ஐயப்ப சாமி ஓவியமும், வெண்பாக்களும்

0

கிரேசி மோகன்

Iyappan
’’ஐயப்பன் வெண்பாக்கள்’’
—————————————-

ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
உண்மைக்குள் உய்ய உதவு….(1)….13-03-2008

அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
அரனில் அரியை அறிய புரிவாய்
சரணம் சபரி மலைக்கு….(2)….22-6-2008

ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்ததில்
ஞானமாம் நம்பிக்கை நட்சத்ரம் -கானிலே
உத்திர மானதன் உற்சவ கோலத்தின்
சித்திரம் கண்டேன் சபாஷ்….(3)….8-9-2008

சந்தன வாசன் சபரி விலாசனை
வந்தனம் கூறி வழிபட -பந்தள
ராச குமாரன் ரசனை மிகுந்தவன்
ஆசுகவி ஆக்குவான் ஆம்….(4)….1-12-2008

வாஸ்த்தவமே, வன்புலி வாகனனே நீலிமலை
ஆஸ்த்தானம் ஆளும் அரிஹர -சாஸ்தாவே
வந்துன்னை ஒவ்வோர் வருடமும் காணத்தா
பந்தளனே தேக பலம்….(5)….9-1-2009

பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
ஊன்றிடும் கோலுன் உறவு….(6)….8-4-2009

பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
தொல்லையாம் தேங்காய் தெறித்து….(7)….8-4-2009

மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
சபரிகிரி வாசன் ஜனிப்பு….(8)….10-4-2009

அய்யனை அன்பர்தம் நெய்யனை அல்லல்தீர்
கையனை மாலரன் பையனை -மெய்யனை
சாமி சரணம் சதாஸ்மரணம் செய்வோரை
காமிய கர்மமணு கா….(9)….10-4-2009
அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
நேசா வணக்கம் நினக்கு….(10)….26-09-2009

வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
பண்ணாத பாவமும் போச்சு….(11)….15-10-2009

பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
காமக் குரோத உலோபமத மாச்சரியம்
நாமத் திருநீறோ னே….(12)….02-01-2010

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *