சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

ஒரு நாடு நல்ல முறையில் வழி நடத்தப்படுவதற்கு அந்நாட்டின் அரசியல் நிர்வாகம் நியாயமான முறையில் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

அரசியல்வாதிகள் எனப்படுவோர் ஏதோ அதற்காகவே பிறப்பெடுத்தவர்களோ அன்றி அதற்காகத் தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களோ இல்லை.

தன்னைப் போல மற்றவர்களையும் நேசிக்கும் பண்பை அடிப்படையாகக் கொண்டு எதுவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் தனக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் நல்ல பல திட்டங்களை அமுலாக்க வேண்டி சுயநலத்தைப் புறந்தள்ளி உழைப்பவர்கள் அனைவருமே நல்ல அரசியல்வாதிகளாக மாற்றமடைவதற்கு ஏற்றவர்களாகிறார்கள்.

மக்களைக் கவரும் வகையில் அற்புதமான பேச்சாற்றல் கொண்டமையால் பதவிக்கு வந்து விட்டு பின்பு அக்கதரியில் அமர்ந்து இருபதற்குரிய அனைத்துத் தகமைகளையும் காற்றில் பறக்க விட்டு விடும் பல தலைவர்களின் வழிநடத்தல்கள் நாட்டின் நல்ல செயற்பாடுகளை முடக்கும் வல்லமை படைத்தது என்பதே உண்மையான கூற்றாகும்.

என்னடா இது ? சக்தி என்ன அரசியல் பாடமா நடத்த வருகிறான் என்று நீங்கள் கொஞ்சம் கலக்கமடைவது புரிகிறது.

உங்களுடன் நான் இம்மடலின் வாயிலாக பகிர்ந்து கொள்வது அரசியல் பாடமல்ல ஆனால் அரசியலின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்டவர்களின் நடத்தைகளின் வெளிப்பாடு மக்களுக்கு அரசியலையும் அதை முன்னெடுப்பவர்கள் மீது எத்தகைய வெறுப்புணர்வைத் தோற்றுவிக்கும் எனும் யதார்த்தத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளும் நோக்கத்திற்காகவே !

ஒரு நகரத்தின் மேயர் பதவி என்பது நகரபிதா எனும் பதத்திற்கு நிகரானதாகும். அந்நகர பிதாவின் ஸ்தானத்திலிருக்கும் ஒருவர் அந்நகர மக்களுக்கும் நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழ்வது இன்றியமையாததாகும்.

இந்நாட்களில் பல நாடுகளில் இளைய சமூகத்தினர் அரசியலில் நாட்டம் கொள்ளாது தமது நாட்டின் முன்னேற்றங்களில் அக்கறை காட்டாமல் நடந்து கொள்வது எமக்குக் கண்கூடாகத் தெரிகிறது. அதுவும் இங்கிலாந்தில் இன்று அரசியல் நாட்டமின்மை என்பது மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளின் நடத்தையே ! அரசியல்வாதிகளை நாட்டின் தலைவர்களாகவும் நாட்டை வழிநடத்துபவர்களாகவும் பார்த்த மக்கள் அவர்களின் நடத்தையின் பால் கொண்ட வெறுப்பே இத்தகைய ஒரு நிலைக்குக் காரணம் என்றால் மிகையாகாது.

கனேடிய நாட்டில் உள்ள டோராண்டோ நகரத்தின் மேயரின் நடவடிக்கை இன்று மக்கள் மனதில் மிகவும் வேதனையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம் ?

ஆமாம் அவர் அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்கிறீர்களா ?

போதைப் பொருட்களில் மிகவும் பாரதூரமான “கோக்கெயின்” எனப்படும் போதை மருந்தை இவர் உட்கொண்டது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதை அவர் செய்தது மட்டுமல்ல அதைப்பற்றி பிரஸ்தாபித்த ஊடகங்களுக்கு ஆமாம் நான் போதைப் பொருளை உட்கொண்டேன் அது ஒரேயொருமுறைதானே செய்தேன் அதற்கென்ன இத்தனை ஆரவாரம் என்பது போல உதாசீனமான வகையில் அவர் பதிலிறுத்திருக்கிறார்.

தமது நகரத்திற்கும் நாட்டிற்கும் நன்மை புரிந்து முன்னோடியாகத் திகழ்வார் என எதிர்பார்த்து மக்கள் அளித்த வாக்குகளின் மூலம் பதவிக்குக் வந்த இவரின் இத்தகைய நடவடிக்கை ஜனநாயக நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் நெஞ்சத்தை நலிவடைய வைத்திருக்கிறது என்பதுவே கவலைக்கிடமான விடயமாகும்.

அது ஒருபுறமிருக்க இங்கிலாந்து பாரளுமன்ற அங்கத்தவரும் கன்சர்வேடிவ் கட்சியைத் சேர்ந்தவர் ஒருவர் தனது பராளுமன்ற சலுகையைப் பிரயோகித்து தனியார் கம்பெனி ஒன்றுக்கு அதன் வியாபாரத்திற்கான உதவியைப் பணம் பெற்றுக் கொண்டு செய்துள்ளார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.

இத்தகைய பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளோர் தமது சுயலாபத்திற்காக பொதுமக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததை பராளுமன்றத்திற்கான துஷ்பிரயோகத்தை விசாரிக்கும் குழு சில நாட்களுக்கு முன்னால் விசாரணை செய்தது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

இலஞ்சம், ஊழல் என்பது போன்றன எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல தம்மை மேலைநாடுகள் என வர்ணித்துக் கொள்ளும் நாடுகளிலும் இந்த இலஞ்ச ஊழல்கள் நாகரீகமான போர்வைகளின் கீழ் நிகழ்த்தப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.

வருங்காலச் சந்ததி ஒரு வலிமை மிக்க பொதுநலத்தை மையப்படுத்தும் ஜனநாயகத்தைத் தட்டி எழுப்ப வேண்டுமானல் அரசியல் எனும் புனிதமான சேவையில் தம்மை ஈடுபடுத்துவோர் அனைவரும் உளத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டியது அவசியமாகிறது.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *