வாட்ஜ் பேங்க் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்

0
Wadge bank

அண்ணாகண்ணன்

கச்சத் தீவை இலங்கைக்கு அளித்த போது, வாட்ஜ் பேங்க் என்ற பகுதி, இந்தியாவிற்கே சொந்தம் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை இருந்தால், அவையும் இந்தியாவிற்கே சொந்தம் என உறுதி செய்யப்பட்டது.

வாட்ஜ் பேங்க் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கில் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடற்பகுதி. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கும். வாட்ஜ் பேங்க் பகுதி 4,000 சதுர மைல் (சுமார் 6,500 சகிமீ) பரப்பளவுடையது. இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால் மீன் வளமும் அதிகம்.

வாட்ஜ் பேங்க் பகுதி மீன் மற்றும் பல்லுயிர் வளத்திற்காக அறியப்பட்ட பகுதியாக இருந்தாலும் இந்தப் பகுதியில் பெட்ரோலியம் கிடைக்கும் சாத்தியமும் இருப்பதாக இந்தியா கருதுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், வாட்ஜ் பேங்க் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று இடங்களில் பெட்ரோலியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது.

ஆனால், இதைக் கன்னியாகுமரி மீனவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களை ஆதரித்து, அரசியல் கட்சிகள் பலவும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, இதற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் இருக்கும் வளங்களுக்காக இலங்கை பங்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே கச்சத் தீவை இந்திய அரசு விட்டுக் கொடுத்தது. இப்போது, இந்த வளங்களை ஆராயக் கூடாது என்று தமிழக மீனவர்கள் போராடுகின்றனர். கொல்லம் பகுதியில் ஆராய்வதைக் கேரள மீனவர்களும் எதிர்க்கின்றனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, என் யோசனை இதோ.

இந்தத் துரப்பணப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல், அரசே இதை நேரடியாக நடத்தலாம். குறிப்பாக, தமிழக அரசு ஒரு புதிய நிறுனத்தை உருவாக்கலாம். தமிழகப் பகுதிகளில் இருக்கும் எண்ணெய், எரிவாயு வளங்களை ஆராய்வது, துரப்பணம் செய்வது ஆகிய பணிகளை இந்த நிறுவனமே மேற்கொள்ளலாம். அவ்வாறு இயற்கை வளம் கண்டறியப்பட்டால், அதை எடுப்பதால் வரும் லாபத்தில் ஒரு பகுதியை இந்தப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் செலவிடலாம். இங்குள்ள மக்களில் தகுதி உடையோருக்கு இதன் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கலாம். அரசே முன்னின்று நடத்துவதால், இதன் மீது மீனவர்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

உலகின் பல பகுதிகளில் நிலத்தில் அல்லது ஆழ்கடலில் இவ்வாறு எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எடுத்து வருகின்றனர். அவ்வாறு எடுக்கும் பெட்ரோலியப் பொருள்களை நாம் இங்கே விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். நம் பகுதியில் அவ்வாறு ஒன்று கிடைக்கும் வாய்ப்பு இருக்குமாயின், அது குறித்து ஆராயக் கூடாது என்பது சரியா?

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் திட்டங்களை நிறைவேற்ற, அறிவியல்பூர்வமான பார்வை தேவை. உணர்வுப்பூர்வமாக அணுகுவது, சிக்கல்களைத் தீர்க்காது. நமக்குத் தேவையான தீர்வு, நம் காலடியில் கூட இருக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.