பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

கரு உருவாகும் விதத்தை, வித்தையை அறிவியல் வழி நின்று பார்த்தோம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? எண்ணாயிரம் பாடல்கள் அவர் எழுதியதாகச் சொல்வார்கள். ஆனால் கிடைத்திருப்பவை மூவாயிரம் மட்டுமே (3072?)! மூவாயிரமும் தத்துவ முத்துகள்.தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த கலைக்களஞ்சியம் இது! இஃதில் ஒன்பது உட்பிரிவுகள் உள . ஆகமங்கள் 28 என்பர். அவற்றுள் ஒன்பதின் சாரங்களை ஒன்பது பிரிவுகளில் அவர் அளித்துள்ளார். இப்பிரிவுகளைத் தந்திரம் என்று அழைக்கிறார். இவற்றைச் சிறப்புப் பாயிரச் செய்யுள்,

“தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே” (பாயிரம் 101) எனக் கூறும்!

இதனுள் 2-ஆம் தந்திரம் 14 ஆம் பகுதியில் கரு உற்பத்தி அல்லது கர்ப்பக் கிரியை என்னும் தலைப்பில் 41 செய்யுள்கள் உள்ளன. கரு உருவாவதை இவை விளக்குகின்றன. இதனைப் பார்க்கும் முன் இன்னொரு செய்தியைக் கூற வேண்டி உள்ளது.

சென்னையில் குழந்தைப்பேறு இல்லம் நடத்தி மருத்துவப் பணியாற்றி வருபவர் மருத்துவர் திருமதி செயம் கண்ணன் அவர்கள். மழலைப் பேறு இல்லாதவர்க்கு என்றே தனி மருத்துவம் பார்ப்பவர் அவர். குழந்தைப் பிறப்புப் பற்றிய இக்காலத் தகவல்களை அக்காலத் திருமூலர் அன்றே சொன்னவற்றை விளக்கமாக மாதந்தோறும் மங்கையர் மலர் என்னும் தாளிகையில் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் எழுதி வந்தார். எங்கேனும் கிடைத்தால் வாங்கிப் படிக்க வேண்டிய கட்டுரைகள். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் (2008) நக்கீரன் பத்திரிகையில் டாக்டர் ஜாண் பி நாயகம் என்பவர் ‘சூட்சுமம் திறந்த திருமந்திரம்!’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் படிக்க வேண்டியவையே. (நக்கீரன் வெளியீடு) இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படித்தவர்கள். (போலி மருத்துவர்கள் அல்லர்!) ; மருத்துவத் தொழிலைச் சிறப்பாகச் செய்து வருபவர்கள். தாம் கற்ற அறிவியல் அறிவைப் பயன்படுத்தித் திருமூலர் செய்யுள்களுக்கு மருத்துவ / அறிவியல் விளக்கங்களைச் சொல்லிச் சென்றனர். எனவே அவர்கள் கூற்றை நம்பலாம் ; ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் கருத்துகளைத் தழுவி இக்கட்டுரை நடைபோடுகிறது. அவ்விருவருக்கும் நன்றிகள்.

இனித் திருமூலர் கரு உற்பத்திப் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும் செய்யுளைக் காண்போம் :

“கருவை ஒழிந்தவர் கண்ட நால்மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும் மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்து அங்கு
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே “

இதன் பொருள் : பிறவிப் பெருங் கடலைக் கடந்தவர்கள் ஞானிகள். அவர்கள் தம் ஞானக் கண்களால் கண்டு சொல்லிய தத்துவங்கள் 25 ஆகும். (மூவேழ் : 3 X 7 = 21 +4= 25). இவை மீண்டும் இணைந்து ஆணின் உடலில் (விந்தணுவில்) வந்து சேரும். இதனை எவரும் அறியார்! இந்த விந்து பெண்ணின் கருப்பையைத் தேடிப் புகுந்து அங்கு ஆண், பெண்ணாக (இரண்டாக) ஓடி விழும்.

விளக்கம் :

– பூதங்கள்: 5 (ஐம்பூதங்கள்)
1.நிலம் (பூமி) 2.நீர் (புனல்,) 3.நெருப்பு (அனல்,) 4.காற்று (வாயு) 5.ஆகாயம் (விசும்பு)
– தன்மாத்திரை 5 :
1. சுவை 2. ஒளி 3. ஊறு 4. ஓசை 5. நாற்றம் என வகுக்கப்பட்டு ஐந்து நுண்ணிய பொருள்கள் எனப்படும்.
– ஞானேந்திரியங்கள் 5 (ஐம்பொறிகள்) :
1. மெய் 2. வாய் 3. கண் 4. மூக்கு 5. செவி
– கன்மேந்திரியம் 5 (தொழிற் கருவிகள்) :
1.வாய் 2.கை 3.கால். 4. மலவாய் (குதம்) 5. கருவாய் என வகுக்கப்பட்டு ஐந்து தொழில் உறுப்புக்கள் என வழங்கப்படும்.
– மனம், அகங்காரம்,,புத்தி, குணம், பிரகிருதி 5
(நா கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழி அகராதி பக் 736)

இவை இருபத்து ஐந்தையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் விந்தணு ஆணின் உடலில் இருக்கும்.

” கூறுவேன் தேகமது என்னவென்றால்

குருபரனே எலும்புதனைக் காலை நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே”

என அகத்தியர் கூறும் உடலை உருவாக்க வேண்டிய பண்புக் கூறுகள் இந்த விந்தணுவில் இருக்கின்றன. கலவியின் போது இது பெண்ணின் கருப்பையில் தேடிப் புகுந்து ஓடிப் பாய்கிறது. அங்கு உருவம் இரண்டாக விழுந்ததாம். இப்பாடலில் ‘ஓடி’ என்ற சொல்லையும் ‘உருவம் இரண்டாக’ என்பதையும் கவனிக்க வேண்டும்.ஓடுதல் வேகத்தை உள்ளடக்கியது.விந்தை ஏந்திச் செல்லும் திரவமும் (seminal fluid) அதில் நீந்திச்செல்லும் விந்துகளும் வேகமாகப் பயணம் செய்கின்றன ; ஆணாகவோ பெண்ணாகவோ உருவம் செய்யக்கூடிய ‘பொருள்’ விந்துவில் இருக்கிறது. அப்பொருள் கருப்பையில் (காத்து) இருக்கும் முட்டையில் விழுகிறது / வீழ்கிறது. வீழ்தல் என்றால் இணைதல், கலத்தல் என்றொரு பொருளும் உண்டே.

கீழ்க் கண்ட திருக்குறள்களைக் காண்க :

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

விந்தணுவில் உள்ள ஆண் / பெண் உருவம் ஆக்கக்கூடிய ‘பொருள்’ (X/Y குரோம்சொம்) முட்டையில் உள்ள ‘பொருளுடன்’ (X குரோம்சொமுடன்) இணைகிறது ; கலக்கிறது. ஆகவே உருவம் இரண்டு என்பது X (பெண் உரு), Y (ஆண் உரு) குரோம்சொம்களை (மறைமுகமாக) உணர்த்துகின்றன. இவ்வண்ணம் திருமூலர் கூற்றுக்கு இக்கால அறிவியல் விளக்கம் தருகிறது எனலாம்.

உருவான கரு ஆணா பெண்ணா என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை முந்திய பகுதியில் கண்டோம். X குரோமோசொம் பெண்மை ; Y குரோமோசொம் ஆண்மை ; சுருக்கமாகச் சொல்லப்போனால் முட்டையில் இருக்கும் X குரோமோசோமுடன் ஆண்மை குரோமோசோமான Y சேர்ந்தால் கரு, ஆணாகும்.
பெண்மை குரோம்சொம் X சேர்ந்தால் கரு பெண் குழந்தையாகும்.
இக்கருத்தைத்தான்

‘ஆண்மிகில் ஆணாகும் பெண் மிகில் பெண்ணாகும்’

எனத் திருமூலர் உரைக்கிறார். அதாவது “கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும்.”. இங்கே ‘வெண்டுளி’ = X குரோமோசொம் ; செந்துளி = Y குரோமோசொம்.

கலவியால் உருவான ஒற்றைச் செல் கரு ‘zygote’ என அறிவியலில் அழைக்கப்படுகிறது. ஒற்றைச் செல் இரண்டாக, நான்காக, எட்டாகப் பதினாறாக, முப்பத்திரண்டாக… பல்கிப் பெருகுகிறது. இந்த நிலையில் இதன் பெயர் ’embriyo’. உடல் உறுப்புகள் வளர்ந்து பெரிதாகும் நிலையில் இதனை ‘fetus’ என்கின்றனர். இதில் உயிர் எப்படி வருகிறது? இதற்கு அறிவியல் விளக்கம் தர இயலவில்லை!

இவற்றைத் திருமூலர் வேறு விதமாகக் கூறுகிறார்: தாயின் கருப்பையினுள் இருக்கும் சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற மூச்சுக் காற்று ஒன்று உண்டு. உருவான கருவுள்ளே இந்த வாயு (பிராணன் அல்லது உயிர்) நுழையுமாம். இந்தப் பிராணன் எனும் மூச்சுக்காற்று (உயிர்க்காற்று) கருவினுள்ளே நுழைவது குறித்துக் கீழுள்ள திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.

“பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே.’

குறிப்பிட்ட காலம் வரும்போது மெல்லிய ஒலியோடு அந்தக் கருவின் உள்ளே அக்காற்று (வாயு) புகும் என்பது இப்பாடலின் பொருளாகும். அவ்வாறு உள்ளே நுழைந்த காற்று அந்தக் கருவின் அனைத்துப் பகுதிகளிலும் (அனைத்துச் செல்களிலும் என வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும். இதற்கு உவமையாகத் திருமூலர் பூவின் நறுமணத்தைக் குறிப்பிடுகிறார். பூ மலரும்போது அதிலிருந்து வரும் நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப் பகுதி முழுவதும் பரவி நிற்பதைப் போன்று, பிராணன் எனும் மூச்சுக்காற்றும் கருவின் உள்ளே நுழைந்து பரவி நிற்கும்!

இந்த மூச்சுக்காற்று சரியான வேளையில் உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால் மட்டுமே, அந்தக் கரு முறையாக வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற முடியும். மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில் தாமதங்கள் அல்லது தடைகள் ஏற்பட்டாலோ உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர இல்லாது போனாலோ கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். கருச்சிதைவும் ஏற்படலாம். இதை அடுத்த பாடலில் திருமூலர் விளக்குகின்றார்.

“போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.’.

இதனை விரிக்கின் பெருகும்; சுருக்கமாக, “குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாது விடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.” எனப் பொருள் கூறுவர். சித்தர்களின் குழுஉக் குறியில் (பரிபாஷையில்’) நாகம் என்பது குண்டலினியைக் குறிக்கும். புரவி = (மூச்சுக்) காற்று ; பாகன் = இறைவன். முத்தன் என்ற சொல் கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தையைக் குறிக்கும். மூழ்கும் என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். குழந்தை பனிக்குடத்தில் மூழ்கி இருப்பதை இது குறிக்கிறது.

இப்பனிக் குடத்தில் குழந்தை வளர்வதை
“உதகம் உதிரம் உறுங்கனல் வாயுவால்
சிதகுறும் அங்கங்கள் செய்து முடித்திடும்
பதகுறும் உரோமம் பகர்தசை அஸ்தியின்
நிதகுறும் ஒன்பது வாசலும் நீங்குமே.” என்கிறார் திருமூலர். ‘உதகம்’ என்றால் பனிக்குடம்.

மேலும்

“நீங்கிட நீங்கிட நிமிர்ந்து வளர்ந்தோங்கும்
ஓங்கிட ஓங்கிட உறுகியாம் வாயுவும்
வாங்கிட வாங்கிட வன்னி தலைக் கொளும்
பாங்கிடப் பாங்கிடப் பத்தாகும் திங்களே.”

” திங்கள் பத்தாகி தேய்வோடு வாயு சேர்ந்து
அங்கி மலர்த்தி அமளியாக் கீழ் நோக்கி
பொங்கிப் பிறந்த நாள் புகழ்வார் வெறுவீணர்
தங்கிச் செனிக்கையில் தான்நோயும் உற்றதே.”

“உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்”
என்று கூறுகிறது திருமந்திரம்.

” நாளாக நாளாகக் கருப்பையினுள் உள்ள குழந்தையானது வாயுவில் உள்ள உயிர்க் காற்றை (பிராண சக்தியை) இழுத்துக் கொண்டு திடமானதாய் வளரும். திடங் கொண்டு வளரும் சமயத்தில் அக்கினியானது குழந்தையின் சிரசைத் தாக்கும். இத்தாக்குதலானது பத்தாவது மாதத்தில் அதிகமாகி இவ்வக்கினியானது அங்கு அடைபட்டுள்ள வாயுவுடன் கூடிக் குழந்தையைக் கீழ் நோக்கித் தள்ளும். கீழ்நோக்கித் தள்ளும் இந்நாளை மக்கள் பிறந்த நாளாகக் கொண்டாடுவர். இதே நாளில் குழ்ந்தையுடன் சேர்ந்து நோயும் பிறந்தது என்கிறார் திருமூலர். “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” என அவ்வையார் கூறுவதை உணர்க!

கருவுற்ற பத்தாம் மாதத்தில் பிறப்பு நிகழும் என்பதைத் ‘திங்கள் பத்தாகி’ என்னும் சொற்றொடர் உணர்த்துகிறது. இக்கால மகப்பேற்றியலோ 38 ஆம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்கிறது. 38 வாரம் என்பது என்ன? 9 மாதங்களும் 2 வாரங்களும் தானே! 9 –ஆவது மாதம் தாண்டினாலே அது 10 –ஆவது மாதம் தானே! எனவே அறிவியல் கருத்தும் நம் சித்தர்களின் கூற்றும் ஓரளவு ஒத்துப் போகின்றனவே! இருப்பினும் தமிழில் உள்ள பழமொழி ஒன்று “மகப் பேறும் மழைப் பேறும் அந்த மகாதேவனுக்கே தெரியாது!” என்று சொல்கிறது. அதாவது இவை இரண்டையும் முன்னதாக அறிந்து சொல்லுகின்ற ஆற்றல் விஞ்ஞானத்துக்கும் இல்லை ; மெய்ஞானத்துக்கும் இல்லை!

இக்கால அறிவியல் முறைப்படிப் பார்த்தால் குழந்தையின் பாலை (sex) நிர்ணயிப்பவன் ஆண்தான் ; பெண் அல்லள்! இதனை முந்திய பகுதியில் கண்டோம். இதே கருத்தைத்தான் 5 ஆம் நூற்றாண்டுத் திருமூலரும் கூறுகிறார் அவருக்கே உரிய மொழியில் : பால் நிர்ணயம செய்வதில் பெண்ணுக்குப் பங்கில்லை என்பதைத் திருமூலர்

“பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே”

எனத் தெளிவாகத் தெரிவிக்கிறார். மேலும் குழந்தை ஆணா பெண்ணா இரட்டையா அலியா என்பதைக் கலவியின் போது ஆணின் மூச்சுக் காற்றே நிர்ணயிக்கிறது என்பது திருமூலர் கருத்து :

“குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.”

திருமூலரின் கூற்றுப்படி கலவியின்போது ஆணினுடைய மூச்சு வலப் பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப் பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், அபான வாயு ஓடில் இரட்டைக் குழந்தையாகும் என்றும் இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடுள்ள குழந்தை பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார் . இதனைப் புரிந்துகொள்ள ‘மூச்சு’ பற்றித் திருமூலர் கொண்டிருந்த அடிப்படை அறிவு, கொள்கை தேவை.

1+1 = 2. கணிதத்தின் அடிப்படை அறிவு இஃது. இஃதனை ஏற்றுக் கொண்டால்தான், புரிந்துகொண்டால்தான், அறிந்துகொண்டால்தான் கணிதத்தில் மேற்கொண்டு செல்ல முடியும். இது போலவே ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180 பாகை என்பதை ஏற்றுக் கொண்டால்தான், புரிந்துகொண்டால்தான், அறிந்துகொண்டால்தான் வடிவகணிதத்தில் மேற்கொண்டு செல்ல முடியும். அவை போல திருமூலரின் ”மூச்சு’க் கொள்கை, அடிப்படை அறிவு பற்றி அறிந்தால் ஒழிய அவர் கூறுவனவற்றைப் புரிந்துகொள்வதும் அறிந்துகொள்வதும் இயலா! ஆனால் அவற்றை விளக்க வேறொரு கட்டுரை தேவை. திருமந்திரத்தின் ஆழத்தையும் அகலத்தையும் நுட்பத்தையும் விளக்க ஆயிரம் பக்கங்களும் போதா! இந்த அளவில் இந்தப் பகுதியை நிறைவு செய்வோம்.

திருமூலர் தமக்கே உரிய முறையில் இக்கால மரபியலைத் (genetics) தொட்டுச் செல்வதை அடுத்த பகுதியில் காணலாம். அதன் பின், சைவ சமயம் குறிப்பிடும் சிவ – சக்தி தாண்டவம் இக்கால அறிவிலோடு ஒத்துப் போவதைப் பார்க்கலாம்.

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 6

  1. அருமை! திருமூலரின் பாடல்களின் பொருளை அறியும் பொழுது பிரம்மிப்பாக இருக்கிறது. மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆவலுடன்…..

  2. நன்றி ஐயா!

    தொண்டர் தம் பெருமை சாற்றவும் அரிதே! -நம் தமிழ்த்
    தொண்டர் தம் பெருமை போற்றவும் அரிதே!

    அன்புடன்
    பெஞ்சமின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *