Blog

  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 9

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 8. ஏனாதிநாதர்

    ஈழக் குலச்சான்றா ரெயின னூர்வா

        ழேனாதி நாதனா ரிறைவ னீற்றைத்

    தாழத் தொழுமரபார் படைக ளாற்றுந்

        தன்மைபெறா வதிசூரன் சமரிற் றோற்று

    வாழத் திருநீறு சாத்தக் கண்டு

        மருண்டார்தெ ருண்டார்கை வாள்வி டார்நேர்

    வீழக் களிப்பார்போ னின்றே யாக்கை

        விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.

     

    சோழ நாட்டில் எயினனூர் எனும் ஊரில் பிறந்தவர் ஏனாதியார். எயினனூர் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்காலத்தில் ஏனநல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஏனாதி என்பது அந்நாட்களில் படைத்தளபதியைக் குறிக்கும் சொல்லாகும். ஏனாதி என்ற பட்டம் படைத்தளபதிக்கு ஆபரணமாக நெற்றியில் அணியச் செய்வார்கள். இந்நாயனார் ஏனாதி என்ற பட்டத்தைப் பெற்றவர். ஈழகுலச் சான்றோர் குடியில் பிறந்தவர் இவர். மன்னர் குடி வந்தவர்களுக்கு வாட்போர்ப்பயிற்சி அளிப்பது இவருடைய பணி. இப்பணியிலிருந்து வரும் வருவாய் மூலமாக அடியார்களுக்கு உதவி செய்வதை தம் கடமையாகக் கொண்டு வாழ்பவர். வாட்படைப் பயிற்சிக் கூடம் அமைத்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இவர் வாள் வலிமையும், தோள் வலிமையும், அஞ்சா நெஞ்சமும் கொண்டு வாழ்ந்தவர். அந்த வகையில் மிகத்திறமையான அவருடைய பயிற்சியால் அவருக்கு செல்வாக்கும், செல்வமும் பெருகியது. அவருடைய அரவணைப்பால் அடியார்களும் சிறப்பாக வாழ்ந்ததால் அவருடைய புகழும் உச்சம் தொட்டது.

    இவையனைத்தையும் கண்டு எரிச்சலுற்ற மற்றொரு வாட்பயிற்சியாளனான அதிசூரன் என்பவன் அவர்மீது அழுக்காறு கொண்டான். அவன் இயல்பாகவே தற்பெருமையும், ஆணவப்போக்கும், பிறரை மதியாத தன்மை போன்ற குணக்கேடான எண்ணங்கள் கொண்டவன் என்பதால் குணக்குன்றான ஏனாதியாரைப் பகையாகக் கருதினான். ஒருநாள் ஏனாதியாரைப் பார்க்க அதிசூரன் அவர் இருக்கும் இடம் தேடி வந்தான். அவருடைய தொழிலைக் குறிவைத்துப் பறிக்க வந்தான். ஒரு ஊரில் இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கலாமா? யார் வலிமையானவரோ அந்த ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்றான். அதற்காக ஏனாதியாரிடம் பயிற்சி பெறுபவர்களையும், தன்னிடம் பயிற்சி பெறுபவர்களையும் வைத்து சண்டையிட்டு, அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தலாம் என்று திட்டமிட்டான். ஒரு உரையில் ஒரு கத்தி மட்டுமே இருக்க வேண்டும் என்றான். ஏனாதியாரும் அதற்கு இசைந்தார். அதற்கான நாளும், இடமும் குறிக்கப்பட்டது. அந்நாளில் அதிசூரன் கூறியபடி அனைவரும் கூடினர். போர் தொடங்கி வாள் வீச்சில் தலைகளும் துண்டாகி வீழ்ந்தன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்தனர் பலர். இறுதியில் அதிசூரனைத் தோற்கடித்தார் ஏனாதியார். அதிசூரனின் படைகள் தோற்று ஓடின. சேக்கிழார் பெருமானின் கவிச்சொற்கள் இவற்றை அழகாகப் பதிவிடுகின்றன:

    குருதியின் நதிகள் பரந்தன குறை

      உடல் ஓடி அலைந்தன

    பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி

      குடர் உடல் பம்பின

    வெருவர எருவை நெருங்கின

      விசியறு துடிகள் புரண்டன

    இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர்

      எதிர் அமர் செய் பறந்தலை. 

     

    தலைப்பட்டார் எல்லாரும் தனி

      வீரர் வாளில்

    கொலைப் பட்டார் முட்டாதார்

      கொல் களத்தை விட்டு

    நிலைப்பட்ட மெய் உணர்வு

      நேர் பட்ட போதில்

    அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்

      போல் ஆயினார்.

    புறமுதுகிட்டு ஓடும் நிலையில் மேலும் சினங்கொண்ட அதிசூரன் வன்மத்தைக் கக்கினான். தோல்வியால் அவமானத்தில் உழன்றவன், ஏனாதியாரை போரில் வெல்வது கடினம் என்பதைப் புரிந்துகொண்டு, அவரை வஞ்சனையால் வீழ்த்துவது என்று முடிவு செய்தான். மீண்டும் வந்தவன், நம்மால் நம் மாணவர்கள் வீணாக மடிய வேண்டாம். நாம் இருவரும் நேருக்கு நேர் மோதி யார் இந்த பயிற்சி வகுப்பை நடத்தத் தகுதியானவர் என்று முடிவு செய்யலாமே என்றான். நாயனாரும் இதற்கும் ஒப்புக்கொண்டு நாளைக் குறித்தனர். குறித்த நாளில் போரும் துவங்கியது. தீவிரமாக நடந்த போரில் அதிசூரன் தோற்கும் நிலைக்கு வந்துவிட்டான். அப்போது ஏற்கனவே தான் திட்டமிட்டபடி, அதுவரை தான் மறைத்திருந்த திருநீற்று மறைப்பை விலக்கினான் அதிசூரன். அதிசூரன் நெற்றியில் திருநீறு பொலிவதைக் கண்ட நாயனார் உள்ளம் சற்றே தடுமாறியது. கடையனே ஆனாலும் திருநீறு பூசியதால் இவன் சிவபிரானின் அடியவராகிவிட்டானே! இவ்வடியாரைக் கொல்வதா என்று வாளை வீசி எறியத் துணிந்தார். ஆனாலும் நிராயுதபாணியாக நிற்கும் தன்னைக் கொன்ற பாவம் அந்த சிவனடியாருக்கு வந்துவிடக் கூடாதே என்றும் தயங்கியவர், சண்டை போடுவது போல பாசாங்கு செய்தார். அதிசூரனும் தாம் எதிர்பார்த்தது நடந்துவிட்ட களிப்பில் தாம் நினைத்தபடி அவரை வெட்டி வீழ்த்த நாயனாரும் மண்ணில் சாய்ந்தார்.

    கடையவன் தன் நெற்றியின் மேல்

      வெண்ணீறு தாம் கண்டார். 

      கண்ட பொழுதே கெட்டேன் முன்பு

      இவர் மேல் காணாத

    வெண் திரு நீற்றின் பொலிவு

      மேற்கண்டேன் வேறு இனி என்

    அண்டர் பிரான் சீர் அடியார்

      ஆயினார் என்று மனம்

    கொண்டு இவர் தம் கொள்கைக்

      குறி வழி நிற்பேன் என்று.

    என்று அழகுற மொழிகிறார் சேக்கிழார் பெருமான்!

    நாயனார் பெருமான் அருள்வெளியில் எம்பெருமானின் காட்சியைக் கண்டு ஆனந்தம் கொள்கிறார்.  பொய்யாக திருநீறு பூசிப் பாதகம் செய்த அதிசூரன் நரகினை அடைந்து துன்பமுற்றான்.

     

    ஏனாதிநாத நாயனார் புராணம் கூறும் கருத்து!

     

    வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்

    தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்

    வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்

    ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார். 

    எனும் சேக்கிழார் பெருமானின் கூற்று பெண்மையின் ஒழுக்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. கரும்பு பூக்கும். காய்க்காது. நெல் பூக்கும், காய்க்கும். அதுபோன்று குலமகனானவள் பூத்துக் குழந்தைச் செல்வத்தைத் தருவாள். விலைமகளோ பூப்பாள். ஆனால் மகப்பேறு விருப்போடு பெறுவதில்லை. பெற்றாலும் அதில் சிறப்பில்லை என்கிறார் சேக்கிழார் பெருமான்!

    வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
    போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
    ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
    சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

    நம் சைவ சமயத்தின் ஆகச்சிறந்த சின்னமாகக் கருதப்படுகிற திருநீற்றின் சிறப்பினைப் பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் பதிகமாகப் பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ‘மெய்யெல்லாம் வெண்ணீறு சந்தித்த மேனியான்’ என்கிறார். குழந்தையான திருஞானசம்பந்தப் பெருமான் தொட்டிலில் இருந்த வேளையில் அக்குழந்தையைக் காப்பதற்கு திருநீறை அதிகமாகப் பூசினார்களாம். சேக்கிழார் பெருமான் இதனை, ‘வேற்றுக் காப்பு மிகை என்று நீற்றுக் காப்பே நிறையச் சாத்தி’ என்கிறார்.

    இத்தகைய சிவசின்னமாகிய திருநீறை மெய்யன்போடு பூசுபவர் சிவபதம் அடைவர்.

     “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை – மங்காமற்

    பூசி மகிழ்வாரே யாமாகிற் – றங்கா

    வினைகளுஞ் சாருஞ் சிவகதி

    சிங்காரமான சிவனடி சேர்விரே”

    என்னும் திருமந்திரத்தால் உணரலாம்.

    திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயர். வி என்றால் ஒப்பற்ற என்றும், பூதி என்றால் செல்வம் என்றும் பொருள். ‘விபூதி’ என்றால் ‘ஒப்பற்ற செல்வம்’ என்பது பொருள். ஏனாதியார் போன்று திருநீறு பூசிய அடியார் யாவராயினும் அவரைச் சிவமாகவே வணங்கும் பண்புடையவர்கள் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.

    எவரேனும் தாமாக விலாடத்து இட்ட திருநீறும்

    சாதனமும் கண்டால் உள்கி   

           உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்து அடிமைத்

    திறம் நினைந்து அங்கு  உவந்து நோக்கி

           இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு

    ஆட்டாது ஒழிந்த ஈசன் திறமே பேணிக்

           கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர்

    நடுதறியைக் காணலாமே

    என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறியலாம்.

    சிவன் விதித்தவழி ஒழுகாமல், பொய்த்தவ வேடத்தாற் பயனேதும் இல்லை என்பது,

    வேடநெறிநில்லார் வேடம்பூண்டென்

    பயன் – வேட நெறி நிற் போர் வேட

    மெய் வேடமே – வேட நெறிநில்லார்

    தம்மை விறல்வேந்தன் – வேட

    நெறி செய்தால் வீடதுவாகுமே

    என்றும்

     தவமிக்கவரே தலையான வேடர்

    அவமிக்கவரே அதிகொலே வேடர்

    அவமிக்கவர் வேடத்தாகா ரவ்வேடந்

    தவமிக்கவர்க் கன்றித் தாங்கவொண்ணுதே

    என்றும் திருமந்திரம் கூறுவதைக் காண்கிறோம்.

    சேக்கிழார் நாயனார் பாதகர்கள் மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்று இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே காரணம் என்பதை அறியலாம்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • நரேந்திர மோடியின் திருப்புமுனைப் பணிகள்

    நரேந்திர மோடியின் திருப்புமுனைப் பணிகள்

    அண்ணாகண்ணன்

    இந்தியாவின் தீர்க்க முடியாத சிக்கல்களாக, நெடுங்காலமாக நீடித்த பலவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாகத் தீர்த்துள்ளார்.

    * காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகளை நீக்கி, யூனியன் பிரதேசமாக மாற்றியது
    * பாபர் மசூதி வழக்கு முடிவு பெற்று, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை நிர்மாணித்தது
    * பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு
    * பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு
    * முத்தலாக் தடைச் சட்டம்
    * தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அனேகமாக நிறுத்தப்பட்டது
    * 12 கோடி வங்கிக் கணக்குகள் தொடக்கம். மானியங்கள், அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றன
    * பாஸ்டாக் வழியே சுங்கக் கட்டணம்
    * யூபிஐ வழியே பணப் பரிமாற்றம்
    * இந்திய ரூபாயில் இதர நாடுகளுடன் வர்த்தகம்
    * ரூ.12 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு

    இந்த இலக்குகளை எட்டுவதில் அவருக்கு ஏராளமான தடைகள் இருந்தன. கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். ஆனால், துணிச்சலாக இவற்றை நிறைவேற்றினார். தொலைநோக்குடன் முடிவுகளை எடுத்தார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்தினார். எழுச்சி மிக்க புதிய இந்தியாவை மீண்டும் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    துணிவும் தொலைநோக்கும் ஆளுமையும் உறுதியும் மிக்கவராக நரேந்திர மோடி திகழ்கிறார். இன்று 75ஆவது பிறந்தநாள் காணும் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.

    Share
  • பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான்!

    பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாரதி எங்கள் பண்பாட்டுப் பெட்டகம்
    பட்டதை பக்குவமாய் ஈந்திட்ட வரகவி
    விடுதலை நோக்கியே விரைந்திட்ட வீரன்
    வீரமும் விவேகமும் நிறைந்த நற்கவிஞன்

    தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன் பாரதி
    அமுதென்று தமிழதனை அகமிருத்திச் செப்பினான்
    பன்மொழிகள் தெரிந்தாலும் தாய்மொழியாம் தமிழை
    தலையேற்றி நின்று தரணிக்கே உரைத்தான்

    முற்போக்குச் சிந்தனையை முன்னுக்கு வைத்தான்
    பிற்போக்கு என்றாலே பிய்த்துமே எறிந்தான்
    நற்போக்கு உள்ளோரை நயந்தேற்றி நின்றான்
    நாட்டின் விடுதலைக்காய் நலமிழந்தும் நின்றான்

    மூடத் தனத்தை மூர்க்கமாய் எதிர்த்தான்
    சாதித் திமிரை தகர்த்தெறிந்து நின்றான்
    உண்மையை நேர்மையை உயிரெனவே எண்ணினான்
    கண்ணிலே கம்பீரம் காட்டியே  நின்றான்

    பாரதியின் பாட்டு பாமரர்க்கு விருந்தாகும்
    பண்டிதர்க்கு அவர்பாட்டு வேண்டாத மருந்தாகும்
    பாப்பாவை முன்னிறுத்திப் பலவுரைத்தான் பாரதி
    பற்பல தத்துவங்கள் பலருக்கும் இருந்தன

    பக்தியைப் பாரதி பக்குவமாய்ப் பார்த்தான்
    சத்தியமாய் பக்தியாய் தன்மனதில் இருத்தினான்
    கீதையைப் பாடினான் கண்ணனைப் பாடினான்
    பாஞ்சாலி சபதத்தால் பலவற்றைக் கூறினான்

    எதுகையும் மோனையும் இணைந்துமே நின்றன
    எத்தனையோ வித்தைகளை கவிதையில் காட்டினான்
    பாரதியின் பாட்டைப் பலருமே படித்திட்டால்
    பார்க்காத அத்தனையும் பார்த்துமே வியந்திடலாம்

    அடிமைத் தளையகற்ற அத்தனையும் பாடினான்
    ஆனாலும் அதனூடே அன்னைத்தமிழ் ஒளிர்ந்தது
    அதிகார வர்க்கத்தை அவன்பாட்டு அசைத்தது
    அஞ்சாத சிங்கமாய் அவனெங்கும் திரிந்தானே

    விடுதலை வேண்டுவார் பாரதியைப் பார்க்கின்றார்
    வீரத்தை நாடுவார் பாரதியை நாடுகிறார்
    பக்திக்கும் பாரதியே பண்புக்கும் பாரதி
    பாரதி என்றுமே தமிழுக்குச் சொத்தாவான் !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 8

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 7 எறிபத்தர்

    திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்

        சிவகாமி யார்மலரைச் சிறந்த யானை

    யானெறியோ நெறிபத்தர் பாக ரோடு

        மறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று

    புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்

        புரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்

    கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்

        கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.

    ஈரோடு – திருச்சி செல்லும் சாலையில், ஈரோட்டிலிருந்து 65 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கரூர் எனும் ஊர். சோழப் பேரரசின் புகழ்பெற்ற 5 தலைநகரங்களில் ஒன்றான இவ்வூர் திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களில் ஒன்று. புகழ்ச்சோழர் மன்னன் ஆண்ட இவ்வூர் நீர் வளம், நில வளம், பொருள் வளம், அருள் வளம் என அனைத்து வளங்களும் நிறைந்த ஊர். அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூரில் உள்ள ஆநிலை எனும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பசுபதீசுரரை காமதேனு வழிபட்டதால் இந்த ஆலயம் ஆநிலை என்ற பெயர் பெற்றுள்ளது. பசுக்களின் தலைவன் என்பதால் பசுபதி ஆனார் இறைவன். 9ம் திருமுறை ஆசிரியரான கருவூர் தேவரும், எறிபத்த நாயனாரும் அவதரித்த ஊர் என்ற பேறு பெற்ற ஊர் இது.

    இத்தகைய பெருமை வாய்ந்த கரூரில் அருளாட்சி புரிந்து வரும் பசுபதீச்சுரரை அன்றாடம் வணங்கி வழிபட்டு வருபவர் எறிபத்திரர். காலை, நண்பகல், மாலை என மூன்று காலமும் குறைவிலாது வழிபாடு செய்துவரும் பெற்றியர் இவர். சிவனடியார்களுக்கு அருந்தொண்டு செய்துவரும் பண்பினரான இவர் அவர்கள் செய்யும் தொண்டுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால், குகையிலிருந்து சீற்றத்துடன் புறப்படும் சிங்கம் போன்று எழுந்து நின்று அவர்களை ‘பரசு’ எனும் ஆயுதத்தை எறிந்து தாக்கி அந்த சிவனடியார்களுக்கு உதவி வந்தார்.

    அதே காலத்தில் கருவூரில் சிவகாமியாண்டார் என்ற ஒரு அன்பர் மலர்த்தொண்டு செய்வதில் நிகரற்றவராக விளங்கினார்.

    நகமெலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி
    முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்தேத்து தொண்டர்
    அகமலாற் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

    என்று நாவுக்கரசர் மலர்த்தொண்டு செய்பவரின் மகிமை பற்றி எடுத்துரைக்கின்றார். மகத்தான மலர்த்தொண்டை செய்யும் அடியவரின் உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன் என்பார்.

    சிவகாமி ஆண்டார் அன்றாடம் வைகறையில் துயிலெழுந்து, நீரில் மூழ்கிக் குளித்துத் திருவெண்ணீறும், கண்மணியும் அணிந்து, வாயினைக் கட்டிக்கொண்டு, நந்தவனத்திற்குள் சென்று மலரும்முன் மொக்குகளைப் பறித்து, பூக்குடலையில் நிரப்பி, அசுத்தம் படாதவாறு ஒரு மூங்கில் கம்பில் அப்பூக்குடலையை மாட்டிக் கொண்டு வருவார். பின் ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் உச்சரித்துக்கொண்டே அம்மலர்களை மாலையாக்கி, பெருமானுக்கு அணிவித்து வழிபடுவதை காலந்தோறும் தவறாமல் செய்து வருவார்.

    வைகறை உணர்ந்து போந்துபுனல்

      மூழ்கி வாயும் கட்டி

    மொய்ம்மலர் நெருங்கு வாச

      நந்தன வனத்து முன்னிக்

    கையினில் தெரிந்து நல்லகமழ்

      முகை அலரும் வேலைத்

    தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப்

      பள்ளித் தாமம் கொய்து.

    இப்படியாக மலர்த்தொண்டு தொடர்ந்துவரும் காலகட்டத்தில், ஓர் நாள் ஏற்பட்டது சோதனை அவருக்கு. நவமிக்கு முந்தைய நாளான அட்டமியில், ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க கருவூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழருடன், பல போர்களில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிவந்த ‘பட்டவர்த்தனம்’ எனும் தமக்கு மிகவும் பிரியமான பட்டத்து யானையுடன் அக்கோவிலின் விழாவினைச் சிறப்பிக்க வந்தார்.  சிவகாமியாண்டாரும் வழக்கம் போல, நீராடியபின் மலர்களைக் கொய்து குடலையில் நிரப்பி, மூங்கில் கழியில் மாட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பட்டத்து யானையை அலங்காரம் செய்து ஊர்வலத்திற்குத் தயார் செய்யும்பொருட்டு ஆற்றுக்கு குளிப்பாட்டுவதற்காக அழைத்து வந்தனர். அமைதியாக நீராடிய யானை திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மதம் பிடித்துத் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. 5 பாகர்கள் உடன் இருந்தும் அவர்களால் கட்டுப்படுத்த இயலாமல் யானை வேகமாக ஓட ஆரம்பித்தது. மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.

    அதே வேளையில் பூக்குடலையுடன் வந்த சிவகாமி ஆண்டாரின் பூக்குடலையைப் பிடுங்கி வீசி எறிந்தது அந்த மதம் பிடித்த யானை. எம்பெருமானுக்குச் சூட வேண்டிய மலர்கள் அனைத்தும் தெருவில் சிதறிப்போயின. தம் மலர்த்தொண்டுக்கு இத்தகைய இடையூறு நேர்ந்துவிட்டதே, இதைத் தடுக்கும் ஆற்றலும் இந்த முதியோனுக்கு இல்லையே என்று கதறினார். தரையில் அமர்ந்து, ‘சிவதா, சிவதா’ என்றே கதறினார்.

    களி யானையின் ஈர்உரியாய் சிவதா!

    எளியார் வலியாம் இறைவா! சிவதா!

    அளியார் அடியார் அறிவே! சிவதா!

    தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!

    இவ்வாறு சிவபெருமானிடம் முறையிட்டுக் கொண்டிருந்த போதுதான் அங்கு எறிபத்தர் வந்து சேர்ந்தார். சிவனடியாரின் துன்பம் கண்டு பொங்கியெழுந்தவர், அவர்தம் இடையூறைக் களையவொண்ணாமல், சிவனடியாருக்கு இடையூறு செய்த அந்த யானையைக் குத்திக் கொல்வேன் என்று சூளுரைத்தவர், பரசுவைக் கையிலேந்தியவாறு புறப்பட்டார்.

    கண்டவர் இதுமுன்பு அண்ணல்

      உரித்த அக்களிறே போலும்

    அண்டரும் மண் உளோரும்

      தடுக்கினும் அடர்த்துச் சிந்தத்

    துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர்

      மழு வலத்தில் வீசிக்

    கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று

      காலினால் குலுங்கப் பாய்ந்தார். 

    அந்த மதம் பிடித்த யானை செல்லும் வழியில் எறிபத்தரும் விரைந்து சென்றவர், அதைக் குத்திக் கொல்வேன் என்றவாறு ஓடுகிறார். தறிகெட்டு ஓடும் மதயானையைக் கொல்ல முடியுமா என்ற சிந்தை துளியும் இன்றி அதைக் கொல்லத் துணிந்தார். ஆனால் அந்த யானை எறிபத்தர் மீது கோபத்தோடு பாய்ந்தது. எறிபத்தரும் சட்டென்று தம் மழுவினால் யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். அதோடு அதன் பாகர்கள் ஐவரையும் வெட்டி வீழ்த்தினார். இச்செய்தி மன்னன் புகழ்ச்சோழனுக்குச் சென்று சேர்ந்தது. அவரும் பட்டத்து யனையையும், பாகர்களையும் கொன்றது பகைவர் செயல் என்று கருதி நாற்படையுடன் யானை இருந்த இடம் நோக்கி விரைந்தார்.  அங்கே எறிபத்தர் சற்றும் அஞ்சாமல் சிங்கம் போல் சிலிர்த்துக் கொண்டு மழுவுடன் நின்றிருந்தார்.

    மன்னரைக் கண்ட எறிபத்தர், அவருடைய பட்டத்து யானை செய்த தீங்கையும் பாகர்கள் அதைத் தடுக்காமல் இருந்ததால் தாம் அவர்களைக் கொன்றதாகவும் எறிபத்தர் விளக்கினார். புகழ்ச்சோழர் இதைக் கேட்டு, எறிபத்த நாயனாரின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்றும், பட்டத்து யானையால்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்றும் புரிந்துகொண்டு மிகவும் மனம் வருந்தியவர், அடியார்க்குத் தீங்கு செய்த யானையையும் பாகர்களையும் மட்டும் கொன்றது போதாது. இவற்றைச் சரியாக நிர்வகிக்காத குற்றவாளியான தன்னையும் கொல்லவேண்டும் என்று கூறி, புனிதமான அவருடைய மழுவால் கொல்ல வேண்டாம் என்று தம் உடைவாளை எடுத்து எறிபத்தரிடம் கொடுத்தார்.

    ஆனால் எறிபத்தரோ புகழ்ச்சோழரின் பக்தியையும், அடியார்கள் மீது கொண்ட அன்பையும் கண்டு உள்ளம் நெகிழ்ந்தவர், இத்தகைய சிவனடியாரின் மனம் புண்படச் செய்துவிட்டோமே, தாம் இனி உயிர் வாழ்வதில் பயன் இல்லை என்று எண்ணி மழுவினால் தன்னையே மாய்த்துக்கொள்ள முயன்றார். இதனைக் கண்ட புகழ்ச்சோழர் பதறிப்போய் அவரைத் தடுத்தார். அப்போது வானில் தோன்றிய அற்புதமான ஒலி, அந்த இரு சிவனடியார்களின் அன்பினை உலகறியச் செய்யவே தாம் இவ்வாறு செய்தோம் என்றது. அந்த நொடியில் யானையும், பாகரும் உயிர் பெற்றனர். மலர்களும் மீண்டும் குடலையில் சேர்ந்தது. சிவகாமியாண்டார் தமது மலர்த்தொண்டை மேலும் சிறப்பாகத் தொடர்ந்தார். எறிபத்தர் திருத்தொண்டு செய்து கயிலையில் சிவகண தலைவராக ஆனார். எறிபத்தர் எனும் சிவனடியார் நாயன்மார் ஆன வரலாறு இதுதான்.

     

    எறிபத்த நாயனார் புராணம் சொல்லும் கருத்து!

    பசுபதீசுரர் அருள் பாலிக்கும் ஆநிலை எனும் கோவில் அமைந்த திருத்தலமான கரூரில் உள்ள அப்பெருமானை வழிபடுவதால் மீண்டும் ஒரு கருவறையில் கருவாகப் பிறக்கும் வாய்ப்பு உண்டாகாது என்பர். கரூர் நகரைச் சேர்ந்த இரு பெரும் சங்கப் புலவர்களின் பாடல்களை புறநானூறு காட்டுகிறது. சோழ மன்னர்கள் தங்கள் புலிக்கொடியை இமயத்தில் பொறித்து வெற்றிக் கொடியை நாட்டினர். பொன்னாக மின்னும் இமயத்தின் பழைய பாதைகளை அடைத்து அன்னியர் உள் நுழையாமல் தடுத்துப் புதிய பாதைகளை அமைத்து காவல் வைத்தனர் சோழர்கள். அந்த வகையில் தமிழர் தம் ஆட்சி அகண்ட தமிழகமாக இமயம் வரை நீண்டிருந்த வரலாற்றுக் குறிப்பையும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.

    பொன்மலை புலிவென்றோங்கப் புதுமலை இடித்துப் போற்றும்

    அந்நெறி வழியே ஆக அயல்வழி அடைத்த சோழன்

    மன்னிய அநாபன் சீர் மரபின் மாநகராகும்

    தொன் நெடுங் கருவூர் என்னும் சுடர்மணி வீதி மூதூர்

    என்கிறார் .

    மலர்த்தொண்டு என்பது இறைவனுக்குச் செய்யும் நிகரற்ற தொண்டு என்பதை திருஞானசம்பந்தப் பெருமான்,

    தொண்டரெல்லாம் மலர் தூவி ஏத்த நஞ்சு

    உண்டலாருயிர் ஆயதன்மையர்

    கண்டனார் கருவூருள் ஆநிலை

    அண்டனார் அருளீயும் அன்பரே

    என்று தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

    எறிபத்தர் பற்றி, “இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்” என்று திருத்தொண்டத்தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமையாகக் கூறியுள்ளார்.

    பூக்குடலை விழா:

    இந்நாளிலும் இந்த அரிய நிகழ்வை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மகா அட்டமி தினத்தன்று, அனைத்து பக்தர்களும் பூக்குடலை ஏந்தி, ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, பூக்குடலை விழா நடத்தி வழிபட்டு வருகிறார்கள். அன்றைய தினம் கோயிலில் எறிபத்த நாயனார், புகழ்ச்சோழர், சிவகாமியாண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிசேகமும், அலங்காரமும் நடைபெறுகின்றது.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!

    இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    குடும்பம் என்றால் குதூகலம் வேண்டும்
    தாத்தா பாட்டியைத் தாங்கிட வேண்டும்
    மூத்தோர் வார்த்தை கேட்டிட வேண்டும்
    முடியும் வரைக்கும் உதவிட வேண்டும்

    உறவுகள் ஒன்றாய் இணைந்திட வேண்டும்
    மறைவுகள் நமக்குள் அகன்றிட வேண்டும்
    கரவுடன் பழகுதல் மறந்திட வேண்டும்
    கனிவுடன் உறவினைப் பேணிட வேண்டும்

    செல்வம் பார்க்கா சேர்ந்திட வேண்டும்
    சிறந்த பண்பை மதித்திட வேண்டும்
    பொய்மை நட்பை உதறிட வேண்டும்
    பொங்கும் சினத்தைப் பொசுக்கிட வேண்டும்

    வறுமை கண்டு ஒதுக்கிடல் வேண்டாம்
    மனத்தை உடைக்க நடந்திட வேண்டாம்
    பொறுமை என்பதை அணிகலம் ஆக்கி
    பூதலம் போற்றிட வாழ்ந்திட வேண்டும்

    அன்பை அகத்தில் நிறைத்தல் வேண்டும்
    அறத்தின் வழியில் நடந்திட வேண்டும்
    துன்பம் காணின் துடித்துமே நின்று
    அன்பைக் காட்டி அணைத்திடல் வேண்டும்

    உள்ளம் உடைந்திட உரைத்திடல் வேண்டாம்
    உணர்வை இழக்கச் செய்திட வேண்டாம்
    பாசம் காட்டிடும் வேசம் வேண்டாம்
    பழசை மறந்தும் செயற்பட வேண்டாம்

    பிறந்த நாளை யாவரும் அறிவோம்
    பிறக்கும் வேளை பெருகிடும் இன்பம்
    இறக்கும் நாளை எவரும் அறியார்
    இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்

    காலன் வந்தால் விடவே மாட்டான்
    கெளரவம் காசைப் பார்க்கவும் மாட்டான்
    முடிவு என்பது நிச்சயம் என்பதை
    மனதில் வைத்தால் குடும்பம் சிறக்கும்

    Share
  • இமிகிறேஷன் ! இமிகிறேஷன் ! இமிகிறேஷன்

    இமிகிறேஷன் ! இமிகிறேஷன் ! இமிகிறேஷன்

    சக்தி சக்திதாசன்

    இமிகிறேஷன் அது இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கில் ஒரு மையக் கோள்

    இது எங்கே ஆரம்பித்தது ?

    அண்மை வரலாற்றினை எடுத்துப் பார்த்தால்,

    இமிகிறேஷன் என்பது இங்கிலாந்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் நீண்ட காலமாகவே முக்கிய பங்கு வகித்துள்ளது.

    1948-ம் ஆண்டு British Nationality Act மூலம் Commonwealth நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பிரிட்டிஷ் குடிமக்களாகக் கருதப்பட்டனர்.

    1960களில் இங்கிலாந்தில் கட்டிடம், மற்றும் பஸ் , இரயில், லொறி ஓட்டுனர் போன்ற தொழிளார்களை மேற்கிந்திய தீவுகளிலிருந்து வின்றஷ்(Windrush) எனும் கப்பல் மூலம் இங்கிலாந்து அரசாங்கம் இறக்குமதி செய்தது.

    அந்தத் தலைமுறை வந்ததிலிருந்து, இமிகிறேஷன் தொடர்பான அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்தன.

    1970களில் கன்சர்வேடிவ் (Conservative) கட்சி கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தொடங்கியது.

    1990களில் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) உறுப்பினராக இருந்ததால் EU குடிமக்கள் சுதந்திரமாக யூ கே விற்கு  வர முடிந்தது.

    பிறேக்ஸிட் (Brexit)க்கு பின், இமிகிறேஷன் மீண்டும் ஒரு தேசியக் கோளாக மாறியது.

    இன்றைய சூழ்நிலை ஏன் இமிகிறேஷன் முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறியது?

    பொதுமக்கள் உணர்வு ஒரு காரணம் எனச் சொல்லலாம்

    யூ கவு (YouGov) மற்றும் எக்கனொமிஸ்ட் (Economist) கருத்துக்கணிப்புகள் படி, பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் இமிகிறேஷனை முக்கிய பிரச்சனையாகக் கருதுகின்றனர்.

    சிறிய படகுகள் (Small Boats Crisis): ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக வரும் அகதிகள் பற்றிய செய்திகள் மக்கள் மனதில் பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடு குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன.

    ரீபோர்ம் யூ.கே (Reform UK) கட்சியின் எழுச்சி இமிகிறேஷன் அதாவது வெளிநாட்டவர்  குடியேற்றத்தை மையப்படுத்தியே ஏற்பட்டது என்பதே உண்மை.

    நைஜல் பராஜ் (Nigel Farage) தலைமையிலான ரீபோர்ம் (Reform UK) கட்சி, இமிகிறேஷனை மையக் கோளாக வைத்து தேர்தலில் வெற்றிபெற்று மற்ற கட்சிகளையும் அதே கோளில் பேச வைக்கிறது.

    சமூக சேவைகள் மீது அழுத்தம் ஏற்பட தேசிய சுகாதார சேவை (NHS), வீடுகள், பள்ளிகள் போன்ற சேவைகள் அதிக குடியேற்றத்தால் சிரமப்படுகின்றன என்பது கன்சர்வேடிவ் (Conservative) கட்சியின் வாதம்.

    அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதை நோக்கின்,

    கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party)

    கன்சர்வேடிவ் (Conservative) கட்சி, இமிகிறேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

    அவர்கள் “மொத்த வெளிநாட்டவர் குடியேற்றம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்ற கொள்கையை முன்வைக்கின்றனர்.

    நிரந்தர வதிவிட உரிமை(Indefinite Leave to Remain) பெறும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    குடிமகனாக மாறும் காலம் 1 → 5 ஆண்டுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    அரசு நன்மைகள் பெறும் குடியேற்றவர்களுக்கு தங்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

    இவர்கள் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தும் கோட்பாட்டில் செயல்படுகின்றனர்.

    தொழிற் கட்சி (Labour Party)

    தொழிற் கட்சி, “நடுநிலையான ஆனால் கட்டுப்பாடான குடியேற்றம்” என்ற சமநிலை கொள்கையை பின்பற்றுகிறது.

    ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக வரும் சிறிய படகுகள் மூலம் வருவோரை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பிரான்ஸ் உடன் “உள் வரும் ஒருவருக்கு ஒருவர் திருப்பி அனுப்பப் படுவர்” என்ற ஒப்பந்தம் மூலம் அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முயற்சி.

    அகதிகள் முறை  விரைவாக செயல்படுத்தும் திட்டம் உள்ளது.

    இவர்கள் மனித உரிமைகள் மற்றும் நடைமுறை அரசியல் இடையே சமநிலையை நோக்கி நகர்கின்றனர்.

    ரீபோர்ம் யூ.கே (Reform UK)

    ரீபோர்ம் யூ.கே (Reform UK) கட்சி, கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

    – “அதிகாரபூர்வமற்ற குடியேற்றவாசிகள் முற்றாகத் தடை” என்பது இவர்களின் அடிப்படைத் தத்துவம்.

    தொகையாக வெளியேற்றம்  (Mass deportations), தடை முகாம்கள் (detention camps) போன்ற திட்டங்களை முன்வைக்கின்றனர்.

    ஐக்கிய நாடுகள் அகதிகள் திட்டம் ( UN Refugee Convention ) இல் இருந்து விலகும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.

    நைஜல் வராஜ் (Nigel Farage) தலைமையில், ட்ரம்ப் (Trump-style) பேச்சு முறையை பின்பற்றி, இமிகிறேஷனை மையக் கோளாக மாற்றியுள்ளனர்.

    இவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை முன்னிறுத்துகின்றனர்.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி (Liberal Democrats)

    லிபரல் டெமகிரட்ஸ் (Liberal Democrats) கட்சி,  அனுதாபத்துடன் கூடிய நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய குடியேற்றம் (Compassionate and practical immigration) என்ற கொள்கையை பின்பற்றுகிறது.

    அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் கொள்கையை ஆதரிக்கின்றனர்.

    ரீபோர்ம் யூ.கேயின் கடுமையான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.

    மனிதநேயம் மற்றும் நடைமுறை தீர்வுகள் ஆகியவற்றை இணைக்கும் முயற்சி.

    இவர்கள் அகதிகளின் உரிமைகளை மதிக்கும் நாகரிகப் பார்வையை கொண்டுள்ளனர்.

    கிறீன் கட்சி – Green Party

    கிறீன் கட்சி Green Party,  மனித உரிமைகள் மற்றும் ஆதரவான நடைமுறை (“Human rights and inclusion”) என்ற தத்துவத்தில் செயல்படுகிறது.

    சக் போலன்ஸ்கி (Zack Polanski) போன்ற சூழல் பிரபல்ய (eco-populists) கட்சி நிலைப்பாட்டை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

    சிறு படகுகள் (Small boats) மூல அகதிகள் வரவு பற்றிய தேசிய அரசியல் மாயையை (obsession) விமர்சிக்கின்றனர்.

    அகதிகள் மற்றும் குடியேற்றவர்களின் மனித உரிமைகளை முன்னிறுத்துகின்றனர்.

    இவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை இணைக்கும் பார்வையை கொண்டுள்ளனர்.

    எதிர்மறை மற்றும் ஆதரவு வாதங்களை எடுத்துப் பார்க்க விழைந்தால்,

    ஆதரவு வாதங்கள்

    பொருளாதார நன்மைகள் என வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பல்துறை திறமைகள்.

    பல்வேறு கலாச்சாரங்கள் சமூக ஒற்றுமை, கலாச்சார பரிமாற்றம்.

    மனித உரிமைகளாக அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நாகரிகப் பொறுப்பு.

    எதிர்மறை வாதங்களாக

    சமூக சேவைகள் மீது அழுத்தங்களாக என்.எச்.எஸ்(NHS) வீடுகள், கல்வி என்பனவற்றின் மீதான தாக்கங்கள்.

    பாதுகாப்பு பற்றிய கவலை, சட்டவிரோத குடியேற்றம், குற்றச்செயல்கள் எனனவற்றின் அதிகரிப்பு.

    இங்கிலாந்து நாட்டு மக்களின் அடையாள இழப்பு

    புதுமுகங்கள் நிறைந்த தீவு (Island of strangers) என்ற பிரதமர் ஸ்டாமரின் (Starmer) அண்மைய பேச்சு, இனோக் பவல் ( Enoch Powell) எனும் முன்னாள் இனவேற்றுமையை முன்னிறுத்திய அரசியலை முன்னெடுத்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியின் இரத்த ஆறு (Rivers of Blood) பேச்சை நினைவுபடுத்துகிறது.

    இதனால் எழுப்பப்படும் சிந்திக்க வைக்கும் கேள்வி

    இமிகிறேஷன் தொடர்பான அரசியல் விவாதங்கள் உணர்வுப்பூர்வமானவை, ஆனால் உண்மை தரவுகள் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் சிந்திக்க வேண்டியவை.

    இங்கிலாந்து, அதன் வரலாற்று அடையாளத்தையும், நாகரிகப் பொறுப்பையும், பொருளாதார தேவைகளையும் சமநிலைப்படுத்த முடியுமா?

    வாசகர்களுக்கான கேள்வியாக

    “இங்கிலாந்து, ஒரு பாதுகாப்பான, நாகரிகமான நாடாகவும், அதேசமயம் அதன் எல்லைகளை கட்டுப்படுத்தும் நாடாகவும் இரட்டை அடையாளத்தை ஏற்க தயாரா?”

    எனும் கேள்வியை முன்வைத்து இக்கட்டுரை நிறைவுறுகிறது.

    Share
  • ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    அண்ணாகண்ணன்

    இன்று பிறந்த நாள் காணும் வல்லமை நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் நீடூழி வாழ்க.

    தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது பெற்றவர், 20க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், கிம் யாங் ஷிக் கவிதைகளைக் கொரிய நாட்டுக் கவிக்குயில் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர், லெஸ்லி டவுனர் எழுதிய கெய்ஷா நூலைத் தமிழில் பெயர்த்தவர், கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், கொங்கு நாட்டு வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தமிழ் கொரியத் தொடர்புகள் குறித்த ஆய்வறிஞர், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையை நிறுவி நடத்துபவர், வல்லமை மின்னிதழை வழிநடத்தும் ஆதார சக்தி, திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிப்பவர், ஆற்றல் வாய்ந்த பேச்சாளர், ஆளுமை மிகுந்த நிர்வாகி, அயராத உழைப்பாளர் பவளசங்கரி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க

    இந்தப் படம், 2011ஆம் ஆண்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. பின்னணியில் எழுத்தாளர் சுபாஷினி திருமலை

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 7

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 6. அமர்நீதியார்

     

     அமர்நீதியார்

    சோழ வள நாட்டில், சோழ மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பெற்ற ஊர்களில் ஒன்று பழையாறை எனும் பழம்பெரும் பதி. பழையாறை சோழ மன்னர்களின் இராணுவத் தளவாடங்களின் இருப்பிடமாகவும், நாணயங்கள் தயாரிக்கும் கருவூலமாகவும் திகழ்ந்தது. ஞானசம்பந்தப் பெருமானாரால் போற்றி புகழப்பட்ட மங்கையர்கரசியார் அவதரித்ததும் இத்தலமே. அனைத்திற்கும் மேலாக சிவபெருமானின் திருமேனியின் வண்ணம் கண்டு வணங்கும்வரை உண்ணேன் என்று திருநாவுக்கரசு பெருமான் உண்ணா நோன்பினை உலகுக்கு அறிமுகம் செய்த இப்பழையாறைதான், சோழ நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இத்தகு பல்வேறு பெருமைகளைப் பெற்ற ஒரு பதியில் காலத்தால் மூத்த நாயன்மார்களில் ஒருவராக, ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவரான அமர்நீதி நாயனார் அவதரித்தார்.

    சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே தமது தலையாயக் கடமையாகக் கொண்டிருந்த அமர்நீதியார் வணிகர் குலத்தில் பிறந்தவர். பொன், மணி, ஆடை போன்றவற்றை வணிகம் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். அவர் தமது இல்லம் நாடி வரும் அடியார்களுக்கு அமுது செய்வித்து, கந்தை எனும் முழங்கால் வரை அணியும் வேட்டியும், கீழுடையும், கோவணமும் அளித்து மகிழ்பவர்.

    பழையாறைக்கு அருகில் உள்ள சிவத்தலமான திருநல்லூரில் எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானின் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார் அமர்நீதியார். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வந்திருந்தனர். விழாக்காலங்களில் அன்பர்கள் தங்கிச் செல்லவும், அமுது செய்யவும் அவ்வூரில் திருமடம் அமைத்திருந்தார் அமர்நீதியார். இவ்வாறு தொண்டு செய்துவரும் சூழலில் ஓர் நாள்,

    சிவனடியார்களுக்கு தொண்டாற்றி வரும் அமர்நீதியாரின் பக்திப் பெருக்கால் உயர்ந்த நற்பண்பினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எம்பெருமான் மறையவர் குலத்துப் பிரம்மச்சாரி வடிவம் தாங்கி அமர்நீதியார் இருப்பிடம் வருகிறார். அவர்தம் திருமுடியில் பஞ்சசிகை இருந்தது. நெற்றியில் திருநீறை மூன்று பட்டைகளாக இட்டிருந்தார். மார்பில் மான்தோல் வைத்துக் கட்டப்பட்ட பூநூல் இருந்தது. கையிலும் தர்பைப் புல்லால் ஆன மோதிரமும் அணிந்திருந்தார். இடையிலே முஞ்சி என்ற பச்சைத் தர்பைப் புல்லால் திரித்த அரைஞானில் கோவண ஆடையும் இருந்தது. கையில் ஒரு தண்டும், அதில் இரு கோவணங்களும், திருநீற்றுப்பை, தர்ப்பைப் புல் ஆகியவற்றை முடிந்துகொண்டு  அமர்நீதியார் இருந்த திருமடம் வந்து சேர்ந்தார்.

    முஞ்சி நாணுற முடிந்தது

      சாத்திய அரையில்

    தஞ்ச மா மறைக்

      கோவண ஆடையின் அசைவும்

    வஞ்ச வல் வினைக்

      கறுப்பறும் மனத்து அடியார்கள்

    நெஞ்சில் நீங்கிடா அடி

      மலர் நீணிலம் பொலிய

    என்பார் சேக்கிழார் பெருமான்.

    இத்தகைய சீர்மிகு வடிவம் தாங்கி வந்துள்ள பிரம்மச்சாரியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து, வணங்கி அவர் அங்கு எழுந்தருளியது தாம் செய்த தவம் என்று பணிந்து நின்றார் அமர்நீதியார்.

    அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீழுடை, கோவணம்  போன்றவற்றை வழங்கிவருவதையும் அறிந்ததால் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் என பதிலுரைத்தார். இதனைக் கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, அவரை அமுது செய்தருள வேண்டுமென்றும், அதற்கென்று தக்க வேதியர்களைக்கொண்டு தூய்மையாக அமுது தயாரிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்து வேண்டினார். அவரும் அகமகிழ்ந்தார் போன்று புனித காவிரியில் சென்று நீராடிவிட்டு வந்து அமுது செய்கிறேன் என்றார்.

    மேலும் அவர், மழை வந்தாலும் வரும் போலுள்ளதே. ஒருவேளை மழை வந்தால் இக்கோவணங்கள் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் உன்னிடம் கொடுத்து விட்டுப் போகிறேன். பாதுகாப்பாக வைத்திருந்து நான் கேட்கும்போது திருப்பித் தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணிவிடாதீர். இதன் பெருமையைப் பற்றி நான் சொல்லி நீ அறிய வேண்டியதில்லை. அதனால் அலட்சியமாக இருந்துவிடாதே என்றார். அமர்நீதியாரும் அதற்கு ஒப்புக்கொள்ள அந்த பிரம்மச்சாரியும் நீராடச் சென்றுவிட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்புடன் வைத்தார்.

    திடீரென்று பெருமழையும் பொழிந்தது. குளிக்கப்போன வேதியரும் நனைந்தபடி வந்து சேர்ந்தார். நான் கட்டியுள்ள கோவணம் நனைந்து விட்டது. அதனால் நான் உன்னிடம் கொடுத்த அந்தக் கோவணத்தை எடுத்து வா என்றார். ஆனால் பிரம்மச்சாரியாக உருவெடுத்து வந்துள்ள சிவபெருமானாரும், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல, இன்று அமர்நீதியாரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். இதையறியாத நாயனார் உள்ளே சென்று கோவணத்தை தாம் வைத்த இடம் முழுவதும் தேடிப்பார்க்கிறார். ஆனால் அந்தக் கோவணம் அங்கு இல்லை. சேக்கிழாரின் மொழியில் சிவபெருமானார் ‘கோவணக் கள்வர்’ ஆகிறார்.

    அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். இப்படியொரு அதிசயம் இதுவரை நம் வாழ்வில் நடந்ததில்லையே. இது எப்படி நடந்தது என்று மருகியவ்ர், மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய வெண்ணிறக் கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனையுடன் தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அவரை நோக்கி, தம்மை அறியாமலே நடந்த இந்த மாபெரும் தவறைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டி நின்றார் அமர்நீதியார். தாம் கொண்டு வந்துள்ளது கிழிந்த ஒன்று அல்ல. கோவணத்திற்கென்றே தனியாக நெய்யப்பட்ட கோவணம் என்றும் கூறினார்.

    ஆனால் அந்த பிரம்மச்சாரி மிகவும் கோபமுற்றவராக, “அமர்நீதியாரே, நன்றாக உள்ளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படி காணாமற் போகும்? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொல்லியும், அதனை நீரே எடுத்து வைத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்ற எண்ணமா? உமது வணிகம் மிக அழகாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழங்குகின்றீரோ! கொள்ளை இலாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வணிகம் பற்றி இப்போது தான் எனக்குப் புரிகிறது. உம்மை நம்பி மோசம் போனேனே நான்!” என்றார் கோபத்தின் உச்சத்தில்.

    எம்பெருமானின் கோபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும் என்றும், காணாமற்போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன், சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும் என்று பயபக்தியுடன் பிரார்த்திக்கிறார். பன்முறை மன்னிப்புக் கேட்டவர், அடியாரை வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியாரின் வேதனையையும், அவர் கெஞ்சுவதையும் கண்டு, சினம் சற்று தணிந்தாற்போன்ற பாவனையுடன் அந்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கெதற்கு என்றார். இதைக் கேட்ட அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து வேதியர் முன் நாட்டினார். அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லாததால் அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த அனைத்து கோவணங்களை எடுத்து வந்து வைத்தும் நிறை சரியாக நிற்காமல் அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்த அமர்நீதியார், தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே இருந்தார்.

    ஆனால் எவ்வளவுதான் வைத்தபோதும்  அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், வேதியர் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும்போது, நாயனாருடைய அன்பாகிய தட்டுக்கு முன்னால் இறைவனுடைய அருள் தட்டு தாழவுறும் என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனைகூடச் சற்றுத் தாழ்ந்துதான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது. திருமடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும்? செய்வதறியாது திகைத்த தொண்டர் பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். ஆனால் அப்போதும் தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசுத் தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில், எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் மட்டும்தான். அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளராமல் இறைவனை மனதிலே தியானித்தார்.

    தம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. தானும், தன் மனைவியும், குழந்தையும் மட்டுமே மிகுந்துள்ள நிலையில் நாங்கள் தட்டில் உட்கார இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர்.

    நாங்கள் அடியவர்களுக்குச் செய்த அன்பில் இறைவனுடைய திருநீற்று மெய் அடிமையில் தவறு செய்யவில்லை என்றால், தராசே நீ நேர் நிற்க” என்று சொல்லித் திருநல்லூர் இறைவனை வணங்கி ஐந்தெழுத்தோதி ஏறினார். துலை நேர்நின்றது. அடியவர் மகிழ்வுடன் ஏற, இறைவனின் திரு அரைக் கோவணமும் அன்பில் குறைபடாத அடிமைத் தொண்டும் சமம் ஆதலால் துலை நேர் நின்றது.

    அப்போது எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். தம்முன் எப்பொழுதும் தொழுதிருக்கக்கூடிய பேரின்பப் பேற்றினை வழங்கியருளினார்.

     

    அமர்நீதி நாயனார் புராணம் கூறும் கருத்து:

    அமர்நீதியார் பெருமையை அப்பரடிகள்,

    நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
    கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
    வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை
    ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே

    என்று பாடுகிறார்.

    திருநல்லூர் எனும் இத்தலத்திலுள்ள நல்லூர்ப் பெருமான் பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும் அழகை இன்றும் காணமுடிகின்றது. தஞ்சை மாவட்டம் வலங்கைமான் சாலையில் இரண்டாவது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இத்திருத்தலம், நாவுக்கரசு பெருமானுக்கு திருவடி தீட்கை கொடுத்த தலம் எனும் பேறும் பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இதனை,

    நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்

            நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்

    சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்

            செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்

    இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற

            இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி

    நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்

            நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 

    என்று போற்றி புகழ்கின்றார்.

    சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட அமர்நீதி நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்” என்று புகழ்கிறார்.

    சேக்கிழார் பெருமானார்,

    நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்

    மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்

    உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்

    சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.

    என்று பாடியருள்கிறார்.

    சிவபெருமான் அமர்நீதியாரிடம் பாதுகாப்பாக வைக்க வேண்டி அளித்த கோவணத்தின் பெருமையை,

    ஓங்கு கோவணப் பெருமையை

      உள்ளவாறு உமக்கே

    ஈங்கு நான் சொல்ல வேண்டுவது

      இல்லை

    என்கிறார் சேக்கிழார் பெருமான்.

    வேதியர் வேடமணிந்து வந்த சிவபெருமான் நீராடிவிட்டு வருவதாகச் சென்றவரின் திருவிளையாடலை இங்கனம் விவரிக்கிறார்,

    போன வேதியர் வைத்த

      கோவணத்தினைப் போக்கிப்

    பானலந்துறைப் பொன்னி நீர்

      படிந்து வந்தாரோ

    தூநறுஞ் சடைக் கங்கை

      நீர் தோய்ந்து வந்தாரோ

    வானம் நீர் மழை பொழிந்திட

      நனைந்து வந்து அணைந்தார்.

    திருநல்லூர் திருக்கோயிலில் உள்ள சிற்பத்தில் துலாவில் நாயனார் அவர்தம் துணைவியார் அவர் கரத்தில் குழந்தை ஆகிய மூவரும் இருப்பது போன்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    சக்தி சக்திதாசன்

    அன்பான வல்லமை வாசக இதயங்களே!

    மீண்டும் அடுத்த மடலில் இங்கிலாந்து அரசியல் நிகழ்வுகளையும் உலக அரங்கின் சில நிகழ்வுகளை உ புலம்.பெயர் தமிழன் பார்வையில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்

    ஆகஸ்ட் 2025 இல் இங்கிலாந்து அரசியல் சூழல் பல பரபரப்பான மற்றும் சிக்கலான மாற்றங்களை சந்தித்தது.

    அரசாங்க நடவடிக்கைகள், கட்சி மாற்றங்கள், ஊழல் விசாரணைகள் மற்றும் சர்வதேச உறவுகள் இவை எல்லாமே ஒரு விசித்திர அரசியல் சூழலைத் தந்தது.

    கீழே அந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகச் சில.

    அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் சட்ட மாற்றங்கள்

    -சிவில் சர்வீஸ் இன்டர்ன்ஷிப் திட்டம்: அரசு, “தாழ்ந்த சமூக பொருளாதார பின்னணி” கொண்ட பட்டதாரிகளுக்கே இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

    பெற்றோர் 14 வயதில் செய்த வேலை அடிப்படையில் இது மதிப்பீடு செய்யப்படும்.

    எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, குடியேற்றவாசிகள் கடல் வழியாக பயணம் செய்யும் தகவல்களை இணையத்தில் விளம்பரம் செய்வதை குற்றமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஊழல் மற்றும் ஒழுங்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.

    பாராளுமநிற உறுப்பினர் ட்யூலிப்.சிடிக் பங்களாதேஷ் ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்கு எதிராக வழக்கு தொடரும் என அறிவித்தது.

    பாராளுமன்ற உறுப்பினர் கேட் பயண செலவுகள் மற்றும் பிற நிதி உதவிகள் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    பாராளுமன்ற உறுபினர் கட் எகெல்ஸ் என்பவர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு சென்ற பயணத்தை தாமதமாக அறிவித்ததற்காக விசாரணை.

    ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் காலின் ஸ்மித் ஸ்கொட்லாந்து பாராளுமன்ற கழிப்பறை ஒன்றில் கேமரா வைத்ததாக குற்றச்சாட்டினால் அவரது பாஸ் முடக்கப்பட்டது.

    கட்சி மாற்றங்கள் மற்றும் பதவி ராஜினாமா சில நடைபெற்றன.

    சாரா அதெர்ட்டன் என்பவர் கன்சர்வேடிவ் கட்சியை விட்டு விலக திட்டம்.

    – Jeremy Balfour என்பவர் ஸ்கொட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து விலகினார்.

    கட்சி எதிர்மறை அரசியல் பக்கம் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு.

    Graham Simpson: எனும் கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Reform UK க்கு தாவினார்.

    அவ்சால் கான் எனும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துருக்கிக்கு சென்ற பயணத்தால் விமர்சனம் ஏற்பட்டதால் UK வர்த்தகப் பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்தார்.

    ருக்சானா அலி எனும் அரசாங்க எம்.பி தனக்குச் சொந்தமான.வீட்டின் வாடகை உயர்வை கையாளும் விதம் தொடர்பாக விமர்சனம் எழுந்ததால் Homelessness Minister பதவியை விட்டு விலகினார்.

    சர்வதேச உறவுகள் மற்றும் கருத்துக்கள் வலுவடைந்தன.

    இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சர் டேவிட் லாமி & அமெரிக்க உதவி ஐனாதிபதி ஜேடி வான்ஸ்: UK-யின் பஸ்தீன் மாநில அங்கீகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    லேபர் கட்சி உதவி தலைவர் ஆஞ்ஞெலா ரெய்னர் சீனாவின் புதிய தூதரக திட்டத்தில் சில பகுதிகள் மறைக்கப்பட்டதற்காக விளக்கம் கோரினார்.

    முன்னாள் பிரதமர் டோனி பிளேயரும் , அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களும் போருக்கு பிறகு காஸாவுக்கான நிலைமைகள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் சந்திப்பு.

    லிபரல் கட்சி தகைவர் சார் எட் டேவி அவர்கள் அம்ந்ரிக்க அதிபர் Trump-இன் UK வரவேற்பு விருந்தில் பங்கேற்க மறுத்து, Gaza-வின் மனிதாபிமான நிலைமையை எதிர்த்து “செய்தி” அனுப்பினார்.

    கட்சி நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான பல நிகழ்வுகள்.

    கிறீன் கட்சு தலைமை மற்றும் துணை தலைமை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

    ரீபோர்ம் யூகே பல முக்கிய உறுப்பினர்கள் நிர்வாக குழுவில் இணைந்தனர்.

    கட்சி, £10 பில்லியன் செலவில் பரந்த அளவிலான சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்தும் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

    குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என ப்ராஜ் உறுதி அளித்தார்.

    ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் தலையீடு பற்றி பல பகிரப்பட்டன

    பீ.பீ.சியின் முன்னாள் செய்தித் தலைவர் James Harding, அரசியல் தலையீடு இல்லாமல் BBC பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இது லிஸா நாண்டியின் டிம் டேவி என்பவருக்கு எதிரான கருத்துகளுக்குப் பின்னர் வந்தது.

    சமூக மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பேசப்பட்டன.

    ஜெஸ் பிலிப்ஸ் எனும் தொழிற்கட்சி அமைச்சர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கான ஸ்கிரீனிங் கருவி “செயல்படவில்லை” என BBC-க்கு தெரிவித்தார்.

    வாரிக்‌ஷையர் பொலிஸார் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவலை மறைத்ததாக Reform UK-யின் கூற்றை மறுத்தது.

    இந்த மாதம், அரசியல் சூழலில் பல்வேறு மாற்றங்கள், சிக்கல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன.

    இது எதிர்கால தேர்தல்களுக்கு முன்னோட்டமாகவும், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தும் முக்கிய கட்டமாகவும் அமைந்தது.

    தொடர்ந்து இங்கிலாந்து அரசியல் சூழலை கவனிக்க வேண்டிய அவசியம் இம்மாத நிகழ்வுகள் மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

    சரி இனி உலக அரங்கிற்கு வருவோமா?

    2025 ஆகஸ்ட் மாத உலக அரசியல் நிகழ்வுகள் பலவகைப்பட்டன.

    ஆகஸ்ட் 2025 உலக அரசியலில் பல முக்கிய மாற்றங்கள், சர்வதேச சந்திப்புகள் மற்றும் மனிதாபிமான சிக்கல்கள் இடம்பெற்றன.

    மோதல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்தன.

    காசா: ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், காசாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் “சமீப காலத்தில் ஒப்பிட முடியாத அளவுக்கு” உள்ளன எனக் கூறி, உடனடி போர்நிறைவு மற்றும் மனிதாபிமான அணுகல் தேவை என வலியுறுத்தினார்.

    உக்ரைன்: ரஷ்யாவின் கீவ் நகரில் நடத்திய தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இது உக்ரைனில் தொடரும் போரின் கடுமையை வெளிப்படுத்துகிறது.

    ஹைட்டி: தலைநகர் போர்ட்-ஆ-பிரின்ஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கும்பல் வன்முறை காரணமாக 1.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 6 மில்லியன் பேர் உதவிக்கு சார்ந்துள்ளனர்.

    சூடான்: போர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காலரா பரவல் காரணமாக 30 மில்லியன் மக்கள் உதவிக்கு தேவைப்படுகின்றனர்.

    சர்வதேச உறவுகள் மற்றும் அணுசக்தி பற்றிய அனுமானங்கள் வலுத்தன.

    இரான் மீது ஐ.நா. தண்டனை மீளமைப்பு.

    ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை, அணுசக்தி திட்டம் தொடர்பாக, 30 நாட்களில் மீண்டும் தண்டனைகளை விதிக்க முடியும் என அறிவித்தன.

    லெபனான்: இஸ்ரேல்-லெபனான் இடையே உள்ள “ப்ளூ லைன்” பகுதியில் ஐ.நா. அமைதி படை பணியை 2026 டிசம்பர் வரை நீட்டிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

    தேர்தல்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன

    பொலிவியா: ஆகஸ்ட் 17 அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.

    தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலெஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

    மொராலெஸ் போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளார்.

    கயானா: ஆகஸ்ட் 31 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனாதிபதி இர்ஃபான் அலி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது,

    ஆனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் நடந்தேறின

    – TICAD 9 (Tokyo International Conference on African Development): ஆகஸ்ட் 20–22 வரை ஜப்பானில் நடைபெற்ற இந்த மாநாடு, ஆப்பிரிக்க வளர்ச்சி, முதலீடு மற்றும் அமைதி தொடர்பாக முக்கிய உரையாடல்களை ஏற்படுத்தியது.

    SCO (Shanghai Cooperation Organization) உச்சி மாநாடு: ஆகஸ்ட் 31–செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற இந்த கூட்டம், மத்திய ஆசியாவில் ரஷ்யா மற்றும் சீனாவின் பாதுகாப்பு பங்கு குறித்து கவனம் செலுத்தியது.

    காலநிலை மற்றும் சமூக சிக்கல்கள் முன்னிலை பெற்றன.

    லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்: காலநிலை மாற்றம் காரணமாக 2030க்குள் 5.9 மில்லியன் குழந்தைகள் வறுமையில் சிக்கக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த மாதம், உலக அரசியல் பல பரபரப்பான மாற்றங்களை சந்தித்தது.

    மோதல்கள், மனிதாபிமான சிக்கல்கள், சர்வதேச கூட்டங்கள் மற்றும் தேர்தல்கள் என நடைபெற்ற இந்நிகழ்வுகள் உலக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையைக் காட்டுகின்றன.

    தொடர்ந்து உலக அரசியல் சூழலை கவனிப்பது, நம் சமூகத்தின் எதிர்காலத்தை புரிந்து கொள்ள உதவும்.

    இதனிடையே எனது சொந்த வாழ்வில் நான் இருவாரங்கள் கனடா நாட்டிற்கு பயணம் செய்தது நெஞ்சை நிறைத்தது.

    உற்ற நண்பன் ஒருவனின் மகளின் திருமணத்தோடு பலகாலங்கள் சந்திக்காத பல உறவினர்களைக் கண்டு வந்தது நெஞ்சுக்கு இதமளித்தது.

    பல்லின மக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட கனேடிய தேசத்தின் முதுகெலும்பின் பாகமாக எமது புலம்பெயர் உறவுகள் செயற்படுவது ஆனந்தமளிக்கிறது.

    Share
  • மூவுல கேத்திடும் மூஷிக வாகனா!

    மூவுல கேத்திடும் மூஷிக வாகனா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முத்திக்கு வித்தான முக்கண்ணன் மகனே
    எத்திக்கு பார்த்தாலும் இருந்திடு கணபதி
    சந்திக்குச் சந்தி சன்னதி ஆகியே
    கொண்டிடும் கணபதி குழந்தைக் கடவுளே

    கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல்பொரி
    எப்பவும்  ஏற்றிடும் எம் கணநாதா
    முத்தமிழ் நிறைந்திட வைத்திடும் அரன்மகன்
    மூவுல கேத்திடும் மூஷிக வாகனா

    மோதகம் விரும்பிடும் மூஷிக வாகனா
    காதலால் அடியார் கற்கண்டு படைப்பார்
    இனிப்பே உனக்குப் பிடிக்கும் என்று
    எண்ணிடும் அடியவர் இனிப்பாய் படைப்பார்

    ஆனை முகத்துடன் இருப்பாய் நீயும்
    ஆனால் குழந்தையாய் தெரிவாய் அப்பா
    பானகம் பல்பழம் தேனெலாம் உனக்குப்
    படைத்துமே அடியார் பரவசம் அடைவார்

    மஞ்சளில் புல்லில்  சாணத்தில் அமர்வாய்
    மக்கள் விரும்பும் இடமெலாம் அமர்வாய்
    விதிமுறை பாராய் மேலாய் இருப்பாய்
    பரவிடும் அடியவர் பக்கமே நிற்பாய்

    உன்னைத் தொட்டே அனைத்தும் தொடங்கும்
    தொடங்கும் அனைத்தும் துலங்கிட வைப்பாய்
    வெவ்வினை வேரற வைத்திடும் வல்லமை
    கொண்டவன் நீயே விக்ன விநாயகா

    மனிதனும் மிருகமும் இணைந்திடு உருவம்
    மருளை அகற்றிட வந்தநல் வடிவம்
    மனிதனைப் புனிதனாய் ஆக்கிடும் வகையில்
    மிருக இயல்பினைக் களைந்திடும் உருவம்

    நெற்றியில் குட்டிக் குனிந்து எழுந்து
    உன்னைக் கும்பிட வைத்தவன்  நீயே
    அத்தனை மாந்தர்க்கு அது மருந்தாகும்
    அகத்தில் அமர்த்திட வைத்தவன் நீயே

    மருந்தாய் இருக்கிறாய் விருந்தாய் இருக்கிறாய்
    மாபெரும் சக்தியாய் விளங்கிறாய் நீயும்
    அணுகிட அடியார் அருகினில் அணையும்
    ஆனந்த சொரூபமாய் அமைகிறாய் விநாயகா

    ஆவணிச் சதுர்த்தி ஆனை முகவனை
    அடியவர் ஏத்திப் பிடித்திடு விரதம்
    நலமுடன் வாழ வேண்டியே அடியவர்
    விநாயகன் திருவடி தொழுதிடு விரதம்

    ஆலயம் அனைத்தும் ஆவணிச் சதுர்த்தி
    ஆன்மீக ஒளியை பரப்பியே நிற்கும்
    ஆனை முகத்தான் அருளைப் பெற்றிட
    ஆவணிச் சதிர்த்தி அருந்துணை ஆகும்

    Share
  • கவியரசரின் பாடல்களில் ஆன்மீக அறிவியல் . . .14

    கவியரசரின் பாடல்களில் ஆன்மீக அறிவியல் . . .14

    சக்தி சக்திதாசன்

    கவியரசர் கண்ணதாசன் என்பவர் தமிழ்ச் சினிமாவின் கவிதைச் சக்கரவர்த்தி மட்டுமல்ல.

    அவர் ஒரு ஆழமான ஆன்மீக சிந்தனையாளர். “அர்த்தமுள்ள இந்து மதம்” போன்ற நூல்களில் அவர் காட்டிய ஆன்மீகப் பார்வை, பக்தியின் வழியாக தத்துவத்தை எளிமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி.

    அவருடைய பாடல்களில் அது வர்த்தக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும் அதன் பாடல்களில் தெய்வீக உணர்வுகள், தர்ம சிந்தனைகள், மற்றும் பகவானின் லீலைகள் ஆழமாக பதிந்துள்ளன.

    “கீதை சொன்ன கண்ணன்” பாடல், இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    இதனை ஒரு ஆன்மீகக் கோணத்தில் பார்க்க விழைந்தால்

    “கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்”

    பகவான் கண்ணன், கீதை உபதேசித்தவர்.

    இங்கு “வண்ணத் தேரில் வருகிறான்” என்பது, பகவான் தனது லீலைகளுடன், அழகிய உருவத்தில், உலகிற்கு தர்மத்தை எடுத்துச் செல்ல வருகிறார் என்பதைக் குறிக்கிறது.

    ஆன்மீகப் பொருளாக பகவான், மனிதனின் வாழ்க்கை தேரில், வழிகாட்டியாக வருகிறார்.

    கீதை என்பது வாழ்க்கையின் நெறிமுறை.

    “நீல மேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ”

    கண்ணனின் அழகு, ஆனந்தத்தின் வடிவம்.

    அவர் நீல மேனி, நிமிர்ந்த தோள், விரிந்த மார்பு அனைத்தும் பிரபஞ்ச சொரூப வனப்பின் எடுத்துக்காட்டு.

    ஆன்மீகப் பொருள் பகவானின் ரூபம், மனதின் எல்லைகளை கடந்தது.

    அது “விஸ்வரூபம்” – பிரபஞ்சத்தின் முழுமை.

    “பாரதப் போர் நடத்தி வைத்த யுக்தி அதிசயம் .அது முக்தி ரகசியம்”

    பகவான் கண்ணன், தர்மயுத்தத்தின் நாயகர்.

    பாரதப் போர் என்பது, மனிதனின் உள்ளார்ந்த போராட்டம்.

    கண்ணன் வழங்கிய யுக்திகள், வாழ்க்கையின் சிக்கல்களை தீர்க்கும் வழிகள்.

    ஆன்மீகப் பொருள்: கீதை உபதேசம் என்பது முக்திக்கான வழிகாட்டி.

    “அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்”

    கள்ளன் என்றாலும், அவர் பரமாத்மா.

    கண்ணன், பசுமை முகத்துடன், பசுமை செயல்களுடன், உலகை ஈர்க்கும் “கள்வன்”.

    ஆன்மீகப் பொருளாக பகவான், பாவங்களை “திருடி” பக்தர்களை புனிதமாக்குகிறார்.

    அவர் சிரிப்பு, ஆனந்தத்தின் வெளிப்பாடு.

    “சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே”

    “ஓம் நமோ நாராயணாய”  எட்டெழுத்து மந்திரம்.

    இந்த மந்திரம், பக்தியின் வழியாக சொர்க்கம் தரும்.

    ஆன்மீகப் பொருளாக மந்திரம் என்பது மனதின் தூய்மை.

    அதில் சொர்க்கம் என்பது ஒரு இடமல்ல அது உ தன்னிலை மறந்த தியானநிலை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    “பார்த்தனுக்கு பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்”

    கீதை உபதேசமே ஒரு வாழ்க்கையின் பாடம்.

    பார்த்தனுக்கு கண்ணன் சொன்னது, ஒவ்வொரு மனிதனுக்கும் சொன்னது.

    ஆன்மீகப் பொருளாக வாழ்க்கையின் சிக்கல்களில், பகவான் வழிகாட்டியாக இருக்கிறார்.

    “கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்”

    பகவானின் பாதம்  என்பது என்ன அதுவே அறுதியான உண்மை.

    அவர் கழல்கள், பிரம்மத்தின் அடையாளம்.

    ஆன்மீகப் பொருளாகப் பார்த்தால் பகவானின் பாதங்களை அடைவது, முக்திக்கான வழி.

    பிரம்ம சூத்திரம் என்பது, அந்த பாதையின் விளக்கம்.

    “கீதை சொன்ன கண்ணன்” என்பது ஒரு பக்திப்பாடல்  மட்டுமல்ல அது ஒரு தத்துவ வேதம்.

    கவியரசர் கண்ணதாசன், கண்ணனின் லீலைகளை, கீதை உபதேசத்தை, மற்றும் பக்தியின் ஆனந்தத்தை, கவிதையின் வழியாக மக்களுக்கு எளிமையாக எடுத்துச் செல்கிறார்.

    அவரது பாடல்கள், பக்தி, தத்துவம், மற்றும் கலை மூன்றையும் ஒருசேர இணைக்கும் தெய்வீக பாலம்.

    அன்பினியோரே அடுத்தொரு கவியரசரின் ஆன்மீக ஆழத்துள் வீழ்ந்துமூழ்கினோம்.

    Share
  • வாட்ஜ் பேங்க் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்

    வாட்ஜ் பேங்க் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்

    அண்ணாகண்ணன்

    கச்சத் தீவை இலங்கைக்கு அளித்த போது, வாட்ஜ் பேங்க் என்ற பகுதி, இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை இருந்தால், அவையும் இந்தியாவிற்கே சொந்தம் என உறுதி செய்யப்பட்டது.

    வாட்ஜ் பேங்க் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கில் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடற்பகுதி. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கும். வாட்ஜ் பேங்க் பகுதி 4,000 சதுர மைல் (சுமார் 6,500 சகிமீ) பரப்பளவுடையது. இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால் மீன் வளமும் அதிகம்.

    வாட்ஜ் பேங்க் பகுதி மீன் மற்றும் பல்லுயிர் வளத்திற்காக அறியப்பட்ட பகுதியாக இருந்தாலும் இந்தப் பகுதியில் பெட்ரோலியம் கிடைக்கும் சாத்தியமும் இருப்பதாக இந்தியா கருதுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், வாட்ஜ் பேங்க் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று இடங்களில் பெட்ரோலியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது.

    ஆனால், இதைக் கன்னியாகுமரி மீனவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களை ஆதரித்து, அரசியல் கட்சிகள் பலவும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, இதற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    இந்தப் பகுதியில் இருக்கும் வளங்களுக்காக இலங்கை பங்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே கச்சத் தீவை இந்திய அரசு விட்டுக் கொடுத்தது. இப்போது, இந்த வளங்களை ஆராயக் கூடாது என்று தமிழக மீனவர்கள் போராடுகின்றனர். கொல்லம் பகுதியில் ஆராய்வதைக் கேரள மீனவர்களும் எதிர்க்கின்றனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

    இந்தச் சிக்கலைத் தீர்க்க, என் யோசனை இதோ.

    இந்தத் துரப்பணப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல், அரசே இதை நேரடியாக நடத்தலாம். குறிப்பாக, தமிழக அரசு ஒரு புதிய நிறுனத்தை உருவாக்கலாம். தமிழகப் பகுதிகளில் இருக்கும் எண்ணெய், எரிவாயு வளங்களை ஆராய்வது, துரப்பணம் செய்வது ஆகிய பணிகளை இந்த நிறுவனமே மேற்கொள்ளலாம். அவ்வாறு இயற்கை வளம் கண்டறியப்பட்டால், அதை எடுப்பதால் வரும் லாபத்தில் ஒரு பகுதியை இந்தப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் செலவிடலாம். இங்குள்ள மக்களில் தகுதி உடையோருக்கு இதன் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கலாம். அரசே முன்னின்று நடத்துவதால், இதன் மீது மீனவர்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

    உலகின் பல பகுதிகளில் நிலத்தில் அல்லது ஆழ்கடலில் இவ்வாறு எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எடுத்து வருகின்றனர். அவ்வாறு எடுக்கும் பெட்ரோலியப் பொருள்களை நாம் இங்கே விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். நம் பகுதியில் அவ்வாறு ஒன்று கிடைக்கும் வாய்ப்பு இருக்குமாயின், அது குறித்து ஆராயக் கூடாது என்பது சரியா?

    சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் திட்டங்களை நிறைவேற்ற, அறிவியல்பூர்வமான பார்வை தேவை. உணர்வுப்பூர்வமாக அணுகுவது, சிக்கல்களைத் தீர்க்காது. நமக்குத் தேவையான தீர்வு, நம் காலடியில் கூட இருக்கலாம்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 6

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 5 விறல்மிண்டர் நாயனார்

     

    விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை

    விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்

    வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்

    வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட

    துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்

    சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட

    வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண

    லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.

    இளங்கோவடிகள், சேரமான் பெருமான், சேரன் செங்குட்டுவன் போன்ற பெரியோர்கள் அவதரித்த, இயற்கை எழில் கொஞ்சும், நீர் வளமும், நில வளமும், மலை வளமும் கொண்ட சிறப்பான சேரநாட்டில், செங்குன்றூர் எனும் அழகிய ஊரில் அவதரித்தவர் விறன்மிண்ட நாயனார் பெருமான்.  ஆகச்சிறந்த சிவபக்தரான இவர் அடியவர்பால் அளவற்ற அன்பு கொண்டு அவர்தம் நலம் காக்க எதையும் செய்பவராயினும், அனைத்து உலகப்பற்றுகளையும் துறந்து வாழ்பவர். அவர் திருச்செங்குன்றூரை விட்டு புறப்பட்டுத் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் வழிபாடு செய்த வகையில் திருவாரூரைச் சென்று அடைகிறார். தியாகேசப் பெருமான் திருவடிகளைப் பற்றிக்கொண்டவர் அங்கேயே தங்கி பெருமானை வழிபடவும், அடியார்களுடன் கூடி சிவநெறி தழைக்கவும் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.

    இந்நிலையில் ஒருநாள் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்த தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களை வணங்கி, அவர்களுடன் சிவநெறிகள் குறித்து அளவளாவிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு சுந்தரமூர்த்தி நாயனார் தியாகராசப் பெருமானாரை வழிபடுவதற்காக மனம் முழுவதும் அவர் நினைவுடனேயே வந்தார். வந்தவர், தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களை தம் மனத்தினால் வழிபட்டுவிட்டு விரைந்துச் சென்றார். இதைக்கண்ட விறன்மிண்டர்,  சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்களை வணங்காமல் நேராகச் சென்று சிவபெருமானை வணங்கச் செல்கிறாரே என்று ‌ கோபம் கொண்டவர், “அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு” என்றார். அதுமட்டுமின்றி அவருக்கு ஆரூர்ப்பெருமான் துணை என்றால் அவ்ஆரூர்ப் பெருமானையும் திருக்கூட்டத்திலிருந்து விலக்குவோம் என்கிறார்.

    திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
    மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
    ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு’ என்று உரைப்பச் சிவன் அருளால்
    பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்.

    சுந்தரமூர்த்தி நாயனார், விறன்மிண்ட நாயனாரின் மன உறுதியைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தவர், வேதங்கள் இறைவனைப் பற்றி விரித்துரைத்துக் காணாது, ஐயா என ஓலமிட்ட எம்பெருமான் அடியாருடன்தான் உள்ளேனென்று அறிவித்தவர், அவ்வடியார்கள் புகழ் கூறும் திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் அகமகிழ்ந்து, “இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது” என்று அருளிச் செய்தார்.

    ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின்
    சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
    ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன் ஆம் உளது என்றால்,
    ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர்?

    பந்நெடுநாட்கள் ஆரூரிலேயே தங்கியிருந்து திருத்தொண்டு செய்து கொண்டிருந்த விறன்மிண்ட நாயனார் சிவனருளால் ஓர்நாள் சிவலோகம் செல்லும் பேறு பெற்றார். இறைவனடி சேர்ந்தவர், சிவலோகத்தில் சிவபூதத் தலைவராகவும் விளங்கினார்.

    விறன்மிண்ட நாயனார் புராணம் உரைக்கும் கருத்து

    சிவபெருமானுடைய திருவடிகளையே பற்றி நின்று, மற்றொரு பற்றேதுமின்றி, அடியவர்பால் அளவற்ற பற்றுடையவராக, அவர்பொருட்டு எதையும் செய்யும் துணிவுடையவராக இருக்கிறார்.

    செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
    எப் பற்றினையும் அற எறிவார்; எல்லை தெரிய ஒண்ணாதார்;
    மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார்; எம்பிரானார் விறன் மிண்டர்.

    என்பதனாலும்,

    நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
    பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்
    முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து
    எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்.

    என்றும் சேக்கிழார் பெருமான் உணர்த்துகின்றார்.

    சிவனடியாரிடத்துப் பக்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்று, “ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்” என்னும் சிவஞான சித்தியாரின் அருளுரையால் உணரலாம்.

    உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
    அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
    அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
    முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே

    எனும் திருவாசகமும் நமக்கு தெற்றென விளக்குவதை உணரலாம்.

    திருத்தொண்டத் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடக் காரணமாக இருந்தவர் விறன்மிண்ட நாயனார். சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்” என்று குறிப்பிடுகிறார்.

    சுந்தரமூர்த்தி நாயனார், விறன்மிண்ட நாயனார் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தியின் சிறப்பை எண்ணிப் பெருமையுற்று, தியாகராசப் பெருமானை வணங்கி, அடியவர்களுக்கு அடியவனாகும் நிலையைத் தனக்கு அருள வேண்டும், என்று மனமுருகி பிரார்த்தனை செய்கிறார். “தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்” என, தியாகேசரே திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துக் கொடுக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் அதனையே முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் தொகையைப் பாடியருளினார்.

    விறன்மிண்ட நாயனார் சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவத்தொண்டுகள் செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாகக் கருதினார்‌.

    “நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே

    அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்

    இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்

    எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே”.

    எனும் பட்டிணத்தடிகளின் பாடலாலும் இதன் பெருமையை அறியலாம்.

     

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

    நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர், முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை (85 வயது), 2025 ஆகஸ்டு 1 அன்று மறைந்தார் என்ற கொடும் செய்தி, இன்று வந்து சேர்ந்தது. இது குறித்து அவர் கணவர், பேராசிரியர் இ.அண்ணாமலை விடுத்துள்ள உருக்கமான மடல் இங்கே:

    Nageswari, my wife of nearly sixty years of companionship and comfort, left me, and us, at 5.00 p.m. on August 01 in hospital. She passed away peacefully. She was 85. Her lungs got weaker in the last few months as her body got progressively more fatigued from poor appetite and reduced intake that started with some health problems in the last year. I feel that a part of me slipped away and another part says that she is still around me, supporting and critiquing. Yet, emptiness weighs me down.

    My Soliloquy

    ‘சாதலும் புதுவது அன்றே’
    புரிகிறது புறம்

    உண்மை உறவு மரிப்பதில்லை.
    தெரிகிறது அதுவும்.
    இருந்தும்,

    தோளோடு தோள் நின்ற தோழமையைத்
    தோளிலிருந்து இறக்க முடியவில்லை.
    இறப்பை, இழப்பை மறக்க முடியவில்லை.

    என் செய்வேன்?

    பேராசிரியரின் கைகளைப் பற்றிக்கொள்கிறோம். உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம். நாகேஸ்வரி அம்மா, மறையவில்லை. நம்முடனே, நம் சிந்தையில் வாழ்கிறார். தமது ஈர எழுத்துகளில், அறம் சார்ந்த ஆக்கங்களில் வாழ்கிறார்.

    சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற நாகேஸ்வரி அவர்கள், 1966 முதல், அமெரிக்காவில் வசித்தவர். கணவருடன் கருத்தொருமித்து வாழ்ந்தவர். அமெரிக்காவின் எந்த ஆடம்பரமும் இவர்கள் மீது ஒட்டவே இல்லை.

    வல்லமைக்கு நாகேஸ்வரி அவர்களின் படைப்புகள், பெரும் வலுச் சேர்த்தன. அதன் பெருமையை உயர்த்தின. அமெரிக்காவின் புதிய தரிசனங்களை, அதன் துல்லியமான சித்திரங்களை வல்லமையில் தொடர்ந்து எழுதினார். சொந்த அனுபவத்துடன் கூடவே, சமூகவியல் காரணங்களுடன், அரசியல் விமர்சனங்களுடன் தனது பார்வைகளை முன்வைத்தவர்.

    வல்லமை மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகள் பலவற்றை அவர் எழுதினார். பத்தி எழுத்தாளராக, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எழுதி வந்தார். இவை உண்மையான, நேர்மையான, ஆழமான கட்டுரைகள். அதே நேரம், எளிமையானவை. கடினமான சொற்களோ, கரடு முரடான வரிகளோ இல்லை. நீரோட்டம் போன்ற நடையில், நறுக்கென மனத்தில் தைக்கும் விதமாக எழுதினார். நாகேஸ்வரியின் கட்டுரைகளை வியந்து கொண்டாடி, தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியோர் பலர்.

    நாகேஸ்வரி அண்ணாமலை கட்டுரைகள்

    நாகேஸ்வரி அவர்கள், துணிவும் பரிவும் ஒருங்கே கொண்டவர். தமிழ்நாட்டில் பேருந்தின் படிகள் உயரமாக இருக்கின்றன, அதில் ஏற எனக்குச் சிரமமாக இருக்கிறது என எழுதினார். கல்வித் துறையில் முனைவர் பட்டங்களும் துணைவேந்தர் பதவிகளும் காசுக்கு விற்கப்படுவதைக் கண்டித்து எழுதினார். ஊழல் அரசியல்வாதிகளைச் சாடினார். அதிபர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவரது விமர்சனங்களுக்குத் தப்பவில்லை.

    அமெரிக்காவைப் பற்றி மட்டுமல்லாது, பாலஸ்தீனம், இஸ்ரேல், கியூபா, வியட்னாம் எனப் பல நாடுகள் குறித்தும் எழுதினார். இவற்றுள் பயண இலக்கியமும் உண்டு. வல்லமையில் இவர் எழுதிய கட்டுரைகள், பின்னர் நூல் வடிவம் பெற்றன. இணையத்தில் வேறு இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். தனி நூல்களும் படைத்தார். *அமெரிக்காவின் மறுபக்கம்*, *அமெரிக்க அனுபவங்கள்*, *பலஸ்தீன–இஸ்ரேல் போர்*, *கியூபாவின் விடுதலை வெற்றி*, *வியட்நாமில் அமெரிக்கப் போர்*, *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* ஆகிய நூல்கள், அவரது அழுத்தமான பங்களிப்புகள்.

    எளிய கிராமத்துப் பெண்ணாகத் தம் வாழ்வைத் தொடங்கிய நாகேஸ்வரி, பழுத்த அனுபவத்துடன், பரந்த உலகை வலம் வந்தவர். வளமான, வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும் எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், வஞ்சிக்கப்பட்டோர் பக்கமே அவர் எப்போதும் நின்றார். அவர்களின் நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தார்.

    வல்லமைக்குப் பெரும் தூணாக, தமிழ்கூறு நல்லுலகின் சுடர்மிகு எழுத்தாளராகத் திகழ்ந்த முனைவர் நாகேஸ்வரி அவர்களின் மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    நாகேஸ்வரி அம்மா, என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.

    Share
  • அஞ்சலி – முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

    மு. சாதிக், அடையாளம்

    ஆகஸ்ட் 1, மாலை 5 மணிக்கு, 85 வயதில், நாகேஸ்வரி அண்ணாமலை மருத்துவமனையில் காலமானார். அறுபது ஆண்டுகள் துணைவனுடன் பகிர்ந்து கொண்ட நெருக்கமும் நிம்மதியும் கொண்ட வாழ்க்கைப் பயணம் இங்கே நிறைவுற்றது. கடந்த சில மாதங்களாக உடல் சோர்வு, உணவு விருப்பக் குறைவு மற்றும் சுவாசக் கோளாறு அதிகரித்த நிலையில் அவர் அமைதியாக இறுதியை எய்தினார்.

    நாகேஸ்வரி, புகழ்பெற்ற மொழியியலாளர் இ. அண்ணமலையின் துணைவி. அவர் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆழமான ஆராய்ச்சிக்கான நேரத்தை உருவாக்கி, தமிழ் வாசகர்களுக்குப் பல அரசியல் நூல்களை வழங்கினார்.

    தமிழில் அரசியல் நூல்களை விரிவாக எழுதிய *முதல் பெண்* என்ற வரலாற்றுப் பெருமை பெற்றவர். உலக அரசியல், விடுதலைப் போராட்டங்கள், சமூக வரலாறு போன்ற துறைகளில் தானே கள ஆய்வுகள் மேற்கொண்டு பல ஆழமான நூல்களை அளித்தார். *அமெரிக்காவின் மறுபக்கம்*, *அமெரிக்க அனுபவங்கள்*, *பலஸ்தீன–இஸ்ரேல் போர்*, *கியூபாவின் விடுதலை வெற்றி*, *வியட்நாமில் அமெரிக்கப் போர்*, *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    அவருடைய எழுத்தின் பலம்: *எளிய தமிழில், விரிவான வரலாற்றுச் சான்றுகளுடன்* சிக்கலான அரசியல், சமூகக் கதைகளை வாசகர்களுக்குக் கொண்டுவரும் திறன். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் அதில் முழுமை இருக்கும்; தகவல், பகுப்பாய்வு, களஆய்வு அனைத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும். வாசகர்கள் சிரமமின்றிப் படித்துச் சிந்திக்க வைக்கும் பாணியால் அவர் எழுத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

    அவருடைய படைப்புகளில் *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* தனித்துவம் வாய்ந்தது. ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்த நாடார் பெண்களின் அனுபவங்கள், சாதி முறைகளின் பிடியிலும், சமூக மாற்றங்களின் அலைகளிலும் அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. எளிய நடையில் எழுதப்பட்ட இந்த நூல், ’எழுத்தாளர் வாசகர்களுடன் நேரடியாகப் பேசுகிறார்’ என்ற உணர்வைத் தருகிறது.

    இவ்வளவு ஆழமான பங்களிப்புகளுக்கு மத்தியில், அரசுசார் விருதுகளோ அங்கீகாரங்களோ எதுவும் இவரை எட்டவில்லை. இது தமிழின் அரசியல் இலக்கிய வரலாற்றில் ஒரு கேள்விக்குறியாய் நின்றாலும், நாகேஸ்வரி அம்மாவின் பங்களிப்பு போற்றப்பட வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனால் நாகேஸ்வரி அம்மாவின் எழுத்துகளும் சிந்தனைகளும் தமிழ்ச் சமூக நினைவகத்தில் என்றும் நிலைத்திருக்கப் போகின்றன. ஒரு பெண் எழுத்தாளராக மட்டுமல்லாது, அரசியல் சிந்தனையின் வரலாற்றை ஆவணப்படுத்தியவராகவும் அவர் தமிழின் நினைவுப் பக்கங்களில் நிலையான இடம்
    பெற்றிருப்பார்.

    Share