Blog

  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
    நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்
    வஞ்சத்தை நீக்கி மறுநினைவு வாராமல்
    செஞ்சரணத் தாளைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே. 1.

    ஏ மனமே! திருவருள் சக்திகளான இறைவனுடைய இதயத்தின் ஞானசக்தி, சிரத்திலுள்ள பராசக்தி, தலை முடியிலுள்ள ஆதிசக்தி, கவசத்தில் அமைந்த இச்சா சக்தி, கண்களில் அமைந்த கிரியா சக்தி ஆகிய இந்த ஐந்து சக்திகளையும் வணங்கி, அவற்றைக் கொண்டு ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி உன்வசப் படுத்திக் கொள்வதற்கு உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன் கேள்! நெஞ்சே, உன்னில் தோன்றுகின்ற வஞ்சக எண்ணத்தை அறவே நீக்கி, அது மீண்டும் உன்னிடம் தோன்றாமல் கவனமாக இருந்து, சிவந்த தாமரைப் போன்ற சிவபெருமானின் பாதகமலங்களையே எப்போதும் சிந்தை செய்வாயாக.

    *சிவபெருமானின் ஐந்து சக்திகள் குறித்த திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்:
    “எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
    விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி
    வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
    பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே”

    பொருள்: இருதய மந்திரம் இறைவனுக்கு ஞானசக்தியாகும், சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தியாகும். சிகாமந்திரம் ஆதிசக்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சக்தியாகும். நேத்திரம் கிரியா சக்தியாம்.

    அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
    சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
    உற்பத்தி செம்பொன் உடைமைப் பெருவாழ்வை நம்பிச்
    சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே. 2.

    அற்புத சக்தி படைத்த உயிர் இந்த உடலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலை மாறி அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று பரபிரம்மத்தோடு இணையும் காலத்துக்கு முன்பாகவே சற்குருவாம் தக்ஷிணாமூர்த்திப் பெருமானைப் போற்றி வணங்கி தவம் செய்து நற்கதியடைய முயலாமல் வீணே, மண்ணில் உருவான செம்பொன்னையும், மாய உலகின் கனவுபோன்ற உடைமைகளையும், வாழ்ந்த பெருவாழ்வையும் சதமென்று எண்ணி, நாகம் பிடித்து வாயில் கவ்வியுள்ள தவளையைப் போல மாயவலையில் சிக்கித் தவிக்கின்றேனே.

    உற்றார் பெற்றார் ஆர், உடன் பிறப்பார் பிள்ளைகள் ஆர்,
    மற்றார் இருந்தால் என், மாளும் போது உதவுவரோ?
    கற்றாய் இழந்த இளங் கன்றது போலே உருகிச்
    சிற்றாகிச் சிற்றினம் சேர்ந்தனையே நெஞ்சமே. 3.

    ஏ நெஞ்சே, நமக்கு உற்ற நண்பர் உறவினர்கள் யார், பெற்றோர் யார், உடன் பிறந்த சகோதர சகோதரியர் யார், பெற்ற பிள்ளைகள்தான் யார், வேறு எவராயிருந்தாலும் அவர்களெல்லாம் யார், இவர்கள் எல்லாம் நம் உயிர் இவ்வுடலைவிட்டுப் பிரிந்து போகும் போது யார் வந்து உதவுவார்? எவரும் வரமாட்டார். எனவே நீ தாய்ப்பசுவை இழந்த சின்னஞ்சிறு கன்றினைப் போல மனமுருகிச் சோர்ந்து, கீழான எண்ணங்கொண்ட சிற்றினத்து மாந்தரைச் சேர்ந்து அழிகின்றனையே.

    வீடிருக்கத், தாயிருக்க, வேண்டு மனையாள் இருக்கப்,
    பீடிருக்க, ஊணிருக்கப், பிள்ளைகளும் தாமிருக்க,
    மாடிருக்கக், கன்றிருக்க, வைத்த பொருள் இருக்கக்,
    கூடிருக்க, நீ போன கோலமென்ன கோலமே. 4.

    குடியிருக்க வீடு இருக்கிறது; பெற்று வளர்த்த தாய் இருக்கிறாள்; இனிய மணம் புரிந்த இல்லாளும் இருக்கிறாள், பெருமைகள் உன்னை நாடியிருக்கின்றன; உண்பதற்கு உணவிருக்கிறது; பெற்ற அன்பு மக்களும் கூட இருக்கின்றனர், குடும்பத்தின் புனிதத்துக்கு பசுமாடுகளும், கன்றுகளும் கூட இருக்கின்றன; இவையெல்லாம் தவிர நம் முன்னோர் சேர்த்துவைத்த பொருட்குவை பெரிதிருக்க இவை அத்தனையும் நீங்கி நீ சென்றவிடம் எங்கே, இவை எதுவும் உன்கூட வரவில்லையே.

    சந்தனமும் குங்குமமும் சாந்து பரிமளமும்
    விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக்
    கந்தமலர் சூடுகின்ற கன்னியரும் தாமிருக்க
    எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே. 5.

    மணம் வீசும் சந்தனம் உடலில் பூசி, நெற்றியிலே மங்கலமாய்க் குங்குமத்தை வைத்து, சாந்தும் பரிமள வாசனையும் விதவிதமாய்ப் பூசி நாற்புறமும் மணம்வீச, மனம் உல்லாச போதையில் மிதக்க, ஒய்யாரமாய் கொண்டையில் மணம்வீசும் மலர்கள் சூடிய மங்கையரும் உடனிருக்க, இப்படி எல்லா சுகங்களும் உன்னைச் சுற்றியிருக்க நீ எங்கே போனாய், எப்படிப் போனாய் என்பதை சிந்தை செய்யவில்லையே நெஞ்சே.

    காற்றுத் துருத்தி கடிய வினைக்குள்ளான
    ஊற்றைச் சடலத்தை உண்டென்று இருமாந்து
    பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
    ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே. 6.

    காற்றுத் துருத்தி போல காற்றை உள்வாங்கி வெளியே விட்டு உயிர்வாழ்ந்து, தீவினைகள் எத்தனை உண்டோ அத்தனையும் செய்து கொண்டு, நாற்றமெடுத்த இந்த சடலம் போன்ற உடலை நித்தியமானது என்று எண்ணி ஆணவத்தோடு இருந்தாயே, பசி என்று தெரிவோடு பிச்சை கேட்டு அலையும் ஒரு பரதேசிக்கு பசியாற வயிற்றுக்கு அன்னம் கொடுக்காமல், ஆற்றுநீர் போல ஓடிப்போய் கடலில் கலந்தாயே நெஞ்சே.

    நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே எண்ணிப்
    பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளிக்காமல்
    போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது
    ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே. 7.

    நீரின்மேல் குமிழி போன்று தோன்றி உடனே மறைந்து போகும் வாழ்க்கையை சதமென்றெண்ணிக் கொண்டு, பசித்து வந்தவர்க்கு ஒரு பாக்கின் அளவுகூட சோறு போடாமல் கஞ்சத்தனம் செய்து வாழ்ந்துவிட்டு, நெஞ்சில் கபம் வந்து அடைத்துக் கொண்டு எமதூதன் பிடித்து இழுக்கும்போது அந்தத் துன்பத்தை எப்படி அனுபவிப்பது என்பது தெரியாமல் இருக்கிறாயே என் நெஞ்சே.

    சின்னஞ் சிறு நுதலாள் செய்த பல வினையான்
    முன் அந்த மார்பில் முளைத்த சிலந்தி விம்மி
    வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி
    அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே. 8.

    அழகிய சிறு நெற்றியை உடைய பெண்ணானவள் முன்பு செய்த வினைப்பயனால் அவள் மார்பில் விம்மி எழுந்த தளதளத்த தனங்களின் மேல் மோகம் கொண்டு, மயங்கிக் கிடந்து, முகம் வாடி வாயில் புறத்தில் வந்து நின்று வயிற்றுக்கு உணவு கேட்டு நிற்கும் ஏழை பிச்சைக்காரனுக்கு ஒரு சிறிது அன்னம் அளித்து அவன் பசியைப் போக்கும் வழியினை அறிந்திருக்கவில்லையே ஏ மனமே. (இதே கருத்தை வள்ளலார் இராமலிங்க அடிகளும் “கன்னியர்தம் மார்பிடங் கொண்டலைக்கும் புன்சீழ்க் கட்டிகளைக் கருதி மனங் கலங்கி வீணே, அன்னியனா யலைகின்றேன், மயக்கம் நீக்கி அடிமை கொளல் ஆகாதோ, அருட்பொற்குன்றே” என்று சொல்கிறார்.)

    ஓட்டைத் துருத்தியை உடையும் புழுக் கூட்டை
    ஆட்டுஞ் சிவசித்தர் அருளை மிகப் போற்றியே
    வீட்டைத் திறந்து வெளியை ஒளியால் அழைத்துக்
    காட்டும் பொருள் இதென்று கருதிலையே நெஞ்சமே. 9.

    ஒன்பது வாசல்கள் கொண்டதான தோல்பையைப் போன்ற இழிந்ததும், தட்டினால் உடைந்து போகின்ற பாங்கில் அமைந்த இந்த பாழ் உடலை ஆட்டிவைப்பவன் அந்த பரமேஸ்வரன். அந்த சர்வ வல்லமை படைத்த இறைவனைத் தொழுது அவன் திருவருளை வேண்டி, ஆணவ மலத்தால் ஆன இந்த கோட்டையைத் திறந்து, அதனுள் பரவெளியில் பரவிக் கிடக்கும் ஜோதிஸ்வரூபனை அந்த இறைவன் சக்தியால் உள்ளே அழைத்து, உண்மைப் பொருள் அந்தப் பரம்பொருளே என்பதை நீ உணர்ந்திருக்கவில்லையே என் மனமே.

    ஊன் பொதிந்த காயமுனைந்த புழுக் கூட்டைத்
    தான் சுமந்ததல்லால் நீ சற்குருவைப் போற்றாமல்
    கான்பரந்த வெள்ளங் கரைபுரளக் கண்டேகி
    மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே. 10.

    இந்த பூதவுடல் இருக்கிறதே இது மாமிசத்தால் ஆனது, இதனுள் சிறிது சிறிதாக அரித்து உட்கொள்ளும் ஆயிரமாயிரம் புழுக்கள் அடங்கிய கூடு இது. இந்த அற்பப் மாமிசப் பிண்டத்தைத் தூக்கிக் கொண்டு அலைந்தாயே தவிர உண்மையான வழிகாட்டக்கூடிய சற்குரு அந்த பரப்பிரம்மம் என்பதை உணராமல், கானல் நீரை உண்மையான நீரோடை என்று நம்பி அதன் பின்னால் ஓடி ஏமாந்து போன மீனைப் போல துயரமடைந்து நிற்கிறாயே என் நெஞ்சே.

    Share
  • The Lonely Fisherman – Water colour

     

    ஓவியம் : ஆர்.எஸ். மணி

     

    The lonely fisherman- Watercolor (1)

     

    தனிமையில் தேடல்

    தூரத்தே தொடுவானம் – அதைத்
    தொடும்நாள் வருவதெங்கே
    நீயெங்கோ இருக்கின்றாய்
    இருந்தாலும் வெகு அருகே!

    தனிப் படகில் என் பயணம்:
    முடியாத தொடர்ப் பயணம்
    அன்பின் வலைவீசி
    உன்னை நான் தேடுகிறேன்.
    அதிலே நீ விழுந்து
    தவித்தாலும் பொறுக்காது
    விழாமல் இருந்தாலும்
    என் மனது கேட்காது.

    —ஆர்.எஸ்.மணி
    நவம்பர் 10,2013 (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு!… 96

    மலர்சபா

     

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*

     

    கவுந்திஅடிகள் ஊழின் வலிமையை எடுத்துக் காட்டியதோடு மதுரை செல்ல இருக்கும்

    தமது விருப்பத்தையும் வெளியிடுதல்

     

    அது கேட்ட கவுந்தியடிகள் கூறலானார்

    “பாடகம் அணிந்த இவள் சீறடிகள்

    பரல் கற்கள் நிறைந்த

    பாதையில் செல்வதைப்

    பொறுத்திட மாட்டா;

    இடையில் காடுகள் நிறைந்த நாட்டினை

    நீங்கள் கடப்பதும் ஏற்புடையதாகாது;

    நீங்கள் இங்ஙனம் வந்ததை

    யாரும் அறிந்திடவில்லையோ?

     

    இவள் இத்தகைய

    பயணம் செல்வது ஏற்புடையதன்று;

    பயணத்தை விடுத்து

    இங்கே தங்கிவிடுங்கள் என்று

    நான் கூறினாலும்

    நீங்கள் ஏற்கப்போவதில்லை;

     

    குற்றமற்ற உரைகள் பகரும்

    அறிவுடைய மாதவர்களின்

    உரைகளைக் கேட்பதற்காகவும்

    அங்கு இருக்கும் அருகக் கடவுளின்

    அடிகளை வணங்கித் தொழவும்

    நானும் மதுரை செல்லவேண்டும் என்றிருந்தேன்.

    புறப்படுங்கள்! நானும் உங்களுடன்

    மதுரைக்கு வருகிறேன்.”

     

    கோவலன்அடிகளின்வருகையைஉவந்துகூறல்”

     

    இங்ஙனம் உரைத்த கவுந்தியடிகளிடம்

    கோவலன் கைகளால் வணங்கிப்பின் கூறினான்:

    “அடிகள் நீங்களே அருள்செய்வீராயின்,

    வளைந்த வளையணிந்த

    தோள்களையுடைய இவளது

    துன்பம் எல்லாம் போக்கியவன் ஆவேன்.”

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 51 – 63

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • வளையம்

    தமிழ்த்தேனீ

    பக்கத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் குறட்டை அவர் காதைப் பிளந்தது.

    எதுக்கு இப்பிடி குறட்டை விடறா இவ, என்றபடி காமாக்‌ஷியை மெதுவே தொட்டார், சற்றே குறட்டை நின்றது.

    சற்று நேரம் கழித்து மீண்டும் அதே குறட்டை ஒலி.

    ஹுஹும்  இங்கே தூங்க முடியாது என்றபடி சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு வராந்தாவுக்கு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார் சபேசன்.

    புகை வளையம் சுழன்றது, அதென்னவோ இந்தப் புகை பிடிக்கும் வழக்கம் தப்போ, தவறோ, சரியோ, இதைப் பிடிக்கும்போது அப்பிடியே சுழல் சுழலா வளையம் விட்டு அந்த வளையம்  சுழன்றுகொண்டே மெதுவே கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றிலே அலையும் கருமேகம் போல் அலைவதை வேடிக்கை பார்ப்பது அவருக்கு பிடிக்கும்.

    அது சரி இந்தக் குறட்டைக்கு மட்டும் ஆண் பெண் பேதமே கிடையாதோ!

    எல்லாரையும் ஆட்டிவைக்கறதே என்று நினைக்கையில் அவருக்கு ஒரு புறம் சிரிப்பாக வந்தாலும்  மறு புறம் கோவமாக வந்தது.

    அவராலே ஒரு சின்ன சத்தம் கேட்டாக்கூட தூங்க முடியாது, மேலே ஏதாவது  பட்டாக் கூட முழிப்பு வந்துடும். ரொம்ப சென்சிட்டிவ் என்ன செய்யறது அவர்  வாங்கி வந்த வரம் அப்படி.

    வாயைத் திறந்து கொண்டு தூங்குவதால்தான் குறட்டை வருகிறது; அது அவ்வளவு ஆரோக்கியமுமல்ல என்று பல முறை அவளுக்கு சொல்லியாயிற்று.

    அவளைச் சொல்லியும் குத்தமில்லே!  காலையிலே எழுந்ததுலேருந்து ஏதாவது வேலை செஞ்சிண்டே இருக்கா  படுக்கும் போது அலுத்துப் போறது பாவம்.

    சரி ஏதாவது நல்ல டாக்டரை கன்ஸல்ட் பண்ணலாம் என்று நினைத்தபடி இன்னமும் ஆழமாக  குறட்டையைப் பற்றி சிந்திக்கத் ​தொடங்கினார்.

    சுரீரென்று விரலில் யாரோ சூடு போட்டார்கள். ‘ஆ’ என்று கத்தினார்.

    கையில் இருந்த சிகரெட் கங்கு அவர் விரலைப் பதம் பார்த்திருக்கிறது.

    ‘சீ ‘என்றபடி அதைத் தூக்கி எறிந்தார்.

    சில நேரங்களில் இப்படித்தான் பல விஷயங்களை தூக்கிப் போடணும்னு தோணும். தூக்கியும் போடுவோம். ஆனால் நிரந்தரமா தூக்கிப் போட முடியாது.

    சிகரெட்டை மட்டும் இல்லை, பலவற்றை, இது ஒரு அவஸ்தை வாழ்க்கையில், தீர்மானமில்லாத வாழ்க்கை.

    குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய்வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள் நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும் அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம். இதன் காரணமாக குறட்டை விட நேரிடலாம்.”  என்று விக்கி பீடியாவில் படித்தது நினைவுக்கு  வந்தது.

    முதல்லே இவளை டாக்டர்கிட்ட காட்டணும்  என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்  .

    சரி போய்ப் படுத்துக்கலாம் தூக்கம் வருகிறதான்னு பாப்போம் என்று தீர்மானித்து  மறுபடியும் போய்ப் படுத்தார் .

    புரண்டு புரண்டு படுத்தவர் தாகம் எடுக்கறா மாதிரி இருக்கு. லைட்டைப் போட்டா  இவ கத்துவா தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு. சரி, இருட்டிலேயே  தண்ணீர் பாட்டிலை தேடி கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு  மறுபடியும் வந்து படுக்கலாம் என்று இருட்டிலேயே துழாவித் துழாவி கட்டிலருகே வந்தவர்   கட்டிலின் கால் மேலே இடித்துக்கொண்டு ‘ஆ ஆ’  என்று வலி தாங்க முடியாமல்  கத்தினார்.

    பேசனும் காமாக்‌ஷியும் குடும்ப வைத்தியர் சௌந்தர்ராஜனினின் எதிரே உட்கார்ந்திருந்தனர்.

    டாக்டர்  சௌந்தர்ராஜன் சொல்லிக் கொண்டிருந்தார், “இதோ பாருங்கோ  நல்லா செக் பண்ணியாச்சு; எதுவும் ப்ரச்சனை இல்லே, சாதாரணமா குறட்டை விடறது சகஜம்தான், படுக்கும் போது நாம வாயைத் திறந்துண்டு தூங்கக் கூடாதுன்னு நெனைச்சுண்டு படுத்துக்கணும். நாம  மனசைக் கட்டுப் படுத்தினா எதை வேணா ஜெயிக்கலாம்.

    மூக்காலே மூச்சு விட்டாலே குறட்டை நின்னுடும். வேற எதுவும் பயப்படறா மாதிரி இல்லே” என்றார்.

    “அது இல்லே டாக்டர் இவர் விடற  குறட்டையைக் கூட சமாளிக்கலாம், ஆனா  தூக்கத்திலே நடக்கறாரு இவரு, இவர் தூக்கத்திலேயே எழுந்து,  எங்க வீட்டு நாயி இருக்கே டாமி  அதைக் கட்டிப் போடற இடத்துலே போயி நிக்கறாரு.

    அதுகிட்ட போயி அன்பாத் தடவிக் குடுக்கறாரு. ஏற்கெனவே அதுக்கு இவரைப் பார்த்தாலே ஆகாது; கடிச்சு வைக்கப் போறதேன்னு பயமா இருக்கு டாக்டர்.

    இப்போ பாரு குறட்டை நின்னு போச்சு  அப்பிடீன்னு அதுகிட்டே ஏதோ பேசிண்டு இருக்காரு பாதி ராத்திரியிலே.

    அது உர் உர்ன்னு கத்துது.

    தூக்கத்திலே நடக்கற வியாதிக்கு ஏதாவது மருந்து குடுங்க, இவரை எப்பிடியாவது  குணப்படுத்துங்க டாக்டர்” என்றாள் காமாக்‌ஷி.

    சுபம்

    Share
  • வார ராசி பலன் 11.11.13-17.11.13

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, வெளியூர், வெளிநாட்டிலிருந்து இனிமையான செய்திகள் வந்து சேரும். பெண்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் முயற்சிகளை மேற்கொள்வார்கள். மாணவர்களின்  தோற்றத்தில் பொலிவும் முகத்தில் வசீகரமும் ஏற்படும்.  அரசு வழியில் சிலருக்கு பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு . சக கலைஞர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியில் இருப்பவர்கள் மன அமைதி பெற யோகா, மூச்சுப்பயிற்சி  போன்றவற்றைச் செய்யவும். பொது வாழ்வில் பதற்றப்படாமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு முடிக்கவும். .
    ரிஷபம்: மாணவர்களின் மனதில் இருந்த தளர்ச்சியும்,தாழ்வு மனப்பான்மையும் நீங்கி புதிய தெளிவு பிறக்கும். சுயதொழில் புரிபவர்கள்  எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வருமானம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் .உற்றார், உறவினர்கள் உங்கள் இல்லம்தேடி வருவார்கள். சந்தோஷம் இருந்தாலு,ம், பெண்களின் வேலைப்பளுவும் அதிகரிக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் பொது வாழ்வில் உள்ளவர்கள் , தங்கள் கடமைகளை முடிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். மாணவர்கள் தங்களின் திறமையான பேச்சினால் மற்றவர்களைக் கவர்வார்கள்.
    மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் வழிகாட்டுதலால், பெண்கள் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண்பர். பணியில் இருப்பவர்களின் அமைதியை தேவையற்ற இடமாற்றம் கெடுக்கலாம். மாணவர்கள் தங்களின் நட்பு கெடாமலிருக்க, நண்பர்க ளுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருங்கள். ஏற்ற இறக்கமான பொருளாதாரம் இருந்தாலும் கடும் முயற்சியால் வியாபாரிகள் நிலைமையை சமாளித்து விடுவர். சுய தொழில் புரிபவர்கள் முக்கியமான வேலையில் உங்கள் முழு கவனம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம். கலைஞர்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவான கால நேரம் வரும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது.
    கடகம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்கள் நம்பிக்கைக்கு மேல் மற்றவரின் சந்தே கப் பார்வை விழாமல் பார்த்துக் கொண்டால், எந்தப் பணியும் சுமையாய் தோன் றாது.வியாபாரிகள் பண இருப்புக்கேற்றவாறு சரக்குகளை வாங்கிக் கொள்ளுதல் அவசியம். மாணவர்கள் குறுக்கு வழிகளில் சிந்தனையை அலைய விடாதிருந்தால், நாடி வரும் நன்மைகளை தக்க வைத்துக் கொள்ள இயலும். பெண்கள் உடல் நலத்தை நன்றாக பராமரித்தால், உற்சாகம் குறையாமல் பணிகளில் ஈடுபடமுடியும். மற்றவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருப்பது அவசியம்.
    சிம்மம்: மாணவர்கள் உடனிருந்து தொல்லை தருபவர்களிடம், எச்சரிக்கையாய் நடந் துகொண்டால், எந்தத் தொந்தரவும் புதிதாய் முளைக்காமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வந்தால், அனைத்தும் சீராகவே நடக்கும். நினைவாற்றல் பெருகுவதால், மாணவர்களுக்கு தங்கள் வேலைகளை முடிப்பது சுலபமாக இருக்கும். பெண்கள் தேவையில்லாமல் அக்கம்பக்கம் பக்கத்தாரின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் தீயவ ரை ஒதுக்கினால்,வளமான வாழ்க்கை அமையும். சக பணியாளர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பை பெற இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்.
    கன்னி: முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாக செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும். கல்வித் தொடர்பாக மேற்கொள் ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமைவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் பாடங்க ளைப் பயில்வார்கள். வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்கள் வாகனம் தொடர்பான ஆவணங்களை கையிலேயே வைத்திருந்தால்,வீண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அவ்வப்போது தோன்றும் சிறிய நெருக்கடிகளை தெளிவுடனும், திறமையுடனும் கையாள்வீர்கள். இந்த வாரம் சொத்து பிரச்னைகளை சற்று ஆறப் போடுங்கள். உங்களுக்கு சாதகமான நிலை மலரும்.
    துலாம்: வேலை செய்யும் இடத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள். வியாபாரிகள் வேலையாட்களை அரவணைத்துச் சென்றால், எடுத்துக் கொண்ட பணிகள் முழுமையாக நிறைவடையும். தொழில் ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும், கலைஞர்கள் தங்கள் உழைப்பால் வெற்றிப் பெற்று தங்கள் பெயரைத் தக்க வைத்துக் கொள்வர். மாணவர்கள் புதிய இடங்களில், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாய் பழகவும். பெண்க ளின் விடா முயற்சியாலும், பொறுமையாலும், உறவுகளிடையே இருந்த பிணக்கும், சண்டையும் விலகி சமரசம் மலரும்.
    விருச்சிகம்: பெண்கள் , பொருளாதார ரீதியாக, வாக்குறுதிகளை அளக்கும் முன் யோசனை செய்வது நல்லது. ஒவ்வாமை தோன்றும் வாய்ப்பிருப்பதால், வயதானவர்கள் உணவு மற்றும் மருந்து விஷயங்களில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அலுவலக த்தில் எவ்வளவுதான் பாடுபட்டாலும், சில நேரம் உங்களுக்கு வரும் நல்ல பெயரை மற்றவர் தட்டிக் கொண்டு போவார்.வியாபாரிகள் இந்த வாரம் புதிய செலவுகளையும், முதலீடுகளையும் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. கலைஞர்கள் வங்கிக்கான கடன் தொகைகளை குறித்த கெடுவுக்குள் செலுத்திவிட்டால், அபராதம் அபராதம் கட்டுதல், வீண் மன உளைச்சல் ஆகிய இரண்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
    தனுசு: இந்த வாரம் உறவுகளால் ஏற்படும் சிக்கல்களை பெண்கள் சாமர்த்தியமாக கையாள வேண்டிய சூழல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய வழக்கு விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு உள்ளதால், அமைதியாய் உங்கள் பணியில் கவனம் செலுத்தி வருவது புத்திசாலித்தனம். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், அதற்கேற்ற வரவுகளும் தாராளமாக இருக்கும். வியாபாரிகள் வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கண்களைப் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தி வாருங்கள். தேர்வு நேரங்களில் படிப்பதில் எந்த சுணக்கமும் ஏற்படாது.
    மகரம்:  உங்கள் செல்லப் பிராணிகளால் அக்கம்பக்கத்தாருக்கு சில தொல்லைகள் உண்டாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உழைப்புக்குத் தரும் முக்கியத் துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். மாணவர்கள் பதற்றம், மறதி-இரண்டையும் தவிர்த்து விட்டால், படிப்புல் உங்கள் மனதை ஒருமுகப்ப டுத்தி வெற்றி பெற முடியும். பெண்கள் இல்லத்தில் தோன்றும் சிறிய உரசல்களை பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்து கொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! கலைஞர்கள் தராமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் உங்கள் அக்கறை அவசியம்.
    கும்பம்: பெண்கள் உறவுகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது பல பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். வியாபாரிகள் பணப் பரிமாற்றம், ஒப்பந் தங்கள் ஆகிவற்றில் எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். தனியார் துறையில் பணி புரிபவர்கள் நல்ல பெயரைப் பெறுவதற்கு கூடுதல் கவனமும், கூடுதல் உழைப்பும் தேவை. பிள்ளைகளின் விஷயத்தில் அதிகாரத்தை விட அன்பான வழிகாட்டல் அவர்களை நல்வழிப்படுத்த உதவும். பங்குகளை வாங்கி விற்பவர்கள் அதிக ஆசைப்பட்டால், பங்குச் சந்தையில் அதிக பணம் முடங்கி விடும். பயணங்களில் அறிமுகம் இல்லாதவரிடம் உங்கள் சொந்த விஷயங்களைப் பரிமாற வேண்டாம் .
    மீனம்: .மாணவர்கள் எந்த சூழலிலும், கோபமான வார்த்தைகளை பயன்படுத்துவ தில்லை என்பதில் உறுதியாக இருந்தால், அடுத்தவரின் சகாயம் குறையாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்கள் விருப்பு, வெறுப்புக்களை தேவையற்ற இடங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து விடவும். விடாமுயற்சி மூலமே விரும்பி யதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளும் கலைஞர்களுக்கு வெற்றியோடு, வாய்ப்பு களும் பல வந்து சேரும். இந்த வாரம் பெண்கள் முழங்கால் வலி, பல் உபாதை களுக்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். எனவே அதிக அலைச்சல், குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்- இரண்டையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

    Share
  • இரத்தினக் கம்பளம்

    பி. தமிழ்முகில் நீலமேகம்

     

    உன் பிஞ்சுப் பாதம்

    மண்ணில் பதிய

    பூமித் தாயும் அகமகிழ்ந்து

    உளம் பூரித்து – ஆனந்தம் வழிய

    புன்னகையுடன்  உனக்கு

    இரத்தினக் கம்பளம் விரித்து

    வரவேற்பளிக்கிறாளோ ??

    கள்ளமறியா கிள்ளையே !!!

    அவளை  எந்நாளும் காத்திட

    உறுதிகொண்டால் – எந்நாளும்

    நம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே !!!

    நல்வாழ்வு வாழ மண் – மழை காக்க

    மனதில்  உறுதி கொள்வோமே !!!

    இரத்தினக் கம்பளத்தின் எழிலினை

    இரசித்து மகிழ்வோமே !!!

     

     

    Share
  • ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கி செல்லும் இந்திய விண்ணுளவி

     

    Mangalyaan -1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    1.  http://www.bbc.co.uk/news/world-24826253

    [Video of Launching India’s Mars Mission]

    2.  http://www.isro.org/mars/updates.aspx 

    [Mars Orbiter Status Update] 

    3.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx 

    [Pre-Launch Updates]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UDWyRhQzlEc 

    [Global Excitement about India’s Mars Mission]

    +++++++

     

     

    செந்நிறக் கோள் செல்லும் ஆசியப்

    பந்தயம் வலுக்கிறது !

    முந்திச் சென்றது ரஷ்யா, நாசா !

    பிந்திச் சென்றது ஈசா !

    இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில்

    உந்தி அடுத்தாண்டு முடிவில்

    செந்நிறக் கோள் சுற்றும்

    சைனா, ஜப்பானுக்கு முன்பாக !

    சந்திரனில் முற்றுகை இட்டது முன்பு

    இந்திய மூவர்ணக் கொடி !

    யந்திரத் திறமை காட்டும் நுணுக்கப்

    பந்தயம் தான் !

    விந்தை புரிந்தது இந்தியா !

    இரண்டாம் சந்திராயன்

    நிலவில் இறக்கி வைக்கும்

    தளவுளவி  எதிர்பாராது

    தாமத மானது !

    நாசாவின் நவீனத் தளவுளவி

    தடம் வைத்து ச் சோதிக்கும்  !

    செவ்வாய் ஈர்ப்பு வலையில்

    சீராய் இறங்குவது

    பேரளவு சிரமமானது !  ஆயினும்

    வெற்றி கிட்டுவது

    எட்டும் சாதனை தான் !

    +++++++++++

    India's Mars Mission -1

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

    PSLV -XL Launch Rocket

    Mars Orbiter path

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்

    ​ ​

    படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    “ஏன் இந்தியா விண்வெளித் தேடல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது  என்று, கடந்த 50 ஆண்டுகளாக ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  இதற்கு நாங்கள் கூறும் பதில் இன்று, நாளை, எதிர்காலத்தில் இதுவாக இருக்கும் : ‘மனிதனின் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்  என்பதே அதற்கொரு காரணம்.’  தேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சொற்ப நிதிச் செலவில் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற ஒரு பெரும் புரட்சி எழுந்துள்ளது.   சைனாவோடு இந்தியா போட்டி இடுகிறது என்பது சரியல்ல.  வேறு யாருடனும் போட்டியிடப் போவதில்லை.  நாங்கள் எங்களுக்குள்தான்  பந்தயம் வைத்துக் கொள்கிறோம் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.  நாங்கள் மேன்மைப்பட வேண்டும்;  செம்மைப்பட வேண்டும்;  புதிய வினைப்பாடுகளை உருவாக்க வேண்டும். ”

    டாக்டர் கே. ராதாகிருஷ்னன்  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    Mars Earth Comparision

    செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய சுற்றுளவி மங்கல்யான் 

    2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, செந்நிறக் கோள் செவ்வாயை நோக்கிச் செல்லும் சுற்றுளவி மங்கல்யானை விண்வெளியில் ஏவி, அண்டவெளிச் சாதனையில் இந்தியா ஓர் புதிய மைல் கல்லை நாட்டியுள்ளது.  இந்த சுற்றுளவி 2013 நவம்பர் மாத இறுதி வரைப் [நவம்பர் 30 ஆம் தேதி] பன்முறைப் பூமியைச் சுற்றி, புவியீர்ப்பு சுழல் வீச்சில் [Gravitational Flyby Swing] தன் உந்து வேகத்தை விரைவாக்கி, பரிதி மையச் செவ்வாய் நோக்குச் சுழல்வீதியில் [நீள்வட்டச் சுழல்வீதி]  [Heliocentric Mars Transfer Orbit] நேராகச் செல்லும்.  இந்த 780 மில்லியன் கி. மீ.  [470 மில்லியன் மைல்] தூர நெடும் பயணத்துக்கு சுமார் 300 நாட்கள் ஆகும்.   சுற்றுளவி 2014 செப்டம்பர் 24 இல் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கப் பட்டு செந்நிறக் கோளைச் சுற்ற ஆரம்பிக்கும்.  மங்கல்யான் பணி  6 முதல் 10 மாதங்கள் நீடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  இந்தச் சுற்றுளவியைத் தூக்கிச் சென்ற இந்திய ராக்கெட் PSLV-XL .   அதுவும், சுற்றுளவியும் முழுக்க முழுக்க இந்தியச் சாதனங்களில் இந்தியரால் அமைக்கப் பட்டவை.  மங்கல்யான் 2014 செப்டம்பரில் செந்நிறக் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றி கரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப் படும்.   அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும்.  ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சைனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள்  செந்நிறக் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன.   இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.

    மங்கல்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு :  454 கோடி ரூபாய் [US $ 69 million].  சுற்றுளவியின் விலை மதிப்பு மட்டும் அத்தொகையில் :  ரூபாய் 154 கோடி [[US $. 23 million].  இந்தப் பணி வெற்றி அடைய நேரடியாக உழைத்தவர் சுமார் : 2000 பேர்கள்.  மறைமுகமாக விண்வெளிப் பணி புரிந்தவர் : 16,000 பேர்கள்.

    Mangalyaan -2

    ராக்கெட் ஏவுவதற்கு ஆளுநராக மேற்பார்வை செய்தவர்: பி. குஞ்சி கிருஷ்ணன்;  சுற்றுளவி அனுப்ப ஆளுமை செய்த மேற்பார்வையாளர் : எஸ்.கே. சிவக்குமார்;   மங்கல்யான் பயண ஆளுநர் : மயிலசாமி அண்ணாத்துரை;  திட்ட ஆளுநர் :  எஸ். அருணன்.

    மங்கல்யான் சுற்றுளவியின் இப்போதைய [நவம்பர் 8, 2013] தகவல் :  பூமியை இரண்டாம் முறை வெற்றி கரமாகச் சுற்றி, சுற்றுளவியின் நீள்தூரம் [Apogee]  28,814 கி.மீ. லிருந்து 40, 186 கி.மீ. நீண்டுள்ளது.

    http://www.isro.org/mars/updates.aspx    [Mars Orbiter Status Update] 

    மங்கல்யான் சுற்றுளவியின் குறிக்கோள் என்ன ?

    1.  விண்வெளிப் பயணங்களுக்குத் துக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது;  விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது;  அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது.  விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.

    2.  செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது;  அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது;  அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.

    3.   செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது.   அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.

    4.  செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.

    Mangalyaan Orbit to Mars

    “இந்த ஆண்டு முடிவில் [2013 நவம்பர் 5] பரபரப்பூட்டும் அடுத்த விண்வெளிச் சவால் சாதனையாக, முதன் முறை இந்தியா செவ்வாய்க் கோளைச் சுற்றிவரத் துணிந்து செல்லப் போகிறது.   அதற்கு முன்பாக ஜூன் 2013 இல் இந்தியா தன் முதல் பயண வழிகாட்டி துணைக்கோள் [Navigational Satellite] ஒன்றை அனுப்பப் போகிறது.  பூமியைச் சுற்ற துணைக்கோள் ஒன்றை விண்வெளியில் பயணம் செய்ய இட்டுவர  சுமார் 2000 மேற்பட்ட நபர் கூட்டுழைக்கத் தேவைப்படுகிறார்.”

    டாக்டர் கே. ராதாகிருஷ்ணன்,  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    “இந்தியா ஏழைகள் வாழும் ஒரு தேசம். அதே சமயத்தில் அது பொருளாதாரத் துறைகளில் முன்னேறி வரும் ஆசிய நாடு.  நடுத்தர ஊதியம் பெற்றுவரும் மக்கள் தேசம்.  அது G20 தேசங்களில் ஒன்று.  எங்கள் தேசம் பலர் கடுமையாய் உழைத்து வாழும் ஏழ்மைப் பூமியே.  ஆனால் பூகோளத்தில் ஆற்றல் பெற்று வரும் தேசம். நாங்கள் இரட்டைக் குறிக்கோள் உள்ள ஒற்றைத் தேசத்தவரே.  இரண்டையும் நாங்கள்  பூர்த்தி செய்ய வேண்டும்.  பூகோள அறிவைத் தேடி அளிப்பதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும்.  அதே சமயம் நாங்கள் மக்கள்  ஏழ்மையையும் நீக்க வேண்டும்.”

    நிஷா அகர்வால் [தலமை அதிகாரி, OXFAM in India]  

    Mars Mission 2013 Nov 5

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர்  [நவம்பர் 13, 2008]

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

    Mars Mission Chief

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    இந்தியாவின்  அடுத்த பரப்பரப்பான விண்வெளி ஆய்வுத் திட்டம் செவ்வாய்க் கோளை வட்டமிட்டு அறிவது.

    2013 ஆண்டு முடிவில் திட்டமிடப் பட்ட செவ்வாய்க் கோள் திட்டம் தாமதம் அடையாது என்று இந்திய விண்வெளி ஆய்வகத்தின் அதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.  செவ்வாய்க் கோள் சுற்றுளவி [Mars Orbiter] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக் கோட்டாவில்  [PSLC – Polar Satellite Launch Vehicle, Satish Dhawan Space Centre] PSLC ராக்கெட்டில் ஏவப்பட்டும்.   2014 இல் விண்ணுளவும் சுற்றுளவி பயணப் பாதையில் ஒரு வால்மீன் போக்கு குறுக்கிட்டாலும், அதனால் பாதகம் ஏற்படாது என்று அவர் உறுதியாக நம்புகிறார்.  அந்த வால்மீன் 2013 A1 [Siding Spring] என்று குறிப்பிடப் படுகிறது.  வால்மீன் விண்ணுளவியோடு மோதும் வாய்ப்பு நிகழ்ச்சி 1 in 120,000 என்று கணக்கிடப் பட்டுள்ளது.  செவ்வாய்க் கோளிலிருந்து சுமார் 50,000 கி.மீ. [30,000 மைல்] தூரத்தில் வால்மீன் கடந்து செல்கிறது.   2013 நாணய மதிப்பீட்டில் 450 கோடி ரூபாய் நிதிச் செலவில் “மங்கல்யான்” [Mangalyaan] செந்நிறக் கோள் திட்டம் 2013 அக்டோபர்-நவம்பர்  மாத நடுவே துவங்கும் என்று தெரிகிறது.  சந்திரயான் திட்டம் நிலவைச் சார்ந்தது போல், மங்கல்யான் திட்டம் செவ்வாய்க் கோளைக் குறிவைப்பது.   திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நிலவுக்கு அப்பால் செய்யும் மனிதரற்ற துணைக்கோள் பயணப் பயிற்சி, மற்றும் செவ்வாய்த் தளத்தில் உயிரின மலர்ச்சி நேர்ந்ததா என்று அறிவதும், செவ்வாய்க் கோளில் ஏன் சூழ் மண்டலம் இல்லாது போனது என்றும் அறிவதே.  மேலும் செவ்வாய்க் கோள் எவ்விதம் நீர்வளம், கரியமில வாயுவை இழந்தது என்றும் அறிந்து கொள்வது முக்கிய ஆய்வுப் பணியாகும்.

    Fig 1G Indian Rockets

    மங்கல்யான் சுற்றுளவியின் எடை 30 பவுண்டு [14.5 கி.கிராம்].  அது மீதேன் உளவும் ஒரு கருவியைக் கொண்டு செல்லும்.  செவ்வாய்க் கோளில் மீதேன் உள்ளதா என்று அறியும்.  மீதேன் இருப்பு செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரின இம்மிகள் இருந்திருப்பதை உறுதிப் படுத்தும்.  2013 அக்டோபரில் ஏவப்படும் விண்ணுளவி, பூமியை விட்டு 2013 நவம்பர் 27 இல் நீங்கி 300 நாட்கள் [10 மாதம்] பயணம் செய்து செவ்வாய்க் கோளை நீள்வட்டத்தில் 300 மைல் நெருங்கிய தூரத்தில் [சிற்றாரம் : 500 கி.மீடர், நீளாரம் : 80,000 கி.மீ] சுற்ற ஆரம்பிக்கும்.     துணைக் கோளில் ஐந்து விதக் கருவிகள் அமைக்கப் பட்டு வேலை செய்யும். [ஒரு நிறக் காமிரா,  ஓர் உட்சிவப்பு வெப்பப் படமெடுப்பு ஏற்பாடு, [One Thermal Infrared Imaging System],  ஒரு லைமன் – ஆல்ஃபா ஒளிமானி,  [One Lyman-alpha Photometer], ஒரு வெளிக்கோள நடுத்துவக் கலவை அளவி  [One Exospheric Neutral Composition Analyser], ஒரு மீதேன் நுகர் உளவி  [One Methane Sensor].

    கடந்த சில ஆண்டுகளாக இந்தியா 35 வெளிநாட்டு துணைக் கோள்களை விண்வெளியில் ஏவி விட்டு  17.17 மில்லியன் டாலரும், 32.28 மில்லியன் ஈரோவும் [மொத்தம் : 58 மில்லியன் டாலர்] சம்பாத்தித்துள்ளது என்று பிரதம மந்திரியின் உள் நாட்டு அமைச்சர் வி. நாராயணசாமி சமீபத்தில்  அறிவித்துள்ளார்.

    Radar Tracking

    Mission Control ISRO

    செந்நிறக் கோளுக்குச் செல்வதில் உலக நாடுகள் பந்தயப் போட்டி

    2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில்  சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது.   20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல்  ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது.   அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட,  துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket)  ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங்கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது.  பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார்  90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார்.   சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது.   ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300  mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும்.   செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறை டாகர் விக்ரம் சாராபாய் தலைமையில் 1962 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது.   அந்தப் பொறி நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து புகழ் பெற்றது 2009 இல் நிலவைச் சுற்றிவர அனுப்பிய சந்திரயான் -1 விண்ணுளவி.  தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் தாமத மானது.

    Mars Orbiter

    Mars Orbiter Launch

    சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகி இப்போது  2014 ஆண்டுக்கு அப்பால்  தள்ளி வைக்கப் பட்டது.  2010 டிசம்பரில் இந்தியாவின் துணைக்கோள் ஏவும் ஏவுகணை ஒன்று பழுதாகி வங்காள விரிகுடாவில் வெடித்து வீழ்ந்தது.  இவை எல்லாம் அடுத்து 2013 இல் அனுப்பப் போகும் பேராசைச் செவ்வாய்க் கோள் குறிப்பணிக்கு ஆதரவு அளிப்பதாய்த் தெரியவில்லை.

    செவ்வாய்க் கோளுக்கு விண்ணுளவி அனுப்புவதில் ஏற்பட்ட தோல்விகள்

    இதுவரை பெற்ற அனுபவத்தில் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் திசைதிருப்பி விண்ணுளவியை  இறக்குவது, சிரமான இயக்கம்.  பலமுறை இடம் தடுமாறி, தருணம் கடந்து, வேகக் கட்டுப்பாடு முறிந்து விண்ணுளவிகள் பாதை தவறி நழுவிச் செல்வது பன்முறை நேர்ந்துள்ளது.  செவ்வாய்க் கோள் பயண வெற்றி 50/50 எதிர்பார்ப்பு வாய்ப்பு வழிகளே.   இம்முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா அடைந்த தோல்விகள் 1960 முதல் 2010 வரை (50 ஆண்டுகள்) மொத்தம் : 8.  இந்தியா இவற்றை எல்லாம் தெரிந்து தான் செந்நிறக்கோள் பயண முயற்சியில் துணிச்சலுடன் இறங்கி உள்ளது.

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட் விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும். சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.

    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.   ஆணைச் சிமிழ்  தளவுளவி இறக்கியையும்,  வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.   இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை.    அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    Fig 1E Chandrayaan-1 Mission

    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியனைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக் கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

     

    Red Planet Marsஇந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) அடுத்த இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி ஏவிச் செல்வது தாமதமாகி வருகிறது.   அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

    Indian Space Mission 1962-2007

     

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப் படும். அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

     

    Fig 5 Dr Abdul Kalam

    India’s Mars Orbiter Mission

    Mangalyaan 

    Mission type Mars  Orbiter
    Operator Indian Space Research Organization
    Website isro.org/mars/home.aspx
    Mission duration 300 days

    Spacecraft  Properties

    Bus I-1K
    Manufacturer ISAC
    Launch mass 1,350 kg (2,980 lb)
    Dry mass 500 kg (1,100 lb)
    Payload mass 15 kg (33 lb)
    Dimensions 1.5 metres (4 ft 11 in) cube
    Power 840 watts

    Start of mission

    Launch date 5 November 2013, 09:08 (2013-11-05UTC09:08Z) UTC
    Rocket PSLV-XL C25
    Launch site Satish Dhawan FLP
    Contractor ISRO

    Orbital parameters

    Reference system Areocentric
    Periareon 377 km (234 mi)
    Apoareon 80,000 km (50,000 mi)
    Inclination 17.864 degrees
    Epoch Planned

    Mars orbiter

    Orbital insertion 24 September 2014
    (Planned)

     

    The Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan, (Mars-craft) is a Mars orbiter that was successfully launched into Earth orbit on 5 November 2013 by the Indian Space Research Organisation

    ++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits : The Hindu, ISRO, NASA, ESA & other Websites

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

    1A Stars & Planets By : Duncan John [2006]

    1B. Astronomy Facts on File Dictionary (1986)

    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

    3. Indian Space Program By: Subhajit Ghosh

    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]

    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

    9. Indian Space Program By: Wikipedia

    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]

    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp

    13 Dr. Abdul Kalam : India’s Missile Programhttp://www.geocities.com/siafdu/kalam.html

    14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810231&format=html(இந்தியாவின் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது)

    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    17. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    18. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    19 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    20.  http://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]

    21.  http://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

    22.  Space Expolaration Chembers Encyclopedic Guides (1992

    23.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]

    24.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    25.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    26  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    27. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    28 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    29 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    30 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    32 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

     

    33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    34 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO–NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    35.  http://en.wikipedia.org/wiki/Category:Indian_space_program  (May 16, 2012)

    36.  http://www.time.com/time/printout/0,8816,2040085,00.html(December 29, 2010)

    37  http://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation

    38.  http://www.isro.org/gslv-d3/gslv-d3.aspx  (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)

    39.  Asia Times – India’s Space Program Takes a Hit By : Peter Brown (May 1, 2012)

    40.  Space Travel : New Moon for India  By : Morris Jones, Sydney Australia (SPX)  )May 28, 2012)

    41.  http://www.bharat-rakshak.com/MONITOR/Space%20Essay/entry3.htm  (Indian Space Program -2020)

    41 (a) http://indrus.in/articles/2012/03/30/mars_missions_race_india_takes_lead_15318.html (Russia & India Report) (March 30, 2012) [First published in The Voice of Russia]

    42.  Mars Daily : NASA’s Mars Rover Curiosity Two Weeks from Landing, Washington (AFP)  (July 16, 2012)

    43.  Mars Daily : Successes and Failures in the Past Mars Attempts, Washington (AFP)  August 1, 2012)

    44.  Mars Daily : India Set to Launch Mars Mission in 2013, Bangalore, India  (August 2, 2012)

    45.  http://antariksh-space.blogspot.ca/2013/01/isro-mars-mission.html  [January 4, 2013]

    46.  http://forum.nasaspaceflight.com/index.php?topic=29440.45  [NASA’s Space flight.com Website] May 1, 2013.

    47.   http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2013/01040907-isro-mars-update.html [Jan 4, 2013]

    48.  http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2013/04011229-isros-mars-mission-now.html  ISRO’s Mars mission now undergoing assembly and testing; NASA, ISRO agree to future space science cooperation  [January 4, 2013]

    49.  http://www.ibtimes.co.in/articles/458615/20130418/mars-mission-isro-orbiter-launch-comet-science.htm  [India’s Mars Mission: No Delay in Orbiter Launch, Says ISRO Chief]  [April 18, 2013]

    50.  http://www.marsdaily.com/reports/India_reaches_for_Mars_on_prestige_space_mission_999.html  [Nov 3, 2013]

    51.  http://www.marsdaily.com/reports/Mythbusting_Indias_Mars_Mission_999.html  [Nov. 6, 2013]

    52.  http://indiatoday.intoday.in/story/india-mars-orbit-mission-isro-sriharikota/1/321629.html [Nov 5, 2013]

    53. http://www.marsdaily.com/reports/Indian_Mars_mission_blasts_off_from_southern_spaceport_999.html  [Nov 5, 2013]

    54.  http://www.bbc.co.uk/news/world-24826253  [Nov. 5, 2013]

    55.  http://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation  [Nov 8, 2013]

    56.  http://www.isro.org/  [Nov 8, 2013]

    57.  http://www.isro.org/mars/home.aspx  [Nov 8, 2013]

    58.  http://en.wikipedia.org/wiki/Mars_Orbiter_Mission [Nov. 8, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (Nov 8, 2013)

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • சூரன் முக்தி

    சு. ரவி

    034

    பாடல் ஒலி வடிவில்:

    அண்டம் பகி ரண்டம் பொடிபட,அலை
    பொங்கும் கடல் சுண்டும் படியெரியழல்
    எங்கும் எழ கங்குல் பகலறயுக
    அந்தம் என மின்னொளிர் வேலாடும்

    கட்டற்றிடும் எட்டுத் திசைகளும், ஒளி
    வெட்டித் தறிகெட்டுச் சுழலுற,முகில்
    சட்டச்சட சட்டச் சடசடவென
    வெற்றிப் பறை கொட்டி யிடித்தாடும்

    பண்டஞ்சிய நெஞ்சங் களில் ஒளிவர
    பண்பஞ்சிய நெஞ்சங் களில் இருளுற
    விண்கொண்டெழு க்ரௌஞ்சம்சிறு துகளுற
    எங்கெங்கும் எழுந்தது போர்மேகம்

    பற்றற்ற மனத்துத் தவமுனிவரின்
    பக்திக்கனல் பற்றிக் கணகணவென
    நெற்றிப் பொறியுற்றுச் சிவனருளிய
    சக்திக் கனல் சீரலைவாய் மேவும்!

    மண்ணஞ்சிய சிங்கன் தலையொருபுறம்
    துண்டம்பட அங்கம் புழுதியில் விழ
    கந்தன்படை விஞ்சும் ரணகளமதில்
    பொங்கும் செங்குருதியின் ஆறோடும்

    மட்டற்ற மகிழ்ச்சிக் களியொடு இரை
    தட்டற்று கிடப்பக் கழுகலகைகள்
    நிர்த்தத்தொடு சப்தக் குலவைகளிட
    சுற்றத்தொடு தாரகன் தான்வீழும்

    மண்டும்துயர் நெஞ்சம் தனில்புரையுற
    தன்னந்தனி நின்றும் தனதகம்எழ
    சின்னஞ்சிறுவன்என் றொருநினைவுடன்
    செந்தில்புரம் சூரனின் தேர்மேவும்

    முத்துச் சுடர் வெட்கக் குறுநகையொடு
    சக்திப் படைதொட்டுச் சரவணபவன்
    முக்திப் பதம் வைக்க ஜெய ஜெயவென
    எத்திக் கிலும் முருகனின் பேர்பாடும்!

    Share
  • உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த சாதனை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    INDIA-SCIENCE-SPACE

    நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ரூ. 450 கோடி செலவில் தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சென்ற 3ம் தேதி (நவம்பர், 2013) காலை 6.08 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தை நெருங்க இந்த செயற்கைக் கோள் 78 கோடி கி.மீ தூரம், அதாவது 15 மாதங்கள் வினாடிக்கு 137 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை, 5-11-2013 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு ,விண்வெளி ஆராய்ச்சியின் பெரும் சாதனையாக அனைத்துலக நாடுகளும் கருதும் இப்பயணம் , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. 25 ராக்கெட் மூலம் கிளம்பியுள்ளது. இது பதினேழாயிரத்து நானூற்றி பதினைந்து கிலோமீட்டரை 44 நிமிடங்களில் கடந்து, பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். சந்திராயன் 1 திட்டத்தின் மூலம், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை ஏற்கனவே இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழுவதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மீத்தேன் என்ற இராசயணப் பொருள் உள்ளதா மற்றும் அதற்கான தட்பவெப்ப நிலை சரியாக உள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்வதே இந்த மங்கள்யான் விண்கலத்தின் முக்கியப் பணி. பூமியைச் சுற்றி வலம் வரும் வகையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு பின், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் சென்று, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அங்கிருந்தபடியே அதன் மேற்பரப்பு முழுவதையும் உளவு பார்த்து தகவல்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும். 300 நாட்கள் இப்பயணம் தொடர்ந்து, 2014 செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கான சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவியிருக்கும், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பட்டியலில் இன்று நம் இந்தியாவும் சேர்ந்திருப்பதும் ஆசியாவிலேயே முதல் நாடு என்ற வகையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருப்பதும் ஒரு இந்தியராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விசயம். எந்த நாட்டின் உதவியும் இன்றி, முற்றிலும் நம் தொழில்நுட்பத்தைக்கொண்டே இவ்வரிய சாதனையை விஞ்ஞானி, கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான நம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செய்திருக்கிறது. இவ்வரிய சாதனையில், அல்லும், பகலும் அயராது உழைத்து வெற்றி கண்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்! இதுவரை 19 விண்கலன்கள் நம் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    INDIA-SCIENCE-SPACE

    நம் தமிழ் நாட்டின், நெல்லை மாவட்டத்தின், நாங்குனேரி வட்டம், கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சுப்பையா அருணன் மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . கோவையில் பி.இ, இயந்திர பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்ற இவர், 1984ம் ஆண்டு இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருடைய தந்தை சுப்பையா அவர்கள் கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரால் நம் தமிழகமே இன்று பெருமை கொள்கிறது. அவருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 1 ஏவுகணையும் இன்று காலை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியான பாலாசோர் அருகேயுள்ள வீலர் தீவில் காலை 9.30 மணியளவில், வங்கக் கடலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதன் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்!

    படங்களுக்கு நன்றி :

    http://news.sky.com/story/1164028/india-mars-probe-mangalyaan-blasts-off

    Share
  • தணிக்கைக் குணுக்கு – 1

    இன்னம்பூரான்

    Octroi-Nakaசொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. வாஸ்தவம் தான். இந்த ஆக்ட்ராய் முனிசிபல் வரி இருக்கே, அது ஒரு பொன் வாத்து. ஆக்ட்ராய் நாக்கா (பிடிக்கிற இடம்) சுத்துப்படைகளுக்கு செம காசு. முனிசிபாலிடிக்கும் கொள்ளை வரும்படி. அதான் இந்த இன்னம்பூரான் 1966ல் உகாய்க்கு மாற்றல் ஆகி வரும்போது சூரத் முனிசிபாலிடி அவனோட பழைய காருக்கு ஆக்ட்ராய் நோட்டீஸ் அனுப்பிச்சு கலங்கடிக்கப்பார்த்தால், அவன் பிளேட்டை திருப்பிப்போட்டு நம்ப்ளை கலங்கடிச்சுட்டான். அதான் சொல்றேனே: சொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. இது நின்று போக. பழங்கதை.

    இன்றைய ஜூஸ். ஐ மீன் ந்யூஸ். இந்த ஆக்ட்ராய் வாங்கறதெல்லாம் காண்டிராக்ட்லெ விட்றுவோம். கட்சிக்காரன், பிரும்ம சேனை, லோக்கல் பிஸ்தா, அது இதுன்னு கண்ட கழுதையெல்லாம் காண்டிராக்ட் எடுக்கும். நாலு வருஷம் ஆச்சுனா காலாவதி; புனரபி ஜெனனம். ஆனா பாருங்கோ ஒரு மாமாங்கமா 36 காண்டிராக்ட்டை புராணகாலத்து ரேட்டுலெ வச்சுருக்கோம். ஆடிட்காரனுக்கு என்னையா நஷ்டம்? ஒத்துக்கிறோம். ஏழு ஜன்மத்துக்கு – ஐ மீன் -ஏழு வருஷமா ஒரு காண்டிராக்ட் மேலெ கூட கையை போடலை. எங்களுக்கு எத்தனை வேலை இருக்கு? ஆமாம். 407 ஆக்ட்ராய் காண்டிராக்ட் ஏஜண்டுகளுக்கு சட்டப்படி லைசன்சே ரத்து. அவங்க வரி வாங்குவது சட்ட விரோதம்னு சொல்றாய்ங்களே, அந்த வரி நமக்கு வந்து சேரவில்லை. வழியிலேயே கடப்ஸ். கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடச்சிட்டாய்ங்கனு சொன்னா, அதையும் ஏத்துக்க மாட்டேங்றான். சரி. போனவருஷம் இதுக்கெல்லாம் ஒரு முடிவு காணணும்னு டைட் பண்ணா, அவங்க கலாட்டா பண்ணியே தப்பிச்சிட்டாய்ங்க அப்டிணு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்க்றான். அரசாங்கமே இந்த பாவப்பட்ட ஆக்ட்ராய் வரியை தூக்கிப்பிட்டு லோக்கல் பாடி வரி (பேர் என்ன வச்சா என்ன. அதே காண்டிராக்ட்காரன் தான் வருவான்.) போடுவாக. பொறுத்து வாரும் என்று சொன்னாலும் இந்த ஆடிட்காரன் காதுலெ போட்டுண்டாதானே. ஆடிட்காரன் கால்லெ ஏன் விழணும்? அதுக்குத்தான் காண்ட்ராக்ட்காரன் இருக்கான்லெ. இது எல்லாம் நடப்பது: மும்பாய் மினிசிபல் கார்ப்பெரேஷன், ஐயா. ரிப்பன் பில்டிங்க் இல்லை.

    உசாத்துணை:

    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Unlicensed-octroi-agents-collecting-levy-since2006-CAG/articleshow/25346078.cms

     

    சித்திரத்துக்கு நன்றி: http://images.mid-day.com/2013/may/Octroi-Naka.jpg

     

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (83)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒரு நாடு நல்ல முறையில் வழி நடத்தப்படுவதற்கு அந்நாட்டின் அரசியல் நிர்வாகம் நியாயமான முறையில் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

    அரசியல்வாதிகள் எனப்படுவோர் ஏதோ அதற்காகவே பிறப்பெடுத்தவர்களோ அன்றி அதற்காகத் தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களோ இல்லை.

    தன்னைப் போல மற்றவர்களையும் நேசிக்கும் பண்பை அடிப்படையாகக் கொண்டு எதுவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் தனக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் நல்ல பல திட்டங்களை அமுலாக்க வேண்டி சுயநலத்தைப் புறந்தள்ளி உழைப்பவர்கள் அனைவருமே நல்ல அரசியல்வாதிகளாக மாற்றமடைவதற்கு ஏற்றவர்களாகிறார்கள்.

    மக்களைக் கவரும் வகையில் அற்புதமான பேச்சாற்றல் கொண்டமையால் பதவிக்கு வந்து விட்டு பின்பு அக்கதரியில் அமர்ந்து இருபதற்குரிய அனைத்துத் தகமைகளையும் காற்றில் பறக்க விட்டு விடும் பல தலைவர்களின் வழிநடத்தல்கள் நாட்டின் நல்ல செயற்பாடுகளை முடக்கும் வல்லமை படைத்தது என்பதே உண்மையான கூற்றாகும்.

    என்னடா இது ? சக்தி என்ன அரசியல் பாடமா நடத்த வருகிறான் என்று நீங்கள் கொஞ்சம் கலக்கமடைவது புரிகிறது.

    உங்களுடன் நான் இம்மடலின் வாயிலாக பகிர்ந்து கொள்வது அரசியல் பாடமல்ல ஆனால் அரசியலின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்டவர்களின் நடத்தைகளின் வெளிப்பாடு மக்களுக்கு அரசியலையும் அதை முன்னெடுப்பவர்கள் மீது எத்தகைய வெறுப்புணர்வைத் தோற்றுவிக்கும் எனும் யதார்த்தத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளும் நோக்கத்திற்காகவே !

    ஒரு நகரத்தின் மேயர் பதவி என்பது நகரபிதா எனும் பதத்திற்கு நிகரானதாகும். அந்நகர பிதாவின் ஸ்தானத்திலிருக்கும் ஒருவர் அந்நகர மக்களுக்கும் நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழ்வது இன்றியமையாததாகும்.

    இந்நாட்களில் பல நாடுகளில் இளைய சமூகத்தினர் அரசியலில் நாட்டம் கொள்ளாது தமது நாட்டின் முன்னேற்றங்களில் அக்கறை காட்டாமல் நடந்து கொள்வது எமக்குக் கண்கூடாகத் தெரிகிறது. அதுவும் இங்கிலாந்தில் இன்று அரசியல் நாட்டமின்மை என்பது மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளின் நடத்தையே ! அரசியல்வாதிகளை நாட்டின் தலைவர்களாகவும் நாட்டை வழிநடத்துபவர்களாகவும் பார்த்த மக்கள் அவர்களின் நடத்தையின் பால் கொண்ட வெறுப்பே இத்தகைய ஒரு நிலைக்குக் காரணம் என்றால் மிகையாகாது.

    கனேடிய நாட்டில் உள்ள டோராண்டோ நகரத்தின் மேயரின் நடவடிக்கை இன்று மக்கள் மனதில் மிகவும் வேதனையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம் ?

    ஆமாம் அவர் அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்கிறீர்களா ?

    போதைப் பொருட்களில் மிகவும் பாரதூரமான “கோக்கெயின்” எனப்படும் போதை மருந்தை இவர் உட்கொண்டது அம்பலத்திற்கு வந்துள்ளது.

    அதை அவர் செய்தது மட்டுமல்ல அதைப்பற்றி பிரஸ்தாபித்த ஊடகங்களுக்கு ஆமாம் நான் போதைப் பொருளை உட்கொண்டேன் அது ஒரேயொருமுறைதானே செய்தேன் அதற்கென்ன இத்தனை ஆரவாரம் என்பது போல உதாசீனமான வகையில் அவர் பதிலிறுத்திருக்கிறார்.

    தமது நகரத்திற்கும் நாட்டிற்கும் நன்மை புரிந்து முன்னோடியாகத் திகழ்வார் என எதிர்பார்த்து மக்கள் அளித்த வாக்குகளின் மூலம் பதவிக்குக் வந்த இவரின் இத்தகைய நடவடிக்கை ஜனநாயக நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் நெஞ்சத்தை நலிவடைய வைத்திருக்கிறது என்பதுவே கவலைக்கிடமான விடயமாகும்.

    அது ஒருபுறமிருக்க இங்கிலாந்து பாரளுமன்ற அங்கத்தவரும் கன்சர்வேடிவ் கட்சியைத் சேர்ந்தவர் ஒருவர் தனது பராளுமன்ற சலுகையைப் பிரயோகித்து தனியார் கம்பெனி ஒன்றுக்கு அதன் வியாபாரத்திற்கான உதவியைப் பணம் பெற்றுக் கொண்டு செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.

    இத்தகைய பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளோர் தமது சுயலாபத்திற்காக பொதுமக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததை பராளுமன்றத்திற்கான துஷ்பிரயோகத்தை விசாரிக்கும் குழு சில நாட்களுக்கு முன்னால் விசாரணை செய்தது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

    இலஞ்சம், ஊழல் என்பது போன்றன எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல தம்மை மேலைநாடுகள் என வர்ணித்துக் கொள்ளும் நாடுகளிலும் இந்த இலஞ்ச ஊழல்கள் நாகரீகமான போர்வைகளின் கீழ் நிகழ்த்தப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.

    வருங்காலச் சந்ததி ஒரு வலிமை மிக்க பொதுநலத்தை மையப்படுத்தும் ஜனநாயகத்தைத் தட்டி எழுப்ப வேண்டுமானல் அரசியல் எனும் புனிதமான சேவையில் தம்மை ஈடுபடுத்துவோர் அனைவரும் உளத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டியது அவசியமாகிறது.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வல்லமைக்குத் தொழில்நுட்ப உதவியாளர் தேவை

    அன்பு நண்பர்களே,

    வல்லமையின் தள நிர்வாகி ஆமாச்சுவின் வழிகாட்டுதலில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பு & தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள, உதவியாளர் தேவை. கல்லூரியில் இளங்கலை அறிவியல், இளங்கலை தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயிலும் மாணவர்கள், இதற்குப் பொருந்தக்கூடும். ஆர்வமும் திறனும் உள்ள இதர அன்பர்களும் முன்வரலாம். வாரத்துக்குச் சில மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

    இதற்கு ஊதியம் கிடையாது. தன்னார்வப் பணியே. ஆயினும், கல்லூரி மாணவர்கள், தங்கள் மேற்கொள்ளும் (புராஜக்ட்) திட்டமாக, வல்லமைப் பணியை ஏற்கலாம். அவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், தங்களைப் பற்றிய விவரங்களை amachu@amachu.me என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம்!

    நன்றி

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 12ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    நெஞ்சோடு புலம்பல் 
    (இதில் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன் நெஞ்சை விளித்துச் சொல்லும் பாங்கில் ‘நெஞ்சே’ என்று முடித்திருப்பார்)

    மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
    செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
    கண்காட்டும் வேசியர்தம் கண் வலையில் சிக்கிமிக
    அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. 1.

    ஏ மனமே! திருச்செங்காட்டில் திருநடனம் புரிகின்ற எம்பெருமான் நடராசனை வணங்கித் தொழாமல், மண்ணாசையையும், பொன்னாசையையும் காட்டி சபலத்தை உண்டு பண்ணி இருளில் ஆழ்த்திவிட்டு, அதோடு நில்லாமல் கண்ணால் ஜாடைகாட்டி மயக்கும் வேசியர்தம் வலையில் சிக்கிக் கொண்டு, கடைவீதியில் கிடைக்கும் உணவுக்காக அலைகின்ற நாயைப் போல அலைகின்றாயே!

    புட்பாசன அணையில் பொற்பட்டு மெத்தையின் மேல்
    ஒப்பா அணிந்த பணியோடாணி நீங்காமல்
    இப்பாய்க் கிடத்தி இயமனுயிர் கொள்ளு முன்னே
    *முப்பாழைப் போற்றி முயங்கிலையே நெஞ்சமே. 2.

    ஏ மனமே! பட்டு மெத்தையின் மேல், மலர்களைப் பரப்பி, சர்வாலங்கார பூஷிதையாகக் கிடந்த அழகு கெடாதபடி பின்னர் மரணப் படுக்கையில் கிடந்து காலன் வந்து உயிரைப் பறித்துச் செல்வதற்கு முன்பாக மூவகை பாழுக்குக் காரணமாயிருந்து ஆட்டுவிக்கும் அந்த பரமன் திருவடியை நினைக்க முயற்சி செய்யவில்லையே. (*முப்பாழ் என்பதை ஜீவப்பாழ், சிவப்பாழ், பரப்பாழ் என்பர்; அவை ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்பதாகும். ஜீவப்பாழ் என்பது “நான்” எனும் ஜீவனைப் பற்றிய அறிவு, பரப்பாழ் என்பது வித்யா தத்துவம் எனவும், சிவப்பாழ் என்பதை ‘சிவம்’ என்பதன் உண்மை அறிவு என்பதையும் பெரியோர் குறிப்பிடுவர்)

    முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
    அப்பாழுக்கு அப்பால் நின்று ஆடும் அதைப் போற்றாமல்
    இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்றீயாமல்
    துப்பாழாய் வந்த வினை சூழ்ந்தனையே நெஞ்சமே. 3.

    ஏ மனமே! பொய்யான, கனவு போன்ற இந்த வாழ்வை நிலையென்று எண்ணி, மூவகையான பாழுக்கு அப்பால் உள்ள முதற்பாழ் எனப்படும் பரவேளி தத்துவத்தை, அந்தப் பரவெளியாம் ஆகாயத்தில் திருத் தாண்டவம் புரியும் சிவபெருமானைப் போற்றித் துதிக்காமலும், இல்லையென்று வரும் வறியவர்கு எதையும் வழங்காமலும், நீ செய்த வினைப்படி வெறும் பாழான வாழ்க்கையை வாழ்ந்தாயே, அப்படி வாழ்ந்ததால் தீவினை சூழப்பெற்றாயே.

    அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயுஞ்
    சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
    பொன்னும் அனையும் எழிற் பூவையரும் வாழ்வு நிலை
    இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே. 4.

    ஏ மனமே! பசி என்று உணவுக்கு ஏங்கி அலைந்தவர்களுக்கு வயிறார உண்ண அன்னம் அளித்து உதவி எதையும் செய்யாமல், பிறவி எடுத்ததே பரம்ப்பிரம்மத்தை வணங்குவதற்கு எனும் அறிவு இல்லாமல் சிவனை வழிபட்டு அவன் அருளைத் தேடாமல், இந்தப் புவியில் பொன்னும், பொருளும், இன்பம் தரும் அழகிய பூவையரும்தான் கதி என்று வாழ்ந்தனையே நெஞ்சமே.

    முற்றொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
    இற்றைநாள் போற்றோம் என்றெண்ணாது பாழ் மனமே
    அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
    கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறந்து விட்டனையே. 5.

    பாழாய்ப் போன என் மனமே! முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியங்களினால் இப்பிறவியில் அரிய பல செல்வங்களை இறைவனது கருணையினால் பெற்றிருக்கிறோம் எனும் உண்மையை உணராமல், செல்வம் அற்றவர்க்கும், ஏழை எளியவர்க்கும் எதையும் கொடுக்காமலும், கல்வி கற்ற மேலோர்களுக்குக் கொடுத்து அவர்தம் ஆசியைப் பெறாமலும், ஆணவத்தினால் கண்மூடி இருந்தாயே.

    மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
    ஆணிப் பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
    காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
    காணிப் பொன்கூட வரக் காண்கிலமே நெஞ்சமே. 6.

    ஏ மனமே! நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்ட நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், இந்த உடலை காலன் நன்கு கட்டி கைபிடித்துத் தூக்கிச் செல்கையில் நீ சேர்த்து வைத்து அனுபவித்த ஒரு சிறிதளவு பொன்கூட உன் பின்னால் வரக் காணோமே.

    கற்கட்டு மோதிர நற்கடுக்கன் அரைஞாண் பூண்டு
    திக்கு எட்டும் போற்றத் திசைக் கொருத்தரானாலும்
    பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே
    கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே. 7.

    நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட தங்க மோதிரமென்ன, ஜொலிக்கின்ற காதில் அணியும் கடுக்கன் என்ன, அரையில் அணியும் தங்க அரைஞாண் என்ன இவைகளையெல்லாம் பார்த்து எட்டு திசைகளிலும் இருப்போர் எல்லாம் பார்த்து ஒகோவென்று புகழ்ந்தால் என்ன, பற்கள் கிட்டி மரணப் படுக்கையில் கிடக்கையில் காலன் வந்து உயிரைப் பந்தாடுவது போல எடுத்துக் கொண்டு போகும்போது, ஒரு சிறு ஓலைகூட உன்கூட வரக்காணோமே நெஞ்சே, என்ன செய்வது.

    முன்னை நீ செய்த தவம், முப்பாலும் சேருமன்றிப்
    பொன்னும் பணி திகழும் பூவையும் அங்கே வருமோ
    தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
    கண்ணற்ற அந்தகன் போல் காட்சி அற்றாய் நெஞ்சமே. 8.

    ஏ மனமே! முன் பிறவிகளில் நீ செய்த பாவ புண்ணியங்கள்தான் இந்தப் பிறவியிலும் உனக்கு வந்து உறுமே அன்றி, பளபளக்கும் பொன்னும், ஆபரணாதிகளை அணிந்து கொண்டு அழகொழுக நிற்கும் பூவையரும், உன்கூட வந்து நிற்பரோ? இவ்வுடலையும், இந்த வாழ்வையும் சதமென்றெண்ணிக் கொண்டு சற்குரு நாதராம் பரம்பொருளை நாடாமல் கண் இல்லாத குருடனைப் போல் எதையும் காணாமல் நின்றாயே.

    பையரவம் பூண்ட பரமர் திருப் பொற்றாளைத்
    துய்யமலர் பறித்துத் தொழுது வணங்காமல்
    கையில் அணி வளையும் காலில் இடும் பாடகமும்
    மெய் என்று இறுமாந்தி விட்டனையே நெஞ்சமே. 9.

    ஏ மனமே! தனது ஜடாமுடியில் படமெடுத்தாடும் நாகப்பாம்பை ஆபரணமாகக் கொண்ட பரமன் சிவபெருமானுடையத் தாமரைப் பாதங்களைப் பணிந்து வணங்காமல், கையில் அணிகின்ற தங்கக் காப்பையும், காலில் அணிகின்ற பாடகத்தையும் நிரந்தரம் என்று எண்ணி மனம் இறுமாந்து இருந்தனையே.

    மாதுக்கொரு பாகம் வைத்த அரன் பொற்றாளைப்
    போதுக்கொரு போதும் போற்றி வருந்தாமல்
    வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
    ஏதுக்குப் போகநீ எண்ணினையே நெஞ்சமே. 10.

    ஏ நெஞ்சே! உமையொரு பாகனாம் சிவபெருமானுடைய திருத்தாமரைத் தாளினை மனதில் பதித்து பொழுதெல்லாம் அவனைப் போற்றி வழிபடாமல், ஊரெல்லாம் ஓடியாடி தேடிய செல்வத்தைப் பிறருக்கும் தராமல் உலோபியாய் வாழ்ந்து மண்ணில் புதைத்துவைத்தாயே, என்ன நினைத்து, இவைகளெல்லாம் உன்னோடு வருமென்றெண்ணியோ, பிறர்க்கு உதவாமல் இப்படி புதைத்து வைத்து என்ன கண்டாய்.

    (இன்னும் வரும்)

    Share
  • கந்த சஷ்டி!

     

    சு. கோபாலன்

    034

    சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க

    ஆறுமுகன் ஆறுனாட்கள் அவனுடன் சமர்செய்து ஆறாம் நாள்(சஷ்டி)

    தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து

    ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்து

    கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று

    அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
    இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு003

    மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!
    கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டி புனித நாளில்…………

    கந்தனைக் குறித்து

    சிந்தனை செய்திடு

    ‘எந்தனைக் கா’வென

    வந்தனை புரிந்திடு

    உந்தனைக் காக்க

    வந்துனை அடைவான்!

     

    சு.கோபாலன்

    படங்களுக்கு நன்றி:

    http://www.kaumaram.com/gallery/003.html

    Share
  • வாழ்க்கை நலம் – 34

    குன்றக்குடி அடிகள்

    34. பொறுமை ஆக்கம் தரும்!

     

    நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்துப்படுவது. உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப்பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

    கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.

    உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க்குலத்தின் வாழ்வாகிறது.

    மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும். பொறுத்தாற்றுவோரை அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம்  – தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம்.  பொறையுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.

    பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதான செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு  – ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!

    சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதான செய்வோரையும் ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    – திருக்குறள்

     

     

     

     
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

     

    Share