Blog

  • மனக்குரங்கு!…

    தமிழ்த்தேனீ

    “மனதால் எத்தனை பாவம் செஞ்சாலும் அது குற்றமாவதில்லை, ஆனால் அதைச் செயல் படுத்தும்போதோ  அல்லது வாயால்  சொல்லும்போதோ அது குற்றமாகிறது.”

    “வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது”-

    முப்பதாயிரம் ரூபாய் போட்டு அவரோட மகன் சங்கர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த விண்டோஸ் போன். திடீர்ன்னு காணாமப் போயிடுத்து

    எங்க தேடியும் கிடைக்கலே   எப்பிடித்தான் காணாமப் போயிருக்கும் புரியலே.  எப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும்  அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்

    அப்படி இருக்கும்போது எப்பிடிக் காணாமப் போச்சுன்னே தெரியலே, கடைசியா  காத்தாலே  வாசற்க் கதவு வழியா வெளியே தெரிந்த அருமையான சாலையையும், மேகங்களையும்  சேர்த்து அவரோட விண்டோஸ் போன்லே புகைப்படம் எடுத்தார், அதுக்கப்புறம் கொண்டு வந்து பக்கத்திலே சோபாவிலே வெச்சிண்டு கம்ப்யூட்டர்லே வேலை செஞ்சுண்டு இருந்த்து நியாபகத்துக்கு வந்துது.

    சோபாவை நகர்த்திப் பார்த்தாச்சு, அங்கே இல்லே, வீட்டுலே எல்லா இட்த்திலேயும் தேடிப் பாத்தாச்சு ,கிடைக்கலே. அன்னிக்கு சாயங்காலம் கணேசன் வந்து அவர் பக்கத்திலே உக்காந்து பேசிண்டு இருந்த்து நினைவுக்கு வந்துது, மனதிலே ஒரு எண்ணம் ஒரு வேளை  போன் நல்லா இருக்கேன்னு கணேசன் தூக்கிண்டு போயிட்டானோ அப்பிடீன்னு.  தலையை சிலுப்பிண்டு  சீ சீ அப்பிடியெல்லாம் நினைக்கக் கூடாது அப்பிடீன்னு மனசுக்கு கட்டளை போட்டாலும், மனசு என்னவோ கட்டுப்பாடில்லாமே எதை எதையோ போட்டுக் குழப்பிண்டே இருந்துது.

    மனசாலே எவ்ளோ பாவம் செஞ்சாலும் அது குத்தமாறது இல்லே, ஆனா அதைச் செயல் படுத்தும்போதோ அல்லது வாயாலே  சொல்லும்போதோ அது குத்தமாயிடறது. தீயினால் சுட்ட புண்ணுன்னு வள்ளுவர் சொல்றா மாதிரி. நல்ல வேளையா வாய் திறந்து ஒரு வேளை கணேசன் எடுத்துண்டு போயிட்டானோன்னு சொல்லலே.

    நான் எதையும் எல்லா நேரத்திலேயும் சரியா செய்யணும்னு நினைக்கறவன் எனக்கு இப்பிடி ஆயிப் போச்சேன்னு மனசு கெடந்து தவிச்சிண்டு இருக்கு,

    ஆச்சு ஒரு வாரமா எல்லா நேரத்திலேயும் அந்த போன் நெனப்புதான்,

    என்னாலே ஜீரணிக்கவே முடியலை அப்பிடீன்னு வாயை விட்டே புலம்பினார் சபேசன்.

    அப்பா எவ்ளோதான் ஜாக்கிறதையா இருந்தாலும் இது மாதிரி சிலது தொலஞ்சு போறது சகஜம்தாம்ப்பா , மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க, நான் வேற புது போன் , அட்வான்ஸ் மாடல் வாங்கித் தரேன், என்றான்  சங்கர்.

    ஆயிரம்தான் வேற போன் வாங்கினாலும் முப்பதாயிரம் ரூபாய் போச்சேன்னு ஒரு நெனைப்பு, அது மட்டுமில்லே எப்பவும் நாய்க் குட்டி மாதிரி ஆசையாய் அவர் கூடவே வெச்சிண்டு இருந்த போன்.

    யாருக்காவது   ஏதாவது பொருள் காணாமப் போனா  சமயவரத்து மாரியம்மனிடமும்   அரைக்காசு அம்மனிடமும் வேண்டிக் கொள்வது அவர் வழக்கம், அதுக்கேத்தா மாதிரி அவர் வேண்டிண்ட உடனே அந்தப் பொருள் கிடைச்சுடும்,

    அது மாதிரி வேண்டிண்டும் ஆச்சு ஆனாக் கெடைக்கலே, நிச்சயமா தெரியும் வெளியிலே எங்கேயும் தொலைக்கலே, அவரோட எண்ணுக்கு போன் செஞ்சும் பாத்தாச்சு  கண்டு பிடிக்க முடியலே, கூகிள் சர்ச்சிலே  என் போனைக் கண்டு பிடின்னு கட்டளை போட்டு  அதாலேயும்  கண்டு பிடிக்க முடியலே. தொலைபேசி இயக்கத்தில் இல்லைன்னு சொல்றது.

    நான் இவ்ளோ கஷ்டப்பட்டுண்டு இருக்கேன்  ஒரு வார்த்தை அதைப் பத்தி பேசறாளா பாரு இவ, மனதுக்குள் பொறுமினார் சபேசன்.

    அவ பாட்டுக்கு அவங்க கூப்புட்டு இருக்காங்க இவங்க கூப்பிட்டு இருக்காங்கன்னு நவராத்திரி கொலுவுக்கு போயிட்டு வந்துண்டே இருக்கான்னு  என்று அவருடைய மனைவி காமாக்ஷியை பத்தி  நெனைச்சு கோவம் வந்துது.

    ஒரு வாரம் ஆச்சு சரி இனிமே கிடைக்காதுன்னு முடிவு செஞ்சாச்சு, படுக்கும் போது மணி பன்னிரன்டு, நல்ல தூக்கம், காலையிலே தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு நிலையிலே  மனசுக்குள்ளே ஒரு நெனைப்பு இன்னிக்கு நம்மோட போன் கிடைச்சாலும் கிடைக்கும்னு , நெனைச்சுண்டே எழுந்து  வழக்கம் போல  ஸ்வாமி படத்திலே  கண்முழிச்சு  கையிக் கூப்பி விட்டு உள்ளங்கையை ஒரு முறை பார்த்துவிட்டு  திரும்பினார் சபேசன், பக்கத்தில் இருந்த  மேசையில் அவருடைய விண்டோஸ் போன் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது.

    ஒரு கணம் கனவா  நினைவான்னு   புரியாமே மெதுவா கையை நீட்டி அதைத் தொட்டுப் பார்த்தார். அட உண்மையிலேயே அவரோட விண்டோஸ் போன்தான். மகிழ்ச்சியாய் எழுந்தார். அவர் மனைவி காமாக்ஷி கீழே நீங்க உக்காந்திருந்த சோபாவை நகத்திப் பார்த்தேன், அதோட அடியிலேயே இருந்துது, நீங்க எழுந்தவுடனே உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டும்னுதான் உங்க பக்கத்திலே  வெச்சேன் என்றாள்.

    அப்ப்டியே ஓடிப்போய் காமாக்ஷியைக் கட்டிக் கொண்டு  ஒரு முத்தம் கொடுத்தார்  சபேசன்.   தலையைக் குனிந்து வெட்கப்பட்டாள் காமாக்ஷி,

    ரொம்பத் தேன்க்ஸ் காமாக்ஷி என்றார் மன நெகிழ்வுடன் சபேசன்.

    ஓ மௌனமா இருந்தாலும் இவ மனசிலேயும் காணாமப் போன நம்மோட போன் உறுத்திண்டேதா இருந்திருக்குன்னு உணர்ந்து இன்னொரு முறை கட்டிக் கொண்டார் காமாக்ஷியை சபேசன்.

    எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியலே காமாக்ஷி நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு நான் வாங்கித் தரேன் என்றார் சபேசன்

    எனக்கு ஒண்ணும் வேணாம் நீங்க சந்தோஷமா இருக்கீங்களே அதுவே போதும்னா காமாக்ஷி.

    அவளையே பார்த்துக் கொண்டிருந்த சபேசன் இவளுக்கு ஒரு நல்ல பட்டுப் புடவையா வாங்கித் தரணும்ன்னு  நெனைச்சிண்டார்.

    இல்லே காமாக்ஷி உனக்கு நான் ஏதாவது ப்ரசன்ட் பண்றேன் அப்பின்னார்.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று வாயால் சொன்னாலும்

    காமாக்ஷியின் மனதில் அவர் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுப்பர் என்று தோன்றியது.

    விண்டோஸ் போன் திரும்பக் கிடைச்சது மனதுக்கு சந்தோஷமாக இருந்தாலும் மனதுக்குள் அவர் மகன்  கவலைப்படாதீங்கப்பா நான்  அட்வாண்ச் மாடல் போன் வாங்கித் தரேன்ன்னு சொன்னது நிழலாடியது.

    ஒரு வேளை இந்த போன் கிடைக்காம இருந்திருந்தா ஒரு அட்வான்ஸ் போன் வாங்கி இருக்கலாமோ அப்பிடீன்னு ஒரு நெனைப்பு மனதில் ஓடியது சபேசனுக்கு,

    ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர், அங்கே மனம் பேசிக்கொண்டே இருந்தது,  தாம்பத்ய ரகசியம் புரிந்து வாழ்வின் மேன்மையை உணர்த்தியது  அவர்கள் பார்வை.

     சுபம்

    Share
  • வாழ்க்கை நலம் – 30

    குன்றக்குடி அடிகள்

    30. சார்புநிலை கூடாது!

    நடுவுநிலைமை என்பது உயர்வாழ்வின் கொள்கை, கோட்பாடு. இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு. பல சமயங்களில் பன்முக நிலையில்கூட உலகியல் நிகழும். இந்த நிலைகளில் தன்னலம், சார்பு நிலைகள் கருதி ஒருபக்கம் சார்ந்து விடுதல் கூடாது.

    எல்லாக் கருத்துக்களையும், எல்லா நிலைப்பாடுகளையும் அறிவார்ந்த நிலையிலும் பொதுப் பயன்பாட்டு நிலையிலும் தீர ஆய்வு செய்து, ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையதைத் துணிவுடன் தள்ள வேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடுவுநிலையில் நிற்றல் என்பது கூடாது. நன்மையைச் சார்ந்து இராத நடுவு நிலைமை தீமையாகும்.

    இன்றைய நமது சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால் அநியாயங்களே நியாயங்களாகிக் கொண்டு வருகின்றன. இன்றைய சமுதாய அமைப்பில் விருப்பு வெறுப்பு உணர்வுகள் (இராகதுவேஷங்கள்) நிறைந்துள்ளன.

    நாம் தெரிந்தோ, தெரியாமலோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி; சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இத்தகு சூழ்நிலையில் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறிந்தறிய வேண்டிய ஒன்று.

    ஒரு கருத்து அல்லது ஒரு நடைமுறை சரி அல்லது தவறு என்று ஆய்வில்லாமல் முடிவுக்கு வரக்கூடாது. ஆய்வு நிலையில் ஆய்வுக்குரிய செய்திகள் பாலும் ஆய்வுக்குரிய செய்திக்குரியர்பாலும் நிறை நலம் சார்ந்த நம்பிக்கை இருத்தல் வேண்டும். மதிப்புணர்வு இருத்தல் வேண்டும். அதே போழ்து எல்லை கடந்த சார்பு நிலையும் ஆகாது.

    பழங்காலத்தில் வணிகர்கள் பொருளை எடை போடும் முன் எடைப்போடப் பயன்படும் துலாக்கோலை (தராசை) முதலில் எடுத்துத் துலாக்கோலைச் சமநிலையில் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல் நபர்கள் ஆராயப்படுகின்றனர்.

    “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.”
    (குறள்  –  118)
    என்பது திருக்குறள்.

    “சமன்செய்து”, என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரிதிருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக்கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள் – பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.

    ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், “கோடாமை” என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின்பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்: அறநெறியை வளர்க்கும்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 4ம் பகுதி

    தஞ்​சை​ வெ. ​கோபாலன்

    திருத்தில்​லை – தொடர்ச்சி…

    அடியார்க்கு எளியவர் அம்பலவாணர் அடிபணிந்தால்
    மடியாமல் செல்வ வரம் பெறலாம் வையம் ஏழு அளந்த
    வெடியோனும் வேதனும் காணாத நித்த நிமலன் அருள்
    குடிகாணும் நாங்கள் அவர் காணும் எங்கள் குலதெய்வமே. 11.

    அடியார்களுக்கு மிக எளிதில் கைவசமாகக்கூடிய பொன்னம்பல வாணரின் பாதங்களைப் பணிந்து எழுந்தால் அழியாத செல்வங்களை வரமாகப் பெறலாம்; ஏழு உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருமாலும், வேதங்களைத் தன் முகங்களாகக் கொண்ட பிரம்ம தேவனும், அடிமுடி காண முயன்றும் முடியாத சிவபெருமானின் திருவருளைப் பெற்ற அவன் அடியார்களாக விளங்குகின்றோம்; அந்த சிவனே எங்கள் குலதெய்வமும் ஆகும்.

    உடுப்பானும், பால் அன்னம் உண்பானும், உய்வித்து ஒருவர் தம்மைக் கெடுப்பானும்
    மேதென்று கேள்வி செய்வானும், கெதி அடங்கக் கொடுப்பானும், தேகி என்று
    ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று தடுப்பானும் நீ அல்லையோ
    தில்லை ஆனந்தத் தாண்டவனே. 12.

    பட்டும் பீதாம்பரமுமாக வேளைக்கொரு உடையை உடுப்பவனும், வேளைதோறும் பால் அன்னம் உண்பவனும், சிலரை வாழவைத்தும் சிலரது வாழ்வில் துன்பம் கொடுத்துச் சோதித்துக் கெடுப்பானும், செய்யும் கிருத்தியங்களையெல்லாம் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பவனும், நேரிடும் கேடுகளை நீக்கி நல்லனவற்றைக் கொடுப்பானும், பிட்சாந்தேகி என்று வாயிலில் நின்று இரப்பானும், கொடு என்று கேட்பவனுக்குக் கொடுப்பவனைத் தடுப்பவனும் நீதானே ஐயா! தில்லையம்பலத்தில் ஆனந்தத் தாண்டவமிடும் தாண்டவனே, நடராஜப் பெருமானே!

    வித்தாரம் பேசினும், சோங்கு ஏறினும், கம்ப மீதிருந்து
    தத்தா வென்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும், தம்முன் தம்பி
    ஒத்தாசை பேசினும் ஆவதுண்டோ தில்லை உண்ணிறைந்த
    கத்தாவின் சொற்படி அல்லாது வேறில்லை கன்மங்களே. 13.

    வாசாலகமாக வக்கணையாகப் பேசினாலும், கடலில் மரக்கலத்தில் ஏறிப் பயணித்தாலும், கம்பத்தில் ஏறி கழைக்கூத்து ஆடினாலும், இளையவன் ஓடிவந்து தான் இருக்க பயமேன் என்று துணை நலம் பேசினாலும், அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் அந்த தில்லைத் தலமாடும் தாண்டவன் எண்ணப்படியன்று வேறெதுவும் நடைபெறுமோ?

    பிறவாதிருக்க வரம் பெறல் வேண்டும், பிறந்து விட்டால்
    இறவாதிருக்க மருந்து உண்டு காண், இது எப்படியோ?
    அறமார் புகழ் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
    மறவாது இரு மனமே! அது காண் நன்மருந்து உனக்கே! 14.

    ஓ மனமே! உன் பிணிக்கு ஏற்ற நல்ல மருந்து எது தெரியுமா? எத்தனை பிறவிகள் மீண்டும் மீண்டும் பிறந்து வருந்துவதைத் தவிர்த்து இனி பிறவாத வரம் வேண்டுமென்றால், அப்படிப் பிறந்து விட்டால் புகழோடு இப்புவியில் வாழவேண்டுமென்றால் அதற்கொரு மருந்து இருக்கிறது. அது எப்படி முடியும் என்று கேட்கிறாயா? ஒரு நல்ல மருந்து இருக்கிறது, அது, அறமும், புகழும் மண்டிக் கிடக்கும் தில்லை நடராஜப் பெருமானின் சிற்சபை இருக்கிறதே அங்கு ஆனந்த நடனமிடுபவரின் மலரடியாம் ‘குஞ்சிதபாதத்தை’ மட்டுமே கதியெனக் கொண்டு சரணமடைந்தால் முடியும். அதுதான் உனக்கு நல் மருந்து.

    தவியாதிரு நெஞ்சமே, தில்லை மேவிய சங்கரனைப்,
    புவி ஆர்ந்திருக்கின்ற ஞானாகரனைப், புராந்தகனை,
    அவியா விளக்கைப், பொன்னம்பலத்து ஆடியை ஐந்தெழுத்தால்
    செவியால் நீ செவித்தால் பிறவா முத்தி சித்திக்குமே. 15.

    ஓ மனமே! என்ன செய்வேன், எப்படிச் செய்வேன் என்றெல்லாம் தவித்து அலையாதே. தில்லையில் குடிகொண்ட சிவபெருமானை, இந்தப் புவியெல்லாம் நிரம்பியிருக்கின்ற ஞான சொரூபமானவனை, திரிபுராந்தகனை, அனவரதமும் அணையாமல் ஒளிவீசும் பொற்சுடரை, பொன்னம்பலம் மேவி ஆனந்த நடனம் புரிகின்றவனை, பஞ்சாட்சர மந்திரத்தை வாய்விட்டு உச்சரிக்காமல் மனதுக்குள் உன் உட்செவிக்கு மட்டும் கேட்கும்படியாக சதா சொல்லி வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும், முக்தியும் சித்திக்கும் என்பதை உணர்.

    நாலின் மறைப் பொருள் அம்பலவாணரை நம்பியவர்
    பால் இல்லொருதரம் செவிக்கொணாதிருப் பார்க் கருங்கல்
    மேல் எடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர் மீண்டுமொரு
    காலினில் நிறுத்துவர் கிட்டியும் தாம் வந்து கட்டுவரே. 16.

    சதுர் வேதங்களாம் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகியவற்றின் உட்பொருளாக விளங்குகின்ற சிவபெருமானை மனத்திடை கொண்டு, அவன் ஞானசபையின் முன்னே சென்று ஒரு முறையாயினும் வழிபடாமல், மற்றைய விவகாரங்களில் ஈடுபட்டு வீண் பொழுது போக்கி வாழ்பவனை அந்த காலனுடைய தூதர்கள் வந்து அவர்கள் தலைமீது பெரும் பாறாங்கல்லை வைத்து அழுந்தும்படி செய்து, அது போதாதற்கு கைகளில் விலங்கையும் மாட்டிப் பூட்டி விடுவார்கள். அது மட்டுமா? ஒற்றைக் காலில் நிற்கும்படிச் செய்து விடுவர். எமனுடைய பாசக் கயிறு அவர்களை இறுகப் பிணித்துவிடும்.

    ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப்
    போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்
    சோற்று ஆவியற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்று
    ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே. 17.

    தலையில் தனது ஜடாமுடியில் கங்கையோடு தும்பைப் பூவையும் அணிந்து, திரு நடனம் புரியும் அம்பலவாணனைத் துதித்துப் போற்றாதவர்களுக்கு இந்த பூவுலகில் சில அடையாளங்கள் உண்டு; அப்படி என்ன அடையாளங்கள்? சோறு மட்டுமல்ல, சோற்றின் மணம் கூட எட்டாதபடியும், சுகம் என்பது என்னவென்றே தெரியாதபடியும், இடையில் அணியத் துணிகூட இல்லாமலும், பிச்சை எடுக்கலாம் என்று சென்றால் கூட பிச்சை கிடைக்காத படியும் ஏங்கித் தவிப்பார்கள்.

    அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கு அதிபதியை
    வித்தனை அம்மை சிவகாமசுந்தரி நேசனை எம்
    சுத்தனைப் பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காணக் கண்கள்
    எத்தனை கோடி யுகமோ தவம் செய்திருக்கின்றனவே. 18.

    உயிர்களுக்கெல்லாம் தந்தையானவனை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதன்மையானவனை, என்றும் நிலையாய் இருப்பவனை, அன்னை சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தவனை, நமக்கெல்லாம் இறைவனை சிதம்பரம் சிற்சபையில் நடம் புரியும் அண்ணலைக் காண்பதற்கு நம் கண்கள் எத்தனை கோடி யுகங்கள் தவம் செய்தனவோ அறியேனே.

    (திருத்தில்லை விருத்தம் நிறைவு.)

    Share
  • அக்டோபர் 10: உலக மன நல தினம்

    முதுமையின் புன்னகை குழந்தைப் புன்னகை

     

     எஸ்.வி. வேணுகோபாலன்

     

    News_45642

    அடுத்திருப்பதைப் பளிச்செனக் காட்டிவிடும் கண்ணாடியைப் போல, உள்ளம் கடுத்திருப்பதைக் காட்டிவிடுகிறது முகம் என்றார் வள்ளுவர். சாலையில் வேகமாகக் கடக்கும் முகங்களில் எத்தனை ஆயாசம். நடையில் எத்தனை சோர்வு. உள்ளம் களைத்துப் போவதை மறைக்கவும், மறக்கவும் முடியாத எத்தனையோ சோகச் சிறுகதைகள் ஒவ்வொரு திருப்பத்திலும்.மகிழ்ச்சியால் ததும்பும் மனம் இலேசாக இருக்கிறது.

    வேதனையால் நிரம்பும் உள்ளம் கனக்கிறது. வலி, அவமதிப்பு, புறக்கணிப்பு, தேடியது கிடைக்காதது, கிடைத்தது நிலைக்காதது, நிலைப்பது வேண்டாமல் போய்விடுவது, போனது மீளாதது, மீண்டது ஆகாதது.. என அடுக்கடுக்காய்த் துன்பங்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. உறவுகள், நட்பு எல்லாவற்றுக்கும் வரைகோடுகளும், எல்லைக்கோடுகளும் சித்திரங்களை மாற்றி எழுதும்போது சிக்கல்கள் தோன்றிவிடுகின்றன. இறுக்கமாகும் மனது நெகிழ்ந்து கொடுக்க மறுக்கிறது. அதன் அடுத்த பயணம் சுமைதாளாது வெடிக்கும் நிலைகளை நோக்கி நகர்கிறது.

    மன நலம் காப்பது மனிதர்களை மேலும் அழகானவர்களாக ஆக்குகிறது. உள்ளார்ந்த சிரிப்பைச் சிந்தும் மனிதர்கள் மற்றவர்களை விடவும் வசீகரமாகத் தெரிகின்றனர்.உடல் சார்ந்த சிரமங்களை மீறி அன்பார்ந்த புன்னகையைத் தவழவிடும் மனிதர்கள் விரைந்து குணமடையும் வாசல்களைத் திறந்து கொள்கின்றனர்.

    மனம், உள்ளம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் புறக் காரணிகள்தான் அகமும் புறமுமாய் மனிதர்களது நிலையைப் பெரிதும் தீர்மானிப்பது. பொருளாதாரம் ஒரு முக்கிய காரணி. வாழ்க்கை முறை அடிப்படைக் காரணி. சமூகம் சார்ந்த வாழ்க்கை அணுகுமுறை, பகிர்ந்து கொள்ளும் உளப்பாங்கு, வெளிப்படைத் தன்மை, பரஸ்பரம் அடுத்தவர் குரல்களை மதிக்கும் பண்பு, பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் விஷயங்களை பகுத்து ஆராயும் திண்மை போன்றவை கால காலமாக நமது பண்பாட்டின் அடிச்சுவடுகளாய் இருந்து வருபவை. ஆனால் வேகமான தாராளமயமும், மூர்க்கமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் சந்தைமயமும் நமது அடிப்படை குணாம்சங்களை காவு வாங்குகின்றன.

    எதற்காக எதைத் தேடி எங்கே ஓடுகிறோம் என்ற தெளிவில்லாத சம கால துரத்தல் வேட்டையில் கையில் வந்தடையும் பணத்திற்கு எதிர் விகிதத்தில் உள்ளங்கள் வெறுமை அடைகின்றன.

    “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என்றான் மகாகவி. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். எது எப்படிப் போனாலும் நம் வேலை முடிந்தால் சரி என்று ஓடும் அன்றாட வாழ்க்கை, இப்படியான கருணை, கரிசனம், நேயம், புல், பூ பூக்காத வறட்சி உள்ளங்களோடு வீட்டுக்குள் வந்து அடைய வைக்கிறது. புத்தகங்களைக் காட்டிலும் அதிகம் மருந்துகளால் நிரம்புகின்றன நமது அலமாரிகள்.

    உலக சுகாதார நிறுவனம், 1992 முதல் அக்டோபர் 10 அன்று உலக மன நல தினமாக அனுசரித்து வருகிறது. மன நல சம்மேளனத்துடன் இணைந்து கடைப்பிடிக்கப்படும் இந்த தினத்தில், இந்த ஆண்டு முதியோர் குறித்த சிறப்பு கவனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

    “பழுத்த ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரித்ததாம்” என்பது மூத்தோர் சொல். தான் கடக்க வேண்டிய எதிர்கால மைல் கல்லில் இன்று உட்கார்ந்திருக்கும் முதியோரை அடுத்தடுத்த தலைமுறை மதிக்கத் தவறுகிறது. சந்தைப் பொருளாதார விதிகளோடு இணைந்த இந்தத் தலைமுறை இடைவெளி உடல்மொழியிலும், பார்வையிலும், பகிர்தலிலும் மிகப் பெரிய வன்முறையாக வெளிப்படுகிறது. கூனிக் கூசிக் குறுகிப் போகும் முதியோர் உள்ளம் வறண்ட நிலத்தை விடவும் அதிகப் பரிமாணத்தில் வெடித்துப் பிளந்துவிடுகிறது. பின்னர் அதன் மீது எவ்வளவு நீரூற்றினாலும் ஒரு பசுந்தளிரை அது வெளியே நீட்டித் தர இயலாது போகிறது.

    பேராசிரியர் ச. மாடசாமி தொகுத்திருக்கும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று: நான்கு மகன்களாலும், மருமகள்களாலும் அவமதிக்கப் படும் மூதாட்டி ஒருத்தி வீட்டை விட்டு வெளியேறி ஊரின் புறத்தே இருக்கும் பாழடைந்த வீட்டினுள் போய் நின்று கொள்கிறாள். தான் படும் பாட்டைக் குறித்த அவளது அடக்கமாட்டாத வேதனையின் கூக்குரல் ஒலிக்க ஓலிக்க ஒவ்வொரு சுவராய் பெருத்த ஓசையோடு இடிந்து விழும்.

    அண்மையில் விகடன் இதழில் அ. முத்துலிங்கம் எழுதியுள்ள ‘கடவுச் சொல்’ என்ற அற்புதமான சிறுகதை மனிதர்கள் அருகே வந்து பேசுகிறது. தங்களோடு ஒத்துப் போகத் தெரியவில்லை என்று வயதான தாயைப் பிள்ளைகள் மிகுந்த பொருட்செலவில் வசதியான விடுதியில் குடிவைத்தும் அந்த முதியவள் படும் தனிமையின் அவஸ்தையைச் சொல்கிற கதை அது.

    நோயினாலும், பொருளாதார சிக்கல்களாலும், குடும்பப் பிரச்சனைகளாலும், தனிமைத் துயரிலும், உளச் சோர்வின் பொருட்டும் பாதிக்கப்படும் முதியோர் குறித்த அக்கறையை, இந்த உலக மன நல தினம் முன்னுக்குக் கொண்டுவருகிறது. முதுமை உடலில் ஏராளம் சுருக்கங்களைக் கொண்டு வருகிறது. ஆனால், அக்கறையான கவனிப்பின்அன்பு உள்ளங்கள் சுருங்கிப் போகாது பார்த்துக் கொள்கிறது. முதியோரது புன்னகை, குழந்தையின் புன்னகையைப் போலவே இதமளிப்பது. மற்றவர்களது முகங்களையும் சேர்த்து அலங்கரிப்பது.

    – நன்றி:தீக்கதிர்: அக்டோபர் 10, 2013

    Share
  • அமெரிக்க இந்தியர்கள் செய்யும் முறையற்ற செயல்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் கூரையைப் பிய்த்துக்கொண்டு போகின்றன.  நடுத்தர வர்க்க மக்களால் கூட இதைச் சமாளிக்க முடியவில்லை.  உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்லை எடுப்பதற்கு – அதில் கொஞ்சம் சிரமம் இருந்தால் – $800 – அதாவது இன்றைய டாலர்-ரூபாய் விகிதத்தில் 48,800 ரூபாய் – வசூலிக்கிறார்கள்.  இந்தியாவில் ஒரு கைதேர்ந்த பல் மருத்துவர் ஒரு பல்லை எடுப்பதற்கு 500 ரூபாய் பில் போடுகிறார்.  இப்படி எக்கச்சக்கமாக மருத்துவச் செலவுகள் ஆவதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகள் தோன்றியிருக்கின்றன.  அவை வசூலிக்கும் கட்டணங்களும் போடும் நிபந்தனைகளும் அமெரிக்க மக்களைத் திணறடிக்கின்றன.  இதைச் சரிசெய்ய எத்தனையோ ஜனாதிபதிகள் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    அமெரிக்காவில் இப்போது நிறையப் பேர் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இருக்கிறார்கள்.  இதில் சிலருக்கு வேலை இல்லாததால் மருத்துவக் காப்பீட்டிற்குரிய பிரீமியத்தைப் பகிர்ந்துகொள்ள கம்பெனியோ வேலை கொடுத்தவரோ இல்லை.  வேலை இருந்தாலும் தங்கள் பங்குக்குரிய பிரீமியத்தைக் கட்ட சிலரிடம் தேவையான பணம் இல்லை.  இப்போது ஒபாமா எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்கு ஒரு புதிய மருத்துவச் சட்டத்தை (Affordable Care Act) குடியரசுக் கட்சியினரின் மிகுந்த எதிர்ப்போடு 2010-இல் நிறைவேற்றினார்.  இதைக் குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் சட்டம் (Obama Care) என்கிறார்கள்.   அதன் சில பகுதிகள் 2014-இல் அமலுக்கு வருகின்றன.  இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அதற்குரிய ஆயத்தங்கள் ஆரம்பிக்கின்றன.

    எப்படியாவது அந்தச் சட்டத்தை வராமல் தடுத்துவிட வேண்டும் என்று குடியரசுக் கட்சியில் ஒரு சிலர் மும்மரமாக முயன்று வருகிறார்கள்.  ஒபாமாவோடு ஜனாதிபதித் தேர்தலில் 2012-இல் போட்டியிட்ட ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவிக்கு வந்த அன்றே அந்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிடுவேன் என்று சூளுரைத்தார்.  நல்லவேளை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவில்லை.  ஆனால் அதே ஆண்டு அமெரிக்கப் பார்லிமெண்டிற்கு  நடந்த தேர்தலில் கீழ் அவையான காங்கிரஸில் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது.  இப்போது அதன் தலைவராக இருக்கும் ஜான் பேனர் இந்தக் கட்டத்தில் எப்படியாவது ஒபாமா கொண்டுவந்த மருத்துவச் சட்டத்தை ஒழித்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டு அதைச் செயலாக்கத் துடிக்கிறார்.  அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு பணம் ஒதுக்க நடந்து வரும் விவாதங்களில் ஒபாமாவின் மருத்துவச் சட்டத்திற்குப் பணம் ஒதுக்கப் போவதில்லை என்றார்.  ஆனால் ஒபாமா மசியவில்லை.  இப்போது இன்னும் ஒரு வருடம் அந்தச் சட்டம் காத்திருக்கலாம் என்று பேனர் கூறுகிறார்.  2014-ஆம் ஆண்டு நடைபெறப் போகும் காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கான தேர்தலில் மேலவையான செனட்டிலும் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அப்போது எளிதாக ஒபாமாவின் சட்டத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்.  ஒபாமாவின் புதிய மருத்துவச் சட்டத்தினால் ஏற்படும் செலவுகளோடு அரசின் மற்ற செலவுகளுக்கு ஆகும் பணத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.  அதனால் இப்போது அத்தியாவசிய அலுவலங்கள் தவிர மத்திய அரசின் மற்ற அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன.  இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.  ஆனாலும் ஜான் பேனர் தன் பிடிவாதத்திலிருந்து மாறப் போவதாகத் தெரியவில்லை.  ஒபாமாவும் எப்படியும் தான் மிகவும் பாடுபட்டுக் கொண்டுவந்த மருத்துவச் சட்டத்தை குடியரசுத் தலைவர்கள் ஒழிக்க உடன்படப் போவதில்லை.  இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.  வரும் 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் ‘அமெரிக்கா எவ்வளவு கடன் வாங்கலாம்’ என்ற விவாதத்தில் ஒரு வேளை குடியரசுக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சமரசம் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.  அப்போதாவது ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால் நாட்டின் நிலை மிகவும் மோசமாகும் என்று அஞ்சுகிறார்கள்.  மக்கள் மத்தியில் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதற்கு எந்தக் கட்சி தான்தான் காரணம் என்று நினைக்கிறதோ அந்தக் கட்சி தன் பிடிவாதத்திலிருந்து கடைசியாகப் பின்வாங்கும்.

    மேலே சொன்னபடி ஜனாதிபதி ட்ரூமன் காலத்திலிருந்தே வசதியற்றவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கப் பல முயற்சிகள் நடந்து வந்தன.  ஆனாலும் ஜான்ஸன் காலம் வரை எதுவும் உருப்படியாக நடக்கவில்லை.  1935-இல் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கொண்டுவந்த சமூக பாதுகாப்புச் சட்டத்தை (Social Security Act)  ஜான்ஸன் 1965-இல் விரிவாக்கி மெடிகேர் (Medicare), மெடிகெய்ட் (Medicaid) என்ற இரண்டு சட்டங்களை அதனோடு இணைத்தார்.  வறுமையையும் இனத்தின் அடிப்படையில் பொருளாதார வேறுபாட்டையும் ஒழிக்க ஜான்ஸன் செய்த செயல்கள் இவை.  இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் முதல் மெடிக்கேர் கார்டை ஓய்வு பெற்ற ஜனாதிபதி ட்ரூமனுக்கும் இரண்டாவது கார்டை அவருடைய மனைவிக்கும் ஜான்ஸன் அளித்தாராம்!

    மெடிக்கேர் சட்டத்தின்படி எல்லோருடைய சம்பளத்தில் இருந்தும் 1.45%-ஐ மெடிக்கேர் செலவுகளுக்காக அரசு வசூலிக்கும்.  இன்னொரு 1.45%-ஐ பணிசெய்பவர் வேலைபார்க்கும் கம்பெனி கொடுக்கும்.  தங்களின் கீழ் 25 பேர் வேலைபார்த்தால் அந்தக் கம்பெனி இதைச் செலுத்த வேண்டும்.  தாங்களாகத் தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் 2.9%-ஐ இதற்காக அரசுக்குச் செலுத்த வேண்டும்.  ஒருவருடைய வருமானம் இரண்டு லட்சம் டாலருக்கு மேல் இருந்தால் அவர்கள் 3.8% கட்ட வேண்டும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  ஒருவர் பத்து ஆண்டுகளாவது வேலைபார்த்திருக்க வேண்டும்.  கணவன் பார்த்திருந்தால் மனைவிக்கும் மனைவி பார்த்திருந்தால் கணவனுக்கும் இதில் பயன் பெற உரிமை  உண்டு.  அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் எப்போதும் இருப்பதற்குரிய உரிமம் பெற்றவராகவோ (Green card holder)  இருக்க வேண்டும்.  அவருக்கு வயது 65-க்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.  மாற்றுத் திறனாளியாக இருந்தால் 65 வயதுக்குக் கீழேயும் இந்தச் சட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.  இதில் சேர உரிமை பெறுபவர்கள் வருடம் தோறும் பிரீமியம் கட்ட வேண்டும்.  சமூகப் பாதுகாப்புத் தொகையிலிருந்து (Social Security Benefits)  (பத்து ஆண்டுகள் வேலைபார்த்த அமெரிக்கர்கள் எல்லோருக்கும் 65 வயதிற்குப் பிறகு அரசு ஓய்வூதியம் போன்ற ஒரு தொகையைக் கொடுக்கிறது.  இதற்கும் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை (6.2%) அரசு பிடித்துக்கொள்ளும். கம்பெனியும் 6.2% கட்ட வேண்டும்.) இந்தப் பிரீமியத்தைக் கழித்துக்கொண்டு மீதிப் பணத்தைத்தான் கொடுப்பார்கள்.  மெடிக்கேரில்  நான்கு பகுதிகள் உண்டு.  முதல் பகுதி மருத்துவமனையில் சேர்ந்தால் அதற்காகும் செலவுகளுக்காக.  இரண்டாவது பகுதி மருத்துவரிடம் செல்லும்போது ஆகும் செலவுகளுக்காக.  இவை இரண்டும் எல்லோருக்கும் கிடைக்கும்.  மூன்றாவது பகுதி மருத்துவத்தில் ஆகும் விசேஷ செலவுகளுக்காக.  இதற்கு தனியாக பிரீமியம் கட்ட வேண்டும்.  நான்காவது பகுதி மருந்துகளுக்கான செலவுகளுக்காக.  இதில் சேரவும் தனி பிரீமியம் கட்ட வேண்டும்.  மெடிக்கேரில் சேர்ந்துவிட்டாலும் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவுகளிலும் மருத்துவர்களைப் பார்க்கும் செலவுகளிலும் ஒரு பங்கைப் பயனாளிகள் கட்ட வேண்டும்.  அமெரிக்க மெடிக்கேர் பயனாளிகள் மெடிக்கேரில் சேர்ந்தாலும் நிறையச் செலவுகள் இருக்கின்றன.  மெடிக்கேர் திட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.

    இரண்டாவது சட்டமான மெடிக்கெய்டில் சேருவதற்கு அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் எப்போதும் இருப்பதற்குரிய உரிமம் பெற்றவராகவோ இருக்க வேண்டும்.  இதற்கு வயது வரம்பு இல்லை.  ஆனால் அவரது வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே – அதாவது வருஷ வருமானம் $15,000-க்குக் கீழே – இருக்க வேண்டும்.  இப்படிச் சில அடிப்படை விதிகள் இருந்தாலும் யாரை மெடிக்கெய்டில் பயனாளியாகச் சேர்க்கலாம் என்பதை ஒவ்வொரு மாநிலமும் தானாக வரையறுக்கிறது.  மெடிக்கெய்ட் திட்டத்தில் சேர வேண்டும் என்ற கட்டாயம் மாநிலங்களுக்கு இல்லையென்றாலும் இப்போது எல்லா மாநிலங்களும் அதில் பங்கு பெறுகின்றன.  ஒவ்வொரு மாநிலமும் அங்கு வசிக்கும் மெடிக்கெய்ட் பயனாளிகளுக்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்கிறது.  மீதிப் பாதியை மத்திய அரசு ஏற்கிறது.  மெடிக்கெய்ட் பயனாளிகள் பெறும் சலுகைகள், வசதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.  மெடிகெய்ட் பயனாளிகளுக்கு மெடிக்கேர் பயனாளிகள் போல் எந்த விதச் செலவும் இல்லை.

    அமெரிக்காவில் நல்ல சம்பளம் பெறும் பல இந்தியர்கள் தங்கள் பெற்றோர்களைத் தங்களோடு வைத்துக்கொள்கிறார்கள்.  அமெரிக்கப் பிரஜைகளாக இருப்பவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பித்த உடனேயே பச்சைக் கார்டு கிடைத்துவிடுகிறது.  ஐந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமையும் கிடைத்துவிடுகிறது.  பச்சைக் கார்டு வைத்திருப்பவர்களின் பெற்றோர்களுக்கும் பச்சைக் கார்டு கிடைத்துவிடும்.  ஆனால் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எல்லா உதவிகளும் பெற்றுக்கொள்கிறர்கள், உணவு, உடை, இருப்பிடம் உட்பட.  பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கு ஆயாவாக இருந்து அவர்களை வீட்டில் கவனித்துக்கொள்வது போன்ற தங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்கிறார்கள்.  அமெரிக்காவில் ஆயாக்கள் வைத்துக்கொண்டால் எக்கச்சக்க செலவு ஆகும்.  இப்படிக் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நிறைய உதவிகள் செய்துகொண்டாலும்  மருத்துவச் செலவுகளுக்கு மாத்திரம் தனிக் குடும்பமாக ஆகிவிடுகிறார்கள்.  இவர்களே இந்தியாவில் ரேஷன் கார்டில் பெற்றோர் அவர்களோடு வசித்தாலும் வருமானம் இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களுக்குத் தனி கார்டுகள் வாங்குவார்களா?  பெற்றோர்களின் வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தால் அதற்குரிய சலுகைகளை அவர்கள் பெறும்படி செய்வார்களா?  இருபதாயிரம் டாலர் வருமானம் உள்ள ஒரு அமெரிக்கரால் மெடிக்கெய்டில் சேர முடியாது.  ஆனால் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் ஒரு இந்தியரின் பெற்றோர்கள் மெடிக்கெய்டில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.

    அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் பெற்றோர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவை மாநிலத்தின் தலையில் கட்டிவிடுகிறார்கள்.  எல்லா மாநிலங்களிலும் இந்தியர்கள் இம்மாதிரிப் பெற்றோர்களை  மெடிக்கெய்டில் சேர்ப்பது நடக்கிறது.  ஒருவருக்கு 500 டாலர் செலவழித்தால் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனியில் மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.  ஆனால் அமெரிக்காவில் வாழும் வசதி படைத்த இந்தியர்கள் அப்படிச் செய்வதில்லை.  அந்த மாநிலத்துக்குரிய மெடிக்கெய்டில் சேர்த்துவிடுகிறார்கள்.  கலிஃபோர்னியா மாநிலத்தில் மெடிக்கெய்ட் பயனாளிகளுக்கு மற்ற மாநிலங்களை விட நல்ல மருத்துவ வசதிகள்  கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  அங்குதான் கணினி வல்லுநர்கள் சிலிகான் வேலியில் (Silicon Valley) வேலைபார்க்கிறார்கள்.  நல்ல வசதி படைத்த இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள்.  ஆரக்கிள் (Oracle), கூகுள் போன்ற  கம்பெனிகளின் தலைமையகங்கள் கலிஃபோர்னியாவில் இருக்கின்றன.  இந்தக் கம்பெனிகளின் கிளைகளில் வேறு மாநிலங்களில் வேலைபார்ப்பவர்கள் கூட கலிஃபோர்னியாவில் நல்ல மெடிக்கெய்ட் வசதி இருப்பதால் அங்கு தங்கள் வேலை இடத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.  பெற்றோர்களை மெடிக்கெய்ட் பயனாளிகளாகச் சேர்த்துவிடுகிறார்கள்.  பிள்ளைகள் நல்ல வசதி படைத்தவர்கள் என்றாலும் பெற்றோர்களுக்கு எந்த வித வருமானமும் இல்லாததால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வருகிறார்கள்.  அமெரிக்கக் கலாச்சாரப்படியும் சட்டப்படியும் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, அவர்களுடைய மைனர் குழந்தைகள் மட்டுமே அங்கத்தினர்கள்.  பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர்கள் இல்லை.  ஆனால் இந்தியாவில் பெற்றோர்களும் குடும்ப அங்கத்தினர்களாகக் கருதப்படுகிறார்கள்.  அதனால் இந்தியாவில் உள்ள அமெரிக்கக் கம்பெனிகளும் இந்தியாவில் தங்கள் பணியாளர்கள் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டில் பெற்றோர்களைச் சேர்ப்பதை அனுமதிக்கிறார்கள்.  அங்கு மருத்துவச் செலவுகள் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது மிக, மிகக் குறைவு என்பதும் அதற்கு ஒரு காரணம்.

    அமெரிக்காவில் மெடிக்கெய்ட் பயனாளிகளில் சிலராவது தாங்கள் வேலைபார்த்தபோது கொஞ்சமாவது மருத்துவச் செலவு நிதிக்கு வரி கட்டியிருப்பார்கள்.  ஆனால் இந்தியர்களின் பெற்றோர்கள் எந்த விதத்திலும் மருத்துவச் செலவிற்கான நிதிக்கு எதுவும் கட்டியதில்லை. அமெரிக்காவில் ஏழைகளுக்காக அரசு இத்தனை வருடங்கள் பாடுபட்டுக் கொண்டுவந்திருக்கும் திட்டத்தை – இப்போது காப்பாற்றுவதற்கு ஒபாமா மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் திட்டத்தை – பணக்கார இந்தியர்களின் பெற்றோர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாமா?  பல தலைமுறைகளாக அமெரிக்க மண்ணில் உழைத்து அமெரிக்காவின் முன்னேற்றத்தில் பங்காற்றியிருக்கும் அமெரிக்க ஏழைகளைப் போல் புதிதாகக் குடியேறியிருக்கும் வசதியான இந்தியர்களின் பெற்றோர்களும் ஏழைகளுக்கான அரசு நலத் திட்டங்களில் பயன் பெறுவது சரிதானா?  இவர்கள் செயல் சட்டத்திற்குப் புறம்பானது (illegal) இல்லையென்றாலும் அறநெறியற்ற செயல் (unethical)  அல்லவா?

    Share
  • பளிஞ்சாடிரடி குடு குடு…

    இன்னம்பூரான்

    windowslivewriter8cae7123c029-14583india-electricity-shortage10என்றோ ஒரு நாள், ஜம்பூத்வீபத்தின் தென் பிராந்தியத்தில் சடுகுடு சாம்ராஜ்யத்தை ‘ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர தைர்ய மதன காம மஹராஜா’ எனப்படும் மைனர் பையன் கிச்சு கிடுக்கிப்பிடி நிர்வாஹம் செய்து கொண்டிருந்தான். அந்தப்புரத்து அந்தரங்கத்தில் அடாவடி செய்யுமவன், அமைச்சர் அறிவுரையை அறவே அழிப்பதில் குறியாக இருப்பான். கேளிக்கை என்று இறங்கி விட்டால், இஞ்சி தின்றவுடன் தேறல் குடித்த குரங்கு மாதிரி தொம் தொம் என்று குதிப்பான். அவனுடைய துள்ளலோசை உலகெங்கும் எதிரொலிக்கும். எதிராளி போர்க்கொடிதூக்கினால், ஓடி ஒளிவான், அந்த பயந்தாங்கொள்ளி. அவனது நிர்வாகத்திறனின்மை பகிங்கிர ரஹஸ்யம் என்றாலும், அதை பற்றிய விமர்சனம் மட்டுறுத்தல் செய்ய்ப்பட்டிருந்தது. இத்தனைக்கும் மேதாவிலாச ராஜ்யபாரம் வகித்த அவனுடைய அப்பன் நிஜமாகவே ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர ‘வாகை சூடி’ மஹராஜா தமிழரசர். எதுவும் மிதம் அவருக்கு. ஜனோபகாரம் தான் அவருக்கு இலக்கு. அதனால் தான் தாராளமாகவே ராஜ்ய பரிபாலனம் பற்றிய செய்திகளை, ஆணைகளை, அவற்றின் பின்னணி, பிரதிபலன்களை கோட்டை வாசல் ராஜபேரிகை மூலம் ஒலிக்கவேண்டும்; ஒளிவு, மறைவு கூடாது; தர்பார் ஹாலில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டிருந்தார். வரலாற்றை போற்றி பணிந்து பின்பற்றும் பாரதவர்ஷத்தில், அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று மார் தட்டிக்கொள்கிறார்கள், தற்கால சாணக்கியர்கள். கறுப்புப்பணாதிபதிகள், லஞ்ச வாவண்ய பிரபுகள், ஹாய் ஹவாலா ஹைஸ்ட்ரீட் கொள்ளையர், பினாமி சுனாமிகள் ஆகியோரின் பட்டியல் கேட்டாலே, கோபாவேசத்தில் ரோமம் சிலிர்த்து, முகம் சிவந்து, கண் துடிக்க, செவி மடங்க, உதடுகள் ஆட, தகவல் மறுக்கும் Official Secreteers ஆகிவிடுகிறார்கள் மேலாண்மை பிரமுகர்கள்.

    இப்போது அந்த black listல் சேர்ந்து விட்டது தமிழ்நாட்டு மின்சார வாரியம். தமிழரசரை உதறிவிட்டு கிச்சு பரமஹம்சாதிபதியின் சிஷ்யகோடி ஆயினர் தமிழ்நாட்டு மின்சார வாரியம்.

    Point at issue: மின்சாரம் திருடுபவர்களின் பட்டியல். வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி, வருடாவருடம் மின் திருடுகள் அதிகரித்து வருகின்றன. 2007-8ல் 3746 திருட்டுகள்; 2012-13ல் 8166. ஏப்ரல் 2013: 699. பேஷ். கெடுவுக்குள் மின்கட்டணம் கட்டத்தவறிய மின்வெட்டு பலியாடுகள் ஆகிய சராசரி சிறு நுகர்வோர்களுக்கு கணிசமான கறார் அபராதம். திருடனுக்கு மறைமுக ஆதரவா? அதனால் அந்த அபராதிகளின் பட்டியல் தர மறுக்கிறார்களோ?

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) என்ற குடையின் கீழ் குளிர் காயும் மின்வாரியம் அந்த பட்டியல் அளிக்க மறுப்பது ஜனநாயக்கு முரண். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) பட்டியல்தாரர்களுக்கு அபாயமோ அல்லது விசாரணைக்குத் தடங்கல் ஆக இருந்தால் தான் உகந்த  வழிமுறை. அதன்படி விவரம் அளிக்க மறுப்பது பிணம் தின்னும் சாத்திரம் போல்.உண்மை யாதெனில், பரம்பரை மின் திருடர்கள் அரசியல் கட்சிகள். கோடிக்கணக்கில் கந்து வசூல் செய்து, அலங்கார பந்தல் போடும் அரசியல் கட்சிகள் ஒளி திருட தயங்குவதில்லை. அவர்களை காட்டிக்கொடுக்க அஞ்சுகிறது மின் வாரியம். அப்படியானால், கோடிக்கணக்கான அந்த செலவை ஏற்றுக்கொளவது, வோட்டுப்போடும் மக்கள்.

    மின் வாரியம் மக்களுடன் தம் பிடித்து பளிஞ்சாடிரடி குடு குடு… விளையாடுகிறது, கிச்சுவின் கேளிக்கைப் போல. உருப்பட்டமாதிரி தான்!

    Image Credit: Google

    Share
  • தொலைத்ததும்…….கிடைத்ததும்..! (6)

    ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி

    சட்டென்று திரும்பிய மலர்விழி ‘நானும் இங்கியே இதுங்களோடவே இருந்துகிட்டு என்ன தான் ஆவுதுன்னு ஒரு கை பார்த்துப்புடறேன்..’ ஒரு ஓரமாக இருந்த சோபாவில் தொப்பென்று கீழே அமர்ந்து கொண்டாள் .

    அடுத்த சில நொடிகளில், அவளை இருவர் பிடித்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி அழகு படுத்தி கண்ணாடி முன்பு கொண்டு நிறுத்தியதும் ..

    நானா… இது? நான் என்ன இம்புட்டு அழகா..?..என்று கன்னத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தவள் அருகிலிருந்த பெண்ணிடம் எப்ப சூட்டிங்கு ? என்று கேட்கும்போது மனசுக்குள் ’16 வயதினே’ மயில் வந்திறங்கினாள்.

    அடுத்தடுத்து நடந்தவை அவளுக்கே வியப்பாக இருந்தது. உயர்ந்த உணவு வகைகள் தந்து அவளை உண்ணச் சொன்னதும் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த இடம் ரொம்ப சொர்கமாட்டம் இருக்குதே.இங்கனயே இருந்திடலாம் போல ..ஆனால் நான் ஊருக்கு எப்படிப் போவேன்? என்ற கலக்கமும் மனத்துக்குள் வராமல் இல்லை. இரண்டு மனம் அவளுக்குள் தவித்தது.

    அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவரும் மிகவும் அமைதியாக இருந்தது பார்த்து இவளுக்கே சந்தேகம். அவர்களது கண்கள் எதையோ பேசத் துடிப்பது மலருக்குப் புரிந்தது.

    ஒருத்தியிடம் மெல்லக் கேட்கிறாள்…மலர்.

    நீ எங்கேர்ந்து இங்க வந்தே..?

    பெங்களூரு…

    நீ…? இன்னொருத்தியைப் பார்த்ததும்..

    தும்…..! ஐம் ஃப்ரம் டெல்லி…

    அரண்டுதான் போனாள் மலர்.

    எனக்கு செல்ஃபோன் பேசணும்….! உங்க யார்கிட்ட மொபைல் இருக்கு….?

    இல்லை…இங்க சிக்னல் கிடைக்காது. ஃபோனும் கிடையாது. யாரும் இங்க பேசிக்கக் கூடாது. மெல்லிய முனகலில் வந்தது வார்த்தையாய் அடுத்தவளிடமிருந்து.

    அப்ப….இங்க எல்லாரும் அடிமைங்க போல….மனசுக்குள் நினைத்தவள்,

    யாருக்கு சுதந்திரம் வேணும்? சாடையில் கேட்ட மலரைப் பார்த்து, அவர்கள்

    கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு திரும்பிக் கொண்டனர்.

    இது மலருக்குள் ஒரு சவாலை உண்டு பண்ணியது. அதுவே ஒரு சின்ன நெருப்புப் பொறியாக கிளர்ந்து, ஜ்வாலையாக கொழுந்து விட்டு கனன்றது.

    எப்பிடியாச்சும் நான் தப்பிச்சிப் போகணும்….இவங்களயும் காப்பாத்தியாகணும்.

    அப்ப, இந்தப் பாண்டியண்ணன்……ஷீலா…இவங்களையும் இங்கனக்குள்ள வராமல் தடுக்க என்ன செய்ய…? மனம் முழுதும் ஒரே எண்ணத்தில் தவித்தாள் மலர்.

    அடுத்தது என்ன…? என்ற அந்த ஒரே எண்ணமே அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

    அறயில் இருந்தவர்களை பிடித்து கன்னாப் பின்னாவென்று அடிக்க ஆரம்பித்தாள்…..ஒரே நாளில் தலைப்பின்னலை பிரித்துப் போட்டபடி, தனது துணிகளைக் கிழிக்கத் துவங்கியவள் சிறிது சிறிதாக அசல் பைத்தியம் போலானாள்.

    சற்று முன் அழகாகக் காண்பித்த கண்ணாடி அவளை இப்போது பைத்தியம் போல் காண்பித்தது. மனசுக்குள் திருப்தி பட்டுக் கொண்டவளாக மலர் அருகிலிருந்தவளைப் பளார் என்று அரைகிறாள்.

    அடுத்த சில நிமிடங்களில், அந்தக் கதவு திறக்கப் படுகிறது. திறந்தவன் பாண்டி.

    அவனைப் பார்த்ததும் தான் மலருக்கு உயிரே வந்தது. இருந்தாலும் அதை வெளியேக் காட்டிக் கொள்ளாமல்….பைத்தியம் போலவே சுவரைப் பிராண்டிக் கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு போனான் அவன்.

    அவர்களை, ஒரு பெரிய ஹாலுக்குள் நிறுத்தி வைத்த ஒருவர்…..

    இவளுக்கு நாங்க ட்ரீட்மென்ட் தருவோம்….இங்க கையெழுத்துப் போட்டுட்டு விட்டுட்டுப் போ…என்றார்.

    என்னா….சார்….நம்ம கையிலேயேவா? எப்பிடி இருந்த பொண்ணு சார்… அந்தப் பாளாப் போன மானேஜர் மட்டும் இப்ப என் கையில சிக்கினாண்டு வையி…..அவன் டா…..ரா….யிருவான். பாண்டியின் வெறி பிடித்த குரலுக்கு அவர் சிறிது தடுமாறியது தெரிந்தது..

    எங்கள இப்ப இப்படியே விட்டா…நான் இத்த கூட்டீட்டுப் போயி அதும் வீட்ல விட்டுருவேன். இல்லாங்காட்டி……விஷயம் வேற மாதிரி போகும்….பரவாயில்லையா?

    கட கட வென்று சிரித்துக் கொண்டே,,என்ன எலி மிரட்டுது..? என்று நமுட்டுச் சிரிப்புடன், கைபேசியைத் தூண்டினார் அவர்.

    என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தினான்

    தொடரும்

    Share
  • குறளின் கதிர்களாய்… (11)

    செண்பக ஜெகதீசன்

    justice scale

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்

    கோடாமை சான்றோர்க் கணி.

    -திருக்குறள்- 118 (நடுவு நிலைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    சாய்ந்தால் ஒரு பக்கம்,

    துலாக்கோலில்

    எடைவராது சரியாய்..

     

    சாயாமல் ஒரு பக்கமாய்,

    ஆராய்ந்து வழங்கிடும் நீதி

    அணியாகும் சான்றோருக்கே…!

     

    குறும்பாவில்…

     

    சாயாத துலாக்கோலாய்

    சாற்றிடும் நீதிதான்,

    சான்றோருக்கு அழகு…!

     

    மரபுக் கவிதையில்…

     

    சரியாய் எடையைப் போடுதற்கு

    சமநிலை கொண்ட துலாக்கோலில்

    ஒருபுறம் சாயா நிலைபார்த்தே

    ஒழுங்காய் வைக்கணும் இருதட்டும்,

    தெரிந்திடு இதுகதை நீதியிலும்,

    தவறியும் ஒருபுறம் சாராதே

    உரைத்திடும் நல்ல தீர்ப்பதுதான்

    உயர்த்திடும் பரிசாம் சான்றோர்க்கே…!

     

    லிமரிக்…

     

    சரியாய்ப்பார் சீர்தூக்கும் கோல்,

    போகாதுபார் ஒருபுறம் மேல்..

    பகிர்ந்தளிக்க பாதி,

    சரிசமமாய் நீதி

    புகழ்சேர்க்கும் சான்றோர் பால்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    எடபோடு எடபோடு

    தொடாமலே எடபோடு,

    சரிசமமா எடபோடு

    சாயாம எடபோடு,

    கத்தரிக்கா நெறுத்தலும்

    கவனமாத்தான் எடபோடு,

    சாயாம நெறுத்தாத்தான்

    சரியான எடக்கோலு- ரெம்ப

    சரியான எடக்கோலு..

     

    இதுபோல நீதிசொல்லு

    எல்லார்க்கும் நீதிசொல்லு,

    சரியான நீதிசொல்லு

    சாயாம நீதிசொல்லு,

    பேருவரும் ஒந்தனுக்கே

    பெருமவரும் சந்ததிக்கே,

    அதுக்கு,

    நீதிசொல்லு நீதிசொல்லு

    நெசத்திராசா நீதிசொல்லு,

    சரியான நீதிசொல்லு

    சாயாம நீதிசொல்லு…!

     

    படத்திற்கு நன்றி: http://blog.memberclicks.com/bid/251450/Striking-the-work-life-balance

     

    Share
  • என்ன செய்வார்கள் பாவம்!

    தஞ்​சை வெ. கோபாலன்

    “ரமா அக்கா!” எதிர் வீட்டில் இருந்த ரமாவை உரக்கக் கூவி அழைத்தாள் உமா.

    இவ்விருவருக்குள்ளும் பல ரகசியங்கள் பரிமாரிக்கொள்ளப்படும். காலை, பகல், மாலை, இரவு எந்நேரத்திலும் இவ்விருவரின் கூவல் அக்கம்பக்கத்தாரை முகம் சுழிக்க வைக்கும்.

    இவ்விருவருமே கணவனால் கைவிடப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கூடாதோ, சரி கணவனை உதறித் தள்ளியவர்கள்; சுதந்திரப் பறவைகள். காலையில் எழுந்து உணவு தயாரித்து வேளா வேளைக்கு அதனை உண்டு களித்த பிறகு மீதமுள்ள நேரங்களில் அக்கம் பக்கத்தார் பற்றிய ‘கிசு கிசு’க்கள் தான். ஒருத்திக்கு அவள் முன்னாள் கணவன் தரும் ஜீவனாம்சம் எனும் மாதாந்தர சம்பளம் வந்து விடுகிறது. பிழைப்புக்குக் கவலையில்லை. மற்றவளுக்கு அப்பப்போ கிடைக்கும் வேலைகளுக்குக் கிடைக்கும் கூலி. அதைக் கூலி எனலாமோ? ஊகூம் கூடாது. ஒரு சின்னஞ் சிறிய வேலைக்குக் கூட பெரிய தொகையை வசூலித்து விடுவாள், அதனால் அதனை கூலி என்பது தவறு, நல்ல வருமானம்.

    7897951-a-cartoon-character-whispers-to-confide-secret-gossip-to-another-personஇப்படி கவலை இல்லாமல் வாழ்வினை நடத்தும் இவர்களது பொழுது போக்கு, மற்றவர்களைப் பற்றிய வம்பு, பிறரது துன்பங்களைக் கண்டு மகிழ்வது. ஆனாலும் அவ்வப்போது பிறருக்கு உதவி புரிவதைப் போல சென்று நின்றுகொண்டு அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விவாதித்து மகிழ்வது. இது ஒரு நல்ல ஜோடி.

    இவர்கள் தெருவில் பணி நிறைவு பெற்ற பெரியவர் ஒருவர். எழுபத்தி ஐந்து வயதைக் கடந்தவராயினும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துப் பொழுதை ஓட்டுபவர் அல்ல. பொழுதுக்கும் ஏதாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பவர். பொதுக் காரியங்களில் ஆர்வம் கொண்டு பல இடங்களுக்கும் சென்று வருபவர். இத்தனைக்கும் இவர் தனிக்கட்டை. இவர் மனைவி காலமாகி பல காலம் ஆகிவிட்டது; பிள்ளை குட்டிகள் வேறு ஊர்களில் இருப்பதால் அவர்களை எப்போதாவது சென்று பார்த்து வருவார், அல்லது அவர்கள் வந்து பார்த்துச் செல்வார்கள்.

    இந்த நிலையில் இவருடைய அக்காவின் பேத்தி அதே ஊரில் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தவள், முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம் அதே ஊரில் வேறு இடத்தில் இருந்தது. அவள் கணவன் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், வாரந்தோறும் ஊருக்கு வருவார். அந்தப் பெண்ணுடன் அவளுடைய தாய் மட்டும் இந்த ஊரில் வசித்தாள். அவள் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவள். நம் கல்வி முறையில் தமிழைப் பாடமாக எடுத்துக் கொண்டு படித்தவர்கள் தவிர மற்றவர்கள் தமிழில் வல்லமை பெறுவதில்லை. இவளுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புக்குச் சில தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து எழுத வேண்டிய சூழ்நிலை. அதற்காக அந்தப் பெண் அடிக்கடி இந்தப் பெரியவரிடம் வந்து தமிழில் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டு செல்வாள்.

    இப்படி அந்தப் பெண் அடிக்கடி அந்தப் பெரியவரை வந்து பார்த்துச் செல்வதைக் கவனித்த இந்த ரமா, உமாவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு. இவ்விருவருக்குள்ளும் அப்படியென்ன உறவு? அவள் ஏன் அடிக்கடி இவரைத் தேடிக் கொண்டு வருகிறாள் என்பதை இவ்விருவரும் பல நாட்கள் விவாதித்து ஒரு முடிவான முடிவுக்கு வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.

    இந்த மர்ம முடிச்சை அவிழ்க்காத வரையில் அவர்களுக்கு உணவு இறங்கவில்லை, இரவில் படுத்தால் உறக்கம் வரவில்லை என்ன செய்வது? அவர் வீட்டுக்கு அருகிலுள்ள சிலரை நயிச்சியமாகப் பேசி ரகசியத்தை அறிந்து கொள்ள முயன்றனர். அவர்களோ தங்களுக்கு அது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதே, எங்கள் கவலைகளே எங்களுக்குப் பெரிதாக இருக்கும்போது இப்படி ஊர் அக்கப்போ​ரை எப்படித் தெரிந்து கொள்ள முடியும் என்று கையை விரித்து விட்டனர்.

    எப்படியும் இந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று இன்று அதற்கொரு முடிவு தெரிந்தாகணும் என்றுதான் உமா ரமாவை உரக்க சத்தமிட்டுக் கூப்பிட்டாள். இதுபோன்ற வம்புக்காகவே காத்துக் கொண்டிருந்த ரமா ஓடோடி வந்து என்ன என்ன என்று பதறிக் கொண்டு கேட்டாள்.

    “அதுதான் அக்கா, அந்த பெரியவர் விஷயம். அந்தப் பொண்ணு அடுத்த தெருவிலேருந்து இங்கே வந்து இவரோடு என்ன பேச்சு. அப்படி இவங்களுக்குள்ள என்னதான் விஷயம் இருக்கு, அதை இன்னிக்குக் கண்டிப்பா தெரிஞ்சுகிட்டே ஆகணும்” என்றாள் உமா.

    “சரி, சரி ஏதாவது செஞ்சு அதைத் தெரிஞ்சுக்கலாம், நீயே யோசனை பண்ணிச் சொல்லு” என்றாள் ரமா.

    உமாவுக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. “இன்னிக்கு விடுமுறை நாள். அவள் கண்டிப்பா அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வருவாள். அப்போது நான் ஏதாவது சந்தேகம் கேட்பது போல போயி திடீர்னு அவங்க முன்னாலே போயி நின்னு, அவங்க என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்னு” சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

    ரமாவுக்கும் இருப்பு கொள்ளவில்லை. இன்று ஏதோவொரு பெரிய இரகசியம் உடையப் போகிறது. பெரியவர் வேஷம் போட்டு ஏமாத்திக்கிட்டு இருக்கிற இந்த ஆளோடு யோக்கியதை காத்துல பறக்கப் போகுது என்று மனம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

    இவ்விருவரும் எதிர்பார்த்ததைப் போல பெரியவரின் உறவுக்காரப் பெண் ஒரு பெரிய பையைச் சுமந்து கொண்டு பெரியவரின் வீட்டுக்குள் நுழைவதை இருவரும் பார்த்துவிட்டனர். உடனே இருவருக்கும் உடல் பரபரத்தது. உண்மை தெரிஞ்சாகணும் என்று அவர்கள் மனங்கள் எக்காளமிட்டுக் கொண்டிருந்தன.

    உமா சொன்னாள், “சமயம் பார்த்து நான் சத்தமில்லாம அவங்க வீட்டுக்குள்ளே போய் பார்க்கிறேன். என்னன்னு கேட்டா ஏதாவது சந்தேகம் கேட்டுத் தெரிஞ்சுக்க வந்தது போல கேட்டு வைக்கிறேன். வந்து சொல்றேன், அங்க என்ன நடக்குதுன்னு” என்று சொல்லிவிட்டு, கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடிக்க ஆர்வத்தோடு போனதைப் போல ஓடினாள் உமா.

    பெரியவரின் வீடு திறந்திருந்தது. கண்ணெதிரில் அவ்விருவரையும் காணவில்லை. ஒருக்கால் ஏதாவதொரு அறையில் இருப்பார்கள். உமா மெதுவாக வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ஓசைப்படாமல் உள்ளே சொன்றாள். வாயில் கதவும் தாழிடப்படாமல் பரக்கத் திறந்து கிடந்தது. மெதுவே உள்ளேயும் புகுந்தாள். வாயில் தாழ்வாரம் தாண்டியதும் பெரிய ஹால். அங்கும் ஒருவரையும் காணவில்லை. ஹாலின் இடது புறம் இருந்த ஒரு அறையில் பகலாயிருந்தாலும் வெளிச்சம் வேண்டுமென்பதற்காக மின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. மெல்ல அடிமேல் அடிவைத்து அந்த அறை வாயிலுக்குச் சென்று உள்ளே பார்த்தாள். அங்கு இருந்த கம்ப்யூட்டரின் முன்பு பெரியவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவள் ஏதோ புத்தகத்தைப் பார்த்து வரிவரியாகப் படித்துச் சொல்ல, இவர் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தார்.

    அவ்விருவருக்குமிடையே நிறைய இடைவெளியும் இருந்தது. அவர் வேலையில் கவனமாக இருந்தார். அந்தப் பெண்ணோ புத்தகத்தில் ஆழ்ந்து புதைந்திருந்தாள். ஆகவே இருவருமே ஓசையின்றி வந்த உமாவை கவனிக்கவில்லை. அவர்கள் கவனிக்காதபோதே திரும்பிவிடலாமா என்று திரும்ப எத்தனித்த சமயம் அந்தப் பெண் தலை நிமிர்ந்து உமாவைக் கவனித்து விட்டாள்.

    “வாங்க! என்ன விஷயம்? இவரைப் பார்க்கணுமா?” என்று எதார்த்தமாகக் கேட்டாள்.

    பெரியவரும் அப்போதுதான் கம்ப்யூட்டரிலிருந்து தலை நிமிர்ந்து வந்திருக்கும் விருந்தாளி யார் என்பதைப் பார்த்தார். அவர் தெருவிலேயே அருகில் இருக்கும் ஒரு பெண்தான். இவளுக்கு என்ன வேண்டும் என்பது போல தலையை ஆட்டி சைகையிலேயே கேட்டார்.

    மென்று விழுங்கிய உமா மெதுவாகச் சொன்னாள், “சார்! எனக்கு ஒரு ஹோமம் பண்ணனும். ராத்திரிலே படுத்தா தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருது. கருப்பா பேய் ஒண்ணு வந்து பயமுறுத்துது. எனக்கு அடிக்கடி வேலையும் கிடைக்கறதில்ல, அதனால வருமானமும் குறைஞ்சு போச்சு. யாரோ சொன்னாங்க ‘மகாலக்ஷ்மி ஹோமம்’ செஞ்சா சரியாயிடும்னு. உங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது சொல்லி அந்த ஹோமத்தைச் செய்யணும், அதுக்குத்தான் கேட்க வந்தேன்” என்று ஒருவாறு சமாளித்தாள்.

    பெரியவர் அவள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொண்டு, “அப்படியா? அதுக்கு ஏதாவது ஹோமம் செஞ்சுடலாம். ஆனா எனக்குத் தெரிஞ்ச வரை ‘மஹாலக்ஷ்மி ஹோமம்’னு எதுவும் இது மாதிரியான விஷயங்களுக்குச் செய்யறதில்ல. இதுக்கெல்லாம் ‘சுதர்சன ஹோமம்’ செய்வாங்க” என்று சொல்லிக் கொண்டே தன் கம்ப்யூட்டரில் ஒரு வலைத்தளத்தைக் காட்டி அதில் சுதர்சன ஹோமம் பற்றி எழுதியிருந்ததைக் காட்டினார்.

    உமாவும் அருகில் சென்று அதைப் படித்தாள். அதில் இவள் சொல்லும் பாதிப்புகள் எல்லாம் பட்டியலிட்டு இதுபோன்றவற்றுக்கு ‘சுதர்சன ஹோமம்’ செய்யவேண்டும் என்று இருந்தது.

    உமா உடனே, “ஆமாம் சார், இதுதான், இதுதான், எனக்கு சுதர்சன ஹோமம் செய்யணும். யாரையாவது கேட்டு என்ன செலவாகும் எப்போது வச்சுக்கலாம் என்பதைக் கேட்டுச் சொல்லுங்களேன்” என்றாள்.

    உடனே பெரியவர் யாருக்கோ போன் செய்து கேட்டுவிட்டு பத்தாயிரம் ஆகுமாம், தேதியை முடிவு செய்யுங்க, தேவையான சாமான்கள் லிஸ்ட் கொண்டு வந்து தரேன் என்று சொல்லி விட்டார் எனும் விஷயத்தை அவளிடம் சொன்னார் பெரியவர்.

    “சரி சார், நான் பணத்தை உங்களிடம் தந்து விடுகிறேன், தேதியையும் பார்த்துச் சொல்கிறேன், பண்ணிவிடலாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

    நாட்கள் ஓடின. ஹோமம் செய்ய வேண்டுமென்று சொன்ன பெண்ணைக் காணோமே என்று நினைத்தார் பெரியவர். ஆனால் உமாவும் ரமாவும் அவர்கள் வீட்டருகே நின்றுகொண்டு கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    “கிழம் நான் சொன்னதை அப்படியே நம்பிவிட்டது. ஹோமத்துக்கு நாள் சொல்லப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கு. நான் போன விஷயம் அதுக்கு எப்படித் தெரியும். ஆனால் போன காரியம் தான் பழம் இல்லே. அதுங்க ரெண்டும் ஏதோ படிச்சுண்டு, டைப் பண்ணிண்டு இருந்துதுங்க. நான் எதிர்பார்த்துப் போனது போல எதுவுமே நடக்கல. ஒருக்கால் டைப் பண்ணி முடிஞ்சப்புறம் ஏதாவது நடக்குமோ என்னவோ, சமயம் பார்த்துப் போயிருக்கணும், பார்க்கலாம் அடுத்த தடவை எப்படியும் இதுங்களோடு இரகசியத்தைக் கண்டுபிடிக்காம விடப் போறதில்லை” என்று பேசிக் கொண்டார்கள்.

    பாவம்! அவர்களுக்குத்தான் வேறு என்ன வேலை இருக்கிறது?

     

    படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_7897951_a-cartoon-character-whispers-to-confide-secret-gossip-to-another-person.html

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 6

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    கரு உருவாகும் விதத்தை, வித்தையை அறிவியல் வழி நின்று பார்த்தோம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? எண்ணாயிரம் பாடல்கள் அவர் எழுதியதாகச் சொல்வார்கள். ஆனால் கிடைத்திருப்பவை மூவாயிரம் மட்டுமே (3072?)! மூவாயிரமும் தத்துவ முத்துகள்.தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த கலைக்களஞ்சியம் இது! இஃதில் ஒன்பது உட்பிரிவுகள் உள . ஆகமங்கள் 28 என்பர். அவற்றுள் ஒன்பதின் சாரங்களை ஒன்பது பிரிவுகளில் அவர் அளித்துள்ளார். இப்பிரிவுகளைத் தந்திரம் என்று அழைக்கிறார். இவற்றைச் சிறப்புப் பாயிரச் செய்யுள்,

    “தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
    சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே” (பாயிரம் 101) எனக் கூறும்!

    இதனுள் 2-ஆம் தந்திரம் 14 ஆம் பகுதியில் கரு உற்பத்தி அல்லது கர்ப்பக் கிரியை என்னும் தலைப்பில் 41 செய்யுள்கள் உள்ளன. கரு உருவாவதை இவை விளக்குகின்றன. இதனைப் பார்க்கும் முன் இன்னொரு செய்தியைக் கூற வேண்டி உள்ளது.

    சென்னையில் குழந்தைப்பேறு இல்லம் நடத்தி மருத்துவப் பணியாற்றி வருபவர் மருத்துவர் திருமதி செயம் கண்ணன் அவர்கள். மழலைப் பேறு இல்லாதவர்க்கு என்றே தனி மருத்துவம் பார்ப்பவர் அவர். குழந்தைப் பிறப்புப் பற்றிய இக்காலத் தகவல்களை அக்காலத் திருமூலர் அன்றே சொன்னவற்றை விளக்கமாக மாதந்தோறும் மங்கையர் மலர் என்னும் தாளிகையில் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எழுதி வந்தார். எங்கேனும் கிடைத்தால் வாங்கிப் படிக்க வேண்டிய கட்டுரைகள். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (2008) நக்கீரன் பத்திரிகையில் டாக்டர் ஜாண் பி நாயகம் என்பவர் ‘சூட்சுமம் திறந்த திருமந்திரம்!’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் படிக்க வேண்டியவையே. (நக்கீரன் வெளியீடு) இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படித்தவர்கள். (போலி மருத்துவர்கள் அல்லர்!) ; மருத்துவத் தொழிலைச் சிறப்பாகச் செய்து வருபவர்கள். தாம் கற்ற அறிவியல் அறிவைப் பயன்படுத்தித் திருமூலர் செய்யுள்களுக்கு மருத்துவ / அறிவியல் விளக்கங்களைச் சொல்லிச் சென்றனர். எனவே அவர்கள் கூற்றை நம்பலாம் ; ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் கருத்துகளைத் தழுவி இக்கட்டுரை நடைபோடுகிறது. அவ்விருவருக்கும் நன்றிகள்.

    இனித் திருமூலர் கரு உற்பத்திப் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும் செய்யுளைக் காண்போம் :

    “கருவை ஒழிந்தவர் கண்ட நால்மூவேழ்
    புருடன் உடலில் பொருந்தும் மற்று ஓரார்
    திருவின் கருக்குழி தேடிப் புகுந்து அங்கு
    உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே “

    இதன் பொருள் : பிறவிப் பெருங் கடலைக் கடந்தவர்கள் ஞானிகள். அவர்கள் தம் ஞானக் கண்களால் கண்டு சொல்லிய தத்துவங்கள் 25 ஆகும். (மூவேழ் : 3 X 7 = 21 +4= 25). இவை மீண்டும் இணைந்து ஆணின் உடலில் (விந்தணுவில்) வந்து சேரும். இதனை எவரும் அறியார்! இந்த விந்து பெண்ணின் கருப்பையைத் தேடிப் புகுந்து அங்கு ஆண், பெண்ணாக (இரண்டாக) ஓடி விழும்.

    விளக்கம் :

    – பூதங்கள்: 5 (ஐம்பூதங்கள்)
    1.நிலம் (பூமி) 2.நீர் (புனல்,) 3.நெருப்பு (அனல்,) 4.காற்று (வாயு) 5.ஆகாயம் (விசும்பு)
    – தன்மாத்திரை 5 :
    1. சுவை 2. ஒளி 3. ஊறு 4. ஓசை 5. நாற்றம் என வகுக்கப்பட்டு ஐந்து நுண்ணிய பொருள்கள் எனப்படும்.
    – ஞானேந்திரியங்கள் 5 (ஐம்பொறிகள்) :
    1. மெய் 2. வாய் 3. கண் 4. மூக்கு 5. செவி
    – கன்மேந்திரியம் 5 (தொழிற் கருவிகள்) :
    1.வாய் 2.கை 3.கால். 4. மலவாய் (குதம்) 5. கருவாய் என வகுக்கப்பட்டு ஐந்து தொழில் உறுப்புக்கள் என வழங்கப்படும்.
    – மனம், அகங்காரம்,,புத்தி, குணம், பிரகிருதி 5
    (நா கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழி அகராதி பக் 736)

    இவை இருபத்து ஐந்தையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் விந்தணு ஆணின் உடலில் இருக்கும்.

    ” கூறுவேன் தேகமது என்னவென்றால்

    குருபரனே எலும்புதனைக் காலை நாட்டி

    மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

    வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

    தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

    தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

    ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

    அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே”

    என அகத்தியர் கூறும் உடலை உருவாக்க வேண்டிய பண்புக் கூறுகள் இந்த விந்தணுவில் இருக்கின்றன. கலவியின் போது இது பெண்ணின் கருப்பையில் தேடிப் புகுந்து ஓடிப் பாய்கிறது. அங்கு உருவம் இரண்டாக விழுந்ததாம். இப்பாடலில் ‘ஓடி’ என்ற சொல்லையும் ‘உருவம் இரண்டாக’ என்பதையும் கவனிக்க வேண்டும்.ஓடுதல் வேகத்தை உள்ளடக்கியது.விந்தை ஏந்திச் செல்லும் திரவமும் (seminal fluid) அதில் நீந்திச்செல்லும் விந்துகளும் வேகமாகப் பயணம் செய்கின்றன ; ஆணாகவோ பெண்ணாகவோ உருவம் செய்யக்கூடிய ‘பொருள்’ விந்துவில் இருக்கிறது. அப்பொருள் கருப்பையில் (காத்து) இருக்கும் முட்டையில் விழுகிறது / வீழ்கிறது. வீழ்தல் என்றால் இணைதல், கலத்தல் என்றொரு பொருளும் உண்டே.

    கீழ்க் கண்ட திருக்குறள்களைக் காண்க :

    வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.

    கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற்கு இல்லை இடம்.

    விந்தணுவில் உள்ள ஆண் / பெண் உருவம் ஆக்கக்கூடிய ‘பொருள்’ (X/Y குரோம்சொம்) முட்டையில் உள்ள ‘பொருளுடன்’ (X குரோம்சொமுடன்) இணைகிறது ; கலக்கிறது. ஆகவே உருவம் இரண்டு என்பது X (பெண் உரு), Y (ஆண் உரு) குரோம்சொம்களை (மறைமுகமாக) உணர்த்துகின்றன. இவ்வண்ணம் திருமூலர் கூற்றுக்கு இக்கால அறிவியல் விளக்கம் தருகிறது எனலாம்.

    உருவான கரு ஆணா பெண்ணா என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முந்திய பகுதியில் கண்டோம். X குரோமோசொம் பெண்மை ; Y குரோமோசொம் ஆண்மை ; சுருக்கமாகச் சொல்லப்போனால் முட்டையில் இருக்கும் X குரோமோசோமுடன் ஆண்மை குரோமோசோமான Y சேர்ந்தால் கரு, ஆணாகும்.
    பெண்மை குரோம்சொம் X சேர்ந்தால் கரு பெண் குழந்தையாகும்.
    இக்கருத்தைத்தான்

    ‘ஆண்மிகில் ஆணாகும் பெண் மிகில் பெண்ணாகும்’

    எனத் திருமூலர் உரைக்கிறார். அதாவது “கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும்.”. இங்கே ‘வெண்டுளி’ = X குரோமோசொம் ; செந்துளி = Y குரோமோசொம்.

    கலவியால் உருவான ஒற்றைச் செல் கரு ‘zygote’ என அறிவியலில் அழைக்கப்படுகிறது. ஒற்றைச் செல் இரண்டாக, நான்காக, எட்டாகப் பதினாறாக, முப்பத்திரண்டாக… பல்கிப் பெருகுகிறது. இந்த நிலையில் இதன் பெயர் ’embriyo’. உடல் உறுப்புகள் வளர்ந்து பெரிதாகும் நிலையில் இதனை ‘fetus’ என்கின்றனர். இதில் உயிர் எப்படி வருகிறது? இதற்கு அறிவியல் விளக்கம் தர இயலவில்லை!

    இவற்றைத் திருமூலர் வேறு விதமாகக் கூறுகிறார்: தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்று ஒன்று உண்டு. உருவான கருவுள்ளே இந்த வாயு (பிராணன் அல்லது உயிர்) நுழையுமாம். இந்தப் பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்துக் கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

    “பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
    தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்
    மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
    கூவி, அவிழும் குறிகொண்ட போதே.’

    குறிப்பிட்ட காலம் வரும்போது மெல்லிய ஒலியோடு அந்தக் கருவின் உள்ளே அக்காற்று (வாயு) புகும் என்பது இப்பாடலின் பொருளாகும். அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்துச் செல்களிலும் என வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும். இதற்கு உவமையாகத் திருமூலர் பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார். பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்!

    இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும். மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகின்றார்.

    “போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
    மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
    நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
    பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.’.

    இதனை விரிக்கின் பெருகும்; சுருக்கமாக, “குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாது விடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.” எனப் பொருள் கூறுவர். சித்தர்களின் குழுஉக் குறியில் (பரிபாஷையில்’) நாகம் என்பது குண்டலினியைக் குறிக்கும். புரவி = (மூச்சுக்) காற்று ; பாகன் = இறைவன். முத்தன் என்ற சொல் கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தையைக் குறிக்கும். மூழ்கும் என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். குழந்தை பனிக்குடத்தில் மூழ்கி இருப்பதை இது குறிக்கிறது.

    இப்பனிக் குடத்தில் குழந்தை வளர்வதை
    “உதகம் உதிரம் உறுங்கனல் வாயுவால்
    சிதகுறும் அங்கங்கள் செய்து முடித்திடும்
    பதகுறும் உரோமம் பகர்தசை அஸ்தியின்
    நிதகுறும் ஒன்பது வாசலும் நீங்குமே.” என்கிறார் திருமூலர். ‘உதகம்’ என்றால் பனிக்குடம்.

    மேலும்

    “நீங்கிட நீங்கிட நிமிர்ந்து வளர்ந்தோங்கும்
    ஓங்கிட ஓங்கிட உறுகியாம் வாயுவும்
    வாங்கிட வாங்கிட வன்னி தலைக் கொளும்
    பாங்கிடப் பாங்கிடப் பத்தாகும் திங்களே.”

    ” திங்கள் பத்தாகி தேய்வோடு வாயு சேர்ந்து
    அங்கி மலர்த்தி அமளியாக் கீழ் நோக்கி
    பொங்கிப் பிறந்த நாள் புகழ்வார் வெறுவீணர்
    தங்கிச் செனிக்கையில் தான்நோயும் உற்றதே.”

    “உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
    பருவம தாகவே பாரினில் வந்திடும்”
    என்று கூறுகிறது திருமந்திரம்.

    ” நாளாக நாளாகக் கருப்பையினுள் உள்ள குழந்தையானது வாயுவில் உள்ள உயிர்க் காற்றை (பிராண சக்தியை) இழுத்துக் கொண்டு திடமானதாய் வளரும். திடங் கொண்டு வளரும் சமயத்தில் அக்கினியானது குழந்தையின் சிரசைத் தாக்கும். இத்தாக்குதலானது பத்தாவது மாதத்தில் அதிகமாகி இவ்வக்கினியானது அங்கு அடைபட்டுள்ள வாயுவுடன் கூடிக் குழந்தையைக் கீழ் நோக்கித் தள்ளும். கீழ்நோக்கித் தள்ளும் இந்நாளை மக்கள் பிறந்த நாளாகக் கொண்டாடுவர். இதே நாளில் குழ்ந்தையுடன் சேர்ந்து நோயும் பிறந்தது என்கிறார் திருமூலர். “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” என அவ்வையார் கூறுவதை உணர்க!

    கருவுற்ற பத்தாம் மாதத்தில் பிறப்பு நிகழும் என்பதைத் ‘திங்கள் பத்தாகி’ என்னும் சொற்றொடர் உணர்த்துகிறது. இக்கால மகப்பேற்றியலோ 38 ஆம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்கிறது. 38 வாரம் என்பது என்ன? 9 மாதங்களும் 2 வாரங்களும் தானே! 9 –ஆவது மாதம் தாண்டினாலே அது 10 –ஆவது மாதம் தானே! எனவே அறிவியல் கருத்தும் நம் சித்தர்களின் கூற்றும் ஓரளவு ஒத்துப் போகின்றனவே! இருப்பினும் தமிழில் உள்ள பழமொழி ஒன்று “மகப் பேறும் மழைப் பேறும் அந்த மகாதேவனுக்கே தெரியாது!” என்று சொல்கிறது. அதாவது இவை இரண்டையும் முன்னதாக அறிந்து சொல்லுகின்ற ஆற்றல் விஞ்ஞானத்துக்கும் இல்லை ; மெய்ஞானத்துக்கும் இல்லை!

    இக்கால அறிவியல் முறைப்படிப் பார்த்தால் குழந்தையின் பாலை (sex) நிர்ணயிப்பவன் ஆண்தான் ; பெண் அல்லள்! இதனை முந்திய பகுதியில் கண்டோம். இதே கருத்தைத்தான் 5 ஆம் நூற்றாண்டுத் திருமூலரும் கூறுகிறார் அவருக்கே உரிய மொழியில் : பால் நிர்ணயம செய்வதில் பெண்ணுக்குப் பங்கில்லை என்பதைத் திருமூலர்

    “பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே”

    எனத் தெளிவாகத் தெரிவிக்கிறார். மேலும் குழந்தை ஆணா பெண்ணா இரட்டையா அலியா என்பதைக் கலவியின் போது ஆணின் மூச்சுக் காற்றே நிர்ணயிக்கிறது என்பது திருமூலர் கருத்து :

    “குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
    குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
    குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
    குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.”

    திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலப் பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப் பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், அபான வாயு ஓடில் இரட்டைக் குழந்தையாகும் என்றும் இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார் . இதனைப் புரிந்துகொள்ள ‘மூச்சு’ பற்றித் திருமூலர் கொண்டிருந்த அடிப்படை அறிவு, கொள்கை தேவை.

    1+1 = 2. கணிதத்தின் அடிப்படை அறிவு இஃது. இஃதனை ஏற்றுக் கொண்டால்தான், புரிந்துகொண்டால்தான், அறிந்துகொண்டால்தான் கணிதத்தில் மேற்கொண்டு செல்ல முடியும். இது போலவே ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180 பாகை என்பதை ஏற்றுக் கொண்டால்தான், புரிந்துகொண்டால்தான், அறிந்துகொண்டால்தான் வடிவகணிதத்தில் மேற்கொண்டு செல்ல முடியும். அவை போல திருமூலரின் ”மூச்சு’க் கொள்கை, அடிப்படை அறிவு பற்றி அறிந்தால் ஒழிய அவர் கூறுவனவற்றைப் புரிந்துகொள்வதும் அறிந்துகொள்வதும் இயலா! ஆனால் அவற்றை விளக்க வேறொரு கட்டுரை தேவை. திருமந்திரத்தின் ஆழத்தையும் அகலத்தையும் நுட்பத்தையும் விளக்க ஆயிரம் பக்கங்களும் போதா! இந்த அளவில் இந்தப் பகுதியை நிறைவு செய்வோம்.

    திருமூலர் தமக்கே உரிய முறையில் இக்கால மரபியலைத் (genetics) தொட்டுச் செல்வதை அடுத்த பகுதியில் காணலாம். அதன் பின், சைவ சமயம் குறிப்பிடும் சிவ – சக்தி தாண்டவம் இக்கால அறிவிலோடு ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.

     தொடரும்

    Share
  • கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு.

    மதுமிதா

    maakadigaram-wrapper
    கதை கேளு கதை கேளு கடிகாரத்தின் கதை கேளு கடிகாரக் கதையின் வழியாக காணாமல் போகின்ற‌ மடமையெனும் கதை கேளு

    சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த கதைகள் இவையெல்லாம் ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் உளவியல் ரீதியாக செயல்பட்டு அதன் விளைவு குழந்தையினிடத்தில் பல்வேறுபட்ட ஆளுமையை வளர்க்க பலவழிகளில் உதவுபவையாக அமையும்.

    மிக முக்கிய உதாரணமாக, அரிச்சந்திரனின் கதையினை முழுமையாக விரும்பி உள்வாங்கிக் கொண்டதாலேயே காந்தி வாழ்நாள் முழுக்க உண்மையே கடவுள் என்று உணர்ந்து இந்திய விடுதலைக்கு தனது வாழ்நாள் பங்கினை அளித்து மகாத்மாவாக உயர்ந்து உலகம் முழுக்க நூற்றாண்டு மனிதராகப் போற்றப்படுகிறார்.

    சிறுவர்களுக்கென பஞ்சதந்திரக் கதைகள், தெனலி ராமன் கதைகள், அக்பர் பீர்பல் கதைகள், பரமார்த்தகுருவும் சீடர்களும் கதைகள், முல்லா கதைகள் போன்ற பல்வேறு வகையான போதனைகளை போகிற போக்கில் சொல்லும் பலவகையான கதைகள் தமிழில் குழந்தைகளுக்கென சொல்லப்பட்டுள்ளன. மேலும் இதிகாச கதாபாத்திரங்கள், வரலாற்றுத் தலைவர்கள் போன்றவையும் சிறுவர்களுக்கென சொல்லப்பட்டுள்ளன. காமிக்ஸ்கள் குழந்தைகளின் உள்ளத்தைக் கவருபவையாக
    எப்போதும் இருந்து வருகின்றன. பலரும் பலவகைகளில் குழந்தைகளுக்கான கதைகளைத் தங்களின் பாணியில் சொல்லிவந்தனர். இருந்தும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கதைகளுக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. இப்போது ஹாரி பாட்டர் தொடர் வரவில் ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்க குழந்தைகள் மூழ்க விரும்பும் காலக்கட்டத்தில் புது வகையான கதைகள் தமிழில், நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

    இதோ புதுவரவாக விழியன் என்னும் உமாநாத் குழந்தைகளுக்கான கதைசொல்லியாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ‘மா கடிகாரம்’ தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் கதை குழந்தைகள் மட்டுமல்ல நாம் அனைவருமே விரும்பி வாசிக்கும் அளவில் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

    தீமன் என்னும் சிறுவன் கதையின் நாயகன். வகுப்பில் ஆசிரியரிடம் திட்டு வாங்கும் மாணவனுக்குள் இருந்து பல்வேறு வகையான திறமைகள் வெளிப்படும் என்பதற்கு தீமன் ஒரு உதாரணம்.

    தீமன் தனது தங்கையுடனும் பெற்றோருடனும் ஏலகிரி மலைக்குப் போகிறான். அங்கே அவன் சந்திக்கும் மனிதர்கள், அங்கிருந்து மாகடிகாரத்தைக் காண அவன் மேற்கொள்ளும் பயணம், அதன் மூலமாக அவன் உலகுக்கு எடுத்துக்கூறும் உண்மை இதுவே கதையின் முடிச்சு. முதல் பகுதியிலேயே தீமன் தந்தைக்காக அலமாரி செய்து கொடுப்பது சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் அவனுடைய பண்பு நலன்கள் சொல்லப்பட்டுக் கடைசிப் பகுதியில் அவனுடைய
    செயல்திறனுக்கு அவன் தகுதியானவன் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கதை சுவாரஸ்யமாகத் தொடர்கிறது.

    ஜப்பானிய ஒரிகாமி, ஏலகிரி மலை விபரங்கள், மரியானா அகழி, நீர்மூழ்கிக் கப்பல், மோனலோ ஆ தீவு என பல விபரங்கள் போகிறபோக்கில் சொல்லப்படுகின்றன. அனைத்தும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும், வேண்டுமென்று புகுத்தியதுபோலில்லாமலும், துருத்திக்கொண்டு தெரியாமலும் இயல்பாக சொல்லப்பட்டுள்ளது. விஞ்ஞானம் சார்ந்த உண்மைகளும், தைரியமாக தீமன் எடுக்கும் பகுத்தறிவு மிக்க முடிவும் கதைக்கு மேலும் வலுவுடன் மெருகு சேர்க்கின்றது.

    மாகடிகாரம் புனைவுதான் என்றாலும் நாமும் தீமனுடன் உடன் செல்கிறோம். நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறோம்; மாகடிகாரம் இருக்கும் பகுதிக்குச் செல்லும் வரையிலும் பயணம் செல்கிறோம். அவனுடன் யூகலிப்டஸ் வாசனையை நுகர்கிறோம்; யானையைக் காப்பாற்றப் போகிறோம்; பயந்து சற்றே பின்வாங்குகிறோம்; ஹெர்குலஸை சந்திக்கிறோம்; கஞ்சியைக் குடிக்கிறோம்; மாகடிகாரம் நோக்கி பயணத்தைத் தொடர்கிறோம். சுனாமியைத் தோற்றுவிக்கும் கடிகாரத்தைக் கண்டு மலைத்து நிற்கிறோம். அங்கே உலகுக்கே தெரியாமல் கடிகாரத்தைப் பாதுகாக்க இருக்கும் வீரர்களைக் கண்டு வியக்கிறோம்; கடிகாரத்தில் தொங்கும் ஊசலுக்கு (பாறாங்கல்) கட்டிய கயிறு அதைத் தாங்கும் அளவில் இருக்க என்னவிதமான கயிறாக இருந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. கயிறு கனமானதாக இருந்தால்தானே அதன் எடையைத் தாங்க முடியும். அப்பேர்பட்ட கயிறு என்ன கயிறு என்று மட்டும் சொல்லியிருக்கலாம். மேலும், மலையில் சூரியோதய, அஸ்தமன காட்சிகளை இயக்கும் கடிகாரத்தின் உட்பகுதிக்கும் செல்கிறோம்; தீமனின் சாகசம் இங்கே சொல்லப்படும்போது அருகிருந்து ரசிக்கிறோம்.

    மா கடிகாரத்தின் கடைசிப் பகுதி ரகசியம் என்பதாலும், கதையின் ஆசிரியர் விழியன் கதையின் முடிவில் ரகசியத்தை யாருக்கும் சொல்லிவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருப்பதாலும், அது குறித்து எதுவும் இங்கே சொல்லப்படப் போவதில்லை 🙂

    மேலும் ஆசிரியர் கீழே இருக்கும் விஷயத்தில் மட்டும் அதிக கவனம் வைத்திருக்கவேண்டும்:

    தீமன் யூகலிப்டஸ் வாசனையை நுகர்ந்து அந்தப் பக்கம் மரங்கள் இருக்கும் சாலைப் பகுதிக்குப் போய்வர விரும்புகிறான். அவனது தாயார் காலையில் போகலாம் என்கிறார். தந்தையார் அவன் சாலையில் தனியே காட்டுப்பாதையில் சென்று வர அனுமதி கொடுக்கிறார்.

    தனியாகச் சென்றால்தான் இன்னும் நிறைய கற்றுக்கொள்வான் என நினைத்த அவனது தந்தை சென்று வர அனுமதி அளித்தார் ஆனால், இருட்டும் முன்னர் தங்குமிடம் வந்து சேருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

    இதுவரையிலும் கதையின் போக்கு சரியாகவே இருக்கிறது. தீமன் ஐந்தாம் வகுப்பு மாணவன் என்பதால் பத்து வயது நிரம்பியவன் என்பதாலும், புது இடத்தில் பெற்றோர் அவனைத் தனியே அனுப்ப இன்னும் ஏதாவது அழுத்தமான காரணம் ஒரு வரியில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். முன்பே அந்தப் பாதையில் அப்பாவும் அவனும் சென்றதால் அப்பா அனுமதித்தார் போன்ற ஏதேனும் காரணம் சொல்லி வரிகள் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இதனை வாசித்தால் தனியே செல்லும் விருப்பு ஏற்படலாம். அப்போது ‘அஞ்சாமல் தனி வழியே செல்ல வேண்டாம் என்னும் கருத்தும் அவர்கள் மனதில் இருக்க வேண்டும்.

    அடுத்து யானை அருகில் செல்வது. ஹெர்குலஸ் நல்லவர் என்பதால் பயம் இல்லை. தனியே செல்லும் குழந்தைகள் கடத்தப்படும் அபாயம் இருக்கும் சூழலில், குழந்தைக்கு நேர இருக்கும் அபாயம் குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும்.

    இது தவிர கதை எந்த இடத்திலும் எந்த சிக்கலுமின்றி சுவாரஸ்யமான நடையில் சொல்லப்பட்டுள்ளது. சில காட்சிகளை வாசித்துக்கடக்கும் போது இங்கே இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாமே என்னும் அவா மேலோங்குகிறது. இது விழியனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

    புனைவையும் உண்மையும் எங்கே எந்த விதத்தில் கலந்திருக்கிறதென்று தெரியாதபடிக்கு கலந்தளித்த புனைவு என்னும் புது வடிவ உத்தியும், குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் அதே சமயம் பெரியோரும் ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் எழுதும் ஆற்றோட்ட நடையும் விழியனுக்கு
    வாய்த்திருக்கிறது. மா கடிகாரம் சிறப்பாக வந்துள்ளது. மென்மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    Share
  • வடமுல்லை வாயில் பதிகம்!…3

    சு.ரவி

     

    வணக்கம், வாழியநலம்,

     

    உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது மறந்து,தாழ்மையுற்று

    வாழ்ந்தநாட்களுக்காக மனம் வருந்தி முறையிட்ட பாடல் இது..

     

    ராகம்: திலங்

     

    பழுதுபட்டேன், நெஞ்சில் வஞ்சமும் கோபமும்

    வளரவிட்டேன், பொய்ம்மையைப்

    படரவிட்டேன், ஈன நெறிகளில் சிந்தையைப்

    புரளவிட்டென்; வினையெனும்

    விழுதுவிட்டேன், இம்மை, மறுமையென் றிரண்டையும்

    நழுவவிட்டேன்; தீய்த்திடும்

    விரகெனும் ஜ்வாலையில் கண்மூடி நித்தமும்

    விறகையிட்டேன்; நின்பதம்

    தொழுது நெக் குருகாமல்  தூயவாழ் நாளெலாம்

    தொலைத்துவிட்டேன்; இறுதியில்

    துணையென்று நின்னையே சார்ந்துவிட்டேன், எந்தன்

    துயர்மாற்றி அருளுவாயே!

    அழுதுநிற்கும் பிள்ளை அருமறைத் தமிழ்பாட

    அமுதம் கொடுத்த் தாயே!

    வடமுல்லை வாயிலில் படர்முல்லையே என்னை

    வாழ்விக்க வரும் அன்னையே!

    இணைப்பில் கர்ப்பரக்ஷாம்பிகை ஓவியம்- close up

     

     

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -3

     சு.கோதண்டராமன்

     

    இசையின் பெருமை

           குக்குக்கூ என்று குயில் பாடிய பாடலில் கவிஞருக்குத் தொக்க பொருளெல்லாம் தோன்றியதாம். அதன் உள்ளுறையை ஆராய்வோம்.

    காதல், காதல், காதல், .

    காதல் போயிற் காதல் போயிற்

    சாதல், சாதல், சாதல்.

           இது பல்லவி. இவ்வாறே மேலும்  ஒன்பது கண்ணிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பொருளும் அதன் எதிர்ப் பொருளும் கூறப்பட்டுள்ளன. அருள், இன்பம், நாதம், தாளம், பணம், புகழ், உறுதி, கூடல், குழல் என இவை அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அதில் ஒரு செய்தி புலப்படுகிறது.

    காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
    கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
    காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
    கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
    ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
    அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
    காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
    கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

    என்று, பாரதி வேறு ஒரு இடத்தில் கூறியதே குயில் பாட்டிலும் வலியுறுத்தப் படுகிறது. இங்கு காதல் என்ற சொல் இரு பால் இளைஞரிடையே உடற் கவர்ச்சி காரணமாகத் தோன்றும் உணர்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஊறி உயிர் கலந்து நிற்கும் அன்பைக் குறிக்கிறது.

    வயது முற்றிய பின்னுறு காதலே

    மாசுடைத்தது, தெய்விகமன்று காண்

    இயலு புன்மை உடலுக்கின்பெனும்

    எண்ணமும் சிறிதேன்றதக் காதலால்

    என்று அவர் கூறுவதால் உடலின்பம் கலவாத காதலே தெய்விகமானது என்பது அவரது கருத்து என அறிகிறோம்.

                   ஸரஸ்வதி காதல், லட்சுமி காதல், காளி காதல் என்று தெய்வங்களின் மீதும் காதல் கொண்டவர் பாரதி. இத்தகைய அன்பின் விளைவு இறை அருளும் வாழ்வில் இன்பம். அந்த இன்பமும் எல்லை கடவாததாக  இருக்க வேண்டும். எல்லை மீறினால் துன்பம் ஏற்படும்.

           வாழ்வில் இன்பம் தரும் பொருள்களிலே தலையாயது இசை. நாதம் பண்ணோடும் தாளத்தோடும் கலந்து வரும்போது அது இசையாகி இன்பம் தருகிறது. அது காதலின் இணை பிரியாத அங்கமாக அமைகிறது. பாட்டுக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுகிறார்.

           மனிதன் வெறுமனே இசை கேட்டுக் கொண்டு பொழுதைப் போக்கக் கூடாது. அவன் புரையற்ற புகழ் தரும் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான மன உறுதியையும் உடல் உறுதியையும் அவன் இறைவனிடம் வேண்டிப் பெறல் வேண்டும். மனதிலுறுதி வேண்டும் காரியத்திலுறுதி வேண்டும்  என்று பெரிய கடவுளை வேண்டுகிறார் அவர்.

           இத்தகைய  உறுதியுடன் புகழ் தரும் செயல்களைச் செய்துகொண்டு இசை நாட்டம் கொண்ட ஒருவன் அந்த இசை மூலம் இறைவனுடன் கூட வேண்டும்.

           காதலில் ஆரம்பித்து குயிலின் பாட்டு குழலில் அதாவது இசையில் முடிவது, வெளித் தோற்றத்தில் அது ஒரு காதல் கதையாக இருந்த போதிலும் அதன் ஆத்மா இசையே என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

           இசையில் மயங்காத உயிரினம் இல்லை என்பதைக் குரங்கும் மாடும் குயிலின் பாட்டால் கவரப்பட்டு அதைக் காதலித்ததைக் கொண்டு அறிய முடிகிறது.  ஆனால் இசையை எழுப்பக் கூடிய திறமை மனிதர்க்கு மட்டுமே உண்டு. எனவே இறைவன் மற்ற உயிர்களிடம் பரிவு காட்டிய போதிலும் மனிதனிடம் சிறப்பான காதல் கொள்கிறான். இசை இறைவனையும் மனிதனையும் இணைக்கிறது.

           இசையின் காரணமாகத் தான் அவருக்குக் குயிலின் மேல் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் தானும் குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார்.  இறுதியில் குயில் மானிடப் பெண்ணாக மாறியதாக முடித்து மானிடர்க்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கதை முழுவதுமே இசையின் பெருமை கூறுவது தான் என்றாலும் இசையின் சிறப்புகளைக் கூறும் வரிகளை மட்டும் பார்ப்போம்.

                    குயில் பாடிய பாட்டினால் அந்தச் சூழலில் ஏற்பட்ட விளைவுகள் என்ன? வர்ணிக்கிறார், கேட்போம்.

    ஆண்குயில்கள் மேனி புளகமுற,
    ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
    சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்

    காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
    இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
    மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
    வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
    இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,

    இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தை

           அது ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையதாக உள்ளதாம்.

                    இசை என்பது மேடையில் பாடப்படுவது மட்டுமல்ல. அது அருவி நீர் முதலான எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அதைக் கூர்ந்து கேட்கும் அறிவு இருந்தால் தான் அதை ரசிக்க முடியும். உலகில் எங்கெங்கெல்லாம் இசை காணப்படுகிறது என்று பட்டியலிடுகிறார் பாரதி.

    கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
    காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
    ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,

    நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
    ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
    மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
    ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
    ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்

    கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
    சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
    பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
    வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
    கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,

    வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
    வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
    நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
    பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

           குயிலின் பாட்டுக்குக் கவிஞர் மட்டும் வசமாகவில்லை, குரங்கும் அடிமைப்பட்டதைக் காண்கிறோம்

    ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: –
    காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
    பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
    வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
    முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே

    தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
    ”ஆவி யுருகுதடி, ஆஹா ஹா” என்பதுவும்,
    கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
    மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
    ”ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!

    பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
    காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
    காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
    எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
    இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்”

           இறைவன் படைப்பில் பாட்டினைப் போல் ஆச்சரியமானது எதுவும் இல்லை.  அது உவமை இல்லாத இன்பம் தருவது, உலகையே மறக்க வைப்பது.

    பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
    கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
    தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
    பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
    கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!

    பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
    நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
    நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
    காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி
    தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?

    உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
    கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
    வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
    எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
    எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்

    பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
    காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
    ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
    தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
    சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!

    சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
    ஞாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
    ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
    கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
    காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,

    பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
    பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
    நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
    ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
    ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

           மானிடப் பெண்ணாக மாறிய குயிலியின் உடல் அழகு, கவிதை  பண் கூத்து இவற்றின் சாரத்தோடு இன்னமுதைக் கலந்து செய்தது என்று சொல்லி இசையை அமுதத்திற்கு இணையாக ஆக்கிக் கதையை முடிக்கிறார் கவிஞர்..

                       ………….கவிதைக் கனிபிழிந்த
    சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
    ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
    காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்

    மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

     

     

    Share
  • திருக்குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

    தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

    செய்தி வெளியீடு எண்:538  | நாள் : 07.10.2013

    செய்தி வெளியீடு

    திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம்

    இயல், இசை, நாடகம் என்ற மூன்று கலைகளையும் உள்ளடக்கிய இலக்கிய வளம் வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும். இத்தகைய தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சென்ற நூல், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளாகும். தனி மனித ஒழுக்கம், குடும்ப அமைதி, அரசாட்சியின் மேன்மை, சமூக வாழ்வியல் போன்றவை குறித்த நல்ல அறிவுரைகள் இன்றைய உலக சமுதாயத்தின் உயர்வுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க நூலாகிய திருக்குறளில் உள்ள அரிய வாழ்வியல் கருத்துக்களை எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    திருக்குறள் ஓவியக் கூடத்தில், திருக்குறளை விளக்கும் ஓவியங்களைக் காட்சிப்படுத்தல், ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல், திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள் மற்றும் உயிரூட்டுப் படங்கள் சேகரித்துக் காண்பித்தல், அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்டு திருக்குறள் கூறும் அறநெறிக் கருத்துகளை நிகழ்கால ஓவியங்களாக தீட்டப்படுதல், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் வட்டெழுத்து மற்றும் கல்லெழுத்தில் உள்ள திருக்குறளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் ஆகியன செயல்படுத்தப்படும்.

    உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம்

    உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்கும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டு பயணம் மேற்கொள்கையில் அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஒன்றினை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தொல்காப்பியர் ஆய்வு இருக்கை

    தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கண வளத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நூல் தொல்காப்பியமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்திற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியுள்ளனர். ஆனால் இவ்வுரைகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்காமல் அங்காங்கே சிதறி உள்ளது. தொல்காப்பியத்திற்காக வெளிவந்துள்ள அனைத்து உரைகளையும் கண்டெடுத்து, அவற்றை முறைப்படுத்துதல், தொல்காப்பியத்தில் இதுவரை வந்துள்ள மொழிபெயர்ப்புகளை ஒருங்கிணைத்து முறைப்படுத்துதல், இந்நூலை பிற மொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தல், தொல்காப்பியம் விளம்பும் வாழ்வியல் இலக்கணங்களை இன்றைய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தல், மாணவர்கள் தொல்காப்பியம் நூலைக் கற்க ஊக்கப்படுத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை ஆற்றுவதற்காகத் தொல்காப்பியர் பெயரால் ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    எனவே தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தினை நினைவு கூறும் வகையில், தொல்காப்பியர் ஆய்விருக்கை ஒன்றினை உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கென 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின் வாயிலாக 6 திங்களுக்கு ஒரு முறை இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், ஓராண்டுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும். மேலும் ஆண்டுக்கொரு முறை தொல்காப்பிய இலக்கணம் குறித்து மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படும்.

    சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்

    பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமைக் கொள்ளும் வகையில், சங்கத் தமிழ்ப் பாடல்களை ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும், எழிலார்ந்த சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் நிரந்தர சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் ஒன்று 75 லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் அரசு அருங்காட்சியகத்திற்கு எதிரில் 58 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைக்கப்படும். இக்கூடத்தில் முதற்கட்டமாக பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் காட்சிப்படுத்தும் விதமாக, அருங்காட்சியக முகப்புச் சுவர்களில் ஓவியங்கள், காட்சிக் கூடத்திற்குள் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

    சங்கத் தமிழ்க் காட்சிக் கூடத்தில் எந்தெந்த இலக்கியக் காட்சிகளை ஓவியங்களாகவும், புடைப்பு சிற்பங்களாகவும், சிற்பக் காட்சிகளாகவும், புகைப்படங்களாகவும் அமைக்கலாம் என்பதை தெரிவு செய்திடவும், உருவாக்கியதை ஏற்பளிக்கவும் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அரசின் இந்த நடவடிக்கைள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டினை உலகறியச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வண்ண வண்ணப்பூவினில் காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவிலே முத்தை வைத்தவன்
    சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தவன்
    நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தவன்

    இது கண்ணதாசன் கடவுளைப் பற்றி எழுதும் பாடல். கண்ணதாசன் என்றில்லை எந்தக் கவிஞர்களுமே சின்னஞ்சிறிய விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் அங்கு கடவுளைக் காண்பதும் அந்தக் கடவுளை நினைத்து எழுதும்போதெல்லாம் அவன் இருப்பையும் செய்கையையும் அப்படியே ரசிக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ‘பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்தவன் அவன்’ என்று ஒரு கவிஞர் பாடுகிறார் என்றால் இன்னொருவர் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்கிறார். பார்வை சற்று வித்தியாசப்படுகிறது பார்க்கும் காரணம் என்றென்றும் ஒரே விதமாக இருக்கிறது.

    இதோ இந்த வார வல்லமையில் இப்படிப்பட்ட ஒரு பாடலில் ‘உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் காற்றில் தெய்வம்’ காண்பதாக எழுதியிருக்கிறார். வியர்வை விட்டு உழைக்கும்போது உடல் ஓயத்தான் செய்யும் அப்போது தென்றல் காற்றாய் அந்த உழைப்பாளியின் மீது வீசி அவனுக்கு உடலுக்கும் மனதுக்கும் இதத்தைக் கொடுக்கும் சுகமான காற்றுக்கு ஈடு இணை கிடையாதுதான்.. இதோ அந்த கவிதை..

    உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் ,photo

    காற்றில் தெய்வம் உண்டென்பேன் ,

    உயிர் வழ நீர் சுரக்கும் ,கரும் முகிலில் தெய்வம் கண்டேன்

    இருள் கிழித்து ஒளி வீசும் கதிரவனை தெய்வம் என்றே

    கைகூப்பி

    வணங்கிடுவேன் ,

    நெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,

    பனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,

    இயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற

    மழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்

    தெய்வத்தை,,

    பொருள் இல்லா ஏழைகளுக்கு பொருள் தந்து உதவுகின்ற அன்பு

    கரங்களில் தெய்வம் கண்டேன்

    தனக்கென்று வாழாத பிறருக்காக வாழுகின்ற ,

    களங்கம் இல்லாத ,உள்ளம் அதை தெய்வம் வாழுகின்ற

    ஆலயம் என்றே ,வணங்கிடுவேன் ,,, ( http://www.vallamai.com/?p=39088)

    இந்த கவிதையை எழுதியவர் தீனா வேணு.. மிகவும் ரசித்து எழுதியதோடு மட்டுமல்லாமல் சின்னஞ்சிறு விஷயத்திலும் கடவுளைக் காணும் அந்த கவிதை மனது நமக்கு ஆனந்தத்தினைத் தருகிறது. தீனா வேணு அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ வின் கட்டுரை:

    சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்

    “அண்டத்தி லுள்ளதே பிண்டம்
    பிண்டத்தி லுள்ளதே அண்டம்
    அண்டமும் பிண்டமும் ஒன்றே
    அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

    Share