பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 8
63 நாயன்மார்கள் வரலாறு – 7 எறிபத்தர்


திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்
சிவகாமி யார்மலரைச் சிறந்த யானை
யானெறியோ நெறிபத்தர் பாக ரோடு
மறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று
புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்
புரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்
கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்
கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.
ஈரோடு – திருச்சி செல்லும் சாலையில், ஈரோட்டிலிருந்து 65 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கரூர் எனும் ஊர். சோழப் பேரரசின் புகழ்பெற்ற 5 தலைநகரங்களில் ஒன்றான இவ்வூர் திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களில் ஒன்று. புகழ்ச்சோழர் மன்னன் ஆண்ட இவ்வூர் நீர் வளம், நில வளம், பொருள் வளம், அருள் வளம் என அனைத்து வளங்களும் நிறைந்த ஊர். அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரூரில் உள்ள ஆநிலை எனும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பசுபதீசுரரை காமதேனு வழிபட்டதால் இந்த ஆலயம் ஆநிலை என்ற பெயர் பெற்றுள்ளது. பசுக்களின் தலைவன் என்பதால் பசுபதி ஆனார் இறைவன். 9ம் திருமுறை ஆசிரியரான கருவூர் தேவரும், எறிபத்த நாயனாரும் அவதரித்த ஊர் என்ற பேறு பெற்ற ஊர் இது.
இத்தகைய பெருமை வாய்ந்த கரூரில் அருளாட்சி புரிந்து வரும் பசுபதீச்சுரரை அன்றாடம் வணங்கி வழிபட்டு வருபவர் எறிபத்திரர். காலை, நண்பகல், மாலை என மூன்று காலமும் குறைவிலாது வழிபாடு செய்துவரும் பெற்றியர் இவர். சிவனடியார்களுக்கு அருந்தொண்டு செய்துவரும் பண்பினரான இவர் அவர்கள் செய்யும் தொண்டுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால், குகையிலிருந்து சீற்றத்துடன் புறப்படும் சிங்கம் போன்று எழுந்து நின்று அவர்களை ‘பரசு’ எனும் ஆயுதத்தை எறிந்து தாக்கி அந்த சிவனடியார்களுக்கு உதவி வந்தார்.
அதே காலத்தில் கருவூரில் சிவகாமியாண்டார் என்ற ஒரு அன்பர் மலர்த்தொண்டு செய்வதில் நிகரற்றவராக விளங்கினார்.
நகமெலாம் தேயக் கையால் நாள் மலர் தொழுது தூவி
முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்தேத்து தொண்டர்
அகமலாற் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே
என்று நாவுக்கரசர் மலர்த்தொண்டு செய்பவரின் மகிமை பற்றி எடுத்துரைக்கின்றார். மகத்தான மலர்த்தொண்டை செய்யும் அடியவரின் உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன் என்பார்.
சிவகாமி ஆண்டார் அன்றாடம் வைகறையில் துயிலெழுந்து, நீரில் மூழ்கிக் குளித்துத் திருவெண்ணீறும், கண்மணியும் அணிந்து, வாயினைக் கட்டிக்கொண்டு, நந்தவனத்திற்குள் சென்று மலரும்முன் மொக்குகளைப் பறித்து, பூக்குடலையில் நிரப்பி, அசுத்தம் படாதவாறு ஒரு மூங்கில் கம்பில் அப்பூக்குடலையை மாட்டிக் கொண்டு வருவார். பின் ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் உச்சரித்துக்கொண்டே அம்மலர்களை மாலையாக்கி, பெருமானுக்கு அணிவித்து வழிபடுவதை காலந்தோறும் தவறாமல் செய்து வருவார்.
வைகறை உணர்ந்து போந்துபுனல்
மூழ்கி வாயும் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்லகமழ்
முகை அலரும் வேலைத்
தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப்
பள்ளித் தாமம் கொய்து.
இப்படியாக மலர்த்தொண்டு தொடர்ந்துவரும் காலகட்டத்தில், ஓர் நாள் ஏற்பட்டது சோதனை அவருக்கு. நவமிக்கு முந்தைய நாளான அட்டமியில், ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க கருவூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழருடன், பல போர்களில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிவந்த ‘பட்டவர்த்தனம்’ எனும் தமக்கு மிகவும் பிரியமான பட்டத்து யானையுடன் அக்கோவிலின் விழாவினைச் சிறப்பிக்க வந்தார். சிவகாமியாண்டாரும் வழக்கம் போல, நீராடியபின் மலர்களைக் கொய்து குடலையில் நிரப்பி, மூங்கில் கழியில் மாட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பட்டத்து யானையை அலங்காரம் செய்து ஊர்வலத்திற்குத் தயார் செய்யும்பொருட்டு ஆற்றுக்கு குளிப்பாட்டுவதற்காக அழைத்து வந்தனர். அமைதியாக நீராடிய யானை திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மதம் பிடித்துத் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. 5 பாகர்கள் உடன் இருந்தும் அவர்களால் கட்டுப்படுத்த இயலாமல் யானை வேகமாக ஓட ஆரம்பித்தது. மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.
அதே வேளையில் பூக்குடலையுடன் வந்த சிவகாமி ஆண்டாரின் பூக்குடலையைப் பிடுங்கி வீசி எறிந்தது அந்த மதம் பிடித்த யானை. எம்பெருமானுக்குச் சூட வேண்டிய மலர்கள் அனைத்தும் தெருவில் சிதறிப்போயின. தம் மலர்த்தொண்டுக்கு இத்தகைய இடையூறு நேர்ந்துவிட்டதே, இதைத் தடுக்கும் ஆற்றலும் இந்த முதியோனுக்கு இல்லையே என்று கதறினார். தரையில் அமர்ந்து, ‘சிவதா, சிவதா’ என்றே கதறினார்.
களி யானையின் ஈர்உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா! சிவதா!
அளியார் அடியார் அறிவே! சிவதா!
தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!
இவ்வாறு சிவபெருமானிடம் முறையிட்டுக் கொண்டிருந்த போதுதான் அங்கு எறிபத்தர் வந்து சேர்ந்தார். சிவனடியாரின் துன்பம் கண்டு பொங்கியெழுந்தவர், அவர்தம் இடையூறைக் களையவொண்ணாமல், சிவனடியாருக்கு இடையூறு செய்த அந்த யானையைக் குத்திக் கொல்வேன் என்று சூளுரைத்தவர், பரசுவைக் கையிலேந்தியவாறு புறப்பட்டார்.
கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்த அக்களிறே போலும்
அண்டரும் மண் உளோரும்
தடுக்கினும் அடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர்
மழு வலத்தில் வீசிக்
கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று
காலினால் குலுங்கப் பாய்ந்தார்.
அந்த மதம் பிடித்த யானை செல்லும் வழியில் எறிபத்தரும் விரைந்து சென்றவர், அதைக் குத்திக் கொல்வேன் என்றவாறு ஓடுகிறார். தறிகெட்டு ஓடும் மதயானையைக் கொல்ல முடியுமா என்ற சிந்தை துளியும் இன்றி அதைக் கொல்லத் துணிந்தார். ஆனால் அந்த யானை எறிபத்தர் மீது கோபத்தோடு பாய்ந்தது. எறிபத்தரும் சட்டென்று தம் மழுவினால் யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். அதோடு அதன் பாகர்கள் ஐவரையும் வெட்டி வீழ்த்தினார். இச்செய்தி மன்னன் புகழ்ச்சோழனுக்குச் சென்று சேர்ந்தது. அவரும் பட்டத்து யனையையும், பாகர்களையும் கொன்றது பகைவர் செயல் என்று கருதி நாற்படையுடன் யானை இருந்த இடம் நோக்கி விரைந்தார். அங்கே எறிபத்தர் சற்றும் அஞ்சாமல் சிங்கம் போல் சிலிர்த்துக் கொண்டு மழுவுடன் நின்றிருந்தார்.
மன்னரைக் கண்ட எறிபத்தர், அவருடைய பட்டத்து யானை செய்த தீங்கையும் பாகர்கள் அதைத் தடுக்காமல் இருந்ததால் தாம் அவர்களைக் கொன்றதாகவும் எறிபத்தர் விளக்கினார். புகழ்ச்சோழர் இதைக் கேட்டு, எறிபத்த நாயனாரின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்றும், பட்டத்து யானையால்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்றும் புரிந்துகொண்டு மிகவும் மனம் வருந்தியவர், அடியார்க்குத் தீங்கு செய்த யானையையும் பாகர்களையும் மட்டும் கொன்றது போதாது. இவற்றைச் சரியாக நிர்வகிக்காத குற்றவாளியான தன்னையும் கொல்லவேண்டும் என்று கூறி, புனிதமான அவருடைய மழுவால் கொல்ல வேண்டாம் என்று தம் உடைவாளை எடுத்து எறிபத்தரிடம் கொடுத்தார்.
ஆனால் எறிபத்தரோ புகழ்ச்சோழரின் பக்தியையும், அடியார்கள் மீது கொண்ட அன்பையும் கண்டு உள்ளம் நெகிழ்ந்தவர், இத்தகைய சிவனடியாரின் மனம் புண்படச் செய்துவிட்டோமே, தாம் இனி உயிர் வாழ்வதில் பயன் இல்லை என்று எண்ணி மழுவினால் தன்னையே மாய்த்துக்கொள்ள முயன்றார். இதனைக் கண்ட புகழ்ச்சோழர் பதறிப்போய் அவரைத் தடுத்தார். அப்போது வானில் தோன்றிய அற்புதமான ஒலி, அந்த இரு சிவனடியார்களின் அன்பினை உலகறியச் செய்யவே தாம் இவ்வாறு செய்தோம் என்றது. அந்த நொடியில் யானையும், பாகரும் உயிர் பெற்றனர். மலர்களும் மீண்டும் குடலையில் சேர்ந்தது. சிவகாமியாண்டார் தமது மலர்த்தொண்டை மேலும் சிறப்பாகத் தொடர்ந்தார். எறிபத்தர் திருத்தொண்டு செய்து கயிலையில் சிவகண தலைவராக ஆனார். எறிபத்தர் எனும் சிவனடியார் நாயன்மார் ஆன வரலாறு இதுதான்.
எறிபத்த நாயனார் புராணம் சொல்லும் கருத்து!
பசுபதீசுரர் அருள் பாலிக்கும் ஆநிலை எனும் கோவில் அமைந்த திருத்தலமான கரூரில் உள்ள அப்பெருமானை வழிபடுவதால் மீண்டும் ஒரு கருவறையில் கருவாகப் பிறக்கும் வாய்ப்பு உண்டாகாது என்பர். கரூர் நகரைச் சேர்ந்த இரு பெரும் சங்கப் புலவர்களின் பாடல்களை புறநானூறு காட்டுகிறது. சோழ மன்னர்கள் தங்கள் புலிக்கொடியை இமயத்தில் பொறித்து வெற்றிக் கொடியை நாட்டினர். பொன்னாக மின்னும் இமயத்தின் பழைய பாதைகளை அடைத்து அன்னியர் உள் நுழையாமல் தடுத்துப் புதிய பாதைகளை அமைத்து காவல் வைத்தனர் சோழர்கள். அந்த வகையில் தமிழர் தம் ஆட்சி அகண்ட தமிழகமாக இமயம் வரை நீண்டிருந்த வரலாற்றுக் குறிப்பையும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார்.
பொன்மலை புலிவென்றோங்கப் புதுமலை இடித்துப் போற்றும்
அந்நெறி வழியே ஆக அயல்வழி அடைத்த சோழன்
மன்னிய அநாபன் சீர் மரபின் மாநகராகும்
தொன் நெடுங் கருவூர் என்னும் சுடர்மணி வீதி மூதூர்
என்கிறார் .
மலர்த்தொண்டு என்பது இறைவனுக்குச் செய்யும் நிகரற்ற தொண்டு என்பதை திருஞானசம்பந்தப் பெருமான்,
தொண்டரெல்லாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்டலாருயிர் ஆயதன்மையர்
கண்டனார் கருவூருள் ஆநிலை
அண்டனார் அருளீயும் அன்பரே
என்று தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
எறிபத்தர் பற்றி, “இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்” என்று திருத்தொண்டத்தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமையாகக் கூறியுள்ளார்.
பூக்குடலை விழா:
இந்நாளிலும் இந்த அரிய நிகழ்வை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மகா அட்டமி தினத்தன்று, அனைத்து பக்தர்களும் பூக்குடலை ஏந்தி, ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று, பூக்குடலை விழா நடத்தி வழிபட்டு வருகிறார்கள். அன்றைய தினம் கோயிலில் எறிபத்த நாயனார், புகழ்ச்சோழர், சிவகாமியாண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிசேகமும், அலங்காரமும் நடைபெறுகின்றது.
திருச்சிற்றம்பலம்
தொடரும்
