இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (110)
–சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே!
இனிய வணக்கங்களுடன் இம்மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கிலாந்து அரசியல் ஆழியில் அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறது கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், ஜரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தலும்.
அப்படி என்ன அதிர்வலைகள் என்று கேட்கிறீர்களா?
இதுவரை காலமும் இங்கிலாந்து அரசியலில் முத்திரை குத்திவந்த மூன்று அரசியல் கட்சிகளுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் நான்காவது கட்சி ஒன்று இத்தேர்தல்களில் தனது முத்திரையை ஆணித்தரமாகப் பதித்துள்ளது.
ஆமாம், இதுவரை காலமும் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளே இங்கிலாந்து அரசியல் உலகில் கோலோச்சி வந்தன ஆனால் இத்தேர்தலின் மூலம் யூகிப் (UKIP) – ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி எனும் கட்சி தனது ஆளுமையை நிலைநாட்டியுள்ளது எனலாம்.
நைஜல் போல் ஃப்ராஜ் (Nigel Paul Farage) என்பவரின் தலைமையின் கீழியங்கும் யூகிப் எனும் கட்சியே இப்போது இங்கிலாந்து அரசியல் வானில் நான்காவது நட்சத்திரமாக உதித்துள்ளது.
ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் என்பதை முக்கியக் கொள்கையாக வைத்து இங்கிலாந்தினுள் வரும் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கையை மறுதலிக்கும் கொள்கையையும் பிரதிபலிக்கும் இவரது கட்சி, வரலாற்று முக்கியத்துவம் பெறக்கூடிய வெற்றியடைந்துள்ளது எனலாம்.
இவரது கொள்கைகள் வலதுசார் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவரது கருத்துக்கள் சிலசமயங்களில் நிறவேற்றுமை, இனவேற்றுமை கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பவையாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டு இவர்மீது பலமுனைகளில் இருந்து எழுவதுண்டு.
ஆயினும் தான் ஒரு இனவாதி அல்ல என்று மிகவும் ஆணித்தரமாக அடித்துரைக்கும் இவர் மிகவும் வெளிப்படையாகத் தனது கருத்துகளைக் கூறும் துணிச்சலுடையவர்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் நிலவிவரும் முரணான கருத்துக்களை விவாதிக்க முன்னணி அரசியல் தலைவர்கள் தயங்கும் சமயத்தில் அதன் விவாதங்களை வெளிக்கொணர்ந்து அதற்கான மேடையமைத்துக் கொடுத்தவர் இவர் என்று கூறுவதில் தவறேதுமில்லை.
வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை எனும்போது இவரது ஆதங்கம் ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அதுவும் குறிப்பாகச் சமீபத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பிரஜைகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஜக்கிய இராச்சியத்தினுள் நுழையும் உரிமை பெற்றிருப்பதுவே.
இவர் குறிப்பிடும் மற்றொரு கருத்தானது நன்கு கல்வித்தேர்ச்சி பெற்று இங்கிலாந்தின் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய இந்தியர்களைத் தடுத்து எவ்விதக் கல்வித் தகைமையும் இல்லாத, இங்கிலாந்து அரசாங்க உதவியில் தங்கியிருக்கக்கூடியவர்களைக் கட்டுப்பாடின்றி உள்ளே விடுவது எவ்வகையில் நியாயம் என்பதே.
நடந்து முடிந்த இந்தத் தேர்தலானது ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் பலவித சர்ச்சைகளைக் கிளப்பி பலமுனை விவாதங்களை முடுக்கி விட்டுள்ளது.
கட்சிகள் ஒவ்வொன்றும் தத்தமது தலைமைகளை மீண்டும் பரிசீலிக்கத் தொடங்கி உள்ளன. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றியடைய வேண்டுமானால் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
தேர்தலில் இங்கிலாந்தில் மட்டுமல்ல, முக்கியமான ஜரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்கால நடைமுறைகளில் அதிருப்தி தெரிவிக்கும் வகையிலேயே மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.
இத்தேர்தல்களைத் தொடர்ந்து நடந்த ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் பேசிய இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் அபிலாஷைகளை உள்வாங்க வேண்டிய தேவை ஜரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளது எனவும், ஜரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்பில் நிச்சயம் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.
இதனை ஆதரித்து பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியும் பேசியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அரசியல் அரங்கத்தில் எழுந்த ஆர்ப்பரிப்பு அலைகள் தொடர்ந்து இங்கிலாந்துப் பொதுத்தேர்தல் வரை போகுமா? இல்லையானால் இது வெறும் ஜரோப்பிய எதிர்ப்பு அலைதானா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மீண்டும் அடுத்த மடலில்,
சக்தி சக்திதாசன்