— சக்தி சக்திதாசன்

என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன்

 

 

Kannadasan

எழுபதுகளில் புலம்பெயர்ந்த ஒரு புலம்பெயர் தமிழனின் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் எவ்வகையில் விழுந்தார் எனும் கோணத்திலே எனது இந்த சிறிய பதிவு அமைகிறது.

நாம் பிறந்த மண்னை விட்டு வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேறி தமது வாழ்வை வெவ்வேறு இடங்களில் அமைத்துள்ளோம்.

அவ்வகையில் எழுபதுகளின் நடுப்பகுதியில் மேற்படிப்புக்காக நான் பிறந்த என் தாய்மண்ணாம் ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் எனது வாழ்வினை அமைத்துக் கொண்டவன் .

என்னைப் போன்ற எனது நிலையில் உள்ள அநேகம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

எனது வாழ்க்கையில் எனது தாய்மண் நினைவுகளோடு என்னை பிணைத்து வைத்துப் பார்க்கும் கவியரசரின் பாடல் ஒன்றை இங்கு எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

கவியரசர் தானே தனது வார்த்தைகளில் ” நான் கவியத்தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன் ” என்று தன்னைப்பற்றிய விளக்கத்தை அழகாக அளித்துள்ளார்.

ஒரு நாயகி தன் நாயகனின் பிரிவை எண்ணிப் பாடும் இந்தப் பாடலை நான் எனது தாய்மண்ணைப் பற்றிய பிரிவுத்தூயர் வாட்டும் போதெல்லாம் எண்ணிப்பார்த்து எனது மனதைத் தேற்றுவதுண்டு.

கவியரசரின் தனித்துவமே அதுதான். எந்தவொரு சூழலில் நாம் எம்மைக் கண்டாலும், எத்தகையதோர் உணர்வுத் தாக்குதலுக்கு நாம் உள்ளாகினாலும் அங்கெல்லாம் அந்த ரணத்திற்குக் களிம்பாக அவரது ஏதாவது ஒரு பாடல் எமக்குக் கை கொடுக்கிறது.

பாலும் பழமும் எனும் படத்தில் பீ.சுசிலாவின் இன்னிசைக்குரலும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி அவர்களின் இனிமையான இசையும் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டிய பாடலொன்றிலிருக்கும் இரு பத்திகள் எனது தாய் நாட்டோடு எனைப் பிணைக்கும் வரிகளாய் அமைந்திருக்கிறது.

எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா…

ஆமாம் புலம் பெயர்ந்தோர் வாழ்விலே தாய்நாட்டின் எண்ணங்கள் தானே மிகுந்திருக்கின்றன. அவ்வெண்ணங்களின் துணையாலே பாலம் அமைத்து எனது தாய்நாட்டை நோக்கி நான் இரவும் பகலும் நடப்பதைப் போன்ற ஒரு இனிமையான உணர்வை எனக்கு கவியரசரின் வரிகள் ஈந்திருக்கின்றன.

தாய்மண்ணை விட்டு இற்றைக்கு சுமார் நாற்பது வருடங்களாய் பிரிந்திருக்கும் என் மன உணர்வுக்கு,

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..

எனும் வரிகள் எத்தனை இதமாய் இருக்கிறது என்பது என்னைப்போலுள்ளவர்களின் உணர்வுகளாலேயே புரிந்து கொள்ள முடியும்.

35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு எனது தாய்மண்ணில் மீண்டும் நான் கால்பதித்தபோது மீண்டும் என் மானசீகக் குரு கவியரசரின் வரிகள் உணர்வோடு உள்ளத்தில் சதிராடின

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்….
பேசமறந்து சிலையாய் இருந்தால்…
அதுதான் தெய்வத்தின் சந்நிதி…..
அதுதான் காதல் சந்நிதி

ஆமாம் அத்தனை காலம் பிரிந்து இருந்த எனது தாய்மண்ணின் மீது கால்கள் பதித்தபோது வார்த்தைகளுக்கு அங்கே என்ன வேலை பேச மறந்து சிலையாக இருந்து எனது தாய்மண்ணை தெய்வசந்நிதியாக எண்ணி வணங்கத்தானே முடியும் !

தாய்மண்ணின் மீதுள்ள காதலுக்கு அதுதானே சங்கமாகின்றது.

புலம்பெயர்ந்தவன் எனும் வகையிலே எனது மொழியயும் எனது தாய்மண்ணின் மீதான பாசத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு என் மனதில் மானசீகக் குருவாக இருந்து என்னை வழிநடத்தும் கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்களாகத் திகழ்கின்றன.

அத்தனை முத்துக்களையும் உள்ளடக்கிய முத்துமாலையென கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் ஒரு புலம்பெயர் தமிழனாக என்னுள்ளத்தில் கொலுவிற்றிருக்கிறது.

ஒரு இளைஞனாக புலம் பெயர்ந்த என் வாழ்க்கைப் பயணத்தில் அகவைகள் நாற்பது அவசரமாக ஓடியே போய்விட்டது. இந்த காலங்களில் எத்தனையோவிதமான இன்ப துன்ப நிகழ்வுகளுக்குள்ளால் நான் உருண்டோடிப் போயிருக்கிறேன்.

அந்தச் சமயங்களிலெல்லாம் கவியரசரின் அற்புதமான இலக்கியங்கள் தான் எனக்கு கைகொடுத்து எனது உணர்வுகளைச் சீராக்கியிருக்கின்றன.

வாழ்வு என்மீது தொடுக்கும் அம்புகளின் வலிகளைத் தாங்கும் கேடயங்களாக அர்த்தமுள்ள இந்துமதம் முதற்கொண்டு அவரது பல படைப்புக்கள் என்னை இக்கட்டான சூழல்களில் வழிநடத்தியிருக்கின்றன.

எப்படி அவரது எழுத்துக்கள் மட்டும் இத்தகையதோர் பாதிப்பை ஏற்படுத்தின ?

அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களோடு, அதாவது ஒரு சாதாரண இளைஞனாக ஒரு குடும்பத்தலைவனாக, நட்புக்களை நம்பி பின் வஞ்சிக்கப்பட்டவராக, நல்ல மனிதர்களின் உதவியால் உயர்ந்தவராக தனது எழுத்துக்களை பிணைத்து அதனை எமக்கு அனுபவ அறிவாக ஊட்டியதால் தான்.

அவர் நடந்த பாதைகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் போல் எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சறுக்கல்களைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்கள் உதவின.

என் பார்வையில் கண்ணதாசன் ஒரு குன்றின் முன்னே வீற்ரிருக்கும் மாமலை போல் தென்படுகிறார்.

எனது எழுத்துக்களுக்கு ஒரு உந்துசக்தியைத் தருகிறார். எனது கவிதைகளுக்குள் அவரின் நினைவுகள் வாழ்கின்றன.

ஆக மொத்தம் அவரை எண்ணும் போதெல்லாம் என் விரல்களில் எழுத வேண்டுமென்ற துடிப்பெழுகின்றது.

அவர் காவியத்தாயின் இளையமகன் மட்டுமல்ல தனித்துவமிக்க ஒரு தமிழ்மகன்.

 

 
 

 
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.