இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

வண்ண வண்ணப்பூவினில் காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவிலே முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தவன்
நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தவன்

இது கண்ணதாசன் கடவுளைப் பற்றி எழுதும் பாடல். கண்ணதாசன் என்றில்லை எந்தக் கவிஞர்களுமே சின்னஞ்சிறிய விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து எழுதும்போதும் அங்கு கடவுளைக் காண்பதும் அந்தக் கடவுளை நினைத்து எழுதும்போதெல்லாம் அவன் இருப்பையும் செய்கையையும் அப்படியே ரசிக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ‘பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்தவன் அவன்’ என்று ஒரு கவிஞர் பாடுகிறார் என்றால் இன்னொருவர் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்கிறார். பார்வை சற்று வித்தியாசப்படுகிறது பார்க்கும் காரணம் என்றென்றும் ஒரே விதமாக இருக்கிறது.

இதோ இந்த வார வல்லமையில் இப்படிப்பட்ட ஒரு பாடலில் ‘உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் காற்றில் தெய்வம்’ காண்பதாக எழுதியிருக்கிறார். வியர்வை விட்டு உழைக்கும்போது உடல் ஓயத்தான் செய்யும் அப்போது தென்றல் காற்றாய் அந்த உழைப்பாளியின் மீது வீசி அவனுக்கு உடலுக்கும் மனதுக்கும் இதத்தைக் கொடுக்கும் சுகமான காற்றுக்கு ஈடு இணை கிடையாதுதான்.. இதோ அந்த கவிதை..

உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் ,photo

காற்றில் தெய்வம் உண்டென்பேன் ,

உயிர் வழ நீர் சுரக்கும் ,கரும் முகிலில் தெய்வம் கண்டேன்

இருள் கிழித்து ஒளி வீசும் கதிரவனை தெய்வம் என்றே

கைகூப்பி

வணங்கிடுவேன் ,

நெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,

பனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,

இயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற

மழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்

தெய்வத்தை,,

பொருள் இல்லா ஏழைகளுக்கு பொருள் தந்து உதவுகின்ற அன்பு

கரங்களில் தெய்வம் கண்டேன்

தனக்கென்று வாழாத பிறருக்காக வாழுகின்ற ,

களங்கம் இல்லாத ,உள்ளம் அதை தெய்வம் வாழுகின்ற

ஆலயம் என்றே ,வணங்கிடுவேன் ,,, ( https://www.vallamai.com/?p=39088)

இந்த கவிதையை எழுதியவர் தீனா வேணு.. மிகவும் ரசித்து எழுதியதோடு மட்டுமல்லாமல் சின்னஞ்சிறு விஷயத்திலும் கடவுளைக் காணும் அந்த கவிதை மனது நமக்கு ஆனந்தத்தினைத் தருகிறது. தீனா வேணு அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ வின் கட்டுரை:

சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்

“அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. பல நூல் படித்து நீ அறியும் கல்வி
  பொது நலம் நினைத்து நீ கொடுக்கும் செல்வம்
  பிறர் உயர்வினில் உனக்கிருக்கும் இன்பம்
  இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

  என்ற சமீபத்தில் கேட்ட கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது வல்லமையாளரின் பாடல் வரிகளை பார்த்தவுடன்.

  இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் அவனைப்போற்றி பாடல் தந்த வல்லமையாள்ருக்கு பாரட்டுக்கள் வாழ்த்துக்கள்.

 2. இந்தவார வல்லமையாளர் திரு.தீனா வேணு அவர்களுக்கும், சைவ சமயத்தின் அறிவியல் கூறுகளை விளக்கும் நுணுக்கமான பணியை மேற்கொண்டிருக்கும் பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.