Blog

  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 40

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 1)

    திருதொண்டத்தொகையில் சுந்தரர் பெருமான், “செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்” என்று புகழும் சிறுத்தொண்டர் நாயனார், காவிரி பாயும் சோழ நாட்டில் வளம் கொழிக்கும் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் மரபினில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். திருச்செங்காட்டங்குடி என்ற இந்த ஊர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர்.

    சிவபெருமானிடம் மாறாத அன்பும் அதீத பக்தியும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார், அன்றாடமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு அவர்கள் விரும்பியவாறே எந்த உணவானாலும் இல்லையெனாது அகமகிழ்ந்து அமுது படைத்து வந்தார். அவர்களை வழிபட்டு, அவர்கள் முன்பு தம்மை மிகச் சிறியவராக எண்ணிப் பணிந்து, அவர்களுக்குப் பணிவிடைகளும் செய்துகொண்டிருந்த இவர் ‘சிறுத்தொண்டர்’ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

    உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு

      இன்றிப் பயின்று அவற்றால்

    தெள்ளி வடித்து அறிந்த பொருள்

      சிவன் கழலில் செறிவு என்றே

    கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று

      உதைத்த கழற்கு அன்பு

    பள்ளமடையாய் என்றும் பயின்று

      வரும் பண்புடையார்

    பரஞ்சோதியார் ஆயுர்வேதக் கலையும், அளவில்லாத வடநூல் கலையும், தூயப் படைத்தொழிலும், கற்று தேர்ந்தவற்றையும் சிவபெருமான்பால், சிவனடியார்பால் கொண்ட அன்பையும் ஒன்றாகக் கலந்து தெளித்ததால் அவர் கற்ற கலைகள் கலையின் பயனால் கிடைத்த உலகியல் இன்பங்கள் அனைத்தும் தூசு போல் பறந்து சிவன் கழலின் அன்பே நின்றது.

    யானை ஏற்றம், குதிரை ஏற்றம், போர் செய்வது போன்றவற்றில் வல்லவராகத் திகழ்ந்த பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவரிடம் படைத் தளபதியாக பணியாற்றினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். வாதாபியில் பெரும் படைப்பலம் கொண்ட இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, அங்கிருந்து பொன்னும் மணிகளும் நிதிக்குவியலையும், ஏராளமான யானைகள், குதிரைகள் போன்றவற்றையும் கவர்ந்து வந்தாலும் அவருடைய மனம் மேலும் போரில் ஈடுபட விரும்பவில்லை. பரஞ்சோதியாரின் வீரதீரத்தை வெகுவாகப் பாராட்டிய மன்னன், அவரைப் பார்த்து தாமே படையெடுத்துச் சென்றிருந்தாலும் வாதாபியை வென்றிருக்க முடியாது என்றபோது மக்கள் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்ற பரஞ்சோதியை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை என்றனர். இதைக் கேட்ட மன்னன், சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவம் செய்துவிட்டேனே என்று வருந்தியவர் எம்பெருமானிடம் தம் பிழைப் பொறுத்தருளவும் வேண்டினார். அதுமட்டுமின்றி பரஞ்சோதியாரை அழைத்து மேற்கொண்டு அவர் தம் செம்மைநெறித் தொண்டைத் தொடர வேண்டும் என்று வேண்டி, நிறையப் பொன்னும் பொருளும் வழங்கி அரச மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தார். பரஞ்சோதியார் மன்னரிடம் விடைபெற்று தமது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார்.

    வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டைக் கண்டு தன் வெற்றிச் சின்னமாக விநாயகரை தமிழகத்திற்குக் கொண்டு வந்திருந்தார். திருச்செங்காட்டாங்குடியில் கணபதி ஈச்சுவரம் இறைவரை வணங்கி பல்லவ மன்னனிடமிருந்து பெற்ற பொன்னும் பொருளையும் ஆலயத் திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி நெறியில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார், திருவெண்காடு நங்கை என்னும் அருள் நிறைந்த மங்கையை திருமணம் செய்து கொண்டார். திருவெண்காடு நங்கையும் சிறுத்தொண்டரின் சிவவழிபாட்டிற்கும், சிவனடியார் தொண்டிற்கும் பெரிதும் துணை நின்றவர், அவருடன் சேர்ந்து அன்றாடம் சிவனடியார்களை அன்போடு வரவேற்று முறையாக உபசரித்து அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் வழக்கத்தை நியமமாகக் கொண்டிருந்தனர். சிவனடியார்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து மகிழ்ந்திருந்தனர்.

    இத்தகைய இல்லறத்தின் பயனாக, சிவபெருமானின் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு சீராளன் என்னும் திருநாமம் இட்டு சிறப்பாக வளர்த்து வந்தனர்.

    நீராரும் சடை முடியார்

      அருளினால் நிறை தவத்துப்

    பேராளர் அவர் தமக்குப்

      பெருகுதிரு மனை அறத்தின்

    வேராகி விளங்கும்

      திரு வெண்காட்டு நங்கைபால்

    சீராளத் தேவர் எனும்

      திருமைந்தர் அவதரித்தார்

    சீராளத்தேவருக்கு அனைத்துச் சிறப்புகளையும் செய்துப் போற்றி அந்தந்தப் பருவத்துக்குரிய சிறப்புகளைச் செய்து பல விழாக்களையும் எடுத்து ஊர் மெச்ச வளர்த்து வந்தனர். மூவாண்டு நிறைந்தவுடன் முடி இறக்கியவர்கள், சீராளனின் பள்ளி செல்லும் பருவத்தில் பாடசாலையில் சேர்த்து, கலைகள் பல கற்கச் செய்து அவன் கல்வியில் சிறந்து விளங்குவதைக் கண்டு இன்புற்றிருந்தனர்.

    திருஞானசம்பந்தப் பெருமான் திருசெங்காட்டங்குடி ஈசனை வணங்க வந்தவரை, சிறுத்தொண்டர் வரவேற்றுத் தம் இல்லத்தில் தங்க வைத்தார். சிறப்பாக பணிவிடைகள் செய்து அவரை வணங்கினார். திருஞானசம்பந்தரும் உள்ளம் மகிழ்ந்து தன்னுடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரையும் சிறப்பித்துப் பாடியருளினார். சிறுத்தொண்டரின் திருத்தொண்டின் புகழ் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. திருக்கையிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானும் மண்ணுலகிற்கு வர திருவுளம் கொண்டார். சிறுத்தொண்ட நாயனாரின் பக்தியையும் திருத்தொண்டின் சிறப்பையும் உலகறியச் செய்யும் எண்ணம் கொண்டார் சிவபெருமான். அடியார்கள் பலர் தங்களுக்கு எட்டாக்கனியாக விளங்கும் ஆண்டவனை நோக்கிப் போகும் வேளையில் அந்த சிவபெருமானே சிறுத்தொண்டரின் அன்பினை நுகர்வதற்கு வயிரவக் கோலத்தோடு புறப்பட்டு வந்தார். அவருடைய திருவிளையாடலும் ஆரம்பித்தது.

    இத்தன்மை நிகழும் நாள்

      இவர் திருத்தொண்டு இருங்கயிலை

    அத்தர் திருவடி இணைக் கீழ்ச்

      சென்று அணைய அவருடைய

    மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து

      அருளுதற்கு விடையவர் தாம்

    சித்தம் மகிழ் வைரவராய்த்

      திருமலைநின் றணைகின்றார். 

    இறைவன் சோதனையால் அன்று சிவனடியார்கள் ஒருவரும் அமுதுண்ண வரவில்லை. சிறுத்தொண்டரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் கவலையோடு காத்திருந்தனர். பின்னர் சிறுத்தொண்டர் சிவனடியார்களை அழைத்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார். அச்சமயம் ஈசனே கருஞ்சட்டை அணிந்து இடக்கையில் சூலம் ஏந்தி பைரவ அடியார் வடிவமேந்தி திருச்செங்காட்டங்குடி ஊருக்கு வந்தார். எதிரில் பார்ப்பவர்களையெல்லாம் சிறுத்தொண்டர் வீடு எங்கே என்று கேட்டுக்கொண்டே வந்து,  சிறுத்தொண்டர் வீட்டின் முன் நின்று அடியார்களுக்கு அமுதிடும் சிறுத்தொண்டர் இருக்கிறாரா அவரைக் காண வேண்டி வந்துள்ளேன் என்று அன்போடு கூறினார். சிறுத்தொண்டரது மனைவியாரும் மகிழ்வுடன் அடியாரை அமுதுண்ண அழைத்தார். பைரவத் துறவியாய் வந்த சிவபெருமான் மிகுந்த பசியுடையவராய்க் காணப்பட்டார். அவரிடம் தன் கணவர் உணவிடுவதற்காக அடியாரைத் தேடிச் சென்றுள்ளார் என்றும் அடியாரான அவரே அங்கு வந்திருப்பது தெரிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வார், சிறிது பொறுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அடியார் வேடத்தில் வந்திருந்த பெருமானும் சிறுத்தொண்டர் வரும்வரை  தாம் கனபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் தாம் வந்த செய்தியை தெரிவிக்கவும் கூறி ஆத்தி மரத்தின் கீழ் சென்று அமர்ந்தார்.

    அடியார்களைத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர் எங்கு தேடினும் ஒரு அடியவரையும் காணமுடியவில்லையே என்று மனைவியிடம் சொல்லி வருந்தினார். அவர் மனைவியாரும் பைரவ அடியார் வந்து சென்ற செய்தியைத் தன் கணவரிடம் கூறினார். அதைக் கேட்டவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாகச் சென்று ஆத்தி மரத்தின் கீழமர்ந்திருந்த அடியாரைக் கண்டு, அவர்தம் திருவடிகளைப் பணிந்து நின்றார். அப்போது அந்த பைரவ அடியார், அவரிடம், நீர் தான் சிறுத்தொண்டரா? என வினவியபோது அவரும் முகம் மலர, எத்தகுதியும் இல்லாத இச்சிறியோனை அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு எனப் பணிந்துக் கூறினார். அடியேன் செய்த தவத்தால் அன்று அவரைக் கண்டதாகவும், தயை கூர்ந்து அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுதுண்ணல் வேண்டும் என்றும் பணிந்து கேட்டுக்கொண்டார்.

    பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து தாம் அவரைக் காணும் ஆவலில்தான் வந்தாரேத் தவிர தமக்கு அவரால் உணவளிக்க முடியாது என்று கூறினார். இதைக் கேட்ட சிறுத்தொண்டரும் அவருக்கு வேண்டிய உணவை எப்படியாயினும் விரைந்து அமுது படைப்பதாக உறுதியளித்து பணிந்து நின்றார்.

    அடியாரும் மிகவும் அதிர்ச்சியான அச்செய்தியைக் கூறியும் சிறுத்தொண்டரின் மனது எந்த வகையிலும் தம் நியமத்திலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. தாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் உண்ணும் வழமையுடையவர் என்றும், அதுவும் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை மட்டுமேதான் உண்போம்  என்றும், அந்த நாளும் அன்று தான் என்றும் கூறினார். ஆனாலும் தமக்கு அமுதளிக்க சிறுத்தொண்டரால் முடியாது என்றும் கூறினார். அது கேட்ட சிறுத்தொண்டர், சிவபெருமான் அருளால் தங்களிடம் அனைத்துச் செல்வங்களும், ஆடுகள், மாடுகள், என ஆநிரைகள் அனைத்தும் குறைவில்லாது உள்ளதாகவும், அவருக்கு அமுதாகும் பசு எதுவென தெரிவித்தால் அடியேன் விரைந்து சென்று சமைத்து, காலம் தவறாமல் அமுது படைப்பேன் என்றும் கூறினார்.

    ஆனால் அந்த சிவனடியாரோ பசுவென்றால், அவர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி தாம் கூறவில்லை என்றும், தாம் குறிப்பிடுவது நரப்பசு, அதுவும் ஐந்து வயது மிகாமல் இருக்க வேண்டும், அங்கத்தில் ஊனம் எதுவும் இல்லாதிருத்தல் வேண்டும், ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அதுவும் தாயார் பிடிக்க, தந்தை அரிந்து கொடுக்க வேண்டும். தாயும், தந்தையும் தம்முள் மனமுவந்த துன்பமின்றி, எந்தப் பிழையுமின்றி சமைத்த அந்த கரியினை மட்டுமே உண்பேன் என்று கூறினார். சிறுத்தொண்டரும், அவரைப் பணிந்து, சுவாமி அமுது செய்வதானால் அதுவும் தமக்கு அரியது அல்ல என்று திருவடியை வணங்கி இல்லம் வந்தார். கணவர் வருகையைக் கண்ட திருவெண்காட்டு நங்கை அடியார் விரும்பும் அமுது யாது என வினவினார்.

    அச்சம் எய்திக் கறி அமுதாம்

      என்னும் அதனால் அரும் புதல்வன்

    உச்சி மோவார் மார்பின் கண்

      அணைத்தே முத்தம் தாமுண்ணார்

    பொச்சம் இல்லாத் திருத் தொண்டர்

      புனிதர் தமக்குக் கறி அமைக்க

    மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார்

      வேறு கொண்டு அணைவார். 

    சிறுத்தொண்ட நாயனாரும் தம் மனைவியாரிடம் பைரவ அடியார் திருவமுது செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறினார். திருவெண்காட்டு நங்கையாரும் அவ்வாறு அமுது செய்விப்போம் தடையில்லை என்றாலும், அப்படி ஐந்து வயதுப் பிள்ளையை யாரிடம் பெறுவது எனக் கேட்டார். சிறுத்தொண்டர் மனையாளின் முகம் பார்த்து எவ்வளவு பொன் பொருள் கொட்டிக் கொடுத்தாலும், தாம் பெற்ற பிள்ளையை யார் தருவார்கள். அப்படியேத் தந்தாலும், தங்கள் பிள்ளையைத் தாங்களே அரிந்து கொடுக்கும் பெற்றோர்கள் இந்த உலகில் எவரும் இருக்கவே மாட்டார்கள். அதற்கு மேலும் காலம் தாழ்த்துவது பயன் இல்லை. எனை இங்கு உய்ய நீர் பயந்தானை அழைப்போம் யாம் என்றார்.

    தொடருவோம்

    Share
  • பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்!

    பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இறையுடன் தோழமை பூணலாம் மென்னும்
    வழியினைக் கண்டவர் ஆலால சுந்தரர்
    ஆலால சுந்தரர் தோழமை என்பது
    அன்பு சிவத்துடன் இணைந்திடு நிலையே

    ஏசினார் பேசினார் எள்ளிநகை யாடினார்
    இறைவனோ அவரை விட்டு விடவில்லை
    பேசிய வாயினால் பாடுக என்றார்
    பித்தனே என்றார் பித்தாய்ப் பாடினார்

    தொண்டருள் சுந்தரர் வன்தொண்டர் ஆவார்
    வன்தொண்டர் அடைமொழி அவரது சிறப்பே
    எம்பிரான் அருளைப் பெற்றது வன்சொலே
    தோழமை உணர்வால் சொன்னதும் வன்சொலே

    அரன் அடியார்கள் பெருமையை அறிந்திட
    வைத்தவர் ஆலால சுந்தரர் ஆவார்
    சுந்தரர் தொட்ட வித்தினைக் கண்டார்
    சேக்கிழார் பெரிய புராணத்தைத் தந்தார்

    அரன் அடியாரை அனைவரும் அறிய
    அரன் அடியாரின் அற்புதம் விளங்க
    அடித்தளம் அமைந்தவர் சுந்தரர் ஆவார்
    சுந்தரர் என்றுமே சிவசைவச் சொத்து

    எளிமையும் இனிமையும் உரிமையும் அன்பும்
    இருந்திடும் சுந்தரர் பாடல்கள் அனைத்தும்
    நட்பும் இருக்கும் பக்தியும் இருக்கும்
    சங்கரன் சரணாகதி தாங்கியும் இருக்கும்

    சந்தமொடு ஓசையுடன் தாள லயமோடு
    செந்தமிழில் தேவாரம் தந்து குவித்தாரே
    செந்துருத்திப் பண்ணாலே பாடி அளித்தாரே
    சம்பந்தர் அப்பர் தொட்டுவிடாப் பண்ணால்

    தீதகன்று உலகுய்ய திருவவதாரம் செய்தார்
    தெய்வத்தமிழ் தத்திடவே சுந்தரரும் வந்தார்
    நாதனுடன் நட்புரிமை பூண்ட நல்லடியார்
    நம்சைவ அடியாரை நாடறியச் செய்தார்

    அழகும் சுந்தரர் அலங்காரம் சுந்தரர்
    அரனுக்குக் அருகிருக்கும் அருநட்பும் சுந்தரர்
    அந்தணராய் பிறந்தார் அரசராய் வாழ்ந்தார்
    ஆனாலும் சுந்தரர் அரனுக்கு அடிமையே !

    Share
  • ஞானிகளின் பரிசு (மொழிபெயர்ப்பு  சிறுகதை)

    ஞானிகளின் பரிசு (மொழிபெயர்ப்பு சிறுகதை)

    மொழிபெயர்ப்பாளர்: முனைவர் ப. செல்வி,
    இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர்,
    ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர்  கலை அறிவியல் கல்லூரி,
    கோவை – 641044

    O. Henry எழுதிய “The Gift of the Magi”.

    Henry (1862–1910) என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர். இவரின் இயற்பெயர் William Sydney Porter (வில்லியம் சிட்னி போர்டர்) ஆகும்.


    ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள்.

    அவ்வளவுதான் இருந்தது. இறைச்சி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்கும்போதெல்லாம், ஒவ்வொரு சென்ட்டாக அவள் கவனமாகச் சேமித்து வைத்திருந்த தொகை அது. டெல்லா அதை மூன்று முறை எண்ணிப் பார்த்தாள். ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள். அடுத்த நாள் கிறிஸ்துமஸ்.

    படுக்கையில் விழுந்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே டெல்லா அதைச் செய்தாள்.

    வீட்டுத் தலைவி மெல்ல அமைதியாகும் வேளையில், நாம் அந்த வீட்டைப் பார்க்கலாம். வாரத்திற்கு 8 டாலர் வாடகையில் அமைந்திருந்த அந்த அறைகள் அவை. அதைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.

    கீழே இருந்த ஹாலில், ஒரு கடிதத்தைக் கூட உள்ளே வைக்க முடியாத அளவுக்குச் சிறிய ஒரு தபால் பெட்டி இருந்தது. அங்கே ஒரு மின்சார மணி இருந்தது, ஆனால் அதிலிருந்து சத்தம் வரவில்லை. மேலும் கதவின் அருகே ஒரு பெயர் பலகை இருந்தது: “திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங்.”

    அந்தப் பெயர் அங்கே வைக்கப்பட்டபோது, ​​திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் வாரத்திற்கு 30 டாலர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இப்போது, ​​வாரத்திற்கு 20 டாலர் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், அந்தப் பெயர் மிகவும் நீளமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றியது. ஒருவேளை அது “திரு. ஜேம்ஸ் டி. யங்” என்று இருந்திருக்கலாம். ஆனால் திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் அந்த அறைக்குள் நுழையும்போது, ​​அவரது பெயர் மிகவும் சுருங்கிவிடுவது வழக்கம். திருமதி ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் அவரை அன்புடன் அணைத்துக்கொண்டு “ஜிம்” என்று அழைப்பார். அவரை நீங்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறீர்கள். அவள்தான் டெல்லா.

    டெல்லா தன் அழுகையை நிறுத்தி, முகத்தில் இருந்த கண்ணீர் தடங்களைச் சுத்தம் செய்துகொண்டாள். அவள் ஜன்னல் அருகே நின்று, எந்த ஆர்வமும் இல்லாமல் வெளியே பார்த்தாள். நாளை கிறிஸ்துமஸ் தினம்; ஜிம்முக்கு ஒரு பரிசு வாங்க அவளிடம் இருந்தது வெறும் 1.87 டாலர் மட்டுமே. பல மாதங்களாகத் தன்னால் முடிந்தவரை பணத்தைச் சேமித்து வைத்திருந்தாள், ஆனால் இறுதியில் கிடைத்த தொகை இதுதான். வாரத்திற்கு இருபது டாலர் என்பது பெரிய தொகை அல்ல. எல்லாவற்றிற்கும் அவள் எதிர்பார்த்ததை விட அதிக செலவானது. எப்போதும் அப்படித்தான் நடக்கும்.

    ஜிம்முக்கு ஒரு பரிசு வாங்க வெறும் 1.87 டாலர் மட்டுமே. அவளுடைய ஜிம். அவனுக்காக ஒரு நல்ல பரிசைத் திட்டமிடுவதில் அவள் பல மகிழ்ச்சியான நேரங்களைச் செலவிட்டிருந்தாள். அவனுக்குப் பொருத்தமான, அவனுக்குச் சொந்தமாவதற்குத் தகுதியான ஒரு சிறப்பான பரிசு அதுவாக இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

    அறையின் ஜன்னல்களுக்கு இடையே ஒரு கண்ணாடி இருந்தது. 8 டாலர் வாடகை கொண்ட அறைகளில் காணப்படும் கண்ணாடியை நீங்கள் ஒருவேளை பார்த்திருக்கலாம். அது மிகவும் குறுகலாக இருக்கும்; ஒரு நபர் தன்னைத்தானே ஒரு நேரத்தில் சிறிதளவே அதில் பார்க்க முடியும். இருப்பினும், ஒருவர் மிகவும் மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருந்து, மிக வேகமாக நகர்ந்தால், தன்னை முழுமையாகப் பார்த்துக்கொள்ள முடியும். மிகவும் மெலிந்த உடலமைப்பைக் கொண்ட டெல்லா, இந்தக் கலையில் கைதேர்ந்தவளாக இருந்தாள்.

    திடீரென்று அவள் ஜன்னலிலிருந்து திரும்பி அந்தக் கண்ணாடிக்கு முன் நின்றாள். அவளது கண்கள் பிரகாசமாக மின்னின, ஆனால் முகம் வெளிறிப்போயிருந்தது. அவள் விரைவாகத் தன் தலைமுடியை அவிழ்த்து, அதன் முழு நீளத்திற்கும் கீழே விழவிட்டாள்.

    ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான இரண்டு விஷயங்களை நினைத்து மிகவும் பெருமைப்பட்டனர். ஒன்று ஜிம்மிடம் இருந்த தங்கக் கடிகாரம். அது ஒரு காலத்தில் அவனது தந்தைக்குச் சொந்தமானது; அதற்கு முன்பு அவனது தாத்தாவுக்குச் சொந்தமானது. மற்றொன்று டெல்லாவின் தலைமுடி.

    அவர்களுக்கு அருகிலுள்ள அறைகளில் ஒரு ராணி வசித்திருந்தால், அந்த ராணி பார்க்கும் வகையிலேயே டெல்லா தன் தலைமுடியைக் கழுவி உலர்த்தியிருப்பாள். எந்தவொரு ராணியின் நகைகள் மற்றும் பரிசுகளை விடவும் தன் தலைமுடி மிகவும் அழகானது என்று டெல்லாவுக்குத் தெரியும்.

    அதே வீட்டில் ஒரு ராஜா வசித்திருந்தால், அவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் சரி, அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் ஜிம் தன் கடிகாரத்தைப் பார்த்திருப்பான். எந்தவொரு ராஜாவிடமும்

    அவ்வளவு மதிப்புமிக்க ஒரு பொருள் இல்லை என்பது ஜிம்முக்குத் தெரியும்.

    இப்போது டெல்லாவின் அழகான தலைமுடி, பழுப்பு நிற நீர்வீழ்ச்சியைப் போல மின்னிக்கொண்டு அவளைச் சுற்றி விழுந்து கிடந்தது. அது அவளது முழங்காலுக்குக் கீழே வரை நீண்டிருந்தது. அது அவளுக்கு ஒரு ஆடையைப் போலவே அமைந்திருந்தது.

    பிறகு அவள் பதற்றத்துடனும் வேகத்துடனும் அதை மீண்டும் தன் தலையில் சுருட்டி வைத்துக்கொண்டாள். ஒரு கட்டத்தில் அவள் சிறிது நேரம் அப்படியே நின்றாள்; அப்போது ஒன்று அல்லது இரண்டு கண்ணீர்த்துளிகள் அவள் முகத்தில் வழிந்தோடின.

    அவள் தன் பழைய பழுப்பு நிற கோட் மற்றும் தொப்பியை அணிந்துகொண்டாள். கண்களில் பிரகாசமான ஒளியுடன், அவள் விரைவாக வெளியேறி தெருவுக்குச் சென்றாள்.

    அவள் நின்ற இடத்தில் இருந்த பலகையில், “திருமதி சோஃப்ரோனி. அனைத்து வகையான தலைமுடி சார்ந்த பொருட்களும் கிடைக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது.

    டெல்லா இரண்டாவது மாடிக்கு ஓடினாள், மூச்சிரைக்க அங்கேயே நின்றாள். பருமனான உடலமைப்பும், மிக வெளுத்த நிறமும், உணர்ச்சியற்ற பார்வையும் கொண்ட திருமதி சோஃப்ரோனி அவளைப் பார்த்தார்.

    “என் தலைமுடியை நீங்கள் வாங்குவீர்களா?” என்று டெல்லா கேட்டாள்.

    “நான் தலைமுடியை வாங்குவேன்,” என்று திருமதி சோஃப்ரோனி கூறினார். “உன் தொப்பியைக் கழற்று, நான் அதைப் பார்க்கிறேன்.” பழுப்பு நிறக் கூந்தல் அருவியெனக் கீழே சரிந்து விழுந்தது.

    “இருபது டாலர்கள்,” என்று கூறியவாறே, திருமதி சோஃப்ரோனி அந்தக் கூந்தலின் எடையை அறிய அதைத் தூக்கிப் பார்த்தார்.

    “அதை எனக்கு உடனே கொடுத்துவிடுங்கள்,” என்று டெல்லா கூறினாள்.

    அடுத்த இரண்டு மணி நேரங்கள் மிக வேகமாக ஓடின. ஜிம்முக்கான ஒரு பரிசைத் தேடி அவள் ஒரு கடையிலிருந்து மற்றொரு கடைக்குச் சென்றுகொண்டிருந்தாள்.

    இறுதியில் அவள் அதைக் கண்டுபிடித்தாள். அது ஜிம்முக்காகவே பிரத்யேகமாகச் செய்யப்பட்டது போல இருந்தது. நகரத்திலுள்ள எல்லா கடைகளையும் அவள் தேடிப் பார்த்திருந்தாள்; ஆனால், அது போன்ற வேறொன்றும் எந்தக் கடையிலும் இல்லை.

    அது மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்ட ஒரு தங்கக் கடிகாரச் சங்கிலி. அதன் மதிப்பு, அது செய்யப்பட்டிருந்த உயர்தரமான மற்றும் தூய உலோகத்தில்தான் இருந்தது. அது மிகவும் எளிமையாகவும் ஆடம்பரமின்றியும் இருந்ததாலேயே, அது மிகுந்த மதிப்புமிக்கது என்பதை உணர முடிந்தது. சிறந்த பொருட்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும்.

    அது ‘அந்தக் கடிகாரத்திற்கு’ மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

    அதைப் பார்த்தவுடனேயே, அது ஜிம்முக்குத்தான் சொந்தமாக இருக்க வேண்டும் என்று அவள் உணர்ந்தாள். அது அவனது இயல்புக்கு ஏற்றதாக இருந்தது. அமைதி மற்றும் மதிப்பு — ஜிம் மற்றும் அந்தச் சங்கிலி ஆகிய இரண்டிலுமே அமைதியும் மதிப்பும் ஒருங்கே இருந்தன. அதற்காக அவள் இருபத்தியொரு டாலர்களைச் செலுத்தினாள். பின்னர், அந்தச் சங்கிலியையும் மீதமிருந்த எண்பத்தேழு சென்ட்டுகளையும் எடுத்துக்கொண்டு அவள் அவசரமாக வீடு திரும்பினாள்.

    கடிகாரத்தில் அந்தச் சங்கிலி இருந்ததால், ஜிம் தான் எங்கு இருந்தாலும் நேரத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கடிகாரம் மிகச் சிறந்ததாக இருந்தபோதிலும், அதற்கு இதுவரை ஒரு நல்ல சங்கிலி அமைந்திருக்கவில்லை. யாரும் பார்க்காத நேரத்தில்தான் அவர் அதை வெளியே எடுத்துப் பார்ப்பார்.

    டெல்லா வீட்டிற்கு வந்ததும், அவளது மனம் சற்று அமைதியடைந்தது. அவள் நிதானமாகச் சிந்திக்கத் தொடங்கினாள். தான் செய்த காரியத்தின் சோகமான அடையாளங்களை மறைக்க முயன்றாள். அன்பும் தாராள மனதுடன் கூடிய கொடையும் இணையும்போது, ​​அவை ஆழமான அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. அந்த அடையாளங்களை மறைப்பது எளிதல்ல, அன்பான நண்பர்களே—ஒருபோதும் எளிதல்ல.

    நாற்பது நிமிடங்களுக்குள் அவளது தலைமுடி ஓரளவு நன்றாகத் தெரிந்தது. குட்டையான முடியுடன், அவள் பார்ப்பதற்கு ஒரு பள்ளிச் சிறுவனைப் போல அழகாக இருந்தாள். அவள் நீண்ட நேரம் கண்ணாடியின் முன் நின்றாள்.

    “ஜிம் என்னைக் கொன்றுவிடாவிட்டால்,” என்று அவள் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள், “அவன் என்னைத் திரும்பப் பார்க்கும்போது, ​​பணத்திற்காகப் பாடி ஆடும் ஒரு பெண்ணைப் போல நான் இருப்பதாகச் சொல்வான். ஆனால் நான் என்ன செய்ய முடியும்—ஓ! ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட் பணத்தை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்ய முடியும்?”

    ஏழு மணிக்கு, ஜிம்முக்கான இரவு உணவு தயாராக இருந்தது.

    ஜிம் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை. டெல்லா கடிகாரச் சங்கிலியைத் தன் கையில் பிடித்துக்கொண்டு, அவர் வழக்கமாக நுழையும் கதவுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது ஹாலில் அவரது காலடிச் சத்தம் கேட்டது; ஒரு கணம் அவளது முகத்தில் இருந்த நிறம் மாறியது. அன்றாடச் சாதாரண விஷயங்களுக்காக அவள் அடிக்கடி மெதுவாகச் சிறிய பிரார்த்தனைகளைச் செய்வதுண்டு. இப்போது அவள் இப்படி வேண்டினாள்: “கடவுளே, நான் இன்னும் அழகாக இருக்கிறேன் என்று அவர் நினைக்கும்படி செய்.”

    கதவு திறந்தது, ஜிம் உள்ளே நுழைந்தார். அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார், முகத்தில் புன்னகை இல்லை. பாவம், அவருக்கு வயது இருபத்திரண்டுதான்—அதற்குள்ளேயே ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு! அவருக்கு ஒரு புதிய கோட் தேவைப்பட்டது; குளிரில் நடுங்கும் கைகளை மறைக்க அவரிடம் எதுவும் இல்லை.

    ஜிம் கதவுக்குள்ளேயே நின்றார். ஒரு பறவைக்கு அருகில் இருக்கும் வேட்டை நாயைப் போல அவர் அமைதியாக இருந்தார். அவரது கண்கள் டெல்லாவை விசித்திரமாகப் பார்த்தன; அவற்றில் அவளால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாவனை இருந்தது. அது அவளுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. அது கோபமோ, ஆச்சரியமோ அல்லது அவள் எதிர்பார்த்த வேறெதுவோ அல்ல. அவர் வெறுமனே அந்த விசித்திரமான பாவனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    டெல்லா அவரை நோக்கிச் சென்றாள். “ஜிம், அன்பே,” என்று அவள் கூவினாள், “என்னை அப்படிப் பார்க்காதே. நான் என் தலைமுடியை வெட்டி விற்றுவிட்டேன். உனக்கு ஒரு பரிசு கொடுக்காமல் என்னால் கிறிஸ்துமஸைக் கழிக்க முடியவில்லை. என் தலைமுடி மீண்டும் வளர்ந்துவிடும். அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டாய் அல்லவா? என் தலைமுடி மிக வேகமாக வளரும். இது கிறிஸ்துமஸ் காலம், ஜிம். நாம் மகிழ்ச்சியாக இருப்போம். உனக்காக நான் எவ்வளவு அருமையான—எவ்வளவு அழகான பரிசை வாங்கியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியாது.”

    “நீ உன் தலைமுடியை வெட்டிவிட்டாயா?” என்று ஜிம் மெதுவாகக் கேட்டான். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள அவன் சிரமப்படுவது போல் தோன்றியது; அவனுக்கு அது முழுமையாகப் புரியவில்லை என்றே தோன்றியது.

    “வெட்டி விற்றுவிட்டேன்,” என்று டெல்லா கூறினாள். “இப்போது நான் உனக்குப் பிடிக்கவில்லையா? நான் அதே டெல்லாதான், ஜிம். தலைமுடி இல்லாவிட்டாலும் நான் அதே ஆள்தான்.”

    ஜிம் அறையைச் சுற்றிப் பார்த்தான்.

    “உன் தலைமுடி போய்விட்டது என்கிறாயா?” என்று அவன் கேட்டான்.

    “நீ அதைத் தேட வேண்டியதில்லை,” என்று டெல்லா சொன்னாள். “அது விற்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறேன்—விற்கப்பட்டுப் போய்விட்டது. இது கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு, அன்பே. என்னிடம் அன்பாக இரு, ஏனென்றால் உனக்காகத்தான் நான் அதை விற்றேன். என் தலையில் உள்ள முடிகளை ஒருவேளை எண்ணிவிடலாம்,” என்று அவள் சொன்னாள், “ஆனால் உன் மீதான என் அன்பை யாராலும் ஒருபோதும் எண்ணிவிட முடியாது. நாம் இரவு உணவு சாப்பிடலாமா, ஜிம்?”

    ஜிம் தன் கைகளால் டெல்லாவை அணைத்துக்கொண்டான். பத்து வினாடிகளுக்கு நாம் வேறு பக்கம் பார்ப்போம். வாரத்திற்கு எட்டு டாலர்களா அல்லது வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர்களா—அவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? யாராவது உங்களுக்குப் பதில் சொல்லலாம், ஆனால் அது தவறாகத்தான் இருக்கும். ‘மகி’ (Magi) எனப்படும் ஞானிகள் மதிப்புமிக்க பரிசுகளைக் கொண்டு வந்தார்கள், ஆனால் அந்தப் பரிசுகளுக்குள் இது இருக்கவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது விரைவில் விளங்கும்.

    தன் கோட் உள்ளிருந்து, காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு பொருளை ஜிம் எடுத்தான். அதை அவன் மேஜையின் மீது போட்டான்.

    “நான் சொல்வதை நீ புரிந்துகொள்ள வேண்டும், டெல்ல்,” என்று அவன் சொன்னான். “தலைமுடி வெட்டுவது போன்ற எந்த விஷயமும் உன் மீதான என் அன்பைக் குறைத்துவிடாது. ஆனால் அதை நீ திறந்து பார்த்தால், நான் உள்ளே வந்தபோது என்ன உணர்ந்தேன் என்பது உனக்குத் தெரியும்.”

    வெள்ளையான விரல்கள் காகிதத்தை அகற்றின. பிறகு ஒரு மகிழ்ச்சிக் கூச்சல்; அதைத் தொடர்ந்து கண்ணீர்.

    ஏனென்றால் அங்கே அந்தச் சீப்புகள் இருந்தன—டெல்லா ஒரு கடையின் ஜன்னலில் பார்த்து நீண்ட நாட்களாக விரும்பிய சீப்புகள் அவை. அழகான சீப்புகள், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டவை, அவளுடைய அழகான தலைமுடிக்கு மிகவும் பொருத்தமானவை. அவற்றை வாங்குவதற்குத் தன்னிடம் போதிய பணம் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ளும் எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் அவள் அவற்றைப் பார்த்திருந்தாள். ஆனால் இப்போது அவை அவளுடையவை; ஆனால் அவளுடைய கூந்தலோ போய்விட்டது.

    இருப்பினும், அவள் அவற்றை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்; இறுதியில் நிமிர்ந்து பார்த்து, “ஜிம், என் முடி மிக வேகமாக வளருமே!” என்று கூறினாள்.

    பிறகு அவள் உற்சாகத்தில் துள்ளி எழுந்து, “ஓ, ஓ!” என்று கூவினாள்.

    ஜிம் இன்னும் அவளுடைய அந்த அழகான பரிசைப் பார்க்கவில்லை. அவள் அதைத் தன் திறந்த உள்ளங்கையில் வைத்து அவனிடம் நீட்டினாள். அவளுடைய அன்பும் பாசமும் கலந்த மனதின் ஒளியைப் போலவே, அந்தத் தங்கமும் மென்மையாக ஜொலிப்பது போல் தோன்றியது.

    “இது மிகச் சரியாக இல்லையா, ஜிம்? இதைத் தேடி நான் நகரம் முழுவதும் அலைந்தேன். இனி நீ ஒரு நாளைக்கு நூறு முறையாவது உன் கடிகாரத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். உன் கடிகாரத்தை என்னிடம் கொடு; அவை இரண்டும் ஒன்றாக எப்படி இருக்கின்றன என்று நான் பார்க்க வேண்டும்.”

    ஜிம் அமர்ந்து புன்னகைத்தான்.

    “டெல்லா,” என்று அவன் சொன்னான், “நமது கிறிஸ்துமஸ் பரிசுகளை இப்போதைக்கு எடுத்து வைத்துவிடுவோம்; சிறிது காலம் அப்படியே இருக்கட்டும். இப்போது பயன்படுத்துவதற்கு அவை மிகவும் அருமையானவை. அந்தச் சீப்புகளை வாங்குவதற்கான பணத்தைப் பெற நான் என் கடிகாரத்தை விற்றுவிட்டேன். இப்போது நாம் இரவு உணவைச் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்.”

    ‘மேகி’ (Magi) என்பவர்கள், உங்களுக்குத் தெரிந்தபடி, ஞானிகள்—மிகவும் சிறந்த ஞானிகள்—அவர்கள் பிறந்த குழந்தையான கிறிஸ்துவுக்குப் பரிசுகளைக் கொண்டு வந்தவர்கள். கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய முதல் நபர்கள் அவர்களே. ஞானிகளாக இருந்ததால், அவர்கள் வழங்கிய பரிசுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி ஞானம் நிறைந்தவையாகவே இருந்தன. ஆனால் இங்கே நான் உங்களுக்கு ஞானம் இல்லாத இருவரின் கதையைச் சொல்லியிருக்கிறேன். ஒருவருக்கொருவர் பரிசுகளை வாங்குவதற்காக, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான மிக மதிப்புமிக்க பொருளை விற்றுவிட்டனர். ஆனால் இன்றைய காலத்து ஞானிகளுக்கு நான் ஒரு கடைசி வார்த்தையைச் சொல்ல விரும்புகிறேன்: பரிசுகளை வழங்குபவர்கள் அனைவரிலும், இவர்களே மிகவும் ஞானம் மிக்கவர்கள். பரிசுகளை வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவரிலும்…

    Share
  • காதலிக்க நேரமுண்டு – 2

    காதலிக்க நேரமுண்டு – 2

    செ. கோட்டாளம்

    ஒவ்வோராண்டும் நாங்களும் எங்கள் சித்திமக்களும் மாமாமார்மக்களும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றாகச்சேர்ந்து கும்மாளமிட்டு கோடையை உல்லாசமாக கழிப்பது வழக்கம். இந்த ஆண்டு என் இளைய மாமாவின் வீட்டுக்கு செல்லும் முறையானது. ஆனால் என் தங்கை இனி போகவேண்டாம் என்று அம்மா தடுத்துவிட்டார். எனவே நான் மட்டும் கிளம்பி மாமாவீட்டுக்கு சென்றேன். நான் வண்டியிலிருந்து இறங்கியதும் வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்த என் மாமன்மகள் என்னை வரவேற்றாள். முகநிறைந்த மகிழ்ச்சியுடனும் வாய்நிறைந்த புன்னகையுடனும் ‘வாருங்கள், அத்தான்’ என்று அவள் சொன்னது என்னையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் இருந்ததாக உணர்ந்தேன். அவளை சில ஆண்டுகளாக நான் பார்த்ததில்லை என்பது அப்போதே என் நினைவுக்கு வந்தது. சென்ற ஆண்டு என் சித்திவீட்டுக்கு எல்லாரும் வந்திருந்தபோது அவள் வரவில்லை. ஓ, என் தங்கையை இப்போது அம்மா தடுத்துவிட்டதுபோல் என் அத்தையும் இவளை போகவேண்டாம் என்று சொல்லியிருப்பார்.

    உள்ளே ஓடிச்சென்று தன் அம்மாவிடம் நான் வந்திருப்பதை சொன்னாள். அவள் துள்ளிக்குதித்து ஓடிய விதம் என்னை என்னவோ செய்தது. அதன்பிறகே எனக்கு உறைத்தது. அவள் தாவணி போட்டிருந்தாள். அதுவரை பாவாடைச்சட்டையில் சிறுமியாகவே பார்த்த நான் அப்போதே அவளை ஒரு இளம்பெண்ணாக கண்டேன். அவள் ஓடியபோது தாவணியின் முந்தானை காற்றில் படபடத்த விதமே என்னை அவ்வாறு அலைக்கழித்தது. அந்தக்கணத்திலே நான் முந்தானைதாசனாகிவிட்டதை அப்போது உணரவில்லை.

    எல்லாரும் வந்துவிட்டபின்னும் எனக்கு மாமன்மகளுடன் பேசுவதும் அவளுடன் விளையாடுவதுமே அதிக ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததை உணர்ந்தேன். அவளுக்கு பலவிதங்களில் வேடிக்கைகாட்டி சிரிக்கவைத்தேன். அவளும் என்னுருகில் இருப்பதை விரும்பியதாக தோன்றியது. தனிமையில் அவளுடன் பேச வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவள் உடலழகை தொலைவிலிருந்து பார்த்து மகிழ்ந்தேன். அருகிலிருக்கும்போது தொட்டுப்பேச முயன்றேன். ஆனால் நான் அவளுடன் நெருக்கமானபோதெல்லாம் அத்தை ஏதாவது சாக்கை வைத்து அவளை அழைத்து ஏதாவது வேலைகொடுத்துவிடுவது வழக்கமானது. முறைப்பெண்ணையும் முறைப்பையனையும் நெருங்கவிடுவது ஆபத்தாக முடியலாம் என்று அவர் எண்ணுவது தெளிவாகவே எனக்கு புரிந்தது. ஆனால் அப்படி நெருங்கவே எனக்கு மிகவும் ஆசையாயிருந்தது!

    எந்தப்பெண்ணாலும் கவரப்படாத நான் இவள்மீது எப்படி கவர்ச்சியுற்றேன் என்பது எனக்கு விளங்கவில்லை. இவ்வாறிருந்தபோது ஒருநாள் திகில்பாட்டி மாமாவீட்டுக்கு வந்தது. திகில்பாட்டி என்பது என் அம்மாவின் சித்தி. பணக்கார தாத்தாவுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டது. ஒரு பையன் பிறந்தபின் சில ஆண்டுகளில் தாத்தா இறந்துவிட்டார். அந்த பையன் ஆளாகி தாத்தாவின் வியாபார மேலாண்மையையும் சொத்துப்பராமரிப்பையும் பாட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டபின் பாட்டி உல்லாசமாக ஊர்சுற்றிக்கொண்டிருந்தது. முன்னறிவிப்பில்லாமல் திடீரென்று யார்வீட்டிலாவது காரில் வந்து இறங்கும். தடால்புடாலென்று பேசி எல்லாரையும் அதட்டிவிட்டு வந்ததுபோலவே திடீரென்று சென்றுவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாருக்கும் அஞ்சாமல் தன் மனத்திலுள்ளதை அப்படியே போட்டு உடைத்துவிடும். பிள்ளைகளுக்கு ஏனோ இவரைப்பற்றி கொஞ்சம் அச்சம். அதனாலே நாங்கள் திகில்பாட்டி என்று பெயர்வைத்திருக்கிறோம். ஆனால் பெரியவர்கள் அது வந்தவுடனே தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை எதுவாயினும் அப்படியே போட்டுவிட்டு திகில்பாட்டிக்கு சேவைசெய்ய போய்விடுவார்கள். திகில்பாட்டி வீட்டிலிருக்கும்போது அதனுடன் பேசுவதைத்தவிர, அதாவது அது பேசுவதை கேட்பதைத்தவிர, வேறு எந்த வேலையும் நடக்காது.

    மாமாவீட்டுக்கு திகில்பாட்டி வந்தபோது நானும் சில தம்பிமாரும் தெருவில் மட்டையாடிக்கொண்டிருந்தோம். அது காரிலிருந்து இறங்கியதும் நாங்களெல்லாம் ‘ஐ…யா, பாட்டி!’ என்று (பொய்யான) மகிழ்ச்சியுடன் சென்று வணக்கமிட்டோம். மட்டையாட்டத்துக்கு முற்றுப்புள்ளி. பாட்டி ஒவ்வொருவரையும் விசாரித்துக்கொண்டு சிலருக்கு பாராட்டுகளையும் சிலரின் அம்மாவையோ அப்பாவையோ பற்றிய ஏதாவது குறைகளையும் வாரிவழங்கிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது. நாங்களும் பின்தொடர்ந்தோம். பாட்டி வந்திருக்கும்போது விளையாடிக்கொண்டிருந்தால் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு வசவு கிடைக்கும்.

    அத்தை பாட்டியை மிகவும் ஆர்ப்பாட்டமாக வரவேற்று அமரச்சொன்னார். மாமாவை வயலிலிருந்து விரைவாக வரும்படி அலைபேசியில் சொல்லிவிட்டு பால்வாங்கிவர ஒரு பொடியனை விரட்டினார். சமையலறையிலிருந்த மகளை அழைத்து பாட்டிக்கு வணங்கஞ்செய்யவைத்தார். அவளைப்பார்த்த பாட்டி ‘அட, பெரியவளாக வளர்ந்துவிட்டாளே! அப்படியே அவள்பெரியத்தையை உரித்துவைத்திருக்கிறாள்’ என்றது. நான் சற்றே அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். அவளுக்கு பெரியத்தை என் அம்மா! அப்போதே எனக்கு பல உண்மைகள் உறைத்தன. என் மாமன்மகள் என் அம்மைவைப்போலவே இருந்தாள். இந்த உருவ ஒற்றுமை என் உள்ளுணர்வுகளில் பட்டதாலே இவள்மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுவயதில் என் அம்மா இவளது இப்போதைய தோற்றத்திலே இருந்திருக்கவேண்டும்.

    இதை உணர்ந்ததும் எனக்கு அவள்மீதிருந்த ஆசை காதலாகவே மலரத்தொடங்கியது. சிறுவயதுள்ள அம்மாவுடன் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையெல்லாம் இப்போது நனவாகத்தொடங்கியது. இவளுடன் சிரித்துப்பேசுவதை என் அம்மா சிறுவயதினராயிருந்தபோது அவருடன் பேசுவதைப்போலவே எண்ணிக்கொண்டேன். அவளும் என்னுடன் பேசுவதை மிகவும் விரும்புவதாக தோன்றியது.

    அவளுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவ்வாறான வாய்ப்பை உண்டாக்க அவளது செயல்களை கவனித்தேன். அவள் மொட்டைமாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கவரும் நேரம்பார்த்து நான் மாடிப்படியில் அமர்ந்து  ஒரு செய்தித்தாளை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாசாங்குசெய்தேன். அவள் வரும் கொலுசொலி கேட்டபோதே மகிழ்ந்தேன். ஆனால், ‘விரைவில் வாடி. மாவாட்டவேண்டும்’ என்ற அத்தையின் குரல் என் ஆசையில் நீரூற்றியது. அவள் அமைதியாக என்மீது ஒரு குறும்புப்புன்னகையை வீசிவிட்டு சென்றாள்.

    இந்த அத்தையையாவது சமாளிக்கலாம். ஆனால் என் மச்சான் இருக்கிறானே! என் எண்ணம் அவனுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தது. நான் அவளை எங்காவது ஓரங்கட்டினால் இவன் வந்து இடையில் அமர்ந்துகொண்டான். மாமன்மகளுடன் நெருங்கி அமர தயங்கி சற்று இடைவெளிவிட்டே நான் அமர்வது வழக்கம். இவன் அந்த இடைவெளியில் இருவரையும் உரசிக்கொண்டு அமர்ந்துகொள்வான். எனக்கு அவன்மீது எரிச்சலாக வந்தது. ‘இரு, இரு. உனக்கு இருக்குடா! என்றைக்காவது ஒருநாள் நான் இவளையே கட்டிக்கொள்வேன். அன்றைக்கு உன்னை வெளித்தள்ளி இவளை உள்வைத்து கதவை தாழிட்டுக்கொள்கிறேன்’ என்று மனத்துள் கருவிக்கொண்டேன்.

    Share
  • முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்!

    முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈழத்தின் கிழக்கில் எழுந்த தொருமுத்து
    ஆழவே தமிழில் மூழ்கிய நல்முத்து
    வாழ்வையே பணியாய் ஆக்கியே நின்று
    வரமெனவே மாநிலத்தில் வந்தந்த முத்து

    தந்தைதாய் வைத்த பெயர் மயில்வாகனம்
    தவவாழ்வைத் தேர்ந்ததனால் பெயர் மாறினார்
    வெள்ளை நிறமல்லிகையாய் இறை நாடினார்
    விபுலானந்த அடிகளாய் நிலை மாறினார்

    பட்டங்கள் பெற்றார் பதவிகள் பெற்றார்
    பற்றற்ற வாழ்வையே பற்றியே நின்றார்
    பற்றற்று நின்றாலும் பசுந்தமிழைப் பற்றினார்
    பாடினார் பேசினார் பலநூல்கள் எழுதினார்

    முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்தவரும் எழுந்தார்
    முத்தமிழை வாழ்விலவர் ஏந்தியே வாழ்ந்தார்
    பண்தொட்டுப் பலவாய்வு செய்துமவர் நின்றார்
    பலபேரும் வியக்கவே யாழ்நூலைத் தந்தார்

    அடிகளார் கவிதைகள் அனைத்துமே சிறப்பு
    வெள்ளை நிறமல்லிகையே மேலதிகச் சிறப்பு
    அடிகளார் அடையாளம் இக்கவிதை என்றால்
    அதைமறுத்து எவருமே உரைக்க வரமாட்டார்

    ஆசானாய் இருந்தார் அதிபராய் ஆனார்
    அதியுயர்வாய் பல்கலைக்கழகப் பேராசான் ஆகினார்
    முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்
    அர்த்தமுடன் வாழ்ந்தார் அவரெங்கள் சொத்தே

    கல்வியைக் கொடுப்பதற்கும் கடும்பாடு பட்டார்
    பலகல்விக் கூடங்களை அமைத்தவரும் நின்றார்
    அடிகளார் அரும்பணியால் அனைவருமே கற்றார்
    அறமோடு ஆசாரம் அங்கவரும் கொடுத்தார்

    பண்போடு கல்வி பக்தியுடன் கல்வி
    பாமரப் பிள்ளைகளும் படிப்பதற்கு வசதி
    இத்தனையும் இணைய கல்வியினைக் கொடுத்தார்
    முத்தமிழின் வித்தகர் சுவாமி விபுலானந்தர்!

    Share
  • கழுவேற்றம்!

    பண்டைய தமிழர்களின் வாழ்வியலின் எச்சமாக வாழும் சாட்சியாக, தமிழகத்தில் இருக்கும் கொலைக்கருவியான கழுமரங்களில் காளிங்கராயன் கால்வாய் அருகில் அமைந்துள்ள காத்தவராயன்  கோவிலில் உள்ள கழுமரமும் ஒன்று. மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களை “கழுவில் ஏற்றுதல்” என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்தது. மரத்தால் செய்யப்பட்டிருப்பதனால்தான் அதனைக் ‘கழுமரம்’ என்று குறிப்பிட்டனர். இரும்பால் ஆன கழுவும் பழக்கத்தில் இருந்துள்ளது. அதனை ‘வெங்கழு’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கழுமரம் குறித்து, வரலாற்றில் நெடிய செய்திகளும் கோவில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் உள்ளன.  கொங்குநாட்டில் ஈரோடு நகர்  காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் பனை மரத்தால் ஆன “கழுமரம்” உள்ளது . இக்கழுமரத்தை இங்குள்ள மக்கள்  “காத்தவராயன்” என்ற பெயரில் வழிபட்டுவருகின்றனர். ஒரு பீடத்தில் உள்ள அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருக்கின்றன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள். சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்கிறார்கள். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படித்தான் கடவுளாகியிருக்கிறது. இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள ‘அய்யனாரப்பன் கோவிலில்’ உள்ளது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.

    கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி பல கதைகள் உள்ளன.

    கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘மூன்றாம் வ்லாட் ட்ராகுலா’ என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு ‘கழுவேற்றும் வ்லாட்’ (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு. இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார் என்ற கதைகளும் உள்ளன.

    திருஞான சம்பந்தர் அறையணிநல்லூர் ஈசவசுனை வந்த போது, சமணர்கள் கருவறைக்கு முன்னே பாறங்கல்லை வைத்து வழியடைத்தார்கள். வாயிலையும் மூடி அடைத்தார்கள். திருஞான சம்பந்தர் சிவன நினைந்து பாடிய பின், வாயில் திறந்தது. பாறாங்கல் விலகி வழிவிட்டது. அறையணிநாதரை வழங்கி வழிபட்டார். இந்த விவரம் அறிந்த அரசர் சமணர்களை கழுவேற்றச் செய்தார் என்பார்கள். கழுமரம் மணலூர் பேட்டை சாலையில் திருக்கோவிலூரில் இருந்து 8.கி.மீ தூரத்தில் உள்ளது. கழுவன் குளம் கிராமத்திலும், விழுப்புரம் சாலை 1கி.,மீ தொலைவில் உள்ள அங்குதான் இந்நிகழ்ச்சி நடந்ததாகச் சொல்கிறார்கள்.

    கழுவேற்றம் நடந்ததா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் இது தொடர்பான ஓவியங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகுமாம்.

    தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள் .

    நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது. மக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்தக் கழுமரங்களில் உறைந்து, தெய்வத்தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.

    பொங்கலுடன் ஆட்டுக் குறுதியை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது. கழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்விட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    களவு புரியும் போலித் துறவிகளைக் கழுவேற்றுவதை,

    “கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்

    கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்”

    என்கிறார்  திருமூலர்.

    (திருமந்திரம் பாடல் எண் : 1655)

    தமிழகத்தில் மட்டுமின்றி, தொன்மையான கிரேக்க, உரோமானிய  நாகரிகங்களிலும் தொன்று தொட்டு இவ்வழமைகள் இருந்திருக்கலாம்.

    ‘வாதனையின் கழுமரம்’ என்ற சொற்றொடர், இயேசுவுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கிரேக்க இலக்கியங்களில், இசுடவரசு என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து அறிய முற்பட்டால், அது, குறுக்குச் சட்டம் ஏதும் இல்லாததொரு செங்குத்தான  கம்பம் என்ற பொருளில் வருவதை அறியலாம். இயேசுவை ஆணியால் அறைவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு அப்போசுதலர்களான பேதுருவும் பவுலும் சீலோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; இது, எவ்விதக் குறுக்குச் சட்டமும் இல்லாத ஒரே செங்குத்தான கம்பம் என்பதைக் காட்டுகிறது.(அப்போசுதலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) இலத்தீனத்தில் -கிருக்சு, கிரேக்கத்தில் இசுடவரசு  (மத்தேயு  27:40 – பைபிள்) .

    லூயிசு மற்றும் சார்ட் என்பவர்களுடைய இலத்தீன் அகராதி கிருக்சு என்ற வார்த்தைக்கு குற்றவாளிகள் அறையப்படுவதற்கோ தொங்கவிடப்படுவதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு மரத்தைக் குறிக்கிறது.

    நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெப்புநோய் தீர்த்த திருஞான சம்பந்தரின் சைவ சமயம் தழுவிட, 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

    “மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி

    துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்

    முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்

    கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற”

     

    “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்

    ஆதம் இல்லி அமணொடு தேரரை

    வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?”

    என்று சம்பந்தர் தனது மதுரைப் பாடல்களில் கூறுகிறார்.

    சைவம், சமணம், வைணவம்,கிறித்துவம், இசுலாமியம், புத்தம் என  அனைத்து மதங்கள் கடந்து வந்த பாதையிலும் இது போன்ற கொடுந்தண்டனைகள் அதன் வழிநெடுக உள்ள இரத்தக் கரைகளே சாட்சிகளாய்ப் படிந்திருக்கின்றன என்பதே நிதர்சனம்.. ஆம்.குற்றங்களுக்கான இதுபோன்ற கொடுமையான தண்டனைகள் அனைத்துலகிலும் வரலாற்றுச் சான்றுகளாக நிற்கின்றன !

    முன் காலத்தில் பெருங்குற்றம் புரிந்தவர்களுக்கு,  கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், வாளினால் தலையைத் துண்டித்தல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், யானையால் மிதிக்கவிட்டுக் கொல்லுதல், வெட்டவெளியில் தூக்கில் இட்டு உடலை விலங்குகளுக்கு இரையாக்குதல், அல்லது  உயிருடன் விலங்கிற்கு இறையாக்குதல், உயிருடன் மண்ணிற்குள் புதைத்தல், நஞ்சிட்டுக் கொல்லுதல்,  தீயிட்டுக் கொளுத்துதல் என்று பல வகையில் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

    மனித உரிமைகளைக் காக்கும்பொருட்டு உலக நாடுகள் அனைத்தும், குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, “எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான, சிறுமைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது” என்று  உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ஆம் விதியாகக் கையெழுத்திட்டுள்ளன. இது பெரும்பாலும் நடைமுறையில் இருந்தாலும், எங்கோ ஒரு சில நாடுகளில் அவரவர்களின் வழமைக்கேற்ப தனிப்பட்ட சட்டங்கள்  அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு  முற்பட்ட இதுபோன்ற தண்டனை முறைகளையும் இன்றைக்கும்  நடைமுறைப்படுத்தி வருவது வருந்தத்தக்கது..

     

    Share
  • அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி!

    அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பண்டிகை அனைத்தும் பண்பாட்டைக் காட்டும்
    பக்தியும் பக்குவமும் அதுவுணர்த்தி நிற்கும்
    வருடத்தில் வருகின்ற பண்டிகை அனைத்தும்
    மக்களது வாழ்வியலில் முக்கியமே  ஆகும்

    வருடத் தொடக்கத்தை கொண்டாடி மகிழ்வார்
    அரைவருடம் முடிந்ததும் ஆடிவந் தமையும்
    ஆடிப் பிறப்பை அகமிருத்தி அனைவருமே
    அரைவருடத் தொடக்கத்தை விழாவாக்கி மகிழ்வார்

    ஆதவன் தெற்குத்திசை அடிவைத்து நிற்பான்
    அவன் வெப்பந்தணிந்து குளிர்ச்சியங்கே அமரும்
    மக்களும் மகிழ்வர் கொண்டாட்டம் தொடங்கும்
    ஆடிப் பிறப்பங்கு ஆனந்தம் கொடுக்கும்

    அம்மனுக்கு விழாவெடுத்து அனைவருமே மகிழ்வார்
    ஆடியிலே கூழ்காய்ச்சி அம்மனுக்குப் படைப்பர்
    ஊரெல்லாம் கூடும் உறவுகளும் சேரும்
    கூழுண்டு மகிழ்வர் கொண்டாட்டம் பெருகும்

    ஆடியிலே வருகின்ற செவ்வாயும் சிறப்பு
    ஆடியிலே வருகின்ற வெள்ளியும் சிறப்பு
    ஆடிப்பூரம் சிறப்பு அனைத்துமே சிறப்பு
    பீடைமிக்க ஆடியல்ல பீடுடைய ஆடியே

    அபொழுது ஈழத்தில் ஆடிக்கு விடுதலை
    இப்பொழுது விடுதலையை எடுத்தெறிந்து விட்டார்
    என்றாலும் ஆடிக்கூழ் அம்மனுக்குப் படைத்து
    இல்லாத விடுதலையைப் பொய்யாக்கி விட்டார்

    பட்டம் விடுவார்கள் பலபேரும் மகிழ்வார்
    பனங்கட்டி பயறோடு கூழ்காய்சிச் சுவைப்பார்கள்
    கொழுக்கட்டை அவிப்பார்கள் கொண்டாடி மகிழ்வார்கள்
    மக்களது மனமெல்லாம் ஆடியே அமர்ந்திருக்கும்

    மாடியிலே இருப்பாரும் கூழ்காய்ச்சி மகிழ்வார்
    மண்குடிசை இருப்பாரும் கூழ்காய்ச்சி மகிழ்வார்
    ஆடியெனும் மாதமது அமங்கலமே அல்ல
    அம்மனது அருள்நிறைந்த மாதமதே ஆடி!

    Share
  • அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

    அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வாடாத மல்லிகையாய் ஜானகி வந்தார்
    வரமாக வந்தாரே தமிழிசைக்கு அம்மா
    தேனான குரலாலே பாடினார் அம்மா
    தித்திக்கப் பாடினார் ஜானகி அம்மா

    ஊனுருக்க பலபாடல் அவரெமக்குந் தந்தார்
    உளம் இனிக்க உணர்வாக அவரீந்துநின்றார்
    வாழ்வதனை இசையாக்கி வாழ்ந்தாரே அம்மா
    வானவர்க்குப் பாடுதற்குச் சென்றுவிட்டார் அம்மா

    கலைவாணி குயிலாய் இருந்தாரே அம்மா
    கான சரஸ்வதியாய் ஆகிநின்றார்  அம்மா
    பலவிருதை பாராட்டைப் பெற்றாரே அம்மா
    பண்பாடி மனமெல்லாம் அமர்ந்தாரே அம்மா

    சிங்கார வேலனைத் தொட்டாரே அம்மா
    திரையுலகில் சிறகடித்துப் பறந்தாரே அம்மா
    அன்னக்கிளி சின்னகண்ணன் அமுதமாய் தந்தார்
    செந்தூரப் பூவாகத் திகழுகிறார் இசையில்

    பன் மொழியில் பாடினார் ஜானகியம்மா
    மென் மொழியில் பாடினார் மேதினியேவியக்க
    புன் முறுவல் முகத்தைக் காணமுடியாமல்
    இன்னிசையும் இப்போ ஏங்கி அழுகிறதே

    ஆயிரக் கணக்கில் அவர்பாடி நின்றார்
    அத்தனையும் இசையுலகின் சொத்தாகி இருக்கு
    இசையெனும் மொழியை ஏந்திநின்றார் அம்மா
    அவரிசையைக் கேட்பதற்கு அழைத்துவிட்டான் இறைவன்

    இசையுலகம் அழுகிறது இசைப்பிரியர் அழுகின்றார்
    எங்களம்மா ஜானகி இசையாகக் கரைந்துவிட்டார்
    அசையாத மனங்களையும் அசைத்திடுவார் இசையாலே
    அமருலகு சென்றுவிட்டார் அவரிசையை அளிப்பதற்கு!

    Share
  • எஸ்.ஜானகி – மனங்களில் ஒளிரும் மணிதீபம்

    எஸ்.ஜானகி – மனங்களில் ஒளிரும் மணிதீபம்

    – அண்ணாகண்ணன்

    சொல்லுக்கு உயிரூட்டி, சூழலுக்கு உணர்வூட்டி, நெஞ்சுக்கு அமுதூட்டிய நினைவுப் பறவை, ஆழ்மனத்தை மீட்டிய ஆலய மணி, அப்பாவிக் குரலால் கொள்ளை கொண்ட ஆயிரம் தாமரை, ஆலாபனைகளால் காற்றைக் கட்டி ஆண்ட ஆகாய கங்கை, பாத்திரமாகவே மாறிச் சிறகை விரித்த சிறிய பறவை, பாவங்களைக் குழைத்து ஊட்டிய ஜீவ நாதம், குழந்தையாகவும் குமரியாகவும் கொஞ்சி, அருவியாகப் பொழிந்த ஆகாசவாணி, குரலுக்கு மூப்பில்லாத கோகிலம், தேயாத புகழ்கொண்ட தேவதை, பிரதி செய்ய முடியாத அசல், சுதி பிசகாத சுடர், மக்கள் மனங்களில் ஒளிரும் மணிதீபம், சாவே இல்லாத சஞ்சீவி, அவர் எத்திக்கும் புகழ்மணக்கும் எஸ்.ஜானகி.

    #SJanaki #எஸ்ஜானகி #Janaki #ஜானகி

    Share
  • ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்!

    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    ஆடை  இன்றி  அவனியில்  பிறந்தோம்
    ஆசை இன்றி பிறந்தவர் இல்லை
    ஆசை என்னும் தொட்டிலில் அனைவரும்
    ஆடி ஆடியே அவனியில் உழல்கிறோம்

    கருவில் தொடரும் ஆசை என்பது
    பெருகிப் பெருகிப் பெருங்கடல் ஆகுது
    பெருங்கடல் எழுகின்ற பேராசை அலைகள்
    எழும்பிக் குதித்து சதிராட்டம் போடுது

    மண்ணில் ஆசை பெண்ணில் ஆசை
    மணி மகுடத்தைச்   சூடவும்   ஆசை
    எண்ணில் அடங்கா ஆசைகள் எழுந்து
    எம்மை இழுத்து இன்னற்குள் வீழ்த்துதே

    வரமும் உரமும் பெற்றவர் பலரும்
    அனைத்தும் இழந்தனர் அவரது ஆசையால்
    காவியம் கதைகள் ஆசையின் அவலம்
    செப்பிடும் திறத்தை சிந்தையில் வைப்போம்

    மாபெரும் மன்னர் மடிந்தனர் ஆசையால்
    மாபெரும் ராஜ்ஜியம் அழிந்தது ஆசையால்
    ஆளுமை மிக்கவர் அழிவதும் ஆசையால்
    ஆசையை அணைத்தால் அனைவர்க்கும் அழிவே

    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    அப்போதே சொன்னார் திருமூலச் சித்தர்
    அப்போது சொன்னது எப்போதும் பொருந்தும்
    சித்தரின் வாக்கைச் சிந்தையில் இருத்துவோம் !

    Share
  • கன்னித்தாய் (சிறுகதை)

    சந்திரன்

    அடையாளம் தெரியாத ஏதோ ஒன்று வந்து கொத்துக்கொத்தாய் மக்களை வாரிச்சென்ற வடுகூட இன்னும் மறையவில்லை. அதற்குள் அந்த ஊரிலிருந்த மக்களின் கண்களைக் குறிவைத்து வேகமாகப் பரவியது அந்நோய். கண்ணைக் குறிவைத்துத் தாக்கியதால் அதற்குக் கண்ணோய் என்ற பெயரே நிலைபெற்று விட்டது. வெயில் வேறு நூறு  டிகிரியைத் தாண்டியே வாரக்கணக்கில் தொடர்ந்தது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய மக்களில் ஒரு பகுதியினர் புன்னை மரத்தடியே கதியென்று இருந்தனர்.

    அப்படிப் புன்னை மரநிழலில் அடைக்கலம் புகுந்தவர்கள் “சும்மா ஏன் இருக்க வேண்டும்” என்று தீவிர ஆலோசனையில் மூழ்கினர்.

    விளைவு: ஆளாளுக்குக் கதைசொல்லிகளாக மாறினர்.

    இப்படி ஒரு வழியாகக் கதைசொல்லுவது என்ற முடிவிற்கு அந்த ஊர் மக்கள் வந்தாலும் அங்கு மேலும் ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. “எல்லோரும் ஒரே நேரத்தில் கதைசொல்ல ஆரம்பித்துவிட்டால் யார்தான் கதை கேட்பது?” என்று.

    விளைவு: “எல்லோரும் கதைவிடமுடியாது அல்லவா? அதனால் கதை சொல்ல விருப்பம் இருப்பவர்களின் பெயர்களை எழுதிப்போடுவோம். அவற்றில் குழந்தையை விட்டு தெரிவுசெய்து எடுத்து அந்த வரிசைப்படி கதைசொல்ல அனுமதிப்போம்” என முடிவெடுத்தார் அந்த ஊர் நாட்டாண்மை.

    அவரது அந்த முடிவு அப்போது எல்லோராலும் ஏற்கப்பட்டாலும் பின்னாளில் “ஏன் அப்படிச் செய்யவேண்டும்? எல்லோரும் ஒரே நேரத்தில் கதை செல்லுவோம். யார் யாருடைய கதை யார் யாருக்குப் பிடிக்கிறதோ அவங்கவங்க அவங்கவங்க கதையைக் கேட்கட்டும்” என்று மெதுவாகச் சொன்னான் ஒரு சிறுவன்.

    அவனது வார்த்தைகளுக்கு அப்போது பெரியளவில் மதிப்பில்லாமல் போனது. காரணம் அப்போது அந்த ஊரில் வழக்கமாக நடக்கும் தெருக்கூத்து நடத்துவதற்கான நாள்வேற நெருங்கிக்கொண்டிருந்தது. அதை எப்படி நடத்துவது என்ற ஆலோசனையில் மக்களின் கவனம் இருந்ததால் அச்சிறுவனின் குரல் அவனுடைய காதிற்கே கேட்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

    “உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி” என்ற தலைப்புச் செய்தியைத் தாங்கி வந்தன அன்றைய நாளேடுகள். வசதியானவன் ஏழை என்ற பாகுபாடின்றி எல்லோரையும் அந்த அடைமழை பாதிக்கத்தான் செய்தது. ஆனால், “இதைவிடப் பெரிய அளவிலான மழையை எல்லாம் நம்ம ஊர் இதற்கு முன்னர் பலமுறை சந்தித்திருக்கிறது. அதனால் இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை” என்ற ஒரு குரலும் அந்த ஊரில் ஒருபுறம் கேட்கத்தான் செய்தது. ஆனால் அதை யாரும் சட்டைசெய்யவில்லை.

    அரபிக்கடலில் இருந்து மெல்ல எழுந்த சூரியனின் கதிர்கள் பிரகாசிக்கத் தொடங்கின.  அதன் வெப்பத்தில் மழையைப் பற்றிய பேச்சை மறந்து மரநிழல் கிடைக்குமா? என்று மீண்டும் ஏங்கத் தொடங்கினர்.

    வெயிலில் இருந்து தப்பிக்கக் குடையுடன் நடக்கவேண்டிய கட்டாயம் கூட ஏற்பட்டது. சாலையோரங்களில் கறுப்புநிற கண்ணாடிகளின் விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. இப்படியே போனால் மக்களின் நிலைமை என்னாவது என்ற முணுமுணுப்பு காற்றில் பரவிக்கொண்டிருந்து. என்னைப் போல் எல்லோரும் கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் என்றவனின் பின்னால் அந்த ஊர் மக்கள் செல்ல முடிவெடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு வேறு வழிதெரியாத காரணத்தால் அந்த முடிவெடுக்க அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுடைய முடிவினால் கொஞ்ச காலத்தில் அந்த ஊரில் பெரிய மாற்றம் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படத்தான் செய்தன.

    கிழக்கும் மேற்குமாக இருந்த பிரதான சலைகள் மட்டுமன்றி குருக்கும் நெடுக்குமான சிறியசிறிய சாலைகளும் சந்திக்கும் நான்கு ரோட்டில் ஒரு வழியாக தன்னுடைய உறவினர் மூலம் வந்து சேர்ந்தாள் லில்லி. ஒல்லியான அவளுடைய தேகத்தைப் பார்த்த அந்த ஊர் மக்கள் மயங்கிப் போனதில் வியப்பதற்கு இல்லை. மயக்கம் அவர்களின் குருதியில் தோய்ந்த ஒன்றுதானே!.

    மழையின் தாக்கத்தில் சொல்ல  வந்ததைச் சொல்லாமல் உங்களுடன் சேர்ந்து நானும்  மறந்து போய்விட்டேன். மன்னிக்கனும்.

    கதைசொல்லுதல் பற்றியல்லவா நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?.

    அப்போது புதுப் புதுக்கதைகளை மக்கள் சொல்ல ஆரம்பித்திருந்தனர். கதைசொல்லும் போது பாட்டும் நடனமும்  இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற யோசனையை வெற்றிகரமாக்கினான்  மூக்கன். அதனால் அவன் பின்னால் மக்கள் ஓடத்தொடங்கினர்.

    அவன் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது அடிக்கடி கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிவிட்டு மூக்கைச் சொறிந்துகொள்ளுவான். அப்படி அவன் அடிக்கடி செய்தால் அவனுடைய அம்மா அவனுக்கு ஆசையாக வைத்த பெயர் அவனுக்கே மறந்து போனது. பாவம் மக்கள் எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்.

    ஆனால் அவனுடைய பெயர் மூக்கன் அன்று. மூப்பன் என்பதை மக்கள் தவறாக மூக்கன் என்று என்று உச்சரிப்பதாக இலக்கண ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்த அதிசயமும் ஒரு புறம் நடக்கத்தான் செய்தது.

    பட்டனமா பட்டினமா என்ற விவாதம் மக்களிடம் நடந்துகொண்டிருந்த போது லில்லி ஆயிரம் விளக்குகள் வரிசையாக ஓயாமல் ஒளிர்ந்து கொண்டிருந்த பகுதியில் சத்தமின்றி குடிபுகுந்திருந்தாள். வாழைத்தண்டு போன்ற அவளுடைய அழகிய இரண்டு கால்களும் ஆக்டோபஸ்ஸின் கரங்கள் போல் கிளைத்தவை என்பதை இரவின் ஒளியில் கண்டுபிடித்தவன்தான் அவளை அங்கு குடியமர்த்தியிருந்தான்.

    தனக்கு மட்டும் தெரிந்த இரகசியம் வேறு யாருக்கும் தெரியாது என்றுதான் அவன் நினைத்திருந்தான். இரகசியம் என்று அவன் நினைத்ததைப் பலர் அந்த ஊரில் தெரிந்து வைத்திருந்தனர் என்பது உண்மை. அவனது இறப்பிப்பிற்குப் பின்னர்தான் அந்த விசயம் வெளிப்பட ஆரம்பித்தது என்பது வேறு செய்தி. அதனால் ஆத்திரமடைந்த லில்லி “இரகசியத்தை அறிந்தவர்கள் ஒன்று கொல்லப்படவேண்டும் அல்லது தன்னுடைய காலடியில் கிடக்கவேண்டும்” என்று விரும்பினாள்.

    காலவெள்ளத்தில்….  அவளது விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுவது போல் அவள் அடிக்கடி கனவு கண்டாள்.

    அதை நினைத்துப் பார்த்தாள்.

    மகிழ்ந்தாள்.

    தான் அவ்வாறு மகிழ்ச்சியடையும் போது முகம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

    விளைவு: அவளது வீட்டில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்று புதிதாய் சுவரில்  முளைத்தது.

    எப்போதெல்லாம் தன்னுடைய மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டும் என்று அவளுக்குத் தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் அவள் அதன்முன் நிற்பாள்.

    விளைவு:நாள்தோறும் ஓரிரு முறைகளாவது அவ்வாறு நிற்கவேண்டும் என்ற நோய் அவளைப் பிடித்துக்கொண்டது.

    இதற்கிடையில் கதைசொல்லுதலில் புதிய பரிணாமங்கள் பல ஏற்பட்டிருந்தன.

    அவற்றில் ஒன்றுதான் வாந்தியெடுத்தல்.

    அதுதான் அப்பேதைய நியூ டிரண்ட் .

    அதை மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். “வாந்தியெடுப்பதில் கில்லாடியானவர்கள் இவர்கள்” என்ற பட்டியலில் தன்னுடைய பெயர் எப்போது வரும் என்று பலர் காத்திருந்தனர். ஒருபுறம் தன்னைப் போல் யாராலும் இப்படி வாந்தியெடுக்க முடியாது. நான்தான் வாந்தியெடுப்பதில் கில்லாடி என்ற பெயரைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தான் மூக்கன். அவனை முந்திச்செல்ல பலர் முயன்றாலும் அவனுக்கு நிகர் அவன்தான் என்ற பேச்சுதான் காற்றில் அடர்த்தியாக எங்கும் பரவியது.

    “மூக்கனைவிட நான் நன்றாக வாந்தியெடுப்பேன்” என்று மூக்கனுக்குப் போட்டியாக வாந்தியெடுப்பதில் தொடர்ந்து கில்லியாக இருந்த லட்சியபுருடன் லில்லியின் கனவில் கண்டது போல் பாதியில் பரலோகம் போய்விட்டான்.

    இனி தனக்கு நிகராக யாராலும் வாந்தியெடுக்க முடியாது” என்று இருமாப்பிலிருந்த மூக்கனின் ஆணவம் லில்லியிடம் மன்னைக் கவ்வியது.

    கொஞ்சநாள் வாந்தியெடுத்தவள் அதன் பிறகு புது வகையான கதை சொல்ல ஆரம்பித்தாள். அவள் தொடங்கிய கதை ஒரு தொடர்கதை. அந்த கதைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தன்னுடைய மூலையைப் போட்டுப் பிசைந்துகொண்டிருந்தபோது அவளுக்கு டக்கென்று ஒரு யோசனை முளைத்தது.

    நீயா நானா.

    இதுதான் தலைப்பு என்று பகிரங்கமாக அறிவித்தாள்.

    நான் x நாம் நீ x நீங்கள் என்ற பதங்களின் சாரம் நீயா x நானா என்று சுருக்கம் அடைந்தது.

    இது ஒரு புதிய இலக்கண விதி. இப்படியும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று நம்முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்று அதற்குச் சில மேதாவிகள் விளக்கங்கள்கூட அளித்தார்கள். இனி இதுதான் கடைசி இனிமேல் புதிய கதைகளைக் கேட்கக்கூடாது என்று கடுமையான வேண்டுகோள் மக்களிடம் வைக்கப்பட்டது. அந்தக் கதை ஒரு தொடர்கதை. அதனால்தானோ என்னவோ அது தொடர்ந்தது. இன்றும் தொடர்கிறது…

    அந்தக் கதை கூறும் போது தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்று உடனுக்குடன் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் கன்னித்தாயாக உருமாறிய லில்லி. அதற்குத் தன்னுடைய அறைக்குச் செல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் தன்னுடைய மகிழ்ச்சியைப் பார்க்க ஏன் அறைக்குச் செல்லவேண்டும். தன்னுடனே ஒரு கண்ணாடியை ஏன் ஏற்பாடு செய்துகொள்ளக் கூடாது என்று அவளுக்குத் தோன்றியது.

    வழக்கம் போல் நிலைக் கண்ணாடிமுன் நின்றிருந்தபோதுதான் அவளுக்கு அந்த யோசனை தோன்றியது.

    அப்போது அவளது முகம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அதற்குக் காரணம் புடவையில் இருந்தாள். கழுத்து நிறைய அணிகலன்கள் வேறு இருந்தன. புடைவையின் நிறத்திற்கு ஏற்ப அணிகலன்கள் அணிவிக்க பணிப்பெண் ஒருத்தியும் இருந்தாள்.

    அதனால் அவள் ஒரு முடிவெடுத்தாள் இனி எப்போதும் தன்னுடனே ஒரு கண்ணாடியை உடன் வைத்துக்கொள்வதென்று. எப்போதெல்லாம் தன்னுடைய மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் பார்த்துக் கொள்ளாம் இல்லையா. ஒவ்வொரு முறையும் நிலைக்கண்ணாடி இருக்கும் இடத்திற்குச் செல்லும் வரை தன்னுடைய ஆசையைத் தள்ளிப்போட வேண்டிய தேவை இருக்காது என்ற சுயநலமும் அதில் அடக்கம்.

    விளைவு : நடப்பதற்கும் முடியாத அளவிற்குப் பூதாகரமான தோற்றத்திற்கு மாறினாள். புடைவைகள் பாரமாயின. அணிகலன்களை வீசியெறியவேண்டிய வந்தது. மருத்துவர் சொல்லிவிட்டார் “நீங்க இனி தினமும் காலை இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடக் கூடாதென்று”.

    படுக்கை அறையிலிருந்த நிலைக்கண்ணாடி நோக்கித் தயங்கியபடி மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்தாள். கண்ணாடியில் தோன்றிய பூதாகரமான ஓர் உருவம் அவளை மிரட்டியது. அந்த உருவத்திற்குள் லில்லி என்ற பெயருடன் ஒல்லியான அவளுடைய தேகமும் ஒருசேர உருக்குலைந்து போயிருந்தன. அவ்வாறு தெரிவது தன்னுடைய உருவம்தான் என்பதை ஏற்கக் கொஞ்சம் அதிகமான கால அவகாசத்தை  எடுத்துக்கொண்டதாக அவள் உணர ஆரம்பித்தாள். எல்லாம் முடிந்தபிறகு என்ன செய்யமுடியும்.

    லில்லி என்ற தன்னுடைய இளைய வயது அடையாளத்தை அறை முழுக்கத்தேடினாள். களைப்புதான் அவளுக்குப் பரிசாக மிஞ்சியது.

    அப்படியே படுக்கையில் சரிந்தாள்.

    சூரியனைக் கண்டு மலரும் பூ காந்தள் மலரா?  தாமரை மலரா? என்பதுதன் அன்றைய தொலைக்காட்சிகளில் பிரபலமான விவாதப் பொருளாக மாறியிருந்தது. சிலர் “கொண்டையில் தாழம்பூ பாடலில் அந்த பூ இடம்பெறவில்லை” என்றனர். இன்னும் சிலர் “தமிழர் அக இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் கூட அந்த பூ குறிப்பிடப்படவில்லை” என்றனர். இந்த விவாதம் முடிந்த கையோடு விளம்பர இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற தசரதனின் பாசமா? கைகேயியின் வேசமா? என்ற விவாதத்தைக் கேட்டவாறே உறங்கினாள்.

    “நாளை மழை பெய்யும்” என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டதற்கு ஏற்ப வழக்கமாக அந்த ஊரில் வெயில் அதி தீவிரமாகவே இருந்தது. பொம்மைகளால் கட்டப்பட்ட பெரிய மாளிகையின் முன் போடப்பட்ட பெரிய பந்தலில் பலர் மேடையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். அந்த விழாவின் போதுதான் முதன் முதலில் லில்லி தாயானது அறிவிக்கப் பட்டது.

    “கன்னித்தாயே! என்று பாரதியின் முறுக்கு மீசையைப் போன்ற தன்னுடைய மீசை மண்ணில் முத்தமிட்டவாறு அந்த அறிவிப்பை முழங்கினான் அரங்கன். அச்செய்தியை அறிவிக்கும்போது அவன் பலமுறை வாந்தியெடுத்தான். வாந்தியெடுத்து வாந்தியெடுத்து கன்னித்தாயின் காலடியில் தொப்பென்று விழுந்தான். ஆனால் அந்த நிகழ்விற்குப் பத்தாண்டுகள் கழித்து அவளுக்கு  அடுத்தடுத்து வரிசையாகக் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன.

    இனி அவளுக்குக் குழந்தை பிறக்கவே பிறக்காது என்ற கிசுகிசு  மறைந்து கன்னியான அவளுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கின்றன என்ற வதந்தி காற்றில் பரவ ஆரம்பித்தது.

    குழந்தைகள் அம்மா! அம்மா! என்று அழைத்தாலும், அவை எல்லாம் தன்னுடைய பிள்ளைகள் அல்லர். தனக்குப்  புத்திர பாக்கியம் இல்லை என்று அவள் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தாள். அத்துடன் தனக்குப் புத்திரபாக்கியமே கிடையாது என்று திடமாகவே நம்ப ஆரம்பித்திருந்தாள். தனக்குக் குழந்தை பேறு இல்லாமல் போனதற்குக் கனவு தான் காரணம் என்றும் சில நேரம் நினைத்து வருந்தினாள்.

    “குழந்தை இல்லாதவர்களை மலடி என்று சிறப்பித்து அழைப்பது” அந்த ஊரில் உள்ள ஒரு வழக்கம். அதன்படி லில்லி அழைக்கப்படலாம் என்று சந்தேகப் படக்கூடாதென்று நினைத்த அவரது வீசுவாசிகள் அவளைத் தாயாக்கினர் என்றும் அந்த ஊரின் ஒதுக்குப் புறங்களில் வாழ்ந்த பழங்குடி மக்களால் பேசப்பட்டன. ஆனால் எது எப்படியோ அவள் தாயானாள்.

    அதுவும் கன்னித்தாய்.

    கன்னித்தாயின் எதிர்வீட்டில் குடியிருந்த மூக்கனின் மூன்று மனைவிகளும் ஏழுபிள்ளைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். மூக்கனுக்குப் பின் இந்த சண்டை தீவிரம் அடையும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. பேசப் புதுக்கதை வேண்டும் அல்லவா? வெறும் வாயை எவ்வளவு நாளுக்குத் தான் மெல்லுவது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு பலிக்குமா அல்லது வேறு புதிய கதைகள் சொல்ல யாராவது வருவார்களா என்று எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை.

    தன்னுடைய பூத உடலைச் சுமக்க முடியாமல் கட்டிலின் கால்கள் தள்ளாட்டம் போட்டன. பிரத்தேகமான புதிய கட்டில் பெரிய அளவில் செய்து அதன் மேல் படுக்கவைக்கப்பட்டாள். அவளது காலை இருவர் சமமாகப் பங்குப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர்.

    அவளது கண்கள் அவர்களைப் பார்த்தன. அப்போது அவள் நிலைக்கண்ணாடி முன்நின்றிருந்தாள் பழைய லில்லியாக.

    அவளுடைய கன்னித்தாய் பட்டமும் பூதாகாரமான உடலும் ஒரு சேர காணாமல் போயின.  அவள் அதை நம்ப மறுத்தாள். ஏனெனில் அவளது கனவில் அக்காட்சி இல்லை. அவள் அப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கற்பனையிலும் கூட பார்க்கவும் இல்லை.

    இப்போது அந்த ஊரில் புதுக்கதைகள் பல உலா வருகின்றன.

    வானமா x பூமியா? மேடா x  பள்ளமா?  வடக்கா x  தெற்கா? லெப்படா  x ரைட்டா …….. இன்னும் …… இப்படி…. எத்தனையோ??….இடையிடையே கன்னித் தாயான லில்லியும் இடையே வந்துபோனாள்…

    Share
  • வெற்றிலையின் பாரம்பரியம்

    ஆதிகாலந்தொட்டு வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு இணைந்ததொரு அத்தியாவசியப் பொருளாக இருந்துவருகிறது. தெய்வ வழிபாடு, திருமணம், காதுகுத்து, திருவிழா, பண்டிகை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மங்கலப் பொருளாக முக்கியமான இடத்தைப் பெறுவது வெற்றிலை, பாக்கு. தமிழர்தம் அக வாழ்வில் மகிழ்வுக்குரிய தருணங்களில் அன்பை வெளிப்படுத்தும் குறியீடாக – ஆரோக்கியத்தைப் பேணும் அருமருந்தாக அன்றாட வாழ்வில் அற்புதத்தை உண்டாக்கும் பச்சிலை, வெற்றிலை. இத்தனைக்கும் இந்த வெற்றிலையின் பிறந்தகம் நம் இந்தியா அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    வரலாற்றாசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார்,  “வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்’ என்று கூறியுள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது. நீலகண்ட சாஸ்திரியார் , “வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்கு பற்றிய குறிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

    “நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்” (401) என்கிறது பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி. அதாவது வெற்றிலை சுண்ணாம்பு வணிகர்கள் மதுரை நகரில் இருந்துள்ளனர் என்கிறது.

    “எண்பேராயம்” என்பது பண்டைய தமிழகத்தில் அரசர்களுடன் இருக்கும் எண் வகை நபர்களைக் குறிக்கிறது. எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின் முப்பது துறைகளில் ஒன்று. தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது வழக்கம். மதுரைக்காஞ்சி என்னும் நூல் நாற்பெருங்குழு என்று ஒன்றினைக் குறிப்பிடுகிறது.

    .இந்தக் குழுவில் வெற்றிலை, பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். “எண்பேராயம்’ என்பதற்கு விளக்கம் எழுதிய சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர்  “சந்து பூக்கச் சாடை பாக்கிலை கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்” (இந்திர விழவூரெடுத்த காதை-157) என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில், “பாக்கிலை’ வைத்திருப்போரும் ஒருவர். இவரை “அடைப்பைக்காரன்’ என்று குறிப்பிடுவர். அந்த வகையில் வெற்றிலை, பாக்கு பழந்தமிழர் காலத்திலேயே பழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

    மதுரைக்கு வரும் கோவலனும் கண்ணகியும் புறஞ்சேரியில் மாதரி என்னும் இடையர் குலப் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தனர். அன்று அந்த இரவில் உணவு உண்டபின் அன்புக் கணவன் கோவலனுக்கு அருமை மனைவி, கண்ணகி வெற்றிலைப் பாக்கு மடித்துக் கொடுக்கிறாள். விதிவசத்தால் அவர்கள் இருவரும் இணைந்து இன்பமாக இருந்த இறுதி நாள் அதுதான். இதனை இளங்கோவடிகள்,

    “உண்டு இனி திருந்த உயர்பே ராளற்

     அம்மென் திரைலோடு அடைக்காயீத்த

     மையீரோதியை வருகெனப் பொருந்தி”

     (கொலைக்களக்காதை-54-56)

    வெற்றிலைச் சுருள்: “அம் மென் திரையலொடு அடைக் காய் ஈத்த மை ஈர் ஓதியை” (சில:16:55-6). 2. வெற்றிலைக் கொடி: “நறிய தாம்பூல வல்லி ….. இலைக் கொடிப் பேர் திரையல் மெல் இலையும் ஆகும்” (நிக.சூ:4:37).

    “பாசிலை சுருட்டி மைந்தன் கொடுகிய” (பா-1987). – சீவக சிந்தாமணி

    “அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்” (காட்சிப்படலம்-15) – கம்ப இராமாயணம்

    “பெருக்கத் தின்றீர், தாம்பூலம் பிழைக்கச் செய்தீர்…(585) – கலிங்கத்துப்பரணி

    “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்கிறார் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (6-7),

     

    தமிழ் மக்கள் வாழ்வில் வெற்றிலைக்குச் சிறப்பான இடமுண்டு. பூக்கள், வாழைப் பழம், தேங்காய், சந்தனம், கரும்பு, தென்னங்கீற்று, தென்னம்பாளை, இளநீர்க்குலை, மஞ்சள் போன்றவை எவ்வாறு நன்மங்கலப் பொருட்களாகப் பார்க்கப்படுகின்றனவோ அவ்வாறே வெற்றிலையும் ஒரு மங்கலச் சின்னமாக கருதப்படுகிறது. முக்கியமான பல்வேறு சடங்குகளுக்கு “வெற்றிலை மாற்றும்” வழமை தொன்றுதொட்டு வருவதும் கண்கூடு. திருமணச் சடங்குகளில் தாம்பூலம் என்பது பல வகையில் முக்கியத்துவம் பெறக்கூடியது.

    “இந்தியாவுக்கு ஐரோப்பிவிலிருந்து வருவதற்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் முதன்முறையாக வந்திறங்கியதும், கடற்கரையில் கண்ட காட்சிகளைத் தம் பயணக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். இம்மண்ணில் வாழும் மக்கள் எந்நேரமும் ஒரு பச்சை இலையை வாயிலிட்டு மென்றபடியே இருப்பதாக எழுதியிருக்கிறார். வாஸ்கோடகாமா கூறிய அந்தப் பச்சை இலை வெற்றிலைதான். வெற்றிலை போடும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டே வழக்கத்தில் இருந்திருக்கிறது.

    வெற்றிலை என்பது கொடியிலை ஆகும். அந்தக் கொடியில் பூவோ காயோ பழமோ… எதுவுமே வளராது. வெறும் இலைகளாகவே இருக்கும். அதனால் இலையும் வெற்றிலை ஆனது. தாம்பூலம், திரையல், அடகு முதலான வேறு பெயர்களும் வெற்றிலைக்கு உள்ளன. உண்ணத் தகுந்த கீரைகளும் இலைகளும் அடகு எனப்படுவதால் வெற்றிலைக்கும் அப்பெயர் உண்டு.

    ஆரோக்கிய குறிப்புகளிலும் தொன்றுதொட்டு வெற்றிலை பயன்பாடு இருந்து வருவதை பாட்டி வைத்திய முறைகளிலிருந்து அறிய முடிகின்றது. கொடிய தேளின் நஞ்சையும் முறிக்க வல்லது வெற்றிலை என்ற வழமையும் இருந்து வருகிறது.

    இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகையும் சேர்த்து, ஒன்றாக மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேளின் விடம் உடனே முறியும் என்கிறார்கள்.

    சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள், இரண்டு வெற்றிலையுடன், வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விட்டு, தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து  மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் சக்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள்ளாகவாவது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படுமாம்.

    உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக  உபயோகிக்க உண்ட உணவு செரிமாணமாகும் என்பது பரம்பரையாக வழக்கத்தில் உள்ளது.

    சப்பானியர்களின் பாரம்பரிய விருந்துகளில் தேநீர் திருவிழா என்ற கொண்டாட்டம் உறுதியாக இருக்கும். அதேபோன்று தமிழர்களின் திருமணம், சடங்குகள், சம்பிரதாயங்களுக்குப் பிறகான விருந்தில், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  இவைகளைச் சேர்த்து, உறவினர்களுடன் கூடியிருந்து, அமர்ந்து இன்னுரையுடன், கேலி, கிண்டல், நக்கல்,நையாண்டி என்ற ஆனந்தமாக சூழலுடன் அவைகளை  இரசனையோடு மென்று உண்ணுவதும் ஒரு கலையாகக் காட்சியளிக்கும். தற்காலங்களில் வெற்றிலையுடன் வாசனைப் பாக்குகள், உலர்ந்த பழங்கள் என சிலவற்றை சேர்த்து ‘பீடா’ என்ற  பெயரில் நவீனமாக்கிக் கொண்டாலும் இன்றும் வெற்றிலை போடும் வழமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

    வெற்றிலை போடுவதும், அதனை மடித்துக் கொடுப்பதிலும் கூட ஒரு கலையுணர்வையும், அறிவியல், ஆரோக்கிய ஞானத்தையும் ஊட்டுபவன் தமிழன் என்பதை உணர முடிகின்றது. பெரிய விருந்தோ அல்லது இல்லத்தில் அமைதியாக அமர்ந்து அருந்திய பின்போ, மேலை நாட்டவர்களுக்கு ‘டெசர்ட்’ என்று சொல்லக்கூடிய இனிப்பு வகைகள் அல்லது பனிக்கூழ் உண்ணும் வழமை இருந்து வருகிறது. ஆனால் நம் தமிழர்கள் பாரம்பரியமாக தாம்பூலம் வழங்கும் வழமையேக் கொண்டிருக்கிறார்கள்.

    வெற்றிலையின் பின்புறம் இருக்கும், சற்றே புடைத்த நரம்புகளை நீக்கிவிட்டு, அதில் நல்ல சுத்தமான சுண்ணாம்பை குறிப்பிட்ட அளவில் சமமாகத் தடவ வேண்டும். வெற்றிலை, பாக்குடன்  சுண்ணாம்பு அளவாகச் சேரும்போது  அதுவே உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் தேவையானதொன்று. இதனால் பற்கள் வலுவடைகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இது ஒரு சிறந்த கருத்தடை மருந்தாகச் செயல்படுவதாக நம்புகிறார்கள்.

    வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும்.  இனிமையும் கூடும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

     

     

     

     

     

    Share
  • வாஸ்கோடகாமா

    Illustration of a Vasco De Gama

    இன்று, ஜூலை 8, இதே நாளில்  1497- இந்தியாவை நோக்கி வாஸ்கோடகாமாவின் பயணம் தொடங்கிய நாள்!

    பண்டைய காலத்திலேயே யவனர்களோடு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என பலப்பல பொருட்களை வணிகம் செய்தது நமது இலக்கியங்கள் மூலம் எளிதாக அறிய முடிகின்றது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின், அந்தப் பொருட்கள் கிடைக்கும் நாடுகளைத் தேடி அலைந்தவர்களில் பாரசீகர்களுக்கு முதலிடம் என்றால், போர்ச்சுகீசியர்களுக்கு அதற்கடுத்த இடம் உண்டு .

    நன்நம்பிக்கை முனையை 1497 இல் கடந்தவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகம் ஆன வாஸ்கோடகாமா. பின்னர் அவர் அங்கிருந்து, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைகிறார். மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்திருந்த – அதன் காற்றையும், அதன்

    வீச்சையும் நன்கறிந்த அங்கிருந்த ஒரு மாலுமி – அஹ்மத் இபின் மஜித் என்பவரின் துணையைப் பெறுகிறார். இதில் தமிழர் ஒருவரின் பங்கும் இருந்ததாகவும் தகவல்கள் உண்டு. வாஸ்கோடகாமா. 1498 இல், அஹ்மத் இபின் மஜித்தின் துணையுடன் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே

    இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு விரைவாக வந்து சேர்ந்தது சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர்திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான மற்றுமொரு பாதையை சாத்தியப்படுத்திக் காட்டினார் வாஸ்கோடகாமா.

     

    பழங்காலத்தில் போர்த்துக்கீசியர்களுடன் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கான அவர்களின் முக்கிய ஏற்றுமதி மிளகு. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வரக் காணவில்லை. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள் என்பது மட்டும்தான் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து விட்டுப் போன வணிக உறவைப் புதுப்பிக்க நூறு ஆண்டுகளாகத் தேடி அலைந்து கடைசியாக வந்து இங்கு வந்து சேர்ந்தவர்தாம் வாஸ்கோட காமா. அப்படிப் போர்த்துக்கீசியர்களுக்கு பண்டையகாலத்தில் தொடர்ந்து மிளகு ஏற்றுமதி செய்து வந்த அந்த மக்கள் தமிழர்தாம். அவர்கள் இடையில் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதால் மன்னர்களின் ஆதரவு அயல்நாட்டு வணிகத்திற்கு கிடைத்ததால் வணிகத்தை இழந்தனர். அவர்கள் செல்லாததால் ஐரோப்பியர் அவர்களைத்தேடி இங்கு வந்தனர். இங்கு தேடிவந்த வந்த ஐரோப்பிய தந்திரக்காரர்களுக்கு இந்தியா ஒரு வேட்டைக்காடாக மாறியது .

    வாஸ்கோடகாமாவிற்குப்பின் வந்த அஃபோன்சா டி அல்புகியர்கியூ என்பவர், இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புக்கு வழிகோலிட கோவா என்றொரு போர்சுகீசிய பிரதேசம் உருவாகி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகள் வரையிலும் கூட அது போர்ச்சுகீசியர்கள் கையில் தான் இருந்தது. வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திலேயே வரப்போகிற ஆபத்தை உணராமல் விட்டு வைத்ததன் விளைவு எத்தனை நூற்றாண்டுகளுக்கு எத்தகைய இன்னல் விளைவித்தது என்பதை வரலாறு நமக்கு நன்கு உணர்த்துகின்றது. நன்னம்பிக்கை முனைவழியாக வரும் வழி தங்களுக்கு மட்டுமே உரியது என்று போர்ச்சுகல் அப்போதைய போப்பிடம் உரிமையும் கோரியதாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன . ஆனால் வாஸ்கோடகாமாவுக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு தமிழர்தான் இந்த வழியை

    சொல்லிக்கொடுத்ததாகவும் ஒரு கட்டுரை செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நூற்றாண்டு முழுவதும் அந்த வழியை அதிகம் போர்ச்சுகல் மட்டுமே பயன்படுத்தியது . அது

    இரகசியமாகவே இருந்தது. அப்போதெல்லாம் அத்தகைய வரைபடங்கள் புதையல் இருக்கும் வழி காட்டும் வரைபடங்களை விட மதிப்பு மிக்கதாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுடன் ஆன வணிகம் ஐரோப்பியர்களுக்கு அத்தனை மதிப்பு மிக்கது. அவர்களின் வாழ்நாள் இலட்சியமாக இருந்தது இந்தியாவிற்கு வருவது என்பதுதான். இதில் குறிப்பிடும் பல வரலாற்று செய்திகள் அந்நியர்கள் எழுதி வைத்த கையேட்டுக் குறிப்பு போன்ற ஆவணங்களில் இருந்துதான் கிடைக்கின்றன.

    இந்தியாவின் வரலாறு என்பது பெரும்பாலும் இங்கு பயணம் மேற்கொண்ட அந்நியர்களால் எழுதப்பட்டவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். பிரித்தானியருக்கு முன்னால் கிரேக்க, சீனப் பயணிகள் எழுதிய குறிப்புகளை வைத்துதான் தட்சசீலா, நாலந்தா பற்றிய கல்விக்கூடங்கள், பண்டைய பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்திகள் கிடைத்திருக்கின்றன.

    இசுலாமியர்களால் எழுதப்பட்ட சில வரலாறுகளும் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் வருகை 15-16-ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்திய வாழ்க்கை முறை, தத்துவங்கள், கலைகள், கல்வி என நம் வாழ்வின் பன்முக அம்சங்கள் குறித்த எந்தவித புரிதலும் இல்லாதவர்கள் அவர்கள். முற்றிலும் அந்நியமான தேசத்தில் இருந்து வந்து தங்களுடைய முன்முடிவுகள், புரிதலுக்கு ஏற்ப நம்மைப் பற்றி அவர்களுக்கு என்ன

    புரிந்ததோ அதை எழுதி வைத்தார்கள் ஆனால் நமக்கு வேறு வழி இல்லாததால் அவைகளை வைத்தே ஆங்காங்கே கிடைக்கும் உண்மை செய்திகளை தேடிக் கோர்க்க வேண்டி இருக்கிறது.

    இந்தியாவில் தென்னாட்டிற்குத்தான் ஐரோப்பியர்கள் முதலில் கடல் வழி வந்தனர். இங்கு வந்த சிறிது காலத்திலேயே அவர்களுக்குப் புரிந்து போனது அவர்கள் நினைத்தது போல இந்தியர்கள் நாகரீகமற்றவர்கள் அல்ல. அவர்கள் நாகரீகத்திலும் அறிவியலிலும் மிக மேன்மை கொண்டிருந்தனர். அதில் பலவற்றை ஐரோப்பியர்கள் அப்போது கற்பனை கூட செய்தது கிடையாது. எனவே மெக்ஸிகோ பெரு போன்ற நாடுகளில் செய்ததுபோல் அழித்தொழிப்பு செய்யாமல் இந்தியாவில் என்னென்ன இருக்கின்றன என்பதை முழுவதுமாகப் பதிவு செய்யவேண்டும் என முனைந்தனர். அவற்றில் இருந்து எதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. எங்கெல்லாம் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. ஆதியில் வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில்நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர்.

     

     

     

    Share
  • (Peer Reviewed) இயற்கை மொழி ஆய்விற்கான மொழியியல் குறிப்பகராதி

    (Peer Reviewed) இயற்கை மொழி ஆய்விற்கான மொழியியல் குறிப்பகராதி

    இயற்கை மொழி ஆய்விற்கான மொழியியல் குறிப்பகராதி

    (Linguistically Annotated Dictionary – LAD)

    முனைவர் ஆர். சண்முகம்
    செயல்பாட்டு மேலாளர், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL)

    சுருக்கம்

    மொழி என்பது சமூக மற்றும் மொழியியல் சார்ந்த நிகழ்வாகும். கால மாற்றத்திற்கேற்ப அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ் மொழியின் இலக்கண வளர்ச்சியில் தொல்காப்பியர் ஆற்றிய பங்கு, ஆய்வாளர்களுக்குப் பெரும் ஆதாரமாகத் திகழ்கிறது.

    இன்றைய நவீன தமிழில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, மொழித் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய ஆய்வுச் சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளது. இது கணினி மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது.

    இயற்கை மொழிச் செயலாக்கத்தின் முக்கிய அணுகுமுறைகளில் ஒன்று, விதிகள் அடிப்படையிலான அணுகுமுறை ஆகும். இந்த அணுகுமுறை மொழியின் ஆழமான அமைப்பை ஆராய உதவுகிறது. ஆனால், தமிழ் மொழியின் சிக்கலான அமைப்பினால் துல்லியமான பகுப்பாய்வை வழங்கக்கூடிய பின்தள அகராதி அவசியமாகிறது.

    பொதுவான அகராதிகள் ஒரு சொல் சரியானதா என்பதை மட்டும் தெரிவிக்கும். ஆனால், சொற்பொருள் வேறுபாடு கண்டறிதல், தொடரியல் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற மேம்பட்ட இயற்கை மொழிச் செயலாக்கப் பயன்பாடுகளுக்குத் தேவையான பொருள், எதிர்ச்சொல், சொற்பிறப்பு, பயன்பாட்டுத் துறை போன்ற தகவல்களை அவை வழங்குவதில்லை.

    எனவே, மொழியியல் தகவல்களுடன் கூடிய அகராதி ஒன்றை உருவாக்குவது இன்றியமையாதது ஆகும்.இக்கட்டுரையின் நோக்கம், குறிப்பாகப் பெயர்ச்சொற்களை மையமாகக் கொண்டு, இயற்கை மொழிச் செயலாக்கத்திற்கான மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதியின் வடிவமைப்பை முன்வைப்பதாகும்

    முக்கியச் சொற்கள்

    • மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி, இயற்கை மொழிச் செயலாக்கம், விதிகள் அடிப்படையிலான அணுகுமுறை, தமிழ் அகராதி

    0. அறிமுகம்

    இயற்கை மொழிச் செயலாக்கம் என்பது மனிதனுக்கும் கணினிக்கும் இடையே இயல்பான மொழியின் மூலம் தொடர்பை ஏற்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு துறையாகும்.

    இதனைச் செயல்படுத்த இரண்டு முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்படலாம்:

    1. மொழித் தொழில்நுட்பம் இயற்கை மொழி ஆய்வை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப முறைகள்.

    2. கணினி மொழியியல் மொழியின் இலக்கண விதிகளைக் கணினிக்குப் புரியும் வகையில் வடிவமைக்க உதவும் மொழிக்கூறுகளை ஆய்வு செய்கிற துறை.

    இயற்கை மொழி ஆய்வுகளில் பொதுவாக இரண்டு முக்கிய அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:

    • விதிகள் அடிப்படையிலான அணுகுமுறை இலக்கண விதிகளின் அடிப்படையில் வெளியீட்டை உருவாக்கும் முறை.

    • புள்ளியியல் அடிப்படையிலான அணுகுமுறை தரவுகள், பயிற்சி மாதிரிகள் மற்றும் சில குறிப்பிட்ட விதிகளின் உதவியால் முடிவுகளை உருவாக்கும் முறை.

    மனிதர்கள் சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வதும், குழப்பமான அர்த்தங்களைத் தெளிவுபடுத்துவதும் அவர்களின் மனஅகராதி மூலம் நிகழ்கிறது.

    இந்தக் கட்டுரையின் நோக்கம், மனித மனஅகராதிக்கு நிகரான மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி ஒன்றின் வடிவமைப்பை முன்மொழிவதாகும். இது விதிமுறை அடிப்படையிலான இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளுக்குப் பின்தள அகராதியாகச் செயல்படும்.

    1. இயற்கை மொழி பகுப்பாய்வில் பொருளியல் சிக்கல்கள்

    இயற்கை மொழிச் செயலாக்கம் என்பது விரிவான ஆய்வுகளைத் உள்ளடக்கிய துறையாகும். இதன் அடிப்படை நிலைகள் ஒலியியல், உருபியல், தொடரியல், மற்றும் பொருளியல் ஆகிய மொழியியல் கூறுகளை உள்ளடக்குகின்றன.

    உருபியல் சார்ந்த அடிப்படைப் பகுப்பாய்வுகளுக்கு ஒரு சாதாரண மூலச்சொல் அகராதி போதுமானதாக இருக்கலாம். ஆனால், தொடரியல் மற்றும் பொருளியல் தாக்கங்களால் உருவாகும் சிக்கல்களைக் கையாள்வதற்கு அது போதுமானதல்ல.

    மேம்பட்ட பயன்பாடுகளான:

    • சொற்பொருள் வேறுபாடு கண்டறிதல்

    • இயந்திர மொழிபெயர்ப்பு

    • சந்திச் சரிபார்ப்பி

    • இலக்கணச் சரிபார்ப்பி

    போன்றவற்றிற்கு மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி மிகவும் இன்றியமையாதது.

    உதாரணமாக, “கடை + கள்என்ற இணைவு கடைகள்என்ற பொருளை வழங்கும். ஆனால் சில சூழல்களில் கடைக் கள்என்ற வேறுபட்ட பொருண்மை வடிவில் அமையலாம். இத்தகைய பொருள் வேறுபாடுகளை ஒரு சாதாரண உருபனியல் உருவாக்கித் துல்லியமாகக் கையாள முடியாது. ஏனெனில், ஒரு சொல்லின் பலபொருள் தன்மை, அதற்கு அறியப்படாமல் இருக்கும்.

    அதேபோல், “கன்னிப் பெண்என்ற சொல்லுக்கும் இரு வேறு பொருள்கள் உள்ளன திருமணமாகாத இளம்பெண், முதிர் கன்னி. அவற்றின் சரியான பொருள் மொழிச் சூழல் அல்லது வெளிச்சூழல் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

    ஒரு சாதாரண மூலச்சொல் அகராதி, ஒரு சொல் எந்த வகையைச் சேர்ந்தது மற்றும் அது சரியான சொல்லா என்பதை மட்டும் குறிப்பிடும்.

    ஆனால், இந்தத் தகவல் மட்டும் சொற்பொருள் வேறுபாடு கண்டறிதல் அல்லது இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற மேம்பட்ட அமைப்புகளுக்குப் போதுமானதல்ல.

    ஒரு சொல்லின் சரியான பொருளைத் தீர்மானிக்க, கூடுதல் மொழியியல் மற்றும் பொருளியல் தகவல்கள் தேவைப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இதன் மூலம் பின்வரும் தகவல்களைப் பெறலாம்:

    • சொற்களின் பல்வேறு பொருள்கள்

    • சந்தி விதிகள்

    • சூழ்நிலை சார்ந்த பொருள்

    • சொற்பொருள் விரிவாக்கம்

    எனவே, ஒவ்வொரு சொல்லிற்குமான அனைத்துப் பொருள்களையும் அகராதியில் பராமரிப்பது அவசியமாகிறது.

    இத்தகைய அகராதியுடன் இணைக்கப்பட்ட உருபனியல் உருவாக்கி, பலபொருள் கொண்ட சொற்களுக்கு மாறுபட்ட வெளியீடுகளை உருவாக்குவதில் சிரமப்படாது.

    மேலும், பின்வரும் பொருளியல் பண்புகள், பொருள் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன:

    • நேரடிப் பொருள்

    • மறைபொருள்

    • பயன்பாட்டுத் துறை

    2.0 மொழியியல் குறிப்பகராதி

    ஒரு சொல் என்பது வெறும் ஒலியோ எழுத்துத் தொகுப்போ அல்ல; அதன் பின்னணியில் சொற்பிறப்பு, இலக்கண அமைப்பு, பொருள், பயன்பாடு, மற்றும் சூழல் போன்ற பல அடுக்குகள் உள்ளன.

    மனிதர்களுக்கான அகராதி ஒன்றை உருவாக்குவது ஒரு வகை நோக்கம்; இயற்கை மொழிச் செயலாக்கத்திற்கான அகராதியை உருவாக்குவது வேறு நோக்கம். முன்னர் விளக்கப்பட்டபடி, ஒரு சாதாரண மூலச்சொல் அகராதி மட்டும் மேம்பட்ட பயன்பாடுகளில் தோன்றும் பலபொருள் சிக்கல்களைத் தீர்க்க முடியாது.

    மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி என்பது இலக்கணத் தகவல்களையும் பொருளியல் தகவல்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சொல்லின் அனைத்துப் பொருள்களையும் பதிவு செய்யும் விரிவான தரவமைப்பாகும்.

    இதில் இடம்பெற வேண்டியவை:

    • நேரடிப் பொருள்

    • மறைபொருள்

    • துறைவாரியான பொருள்

    இவ்வகராதி, இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளுக்குப் பின்தள அறிவகமாகச் செயல்பட்டு, அவற்றின் துல்லியத்தையும் தரத்தையும் உயர்த்தும்.

    இக்கட்டுரை தற்போது பெயர்ச்சொற்கள் குறித்து மட்டும் விவரிக்கிறது. இருப்பினும், இதே மாதிரியான அமைப்பு கொண்ட வினைச்சொற்கள் உள்ளிட்ட அனைத்துச் சொல்வகைகளுக்கும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக வினைச்சொற்கள் வாக்கிய அமைப்பின் முதுகெலும்பாக இருப்பதால், அவற்றிற்கும் விரிவான மொழியியல் குறிப்புகள் அவசியம்.

    2.1 மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதியின் கட்டமைப்பு

    இவ்வகை அகராதியின் கட்டமைப்பே மொழித் தொழில்நுட்பக் கருவியின் துல்லியத்தையும் செயல்திறனையும் தீர்மானிக்கிறது.

    அகராதியில் இடம்பெறும் ஒவ்வொரு தலைச்சொல்லும் அதன் இலக்கண மற்றும் பொருளியல் தகவல்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

    ஒவ்வொரு சொல்லிற்கும் பின்வரும் தகவல்கள் இடம்பெற வேண்டும்.

    பொருளியல் தகவல்கள்

    • நேரடிப் பொருள்

    • மறைபொருள்

    • இணைச்சொற்கள்

    • எதிர்ச்சொற்கள்

    • மரபுத்தொடர்கள்

    • பழமொழிகள்

    • பயன்பாட்டுத் துறைகள்

    தொடரியல் மற்றும் இலக்கணத் தகவல்கள்

    • இணைநிகழ்வு

    • சொல்வகை

    • துணைவகைப்படுத்தல்

    உதாரணமாக:

    • பொதுப் பெயர் / சிறப்புப் பெயர்

    • எண்ணிக்கைக்கு ட்படும் / எண்ணிக்கைக்கு ட்படாத

    • உயிருள்ள / உயிரற்ற

    • உருவமான / அருவமான

    • பாலினம்

    • ஒலிப்பு முறை (IPA)

    மேலும், பின்வரும் கூறுகளும் சேர்க்கப்பட வேண்டும்:

    இவை உரையை ஒலியாக மாற்றும் அமைப்புகளில் ஒலியியல் மற்றும் இசைநடைத் தகவல்களைத் துல்லியமாக உருவாக்க உதவுகின்றன.

    ஒரு சொல்லின் வெவ்வேறு பொருள் பரிமாணங்களும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

    3.0 LAD உருவாக்கம்

    LAD-ஐ உருவாக்குவது என்பது வெறும் சொற்களின் பட்டியலைத் தயாரிப்பது அல்ல. மாறாக, ஒவ்வொரு சொல்லிற்குமான இலக்கண, பொருளியல், மற்றும் பயன்பாட்டு தகவல்களை ஒருங்கிணைத்து முழுமையான மொழியியல் தரவமைப்பை உருவாக்குவதாகும்.

    இத்தகைய தகவல்கள் சாதாரண மூலச்சொல் அகராதிகளில் பொதுவாகக் கிடைப்பதில்லை.

    LAD-XML போன்ற கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் உருவாக்குவது பொருத்தமானதாகும்.

    ஒரு சொல்லின் அனைத்து பொருளியல் தகவல்களையும் முழுமையாகப் பதிவு செய்வது கடினமான பணியாக இருந்தாலும், இக்கட்டுரை அவற்றில் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு வடிவமைப்பை முன்வைக்கிறது.

    மனிதர்களின் மனஅகராதி பலவகையான இலக்கண மற்றும் பொருளியல் தகவல்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் சொற்களின் பொருளை எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அதேபோல், இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளும் திறம்படச் செயல்பட வேண்டுமெனில் இவ்வகை விரிவான அகராதி அவசியமாகிறது.

    3.1 LAD-இன் மாதிரி அமைப்பு

    புலம்

    விளக்கம்

    மூலச்சொல்

    அகராதியின் தலைச்சொல்

    சொல்வகை

    பெயர்ச்சொல், வினைச்சொல் போன்ற வகைப்பாடு

    சொற்பிறப்பு

    சொல்லின் தோற்றம் மற்றும் வரலாறு

    துணைவகை

    பொதுப் பெயர், சிறப்புப் பெயர், உருவம், அருவம், எண்ணிக்கைக்கு ட்படும், உயிருள்ளது போன்ற வகைப்பாடுகள்

    IPA / ஒலிப்பு

    சர்வதேச ஒலிப்பியல் குறியீடு மற்றும் உச்சரிப்பு

    நேரடிப் பொருள்

    சொல்லின் அடிப்படை அகராதிப் பொருள்

    மறைபொருள்

    சமூக, பண்பாட்டு அல்லது உணர்வுசார் பொருள்

    பயன்பாட்டுத் துறை

    மருத்துவம், வணிகம், இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் பெறும் பொருள்

    மரபுத்தொடர்கள் / பழமொழிகள்

    அந்தச் சொல் இடம்பெறும் நிலையான தொடர்கள்

    இணைச்சொற்கள்

    ஒத்த பொருள் தரும் சொற்கள்

    எதிர்ச்சொற்கள்

    எதிர்ப்பொருள் தரும் சொற்கள்

    இணைநிகழ்வு

    பொதுவாக இணைந்து வரும் சொற்கள்

    கூட்டுச்சொல் வடிவம்

    கூட்டுச்சொற்கள் உருவாகும் அடிப்படை வடிவம்

    குறிப்பு:
    ஒரு சொல்லின் முதன்மைப் பொருளுக்காக வழங்கப்பட்டுள்ள துணைவகைப்படுத்தல், அதன் பிற பொருள் விரிவாக்கங்களுக்கும் தனித்தனியாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

    ஒரே சொல் வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் போது அதன் சொல்வகை கூட மாறக்கூடும். எனவே, அத்தகைய மாற்றங்களும் அகராதியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    மேலே வழங்கப்பட்ட அட்டவணை LAD உருவாக்கத்திற்கான மாதிரி வடிவமைப்பு மட்டுமே. தேவைக்கேற்ப இதில் மேலும் பல கூறுகளைச் சேர்த்து விரிவுபடுத்தலாம்.

    3.2 நேரடிப் பொருள் மற்றும் மறைபொருள்

    நேரடிப் பொருள் என்பது ஒரு சொல்லின் வெளிப்படையான அல்லது அகராதியில் தரப்படும் அடிப்படைப் பொருளாகும்.

    உதாரணமாக, “சுனாமிஎன்ற சொல்லின் நேரடிப் பொருள் கடல் அல்லது பெரிய நீர்நிலைகளில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியால் உருவாகும் பேரலைத் தொடர் ஆகும்.

    ஆனால், அதே சொல்லின் மறைபொருள் நிலைமையில் அழிவு, ஆபத்து, துயரம் போன்ற சமூக மற்றும் உணர்வுசார் கருத்துகளும் இணைந்திருக்கலாம்.

    அதாவது, ஒரு சொல்லின் மறைபொருள் அதன் சமூகப் பயன்பாடு மற்றும் மனித அனுபவங்களின் வழியாக உருவாகிறது.

    3.3 பயன்பாட்டுத் துறை

    ஒரு சொல்லின் பொருள் அதன் நேரடிப் பொருள் அல்லது மறைபொருள் மட்டும் சார்ந்ததல்ல; அது பயன்படுத்தப்படும் துறை அல்லது சூழலின் அடிப்படையிலும் மாறுபடும்.

    உதாரணமாக, “சீட்டுஎன்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம்.

    • வணிகம் / பொருளாதாரத் துறையில் அது ரசீது எனப் பொருள்படும்.

    • போக்குவரத்து துறையில் பயணச்சீட்டு என்பது பயண அனுமதிச் சீட்டை குறிக்கும்.

    • விளையாட்டு துறையில் அது விளையாட்டுச் சீட்டு எனப் பொருள்படும்.

    இதுபோல, ஒரே சொல்லுக்கு பயன்பாட்டுத் துறையைப் பொறுத்து பல்வேறு பொருள்கள் அமையும்.

    எனவே, ஒவ்வொரு சொல்லிற்குமான துறைவாரியான பொருளை LAD-இல் பதிவு செய்வது, அதன் பொருள் விரிவாக்கங்களைச் சரியாகக் கையாளவும், முழுமையான பொருளியல் சுயவிவரத்தை உருவாக்கவும் உதவுகிறது.

    3.4 இணைநிகழ்வுகள், மரபுத்தொடர்கள் மற்றும் பழமொழிகள்

    மரபுத்தொடர்களும் பழமொழிகளும் நிலையான மொழித்தொடர்கள் ஆகும். இவை இயற்கை மொழி ஆய்வில் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்குகின்றன.

    ஏனெனில், இத்தகைய தொடர்களில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லின் தனிப்பொருளை மட்டும் கொண்டு முழுப் பொருளை அறிய முடியாது. மாறாக, முழுத் தொடரே தனித்துவமான பொருளை வழங்குகிறது.

    இந்தச் சிக்கல், குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புகளில் தெளிவாகக் காணப்படுகிறது.

    நேரடி மொழிபெயர்ப்பு முறையைப் பின்பற்றும் அமைப்புகள், மரபுத்தொடர்கள் மற்றும் பழமொழிகளின் உண்மையான பொருளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதில் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.

    உதாரணமாக, “மின்னுவதெல்லாம் பொன்னல்லஎன்ற பழமொழி வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒளிரும் அனைத்தும் பொன்னாக இருக்காது என்பதைக் குறிக்கிறது.

    ஆனால், அதன் உள்ளார்ந்த பொருள், வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து எதையும் மதிப்பிடக் கூடாது என்பதாகும்.

    எனவே, இத்தகைய மொழிப் பயன்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புகளுக்கு மொழியியல் அறிவுடன் உலக அறிவும் தேவைப்படுகிறது.

    4. இயற்கை மொழி ஆய்வில் LAD-இன் பயன்பாடு

    படைப்பாற்றல் என்பது மொழியின் அடிப்படை பண்புகளில் ஒன்றாகும். மொழி அதன் பயன்பாட்டின் காரணமாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த இயல்பான மாற்றமே இயற்கை மொழிச் செயலாக்கத்திற்குப் பெரிய சவாலாக அமைகிறது.

    இந்தச் சவால்களை சமாளிக்க பொருள் வேறுபாடு கண்டறியும் அமைப்பு அவசியமாகிறது. குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்புகளில், ஒரு வாக்கியத்தின் சரியான பொருளைத் தீர்மானிக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    சொல் மட்டத்திலான குழப்பங்களை சில இலக்கண விதிகளின் உதவியால் தீர்க்க முடியும். ஆனால், வாக்கிய அமைப்பு சார்ந்த குழப்பங்களைத் தீர்க்க உயர்தரத் தொடரியல் பகுப்பாய்வி தேவைப்படுகிறது.

    ஒரு திறமையான தொடரியல் பகுப்பாய்வியை உருவாக்க, அதற்கு அடிப்படையாக மிகத் துல்லியமான உருபனியல் பகுப்பாய்வி இருக்க வேண்டும். அத்தகைய பகுப்பாய்வி, சொற்களின் பல்வேறு பொருள் வேறுபாடுகளையும் கையாள முடியும்.

    பொதுவாக, பகுப்பாய்விகளுக்கு இணைநிகழ்வுகள் பற்றிய போதுமான அறிவு இல்லாததால், சரியான சொல் இணைப்புகளை அடையாளம் காண இயலாமல் போகிறது. ஆனால், LAD-இல் ஒவ்வொரு சொல்லிற்குமான இணைநிகழ்வு தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், பகுப்பாய்வி அவற்றைப் பயன்படுத்தி பொருளைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.

    இதன் மூலம் சூழலுக்கேற்ற பொருள் கண்டறிதல் சாத்தியமாகி, வாக்கியத்தின் உண்மையான பொருளை இயற்கை மொழிச் செயலாக்க அமைப்பு சரியாகப் புரிந்துகொள்ளும்.

    முடிவுரை

    மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி (Linguistically Annotated Dictionary – LAD) என்பது, ஒரு சொல்லின் இலக்கண, பொருளியல், மற்றும் பயன்பாட்டியல் பண்புகளை ஒருங்கிணைத்து பதிவுசெய்யும் விரிவான மொழியியல் தரவமைப்பாகும். இவ்வகராதி, சொல்லின் அடிப்படைப் பொருள், பொருள் விரிவாக்கம், பயன்பாட்டுச் சூழல், மற்றும் இலக்கண இயல்புகள் ஆகியவற்றை முறையாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் இயற்கை மொழிச் செயலாக்க அமைப்புகளுக்கான அடித்தள அறிவகமாக விளங்குகிறது.

    References

    1. CREA – Modern Tamil dictionary for Tamil-Tamil-English – by CREA 2009.

    2. Chomsky, Noam. Logical syntax and Semantics – Their linguistic Relevance– Language Volume 31. No.1 (Jan-Mar 1995).

    3. Cook, Vivian – Mark Newson. Chomsky’s Universal grammar– Blackwell Publications

    4.Kothandaraman-.Pon. A grammar of contemporary literary Tamil. IITS -1997.

    5 Kothandaraman-.Pon. Tamil studies selected papers. Ambuli Publication-2001.

    6. Krishnamoorthy, Badriraju. The Dravidian Languages. Cambridge University Press -2003

    7. Moravcsik JME. Sub-categorization and abstract terms-in Foundations of Language Vol.6 No.4 1970.

    8. Verma S.K, N. Krishanaswami. Modern Linguistics -An Introduction– Oxford University Press – 1989

    9. en.wikipedia.org/wiki

    ============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் இயந்திர மொழிபெயர்ப்பும் செயற்கை நுண்ணறிவும் பெருகி வரும் இந்நாளில், நம் செயல்கள் எளிதாவதற்குப் பதிலாகக் கடினமாகின்றன. இதற்குக் காரணம், இவற்றில் பிழைகள் மலிந்துள்ளன. உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதிலும் அதை மொழிபெயர்ப்பதிலும் பெரும் சவால்கள் உள்ளன. வேகமாகச் செய்யும் நோக்கில், நம் கருவிகள் சரியாகச் செய்வதில்லை. அசலை ஒத்து, போலச் செய்து, அந்தப் போலியையும் அசலாகவே முன்வைக்கின்றன. இவற்றிலிருந்து சரி எது என்பதைக் கண்டறிவது, பெரும் பணியாக இருக்கிறது. இதனால் இவற்றின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாய் ஆகியுள்ளது. இந்நிலையில், மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி என்ற பரிந்துரை, தமிழுக்குப் பயனளிக்கக் கூடியது.

    ஆய்வாளர் முன்மொழிந்துள்ள அகராதி வடிவம், தொடக்க நிலைக்கானது. ஒவ்வொரு துறையிலும் இன்னும் கூர்மையான பார்வையுடன் நுணுக்கமான விவரங்களைச் சேர்க்க வேண்டும். சேர்த்த விவரங்களைப் பல கோணங்களில் சரிபார்க்க வேண்டும். ஏட்டு நிலையிலிருந்து செயலாக்க நிலையில் இவற்றின் பயனைச் சோதிக்க வேண்டும். நேரடிப் பயனர்களின் கருத்துகளையும் சேர்க்க வேண்டும். வட்டார வழக்கில் ஏற்படக் கூடிய எழுத்து மாற்றங்களையும் உச்சரிப்பு மாற்றங்களையும் சேர்க்க வேண்டும். ஒரே எழுத்துக்கூட்டல் / உச்சரிப்பு ஆகியவற்றைக் கொண்ட சொற்களின் வெவ்வேறு பொருள்களைச் சேர்க்க வேண்டும். ஒரே சொல்லுக்கு ஒவ்வொரு காலத்திலும் இருக்கக்கூடிய பொருள்களையும் சேர்க்க வேண்டும். மொழிபெயர்க்கும்போது ஏற்படக் கூடிய சவால்களையும் மொழிபெயர்க்கும்போது இழக்கக்கூடிய ஓசை, சந்தம், இசை ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். இதர மொழிகளின் மொழியியல் அகராதிகளுடன் ஒப்புநோக்க வேண்டும்.

    பெரும் உழைப்பினைக் கோரக்கூடிய பணியாக இருந்தாலும் செய்ய வேண்டிய பணி. இப்போதே தாமதம் தான் என்றாலும் விரைந்து செய்ய வேண்டிய பணி. தமிழ், அறிவியல் மொழியாக வளர்வதற்கு இத்தகைய கண்ணோட்டம் உள்ள ஆய்வுகள் தேவை. ஆய்வாளருக்குப் பாராட்டு.

    Linguistically Annotated Dictionary – LAD என்றால் என்ன என்பது குறித்த முன்னுரையை வழங்கிய பிறகு அது குறித்து விளக்கியிருக்கலாம். LAD உருவாக்கம், LAD-இன் மாதிரி அமைப்பு என்பது போல, ஆங்கில எழுத்துச் சுருக்கத்தை அப்படியே தமிழில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். மொழியியல் குறிப்புகளுடன் கூடிய அகராதி என்பதை மொ.கு.அ. என்று சுருக்கி எழுதலாம்.

    ============================================================

    Share
  • மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி

    மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி

    ஜெ. கார்த்திக்

    தமிழர்கள் அடர்த்தியாக வாழும் ஆசிய நாடுகளில் மியன்மார் நாடும் ஒன்று. தமிழ்மொழிப்பயன்பாடும் தமிழ்க்கல்வியும் இராணுவ ஆட்சியினால் நிச்சயமற்ற சூழலில் அங்கே இருந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் இத்தகைய சூழலை மாற்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மியன்மாரில் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகியுள்ள சூழலில், மியன்மாரிலுள்ள யாங்கோன் பகுதியில் செயல்படும் தமிழர் அறநெறிக்கழகம், தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சியை மாணவர்களிடமும் தமிழாசிரியர்களிடமும் கொண்டுசெல்வதற்கு முனைந்துவருகிறது. குறிப்பாக, தமிழர் அறநெறிக்கழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளி மாணவர்கள் 20பேருக்கு கடந்த ஜூன் மாதம் 6 முதல் 11ஆம் தேதிவரையிலான 6 நாட்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ. கார்த்திக் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பயிற்சிகளை வழங்கினார்.

    பயிலரங்கில் பங்கேற்ற தமிழ் மாணவர்களின் ஒருபகுதி

    பயிற்சி முடித்த  தமிழ் மாணவர்களின் முதல் இலக்கியப் படைப்புகள் ’என்மொழி’ என்னும் சிறப்பிதழில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மியன்மார் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் செவ்விலக்கியப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மியன்மார் நாட்டின் தமிழ்க்கல்விச்சூழல் குறித்த கருத்தரங்கமும் நிகழ்த்தப்பெற்றன.

    பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகள்  கொண்ட ‘என்மொழி’ இதழின் அட்டைப்படம். (இதழை வாசிக்க) : https://archive.org/details/enmozhi-myanmar-magazine-special-issue-2026-jun/mode/2up )

    [முகப்புப் படம்: தமிழ் பயிற்றுவிக்கும் உதவிப்பேராசிரியர் ஜெ. கார்த்திக்]

    Share