாரு இந்த மகிழன்?  பேரும் நல்லாத்தான் வெச்சுக்கிட்டு இருக்காரு.  இது நிஜப் பேரா இருக்குமா…இல்லே புனைபெயரா இருக்குமா?  எப்படி இருந்தா என்ன?  அழகாக் கதெ எழுதறாரே அவரு.”

ஒன்று விடாமல் படித்து மகிழ்ந்தாள் மகிழனின் கதைகளைப் பிரேமா.

இந்தப் பத்திரிகெலெதான், “வாசகர் கடிதமும் படைப்பாளிகளின் பதிலும்”னு ஒரு பகுதி இருக்கே, அதுக்கு ஒரு கடுதாசு போட்டா என்ன?  அன்றே எழுதி அனுப்பினாள் ஒரு கடிதம் பிரேமா.

“அன்பு மகிழன் அவர்களுக்கு,

உங்கள் கதைகள் ஒன்று விடாமல் படித்து வருபவர்களில் நானும் ஒருத்தி.  அது எப்படி சார் ஒங்களுக்கு மட்டும் இப்பிடிக் கற்பனை வருகிறது காட்டாற்று வெள்ளம் போல?  வியக்கிறேன் உங்கள் ஆற்றலைக் கண்டு!

இப்படிக்கு உங்கள் வாசகி,

ரசிகப்ரியா.”

ஆவலுடன் ஒரு வாரம் காத்திருந்த பிரேமாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, பிரேமாவின் கடிதமும் அதற்கு பதிலாய் மகிழனின் கடிதமும் வந்திருந்தன.

அன்பு ரசிகப்ரியா,

உங்கள் மடலுக்கு நன்றி.  எனது எழுத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.  உங்களைப் போன்ற ரசிகர்களின் மடல்கள்தான் ஒரு எழுத்தாளனுக்குச் சஞ்சீவினி மருந்து.  அவனுக்கு ஊக்கம் அளித்து மேலும் சிறப்பாக எழுதிடத் தூண்டிடும் மூலமந்திரம் அவை.

இப்படிக்கு,
மகிழன்

அடக்க முடியவில்லை ஆனந்தத்தைப் பிரேமாவுக்கு.  உடனே தன் மகிழ்ச்சியைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அடுத்த கணம் மற்றொரு எண்ணம்.  தனி மரம் தோப்பாகாது.  இன்னும் வரட்டும் பல பதில்கள்.  அதன் பின் அவருக்குச் சொல்லி அவரை ஆச்சரியத்தில் திக்கு முக்காடச் செய்வோம்.  அடக்கி வைத்தாள் தன் ஆசையை.

மறு வாரம் வந்தது மகிழனின் ‘மல்லிகைப்பூ’ என்ற கவிதை.  உடனே எழுதினாள் பிரேமா கடிதம் ஒன்று.  “மகிழனின் கையில் மகிழம்பூவாய் வாசம் தந்தது மல்லிகைப்பூ” என்று.

அதற்குப் பதிலாய் எழுதி இருந்தார் மகிழன், “மலர் மணத்தின் ரசிகைக்கு என் நன்றிகள்.”

தொடர்ந்தன இப்படிப் பல கடிதங்களும் மகிழனின் பதில்களும்.  ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுதினாள் பிரேமா,

“அன்பு மகிழன் அவர்களே வணக்கம்.  உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து வாழ்த்திட ஆவலாய் இருக்கிறேன்.  இது சாத்தியப்படுமா?  உங்களை எங்கு, எப்போது சந்திக்கலாம்?”

கடிதத்துக்குப் பதில் வந்தபோது உடனே அதைக் கொண்டுபோய் கணவனிடம் காட்டித் தற்பெருமை அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அடுத்த கணம் அடக்கிக் கொண்டாள் அந்த ஆசையை.  மகிழனைச் சந்தித்துவிட்டு வந்தபின் சொல்லலாம் அவரிடம் என்று நினைத்து.  அன்று இரவு பூராவும் தூக்கம் வரவில்லை பிரேமாவிற்கு.  என்ன ஒரு பெரிய எழுத்தாளனை சந்திக்கப் போகிறாம் என்ற நினைப்பில்.

இரண்டு நாட்களுக்குப் பின்…

“என்னங்க… என்னங்க…”

“என்ன பிரேமா?”

“நாளெக்கி ஆடி வெள்ளிக் கெழமையா இருக்குங்க.  அதுனாலெ வெங்கட் நாராயணா ரோடுலெ இருக்குற வெங்கடாசலபதி கோவிலுக்குப் போயி அலமேலு மங்காவெ தரிசனம் பண்ணீட்டு வரலாமுன்னு நெனெச்சுக் கிட்டு இருக்கேங்க.”

“சரி போயிட்டு வா.  நல்ல காரியந்தான்.  எனக்கும் சேத்து வேண்டிக்கிட்டு வா.  ஆமாம், எத்தினி மணிக்குப் போகலாம்னு இருக்கே?”

“காலேலெ எட்டு மணிக்குங்க.  எதுக்குக் கேக்குறீங்க?”

“நான் வழக்கமா காலேலெ ஏழரெ மணிக்கு வாக் போவேன் இல்லியா? திரும்ப எப்பொ வருவேன்னு தெரியாது.  அதான் கேட்டேன்.  ஒண்ணு பண்ணு.  எதுத்த ஃப்ளேட்டுலெ சாவியெக் குடுத்தூட்டு போ.  நீ முன்னெ வந்தியானா நீ வாங்கிக்கலாம்.  நான் முந்தி வந்தா நான் வாங்கிக்கலாம்.”

“சரீங்க.”

மறுநாள் காலை எட்டரை மணி.  நடேசன் பார்க்கில் ஒரு பெஞ்சில் வெள்ளை வேட்டி கட்டி வெள்ளை ஜிப்பா போட்ட ஒருவர், தலையில் போட்டிருந்த கதர் குல்லாயால் முகத்தை மூடியபடி உட்கார்ந்திருக்கிறார்.

அங்கு அப்போது வந்த பிரேமா ஓரிரு முறை குட்டிபோட்ட பூனையாக இப்படி அப்படி நடக்கிறாள்.  அவள் மனதுள் ஓடுகின்றன சில கேள்விகள்.  நடேசன் பார்க்குக்குள் நுழைந்ததும் ரெண்டாவது பெஞ்ச் என்று தானே சொன்னார் மகிழன்.  இங்கு உட்கார்ந்திருப்பவராகத்தான் இருக்குமோ?  முகத்தை எதுக்கு மூடிக்கிட்டு இருக்கார்?  முகம் வெளியில் தெரிஞ்சா ஜனக் கூட்டம் கூடீடும்.  எதுக்குக் கூட்டம்னுதான் அப்படி மூடிக்கிட்டு ஒக்காந்து இருக்காரோ?  சரி எதுக்கும் ஒரு குரல் எழுப்பிப் பாப்போம் என்று நினைத்தவள், “சார்” என்றாள் அவர் அருகில் சென்று.

குல்லாயை அவர் கழற்ற, “என்னங்க நீங்க எப்பிடி இங்கெ?” என்றாள் பிரேமா சற்றே தடுமாற்றத்துடன்.

“அது ஒண்ணும் இல்லேம்மா.  நாலு ரவுண்டு நடந்து முடிச்சீட்டு திரும்பலாம்னு பார்க்கு வெளிலெ வந்தப்பொ ஃப்ரெண்டு ஒருத்தன் போனு பண்ணான், “எங்கெடா இருக்கே நீ?  ஒன்னெ அர்ஜென்டா பாக்கணுண்டா” ன்னு.

“வீட்டுக்கு வாடா எப்பொ வாணான்னேன் நான்.  இல்லெடா மேட்டர் ரொம்ப அர்ஜென்டுடா.  நீ எங்கெ இருக்கே சொல்லு இப்பொ.  அங்கெயே வந்து பாக்குறேன்னான்.

நான் நடேசன் பார்க்குலெ நடந்துகிட்டு இருக்கேண்டான்னேன்.  பார்க்குலெ நெரெயெ பேரு நடந்துகிட்டு இருப்பாங்கடா.  ஒன்னெக் கண்டுபிடிக்கிறது கஷ்டம்.  அதுனாலெ நீ ஒண்ணு பண்ணு.  பார்க்கு உள்ளெ நொழெஞ்சதும் ரெண்டாவது பெஞ்சுலெ ஒக்காந்திரு.  நான் பத்து நிமிசத்துலெ வந்தூடறேன்னான்.  இருபது நிமிஷம் ஆகுது இன்னும் காணும் அவனெ.  ஆமாம் நீ எங்கெ வந்தெ இங்கே?  நீயும் பார்க்குலெ தினோம் நடக்கலாம்னு முடிவு பண்ணீட்டையா?”

“இல்லீங்க.  நான் கோவிலுக்கு வந்தேனா.  அப்பொ என் கூடப் படிச்சவொ ஒத்தி போனு பண்ணா.  பாரு நீ எங்கேடி இருக்கேன்னு.  நான் வெங்கடாசலபதி கோவிலுலெ இருக்கேன்னேன்.  அவ சொன்னாக் கோவிலுக்கு நான் வந்தா ஒங்கூட ஜாஸ்தி நாழி பேச முடியாதுடீ.  நான் இப்போ பனகல் பார்க்கு மார்கெட்டுலெ கறிகா வாங்கீட்டு இருக்கேன்.  இன்னும் அஞ்சு நிமிசத்துலெ நடேசன் பார்க்குக்கு வந்து உள்ளெ நொழெஞ்சதும் ரெண்டாவது பெஞ்சுலெ ஒக்காந்து இருக்கேன்.  நீ முந்தி வந்தெயானா அங்கெ வந்து ஒக்காரு.  ரெண்டு பேரும் பேசலாம்.  ரொம்ப நாளாச்சுடீ ஒன்னெப் பாத்துன்னா.”

“அப்பிடீங்களா ரசிகப்ரியா அம்மா?”

“என்னாங்க மகிழனா நீங்க?  முன்னாடியே இது எனக்குத் தெரிஞ்சிருந்தா ஒங்க கதெயெல்லாம் எழுதி முடிச்சதுமே சுடச் சுட நான் மொத வாசகியாப் படிச்சிருப்பேன் இல்லே?  ஏனுங்க எங்கிட்டெ கூட சொல்லாமெ ரகசியமா வெச்சிருந்தீங்க இந்த விசயத்தெ?  இனிமே நான் எப்பொவுமே ஒங்களெத் திட்ட மாட்டேங்க பாழாப் போன கணினியெக் கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு.”

“சரி சரி வா வீட்டுக்குப் போகலாம்.”

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *