பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 9
63 நாயன்மார்கள் வரலாறு – 8. ஏனாதிநாதர்


ஈழக் குலச்சான்றா ரெயின னூர்வா
ழேனாதி நாதனா ரிறைவ னீற்றைத்
தாழத் தொழுமரபார் படைக ளாற்றுந்
தன்மைபெறா வதிசூரன் சமரிற் றோற்று
வாழத் திருநீறு சாத்தக் கண்டு
மருண்டார்தெ ருண்டார்கை வாள்வி டார்நேர்
வீழக் களிப்பார்போ னின்றே யாக்கை
விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.
சோழ நாட்டில் எயினனூர் எனும் ஊரில் பிறந்தவர் ஏனாதியார். எயினனூர் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்காலத்தில் ஏனநல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஏனாதி என்பது அந்நாட்களில் படைத்தளபதியைக் குறிக்கும் சொல்லாகும். ஏனாதி என்ற பட்டம் படைத்தளபதிக்கு ஆபரணமாக நெற்றியில் அணியச் செய்வார்கள். இந்நாயனார் ஏனாதி என்ற பட்டத்தைப் பெற்றவர். ஈழகுலச் சான்றோர் குடியில் பிறந்தவர் இவர். மன்னர் குடி வந்தவர்களுக்கு வாட்போர்ப்பயிற்சி அளிப்பது இவருடைய பணி. இப்பணியிலிருந்து வரும் வருவாய் மூலமாக அடியார்களுக்கு உதவி செய்வதை தம் கடமையாகக் கொண்டு வாழ்பவர். வாட்படைப் பயிற்சிக் கூடம் அமைத்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இவர் வாள் வலிமையும், தோள் வலிமையும், அஞ்சா நெஞ்சமும் கொண்டு வாழ்ந்தவர். அந்த வகையில் மிகத்திறமையான அவருடைய பயிற்சியால் அவருக்கு செல்வாக்கும், செல்வமும் பெருகியது. அவருடைய அரவணைப்பால் அடியார்களும் சிறப்பாக வாழ்ந்ததால் அவருடைய புகழும் உச்சம் தொட்டது.
இவையனைத்தையும் கண்டு எரிச்சலுற்ற மற்றொரு வாட்பயிற்சியாளனான அதிசூரன் என்பவன் அவர்மீது அழுக்காறு கொண்டான். அவன் இயல்பாகவே தற்பெருமையும், ஆணவப்போக்கும், பிறரை மதியாத தன்மை போன்ற குணக்கேடான எண்ணங்கள் கொண்டவன் என்பதால் குணக்குன்றான ஏனாதியாரைப் பகையாகக் கருதினான். ஒருநாள் ஏனாதியாரைப் பார்க்க அதிசூரன் அவர் இருக்கும் இடம் தேடி வந்தான். அவருடைய தொழிலைக் குறிவைத்துப் பறிக்க வந்தான். ஒரு ஊரில் இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கலாமா? யார் வலிமையானவரோ அந்த ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்றான். அதற்காக ஏனாதியாரிடம் பயிற்சி பெறுபவர்களையும், தன்னிடம் பயிற்சி பெறுபவர்களையும் வைத்து சண்டையிட்டு, அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தலாம் என்று திட்டமிட்டான். ஒரு உரையில் ஒரு கத்தி மட்டுமே இருக்க வேண்டும் என்றான். ஏனாதியாரும் அதற்கு இசைந்தார். அதற்கான நாளும், இடமும் குறிக்கப்பட்டது. அந்நாளில் அதிசூரன் கூறியபடி அனைவரும் கூடினர். போர் தொடங்கி வாள் வீச்சில் தலைகளும் துண்டாகி வீழ்ந்தன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்தனர் பலர். இறுதியில் அதிசூரனைத் தோற்கடித்தார் ஏனாதியார். அதிசூரனின் படைகள் தோற்று ஓடின. சேக்கிழார் பெருமானின் கவிச்சொற்கள் இவற்றை அழகாகப் பதிவிடுகின்றன:
குருதியின் நதிகள் பரந்தன குறை
உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி
குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின
விசியறு துடிகள் புரண்டன
இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர்
எதிர் அமர் செய் பறந்தலை.
தலைப்பட்டார் எல்லாரும் தனி
வீரர் வாளில்
கொலைப் பட்டார் முட்டாதார்
கொல் களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு
நேர் பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்
போல் ஆயினார்.
புறமுதுகிட்டு ஓடும் நிலையில் மேலும் சினங்கொண்ட அதிசூரன் வன்மத்தைக் கக்கினான். தோல்வியால் அவமானத்தில் உழன்றவன், ஏனாதியாரை போரில் வெல்வது கடினம் என்பதைப் புரிந்துகொண்டு, அவரை வஞ்சனையால் வீழ்த்துவது என்று முடிவு செய்தான். மீண்டும் வந்தவன், நம்மால் நம் மாணவர்கள் வீணாக மடிய வேண்டாம். நாம் இருவரும் நேருக்கு நேர் மோதி யார் இந்த பயிற்சி வகுப்பை நடத்தத் தகுதியானவர் என்று முடிவு செய்யலாமே என்றான். நாயனாரும் இதற்கும் ஒப்புக்கொண்டு நாளைக் குறித்தனர். குறித்த நாளில் போரும் துவங்கியது. தீவிரமாக நடந்த போரில் அதிசூரன் தோற்கும் நிலைக்கு வந்துவிட்டான். அப்போது ஏற்கனவே தான் திட்டமிட்டபடி, அதுவரை தான் மறைத்திருந்த திருநீற்று மறைப்பை விலக்கினான் அதிசூரன். அதிசூரன் நெற்றியில் திருநீறு பொலிவதைக் கண்ட நாயனார் உள்ளம் சற்றே தடுமாறியது. கடையனே ஆனாலும் திருநீறு பூசியதால் இவன் சிவபிரானின் அடியவராகிவிட்டானே! இவ்வடியாரைக் கொல்வதா என்று வாளை வீசி எறியத் துணிந்தார். ஆனாலும் நிராயுதபாணியாக நிற்கும் தன்னைக் கொன்ற பாவம் அந்த சிவனடியாருக்கு வந்துவிடக் கூடாதே என்றும் தயங்கியவர், சண்டை போடுவது போல பாசாங்கு செய்தார். அதிசூரனும் தாம் எதிர்பார்த்தது நடந்துவிட்ட களிப்பில் தாம் நினைத்தபடி அவரை வெட்டி வீழ்த்த நாயனாரும் மண்ணில் சாய்ந்தார்.
கடையவன் தன் நெற்றியின் மேல்
வெண்ணீறு தாம் கண்டார்.
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு
இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு
மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார்
ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக்
குறி வழி நிற்பேன் என்று.
என்று அழகுற மொழிகிறார் சேக்கிழார் பெருமான்!
நாயனார் பெருமான் அருள்வெளியில் எம்பெருமானின் காட்சியைக் கண்டு ஆனந்தம் கொள்கிறார். பொய்யாக திருநீறு பூசிப் பாதகம் செய்த அதிசூரன் நரகினை அடைந்து துன்பமுற்றான்.
ஏனாதிநாத நாயனார் புராணம் கூறும் கருத்து!
வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்
ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்.
எனும் சேக்கிழார் பெருமானின் கூற்று பெண்மையின் ஒழுக்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. கரும்பு பூக்கும். காய்க்காது. நெல் பூக்கும், காய்க்கும். அதுபோன்று குலமகனானவள் பூத்துக் குழந்தைச் செல்வத்தைத் தருவாள். விலைமகளோ பூப்பாள். ஆனால் மகப்பேறு விருப்போடு பெறுவதில்லை. பெற்றாலும் அதில் சிறப்பில்லை என்கிறார் சேக்கிழார் பெருமான்!
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே
நம் சைவ சமயத்தின் ஆகச்சிறந்த சின்னமாகக் கருதப்படுகிற திருநீற்றின் சிறப்பினைப் பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் பதிகமாகப் பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ‘மெய்யெல்லாம் வெண்ணீறு சந்தித்த மேனியான்’ என்கிறார். குழந்தையான திருஞானசம்பந்தப் பெருமான் தொட்டிலில் இருந்த வேளையில் அக்குழந்தையைக் காப்பதற்கு திருநீறை அதிகமாகப் பூசினார்களாம். சேக்கிழார் பெருமான் இதனை, ‘வேற்றுக் காப்பு மிகை என்று நீற்றுக் காப்பே நிறையச் சாத்தி’ என்கிறார்.
இத்தகைய சிவசின்னமாகிய திருநீறை மெய்யன்போடு பூசுபவர் சிவபதம் அடைவர்.
“கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை – மங்காமற்
பூசி மகிழ்வாரே யாமாகிற் – றங்கா
வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான சிவனடி சேர்விரே”
என்னும் திருமந்திரத்தால் உணரலாம்.
திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயர். வி என்றால் ஒப்பற்ற என்றும், பூதி என்றால் செல்வம் என்றும் பொருள். ‘விபூதி’ என்றால் ‘ஒப்பற்ற செல்வம்’ என்பது பொருள். ஏனாதியார் போன்று திருநீறு பூசிய அடியார் யாவராயினும் அவரைச் சிவமாகவே வணங்கும் பண்புடையவர்கள் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.
எவரேனும் தாமாக விலாடத்து இட்ட திருநீறும்
சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்து அடிமைத்
திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு
ஆட்டாது ஒழிந்த ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர்
நடுதறியைக் காணலாமே
என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறியலாம்.
சிவன் விதித்தவழி ஒழுகாமல், பொய்த்தவ வேடத்தாற் பயனேதும் இல்லை என்பது,
வேடநெறிநில்லார் வேடம்பூண்டென்
பயன் – வேட நெறி நிற் போர் வேட
மெய் வேடமே – வேட நெறிநில்லார்
தம்மை விறல்வேந்தன் – வேட
நெறி செய்தால் வீடதுவாகுமே
என்றும்
தவமிக்கவரே தலையான வேடர்
அவமிக்கவரே அதிகொலே வேடர்
அவமிக்கவர் வேடத்தாகா ரவ்வேடந்
தவமிக்கவர்க் கன்றித் தாங்கவொண்ணுதே
என்றும் திருமந்திரம் கூறுவதைக் காண்கிறோம்.
சேக்கிழார் நாயனார் பாதகர்கள் மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்று இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே காரணம் என்பதை அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
