பட்டினத்தடிகளின் பாடல்கள் – 12ம் பகுதி

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

நெஞ்சோடு புலம்பல் 
(இதில் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன் நெஞ்சை விளித்துச் சொல்லும் பாங்கில் ‘நெஞ்சே’ என்று முடித்திருப்பார்)

மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண் வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. 1.

ஏ மனமே! திருச்செங்காட்டில் திருநடனம் புரிகின்ற எம்பெருமான் நடராசனை வணங்கித் தொழாமல், மண்ணாசையையும், பொன்னாசையையும் காட்டி சபலத்தை உண்டு பண்ணி இருளில் ஆழ்த்திவிட்டு, அதோடு நில்லாமல் கண்ணால் ஜாடைகாட்டி மயக்கும் வேசியர்தம் வலையில் சிக்கிக் கொண்டு, கடைவீதியில் கிடைக்கும் உணவுக்காக அலைகின்ற நாயைப் போல அலைகின்றாயே!

புட்பாசன அணையில் பொற்பட்டு மெத்தையின் மேல்
ஒப்பா அணிந்த பணியோடாணி நீங்காமல்
இப்பாய்க் கிடத்தி இயமனுயிர் கொள்ளு முன்னே
*முப்பாழைப் போற்றி முயங்கிலையே நெஞ்சமே. 2.

ஏ மனமே! பட்டு மெத்தையின் மேல், மலர்களைப் பரப்பி, சர்வாலங்கார பூஷிதையாகக் கிடந்த அழகு கெடாதபடி பின்னர் மரணப் படுக்கையில் கிடந்து காலன் வந்து உயிரைப் பறித்துச் செல்வதற்கு முன்பாக மூவகை பாழுக்குக் காரணமாயிருந்து ஆட்டுவிக்கும் அந்த பரமன் திருவடியை நினைக்க முயற்சி செய்யவில்லையே. (*முப்பாழ் என்பதை ஜீவப்பாழ், சிவப்பாழ், பரப்பாழ் என்பர்; அவை ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்பதாகும். ஜீவப்பாழ் என்பது “நான்” எனும் ஜீவனைப் பற்றிய அறிவு, பரப்பாழ் என்பது வித்யா தத்துவம் எனவும், சிவப்பாழ் என்பதை ‘சிவம்’ என்பதன் உண்மை அறிவு என்பதையும் பெரியோர் குறிப்பிடுவர்)

முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய்
அப்பாழுக்கு அப்பால் நின்று ஆடும் அதைப் போற்றாமல்
இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்றீயாமல்
துப்பாழாய் வந்த வினை சூழ்ந்தனையே நெஞ்சமே. 3.

ஏ மனமே! பொய்யான, கனவு போன்ற இந்த வாழ்வை நிலையென்று எண்ணி, மூவகையான பாழுக்கு அப்பால் உள்ள முதற்பாழ் எனப்படும் பரவேளி தத்துவத்தை, அந்தப் பரவெளியாம் ஆகாயத்தில் திருத் தாண்டவம் புரியும் சிவபெருமானைப் போற்றித் துதிக்காமலும், இல்லையென்று வரும் வறியவர்கு எதையும் வழங்காமலும், நீ செய்த வினைப்படி வெறும் பாழான வாழ்க்கையை வாழ்ந்தாயே, அப்படி வாழ்ந்ததால் தீவினை சூழப்பெற்றாயே.

அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயுஞ்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல்
பொன்னும் அனையும் எழிற் பூவையரும் வாழ்வு நிலை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே. 4.

ஏ மனமே! பசி என்று உணவுக்கு ஏங்கி அலைந்தவர்களுக்கு வயிறார உண்ண அன்னம் அளித்து உதவி எதையும் செய்யாமல், பிறவி எடுத்ததே பரம்ப்பிரம்மத்தை வணங்குவதற்கு எனும் அறிவு இல்லாமல் சிவனை வழிபட்டு அவன் அருளைத் தேடாமல், இந்தப் புவியில் பொன்னும், பொருளும், இன்பம் தரும் அழகிய பூவையரும்தான் கதி என்று வாழ்ந்தனையே நெஞ்சமே.

முற்றொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் போற்றோம் என்றெண்ணாது பாழ் மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறந்து விட்டனையே. 5.

பாழாய்ப் போன என் மனமே! முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியங்களினால் இப்பிறவியில் அரிய பல செல்வங்களை இறைவனது கருணையினால் பெற்றிருக்கிறோம் எனும் உண்மையை உணராமல், செல்வம் அற்றவர்க்கும், ஏழை எளியவர்க்கும் எதையும் கொடுக்காமலும், கல்வி கற்ற மேலோர்களுக்குக் கொடுத்து அவர்தம் ஆசியைப் பெறாமலும், ஆணவத்தினால் கண்மூடி இருந்தாயே.

மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப் பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
காணிப் பொன்கூட வரக் காண்கிலமே நெஞ்சமே. 6.

ஏ மனமே! நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து கொண்டு, பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்ட நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், இந்த உடலை காலன் நன்கு கட்டி கைபிடித்துத் தூக்கிச் செல்கையில் நீ சேர்த்து வைத்து அனுபவித்த ஒரு சிறிதளவு பொன்கூட உன் பின்னால் வரக் காணோமே.

கற்கட்டு மோதிர நற்கடுக்கன் அரைஞாண் பூண்டு
திக்கு எட்டும் போற்றத் திசைக் கொருத்தரானாலும்
பற்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே
கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே. 7.

நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட தங்க மோதிரமென்ன, ஜொலிக்கின்ற காதில் அணியும் கடுக்கன் என்ன, அரையில் அணியும் தங்க அரைஞாண் என்ன இவைகளையெல்லாம் பார்த்து எட்டு திசைகளிலும் இருப்போர் எல்லாம் பார்த்து ஒகோவென்று புகழ்ந்தால் என்ன, பற்கள் கிட்டி மரணப் படுக்கையில் கிடக்கையில் காலன் வந்து உயிரைப் பந்தாடுவது போல எடுத்துக் கொண்டு போகும்போது, ஒரு சிறு ஓலைகூட உன்கூட வரக்காணோமே நெஞ்சே, என்ன செய்வது.

முன்னை நீ செய்த தவம், முப்பாலும் சேருமன்றிப்
பொன்னும் பணி திகழும் பூவையும் அங்கே வருமோ
தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்
கண்ணற்ற அந்தகன் போல் காட்சி அற்றாய் நெஞ்சமே. 8.

ஏ மனமே! முன் பிறவிகளில் நீ செய்த பாவ புண்ணியங்கள்தான் இந்தப் பிறவியிலும் உனக்கு வந்து உறுமே அன்றி, பளபளக்கும் பொன்னும், ஆபரணாதிகளை அணிந்து கொண்டு அழகொழுக நிற்கும் பூவையரும், உன்கூட வந்து நிற்பரோ? இவ்வுடலையும், இந்த வாழ்வையும் சதமென்றெண்ணிக் கொண்டு சற்குரு நாதராம் பரம்பொருளை நாடாமல் கண் இல்லாத குருடனைப் போல் எதையும் காணாமல் நின்றாயே.

பையரவம் பூண்ட பரமர் திருப் பொற்றாளைத்
துய்யமலர் பறித்துத் தொழுது வணங்காமல்
கையில் அணி வளையும் காலில் இடும் பாடகமும்
மெய் என்று இறுமாந்தி விட்டனையே நெஞ்சமே. 9.

ஏ மனமே! தனது ஜடாமுடியில் படமெடுத்தாடும் நாகப்பாம்பை ஆபரணமாகக் கொண்ட பரமன் சிவபெருமானுடையத் தாமரைப் பாதங்களைப் பணிந்து வணங்காமல், கையில் அணிகின்ற தங்கக் காப்பையும், காலில் அணிகின்ற பாடகத்தையும் நிரந்தரம் என்று எண்ணி மனம் இறுமாந்து இருந்தனையே.

மாதுக்கொரு பாகம் வைத்த அரன் பொற்றாளைப்
போதுக்கொரு போதும் போற்றி வருந்தாமல்
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போகநீ எண்ணினையே நெஞ்சமே. 10.

ஏ நெஞ்சே! உமையொரு பாகனாம் சிவபெருமானுடைய திருத்தாமரைத் தாளினை மனதில் பதித்து பொழுதெல்லாம் அவனைப் போற்றி வழிபடாமல், ஊரெல்லாம் ஓடியாடி தேடிய செல்வத்தைப் பிறருக்கும் தராமல் உலோபியாய் வாழ்ந்து மண்ணில் புதைத்துவைத்தாயே, என்ன நினைத்து, இவைகளெல்லாம் உன்னோடு வருமென்றெண்ணியோ, பிறர்க்கு உதவாமல் இப்படி புதைத்து வைத்து என்ன கண்டாய்.

(இன்னும் வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *