ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -3

0

 சு.கோதண்டராமன்

 

இசையின் பெருமை

       குக்குக்கூ என்று குயில் பாடிய பாடலில் கவிஞருக்குத் தொக்க பொருளெல்லாம் தோன்றியதாம். அதன் உள்ளுறையை ஆராய்வோம்.

காதல், காதல், காதல், .

காதல் போயிற் காதல் போயிற்

சாதல், சாதல், சாதல்.

       இது பல்லவி. இவ்வாறே மேலும்  ஒன்பது கண்ணிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பொருளும் அதன் எதிர்ப் பொருளும் கூறப்பட்டுள்ளன. அருள், இன்பம், நாதம், தாளம், பணம், புகழ், உறுதி, கூடல், குழல் என இவை அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அதில் ஒரு செய்தி புலப்படுகிறது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

என்று, பாரதி வேறு ஒரு இடத்தில் கூறியதே குயில் பாட்டிலும் வலியுறுத்தப் படுகிறது. இங்கு காதல் என்ற சொல் இரு பால் இளைஞரிடையே உடற் கவர்ச்சி காரணமாகத் தோன்றும் உணர்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஊறி உயிர் கலந்து நிற்கும் அன்பைக் குறிக்கிறது.

வயது முற்றிய பின்னுறு காதலே

மாசுடைத்தது, தெய்விகமன்று காண்

இயலு புன்மை உடலுக்கின்பெனும்

எண்ணமும் சிறிதேன்றதக் காதலால்

என்று அவர் கூறுவதால் உடலின்பம் கலவாத காதலே தெய்விகமானது என்பது அவரது கருத்து என அறிகிறோம்.

               ஸரஸ்வதி காதல், லட்சுமி காதல், காளி காதல் என்று தெய்வங்களின் மீதும் காதல் கொண்டவர் பாரதி. இத்தகைய அன்பின் விளைவு இறை அருளும் வாழ்வில் இன்பம். அந்த இன்பமும் எல்லை கடவாததாக  இருக்க வேண்டும். எல்லை மீறினால் துன்பம் ஏற்படும்.

       வாழ்வில் இன்பம் தரும் பொருள்களிலே தலையாயது இசை. நாதம் பண்ணோடும் தாளத்தோடும் கலந்து வரும்போது அது இசையாகி இன்பம் தருகிறது. அது காதலின் இணை பிரியாத அங்கமாக அமைகிறது. பாட்டுக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுகிறார்.

       மனிதன் வெறுமனே இசை கேட்டுக் கொண்டு பொழுதைப் போக்கக் கூடாது. அவன் புரையற்ற புகழ் தரும் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான மன உறுதியையும் உடல் உறுதியையும் அவன் இறைவனிடம் வேண்டிப் பெறல் வேண்டும். மனதிலுறுதி வேண்டும் காரியத்திலுறுதி வேண்டும்  என்று பெரிய கடவுளை வேண்டுகிறார் அவர்.

       இத்தகைய  உறுதியுடன் புகழ் தரும் செயல்களைச் செய்துகொண்டு இசை நாட்டம் கொண்ட ஒருவன் அந்த இசை மூலம் இறைவனுடன் கூட வேண்டும்.

       காதலில் ஆரம்பித்து குயிலின் பாட்டு குழலில் அதாவது இசையில் முடிவது, வெளித் தோற்றத்தில் அது ஒரு காதல் கதையாக இருந்த போதிலும் அதன் ஆத்மா இசையே என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

       இசையில் மயங்காத உயிரினம் இல்லை என்பதைக் குரங்கும் மாடும் குயிலின் பாட்டால் கவரப்பட்டு அதைக் காதலித்ததைக் கொண்டு அறிய முடிகிறது.  ஆனால் இசையை எழுப்பக் கூடிய திறமை மனிதர்க்கு மட்டுமே உண்டு. எனவே இறைவன் மற்ற உயிர்களிடம் பரிவு காட்டிய போதிலும் மனிதனிடம் சிறப்பான காதல் கொள்கிறான். இசை இறைவனையும் மனிதனையும் இணைக்கிறது.

       இசையின் காரணமாகத் தான் அவருக்குக் குயிலின் மேல் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் தானும் குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார்.  இறுதியில் குயில் மானிடப் பெண்ணாக மாறியதாக முடித்து மானிடர்க்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கதை முழுவதுமே இசையின் பெருமை கூறுவது தான் என்றாலும் இசையின் சிறப்புகளைக் கூறும் வரிகளை மட்டும் பார்ப்போம்.

                குயில் பாடிய பாட்டினால் அந்தச் சூழலில் ஏற்பட்ட விளைவுகள் என்ன? வர்ணிக்கிறார், கேட்போம்.

ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தை

       அது ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையதாக உள்ளதாம்.

                இசை என்பது மேடையில் பாடப்படுவது மட்டுமல்ல. அது அருவி நீர் முதலான எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அதைக் கூர்ந்து கேட்கும் அறிவு இருந்தால் தான் அதை ரசிக்க முடியும். உலகில் எங்கெங்கெல்லாம் இசை காணப்படுகிறது என்று பட்டியலிடுகிறார் பாரதி.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,

நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

       குயிலின் பாட்டுக்குக் கவிஞர் மட்டும் வசமாகவில்லை, குரங்கும் அடிமைப்பட்டதைக் காண்கிறோம்

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: –
காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே

தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
”ஆவி யுருகுதடி, ஆஹா ஹா” என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
”ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!

பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்”

       இறைவன் படைப்பில் பாட்டினைப் போல் ஆச்சரியமானது எதுவும் இல்லை.  அது உவமை இல்லாத இன்பம் தருவது, உலகையே மறக்க வைப்பது.

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!

பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?

உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்

பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!

சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
ஞாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

       மானிடப் பெண்ணாக மாறிய குயிலியின் உடல் அழகு, கவிதை  பண் கூத்து இவற்றின் சாரத்தோடு இன்னமுதைக் கலந்து செய்தது என்று சொல்லி இசையை அமுதத்திற்கு இணையாக ஆக்கிக் கதையை முடிக்கிறார் கவிஞர்..

                   ………….கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.