Featuredஇலக்கியம்கட்டுரைகள்

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்
வஞ்சத்தை நீக்கி மறுநினைவு வாராமல்
செஞ்சரணத் தாளைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே. 1.

ஏ மனமே! திருவருள் சக்திகளான இறைவனுடைய இதயத்தின் ஞானசக்தி, சிரத்திலுள்ள பராசக்தி, தலை முடியிலுள்ள ஆதிசக்தி, கவசத்தில் அமைந்த இச்சா சக்தி, கண்களில் அமைந்த கிரியா சக்தி ஆகிய இந்த ஐந்து சக்திகளையும் வணங்கி, அவற்றைக் கொண்டு ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி உன்வசப் படுத்திக் கொள்வதற்கு உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன் கேள்! நெஞ்சே, உன்னில் தோன்றுகின்ற வஞ்சக எண்ணத்தை அறவே நீக்கி, அது மீண்டும் உன்னிடம் தோன்றாமல் கவனமாக இருந்து, சிவந்த தாமரைப் போன்ற சிவபெருமானின் பாதகமலங்களையே எப்போதும் சிந்தை செய்வாயாக.

*சிவபெருமானின் ஐந்து சக்திகள் குறித்த திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்:
“எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிர மிக்க சிகையாதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே”

பொருள்: இருதய மந்திரம் இறைவனுக்கு ஞானசக்தியாகும், சிரசு மந்திரம் வானத்தில் விளங்கும் பராசக்தியாகும். சிகாமந்திரம் ஆதிசக்தியாம். அழகுடைய கவச மந்திரம் பல நிறங்களையுடைய இச்சா சக்தியாகும். நேத்திரம் கிரியா சக்தியாம்.

அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமைப் பெருவாழ்வை நம்பிச்
சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே. 2.

அற்புத சக்தி படைத்த உயிர் இந்த உடலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலை மாறி அதிலிருந்து ஆவி பிரிந்து சென்று பரபிரம்மத்தோடு இணையும் காலத்துக்கு முன்பாகவே சற்குருவாம் தக்ஷிணாமூர்த்திப் பெருமானைப் போற்றி வணங்கி தவம் செய்து நற்கதியடைய முயலாமல் வீணே, மண்ணில் உருவான செம்பொன்னையும், மாய உலகின் கனவுபோன்ற உடைமைகளையும், வாழ்ந்த பெருவாழ்வையும் சதமென்று எண்ணி, நாகம் பிடித்து வாயில் கவ்வியுள்ள தவளையைப் போல மாயவலையில் சிக்கித் தவிக்கின்றேனே.

உற்றார் பெற்றார் ஆர், உடன் பிறப்பார் பிள்ளைகள் ஆர்,
மற்றார் இருந்தால் என், மாளும் போது உதவுவரோ?
கற்றாய் இழந்த இளங் கன்றது போலே உருகிச்
சிற்றாகிச் சிற்றினம் சேர்ந்தனையே நெஞ்சமே. 3.

ஏ நெஞ்சே, நமக்கு உற்ற நண்பர் உறவினர்கள் யார், பெற்றோர் யார், உடன் பிறந்த சகோதர சகோதரியர் யார், பெற்ற பிள்ளைகள்தான் யார், வேறு எவராயிருந்தாலும் அவர்களெல்லாம் யார், இவர்கள் எல்லாம் நம் உயிர் இவ்வுடலைவிட்டுப் பிரிந்து போகும் போது யார் வந்து உதவுவார்? எவரும் வரமாட்டார். எனவே நீ தாய்ப்பசுவை இழந்த சின்னஞ்சிறு கன்றினைப் போல மனமுருகிச் சோர்ந்து, கீழான எண்ணங்கொண்ட சிற்றினத்து மாந்தரைச் சேர்ந்து அழிகின்றனையே.

வீடிருக்கத், தாயிருக்க, வேண்டு மனையாள் இருக்கப்,
பீடிருக்க, ஊணிருக்கப், பிள்ளைகளும் தாமிருக்க,
மாடிருக்கக், கன்றிருக்க, வைத்த பொருள் இருக்கக்,
கூடிருக்க, நீ போன கோலமென்ன கோலமே. 4.

குடியிருக்க வீடு இருக்கிறது; பெற்று வளர்த்த தாய் இருக்கிறாள்; இனிய மணம் புரிந்த இல்லாளும் இருக்கிறாள், பெருமைகள் உன்னை நாடியிருக்கின்றன; உண்பதற்கு உணவிருக்கிறது; பெற்ற அன்பு மக்களும் கூட இருக்கின்றனர், குடும்பத்தின் புனிதத்துக்கு பசுமாடுகளும், கன்றுகளும் கூட இருக்கின்றன; இவையெல்லாம் தவிர நம் முன்னோர் சேர்த்துவைத்த பொருட்குவை பெரிதிருக்க இவை அத்தனையும் நீங்கி நீ சென்றவிடம் எங்கே, இவை எதுவும் உன்கூட வரவில்லையே.

சந்தனமும் குங்குமமும் சாந்து பரிமளமும்
விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக்
கந்தமலர் சூடுகின்ற கன்னியரும் தாமிருக்க
எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே. 5.

மணம் வீசும் சந்தனம் உடலில் பூசி, நெற்றியிலே மங்கலமாய்க் குங்குமத்தை வைத்து, சாந்தும் பரிமள வாசனையும் விதவிதமாய்ப் பூசி நாற்புறமும் மணம்வீச, மனம் உல்லாச போதையில் மிதக்க, ஒய்யாரமாய் கொண்டையில் மணம்வீசும் மலர்கள் சூடிய மங்கையரும் உடனிருக்க, இப்படி எல்லா சுகங்களும் உன்னைச் சுற்றியிருக்க நீ எங்கே போனாய், எப்படிப் போனாய் என்பதை சிந்தை செய்யவில்லையே நெஞ்சே.

காற்றுத் துருத்தி கடிய வினைக்குள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டென்று இருமாந்து
பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல்
ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே. 6.

காற்றுத் துருத்தி போல காற்றை உள்வாங்கி வெளியே விட்டு உயிர்வாழ்ந்து, தீவினைகள் எத்தனை உண்டோ அத்தனையும் செய்து கொண்டு, நாற்றமெடுத்த இந்த சடலம் போன்ற உடலை நித்தியமானது என்று எண்ணி ஆணவத்தோடு இருந்தாயே, பசி என்று தெரிவோடு பிச்சை கேட்டு அலையும் ஒரு பரதேசிக்கு பசியாற வயிற்றுக்கு அன்னம் கொடுக்காமல், ஆற்றுநீர் போல ஓடிப்போய் கடலில் கலந்தாயே நெஞ்சே.

நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே எண்ணிப்
பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளிக்காமல்
போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் போது
ஆர்ப்படுவரென்றே அறிந்தலையே நெஞ்சமே. 7.

நீரின்மேல் குமிழி போன்று தோன்றி உடனே மறைந்து போகும் வாழ்க்கையை சதமென்றெண்ணிக் கொண்டு, பசித்து வந்தவர்க்கு ஒரு பாக்கின் அளவுகூட சோறு போடாமல் கஞ்சத்தனம் செய்து வாழ்ந்துவிட்டு, நெஞ்சில் கபம் வந்து அடைத்துக் கொண்டு எமதூதன் பிடித்து இழுக்கும்போது அந்தத் துன்பத்தை எப்படி அனுபவிப்பது என்பது தெரியாமல் இருக்கிறாயே என் நெஞ்சே.

சின்னஞ் சிறு நுதலாள் செய்த பல வினையான்
முன் அந்த மார்பில் முளைத்த சிலந்தி விம்மி
வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி
அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே. 8.

அழகிய சிறு நெற்றியை உடைய பெண்ணானவள் முன்பு செய்த வினைப்பயனால் அவள் மார்பில் விம்மி எழுந்த தளதளத்த தனங்களின் மேல் மோகம் கொண்டு, மயங்கிக் கிடந்து, முகம் வாடி வாயில் புறத்தில் வந்து நின்று வயிற்றுக்கு உணவு கேட்டு நிற்கும் ஏழை பிச்சைக்காரனுக்கு ஒரு சிறிது அன்னம் அளித்து அவன் பசியைப் போக்கும் வழியினை அறிந்திருக்கவில்லையே ஏ மனமே. (இதே கருத்தை வள்ளலார் இராமலிங்க அடிகளும் “கன்னியர்தம் மார்பிடங் கொண்டலைக்கும் புன்சீழ்க் கட்டிகளைக் கருதி மனங் கலங்கி வீணே, அன்னியனா யலைகின்றேன், மயக்கம் நீக்கி அடிமை கொளல் ஆகாதோ, அருட்பொற்குன்றே” என்று சொல்கிறார்.)

ஓட்டைத் துருத்தியை உடையும் புழுக் கூட்டை
ஆட்டுஞ் சிவசித்தர் அருளை மிகப் போற்றியே
வீட்டைத் திறந்து வெளியை ஒளியால் அழைத்துக்
காட்டும் பொருள் இதென்று கருதிலையே நெஞ்சமே. 9.

ஒன்பது வாசல்கள் கொண்டதான தோல்பையைப் போன்ற இழிந்ததும், தட்டினால் உடைந்து போகின்ற பாங்கில் அமைந்த இந்த பாழ் உடலை ஆட்டிவைப்பவன் அந்த பரமேஸ்வரன். அந்த சர்வ வல்லமை படைத்த இறைவனைத் தொழுது அவன் திருவருளை வேண்டி, ஆணவ மலத்தால் ஆன இந்த கோட்டையைத் திறந்து, அதனுள் பரவெளியில் பரவிக் கிடக்கும் ஜோதிஸ்வரூபனை அந்த இறைவன் சக்தியால் உள்ளே அழைத்து, உண்மைப் பொருள் அந்தப் பரம்பொருளே என்பதை நீ உணர்ந்திருக்கவில்லையே என் மனமே.

ஊன் பொதிந்த காயமுனைந்த புழுக் கூட்டைத்
தான் சுமந்ததல்லால் நீ சற்குருவைப் போற்றாமல்
கான்பரந்த வெள்ளங் கரைபுரளக் கண்டேகி
மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே. 10.

இந்த பூதவுடல் இருக்கிறதே இது மாமிசத்தால் ஆனது, இதனுள் சிறிது சிறிதாக அரித்து உட்கொள்ளும் ஆயிரமாயிரம் புழுக்கள் அடங்கிய கூடு இது. இந்த அற்பப் மாமிசப் பிண்டத்தைத் தூக்கிக் கொண்டு அலைந்தாயே தவிர உண்மையான வழிகாட்டக்கூடிய சற்குரு அந்த பரப்பிரம்மம் என்பதை உணராமல், கானல் நீரை உண்மையான நீரோடை என்று நம்பி அதன் பின்னால் ஓடி ஏமாந்து போன மீனைப் போல துயரமடைந்து நிற்கிறாயே என் நெஞ்சே.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க