அமரத்வனி
கே. ரவி
(35 ஆண்டுகளுக்கு முன் ஷோபனா எழுதி என் இசையமைப்பில் எங்கள் இனிய நண்பர் ராஜு என்ற திரு.கே.எஸ்.ராஜகோபால் பாடிய ஒரு பாடல் இது. 1980-களில் வெளியான ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையில் உள்ளது. ராஜு ஒரு பெரிய வங்கியின் மேலாளராகப் பணியில் இருந்தார். திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களில், “கீரை அறுக்கையிலே கிழக்கு வெளுக்கையிலே” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபாலின் கணவர் இவர்.)
Audio Player
பாடலைக் கேட்க:
https://www.vallamai.com/wp-content/uploads/2014/05/04.Layame-Sivame.mp3
ஷோபனா ரவி
லயமே சிவமே தயங்காத காருண்யமே
மயனால் பிறந்த த்ரிபுரங்களை வெல்ல
பாணம் தந்த சிலையே
காலம் வென்ற நிலையே
(லயமே சிவமே)
பனியில் பூத்த தழலே – வெண்ணீறு
கனவு காணும் நிழலே
மதியும் அரவமும் நதியும் உலவிடும்
கானகக் குழலே
முகிலுலாவும் நுதலே
(லயமே சிவமே)
தீம் தோம் தீம் தோம் தீம்திரனதீம் தீம் தோம்
தவம்கலைந்ததும் தாண்டவம் தீம் தோம் – புயல்
நிமிர்ந்ததைப்போல் நர்த்தனம் தீம் தோம்
இமை விரிந்து சடை பிரிந்து – இசை
சிலிர்த்துத் தாளம் தெறிக்க
வீழ்ந்தோம் எனத் தீமைகள் நடுங்கும்
வாழ்ந்தோம் என வேதங்கள் முழங்கும்
கண் பனிக்க மனம் துடிக்கக் – கை
குவித்த படிவான் திகைக்க
வந்தோம் எனத் துந்துபி பாடிவரும்
தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம்
(லயமே சிவமே)
இனிய பாடல், இசையுடன் கேட்கும்போது, மேலும் இனிமையாக உள்ளது. ஷோபனா ரவி அவர்களைப் பாடலாசிரியராகவும் உங்களை இசையமைப்பாளராகவும் அறிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. திரு.கே.எஸ்.ராஜகோபால், உணர்வுப்பூர்வமாகப் பாடியுள்ளார். 35 ஆண்டுகள் சென்றும், இன்றும் ஈர்ப்புடன் இருக்கும் அமர கீதம், இது.