Featuredஇசைக்கவியின் இதயம்இலக்கியம்பத்திகள்

மறக்க முடியாத மதுரை – 5

இசைக்கவி ரமணன்

rama
மதுரை டவுன் ஹால் ரோட்டைப் பார்க்காதவர்களுக்கு மனித வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ரயில்வே நிலையம் இருக்கும் சாலையில் உள்ள டவுன்ஹால் என்ற அரங்கில் துவங்கி, மீனாட்சி கோவிலின் மேலக்கோபுர வாசல் வரை செல்லும் இந்தச் சந்தை, சாலை என்பது ஆனாலும் ரொம்பத்தான் மிகை என்கிறவர்களுக்குச் சொல்லுவேன். சென்னையில் ‘பிராட்வே’ பார்த்திருக்கிறீர்களா? அறவே குறுகலான சந்துக்கு ஆங்கிலேயன் பெயர் வைத்தான் என்பதால் சரியாகி விடுமா?

ra

நான்மாடக் கூடலான மதுரையை மேலிருந்து பார்த்தால் அழகான சதுரம் புலப்படும். மீனாட்சி திருக்கோவில் மையம். உள்ளேயே ஆடிவீதி; பிறகு சித்திரை, மாசி, ஆவணி வீதிகள்; முடிவாய் வெளி வீதி. இவ்வளவுதான் அன்றைய மதுரை. அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்பக் கச்சிதமாக அமைக்கப்பட்ட அழகிய, சிறிய நகரம் மதுரை. ஆடி வீதியிலிருந்து வெளி வீதி வரை உள்ள அமைப்பில், பலப்பல சிறு வீதிகள் சிற்றோடைகளாய் நெளிந்து, திருக்கோவிலையே வந்தடையும். அமைக்கப்பட்ட இந்தப் பகுதியை விரிவுபடுத்த முடியாது. மேலும் நெருக்கலாம். இந்த நெருக்கலின் நிதர்சனமே டவுன் ஹால் ரோடு!

ra1

இரண்டு எட்டு எடுத்துவைத்தால் எதிர்ப்புறம் சென்று விடலாம். வைத்துத்தான் பாருங்களேன்! ஓரெட்டு வைக்கும் முன்னேயே, ஓரெட்டுப் பின்னுக்குத் தள்ளும் முரட்டுப் போக்குவரத்து! டவுன் ஹாலிலிருந்து மேலக்கோபுர வாசலை வந்தடையச் சில நிமிடங்களே போதும்! நடந்து பாருங்களேன்! அங்கங்கே அசைய முடியாதபடி நிற்கவைத்துவிடும் கூட்டம். அடிக்கடி, பச்சைக்குதிரை தாண்டுவோமா என்று தோன்றும் நெருக்கடி. அல்வாக் கடை, நேர்த்திக்கடன் ஊர்வலம், ‘வக்கப் பிரி’ சூதாட்டம், திரு சொக்கலிங்கத்தின் ‘விஜயா பதிப்பகம்’, ‘இஞ்சி’ என்ற சரக்கைச் சரளமாக விற்கும் வெற்றிலை பாக்குக் கடைகள், இந்து பத்திரிகையின் ஏஜெண்டான திரு ஜகன்னாதன் அவர்களின் அலுவலகம், அங்கே பலவிதமான சரித்திரத் தகவல்களைத் தேதிவாரியாகச் சொல்லும் சுந்தரராஜன், பழங்களைத் துவம்சம் செய்து கண்ணாடி டம்ளரில் வண்ணமயமாக விற்கப்படும் ‘மிக்சர்,’ விரட்டிக் கொண்டே இருக்கும் போக்குவரத்துக் காவல்துறை, அதற்கு மிரளாமல் விடாப்பிடியாய்க் குறுக்கே வண்டிகளை நிறுத்தும் முரட்டுக் குணம், ஊர்மீது கவிழ்ந்துகொண்டு உறுத்தித் துரத்தும் மதுரையின் பிரத்யேகமான வெய்யில், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் புதுச்சேலை, பட்டுவேட்டிச் சட்டை, கனத்த பாவாடை என்று நந்தவனத்து நிலவொளியில் பவனி வருவதுபோல வளைய வரும் மருதைக்காரர்கள், வண்டிவண்டியாய் வந்திறங்கும் வெளியூர்ப் பயணிகள், அவர்களை வாரி விழுங்கக் காத்திருக்கும் ‘கயிடு’கள், அவர்கள் பேசும் மதுரை இந்தி, மதுரை பெங்காலி, மதுரைத் தெலுங்கு, எல்லாவற்றையும் அசையாமல் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் காலத்தின் கோலமான மேலைக் கோபுரம், இதுதான் டவுன்ஹால் ரோடின் சுருக்கம்.

சொட்டுத் தண்ணீர்கூடக் கலக்காமல், ஆரஞ்சுகளை அப்படியே ‘மிஷினி’ல் பிழிந்து கொடுப்பார் மாணிக்கம். சாட்டையின் கடைசித் துண்டை மீசையாக்கி வைத்திருப்பார்! அந்த மீசையின் துல்லியமான முனைகளுக்குப் பூர்த்தி தரும்படிக் குங்குமப் பொட்டு. அரைக்கைச் சட்டைதான். பாட்டுப் பாடுவதில் உற்சாகம். அவரது பாட்டும், பிழிதலும் பொருத்தமாகவே இருக்கும். எனக்குக் காமாலை கண்டபோது ஒவ்வொரு நாளும் அவரது கடையில்தான் ஆரஞ்சு ரசம் அருந்துவேன். ‘ச்சீனி வேண்டாம், குளுகோசு ச்சேத்துக்குவோம்,’ என்று எனக்காகப் பிறையில் தனியே வைத்திருப்பார். இயல்பாகவே இனிக்கும் பழரசத்தில், க்ளுகோஸ் சேர்த்தே கொடுப்பார். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. காமாலையை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மாணிக்கம்தான் எனக்குக் கனிவாகவும், கண்டிப்பாகவும் சொன்னார்: ‘தம்பி! கண்ணுல மஞ்சக் கட்டிருச்சி; வியாதியோடு வீம்பு பிடிக்கிறது வீரமாயிறாது; நமக்கு ஒண்ணுன்னா அது நமக்கு மட்டும் இல்ல தம்பி. நம்மச் சாந்தவங்களுக்குந்தேன்; நீங்க வயித்தியரப் பாக்காம சூஸைக் குடிச்சிட்டுத் திரியறதப் பாத்தாய்ங்கன்னா என்னபாடு படுவாய்ங்களோ! செவத்த வச்சித்தேன் சித்திரம்பாய்ங்க பெரியவய்ங்க. நீங்க மொத ஊரப்பாத்துப் போய்ச்சேருங்க. இனிமே சூஸு கொடுக்கமாட்டேன்; சொல்லிபுட்டேன்,” என்று க்ளுகோஸ் பாக்கெட்டைத் திருப்பித் தந்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

உடனே புறப்பட்டு ஊருக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டேன். உடம்பு சரியாக ஒன்றரை மாதங்கள் பிடித்தன. இன்று நான் உயிரோடு இருப்பதற்கு, எந்த விதமான உறவுமில்லாமல், மாணிக்கம் சொன்ன அறிவுரையும் ஒரு காரணம் என்பதை, இந்த முறையும் நான் டவுன் ஹால் ரோட்டில் திரியும்போதும் நன்றியோடு நினைத்தேன்.

மாணிக்கத்தைக் காணவில்லை. அவர், எங்கிருந்தாலும், யாருக்காவது, வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாய் ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டுதான் இருப்பார், பாடிக் கொண்டே, மீசையைப் பெருமையுடன், தடவாமல் பார்த்துக்கொண்டே!

புகைப்படங்கள் : ரமணன்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க